நான் தமிழன் அல்ல. நான் செளராஷ்ட்ரர் குலத்தில் பிறந்தவன். அப்பாடா இனி தமிழ் பிழைத்துக் கொள்ளும் என்று முனகுபவர்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இனி விஷயம் : சரி வலைப்பதிவில் தான் என்னன்னமோ பதிகிறோமே, நம் குலத்தைப் பற்றியும் பதித்து சரித்திரத்தில் இடம் பெறலாம் என்ற என் அவா இதோ இந்தப் பதிவில் வந்து நிற்கிறது.

செளராஷ்ட்ரர் குலம்: [இனிமேல் கொஞ்சம் சுருக்கி செள குலம்]

செள குலத்தார்களின் முதன்மைத் தொழில் நெசவு, பட்டு நூல் விற்பனை..மதுரையில் எல்லோரும் எங்களை "பட்டு நூற்காரர்" என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று அந்தத் தொழில் நலிந்து விட்டதால் அதைச் செய்பவர் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

செள குலம் இன்று குஜராத் இருக்கும் செளராஷ்ட்ரா என்ற பகுதியிலிருந்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது! சரி, தென்னகத்தில், தமிழ்நாட்டில் எப்படி வந்தார்கள்? அது எப்போது நடந்தது என்பதற்கு எந்த வித சான்றும் இல்லை. செள குலம் தமிழ்நாட்டில் வந்ததைப் பற்றி சில கதைகள் உலவுகிறது. அதாகப்பட்டது..

1. கஜினி முகமது வட இந்தியாவில் ஊடுருவிய போது அங்கிருந்த செள குலம் தங்களைக் காத்துக் கொள்ள தென்னாட்டில் தஞ்சம் புகுந்திருக்கலாம்.

2. சத்ரபதி சிவாஜி தென்னகத்தில் படையெடுத்த போது அவருடன் வந்த சிலர் தென்னகத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம்.

3. விஜயநகரப் பேரரசு, வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது, நாயக்கர்கள், தென்னகத்தின் ஒரு பகுதியை மதுரையை தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். அப்போது நாயக்கர்களுக்கு உடை நெய்து கொடுப்பதற்காக சில செள குடும்பங்கள் மதுரை வரவழைக்கப்பட்டனர். இன்றும் நீங்கள் மதுரை திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி செள குடும்பங்களைப் பார்க்கலாம். அப்படியே மஹால் 7வது தெருவுக்குள் வந்தால், அந்த சமயத்தில் நான் மதுரை போயிருந்தால் என்னையும் பார்க்கலாம்! அது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்தது. [அது அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா அதுவும் உங்களைப் பொருத்தது!] சரி கதைக்கு வருவோம். மஹால் 7வது தெருவில் நான் வசித்ததை வைத்துப் பார்க்கும் போது, இந்த மூன்று கதைகளில் இந்தக் கதை கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன முறைப்பு?

இன்று செள குலம் மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் போன்ற நகரங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். என்னைப் போல் பலர் கணினியியலிலும் கால் வைத்து, மன்னிக்கவும்..கை வைத்து உலகமெங்கும் பறந்து கொண்டிருக்கிறார்கள்! சென்னைத் தமிழ், கொங்குத் தமிழ், மதுரைத் தமிழ் போல செள குலத்திலும் உண்டு.

நான் அலுவலகத்தில் இருக்கும் போது யாராவது செல்·போனில் என்னவர்கள் பேச, நானும் என் தாய்மொழியில் பேச ஆரம்பித்து விட்டால் போதும், பாவம் பக்கத்தில் உள்ளவர்கள்! நான் ·போனை வைத்தவுடன் அவர்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், "நீங்க என்ன பேசுறீங்க? ஒன்னுமே புரியலையே" என்று கலைந்த தலையுடன் [பிச்சிகிட்டு தான்!] பாவமாய் கேட்பார்கள். அதற்குப் பிறகு ஒரு அரைமணி நேரம் நான் எங்கள் வரலாறு, புவியியல் என்று எல்லாம் சொல்ல வேண்டி இருக்கும். யாராவது ஒருவர் என்னை நீங்கள் தமிழா என்று கேட்டு விட்டால், தயங்காமல் ஆமாம் என்று சொல்லி விடுவேன். மறுத்து நான் இல்லை, நான் செள குலத்தை சார்ந்தவன், எங்கள் இனம்.. என்று மறுபடியும் அதே வரலாறு புவியியல் தான் சொல்ல வேண்டி இருக்கும்... வீட்டில் தாய்மொழியில் பேசுவதோடு சரி. செள பாஷை கொஞ்சம் கரடுமுரடானதாக இருக்க வேண்டும். [புரியாதவர்களுக்கு!] "தூத் = பால்", "பானி, பனி = தண்ணீர்", "காய் [GA] = பசு" போன்ற சில வார்த்தைகள் ஹிந்தியுடன் ஒத்துப் போவதுண்டு..நான் பேசும்போது இந்த வார்த்தைகள் வரவில்லை என்றால் உங்கள் தலை கலைவது நிச்சயம். கொங்குனி, மராட்டி கொஞ்சம் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். செளராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களும் உண்டு. அது வழக்கொழிந்து போய் விட்டன. எழுத்துக்களைப் பற்றியும், சில செளராஷ்ட்ர மஹான்களைப் பற்றியும் செள நண்பர் ஒருவர் வலைபதிந்து இருக்கிறார். அது இங்கே.

செள குலத்தவர் அதிகம் இருப்பது மதுரையில் தான் என்று நினைக்கிறேன். 4 பேரில் ஒருவர் செள இனத்தைச் சேர்ந்தவராக இருப்பார். வட இந்தியாவிலிருந்து வந்ததாலோ என்னவோ, இயற்கை எங்களுக்கு கொஞ்சம் வெள்ளைத் தோலை கொடுத்து விட்டது. தில்லியிலும், சண்டிகரிலும் நான் இருந்த போது என்னை தமிழன் என்று யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. பெங்களூரிலும், சென்னையிலும் நான் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில், அரைகுறை ஹிந்தியிலும் ஆட்டோகாரர்கள் ஆரம்பித்து விடுகிறார்கள்! [அப்படியே, சலிச்சுக்கிறேனாம்!] தமிழர்கள் ஒரு இனிஷியல் போட்டுக் கொள்வார்கள், எங்களுக்கு இரண்டு இனிஷியல்! வீட்டுப் பேர், அப்பா பேர்! வீட்டுப் பேர் [sur name] கொண்டா, தொகுலுவா, ராமியா, குப்பா, ஈஸ்வரீஸ், லவ்டான், மொல்லின், நாட்டாமை இப்படி பல உள்ளன. ஒரு குடும்பப் பெயர் கொண்டவர்கள் கூடப் பிறந்தவர்களாவர். என் முழுப் பெயர் ஈஸ்வரி சுப்பிரமணியன் பிரதீப் குமார். எனக்கு, உங்களுக்கு தெரிந்த சில செளராஷ்ட்ரக் குல பிரபலங்கள், டி. எம். செளந்தராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம். என். ராஜம், ஏ. எல். ராகவன்..[சினிமாவில் இருந்தால் தான் பிரபலமா? புத்தி போகாதே!]

செளராஷ்ட்ரா மக்கள்:

1. புளியோதரை செய்வதில் எங்களை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பிரபலம். எங்கு ஊர் சுற்றச் சென்றாலும், எத்தனை பேர் சென்றாலும், யார் போகிறார்களோ இல்லையோ, தூக்குச்சட்டி நிறைய புளியோதரை போகும்.

2. பஸ்ஸில் ஏறும் முன் யார் டிக்கட் எடுப்பது என்று முடிவு செய்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு பக்கம் ஏறிக் கொண்டு இங்கிருந்து நான் டிக்கட் எடுத்து விட்டேன் என்று அவர்கள் ஸ்டாப் வரும் வரை பேசிக் கொண்டே வருவார்கள்.

3. தமிழையும் செளராஷ்ட்ராவைப் போல பேசுவது எங்கள் குல பெண்மணிகளுக்கே உரியது. ஸ்டாப் வரும்வரை உட்கார்ந்திருந்து விட்டு, குறிப்பிட்ட நேரத்தில் இறங்காமல் பஸ் எடுத்தவுடன் "என்ன ஆளுய்யா நீ? பிள்ளே இறங்குதுல்லே" என்று செளராஷ்ட்ரா கலந்த தமிழில் காட்டுக் கூச்சல் போடுவார்கள். நகைச்சுவையாக இருக்கும்.

இதே போல், ஒரு மூதாட்டி பஸ்ஸில் ஏறி கண்டெக்டரிடம், ஏம்பா, இந்த பஸ்ஸ¤ பந்தடி 3 போகுமா என்று ஒரு சிறு தெருவின் பெயரைச் சொல்லிக் கேட்டாளாம். அதற்கு கண்டெக்டர், வீட்டு நம்பரையும் சொல்லும்மா, வீட்லையே இறக்கி விட்டுர்றோம் என்றாராம். நான் பள்ளியில் படிக்கும் போது 15 ஐ பைனஞ்சி என்று உச்சரிப்பேன். ஒரு தமிழ் நண்பன், டேய் அது பைனஞ்சி இல்லடா, பதினஞ்சு! அப்படி தான் சொல்லனும்னு சொல்லிக் கொடுத்தான். அதன் பிறகு நானும் திருத்திக் கொண்டேன். எத்தனை மொழிகள் பேசினாலும் தாய்மொழி கலக்காமல் பேச முடியாது என்பது இயற்கை போலும்.

4. "நமக்கு", "எங்களுக்கு" இந்த இரண்டும் எப்போதும் செள மக்களுக்கு குழப்பத்தை தரக்கூடியது என்று நினைக்கிறேன். எதை எங்கே பேச வேண்டும் என்று முழிப்போம். நான் எம். எஸ். சி படித்துக் கொண்டிருந்த போது வழக்கம் போல ஒரு வாயாடித் தமிழ் பெண்ணிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தேன். எங்களோடு படிக்கும் என் செள நண்பன் அங்கே வந்து, "டேய் எங்களுக்கு 10 தேதி செமஸ்டர் ஆரம்பிக்கப் போகுது" என்றான். அந்தப் பொண்ணு சும்மாவே எல்லாரையும் கிண்டல் செய்வாள்..போதுமே! பதிலுக்கு அவள், "அப்புறம் எங்களுக்கெல்லாம் செமஸ்டர் இல்லையா? உங்களுக்கு மட்டும் தானா?" என்று நக்கலடித்தாள். ஒரே வகுப்பில் இருப்பவர்களுடன் பேசும் போது நமக்கு என்று சொல்ல வேண்டும் என்று என் நண்பனுக்குத் தெரியவில்லை. இதெல்லாம் கடலைல சகஜம்ப்பா!

5. என்னைப் பொறுத்தவரை செள மக்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாத ஆசாமிகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள். செள இனத்தில், இவர் அந்த வீட்டு பையனை வெட்டிட்டு 10 வருஷம் ஜெயிலுக்கு போயிட்டு வந்துருக்காரு என்று நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. துஷ்டனைக் கண்டால் போதும், காத தூரத்துக்கு விலகி நிப்போம். நம்மை ஏன் இவ்வளவு மென்மையாக வளர்த்தார்கள் என்று கூட எனக்கு சில சமயங்களில் சந்தேகம் வருவதுண்டு.

இப்போதைக்கு இவ்வளவு தான்.

நன்றி:

mksarav.blogspot.com
palkar.org
sourashtra.com

என்னையும் இந்த விளையாட்டுக்கு கூப்பிட ஒரு நண்பர் வலைப்பூவில் இருப்பதைக் குறித்த களிப்புடனும், நான் இந்த புத்தக விளையாட்டுக்கு உகந்தவனா என்ற கலவரத்துடனும் இதை எழுதுகிறேன்.

நான் அரை மூச்சாய் [இன்னும் முழு மூச்சாய் ஆரம்பிக்கவில்லை] புத்தகம் படிக்க ஆரம்பித்ததே 2 வருடங்களுக்கு முன் தான். அதற்கு முன் குமுதம், விகடன், அதுவும் எப்போதாவது கையில் மாட்டும் போது. 5 வருடம் கல்லூரியில் கழித்தேன். அந்த மாலை நேரங்களை என்ன செய்தேன் என்று இன்று கவலைப் படுகிறேன். அப்போவே ஒழுங்காய் படித்திருந்தால் இன்னைக்கு தில்லா இந்தப் பதிவுல இறங்கியிருக்கலாம். சரி விளையாட்டை ஆரம்பிக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது அம்புலிமாமா, சிறுவர் மலர் விரும்பிப் படித்ததுண்டு. அம்புலிமாமாவில் கதைகளை விட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு அழகான சிறிய குடிசை, ஒற்றையடிப் பாதை, புல் தரைகள், நிறைய மரங்கள், அரசர் கதைகளில் வரும் மாட மாளிகைகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு நாம் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. [டாம் அண்ட் ஜெர்ரி, பழைய தமிழ் திரைப்படங்களில் வரும் கிணற்றடி செட்டிங் பார்க்கும் போது இதே உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு!]

எண்ணிக்கை!

பொன்னியின் செல்வன் 5 பாகத்தையும், புதுமைப்பித்தனின் 6 புத்தகங்களையும் தனித் தனியான புத்தகங்களாக வைத்துக் கொண்டால் என்னிடம் ஒரு 35 புத்தகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் ரொம்ப ஓவர் தான், என்ன பண்றது புத்தகங்கள் அதிகம் இல்லாத எழைய்யா! அம்மா! [ஐய்யயோ என்ன ராப்பிச்சை ரேஞ்சுக்கு போயிடுச்சே!]

பட்டாம்பூச்சி

எதையாவது படிக்க வேண்டும் என்று நான் வாங்கிய புத்தகம். ரா. கி. ரங்கராஜன் என்றால் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் இருந்ததால் இந்த புத்தகத்தை தில்லியில் வாங்கினேன். ஒரு அருமையான ப்ரெஞ்ச் நாவல் [என்று ஞாபகம்] மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார். அந்தக் கதாநாயகன் ஹென்றி ஷெராயர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைபடுகிறான். அவன் அங்கிருந்து தப்பிப்பதே கதை. என் நண்பர்கள் படித்து விட்டு அவனாகவே தன்னை அடிக்கடி உருவகப்படுத்திக் கொண்டு "இங்கிருந்து தப்பிக்க வேண்டும்" என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

விஞ்ஞானச் சிறுகதைகள்

மனிதர் 60, 70 களில் விஞ்ஞானக் கதைகளை பிரித்து மேய்ந்திருக்கிறார். அந்தத் தொகுதியில் முதல் கதை "ஒரு கதையில் இரண்டு கதைகள்" அதிலேயே நான் சாஷ்டாங்கமாய் விழுந்து விட்டேன். ஒரு கதையை "டிட்டோ என்றான்" என்று ஆரம்பிப்பார்! ராகவேனியத்திடம் ஒரு குரங்கு அகப்பட்டுக் கொண்டு அது படாத பாடு படுத்தும். அதை எப்போது படித்தாலும், வயிறு வலிக்க கண்களில் நீர் வழிய சிரிப்பேன். திமிலா, சென்னை கடலில் மூழ்கிய பிறகு ஒரு பயணம், ஜில்லு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜெயகாந்தன் சிறுகதைகள்

பெங்களூர் தமிழ் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் ஆன பிறகு, அங்கிருந்து இவருடைய சிறுகதை தொகுப்பை எடுத்து வந்தேன். அக்னிப் பிரவேசம், குருபீடம், அந்தக் கோழைகள், அக்ரஹாரத்துப் பூனை, ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, சுய தரிசனம், சாத்தான் வேதம் ஓதுகிறது, தவறுகள் குற்றங்களல்ல, நான் இருக்கிறேன், நிக்கி, சிலுவை..இப்படி எத்தனை எத்தனை அருமையான கதைகள், இதில் அவருடைய மொழி ஆளுமையும், அவருடைய பாத்திரப் படைப்பும், தன்னைச் சுற்றி நடப்பவைகளில் தன்னுடைய கூர்ந்த பார்வையும் [observation ஐ இந்த சொதப்பு சொதப்பி இருக்கிறேன்!] என்னை வியக்கச் செய்தது. இப்படியாக என்னிடம் அறைகுறையாய் இருந்த சுஜாதாவுடனும், ஜெயகாந்தனும் சேர்ந்து கொண்டார்.

புதுமைபித்தன் சிறுகதைகள்

சிறுகதை உலகில் பல புதுமைகளை புகுத்தியவர் என்று பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவருடைய 5, 6 புத்தகங்கள் கொண்ட சிறுகதை தொகுப்பை வாங்கினேன். முதல் கதை "பூசனிக்காய் அம்பி!", ஏதோ ஒரு அம்பியின் செயல்களை சொல்லி விட்டு, அவனைக் கொஞ்ச நாளா காணோம் என்று சொல்லி கதையை முடித்து விடுவார்! இது என்ன கதை, இதில் என்ன புதுமை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. சுஜாதாவையும், ஜெயகாந்தனையும் அரைகுறையாய் படித்தவனுக்கு புதுமைப் பித்தன் அவ்வளவு சீக்கிரம் பிடிபட மாட்டாரோ என்னமோ? படிக்கப் படிக்க அவரின் புதுமைகளை உணர ஆரம்பித்தேன், அநாயசமாக சிறுகதை இலக்கணங்களை உடைத்து எழுதி இருக்கிறார். கதையின் முடிவில், 1937, மணிக்கொடி என்று இருந்தது. 60, 70 களில் சுஜாதா இவ்வளவு யோசித்திருக்கிறாரே என்ற பிரமிப்பு குறைந்து இந்த மனிதர் 1937ல் இப்படி எல்லாம் எழுதி இருக்கிறாரே என்ற பிரமிப்பு ஏற்பட்டது. அவருடைய "நவீன கந்தபுராணம்" நான் மிகவும் ரசித்த கதை. இன்னொரு கதையில் [பெயர் ஞாபகமில்லை] முடிவு சொல்லாமல் இது நான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மிதந்து வந்த ஓலையில் இருந்தது. இவ்வளவு தான் கிடைத்தது என்று முடித்து விடுவார். "கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்", ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் படும் பாடு இப்படி எத்தனையோ புதுமைகள்..உண்மையிலேயே புதுமைப் பித்தன் தான்.

பெய்யெனப் பெய்யும் மழை

என்னுடைய வலைப்பதிவுக்கு பெயர் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒன்று எனக்கு மழை ரொம்பப் பிடிக்கும். இன்னொன்று வைரமுத்துவின் இந்தக் கவிதைத் தொகுப்பு. இதில் காதலைப் பற்றிய கவிதையில்:

உன் பின்னால் ஒளிவட்டம் தோன்றும்
தபால்காரன் தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே உன் கண்ணாடி உடையும்

ஊழி என்னும் கவிதையில்:

நிமிர்ந்ததெல்லாம் சாய்ந்ததில்
சாய்ந்த ஒன்று நிமிரந்தது
பைசா கோபுரம்!

ஏதோ ஒரு கவிதையில் இரு முத்தான வரிகள்

இயல்பே இன்பம்
ஏக்கம் நரகம்!

இவர் எதைப் பார்த்தாலும் கவிதையாய் தான் பார்ப்பாரோ என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. மிக அழகான தொகுப்பு! இன்னொரு முறை படிக்க வேண்டும், நிறைய மறந்து போய் விட்டேன்.

நான் படித்த மற்ற புத்தகங்கள்

கம்யுனிசம் நேற்று - இன்று - நாளை - ஜெவஹர்
துணையெழுத்து - எஸ். ராமகிருஷ்ணன்
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
விபரீதக் கோட்பாடு - சுஜாதா
இரண்டாம் காதல் கதை - சுஜாதா
திரைக்கதை எழுதுவது எப்படி - சுஜாதா
சத்திய சோதனை - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
அகிரா குரோசோவா
பொதுவுடைமை தான் என்ன? - ராகுல்ஜி
தண்ணீர் தேசம் - வைரமுத்து

படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்

பொன்னியில் செல்வன் - 2 பாகம் ஆச்சு![அடப்பாவி, இப்போ தான் பொன்னியின் செல்வனுக்கே வர்றியான்னு கேக்காதீங்க!]
வண்ணநிலவன் கதைகள்
உலக சினிமா - எஸ். ராமகிருஷ்ணன்
தி. ஜானகிராமன் கதைகள்
தாத்தா சொன்ன கதைகள் - கி. இராஜநாராயணன்
அசோகமித்ரன் கதைகள்
மால்குடி டேஸ் - ஆர். கே. நாராயணன் - ஆங்கில புத்தகங்களையும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று நான் வாங்கிய ஒரு புத்தகம், இரண்டு கதைகளோடு நிற்கிறது.

கற்றது அணுவளவு; கல்லாதது பிரபஞ்சமளவுன்னு சும்மாவா சொன்னாங்க? [ஏதோ மாறினாப்பில இருக்கே?]

ஒஹோ, இன்னும் விளையாட்டு முடியவில்லை, நானும் ஒரு 5 பேரை வழிமொழிய வேண்டுமே. அப்படி நான் யாரையும் சொல்லப் போவதில்லை. அதற்கு பதிலாக யார் இன்னும் இதைப் பற்றி எழுதவில்லையோ அத்தனை பேரும் எழுதலாம், எழுதனும்! ம்ம்.. ஈ கலப்பை எடுங்கோ, ஆரம்பிங்கோ!!

போன வாரம் ஹரன் பிரசன்னா தன்னுடைய பதிவில் ஒரு நவீன நாடகத்திற்கான அழைப்பிதழை பதித்திருந்தார். சென்ற வார சனிக்கிழமை அதைக் காணச் சென்றேன். எனக்கும் நவீன நாடகத்திற்கும் அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் உள்ள உறவே. . ஏன் நாடகத்திற்கும் எனக்குமே சம்மந்தம் இல்லை என்றும் கூறலாம். தொலைக்காட்சியில் முன்பு பார்த்த நாடகங்களோடு சரி! எஸ். வி. சேகர், கிரேஸி மோகன், ஒய். ஜி. மகேந்திரன் போன்றவர்களின் நாடகங்களை நான் நேரில் பார்த்தில்லை. சரி அறியாமை தான் இங்கு பேரின்பம் என்பதற்காக துணிந்து சென்றேன். கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு சிறுகதையை வெளி. ரங்கராஜன் நாடகமாக்கியிருந்தார். கூத்துப் பட்டரையை சேர்ந்த ஜெயராவ் நடித்திருந்தார். நாடகத்தின் பெயர் "முடியாத சமன்".

கதை:

மிகுதியான காம சிந்தனைகளின் ஆக்கிரமிப்பால் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை. அவர் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றியும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அவருடைய தாய் அவரை நினைத்து அழுவதையும், மருத்துவர்கள் அவரை இம்சிப்பதாயும், நண்பர்கள் அவரை பரிகாசம் செய்வதையும், ஏன் இவர்கள் எல்லோரும் இப்படி என்னை வதைக்கிறார்கள்? நான் படிக்கும் காலத்தில் இருந்ததைப் போல இவர்கள் இல்லையே? ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார். அடிக்கடி அம்மா "உனக்கு ஒன்னுமில்லப்பா, நீ நல்லா ஆயிடுவே" என்று சொல்லும்போது நல்லா ஆகுறதுன்னா என்ன அர்த்தம்? இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சு? என்று பரிதாபமாய் நம்மைப் பார்த்து கேட்கிறார்!

இதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய சிந்தனைகளை ஒளித்தும், மறைத்தும் எவ்வளவு போலியான வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. எந்த வித பயமும் இல்லாமல் சிந்திப்பவனை இந்தச் சமுதாயம் மனநோயாளி பட்டம் கட்டி விடுப்படுகிறது. இது தான் ஆசிரியர் உணர விரும்பிய கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை..ஏன் என்றால் எனக்குப் புரிந்தது இது தான்.

நவீன நாடகம், புதுக் கவிதை, கலைப் படங்கள் எல்லாம் ஒரே வரிசையில் இருப்பவை என்று நினைக்கிறேன். அவரவர்க்கு புரிந்த்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. இது மிகச் சிறந்த கவிதை என்று ஒருவர் சொல்லி நாம் படித்தால், அந்தக் கவிதை அவருக்குத் தந்த அனுபவம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அதனால் அந்தக் கவிதை நம்மைப் பொறுத்தவரை நல்ல கவிதை கிடையாது! [நம்மைப் பொறுத்தவரை!] அவ்வளவு தான்..

15 வருடமாய் கூத்துப் பட்டரையில் இருப்பவர் ஜெயராவ். தெலுங்கர். நல்ல உயரம், மாநிறம், பாரதி மீசை. நக்கலான சிரிப்பு, நினைத்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர், திடீர் திடீரென்று மாறும் முகபாவனைகள் கொண்டு ஒரு நிஜ மனநோயாளியை நம் கண் முன்னே நிறுத்திகிறார். குறை என்று சொன்னால், கதைப் படி அந்த மனநோயாளி ஒரு பிராமணர், இவருடைய உடலமைப்பும், தமிழும் கதாப்பாத்திரத்துடன் ஒட்டவில்லை. இவர் தமிழ் பேசியது ரஜினிகாந்த் தமிழ் போன்றதொரு பிரமை எனக்கும், என்னோடு வந்த நண்பருக்கும் ஏற்பட்டது! இவர் ஊனமுற்ற குழந்தைகளுக்காக "தியேட்டர்ஸ்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்தக் குழந்தைகளும் இது போன்ற பொழுது போக்க நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வழி வகை செய்கிறார். வாழ்க!

நவீன நாடகங்களையும், கலைப் படங்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை; அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பது என் கருத்து. ஹே ராமைப் பார்த்து விட்டு என் நண்பன் ஒருவன், கமல் என்னடா சொல்ல வர்றாரு? காந்தியும் முஸ்லீம்ன்றாரா? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்! எப்படி அப்படிப் பட்ட ஒரு கருத்து அவனுக்கு அந்தப் படத்தில் தோன்றியதோ எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஊரில் ஒரு ராஜா என்று ஆரம்பமாகும் கதைகள் என்றோ வழக்கொழிந்து விட்டன. ஒருவேளை இன்று யாராவது அப்படி எழுதினால், அட இது என்ன புதுசா இருக்கே ஆரம்பமே என்று சிலர் படிக்கலாம்.

நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நாடகங்களில், படங்களில், கதைகளில் ஒரு சிறு நகைச்சுவை வந்தாலும், கொஞ்சம் அளவுக்கதிகமாகவே சிரிக்கிறார்கள். இதே ஒரு சாதாரண நாடகங்களில், படங்களில், கதைகளில் வந்தால் அவர்கள் இப்படிச் சிரிப்பார்களா என்று சந்தேகம் தான். இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று ஒரு வரியில் குறை சொல்லிச் சென்று விடுவார்கள். இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும். இல்லையென்றால், பக்கத்தில் உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும் சதாசிவம் மாமா, என்னங்கானும்? பையன் என்னமா ஹாஸ்யமா நடிக்கிறான், பேசுறான், நீர் சிரிக்கவே மாட்றீரே? அவன் என்ன பேசினான்னு புரியலையோ என்று இதற்கும் ஒரு பெரிய ஹாஸ்யத்தை சொன்னது போல் சொல்லிச் சிரிப்பார் என்ற பயம் என்று நினைக்கிறேன்.

நாடகத்திற்குப் பிறகு கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு நூலின் ஆங்கிலப் மொழிபெயர்ப்பு [தலைப்பு social work, asocial work, anti social work என்று நினைக்கிறேன்] வெளியிடப்பட்டது.

வித்தியாசமான அனுபவம். நன்றி பிரசன்னா!

பின்குறிப்பு:யாரோ ஒரு வலைப்பதிவாளர் மழையில் நனைந்ததைப் பற்றிய பதிவு பிரசன்னாவை ரொம்பவே பாத்தித்திருக்கிறது. நீங்களாவது உருப்படியாய் இந்த நாடகம் பத்தி உங்க பதிவுல எழுதுங்க என்றார். பிரசன்னா நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன்.