சனிக்கிழமை ப ட் டி ய ல் பார்த்தேன். ஓகே ரகம். என்னடா ஒரே ரத்தம், அடி, தடி..ஏண்டா இந்த மாதிரி படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு வர்றே என்று அம்மா திட்டினார். பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன கதை. சீரான திரைக்கதை, திடீர் திருப்பம். தெரிந்த முடிவு! அவ்வளவு தான் பட்டியல். ஆர்யா இன்னும் கொஞ்சம் கம்மியாக தாடி வைத்திருக்கலாம், அசல் பரதேசி மாதிரியே இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கும் பரத்துக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. (அதற்குள் நான் சினிமாவில் நடிக்க வராமல் இருந்தால்!) தமிழ் சினிமாவில் கமர்ஷியல் என்ற பெயரில் கதைக்குத் தேவையில்லாமல் பாடல்கள் புகுத்துவதை நிறுத்த வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமை. என் வாழ்நாளில் மிக முக்கியமான ஒரு கடமையை முடித்தேன். ஜனநாயகக் கடமை. தேர்தலுக்காக ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். காலம் காலமாக சென்னையிலேயே இருப்பவர்களின் பலருடைய பெயர்களே விடுபட்டிருக்கும் நிலையில் என் பெயர் இருந்தது நான் முன் ஜென்மத்தில் செய்த புண்ணியம். என்ன முயன்றாலும், ஞாயிற்றுக் கிழமை காலை என்பது 12 மணிக்குத் தான் தொடங்குகிறது. ஒரு வழியாய் அதற்குள் ஷாம்பு எல்லாம் போட்டு குளித்து ரெடியாகி பக்கத்தில் இருந்த மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்றேன். 4 வரிசை நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு 100 பேர் தங்களுக்குப் பிடித்த வரிசையில் நிற்கிறார்கள். நான் நின்ற வரிசையில் என் முன் இருந்தவர், முதலில் புகைப்பட அடையாள அட்டை ஒன்றை காட்டி பதிவு செய்து கொள்ள வேண்டும், அதற்குப் பிறகு அந்த வரிசையில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்றார். 12 மணி வெயில், கருப்பு சட்டையில் ஜிகு ஜிகு என்று நிற்கிறேன். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நான் வரிசையில் நிற்கும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. வரிசையின் குறுக்கே புகுந்து போக விரும்புபவர்கள், நேராக என்னைத் தான் தள்ளச் சொல்லி அந்தப் பக்கம் செல்வார்கள். அது எப்படி நேராக என்னிடம் வருகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நேற்றும் வழக்கம் போல் அதே நடந்தது.
எனக்கு எரிச்சலைத் தரும் ஒரு விஷயம், ரயில்வே ஸ்டேஷன், பாங்க் இந்த இடத்திற்கு பேனா இல்லாமல் வருவது. வரிசையில் இருந்த பலர், அதிகாரியிடமே பேனாவைக் கேட்டு கையெழுத்து இட்டார்கள். அவரும் வழக்கம் போல் எல்லாரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தார். என் முன்னால் இருந்தவர் வரை அடையாள அட்டை காட்டி அதிகாரி வைத்திருந்த நோட்டில் கையெழுத்து இட்டுச் சென்றார். என் ராசியைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் போய் நின்று, பாத்தியா இது என் பேனா என்று வீராப்பாய் கையெழுத்து போட்டேன். சொல்லி வைத்தார் போல், அவர் பேனா எழுதாமல் போனது. பேனா கொடுத்துட்டு போங்க. என் பேனா எழுத மாட்டேங்குதுன்னார். என் நெத்தியில இளிச்சவாயன்னு ஏதாவது ஒட்டி இருக்கா சார்? என்று அவரிடம் கேட்கவா முடியும். தர்மசீலன் போல் கொடுத்து விட்டு நகர்ந்தேன். ஆனால் உண்மையில் சொல்கிறேன் 50 கிலோ பொன்னை வேண்டுமென்றாலும் பாதுகாப்பாய் வைத்திருக்கலாம் போலிருக்கிறது, இந்தப் பேனாக்களை வைத்துக் கொள்வது இருக்கிறதே...அப்படி பல பேரிடம் காப்பாற்றி கடைசியில் இவரிடமா என் பேனாவை பறி கொடுக்க வேண்டும் என்று அடுத்த வரிசையில் நின்று வெயிலின் குளுமையை உணர்ந்த படி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
LKG C Section ல் ஃபோட்டோ எடுக்கிறார்கள். வரிசை LKG C Sectionஐ நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. மணி 1; வரிசை அப்படியே நிற்கிறது, மணி 2; வரிசை அப்படியே நிற்கிறது. கேட்டால் சாப்பிடப் போய் விட்டார்களாம். கிட்டத்தட்ட 100 பேர் ஒதுங்க இடம் இல்லாமல் பசியுடன் வெயிலில் நிற்கிறோம். யாரோ ஒரு புண்ணியவதி ஒரு பெரிய பையில் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி வேண்டுபவர்க்கு கொடுத்தார். வாழ்த்த வயதில்லாமல் வணங்கினேன். வழக்கம் போல் எல்லோரும் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். சாப்பிட்டு விட்டு வரிசை கொஞ்சம் நகர்ந்த மாதிரி ஆசை காட்டியது. பிறகு அவ்வளவு தான். தாய்குலங்கள் மட்டும் ஃபோட்டோ எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். தந்தைக்குலங்கள் அப்படியே நிற்கிறோம். பக்கத்தில் நின்ற ஒரு தாய்குலம் ஏதோ எழுதுவதற்காக பெண்கள் பக்கம் பேனா கேட்டுவிட்டு கிடைக்காமல், ஆண்கள் பக்கம் திரும்பி ஒரு முறை எல்லோரையும் பார்த்து விட்டு, பேனா இருந்தா கொடுங்க என்றார் என்னிடம். நற நற;
அப்போது தான் என் பேனாவை கையாடியவர் அந்த வழியே வந்தார். சார் பேனா என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து, ஏன்யா? ஒரு 5 ரூபா இருக்குமா? எழுதலைன்னு தானே வாங்கியிருக்கேன்..சொல்லிட்டு போயிட்டே இருக்கார். வரிசையில் நின்றவர்கள் என்னை பார்த்த பார்வை இருக்கே. அவர் போய்விட்டாரா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான், 5 ரூபா தானே, வாங்கியிருக்க வேண்டியது தானே என்றேன். நானும் ஹீரோ மாதிரி ஏதாவது பண்ணிடம்னு பாக்குறேன்; ஆனா காமெடியா பூடுதுப்பா! ஒரு வழியாய் அந்த வகுப்புக்குள் நுழைந்து அங்கு தொங்க விடப்பட்டிருகும் கரடியும், இரு நண்பர்களும் கதையை பல தடவை படித்தேன். ஒரு அம்மா தன் குழந்தைக்கு அந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு காட்ல 2 அண்ணங்க நடந்து வந்தாங்களாம்; அப்போ பியர் வந்துடுத்தாம்; ஒரு அண்ணா மரத்துல ஏறிட்டாராம், இன்னொரு அண்ணாக்கு ஏறத் தெரியலையாம். கீழே செத்த மாதிரி படுத்துண்டானாம். கரடி கிட்ட வந்து மோந்து பாத்துட்டு போயிடுச்சாம். அந்த அண்ணா கீழே வந்து கரடி உன்கிட்ட என்னடா சொல்லிச்சுன்னு கேட்டானாம். இனிமே உன்னை மாதிரி selfish கூட சேராதேன்னு சொல்லிச்சுன்னானாம். என்று கதையை முடித்தார். நல்லவேளை, அந்த அண்ணாவை கரடி ஏன்மா சாப்பிடலை என்று குழந்தை கேட்கவில்லை.
நம் கதைக்கு வருவோம்; 100, 150 பேருக்கு ஃபோட்டோ புடிக்க அங்கு இருந்தது மூன்றே பேர். அவர்களும் அதிகாரிகள் கிடையாது. ஏதோ ஒரு க்ரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் செம்பட்டைத்தலையுடன் இருந்த 3 வாலிபர்களை கொண்டு வந்து இங்கு உட்கார வைத்து விட்டார்கள் போலிருக்கிறது. ஒருத்தர் ஃபோட்டொ புடிக்கிறார். ஒருத்தர் கம்ப்யுட்டரில் அதைப் பதிவு செய்கிறார். ஒருத்தர் வெட்டி ஒட்டி லாமினேட் செய்கிறார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் சாப்பிடாமல் கொள்ளாமல் நின்று நின்று எனக்கு, இல்லை அங்கு எல்லோருக்கும் பெண்டு கழன்டுட்டது. ஐய்யய்யோ மணி 3 ஆயிடுச்சே, இப்போ டீ குடிக்க போயிடுவாங்களே என்று சொன்னேன். வரிசையில் முன்னால் இருந்தவர் என்னை திரும்பிப் பார்த்து முறைத்த மாதிரி இருந்தது. பேசாமல் இருந்து விட்டேன். ஒரு வழியாய் என் முறை வந்தது. நான் சரியாய் உட்கார்வதற்குள் டிஜிட்டல் காமெராவினால் என்னை க்ளிக்கியிருந்தான். ஒரு சிட்டை கொடுத்தான், அதைக் காண்பித்து ஃபோட்டோ பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். அதற்க தனியாய் ஒரு கும்பல். நான் சாப்பிட்டு மறுபடியும் சென்றேன். 4 மணி. பேனா கொடுத்தவரின் பின்னால் நின்றேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. ஃபோட்டோ வந்தது. வாங்கிப் பார்த்தேன். தேமேயென்று இருந்தது. (இருக்கிறது தானே வரும்னு எங்களுக்குத் தெரியும் நீங்க ஒன்னும் சொல்லாதீங்க!) பார்த்துக் கொண்டே நடந்தேன். என்னிடம் பேனா வாங்கியவர் கூட்டத்தினரிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ஆமாய்யா? ஒருத்தரும் பேனா கொண்டு வந்துராதீங்க, எல்லாம் இங்கே வந்து என் கிட்ட கேளுங்க! நான் என் புது பேனாவை தடவிக் கொண்டே நடந்தேன்.