சென்ற வார ஞாயிற்று கிழமை ஒரு கல்யாணத்திற்காக மாயாவரம் வரை செல்ல வேண்டி இருந்தது. ரயிலில் காலை எட்டு மணிக்கு ஏறினால் மதியம் இரண்டு மணிக்குள் சென்று சேர்த்து விடும் என்று சொன்னார்கள். காலை எட்டு மணிக்கு எழும்பூரில் இருக்க வேண்டும் என்று படுத்தேன். மறுநாள் காலை டான் என்று ஒன்பது மணிக்கு துயில் எழுந்தேன்! நான் தான் புத்திசாலி ஆயிற்றே, ஃபால் பாக் ப்ளான் ஒன்றை கை வசம் வைத்திருந்தேன். ஈசீஆர் சென்று பாண்டி போய், அங்கிருந்து சிதம்பரம் போய், அங்கிருந்து மாயவரம் போவது என்ற மிக எளிதான ப்ளான். பத்தரை மணி அளவில் திருவான்மியூர் பஸ் பிடித்தேன். என் முன்னோர்கள் செய்த புண்ணியம், அது பதினோரு மணிக்குள் திருவான்மியூர் சென்று விட்டது. அங்கிருந்து இறங்கி ஒரு டப்பா பாண்டி பஸ் ஒன்றை பிடித்தேன். இடம் வேறு கிடைத்தது! நூறு ரூபாய் நோட்டு கொடுத்த எனக்கு எண்பத்தைந்து ரூபாய் டிக்கட்டுக்கு போக மிச்சம் பத்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு "சீட்டு சீட்டு" என்று அடுத்தவரிடம் போய் விட்டார் நடத்துனர். பாக்கி தராத நடத்துனரை பற்றி கவிதை எல்லாம் நான் படித்திருக்கிறேன். அது இப்படி இருக்கும் என்று ஞாபகம்.
வழி நெடுக வரும்
இயற்கை காட்சியை ரசிக்க முடியவில்லை
நடத்துனர் தரவேண்டிய பாக்கி!
சார் மிச்ச ஐந்து ரூபாய் என்று குடைந்தேன். நீங்கள் நேற்று என்னை பார்த்திருக்க வேண்டும். ஒரு ஒளி மங்கிய டி சர்ட், ஒரு ஒளி இழந்த ப்ளு [வண்ணம் - இறந்த காலம்!] ஜீன்ஸ் பேன்ட். ஒரு தோளில் மாட்டும் பை. கல்யாணத்திற்கு போகிறோம் என்று வழு வழுவென்று சவரம் வேறு செய்திருந்தேன். கிட்டத்தட்ட லாலா கடை சேட்டு மாதிரி இருந்தேன். கண்களில் ஒரு குளு குளு கண்ணாடி வேறு! கண்டிப்பாய் அந்த ஐந்து ரூபாயை நான் கேட்பேன் என்று நடத்துனர் நினைத்திருக்க மாட்டார். இது ஒரு தர்மசங்கடமான நிலை. நடத்துனர்களிடம் பாக்கி கேட்பது ஒரு கலை. சத்தமாய் கேட்கக் கூடாது. மெதுவாய் கேட்டால் காதிலேயே வாங்காத மாதிரி நடந்து கொள்வார்கள். அவர் நாம் சொன்னதை கேட்டாரா, பாக்கியை கொடுப்பாரா என்று ஒன்றும் புரியாது. கொஞ்சம் சத்தமாய் கேட்டால், அவ்வளவு தான். நீங்கள் தீர்ந்தீர்கள். அத்தனை பொறுப்பா இருக்குறவன் சில்லறை கொண்டு வர வேண்டியது தானே என்று காய்ச்சி எடுத்து விடுவார். அதிலும் என்னை மாதிரி இப்போது தான் தொட்டிலிலிருந்து பால் குடித்துவிட்டு வாயை துடைத்து விட்டு வந்த மாதிரி இருந்தால் சொல்லவே வேண்டாம்! ம்ம்..அவர் என்னையும் என் கண்ணாடியையும் உற்று பார்த்தார். அல்லது, எனக்கு அப்படி பட்டது. [ஏன்யா, மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் போடறது குத்தமா?] இருங்க இறங்கும்போது தர்றேன் என்றார். அப்பாடா, நான் கேட்டது அவர் காதுகளில் கேட்டிருக்கிறது என்ற திருப்தியுடன் சாய்ந்து உட்கார்ந்தேன். ஓட்டுனரின் இடது பக்கத்து சீட்டில் தான் அமர்ந்திருந்தேன். டோல் கேட் வருவதற்குள், பின்னாலிருந்து ஒருவர் எஞ்சின் மேல் இருந்த அந்த கேரி பேக் கொடுங்க என்றார், அது என்னது இல்லை. அதன் உரிமையாளர் அவசர அவசரமாய் எடுத்துக் கொடுத்தார். ஓட்டுனர் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லக லகவேன்று வாந்தி எடுத்தார். எனக்கு கொடைக்கானல் மலை இறங்குவது ஞாபகம் வந்தது. எடுத்து விட்டு அதை தூக்கி எறியவில்லை. பை நிறைய வேண்டாமா? கையிலேயே வைத்திருந்தார். வண்டியில் வாந்தி எடுப்பது ஒரு கொடுமையான அனுபவம். எங்கே எனக்கும் வந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது. இருந்த ஒரே கேரி பேகும் போய் விட்டது. பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்ததால் வண்டி போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈசிஆர் ரோட்டில் பைக்கில் போகவே கூடாது என்று படுகிறது. பஸ் ஒன்று போனால் அந்த பக்க சாலை முழுவதும் தீர்ந்து விடுகிறது. இதில் பெரிய பெரிய கார்களில் அந்தப் பக்கம் வருபவர்கள் ஒரேடியாய் சைட் எடுத்து இந்தப் பக்கம் வந்து விடுகிறார்கள். கடற்கரை சாலை என்று ப்ளான் செய்தவர்கள், இத்தனை செலவு செய்தவர்கள் கொஞ்சம் தொலை நோக்குப் பார்வையுடன் இதை ஒரு நான்கு வழிப்பாதையாக ஆக்கி இருக்கலாம்!
வண்டி சிறிது தூரம் சென்றதும் ஒரு நிறுத்தத்தில் இறங்கிய பெண் ஒருவர், "கண்டெக்டர் சில்லறை நாலு ரூவா கொடு" என்று கீழே இறங்கி கத்துவது என் காதில் விழுந்தது. கண்டெக்டர் அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. பஸ் புறப்பட்டது. எனக்கு பகீல் என்றது. இறங்கும் போது தருகிறேன் என்பதற்கு இது தான் அர்த்தமா? என்று எண்ணிக் கொஞ்சம் உஷாரானேன். சிறிது நேரம் கழித்து நடத்துனர் வந்து என் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒடிசலான ஒரு பையன் தயங்கி தயங்கி நடத்துனரிடம் ஏதோ சொன்னான். பிறகு தான் புரிந்தது. நாங்கள் இருக்கும் பஸ்சுக்கு முதல் பஸ்ஸில் மகாபலிபுரம் செல்வதற்கு ஏறியிருக்கிறான். மகாபலிபுரத்தில் இறங்கியவன் பையை பஸ்சிலேயே விட்டு விட்டான். இப்போது அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு இந்த பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவனுக்கு தமிழ் தெரியாது. நடத்துனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கும் இரண்டுமே தெரியும் என்பதை பையன் உணர்ந்து கொண்டான். அதனால் இருவருக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் ஆனேன். பையன் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆந்திராவிலிருந்து வந்த ஸ்ரீ தேவியை, ரோஜாவை மதித்த அளவுக்கு வேறு யாரையும் நாம் மதிப்பதில்லை. சென்னையில் இரு நாட்கள் ஊர் சுற்ற வந்த அவன் இத்தகைய ஒரு கொடுமையான அனுபவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் சொல்லச் சொல்ல நானும் அதை நடத்துனரிடம் மொழி பெயர்த்துச் சொன்னேன். நம் அரசு ஊழியர்களிடம் எப்போதும் ஒரு மேம்போக்குத்தனம் தெரியும். நமக்கு உயிர் போகும் பிரச்சனை என்று ஒன்று சொல்லும்போது தான், "யாரு நம்ம எஸ் பியா? யாரு கூட? இதெல்லாம் பாலிடிக்ஸ்யா! நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல?" என்று வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒரு மனிதனாகவே அவர்கள் மதித்திருக்க மாட்டார்கள். அதே போல் தான் நான் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் [நடத்துனரும், ஓட்டுனரும்] வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் வேறு, என்ன சொல்கிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னத்தை சொல்ல? பஸ் ரிடர்ன் ஆகுமா என்று கேட்டதற்கு "டிப்போ போகும்" என்று ஒரு பதில். அங்கு யாரிடமாவது போன் போட்டு அந்தப் பையை எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமே என்றேன். நான் யாருக்கு ஃபோன் போடறது என்று செல் போனையே பார்த்துக் கொண்டிருந்தவர், கடைசி வரை ஒரு ஃபோன் கூட போடவில்லை. பையில் என்ன இருக்கிறது என்று கேட்டேன், "காமெரா, கொஞ்சம் கேஷ்" என்றான் பையன். "கேஷ் வேறு இருக்கா" என்று ஜெர்க் ஆனார் நடத்துனர். "இப்படி பையை வச்சுட்டா எறங்குறது" என்று தமிழே தெரியாது என்றாலும் அவனை கடிந்து கொண்டார். அவனை பார்க்க பரிதாபமாய் இருந்தது. தவறு செய்வது சகஜம், அதன் பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முயற்சி இல்லை, அதை விட்டு விட்டு நடந்த தவறையே பேசிக் கொண்டிருந்தால்? ம்ம்ம்...பஸ் பாண்டியை அடைந்ததும், அவன் டிப்போவில் சென்று விசாரிக்கலாம். அவன் அதிர்ஷ்டம் பை இருந்தால், மகாபலிபுரத்தை விட பாண்டி ஊர் சுற்ற நல்ல இடம் தான் என்று எண்ணிக் கொண்டேன்.
என் பிரச்னைக்கு வருவோம், இப்போது நடத்துனரிடம் பேசிப் பழகிய தைரியத்தில், இறங்கும் வரை எதற்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று, "சார், அந்த அஞ்சு ரூபா" என்றேன். ஒரு தடவை பையை துலாவி விட்டு, வண்டி ஒரு இடத்தில நிக்கும், அப்போ சில்லறை மாத்தி தர்றேன் என்றார். ஒரு அஞ்சு ரூபா இல்லையா? இல்லை வைத்துக் கொண்டே நேரத்தை கடத்துகிறார்களா? ஒன்றும் புரியவில்லை. அப்போது யாரோ ஒரு புண்ணியவான் சார் என் சில்லறை என்று வந்தான். அவனிடம் ஐந்து ரூபாய் வாங்கி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டார். அந்த ஐந்து ரூபாயை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டே எனக்கு கொடுத்தார். பரிட்சையில் பாஸ் ஆன திருப்தி, எலெக்ஷனில் சீட்டு கிடைத்த திருப்தி எனக்கு. ஒரு வழியா தட்டு தடுமாறி மூன்று மணி நேர பயனத்திருக்குப் பிறகு வண்டி பாண்டி வந்து சேர்ந்தது. மணி இரண்டு, இலக்கியா மெஸ்சுக்குள் நுழைந்தேன். ஒரு அசைவ சாப்பாடு சொன்னேன். பக்கத்தில் தாஸ் மார்க்கிலிருந்து வந்த ஒருவன் என் அருகில் உள்ளே சீட் இருப்பதை பார்த்தான். நான் எழுந்து உள்ளே போங்க என்று வழி விட எத்தனித்தபோது, அவருடன் வந்தவன், இல்லை நீங்க சாப்பிட்டு முடிங்க, வா என்று தள்ளாடியவனை அழைத்துச் சென்றார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தள்ளாடும் ஆசாமி, ஐ வெயிட்டிங், வெயிட்டிங் என்றான். [நான் தான் கூலிங் கிளாசை கழட்டிட்டேனே?] மீன் குழம்பு [ஒரு துண்டு மீனுடன்], சாம்பார், ரசம், மோர் அதோடு ஒரு மீன் வருவலையும் வாங்கிக் கொண்டேன். ஒரு புடி புடித்தேன். அறுபத்தைந்து ரூபாய் ஆனது! மீன் வறுவல் இருப்பத்தைந்து ரூபாய். சென்னையில் மொக்கை ஹோட்டல் போனாலும், ஒரு மீன் துண்டுக்கு எண்பது ரூபாய் கேட்பான். வாழ்க என்று வெளியில் வந்து சிதம்பரம் வண்டிக்குக் காத்திருந்தேன். வானம் மேக மூட்டமாய் இருந்தும், உஷ்ணம் தலைக்கேறியது. அப்படி ஒரு வெக்கை. என்ன ஊரோ!
சிதம்பரம் என்று போர்ட் மாற்றிய ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். "நான் வானவில்லையே பார்த்தேன்" பாடல் சத்தமாய் சில்னஸ் கொட்ட கொட்ட ஒலித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் போடுவதற்கென்றே சில பாடல்கள் வைத்திருக்கிறார்கள். "மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா", "சேலையில வீடு கட்டவா", "கும்பாபிஷேகம் கோவிலுக்குத் தான்", " "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி" என்று சில. பத்து பன்னிரண்டு வருஷமாய் இதை தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். "பூவுக்குள் போர்க்களம் செய்வது காதல், போர்க்களத்தில் பூச்செடி வைப்பது காதல்" [காதல் வரிகளாம்!] என்று மலேசியா பாட, அப்படியே ராமைய்யா ராவைய்யா என்று தேவாவும் சேர்ந்து கொள்ள எனக்கு அப்படியே யாரையாவது போட்டுத் தள்ளலாம் போல இருந்தது. அது ப்ரைவேட் பஸ். பஸ்ஸை ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு நினைத்து ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார் நடத்துனர். நம் நாட்டில் எங்கு போனாலும் கூட்டம். ஞாயிறு மதியம் மூணு மணிக்கு நூறு பேர் சிதம்பரம் போகிறார்கள். அப்படி நூறு பஸ் போகிறது. எல்லாம் நிறைந்து கொண்டு தான் போகிறது. மக்கள், மக்கள், மக்கள்...எங்கு பார்த்தாலும் தலைகள்...
பயணத்தில் இன்னொரு சுவாரஸ்யம் நம் மக்கள் கையில் இருக்கும் செல்போன்கள். அடடா..ஒவ்வொருத்தனின் ரிங் டோனும் ஒரு சிம்பொனி. அதிலும் போன் வந்து அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால்...இவர்கள் பேசுவது உண்மையில் போன் வழியாகத் தான் எதிராளிக்குக் கேட்கிறதா, அல்லது அப்படியே கேட்டு விடுமா என்று சந்தேகம். நான் பஸ்ஸின் நடுவில் அமர்ந்திருந்தேன். பஸ்ஸில் ஓட்டுனர் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தவருக்கு ஒரு போன் வந்தது!
மொதல்லா நீங்க எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட ஃபைசல் பண்ணுங்க...அப்புறம் அதெல்லாம் பாத்துக்கலாம்...[இதே வாக்கியத்தை ஒரு இருபது தடவை சொன்னார்!]
.....
அட நான் சொல்றதை கேளுங்க...[முப்பது!]
....
சரிங்க நீங்க சொல்றது சரி தான், நான் சொல்றதையும் கேளுங்க...
.....
யோவ், நீ மொதல்ல எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட கட்டுய்யா, அப்புறம் பத்திரம் திருப்புரதேல்லாம் பாத்துக்கலாம்..[நாப்பத்தேழு தடவை]
.......
ஆமா, நீ கடன் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுதே, அதுக்கு என்ன சொல்றீரு? [பதினேழு]
........
நீ கெடைக்கும்போதேல்லாம் தருவே, நான் கொஞ்சம் கொஞ்சமா பத்திரத்தை திருப்ப முடியுமா?
.........
மொத்தமா ரெண்டு வருஷத்துக்கு வட்டியோட கட்டிட்டு பத்திரத்தை வாங்கிட்டு போ! வேற பேச்சு கெடையாது...[எண்ணவில்லை!]
.........
இப்படியே ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
.........
யோவ், இப்போ நான் வெளிய இருக்கேன். ஊர்ல இருந்து பஸ்ல திரும்பி வந்துட்டு இருக்கேன்.[அட மக்கா இப்போ தான் அது உனக்கு புரிஞ்சதாப்பா!] ஆஸ்பத்திரி போயிட்டு வர்றேன்! [அது சரி!] வீட்ல அவங்க மட்டும் தான் இருக்காங்க [அந்த கடன் வாங்கினவன் ப்ளான் போட்ருப்பானா, மாட்டனா?]....
அதற்குள் என் அருகில் இருந்த ஒரு அம்மா ஒரு போனை போட்டு, ஏய், ஆமா, பஸ்ல தான் இருக்கேன். நான் கோவிலுக்கு போறேன். பாத்து இருடா செல்லம். கோயிலுக்கு போய் போன் போடறேன். நீ செல்லை பக்கத்துலையே வச்சிரு! சைலன்ட்ல போட்ராதே, என்னா...சரிடா செல்லம் வைக்கவா...என்ன மூணு மணிக்கு இவ்வளவு ரஸ்ஸா இருக்கே என்று பக்கத்தில் உள்ளவரிடம் அங்கலாய்த்தார்.
இதன் நடுவில் ஒன்ஸ் மோர் படப் பாடலில் தேவா குரலில் பாட்டு! இதற்கு பெயர் தன் ஃப்யுஷன்! கொலை வெரி ஆகுமா ஆகாதா?
சிதம்பரம் நெருங்க நெருங்க தலை வலி ஆரம்பித்தது. ஒரு வழியாய் ஊர் வந்து இறங்கியவுடன் நேராய் சென்று ஒரு ஸ்ட்ராங் காப்பி சாப்பிட்டேன். தெய்வீகமாய் இருந்தது. மாயவரத்திற்கு அடுத்த பஸ்ஸில் ஏறணும் என்று நினைக்கும்போது பகீர் என்றது. அதே சில்னச்ஸ், அதே மாதிரி பாடல்கள்! ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்களே! மாலை ஐந்து ஆகிவிட்டது. பஸ் புறப்பட்டது. ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. கடைசி சீட் தான் கிடைத்தது. பின் வாசல் வழியாய் காற்று வருமே என்று ஆர்வமுடன் உட்கார்ந்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். நம் மக்கள் அத்தனை பெரும் அங்கு தான் நிற்பார்கள். அவங்களுக்கு காத்து வருனும்ல? அந்த வாசலே உங்கள் கண்ணுக்குத் தெரியாது! பல முதுகுகளின் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு கை வந்தது, சீட்டு என்றது. ஊர் பெயரைச் சொல்லி பணம் கொடுத்தேன். கை மறைந்து கொண்டது. சீட்டும் வரவில்லை, கடைசி வரை நடத்துனரும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் கை மட்டும் வேலை செய்தது. நான் அப்படி இப்படி துடித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர், பொறுமையா இருங்க. இவர் படிக் கண்டெக்டர் [?] அந்த கண்டேக்டர்கிட்ட டிக்கட் வாங்கித் தான் இவர் நமக்கு தருவாரு, சோ, மெல்ல தருவாரு. நான் வண்டி ஏறினதும் கொடுத்தேன். இன்னும் வரலை என்றார்! அவர் என் கண்ணை திறந்த மகானாகவே எனக்குப் பட்டார். என்ன பொறுமை, என்ன சாந்தம். என்ன ஒரு தேஜஸ்! அந்த மகான் சொன்னது போலவே நடந்து கொண்டார். நூறு ரூபாய் கொடுத்து விட்டு, என்னை போல் பாக்கி எப்போது வரும் என்று கவலையே இல்லாமல் அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து எனக்கு டிக்கட் மாதிரி ஒரு துண்டுச் சீட்டு வந்தது.அவர் இறங்கும் நேரத்தில் அவருடைய பாக்கி அவரை தேடி வந்தது! வேற நோட்டு கொடுங்க என்று அனாயாசமாய் நல்ல நோட்டை கேட்டு வாங்கிக் கொண்டார். என்ன ஒரு வீரம்! மேன்மக்கள் மேன்மக்களே!
மாலை ஆறு, ஆறேகால் அளவில் மாயவரம் கால்டாக்ஸ் என்ற ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் என்னை உதிர்த்து [நான் உதிர்ந்து போயிருந்தேன், அதான்!] விட்டுச் சென்றது. ரிசப்ஷன் முடிந்த கையோடு, அதாவது இன்னும் நான்கு மணி நேரத்தில் மறுபடியும் ஒரு ஆறு மணி நேர பயணம் காத்திருந்தது என்று நினைத்தாலே, மனது திகிலடைந்தது. நல்ல வேலையாக சென்னை திரும்பி வர பஸ்ஸை ஏற்கனவே புக் செய்திருந்தேன். இப்படி மாறி மாறி தான் வர வேண்டும் என்றிருந்தால், ஒரு வேளை நான் மாயவரத்திலேயே செட்டில் ஆகியிருப்பேன்!