சமச்சீர் கல்வியைப் பற்றியும், அதை ஏன் ஒத்தி வைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஒரு சிறந்த அறிக்கை! புராணக் கதையில் பத்மாசுரனுக்கு வரமளித்து விட்டு சிவபெருமான் அவதியுறுவது போல் ஆகிவிட்டது இந்திய ஜனநாயகம்! நாமே ஆட்சியில் அமர்த்திவிட்டு அவதியுற வேண்டியிருக்கிறது! 

"என்று தணியும் இந்த அரசியல் வஞ்சம்!"

இதை எனக்கு அனுப்பிய தோழர் பாண்டியனுக்கு [http://puyarparavai.blogspot.com/] நன்றி!
  
சென்னை,                                                          
மே 24, 2011
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.
சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1.பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது! முடியாட்சியை  எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி! குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம்! ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம்! அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள்! ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது! ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது! இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா? இது எத்தனை பரிதாபகரமான விஷயம்! தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள்! அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே![ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ?] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்! அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள்! ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி! ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது! என்ன அநியாயம்! இதற்கு பெயர் ஜனநாயகம்! இதற்குப் பெயரா ஜனநாயகம்? இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்!

சென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது! கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது! கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி! சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது! சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்! இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது! தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது! 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா!

வானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. "பாசமலர்" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை! இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள்! சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு! படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது! தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும்! அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம்! என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது! எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா? இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது! படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி!

இப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது! அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார்! சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது! தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! "ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி! வாழ்க! [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்!]

இத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது? நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும்? நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே! எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி! அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே! என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க! குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்! கமான்....


இப்போது பார்த்தால் படம் முழுதும் இவரின் கிளிஷேக்கள் நிரம்பி வழிந்து கண்ணையும் கருத்தையும் உறுத்தினாலும் தமிழ் சினிமாவை சிகரத்திரு ஏற்றிச் சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு! இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்! இவர் பால்கே விருது வாங்கிய நாளில் இருந்து ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இன்று தான் அது கை கூடி இருக்கிறது! வாழ்த்துக்கள் சார்! எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த இயக்குனர். சென்னையில் ஏதாவது ஒரு டிராபிக் சிக்னலில் என்னை பார்த்து "உன்னைத் தாண்ட தேடிட்டு இருந்தேன், என் படத்துல நடிக்கிறியா" என்று கூப்பிட்டு சான்ஸ் கொடுப்பார்! எப்படியும் சென்னை போய் விட வேண்டும் என்று நான் நினைத்த காலங்கள் உண்டு! [இன்று வரை ஒரு தடவை கூட இவரை எந்த சிக்னலிலும் பார்க்கவில்லை!]

என்னை பொறுத்தவரை இவர் வருவதற்கு முன் கனமான கதைகள் இருந்ததே தவிர சுவாரஸ்யமான திரைக்கதைகள் இருந்ததில்லை. பாவ மன்னிப்பு, பணமா பாசமா ஹிட் படங்கள் என்றாலும் அதில் ஒரு காட்சி கூட அட! கதையை நகர்த்த இப்படிக் கூட காட்சியை வைக்கலாமா என்று தோன்றியதில்லை!  அது இவரின் படங்களில் தான் எனக்குத் தோன்றியது! பாலச்சந்தரின் எல்லா படங்களின் திரைக்கதையும் ஒரு சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்று சொல்லலாம். மிகச் சரியான காய் நகர்த்தலால் நகரும் கதைகள். தமிழ் படத்தில் பாடல்களிலும் கதை நகர்த்தியவர் இவர் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு காட்சியையும் வீணாக்க மாட்டார்! இவரின் படங்கள் சினிமாக்கள் அல்ல வெறும் நாடகங்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் அவருக்கு முன் வந்த நாடகத் தனமான சினிமாக்களை காட்டிலும் இவரின் படங்கள் சிறப்பானவை தான் என்று நினைக்கிறேன். 

கேபிள் டீவி வரத் தொடங்கிய காலங்களில் ஒரு நாள் இவரின் படம் ஒன்றை பாதியில் இருந்து பார்த்தேன். கவிஞர் வாலி நடித்திருந்தார். அப்போது வாலியையே எனக்கு அவ்வளவாய் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இது பாலச்சந்தர் படம் என்று மட்டும் என்னால் உணர முடிந்தது! அந்தப் படம் "பொய்க்கால் குதிரை" என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு வீடு இரு வாசல் வந்தது. அந்தப் படத்தில் இரண்டு வேறு வேறு கதைகள் என்று பத்திரிகையில் செய்தி படித்து பள்ளியில் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருக்கிறேன். எப்போது? ஏழாவது படிக்கும்போது! எத்தனை அற்புதமான கருக்கள்!

ஒரு சாதாரண சர்வர் நடிகர் ஆனால்...
ஒற்றுமையான ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை நுழைந்தால்...
இறந்து போய் விட்டாள் என்று நினைத்த காதலி, தனக்கே மேலதிகாரியாக வந்தால்...
ஒரு தாய்க்கு தன் மகன் வயதுடையவன் மேல் காதல்; ஒரு தந்தைக்கு தன் மகளின் வயதுடையவள் மேல் காதல்!
வறுமையின் காரணமாக ஒரு பிராமண பெண் விபச்சாரி ஆனால்
தான் காதலித்த பெண்ணே தனக்கு சித்தியாக வந்தால்
ஒரு ரவுடியும் ஒரு விபச்சாரியும் திருந்தி வாழ நினைத்தால்
தாய் மொழி வேறு, கலாச்சாரம் வேறு..இருவரும் காதலித்தால்
மனைவி சரியில்லாத கணவனும், கணவன் சரியில்லாத மனைவியும் சந்தித்துக் கொண்டால் [எத்தனை சிம்பிளான ஒன் லைன்!]
சங்கீத வித்வான் சறுக்கி விழுந்தால்

சொல்லிக் கொண்டே போகலாம்! இவரின் படங்களில் எனக்கு இன்றும் பிடித்த படங்கள்:

பாமா விஜயம்
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
மூன்று முடிச்சு
ஏக் துஜே கே லியே
தப்பு தாளங்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
தில்லு முள்ளு
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி
புது புது அர்த்தங்கள்

எனக்குப் பிடித்த சில காட்சிகள்..





















உழைப்பாளிகளுக்கு என் "மே" தின வாழ்த்துக்கள்!

"கோ" என்றால் அரசன் என்று தானே அர்த்தம். அரசாட்சியை பிடிக்க நடக்கும் போராட்டம் தான் கதைக் களம் என்பதால் தான் இந்தப் பெயரா? தெளிவா புரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்! படத்தைப் பார்க்காதவர்கள், கதை படிக்க விரும்பாதவர்கள் முதல் பத்தியை படிக்க வேண்டாம்!

ஜீவா பத்திரிகை புகைப்படக்காரர். பறந்து பறந்து புகைப்படம் எடுக்கிறார். [கே.வி. ஆனந்த் பத்திரிகையில் இருந்த போது இப்படி தான் படம் எடுத்திருப்பாரோ?] புகைப்படங்களை எடுத்துத் தள்ளி, சில பல அரசியல் அநியாயங்களை அம்பலப்படுத்தி, நேர்மையாய் களத்தில் இறங்கி போராடி அரசியலில் ஜெயிக்க விரும்பும் தன்னுடைய சில நண்பர்கள் ஆட்சியை பிடிக்க பெரும் உதவி செய்கிறார். அதில் ஜெயிக்கிறார். அங்கே தான் ஒரு ட்விஸ்ட்.[அங்கே கொண்டு போயா வச்சீங்க?] அவ்வளவு தான் கதை!

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுப் புதுக் கதைக் களங்களை கொண்டு வந்து தமிழ் சினிமாவிற்கு புது நீர் பாய்ச்சுகிறார் ஆனந்த். அதற்காகவே ஒரு சபாஷ். அதிலும் அயன் படத்தைப் பற்றி அவரே படத்தில் வரும் பியாவின் மூலம் கிண்டலடித்துக் கொள்வது நல்ல ஏளனம். ஜீவா இயல்பாய் நடிக்கிறார்; மனிதர் எந்த பாத்திரத்திலும் பொருந்தி விடுகிறார். அனால் சொங்கி மாதிரி இருக்கிறார். அவர் ஹேர் ஸ்டைல், அரும்பு மீசை, ஆட்டு தாடி, கிரிதா என்று அடம்பிடிக்கும் சில முடிகள்!! முதலில் எண்ணை கிண்ணை போட்டு மீசையை வளத்துக்குங்க பாஸ்! [இல்லை, பிரஷாந்த் கிட்ட ஐடியா கேளுங்க!!] நம் தலையெழுத்து தமிழ் சினிமாவில் தான் தமிழ்நாட்டில் ஹீரோ இருந்தாலும் ஏதோ ரஷ்யா நாட்டில் இருப்பதை போல் 4 சொக்காய் போடறான்! அதை பார்க்கும்போதே கருமம் எங்கே எங்கேயோ வேர்க்குது! அஜ்மல் ஜம்மென்று இருக்கிறார். ஆனாலும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை லுக் கொஞ்சம் மாற வேண்டும். கார்த்திகாவுக்கு நல்ல கண்கள். உயரத்தில் அடுத்த அனுஷ்கா! கச்சிதமாய் இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் இருந்த கருப்பு அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கிறது! ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. அழகா? பியா வழக்கமான தமிழ் சினிமாவின் ஒரு லூசு பெண் கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவில் லூசு பெண் கதாபாத்திரங்களை உடனடியாய் தடை செய்ய வேண்டும். அப்புறம் பாடல்கள்! பியா இறந்து விடுகிறாள். அவளுடன் சேர்ந்து வாழும் கார்த்திகாவிற்கு தனியாய் இருக்க பயமாய் இருக்கிறது. கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஜீவா கண்ணைத் துடைக்கிறார்; கட்! ஃபாரின் லொக்கேஷன்! [அசிலி பிசிலி பாடல் லொகேஷன் அற்புதம்; எந்த இடம் அது? சொர்க்கமா?] ஒரு பாட்டு!! தியேட்டரே உச்சு கொட்டுகிறது! ராமா...பிரகாஷ் ராஜ் தன் பங்குக்கு கையை ஆட்டி ஆட்டி, பல்லைக் கடித்தது விட்டுப் போகிறார்! [நடிப்பை கொஞ்சம் மாத்துங்க சார்!] ஜெகனுக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் நல்ல ரோல்கள் கொடுக்க வேண்டும். டாக் ஷோக்களில் பேசிப் பேசி அவரின் பாடி லாங்க்வேஜ் அனாயாசமாய் இருக்கிறது. மனிதர் நடிப்பது மாதிரியே தெரியவில்லை! பையா, அயன் என்று எல்லா படங்களிலும் அவரின் நடிப்பை ரசித்தேன்.

படம் பார்த்து வெளியே வரும்போது எனக்கும் என் மனைவிக்கும் சில கேள்விகள். என்ன தான் அதிரிபுதிரியான திரைக்கதையை இருந்தாலும் லாஜிக்கை மீறாமல் இருந்தால் தான் ரசிக்க முடிகிறது! இல்லையென்றால் அது மதியம் சாப்பிட்ட சின்ன மட்டன் பீஸ் பல்லில் மாட்டிக் கொள்வதை போல் இடையூறு செய்கிறது!! தம்மாத்துண்டு குழந்தையிடம் பியா திறந்து காட்டுவது; முதலமைச்சர் இறந்த இடத்திலிருந்து தப்பித்து வருபவனை காவல் துறை கண்டு கொள்ளாதாது; உள்ளே என்ன நடந்தது என்று விசாரிக்காதது ஒருவேளை அந்த வெடி விபத்துக்கு ஜீவாவே காரணமாய் இருந்திருந்தால் என்று கேள்வி யாருக்கும் வராதது என்று லாஜிக் ஏகத்திற்கு உதைக்கிறது! என்னை பொறுத்தவரை பத்திரிகைத் துறையை சமத்தாய் காட்டியது ஹிந்தியில் வந்த பேஜ் 3 படம் தான்! அதில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்! அது வாழ்க்கை; இது வெறும் கடைந்தெடுத்த மசாலா சினிமா!

அப்புறம் முக்கியமான ஒன்று திரைக்கதை வடிவமைப்பின் போது அதன் அடிப்படை விதியின் படி ஒரு கதாப்பத்திரத்தின் தன்மையை, அதன் குணாதசியத்தை முதலிலேயே வரையுறுத்த வேண்டும்! அவன் நல்லவனா, கெட்டவனா, புத்திசாலியா, சோம்பேறியா என்பதை தெளிவாய் சொல்லி விட வேண்டும். படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒருவனை கோழையாய் காட்டி விட்டு க்ளைமேக்ஸில் அவன் எதிரிகளை புரட்டி எடுத்ததற்கு காரணம் அவன் பத்தாவது வயதில் கராத்தே கற்றுக் கொண்டான் என்று ஒரு மொக்கை ஃபிளாஷ் பேக் காட்டினால் சப்பித் தனமாக இருக்கும்! அனால் அந்த விதியை இத்தகைய படங்களில் சரியாய், நாசூக்காய் பயன் படுத்தா விட்டால் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கக் கூடிய அபாயம் உண்டு. பிறகு சுவாரஸ்யம் கெட்டு விடும். இந்தப் படத்தில் அந்த விதியை பற்றி கதாசிரியர்கள் யாரும் கவலைப்படவேயில்லை! படம் பூராவும் அஜ்மலை நல்லவனாய் காட்டி விட்டு திடீரென்று அவரை கெட்டவன் ஆக்கிவிட்டார்கள். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதற்கு எந்தக் காரணமும் சரியாய் சொல்லப்படவில்லை! ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்கு நல்லது தான் செய்திருப்பாரா? அல்லது மற்ற அரசியல்வாதிகளை போல் தான் இருந்திருப்பாரா என்று புரியவில்லை!

அப்படி பார்க்கும் போது, இந்த மாதிரி புலனாய்வு படங்களின் திரைக்கதை என்பது என்ன? கதாசிரியரின் சுதந்திரம் எது வரை? அவர் கதை எழுதுகிறார் என்பதற்காக அவரே ஒருவரை நல்லவர் என்று காட்டுவார்; இந்தப் படத்தில் அஜ்மலை காட்டுவதை போல். ஆங்காங்கே இவர் தான் இந்தக் கதையை திசை திருப்புவார் என்பதை போல சில கதாப்பாத்திரங்களின் பெயரில் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் கோட்டா, பிரகாஷ் ராஜ் மற்றும் அஜ்மல் குழுமத்தில் தாடி வைத்த ஒருவரை காட்டுவது போல்! பிறகு யாரை நாம் அப்பாவி என்று நினைத்தோமோ அவன் பயங்கர கெட்டவன் என்று சொல்லி அதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டு விவரித்து படத்தை முடித்து விடுவார். நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை நம்ப வைத்து இப்படி கழுத்தருக்கிறார்களே, இதை நாம் "ஆ" என்று வாய் திறந்து என்ன ட்விஸ்ட் என்று மெய் மறந்து பார்க்கிறோமே என்று தோன்றியது! எல்லா புலனாய்வு படங்களின் அடிப்படை கரு இது தான் என்றாலும், இந்தப் படத்தில் தான் எனக்கு இந்தக் கேள்வி உதித்தது! அது ஏனோ?

முதல் பத்தி மட்டுமில்லை மற்ற எல்லா பத்திகளிலும் கதையை தூவியிருக்கிறேன். முன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். கதை தெரிந்து விட்டதா? சாரி !!