போட்டு இடம் பிடிப்பது போல் ஆகிவிட்டது, வலையுலகில் பதிவிடுவது.
ஆரம்பத்திலிருந்தே பேருந்துகளில் துண்டு போட்டு இடம் பிடிக்கும்
சாமர்த்தியம் எனக்கு இருந்ததில்லை...ரஹ்மான் விருது வாங்கியதும் நானும்
ஒரேடியாய் பூரித்துப் போய் இன்று எல்லோரையும் முந்திக் கொண்டு பதிவிட்டு
விடுவது என்று நினைத்தேன். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
இஸ்ட்ரி![இஸ்ட்ரின்னா வரலாறு தானே?]
நேற்று [இது நேற்றே போட வேண்டிய பதிவு!] காலையில் அலுவலகம் வருவதற்கு
முன்பே ரஹ்மான் இரு விருதுகள் பெற்றதை தொலைக்காட்சியில் ஐபிஎன் மூலம்
அறிந்து கொண்டேன்! அலுவலகம் செல்லும் வழியில் இயல்பாய் தங்கள் வேலையை
செய்து கொண்டிருப்பவரை பார்க்கும் போதெல்லாம், அடேய் உங்களுக்கு ஒரு
விஷயம் தெரியுமா? என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது.
தொலைக்காட்சியில் அப்படி ஒரு செய்தியும், பல பிரபங்களின்
வாழ்த்துக்களும், இந்தியாவே துள்ளிக் குதித்துக் கொண்டாடும் காட்சிகளும்
என்னை புல்லரிக்கச் செய்தன! அந்தச் சேனலில் வரும் ராஜேஷையும் அவரின்
ஆங்கிலப் புலமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வழக்கமாய் சினிமா
விமர்சனத்திற்கும் நல்ல ஒரு உலக படத்தை [டிவிடி] பரிந்துரைக்கவும்
வருவார். அவருடைய வாயில் இருந்து ஆங்கிலம் அப்படி கொட்டும்! எந்த வித
தங்கு தடையுமில்லாமல் சரளமாய் உரையாடுவார். ஆனால் நேற்று செய்தி கேட்டு
மனிதர் சந்தோஷதில் திக்கு முக்காடி விட்டார் போலும். வாயிலிருந்து
வார்த்தை வர அத்தனை தடுமாறினார்!
எத்தனையோ பிரபலாமனவர்கள், ரஹ்மானிடம் வேலை பார்த்தவர்கள் வாழ்த்தினாலும்
எஸ் பி பி யின் வாழ்த்தினை போல் இல்லை. இதை விட பல பிரமாதமான இசையை
ரஹ்மான் நமக்கு அளித்திருக்கிறார் என்ற அவர் கூற்றை நூற்றுக்கு நூறு
அங்கீகரிக்கிறேன். ராஜேஷ் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டார்,
அடுத்த முறை ரஹ்மானை பார்க்கும் போது என்ன சொல்வீர்கள் என்று. எஸ் பி பி
அவரை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பேன் வேறென்ன சொல்வது என்றார். மனிதர்
இதயத்தின் அடியிலிருந்து அன்பு கொப்பளிக்க வாழ்த்தினார். எத்தகைய அன்பு!
ஒரு தந்தைக்குரிய பாசமும் பெருமிதமும் அதில் தெரிந்தது.
அடடா, ரஹ்மானை விட்டு விட்டு எஸ் பி பி புகழ் பாட ஆரம்பித்து விட்டேன்.
பேக் டு ரஹ்மான்! நான் இளையராஜாவின் தீவிர ரசிகன்! என்னை பொறுத்தவரை
எப்போதாவது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயை போன்றது ரஹ்மானின் பாட்டு.
எப்போதும் உண்ணும் சாப்பாட்டைப் போன்றது இளையராஜாவின் பாட்டு. [இந்த
நேரத்தில் இப்படி ஒரு உவமை தேவையா?] இருந்தாலும் ரஹ்மான் என்ற கலைஞனை
நான் மதிக்கவே இல்லை என்று அர்த்தம் ஆகாது. எத்தனை கழுதை வயசாகுது, நம்ம
என்ன சாதிச்சிருக்கோம் இந்த இளம் வயதில் இவங்களைப் பாரு என்று நான் என்
கல்லூரிக் காலங்களிலிருந்தே பார்த்து ஏங்கும் இருவர் ரஹ்மானும்
டென்டுல்கரும்! ரஹ்மான் மிகப் பெரிய கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை
[நல்ல வேளை நீ சொன்ன, எங்க யாருக்கும் இது தெரியாது!!]
ரஹ்மான் அவரின் இளம் பருவத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள் அனைத்தும்
மிகச் சரியானவை! சிறு வயதிலேயே இளையராஜாவிடம் சேர்ந்தது. நல்ல ஒரு
வாய்ப்பு வந்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான இசையை
வெளிக் கொண்ர்ந்தது. இளையராஜாவைப் போல் தீபாவளிக்கு 20 படம்,
வருஷத்துக்கு ஒரு நாலு ராமராஜன் படம் என்று சிக்காமல் ஹிந்தி படங்களில்
இசையமைத்து தன்னுடைய வட்டத்தை அகலப்படுத்தியது. அதோடும் நின்று விடாமல்
வெளி நாட்டினருடன் இசை ஆல்பம் தயாரித்தது, பாம்பே ட்ரீம்ஸ் இசையமைத்தது
என்று அவர் எப்போதும் அடுத்த அடுத்த எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டே
இருந்தார்! அது சாதாரணமான விஷயமே அல்ல! அதற்கு செய்யும் தொழிலில்
எல்லையில்லா ஈடுபாடும் அசாத்தியமான உழைப்பும் அன்றி அது சாத்தியமாகாது.
இந்தப் படம் மொத்தத்திற்கும் இசையமைக்க ரஹ்மான் எடுத்துக் கொண்டது வெறும்
15 நாட்கள் மட்டுமே. இது தான் அவர் இசையமைத்ததிலேயே குறைவான நாட்களை
எடுத்துக் கொண்ட படமாம். அடப் பாவிகளா, இதுக்கே இரண்டு அவார்ட் தூக்கிக்
கொடுத்துக் கொண்டீர்களே இன்னும் அவரின் பட்டையை கிளப்பும் பாடல்களை
[ரோஜா, புதிய முகம், தால், ரங்கீலா, இருவர், மின்சார கனவு, லகான், ரங் தே
பசந்தி] எல்லாம் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று இருந்தது எனக்கு.
ரஹ்மானை எல்லோரும் புகழும் இந்த நேரத்தில் அவருக்கு எந்த விதத்திலும்
குறைவில்லாத, இதே போல் பல வித சாதனைகள் படைத்திருக்க வேண்டிய இளையராஜா
(மேல் சொன்னது போல்) ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்
கொண்டாரோ என்ற ஆற்றாமையை தவிர்க்க முடியவில்லை!
சரி அதை விடுங்கள், நாடே இந்த நற்செய்தியால் அல்லோல கல்லோல பட்டுக்
கொண்டிருக்கிறது, இளையராஜா ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?
சொல்லவில்லையா அல்லது என் காதில் படவில்லையா? 2 வரி பாராட்டினா என்ன சார்
ஆயிடும்? நீங்க பாத்து வளந்த புள்ள தானே? இதான் சார், உங்க கிட்ட...
கமலஹாசன் சொன்னது போல் ஆஸ்கார் அமேரிக்காவின் உச்சம், அதோடு நில்லாமல்,
[அவர் எங்க நிக்க போறாரு] அதையும் தாண்டி இசையில் அகில உலக உச்சத்தை அடைய
என் இனிய வாழ்த்துக்கள். அதோடு ஆஸ்கார் வென்ற பூக்குட்டிக்கும் என்
வாழ்த்துக்கள்!