தலை நிறைய மல்லிகை பூ. நெத்தியில் ரத்தச் சிவப்பில் வட்டமான பெரிய பொட்டு. மிகையாக மஞ்சள் பூசியும் பொலிவு குறையா முகம். பல வருடங்களாய் முகத்தில் இல்லாத சாந்தி! அவள் தலைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தொங்கிக் கொண்டிருக்கும் நூறு வாட்ஸ் பல்பும் இல்லையென்றால் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. அந்த ஊதுபத்தியின் நறுமணம் மணியின் நாசியின் வழியே மூளைக்குச் சென்று உன் மனைவி இறந்து விட்டாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய துக்கத்தை இரட்டிப்பாக்கியது. அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.
அந்தத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் வழியே சூரிய ஒளி ஆங்காங்கே கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியை தங்கள் ஆடைகளில் ஏந்தி இரண்டு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழவு வீட்டின் துக்கம் பழக்கப்பட்டு போன சில ஆடவர்கள் அன்றைய செய்தித் தாளில் முழ்கிப் போயிருந்தார்கள். துயரை ஆற்ற முடியாத சில தாய்மார்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பெருமை கொண்டும் அவளுடைய இத்தகைய நிலையை நினைத்தும் அவளுடைய தலையெழுத்தை நொந்து கொண்டார்கள்.
ஒரு பெரிய கருப்பு நிற கண்ணாடி அணிந்து அன்றைய நாளிதழில் மூழ்கி இருப்பவரிடம் சாந்தா வீடு இது தானே என்று அவன் கேட்டு விட்டு அவர் பதில் சொல்வதற்குள் மெல்ல வாசலில் தன் செருப்பை கழற்றி விட்டு படியேறி வீட்டுக்குள் புகுந்தான். அவன் குரலில் இருந்த நடுக்கத்தை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை, பழைய படி பிரதமர் என்ன தான் சொல்கிறார் என்பதில் அவர் கவனம் செலுத்தினார்.
வந்தவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சிறிய கட்டம் போட்ட சட்டையும் பழுப்பேறிப் போன வேட்டியையும் அணிந்திருந்தான். மெலிந்த தேகம். நல்ல நிறம். கரிய வானத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களைப் போல கரிய கேசத்தில் ஆங்காங்கே மின்னும் நரைத்த தலை முடி. அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் சந்தனம் பூசி அவளுடைய வயிற்றில் அவளுடைய கைகளை வைத்திருந்தார்கள். அவளுடைய கைகள் பெரிய ரோஜாப் பூ மாலைக்கு நடுவில் கொஞ்சம் தான் தெரிந்தது. பச்சை நிற பட்டுப் புடவை உடுத்தியிருந்தார்கள். கண்களில் பொங்கி வரும் கண்ணீர் அவனை சரியாக பார்க்க விடாமல் செய்தது. மெல்ல அவள் அருகில் சென்றான்.
அவளை பார்த்தவாறே அவளை கிடத்தியிருக்கும் கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். அங்கு இருந்தவர்கள் அழுவதை நிறுத்தி அவனையே திகைத்து பார்த்த வண்ணம் இருந்தனர். மணி தலை கவிழ்ந்து மயக்க நிலையில் அழுது கொண்டே இருந்தான். அவன் அவளையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து மெல்ல ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மணி மெல்ல தலை தூக்கி பார்த்தான். அவன் அவளுடைய கைகளில் கை வைத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மணியை பார்த்து ஏன் இப்படி என்பது போல் கை காட்டினான். அவளுடைய தாடையில் கை வைத்து ஏதோ முனங்கினான். அவனுடைய அழுகையில் அது அமுங்கிப் போயிற்று! மெல்ல அங்கு இருந்த ஒரு பெரியவர் எழுந்து அவனிடம் வர எத்தனித்தார். சட்டென்று கையை எடுத்து தடதடவென தலையில் அடித்து ஓங்கி அழுதான். மணி பிரமை பிடித்ததைப் போல பார்த்து கொண்டிருந்தான். ஏன் இப்படி பண்ணிட்டே என்று அவன் கேட்டது இப்போது தெளிவாகக் கேட்டது. தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதான். அந்தப் பெரியவர் பக்கத்தில் வந்து அவனை எழுப்பினார். அவன் அவர் கைகளில் சிக்காமல் முரண்டு பிடித்தான். சரி வாங்க, எழுந்திருங்க..இங்கே உக்காருங்க என்று அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அந்தப் பெரியவர் அழைத்து போனார். அவன் திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டும் வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டும் நடந்து சென்றான். அந்த ஓலம் அடங்க சிறிது நேரம் ஆனது.
சற்று நேரம் அழுகையை மறந்து எல்லோரும் அவன் போன வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த யாரும் அவனை இதுவரை பார்த்ததில்லை! பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது! அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்!
1973
எதற்கோ இலவசமாய் கிடைத்த அந்தச் சிறுகதை தொகுப்பில் இருந்த இந்தக் கதையை படித்து விட்டு புத்தகத்தை மூடும் போது ஈரம் படிந்த கண்களை துடைத்துக் கொண்டு தூங்கச் சென்றான் சீனிவாசன்!