என் மகள் "தரு" வுக்கு நான் எழுதிய தாலாட்டு...படித்து விட்டுச் சொல்லுங்கள்...

இது "தரு"வுக்கானதா தமிழுக்கானதா என்று !

-----------------------------------------------------------------

அத்திப் பூவே ஆராரோ
அல்லித் தண்டே ஆராரோ

ஆசை முகமே ஆராரோ
ஆணிவேரே ஆராரோ

இதயத் துடிப்பே ஆராரோ
இலவம் பஞ்சே ஆராரோ

உவகை தருவாய் ஆராரோ
உயிரில் கரைந்தாய் ஆராரோ

கவிதை மொழியே ஆராரோ
கருத்தில் நிறைந்தாய் ஆராரோ

சுத்தமான உயிரே ஆராரோ
சுடர் தரும் ஒளியே ஆராரோ

மழலை மொழியே ஆராரோ
மயக்கும் உயிரே ஆராரோ

பாடும் குயிலே ஆராரோ
பாடு பொருளே ஆராரோ

வம்ச விளக்கே ஆராரோ
வசியப் பொருளே ஆராரோ

வெள்ளை முகிலே ஆராரோ
வெண்பனித் துளியே ஆராரோ

இன்பத் தருவே ஆராரோ
கம்பன் தறியே ஆராரோ

தங்கத் தருவே ஆராரோ
எங்கும் நிறைவாய் ஆராரோ

------------------------------------------------------------------

அழுவாதே மகளே அழுவாதே

உன் அழுத முகம் பாக்கவா
ஏழு கடல் தாண்டி வந்தேன்

உன் கண்ணில் தண்ணி காணவா
காடு விட்டு நாடு வந்தேன்

உன் விசும்பல் சத்தம் கேக்கவா
வெயில்ல காய்ஞ்சு வந்தேன்

உன் கேவல் குரல் கேக்கவா
கேட்காத பேச்செல்லாம் கேட்டு வந்தேன்

உன் தங்க முகம் கருகவா
தறிகெட்டு ஓடி வந்தேன்

உன் தொண்டைக் குழி காயவா
தொல தூரம் ஓடி வந்தேன்

உன் வாடிப் போன முகத்துக்கா
வரிப்புலியா பாய்ஞ்சு வந்தேன்

உன் உப்பு நீரு சுவைக்கவா
உசுரோடு நானும் வந்தேன்

அழுவாதே மகளே அழுவாதே

அப்பன்காரன் வந்துப்புட்டேன்
அள்ளி வாரி உன்னை அணைக்க

சிரிச்ச முகம் நீ காட்டு
செறகு பெரும் என் சீவன்

சினிமா பார்ப்பது பலருக்குப் பிடிக்கும். சினிமா ஷூட்டிங் பார்க்க எத்தனை பேருக்குப் பிடிக்கும்? அந்த அனுபவமே அலாதி. எனக்குத் தெரிந்து நான் பார்த்த முதல் ஷட்டிங், ஒரு ராமராஜன் படம். எங்க ஊரு 'something' என்று வரும். மதுரை மஹால் சரித்திரப் புகழ் பெற்றதோ இல்லையோ, சினிமா புகழ் பெற்றது. ராமராஜன் தொடங்கி ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா வரை அங்கு வராதவர்களே இல்லை என்ற அளவுக்கு ஆகி விட்டது. அப்போது நான் ஆறாவதோ, ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். மஹாலில் ஷூட்டிங் என்று கேள்விப்பட்டு, ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்று பார்த்தோம். பாடல் ஒலித்ததும், ராமராஜன் கதாநாயகியை நோக்கி கையை நீட்டியபடியே ஓடி வந்து கொண்டே இருந்தார். ஓடினார் ஓடினார், மஹாலின் ஓரத்துக்கே ஓடினார். அங்கு டைரக்டர் கட் சொன்னாதால் நின்று விட்டார். அவரின் ஓட்டம் எங்களுக்கு வாட்டத்தை கொடுத்து விட்டது. நான் நினைக்கிறேன், முதன் முதலாய் ஷூட்டிங் பார்ப்பவர்க்கு படப்பிடிப்பு குழுவினர் லூசாய் தான் தோன்றுவார்கள். ஐந்து நிமிடமே வரும் பாடலுக்கு ஐந்து நாள் ஓடிக் கொண்டே இருந்தால், இந்த எழவை இன்னும் எத்தனை நாள் எடுப்பாங்க என்ற சலிப்பு வந்து விடும்.

மதுரையில் ஷூட்டிங் ஸ்பாட், திருமலை நாயக்கர் மஹால் மற்றும் தெப்பக்குளம். எனக்கு வீடு மஹால் அருகில். பள்ளிக்கூடம் தெப்பக்குளம் அருகில்! கட் பண்ணா, அடுத்த ஷூட், அர்ஜுன் ஆடிய கரகாட்டம். என்னமோ ஒரு சங்கிலி முருகன் படம் என்று நினைக்கிறேன். தெப்பக்குளத்தில் என் பள்ளிக்கு முன் அந்த ஷூட் நடந்தது. எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. நான் மற்றும் சில மாணவர்கள் பள்ளி செல்வதை விட்டு அதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று தெப்பத் திருவிழா என்பதால், பள்ளியில் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை என்று ஞாபகம். அன்று மாலை அங்கு இருந்த ஒரு வீட்டில் அவர் தங்கி இருந்தார். அவரை பார்க்க அனைவரும் ஆவலுடன் வெளியே காத்திருக்கும் போது, அவர் மாடியிலிருந்து கையசைத்தார். ஜென்ம சாபல்யம் பெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

பிறகு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, மஹாலில் பம்பாய் படத்தின் கண்ணாளனே பாடல் ஷூட். யாரையும் உள்ளே விடவில்லை. நட்சத்திரங்களை காண கூட்டத்தோடு கூட்டமாய் முண்டி அடித்து கொண்டிருந்தது கூட்டம். காரிலிருந்து மனிஷா இறங்கினார். பிறகு நான் ஏன் அர்விந்த் சாமியை பார்க்கப் போகிறேன். மறுபடியும் ஒரு ஜென்ம சாபல்யம்! இந்த முறை எப்படியாவது உள்ளே சென்று மணிரத்னத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். அவரை பார்த்து விட்டால் போதும், அவர் என்னை பார்த்தவுடன், அட இவன் அர்விந்த் சாமியை விட அழகா இருக்கானே என்று என்னையும் படத்தில் போட்டு விடுவார் என்று நம்பினேன். உங்கள் நல்ல நேரம் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஷூட்டிங் எல்லாம் முடிந்தவுடன், என் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு அல்டாப்பு பேர்வழி, நீ என்கிட்டே சொல்ல வேண்டியது தானே, நான் கூட்டிட்டு போயிருப்பேனே! நான் அங்கேயே தானே இருந்தேன் என்று கதை விட்டார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. அதே எரிச்சலுடன் பனிரெண்டாம் வகுப்பு கணக்கை பார்த்தவுடன், கண்ணில் நீர் வழிந்தது.

கல்லூரி முதலாம் ஆண்டில் நேருக்கு நேர் படத்தின் மனம் விரும்புதே ஷூட். ஒரு வழியாய் மஹாலின் உள்ளே போய் விட்டோம். ஆனால், ஷூட் மாடியில் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஆட்கள் நின்று கொண்டு மேலே போகாமல் தடுத்து விட்டார்கள். என் நண்பன் ஒருவன் வெளியே வந்தவுடன், என்னுடன் வா நான் கூட்டிப் போகிறேன் என்று என்னை கூட்டி போனான். மஹாலின் பின்புற கேட்டில் ஏறி குதி என்றான். நான் பாதி ஏறியதும், என் தன்மானம் என்னை தடுத்து விட்டது. கேவலம் ஒரு ஷூட் பாக்குறதுக்கு இப்படி திருடன் மாதிரி போக வேண்டுமா என்று யோசித்து நான் வரலை, நீ போ என்று வீட்டுக்கு வந்து விட்டேன். வரும் வழியெல்லாம் என் தன்மானத்தை நினைத்து பூரித்துப் போயிருந்தேன். என் நண்பன் எப்படியோ ஷூட்டிங் பார்த்து விட்டு பொண்ணு யாருன்னு தெரியலை என்று கூறி விட்டான். அவன் பார்த்து விட்டானே என்று ஏக்கமாய் தான் இருந்தது. இருந்தாலும் நான் செய்தது தான் சரி என்று என்னை தேற்றிக் கொண்டேன். படம் வந்ததும், சிம்ரனை அந்த பாட்டில்
பார்த்தவுடன், அன்று முழுவதும் என் தன்மானத்தை திட்டேனேன்! கேவலம் தன்மானம்! ச்சே...

சென்னைக்கு வந்து பெரிதாய் ஷூட்டிங் ஒன்றும் பார்க்கவில்லை. ஏதோ அங்கங்கே ஒன்றிரண்டு. அதே கூட்டம், அதே ஆர்வம், அதே கேலி, அதே சலிப்பு என்று எள்ளல ஷூட்டிங்கும் ஒரே மாதிரி தான் இருந்தது. திடீரென்று ஏன் இந்த ஷூட்டிங் புராணம் என்றால், இன்று காலை அலுவலகம் வரும் வழியில் பல்லாவரம் பாலத்தில் பலர் வண்டிகளை நிறுத்தி கீழே செல்லும் ரயில் பாலத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் அடிபட்டவர்களை நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டம். சரி தான் இன்னைக்கு எவனோ என்று நினைத்து ஒருவரிடம் கேட்டேன். ஷூட்டிங் என்று வயிற்றில் பாலை வார்த்தார். Information Sharing என்றால் தமிழன் தான். ஆர்வமுடன் என்ன என்று விசாரிக்கும் ஒவ்வொருவருக்கும் சலிக்காமல் பதில் சொல்வார்கள். சரி, இந்த இடத்துக்கு வித்தியாசமான நியுசா இருக்கே என்று நானும் களத்தில் குத்தித்தேன். நடிகர் நடிகைகளே தெரியவில்லை. குடைக்குள் மழை மாதிரி குடைக்குள் இயக்குனர் பாண்டிராஜ் உட்கார்ந்திருந்தார். உடனே என் மூளை துரிதமாய் செயல்பட்டு படம் "கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று எனக்கு சொல்லிவிட்டது. விமலோ, சிவாவோ காணவில்லை. யாரோ ஒருவனை பாலத்தில் மல்லாக்க படுக்க வைத்து காமெர அங்கிள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ம்ம்..ஆர்டிஸ்ட் ஐ கூப்பிடுங்கப்பா, சிவா வாங்க என்றார் பாண்டிராஜ். சார், பொறுமையாய் காரெவனிலிருந்து இறங்கி டச் அப் எல்லாம் பண்ணிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கதாநாயகி ரெஜினாவும் [அப்படித் தான் நினைக்கிறேன்] வந்தார். பாலத்தில் படுத்துக் கொண்டு இருவரும் தோளை இடித்துக் கொள்ளும் காட்சி. ஒரு பாடல் sequence. இசை ஒலிக்க இருவரும் நடித்தார்கள். சிவ கார்த்திகேயன் ஏ சி ஸ்டூடியோவில் வருவோர் போவோரை எல்லாம் கலாய்த்துக் கொண்டு ராஜா மாதிரி வாழ்ந்தார். இன்று பட்ட பகலில், மொட்டை வெயிலில் பலர் எச்சில் துப்பிய, மல ஜாலம் கழித்த பல்லாவரம் ரயில்வே டிராக்கில் மல்லாக்க படுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவரின் நிலையை நினைத்து நொந்து போனேன். அது தானே சினிமா. ஒன்றை பெறுவதற்கு ஒன்றை இழந்து தானே ஆகணும்! அப்போது என்னை போலவே ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வந்த ஒருவன், சீ...ஷூட்டிங்கா என்று அலுத்துக் கொண்டான். நம் மக்களுக்கு ரயில்வே ட்ராக் என்றால், சில முண்டங்கள் தேவைப்படுகிறது!
சென்ற வாரம் முதல் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை சென்ற போது ஏனோ ஒன்றுமே வாங்கத் தோன்றவில்லை. பாரதி புத்தகாலயத்தில் சிறுவர்கள் எழுதிய [பச்சை யானை - பின்நவீனத்துவம்?] சிறுகதை புத்தகங்கள் மட்டும் 50 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். இப்போது தான் தேசிகனின் வலைப்பதிவு மூலம் தெரிந்தது நான் புத்தகம் வாங்காததால், புத்தக வியாபாரமே டல் அடித்து விட்டது என்று! அடித்து பிடித்துப் போய் வாங்கி வந்தேன். இந்த முறை சிறுகதைகள் அதிகமாய் வாங்குவதில்லை என்று முடிவு கட்டியிருந்தேன். என் மனைவி, என் மகளுக்கு ஒரு புத்தகம் வாங்கி வரச் சொன்னாள். என் மகளுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம். உனக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டால் கூட சிரிக்கிறாள்! விசேஷம் என்னவென்றால் அவளின் அம்பதாவது நாள் இன்று!

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

1. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
2. அறியப்படாத தமிழகம் - தொ. பரமசிவம் - அறிவோம் என்று வாங்கி இருக்கிறேன்.
3. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன் - கடைசியில், என்னிடம் வந்தே விட்டாள்!
4. தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி  - டிவைன்!
5. நிழல் வீரர்கள் - பி. ராமன் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்.
6. காடு - ஜெயமோகன் - வெகு நாட்களாய் படிக்க நினைக்கும் புத்தகம். ரப்பரும் வாங்க வேண்டும். [காட்டை அழிக்கவா என்று கேட்காதீர்கள்!]
7. தாயம் - ரா - வாழ்க்கை பாடம். 
8. தாய் - கார்க்கி - என்ன வெலை கொடுத்தாலும் உன்னால ஒரு "தாயை" வாங்க முடியுமாடா? [கடைக்காரரிடம்] ஒரு தாய் கொடுப்பா! படம்: கன்னி ராசி!
9. பேயோன் 1000 - பேயோனின் ட்வீட்டுகள். இவருடைய சமத்காரமான நகைச்சுவை எனக்குப் பிடிக்கிறது. உதாரணம்: புத்தகத்தில் இருக்கிறது! [இப்படி.] [எப்படி? :-)]