அலுவலகத்தில் க்ரிஸ்மம், க்ரிஸ்சைல்ட் விளையாடுகிறோம்! சீட்டு குலுக்கிப் போட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறதோ அவருக்கு நீங்கள் அம்மா. இதே போல் உங்கள் பெயரும் யாருக்கோ போயிருக்கும். அவர்கள் உங்களுக்கு அம்மா. ஆனால் தன் குழந்தையிடம் தான் தான் தாய் என்பதை கூறக் கூடாது! இயற்கைக்கு மாறுபட்டு இந்த ஆட்டத்தில், அம்மா சொல்வதை குழந்தை கேட்க வேண்டும்! இது தான் ஆட்டத்தின் நிபந்தனை...தினமும் அம்மா சொல்லும் செயல்களை குழந்தை தட்டாமல் செய்தால் ஆட்டத்தின் முடிவில் அம்மா குழந்தைக்கு ஒரு பரிசு கொடுப்பாள்! இது தான் ஆட்டம்!

சென்ற ஒரு வாரமாய் இந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறோம்! இதை பொதுவாக கிறிஸ்துமஸ் சமயங்களில் விளையாடி கிறுஸ்துமஸ் அன்று பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் நாங்கள் க்ரிஸ்மம்மை பொங்கல்மம் ஆக்கிவிட்டோம்! இதுவும் நன்றாய் தான் இருக்கிறது...என் க்ரிஸ் மம் என்னிடம் என் மனைவியை பற்றி ஒரு கவிதை சொல்லு என்று சொல்லிவிட்டது! கேட்கவா வேண்டும்....ஒரு சென்னை 28 மாதிரியான கவிதையை எடுத்து விட்டேன்! [லைஃவ் இஸ் ட்ராமா, ஐ லவ் யு பூமா] அதுவாய் பொங்கி விட்டது...கவிதை [இது, கவிதை?] கீழே...

குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குருவி விஜய்க்கு ஒரு த்ரிஷா...
குமரன் பிரதீப்புக்கு ஒரு நிஷா! [என் மனைவியின் பெயர்]

ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!
ஊர்ல இருக்குற பல பொண்ணுங்களை பாத்து
என் கண்ணு டாப்புன்னுச்சு!

உன்னைய பாத்ததும் என் மனசு
போதும் ஸ்டாப்புன்னுச்சு!

உன்னைய நெனச்சாலே கவிதை கொட்டுது
சொன்னா நம்ப மாட்டே கனவுல கயித முட்டுது!
ஸ்வபா...இப்போவே கண்ண கட்டுது!!

உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன்னைய பாத்தாலே எனக்கு ஒரே ஃபீலிங்கு
உன் ஒருத்திகிட்ட தான் என் ஹார்ட் ஃபாலிங்கு!

வானத்துல காயுது மூனு!
நான் தான் நீ தேடின மேனு!
உன் கண்ணு ரெண்டும் மீனு
ஜாக்ரதை, நான் வெஜ் நானு!!

நீயில்லின்னா நான் அவுட்டு
நீயில்லின்னா நான் அவுட்டு
லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், எனி டவுட்டு?

காந்தி போடச் சொன்னார் கதர்!
காந்தி போடச் சொன்னார் கதர்!
வி ஆர் மேட் ஃபார் ஈச் அதர்!!

கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!

எப்படி கவிதை? அதான் ஒன்னுக்கு கீழே ஒன்னா வரியும், பல ஆச்சர்ய குறியும் இருக்குல்ல? [எப்படி ரைமிங்கு?] அப்போ அது கவிதை தானே...இப்போது இதை படித்த அத்தனை பேரும் கோரஸாய் வாஹ், வாஹ் என்று சொல்ல வேண்டும்! எங்கே பார்க்கலாம்...
வேண்டாம். என்னை ஒன்றும் கேட்காதீர்கள். நானே மண்டை காய்ந்து போயிருக்கிறேன். நவீன கவிதைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்னு நினைக்கிறது குத்தமா....அது என்னவோ தெரியவில்லை, சிறு வயதிலிருந்தே கவிதையை ரசிக்கும் பக்குவம் இருந்தது எனக்கு. அப்போதெல்லாம் புதுக் கவிதைகள் அதிகமாய் இருந்தன. எளிதான வார்த்தைகள், வர்ணனைகள் என்று புரியவும், ரசிக்கவும் ஏதுவாய் இருந்தது. ஆனால் இப்போது வரும் நவீன கவிதைகளின் தலை கால் புரியவில்லை. சரி நல்ல கவிதைகளை எப்படி அடையாளம் காணலாம் என்பதை விளக்கும் கவிஞர்களின் கட்டுரைகளை படித்தால் அது மற்றொரு நவீன கவிதைகளாகவே இருக்கிறது..ஒரு வேளை அதை நவீன கட்டுரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்...தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு வேண்டுகோள்! கீழிருக்கும் கவிதைகளைப் படித்து எனக்கு அர்த்தம் சொல்லுங்கள்! தமிழில் இருக்கும் அதிகம் உபயோகப்படாத வார்த்தைகளை சீட்டில் எழுதி குலுக்கி போட்டு எல்லாவற்றையும் கலந்து அடித்து இப்படி சம்மந்தா சம்மந்தமில்லாமல் எழுதுவது தான் நவீன கவிதையா?

இனி கவிதைகள் [என்ற பெயரில் என்னவோ...]

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி
மனமெங்கும் வியாபித்திருக்க
இரு கண்களின் வழியே வழியும்
கானல் நீராய் அது அலைக்கழிக்கும்
ஒரு நீர்த் துளியின் விளிம்பில்
விருட்சம் ஒன்றின் வேர் வளரும்
அந்த ஒரு நொடிக்காக நான்
காத்திருக்க மாட்டேன்!

குறையொன்றுமில்லை
உன் குறுதியின் அழகியல் சார்ந்த
வழிபாடு எனக்கு வாய்த்தபின்
குறையொன்றுமில்லை

அந்திச் சூரியனின் நிறம் கண்டு
கதறி நிற்கும் ஒரு பைத்தியக்காரனின்
பிதற்றல்களில் தெரிக்கும் ஒரு
பிரபஞ்சத்தின் ஓலம்

வைகரையின் வசந்த வீச்சில் வாலிப நுரைகள்
வந்து வந்து உன் காலை நனைத்த
அந்த நாளில் தான் உன் தெற்றுப் பல்
தெரிய நீ சிரித்தாய்!

நீ உளரியதையும்
நான் உளரியதையும்
புசித்துச் செரித்து
நம் உடல்கள் பூரித்து
நின்றபின் நமக்கான காதலை
நாமிருவரும் தேடத் துவங்குவோம்!

ஏதோ ஒரு வகை மீறலின் நீட்சி என்றால் என்ன? கண்களில் கானல் நீரா? நீர்த் துளியின் விளிம்பில் எப்படி விருட்சம் ஒன்றின் வேர் வளரும்? ஆமா நீ யாரு? இதுக்கும் நீ காத்திருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்? அட போங்கப்பா....இதை விட அடுத்து, குறுதியில் என்னய்யா அழகியல் சார்ந்த...அதோடு வழிபாடு ஏன் சேர்ந்தது? இல்லை என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நானும் சரி கவிதையை புரிஞ்சுப்போம், நாமும் நாலு வரி எழுதி இலக்கியத்துக்கு தொண்டு செய்வோம்னா...ஸ்வபா....

ஆமாம், உண்மையில் இது நல்ல கவிதைகளா? இல்லை வெறும் பேத்தலா? எனக்குத் தான் புரியவில்லையா? நானும் படித்திருக்கிறேன். எல்லா கவிதைகளும் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதில்லை, அவரவர்க்கான கவிதைகளை ரசிக்கலாம், மற்றதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று! அப்படி என்றால் மேல் சொன்னவை யாருக்கான கவிதைகள்?
32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன்! சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்! அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது! முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன்! எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி! எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம்! மிகச் சுலபம்!! விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை? அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது!

இந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க!!] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது! அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும்.! அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார்! அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது! ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!

இன்னைக்கு நேரமே சரியில்லை! யார் முகத்துல முழிச்சேனோ தெரியலை. எல்லாமே தப்பு தப்பா நடக்குது. எல்லாம் தப்பு தப்பா நடக்குறது எனக்கு ரொம்ப நார்மல் தான், ஆனா இன்னைக்கு பாருங்க கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு! ஏதோ படத்துல வடிவேலு சொல்வானே, ஒரு மனுஷனுக்கு ஒரே நாள்ல எத்தனை சோதனைடா சாமின்னு, அந்த மாதிரி! வழக்கம் போல காலம்பொற எந்திரிச்சி சவரம் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன், கழுத்தை லேசா கீறிண்டேன். மார்கழி மாசம் பனி ஜாஸ்தியா இருக்கேன்னு சுடு தண்ணியில குளிக்கலாம்னு நான் ஹீட்டரை போட்றதுக்கும் கரண்ட் கட்டாகுறதுக்கும் சரியா இருந்தது! என்ன எழவோ ஆயிட்டு போறதுன்னு பச்சத் தண்ணிய மடக் மடக்குன்னு ஊத்திகிட்டு, உடம்பை துடைச்சிட்டு பனியனை போட்றேன், ஏற்கனவே சல்லடையா இருந்த பனியன்ல மூணாவதா ஒரு கை வந்திடுச்சி. சனியனை கழட்டி போட்டு முந்தாநாள் போட்ட சட்டையை எடுத்து [ரொம்ப மெல்லமா ஜாக்கிரதையா] போட்டுட்டேன், கொஞ்சம் சுருக்கமா தான் இருந்தது...அதான் கரண்ட் இல்லையே எப்படி அயன் பண்றது? மேலே கேளுங்கோ...

ஒரு வழியா மானத்தை மறைச்சிட்டு வயித்தை கவனிக்கலாம்னு பாத்தா தீஞ்சு போன உப்புமாவை வச்சுட்டு மாலதி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க என்று வழிந்தாள். அவளுக்கும் நேரம் சரியில்லையோ என்னமோ? நானும் பெருந்தன்மையா [உண்மையா சொல்லனும்னா ஒரு பயம் தான், அவ கத்த ஆரம்பிச்சுட்டா யாரு என்ன பண்ண முடியும்?]அதை உள்ளே தள்ளிட்டு ரோட்ல கெடக்குற எல்லா கழிசடைகளையும் கடந்து ஒரு வழியா பஸ் ஸ்டாப் வந்து நின்னா, கோனி மூட்டையில எதை எதையோ வச்சி அமுக்கினாப்ல பஸ் வந்தது. நல்லா மூச்சை இழுத்து விட்டுட்டு [உள்ளே போய் எப்போ விட முடியுமோ] உள்ளே நுழைய முயற்சித்து இப்போதோ அப்போதோ என்று இருந்த செருப்பு அறுந்து போய் நான் என்ன கத்தினாலும் ஒரு செருப்போடு என்னை உள்ளே திணித்து, திணித்தே விட்டார்கள். அதே வேதனையுடன் யார் யாரிடமோ பாஸ் பண்ணி ஒரு வேர்வை தோய்ந்த டிக்கட்டை எடுத்ததில் மிச்சம் அப்புறம் தர்றேன் என்ற கண்டெக்டரின் எரிச்சை கலந்த சைகை புகை மண்டிய என் கண்ணாடி வழியாய் மங்கலாய்த் தெரிந்தது. என் அருகில் இருந்த சீட்டில் வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருவர் இருந்தனர்! எனக்குத் தெரியும், அப்படி இருந்தாலே அது லாஸ்ட் ஸ்டாப் கிராக்கிகள் தான்! இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை.

ஏன் இன்று இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கும் போதே ஒரு வழியாய் இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது! மணியடித்ததும் ஸ்கூலிலிருந்து ஓடும் குழந்தைகளைப் போல விட்டால் போதும் என்று ஒரே குதி...குதிக்கிற வயசா இது? வெறும் காலில் சிறு கல் குத்தி வலி பின்னியெடுத்தது...எப்படியோ தப்பி பிழைத்து ஆபிஸில் என் இடத்தில் உட்கார்ந்து மூச்சு விடுவதற்குள் மேனேஜரிடமிருந்து அழைப்பு. நல்ல வேளை மேனேஜர்களுக்கெல்லாம் தனி ரூம் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் நம் மானமே போய் விடும்! உச்சி கால பூஜை முடிந்து சீட்டுக்கு வந்து அப்பாடா என்று உட்கார்ந்ததும் அவளை பார்த்தேன். கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸ், எல்லோரிடமும் சிரித்தபடி நீட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் தங்களால் இயன்றதை அள்ளிக் கொண்டிருந்தனர். அந்த பாக்ஸை பார்த்தவுடன் காலையில் சாப்பிட்ட தீய்ந்த உப்புமா ஞாபகம் வந்தது. உடனே வயிறு சிக்னல் கொடுக்க வாயில் ஜலம் ஊறத் தொடங்கியது. இரண்டு சீட் தள்ளியிருக்கும் சீதாராமனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள்! ஸ்வீட் வாங்கினோமா, சாப்பிட்டோமா, வேலையை பார்த்தோமான்னு இருக்கானா...ஒரு பொண்ணு புதுசா சேந்துரக்கூடாதே இவனுக்கு...எப்படியோ தப்பித்து என் சீட்டுக்கு வந்தவளின் கையில் உள்ள ஸ்வீட் பாக்ஸில் ஒரே ஒரு ஸ்வீட் மிச்சம் இருந்தது...!!!

அந்த ஸ்வீட்டை நான் எடுத்ததும் காலி டப்பாவையும் என்னையும் பார்த்து விட்டு, அழகாய் சிரித்த படி அவள் யு ஆர் வெரி லக்கி சார் என்றாள்!