வெள்ளிக் கிழமை கொஞ்சம் வேலை இருந்தது. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சாவகாசமாக எழுந்து பதினோரு மணி போல சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கு காத்திருந்த போது ஒரு ஃபோன். நான் தான் ஏ.ஈ. பேசுறேன். உங்ககிட்ட இருந்து மூணு மெயில் வந்துருக்கு, அதான் உங்களை நேர்ல பாத்து பேசிராலாம்னு வந்தேன். நான் இப்போ அம்பேத்கர் சாலைல தான் இருக்கேன். உங்களை பாக்க முடியுமா என்றார். என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிடிக்க முடியாது என்று நினைத்து,அங்கேயே இருங்க, இப்போவே வர்றேன் என்று கிளம்பினேன்.

விஷயம் ஒன்றுமில்லை. தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உள்ள புகார் பெட்டியில் மடிப்பாக்கம் ஏரியாவில் உள்ள சில பிரச்சனைகளை புகார் செய்திருந்தேன். [எத்தனை நாள் தான் நாமே புலம்பிக் கொண்டிருப்பது! கேட்டால் கிடைக்குதான்னு பார்க்கத் தான்!]

1. அம்பேத்கர் சாலை என்று தான் பேர், அம்பேத்கரையும் மறந்து விட்டார்கள், சாலையையும் மறந்து விட்டார்கள். சிமென்ட்டு சாலை போட்டால் காலத்துக்கும் நிலைக்கும் என்று சொல்கிறார்கள். அது தார் சாலையை விட முன்னமே பல் இளித்து விடுகிறது. வழி எங்கும் குண்டும், குழியும்! இதில் நடு நடுவே படிக்கட்டுகளை போல் வேகத்தடை வேறு! ஐய்யா, நல்ல சாலைக்குத் தான் வேகத்தடை தேவை! இங்கு சாலையே வேகத்தடையாய் இருக்கும்போது தனியாய் ஒரு வேகத்தடை எதற்கு? முதலில் ஒரு நல்ல சாலை வசதி வேண்டும்.
2. ஏரியாவை சுற்றி ஒரு நல்ல பூங்கா இல்லை. ஒரு நல்ல பூங்கா வசதி வேண்டும்.
3. அம்பேத்கர் தலையில் கொஞ்சம் முடி இருந்தது. ஆனால் அம்பேத்கர் சாலையை பார்த்தால் சாலையோரங்களில் மரங்களே இல்லாமல் மழுங்க மொட்டையடித்தது போல் இருக்கிறது. அதனால், அசோகர் சாலையில் மரங்களை நட்டதையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்காமல் சாலையின் ஓரங்களில் மரங்களை நட வேண்டும்!

மேல் சொன்ன புகார்கள் தான் நான் புகார் பெட்டியில் போட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழக அரசின் இணையதளத்தில் நீங்கள் புகார் அளித்ததும், அதன் புகார் எண் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்து விடும். அதை தொடர்ந்து அந்தப் புகாரின் தற்போதையை நிலை குறித்தும் உங்களுக்கு அப்டேட் வந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணை வைத்து நீங்கள் இணையதளம் போய் நம் புகாரின் நிலை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அப்படி, சென்ற வியாழக்கிழமை நான் அறிந்து கொள்ளும்போது, அது மடிப்பாக்கம் ஏ.ஈயின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. அவரின் கைபேசி எண்ணும் அந்த புகார் தகவலோடு கொடுத்திருந்தார்கள். இவர் தான் இதற்கு உரியவர், இவரிடம் உங்கள் பிரச்னையை பேசிக் கொள்ளுங்கள் என்று நம் அரசாங்கத்தில் ஒருவரின் கைபேசி வரை கொடுப்பது சாதாரண விஷயமா? சந்தோஷம். இனிமேல் இவரை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை அவரே கூப்பிட்டது ஆச்சர்யம் தானே? அதிலும், என் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டு கொஞ்சம் வாங்க சார், பேசுவோம் என்றவரை விடலாமா? தலைக்கு மேல் வேலையை அப்படியே போட்டு விட்டு இந்த தலை போகிற பிரச்சனைக்கு ஓடி வந்தேன். [இதுக்கு பேர் தான் நான் லீனியர் பதிவு! எப்படி?]

அந்த வேகாத வெயிலில் கர்சீப்பை துடைத்துக் கொண்டு அந்த பேக்கரியில் அவரை பார்த்தேன். ஆஹா, நம் நாடா இது என்று தோன்றியது! முதலில் பூங்காவிலிருந்து ஆரம்பித்தார். ராஜ ராஜேஸ்வரி நகரின் உள்ளே ஒரு பாழடைந்த பூங்கா ஒன்று இருந்தது [அதை பூங்கா என்று சொல்ல முடியாது, ஒரு காலி இடம்!] சில நாட்களுக்கு முன் அந்த இடத்தை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பித்து இருந்ததை நான் கவனித்தேன். என்னடா இருந்தது இது ஒன்று தான், இதையும் ஃபிளாட் போட்டு வித்து விட்டார்களோ என்று எனக்கு பயம் வந்து விட்டது. அதை அவரிடம் கேட்டதற்கு, இல்லை சார், இதை நாங்க தான் சீரமச்சுட்டு இருக்கோம். குழந்தைகள் விழியாட வசதிகள் செய்யப் போறோம், புல் தரை எல்லாம் போட்டு ஒரு மாசத்துல பாருங்க சூப்பரா ஆயிடும் என்றார். சந்தோஷம் என்றேன்.

பிறகு மரங்கள் நடுவதை பற்றி பேசினோம். அவர் என்னிடம் "சார், மரம் நடுவதற்கு நல்ல இடத்தை பார்த்து கொடுங்கள், அது எங்களுக்கு உதவியாய் இருக்கும்" என்று கேட்டார். "அதுவுமில்லாமல், சாக்கடை லைனுக்காக ஒரு பக்கம் தோண்ட போறோம், அந்த பக்கம் இப்போ நடுறது சரியா இருக்காது" என்றார். "நீங்க மொதல்ல இந்த பக்கம் நட ஏற்பாடு செய்யுங்க, என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா  செய்றேன்" என்று நானும் மனமுவந்து சொன்னேன். "மரக் கன்றுகள் வந்ததும் உங்களுக்கு சொல்லி அனுப்புறேன், நீங்க தான் சார் மரம் வைக்கனும்னு சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா செய்வோம்" என்றார்.

பிறகு சாலையை பற்றி சொன்னதற்கு, தார் சாலைகளை அமைக்க அனுமதி கேட்டிருப்பதாகச் சொன்னார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் குண்டு குழியை அடைப்பதற்கான பேட்ச் வொர்க் ஒரு மாதத்தில் செய்து முடிப்போம் என்று வாக்குறுதி அளித்தார். இப்படியாக அந்த இனிய சந்திப்பு முடிந்தது.

அவர் சொன்ன மாதிரி என்னை மறுபடியும் அழைப்பாரா, மேல் சொன்னவை எல்லாம் சொன்னபடி நடக்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது! ஆனால் ஒரு அரசாங்க அதிகாரி, தனக்கு வந்த புகாரை பற்றி புகார் அளித்தவரிடம் வீடு தேடி வந்து பேசுவது மிகப் பெரிய மாற்றமாகவே நான் கருதுகிறேன். இனிமேல் அவர் என்னை விட்டாலும், நான் அவரை விடுவதாயில்லை!  அப்படியே ஆள் மாறி போனாலும், இருக்கவே இருக்கிறது புகார் பெட்டி!

பதிவோட மெசேஜ் subtle ஆக வைக்கலாம்னு இருந்தேன். உங்களை நம்ப முடியாது. தமிழ்  மாதிரி உரக்க சொல்லிற வேண்டியது தான்! அதாகப்பட்டது, உங்கள் ஏரியாவில் கொசுத் தொல்லையா? மழை இல்லையா? குழாயில் காத்து வரவில்லையா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. [கொஞ்சம் முகப்புத்தகத்திலிருந்து வெளிய வாங்க பாஸ்!]

http://www.sp.tn.gov.in/ta/grievance




வெகு நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு படத்திற்குச் சென்று டிக்கட் கிடைக்காமல் திரும்பி வந்தேன். சந்தோஷமாய் இருந்தது. க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் "சூது கவ்வும்" பன்னிரண்டே முக்காலுக்கு இருக்கிறது என்று தெரிந்து பனிரெண்டு மணிக்கு கிளம்பினேன். நான் போன போது ஃபுல்! என் கல்லூரிக் காலங்கள் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் நோ ஆன்லைன் புக்கிங்! தியேட்டர் சென்று வரிசையில் நின்று தான் டிக்கட் எடுக்க வேண்டும். பெரிய படத்திற்கு கூட்டம் அம்மும்! ஒரு படத்திற்கு சென்று டிக்கட் கிடைக்காமல் பக்கத்து ஸ்க்ரீனில் ஓடும் மொக்கை படத்துக்கு போன அனுபவம் நிறைய உண்டு! பார்க்க வந்த படத்தை பார்க்க முடியாததால்  பார்த்த வேறு படத்தை நம்மால் மறக்கவே முடியாது என்று தான் நினைக்கிறேன்! அதிலும் அந்த மற்றொரு படம் முக்கால்வாசி மொக்கையாய் தான் இருக்கும். சில சமயம் பார்க்க வந்த படத்தை விட நல்லதாய் அமைந்து விடுவது உண்டு! உதாரணம், நான், ரோஜாவுக்காக "இந்து" பார்க்கப் போய் டிக்கட் கிடைக்காமல் "கிழக்குச் சீமையிலே" பார்த்தேன். பின்னாளில் டீவியில் "இந்து" பார்க்கும்போது நல்ல வேளை டிக்கட் கிடைக்கவில்லை என்று பட்டது! இன்று டிக்கட் கிடைக்காத போது, அடடா...இந்த ஆன்லைன் காலத்தில் கவுண்டரில் டிக்கட் வாங்கப் போய் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது வித்தியாசமான அனுபவமே! சரி "வெற்றி" யில் தான் வெற்றி கிட்டவில்லை என்று மடிப்பாக்கம் "குமரனுக்கு" போனேன். அங்கு இரண்டரை மணிக்குத் தான் ஷோ. முதல் ஆளாய் போய் எண்பது ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன்!

நான் படத்தின் கதையை சொல்லவில்லை, இருந்தாலும், நீங்கள் படம் பார்த்து விட்டு இந்த பதிவை படித்தால் சரியாய் இருக்கலாம்! யோசித்துக் கொள்ளுங்கள்...

இந்தப் படத்தின் போஸ்டரிலேயே ஒரு எதிர்பார்ப்பு வந்தது. யோசித்துப் பார்த்தால், ஒரு படம், எப்படி இருக்கும் என்பது பாதி அந்தப் படத்தின் போஸ்டரிலேயே தெரிந்து விடுமோ என்று தோன்றுகிறது. உதாரணம்: திருமதி தமிழ்!

படத்தின் ஒன் லைன்: ஒரு அமெச்சூர் கிட்னாப்பெர்ஸ் ஒரு பெரிய கிட்னாப்பில் இறங்கியதால் அவர்களுக்கு என்னவாகிறது என்பது தான் கதை!

விஜய் சேதுபதியை காட்டியதும் தியேட்டரில் விசில் பறக்கிறது. சுந்தரபாண்டியன் படத்திற்குப் போனபோது இடைவேளையில் ஓரமாய் நின்று நண்பர்களுடன் தம்மடித்துக் கொண்டிருந்தார். இன்று!!!........மூன்றே படம்!! [நமக்கு மூன்று படம், அவருக்கு பத்து வருடம்!] சமீபத்தில் வந்த புது முகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். விஷாலை விட, கருப்பானாலும் கலையா இருக்குறது இவர் தான்னு தோணுது! நடிப்பிலும் மனிதர் பின்னுகிறார். பெரிய ரவுண்ட் வர வாழ்த்துக்கள்.

சிம்ஹா: ஒன்றரை லட்சம் செலவு செய்து தன் அப்பாவே மயங்கி விழும் அளவுக்கு ஒரு காரியத்தை செய்து விட்டு [என்ன காரியம் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!] திருச்சியிலிருந்து சென்னைக்கு கம்பி நீட்டி, எல்லா வம்பிலும் மாட்டி, ரொமான்ஸ் வராமல் அடி வாங்கும் கடைசி சீன் வரை பையன் துரு துரு! கொழுக் மொழுக் என்று அமுல் பேபி மாதிரி இருக்கிறார்.

ரமேஷ் திலக்: காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்து முழுகி, தலைவாரி இவர் செய்யும் அந்தக் காரியம் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு! சூப்பர். சைக்கோ போலீசிடம் GUN காட்டி அவர் முகத்தில் குத்தும் இடத்தில் மரண கலாய்! மாட்டியவுடன்,அதை நினைத்து நினைத்தே பிறகு இவரை அவர் பின்னி எடுக்கிறார். மிக இயல்பான நடிப்பு!

அசோக்: சாப்ட்வேர் எஞ்சினியர். அதிகம் வேலை இல்லை. கொடுத்ததை சரியாய் செய்திருக்கிறார்.

சஞ்சிதா: என்ன படம் எடுத்தாலும், அது எத்தனை வித்தியாசமாய் இருந்தாலும், இப்படி ஒரு பிளாஸ்டிக் பெண்ணை போட்டுத் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. படத்தில் அத்தனை பேறும் வெகு லோக்கலாய் இருக்கிறார்கள். இந்த அம்மா மட்டும், ஏதோ "அன்பே வா" பட ஷூட்டிங்கில் இருந்து வந்தது போல் ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு டார்ச்சர் கொடுக்கிறார். படத்திற்கும், கதைக்கும் ஒட்டவேயில்லை. ஆமாம் எதற்கு இந்த காரெக்டர்?

கருணா: இவரின் குறும்படங்களை பார்க்கும்போதே தெரியும். அனாயாசமாய் நடிப்பார். இனிமேல், இந்த அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு காமெடி பண்ணும் காரெக்டரை விட்டு விட்டு வேறு ஏதாவது புதுசாய் செய்ய வேண்டும். அப்போது தான் இவரின் உண்மையான நடிப்பு வெளிப்படும்.

யோக் ஜப்பி: சைக்கோ போலீஸ். படத்தில் ஒரு டயலாக் இல்லை! மனிதரின் பார்வை,  உடல்மொழியை பார்த்தாலே, எப்போது யாரை என்கவுண்டர் செய்வாரோ என்று தான் இருக்கிறது. செம ஃபிட்டு!

அருள்தாஸ் [விஜய்யின் அண்ணன்]: நான் அடிமை இல்லை படத்தில் ஒரு அருமையான காரெக்டர் செய்திருந்தார். இதிலும் மிக பிரமாதமாய் நடித்திருக்கிறார். கிளைமேக்சில் இவரின் கோபம் உச்சம்!

படத்தின் இசை மிகப் பெரிய ப்ளஸ். மாமா டவுசர் கழண்டுச்சு, காசு, பணம், துட்டு, மணி [ஆட்டம் கொண்டாட்டம்!] பாடல்கள் எஃப் எம்மில் கேட்கும்போதே பிடித்துப் போனது, செம ரவுசு. எல்லாம் கடந்து போகும் பாடல் ரெட்ரோ ஃபீலில் அருமையாய் இருந்தது. பாடியது கோவை ஜலீல். அருமை...

படத்தின் பெரிய ஹீரோ கதை, வசனம், அதை எழுதி, இயக்கிய இயக்குனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பட்டையை கிளப்புகிறது. ஒவ்வொரு ட்விஸ்டும் சீட்டில் நம்மை இன்னும் அழுத்தி உட்கார வைக்கிறது. படத்தில் எனக்கு உருத்தியதே ஒரே விஷயம்...அதனுடைய முடிவு! தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்! இதில் இந்த படத்திற்காக "சூது கவ்வும்" என்ற பகுதியை மட்டும் எடுத்தாண்டிருக்கிறார் இயக்குனர். மனிதர் மீண்டும் தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையை தரவில்லை! படம் பார்க்கும் நாமும், அதன் உறுத்தல் இல்லாமல் சிரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம். அது தானே இயக்குனர் சாமர்த்தியம்!!