கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?
பாலா சாரிடம் சில கேள்விகள்
1. இருக்கும் எல்லா கழிசடைகளை விட நேர்த்தியாய் தான் படம் எடுக்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே வித்தியாசம். அவர்களின் கதாநாயகர்கள் ஊரோடு ஒட்டி வாழ்ந்து குத்து, பாட்டு பாடி, எதிரிகளை வீழ்த்துகிறான். உங்கள் கதாநாயகன் ஊரோடு ஒன்ற முடியாத காட்டு வாசியாய் ஓன்றும் பேசாமலும், அப்படியே பேசினாலும் ஒன்றும் புரியாமலும் எதிரிகளை வீழ்த்துகிறான். எல்லோரிடமும் அடிபடும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்போது படம் எடுப்பீர்கள்? (நீங்கள் அப்படி எடுத்தால் அந்தப் படமும் ஓடும் என்று நான் நம்புகிறேன்!)
2. நான் கடவுள் படத்தை உண்மையில் எத்தனை மணி நேரம் வருமாறு படம் பிடித்தீர்கள்? காசி காசி என்று மூன்று வருடமாய் கேட்டோமே, அங்கே அந்த 15 நிமிஷம் தானா எடுத்தீர்கள்?
3. அது எப்படி சார், 14 வருஷத்துக்குப் பிறகு அந்தக் கோலத்தில் இருப்பவனையும் தன் மகன் தான் என்று தந்தை சரியாய் அடையாளம் கண்டு கொள்கிறார்? லாஜிக்கே பார்க்காமல் படம் பார்க்கத் தானே பேரரசு போன்றவர்களை எல்லாம் வளத்து விட்டுறுக்கோம், உங்களுக்கு ஏன் இதெல்லாம்?
4. ஆர்யா காசியில் தொலைந்து போயிருந்தால், ஒரு வேளை உண்மையிலேயே அகோரி ஆனாலும் ஆகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய நீங்கள் பூஜா பாடும் பாடல்களை ஏன் அவர் குரலிலேயோ அல்லது ஒரே ஒரு நல்ல குரலிலோ பாட வைக்கவில்லை? இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லனுமா சார்?
5. பூஜாவைச் சுற்றி நாய்களும், நரிகளும், பேய்களும் (அதுங்க கூட பரவாயில்லை, சுற்றி மனுஷனுங்க!!) சுத்தி இருக்கும்போது அந்தப் பெண்ணை கற்பழிக்காமல் எப்படி சும்மா விட்டார்கள்? இதுக்கே அந்தப் பொண்ணு இந்த ஜென்மமே வேணாம் சாமின்னுதே, நம்ம நாட்ல இதை விட பொண்ணுங்க அவதிப்பட்றாங்களே அவங்களை எல்லாம் என்ன செய்றது?
6. அந்த தாண்டவனை எங்க சார் புடிச்சீங்க? அவனை பாத்தாலே....ஆமா, உண்மையில் ஆர்யா அந்த முதலாளிகளின் பிணங்களை என்ன சார் செஞ்சாரு? ஒருவேளை படத்தோட உக்கிரம் தாங்க முடியாம எல்லாரும் அகோரியா மாறி ரெண்டு பேரையும் கொன்னு தின்னுட்டீங்களா? மக்கா, நீங்க பாத்த தியேட்டர்லயாவது அதை காட்டுனாங்களா?
7. அப்புறம் சில தேவையில்லாத சீன்களும், அதன் தேவையில்லாத நீளமும் நீங்கள் ஏன் சரி செய்ய முயலவில்லை? (அந்த போலிஸ் ஸ்டேஷன் கூத்துக்கள், முருகன் குடித்து விட்டு உளருவது...)
பேட்டியில் படித்த போதெல்லாம் நிறைய மனநிலை சரியில்லாதவர்கள் நடிக்கிறார்கள், அவர்களை நடிக்க வைக்க நிறைய நேரம் தேவைப்பட்டது என்றெல்லாம் படித்தேன். ஆனால் நடித்தவர்கள் அந்த அளவுக்கு நிலை தவறியவர்கள் மாதிரி தெரியவில்லை, ஒருவேளை நீங்கள் அவ்வளவு தெளிவாக நடிக்க வைத்து விட்டீர்களா? படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, எதிர்பார்ப்பு ஒன்று இருந்தாலே ஏமாற்றம் என்பது சகஜம். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் படம் விட்றது சினிமா ஒன்னும் பட்டாசு, கரும்பு இல்லை என்று எனக்குப் புரிகிறது, ஆனாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்! தமிழ் சினிமா உங்களைப் போன்றவர்களைத் தான் நம்பியிருக்கிறது...அடியேனும் தான்!