இத்தனை பதிப்பகங்கள் இருக்கின்றன என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. கடற்கரையில் நின்று கடலின் விஸ்தரீனத்தையும், பிரம்மாண்டத்தையும் பார்த்து, பிரமித்து சே! நான் எத்தனை சின்னவன் என்ற அதே எண்ணம் இங்கும் வந்தது! எத்தனை விதமான புத்தகங்கள்? எத்தனை விதமான சிந்தனைகள்? உலகில் நமக்குத் தெரியாமல் இன்னும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? பல நாட்கள் வீணடித்து விட்டோமோ என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும், இப்போதாவது தெளிந்தோமே என்ற சந்தோஷத்துடன் அந்த இடத்தில் சுற்றி வந்தேன்.
நாங்கள் பிற்பகலில் அங்கு சென்றதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒவ்வொரு கடையும் ஏறி இறங்கி, புத்தம்புது புத்தகங்களின் வாசம் நுகர்ந்து, புத்தகத்தை அலசித் தான் வாங்குவேன் என்ற சாக்கில் பாதி புத்தகத்தை புரட்டி அங்கேயே படிப்பது சுவாரஸ்யம் தான்..யாரும் எதுவும் சொல்ல முடியாது. இளம் பெண்கள் தான் அதிகமாகப் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். லேண்ட் மார்க்கில் பார்த்திருக்கிறேன். ஒரு கருப்பு ·ப்ரேம் போட்ட சின்ன கண்ணாடி, தோளில் அலைபாயும் கூந்தல், உட்கார்ந்தால் முதுகு தெரியும் டி-சர்ட், உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ், ஒரு ஜோடி ஸ்டூல் (உபயம் : சின்ன கலைவாணர்) கையில் ஒரு கூடை, அலமாரியை பார்த்துக் கொண்டே, படக்கென்று ஒரு பெரிய ஆங்கில புத்தகத்தை (புரட்டிக் கூட பார்க்காமல்) அநாயாசமாய் அந்தக் கூடையில் போட்டுக் கொண்டு அடுத்த அலமாரியில் தேடிக் கொண்டிருப்பார்கள். கத்திரிக்கா கா கிலோ, தக்காளி அரை கிலோ ரேஞ்சுக்கு புத்தகம் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவன் புத்தகம் வாங்குவதை தவிர மற்ற எல்லா விஷயத்தையும் செய்கிறான் என்று வாசகர்கள் என்னைப் பற்றி ஒரு தப்பான முடிவுக்கு வரக்கூடாது. இவர்களைப் போல நான் எப்போது இப்படி கூடையுடன் அலையப் போகிறேனோ என்ற ஏக்கம் தான். வேறு ஒன்றும் இல்லை (இல்லையா என்ன? சந்தேகம் தான்..)
ஆனால் அந்த லேண்ட் மார்க் பெண்களை இங்கு பார்க்க முடியவில்லை. ஒரு வேளை இந்த முறை நான் நிஜமாகவே புத்தகங்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேனோ என்னமோ? சரி நான் வாங்க நினைத்ததும் வாங்கியதும்!
1. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு - 2வது பகுதி
(2வது பகுதி மட்டும் தர மாட்டோம் சார் என்று கடைக்காரர் மறுத்து விட்டார்! நான் என்ன நாவலின் 2வது பகுதி மட்டுமா கேட்டேன், சிறுகதை தானே?)
2. நாலு மூலை (கட்டுரை தொகுப்பு) - ரா.கி. ரங்கராஜன்
3. காகங்கள் (சிறுகதை தொகுப்பு) - சு. ராமசாமி
4. ஒரு புளியமரத்தின் கதை (நாவல்) - சு. ராமசாமி
5. ஜே. ஜே. சில குறிப்புகள் (நாவல்) - சு. ராமசாமி
6. சிறகுகள் முறியும் (சிறுகதை தொகுப்பு) - அம்பை
சு. ராமசாமிக்கு என் சார்பில் அஞ்சலி செலுத்தியாகிவிட்டது. என்னடா இவ்வளவு பேசினான், வெறும் ஐந்து புத்தகங்கள் தான் வாங்கி இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். இன்று வரை, நாலு மூலை ஒரு 30 பக்கமும் (நூலகத்திலிருந்து வாங்கி இதை நான் ஏற்கனவே படித்து விட்டேன்) , ஒரு புளிய மரத்தின் கதை ஒரு 50 பக்கமும், காகங்களிலும், சிமு யிலும் தலா இரண்டு சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். இதை படித்து முடிப்பதற்குள் 30 வது புத்தக சந்தை வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை தான். (என் நண்பன் வாங்கியது பெரிய லிஸ்ட்! வழக்கம் போல மறந்துட்டேன்.ஹிஹி..)
புத்தகக கண்காட்சியின் நிறை என்னவென்றால், இப்படி ஒன்று நடப்பதே மிகப் பெரிய நிறை தான். இப்படி எல்லாம் சந்தைகளை வைத்து மக்களின் படிக்கும் திறனை ஊக்குவித்து தொல்லைக் காட்சியில் இருந்து விடுதலை கிடைத்தால் அபாரம் தான். குறைகள் : எதிர்பார்த்தது போல் இல்லை என்று நண்பர்கள் நொந்து கொண்டார்கள். இதனால் தான் நான் எதிர்பார்ப்பதே இல்லை.கார்ட் வசதிகள் அன்று மிகவும் குறைவாக இருந்தது. பணம் பத்தாமல் மறுபடியும் சென்று பணம் எடுத்ததில் பாதி வேளை கழிந்தது. அந்த டிக்கட்டிலேயே பதிப்பகங்களை.யும் ஸ்டால் நம்பர்களையும் ஒரு அட்டவனையாய் போட்டுக் கொடுத்திருந்தால், எல்லோருக்கும் அது மிக உபயோகமாய் இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என்று மறுபடியும் அதே பதிப்பகத்தை தேடுவதற்குள், வேறு பதிப்பகம் கண்ணில் பட்டு, அங்கு நுழைந்து 4 புத்தகம் வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு வேளை இதை நடத்துபவர் இதை எல்லாம் எதிர்பார்த்து தான் அப்படி செய்யாமல் விட்டாரோ என்னவோ?
அன்று நா. முத்துக்குமாரையும், சின்னக் கலைவாணரையும் தூரத்திலிருந்து பார்த்து, டேய் விவேக் என்னா கலர்டா? அட, பாருடா..அவரும் நடந்து தாண்டா போறாரு என்று இல்லாத அதிசயத்தைப் பார்த்து அசந்து போய் வீடு திரும்பினோம். ஹ¤ம்...புத்தகங்களைப் பார்க்கும் போது கற்றது கை அளவு கூட இல்லை என்று படுகிறது!!
எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! இப்போ நீங்க எல்லாரும் எனக்கு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்து சொல்லுவீங்களே? எனக்கு தெரியுமே..
Nice. :-)))
- Suresh Kannan