பெருங்குளத்தூர் இறங்கியதும் ஒரு விழுப்புரம் பேருந்து கண்ணில் பட்டது. மதுராந்தகம் பைபாஸ்? என்ற கேள்விக்கு நடத்துனர் தலை ஆட்டியதும் வண்டியில் ஏறி வழக்கம் போல் ஜன்னல் இருக்கையை தேடினேன். ஓட்டுனர் இருக்கையின் பின் உள்ள இருக்கையில் ஒரே ஒரு பையன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவன் பின்னால் உள்ள இருக்கை காலியாய் இருந்தது. ஒரு மணி நேரம் நிம்மதியாய் காற்று வங்கிக் கொண்டே போகலாம் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்தேன். முப்பத்தி இரண்டு ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டேன். பேருந்தும் நன்றாகவே இருந்தது.  பேருந்தில் கியர் பாக்ஸில் ஒரு சின்ன ப்ளேயர் ஒன்று இருந்தது. "ஹர ஓம் நமச்சிவாயம், ஹர ஓம் நமச்சிவாயம்" என்று எஸ்.பி.பி பக்தி பரவசமூட்டிக் கொண்டிருந்தார்! வண்டி கிளம்ப ஆயுத்தம் ஆனதும் ஒரு அப்பா தன் இரண்டு மகள்களுடன் பேருந்தில் ஏறினார். சுற்றி முற்றி பார்த்தவர் அந்த இரண்டு பெண்களையும் அந்த பையன் பக்கத்தில் உட்காரச் செய்தார்! [எப்படித் தான் கண்டு புடிக்கிறாங்களோ!] அவர் எதிர் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்தப் பையனிடம் இந்தப் பக்கம் உட்காந்துக்குறியா என்று கேட்டார். அவன் அசைந்து கொடுக்கவில்லை. சரி போகட்டும் என்று விட்டு விட்டார். நடத்துனர் வந்து சீட்டு கொடுத்துக் கொண்டே அவர்களை பார்த்தார், என்னை பார்த்தார். நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க. சொல்லி முடிப்பதற்குள் நான் எழுந்து விட்டிருந்தேன்! நீங்க பின்னாடி போங்கம்மா என்று அவர்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்தார். [எப்படித் தான் கண்டு புடிக்கிறாங்களோ!] அந்தப் பையன் அருகில் நான் உட்கார்ந்து கொண்டேன். எஸ்.பி.பியின் குரல் ஒரு படி மேலே கேட்டது. சரி ஓட்டுனர் கண்ணாடி வழியாய் சாலையை பார்க்கலாம் என்று நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். நடத்துனர் அந்த அப்பாவிடம், அப்புறம் அவன் சீண்டுவான், தொல்லை செய்வான்...யாரு கண்டா...என்ன சார் சொல்றீங்க? என்று மெல்ல வினவிக் கொண்டிருந்தார். அவரும் பெண்ணை பெற்றிருப்பார் போல் இருக்கிறது.

வண்டி புறப்பட்டது. கூட்டம் அதிகம் இல்லை. சீட்டு கொடுத்து விட்டு முன்னாள் உள்ள இருக்கையில் நடத்துனர் உட்கார்ந்து கொண்டார். வந்தவுடன் முதல் காரியமாக அந்த ப்ளேயரின் ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றினார். பஜனை நின்றது. சற்று நேரம் ஒன்றுமே கேட்கவில்லை. லேசாய் ஒரு சினுங்கல் கேட்டது. நம்ம ஜானகி தான். சினுங்கல் வலுத்தது. இது என்னடா பாட்டு என்று நாங்கள் யோசிக்கும் முன், டகுடகுடுன், பொன்மேனி...டகுடகுடுன், உருகுதே...டகுடகுடுன், என்னாசை..டகுடகுடுன், பெருகுதே என்று ஒரே ஆர்ப்பாட்டம்! சிலுக்கு அந்த கியர் பாக்ஸில் ஏறி ஆடுவது போல் எனக்கு கற்பனை ஓட ஆரம்பித்து விட்டது. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரு பஜனையை நிறுத்தி விட்டு இன்னொன்றை ஆரம்பித்து விட்டாரே என்று! நடத்துனர், ஓட்டுனரை ஒரு பார்வை பார்த்தார்! இருவரும் சிரித்தார்கள். நல்ல வேலை பெண்கள் பின்னால் உட்கார்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நடத்துனர் என்னையா, இருக்கட்டுமா என்று கேட்டார். ஓட்டுனர், விடு விடு..என்று சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டினார். இவ்வளவு நேரம் சாமி பாட்டு போட்டுட்டு இருந்தாங்க, இப்படி ஒரு பாட்டு போட்டாங்கன்னு நெனைக்க போறாங்க என்று நடத்துனர் சிரித்துக் கொண்டே அமர்ந்து கொண்டார். டகுடகுடுன் தொடர்ந்தது!!

அது ஜானகி ஹிட்ஸ் போலும்! எனக்கு சுசீலா, சித்ரா பிடித்த அளவுக்கு ஜானகியை பிடிப்பதில்லை [சில பாடல்களை தவிர]. வடநாட்டில் தள்ளாத வயது வந்தும் லதாவையே கட்டி அழுதது போல இங்கு ராஜா ஜானகியே கட்டி அழுதார் என்று தான் தோன்றுகிறது. சித்ராவை அறிமுகப்படுத்தி விட்டு ஏன் இந்த ஆள் ஜானகிக்கே எல்லாம் பாட்டும் கொடுத்தார் என்று தெரியவில்லை. கண்ணை மூடி கேட்டால், கிழவி பாடுவது போலவே இருக்கும்! கீச்சு கீச்சு என்று! அந்த பேருந்தோ ப்ரேக் போட்டாலே "கீ" என்று சத்தம் போட்டது. இதில் வெளியே வாகனங்களின் இரைச்சல். உள்ளே ஜானகியின் குரலுடன் சேர்ந்து ராஜா வேறு நூறு வயலின்களை கொண்டு என் இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தார். எனக்கு காது வலித்தது. பின் பக்கம் போய் விடலாம் என்றால், நடத்துனர் பார்த்து என்னை அங்கு உட்காரச் சொன்னார். அவர் என்ன நினைப்பாரோ என்று ஒரு தயக்கம். [இப்படி எல்லாம் உங்களுக்குத் தோன்றுமா?] சத்தத்தை கம்மி பண்ண சொன்னால் என்ன சொல்வாரோ என்று தயக்கம் வேறு. கடைசியில் பொறுமை இழந்து கேட்டு விட்டேன். அவருக்கும் அது தோன்றியது போலும். உடனே சத்தத்தை குறைத்து விட்டார்! அட கேட்டால் கிடைக்கத் தான் செய்கிறது! அப்பாடா...இனி வேடிக்கை பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி. ரோடு பயணம் அருமை. ஆறு மணி நேரத்தில் மதுரை சென்று விடலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நம் ஊர் அரசியல்வாதிகள் செய்த உருப்படியான ஒரு காரியம். அரசியல்வாதிகளை மனதுக்குள் பாராட்டி நிமிர்வதற்குள் அவர்களை திட்ட வேண்டியதாய் ஆகி விட்டது. நேற்று "அந்தக்" கட்சியின் தேர்தல் நிதி திரட்டும் கூட்டம் ஒன்று மதுராந்தகத்தில் நடந்தது. எங்கு நடந்தது? மதுராந்தகத்தில். மதுராந்தகம் எங்கு இருக்கிறது? செங்கல்பட்டு தாண்டி! சென்னையில் இருந்து எண்பது கி.மீ. நான் எங்கே இருக்கிறேன். வண்டலூர்! அங்கு தொடங்கிய அவர்களின் கட்டவுட், பேனர்கள் மதுராந்தகம் வரை தொடர்ந்தது. ஒவ்வொரு பத்து அடிக்கு ஒரு பேனர். சும்மா ஏப்ப சாப்ப பேனர் கிடையாது. என்ன போட்டோக்ராபி, என்ன போஸு...சினிமா நட்சத்திரங்கள் தோற்றார்கள் போங்கள்! ரஜினி, கமல், அஜித், விஜய் கூட இத்தனை போஸ் தந்திருக்க மாட்டார்கள். ஒரு நிமிஷம் ஒன்னுக்கு போயிட்டு வந்துர்றேன் என்பது போல் விரலை நீட்டுவதை எல்லாம் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்!  ஒரு பேனர் அதன் அளவு, நேர்த்தி தரம் வைத்து பார்த்தால் குறைந்தது ஐநூறு ரூபாய் தேறும்! பத்து அடிக்கு ஒரு பேனர். இதை மீறி ஆங்காங்கே கட்சிக் கொடிகள், விளக்குக் கம்பங்கள்....இன்ன பிற! என்பது கி.மீக்கு! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..ஒரு நாள் கூத்துக்கு எத்தனை செலவு? எத்தனை நேர விரயம்? வீண் உழைப்பு? இதெல்லாம் யார் பணம்? 

வழி நெடுக! அசோகர் சாலையில் மரங்கள் நட்டார். இவர்கள் மாநாட்டுக்கு கொடிகள், கட்டவுட்டுகளை நடுகிறார்கள். இதற்கும் அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யச் செல்லவில்லை. அப்படிச் செல்லும்போது வைத்தாலே தப்பு, இவர்கள் கட்சியின் தேர்தல் நிதி திரட்ட சாலை வழியெங்கும் எங்கள் விடிவெள்ளியே, உதயமே, தமிழே, உடன்பிறப்பே...முடியலை...! இதிலும் இவர்கள் இப்போது ஆட்சியில் இல்லை. இப்போதே இந்த ஆட்டம்! இன்னும் இருந்தால்....அதனால் ஆட்சியில் இருக்கும்  கட்சிக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை. சென்ற மாதம் விமான நிலையம் திறக்க வந்த ஏவியேஷன் மினிஸ்டரை பற்றி ஒரு வார்த்தை இல்லை, அம்மாவுக்குத் தானே கட்டவுட்டுகள் கொடி பறந்தன. காவிரித்தாயே...கருணைக் கடலே, உயிரே....இப்படி விதம் விதமா யோசிச்சு எழுதவே சம்பளம் போட்டு ஆள் வச்சிருப்பாங்களோ?...கேட்டால், தலைவர்களா கேட்கிறார்கள்? தொண்டர்களின் அன்பில் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? அம்மா என்றால் எல்லோருக்கும் டெரர் தானே? இனிமேல் எனக்கு இப்படி எல்லாம் கட்டவுட்டுகள் வைக்கக் கூடாது என்று அவர்கள் கண்டிஷனாய் சொன்னால் அதை மீறி வைக்க யாருக்காவது திராணி இருக்கிறதா? வேடிக்கையான விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன். சில மாதங்களுக்கு முன், கவுன்சிலர்கள் மேல் வரும் புகாரை விசாரிக்க அம்மா ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அம்மாவின் வருகையை ஒட்டி அவருக்கு கட்டவுட் வைத்து வரவேற்றார்களாம் அவர்களின் தொண்டர்கள்!! தங்களை திட்ட வருவது கூட தெரியாமல், அதற்கும் கட்டவுட் வைத்து வரவேற்கிறார்களே என்று அம்மா பயங்கர கடுப்பாகி விட்டார்களாம் :-) இது எப்படி இருக்கு?   

வீரப்பா சொன்னது தான் ஞாபகம் வருகிறது. "நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!"

2 Responses
  1. Vetirmagal Says:

    // வடநாட்டில் தள்ளாத வயது வந்தும் லதாவையே கட்டி அழுதது போல இங்கு ராஜா ஜானகியே கட்டி அழுதார் என்று தான் தோன்றுகிறது. சித்ராவை அறிமுகப்படுத்தி விட்டு ஏன் இந்த ஆள் ஜானகிக்கே எல்லாம் பாட்டும் கொடுத்தார் என்று தெரியவில்லை. கண்ணை மூடி கேட்டால், கிழவி பாடுவது போலவே இருக்கும்! //
    கன் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறீர்கள்.
    முதல் முறையாக இந்த மதிரி விமரிசனம் !, எத்தனையோ திறமை உள்ளவர்கள் இருந்த போதிலும் , பழைய குரல்களுக்கே வாய்ப்புக்கள் கொடுத்து , நம் காதுகளை பதம் பார்க்கிறார்கள். பாடுபவர்களும் தம்மை தாமே உயர்த்திக் கொள்கிறார்கள்.


  2. rahman really made difference by giving chance to lot of them even chorus singers...illayara failed there miserably...thanks for ur comments raj