சென்ற வார இறுதியில் நண்பர் ஒருவரின் கல்யாணத்திற்காக மதுரை சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி மதுரை செல்ல முடிவதில்லை. அதற்கு அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், என்ன தான் மரங்கள் வான் நோக்கி கிளை பரப்பி நின்றாலும், அதன் வேர்கள் மண்ணோடு தான் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது! அது போல, நாம் பணியின் நிமித்தம் எங்கெங்கோ அலைந்து திரிந்தாலும், மனம் சொந்த ஊரை கட்டிக் கொண்டு தான் கிடக்கிறது! நம் சொந்த ஊரில் காலடி வைத்ததும், அங்கு நம் வாழ்ந்த வாழ்வின் நினைவுகள் ஒரு குளிர்ந்த காற்றை போல் நம் முகத்தில் அறைகிறது!
 
நான் மதுரைக்கு இரயிலில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும், வண்டி விட்டு இறங்கியதும் வீட்டுக்கு நடக்கத் தான் விரும்புவேன். ஆட்டோவில் செல்வதில்லை. வீடு ரயில் நிலையம், பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருப்பதால் இருபது நிமிடத்திற்குள் சென்று சேர்ந்து விடலாம். அதிகாலை மதுரை என்றுமே அழகு தான். மூட்டைகளா மனிதர்களா என்று எந்த வித்தியாசமுமின்றி ரயில்வே நிலைய வாசலில் படுத்துக் கிடக்கும் ஜனக் கூட்டம், சுத்த பத்தமாய் குளித்து முடித்து விட்டு, சூடாய் பால் காய்ச்சி தேநீர் ஆத்தும் டீ கடை நாயர்,  வாசல் தெளித்து அழகழகாய் கோலம் போடும் நைட்டி பெண்கள், ஜரூராய் நடக்கும் பால் வியாபாரம், புட்டுக்கு லைன் கட்டி நிற்கும் சுள்ளான்கள், அதற்கு நேர் எதிராய் சூடாய் அப்பக் கடை, அப்போது தான் வந்திருக்கும் லாரியிலிருந்து சரக்கு இறக்கும் உழைப்பாளர் கூட்டம், "விநாயகனே வினை தீர்ப்பவனே" சீர்காழியின் சீற்றம் என்று வழி நெடுக மதுரை அழகழகாய் வித விதமாய் விழிக்கிறது!

இந்த பயணத்தில் நான் கண்டது, மதுரையில் அடிக்கடி எல்லாம் மின் வெட்டு இல்லை; எப்போதாவது வருகிறது! ஆமாம், அப்படித் தான் சொல்ல வேண்டும்! என் மாமா ஒருவர் மின்சார வாரியத்தில் தான் பனி புரிகிறார். அவர் நல்ல வேடிக்கையான மனிதர்! மின் வெட்டு அதிகப்படுத்தியதிலிருந்து அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவு, வழக்கம் போல் மின்சாரத்தை நிறுத்தியிருக்கிறார். உடனே ஒரு தொலைபேசி அழைப்பு! எடுத்தால், ஒரு குழந்தை அழும் சத்தம் தான் கேட்கிறது! இவரும்  பல முறை ஹலோ, ஹலோ என்று சொல்லி பார்த்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு பெண் பேசியிருக்கிறார் இப்படி: 

பெண்: என்ன கேக்குதா?
மாமா: கேக்குதும்மா
பெண்: என்ன கேட்டுச்சு?
மாமா: குழந்தை அழுகுற சத்தம் கேட்டுச்சு...
பெண்: நல்லா கேட்டீங்களா?
மாமா: [வேடிக்கையாய்] குழந்தைக்கு பசிக்குது போல, பால் குடும்மா...
பெண்: அதெல்லாம் குடுத்து தான் படுக்க வச்சோம், நீங்க கரண்ட ஆஃப் பண்ணதும் முழிச்சிகிட்டான்!
மாமா: ......

குழந்தைகள் பரீட்சைக்கு படிக்க முடியவில்லை ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க என்று கேட்பவருக்கு, நீங்க பேசாம ஒரு எமெர்ஜென்சி லைட்டோ, அல்லது இன்வேர்டரோ வாங்கிடுங்க சார். நாங்க என்ன வேணும்னா கட் பண்றோம், கவர்ன்மென்ட் சொல்லுது, நாங்க செய்றோம். இப்போ எல்லாம் எல்லா மிடில் கிளாஸ் மக்களும் இன்வர்டர் வாங்கிடறாங்க சார் என்று வயித்தெரிச்சலில் பேசும் மக்களிடம் இவர் அட்வைஸ் வேறு செய்கிறார். இன்னொரு பெண்மணி ஃபோன் போட்டு சார், உங்க ஆபிஸ்ல கரண்ட இருக்குல்ல, நான் படுக்கையை தூக்கிட்டு அங்கே வந்து தூங்குறேன் என்று சொன்னதற்கு, தாராளமா வாங்கம்மா, இங்கே குத்துமதிப்பா ஒரு ஆயிரம் கொசு இருக்கு, இப்போ அது என்னை மட்டும் கடிச்சுட்டு இருக்கும், நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு ஐநூறு, எனக்கு ஐநூறு என்று கலாய்த்திருக்கிறார்!  இது தான் மதுரை நக்கல் போலும்! 

ஒன்றும் சொல்வதற்கில்லை, கொடுமை என்னவென்றால் மக்கள் இதற்கும் பழகிவிட்டார்கள். தங்களின் வேலைகளை அந்த குறைந்த நேர இடைவேளைகளில் வைத்துக் கொள்ள பழகி விட்டார்கள்.  நமக்கு எதுவுமே பழகி விடுவது தான் பிரச்சனையே! கூடங்குளம் அணுமின் நிலையத்தினாலும் இந்த பற்றாக்குறை தீரப்போவதில்லை. அணுமின் நிலையம், விண்ட் மில், ஹைட்ரோ பவர் என்று பலவற்றை நம்புவதை விட, சூரியனை நம்பலாம்! ஒரு வீட்டுக்கு சோலார் பவர் வைக்க கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஆகிறது! அதற்கு அரசு ஏதாவது மானியம் அளித்து ஆதரிக்கலாம்! அம்மா, போன முறை மழை நீர் சேகரிப்பை நடைமுறை படுத்தியதை போல இந்த முறை இதை செய்யலாம்! பிறகு பிரச்சனையே இருக்காது...

சரி, மின்சாரப் பிரச்சனையை விட்டு மதுரைக்கு வருவோம்; மதுரையில் நான் பிறந்து வளர்ந்த அதே தெருவில் தான் இன்னும் எங்கள் வீடு இருக்கிறது. அன்று ஓடு இருந்த இடத்தில் இன்று மாடி இருக்கிறது. சொந்த வீடு என்பதால் இன்னும் நான் பிறந்து வளர்ந்த தெருவில் வசிக்கும் வசதி வாய்த்திருக்கிறது. சொந்த வீடாகவே இருந்தாலும், சிலர் நல்ல நிலைமையில் வந்ததும் இந்த சிறிய வீடு பத்தாது என்று நகரத்துக்கு வெளியே நல்ல பெரிய வீடாய் கட்டிக் கொள்கிறார்கள். அதில் வசதி இருக்கிறது என்றாலும், ஒரு முறை நம் இடத்தை விட்டு போய் விட்டால், பிறகு அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டோம்! நமக்கு அதற்கான நேரமே இருக்காது! அதனால் நாம் நாம் வாழ்ந்த இடத்தை, வாழ்ந்த வாழ்க்கையை, சுக துக்கத்தை மறந்து விடுகிறோம். நம் பிள்ளைகளுக்கு நம்முடைய பழைய வாழ்க்கை தெரிவதில்லை. இன்று நீங்கள் கார் வைத்திருந்தாலும், அன்று கஷ்டப்பட்டு ஒரு சைக்கிள் வாங்கி அந்த தெருவில் வலம் வந்ததை நம் பிள்ளைகளுக்கு எப்படிச் சொல்வது? இந்த முறை சென்ற போது, வீட்டு வாசலில் அமர்ந்து தெருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வாழ்ந்த அந்தத் தெரு, பல அனுபங்களை சுமந்து கொண்டு இன்றும் இளமையாய் நிற்கிறது. எங்கள் வீட்டின் எதிரே உள்ள குழாயடி, அதைச் சுற்றிய குட்டிச் சுவர், அந்த சுவற்றைச் சுற்றி சுற்றி வந்து நான் படித்த பரிட்சைகள், நான் உட்கார்ந்து மாங்கா விற்ற அந்த எதிர் வீட்டுத் திண்ணை, கருங்கல் வாசற்படிகள், பின்னிப் பிணைந்து கிடக்கும் வீடுகள், ஏதோ ஒன்றை கூவி விற்றுச் செல்லும் வியாபாரிகள், வேட்டியை ஏற்றி  விட்டு கொண்டு பைக்கில் செல்லும் ஆசாரிகள், காம்போசிஷன் நோட்டை நெஞ்சில் நிறுத்திச் செல்லும் இளம் பெண்கள், காலையில் வாசல் தெளித்த தண்ணீரின் மிச்சங்கள், சௌராஷ்டிரா பெண்களின் பார்வைகள், வம்பளப்புகள், விசாரிப்புகள் என்று பலவிதமான அனுபவங்கள்...அன்று குழந்தையாய் சுற்றித் திரிந்த வாண்டுகள் இன்று அரும்பு மீசையுடன் என்னை கடக்கையில் தங்கள் ஞாபக அடுக்குகளில் என்னைத் தேடுகிறார்கள்!

நான் ஐந்தாவது, ஆறாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது எந்த போஸ்ட்மேன் எனக்கு "ப்ரமோடட்" கார்ட் கொடுத்தாரோ, அவரை நான் அன்று பார்த்தேன். லேசாக தலை முடி நரைத்திருந்தது. வேறு எந்த மாற்றமுமில்லை. இந்த இமெயில் யுகத்தில் இன்றும் அவர் "ப்ரமோடட்" கார்ட் கொடுக்கிறாரா என்று தெரியவில்லை. அதே, பால் வண்டிக்காரர், அதே அயர்ன் வண்டிக்காரர் என்று காலம் எண்பதுகளிலேயே ஸ்தம்பித்து நிற்கிறது! இத்தனை வருடம் கழித்தும் அந்தத் தெருவில் பதினோரு மணி வெயில் அப்படியே தான் இருக்கிறது.

மதுரை இன்னும் மாறவில்லை!

எல்லா சிறந்த நகைச்சுவையும் ஒரு கட்டத்தில்
இதற்குத் தானா அப்படிச் சிரித்தோம்
என்று ஆகி விடுகிறது!
 ------------------------------------------------------
ரொம்ப நாட்களாய் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்று, உங்களை கேட்கிறேன்.
தனியாய் ஒரு பெண் மட்டும்
ஒரு ஹோட்டலில் அமர்ந்து
உணவருந்துவதை பார்த்திருக்கிறீர்களா?
[KFC, Mc Donalds போன்ற இடங்களைத் தவிர்த்து!] 
 -----------------------------------------------------
பெண்கள் தினத்துக்கு அலுவலகத்தில் ஸ்டால் போட்டு
சேலை, சுடிதார், தோடு, வளையல், செயின் என்று
கொள்ளையடித்தார்கள்.
 
நூற்றி முப்பது ரூபாய்க்கு நான் வாங்கிய தோடுகளும், வளையலும்
வனவாசத்தில் சீதா தேவியார் உபயோகப்படுத்தியது போலிருந்தது!
-------------------------------------------------------------
கணையாழியின் கடைசி பக்கங்கள் படிக்கும்போது
சுஜாதாவின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது!
அதே சமயம், அவர் மனைவியிடம் 
எவ்வளவு நேரம் பேசியிருப்பார் 
என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை!!