காதலர் தினத்தை முன்னிட்டு...இசையமைப்பாளர்கள் யாராவது இருந்தால் மெட்டு போட்டு பார்க்கலாம்.

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளையே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளின் காதலுக்கு உற்றவன்

கலைகளின் பிறப்பிடம் அவள் தான்
மானுடத்தின் சிறப்பிடம் அவள் தான்
நிகழ்கின்ற சரித்திரம் அவள் தான்
நிலைக்கின்ற இதிகாசம் அவள் தான்
எழுப்பாத கனவும் அவள் தான்
களிப்பான  நினைவும் அவள் தான்

(அவளுக்கென்ன அழகும்)

அண்டத்தின் ஒரு துளி அவள் தான்
அகிம்சையின் முதல் பாலி நான் தான்
படைக்கப்படாத புது உயிர் அவள் தான்
பயிலப்படாத முதல் மொழி அவள் தான்

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளிடம் காதலை கற்றவன்

ஊர்மிளா உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் ஹிந்தியை வெறுத்தது தெரிந்தும் அவரின் பல படங்கள் தமிழுக்கு டப் செய்யப் பட்டன. அப்படி "Daud" என்ற படமும் வந்தது. படத்தில் உடலை ஒட்டிய ஜீன்ஸ் அணிந்து அவர் குளித்த போது நனைந்தது அவர் மட்டுமல்ல. [யூட்யூபில் இருக்கும் "Daud" படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் காரணமாய் இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும்!] "Daud" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், "தாவுது" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது "தாவுது" இல்லடா, "தவுட்", அப்படி என்றால் "ஓட்டம்" என்று அர்த்தம் என்றேன்.இப்போது "தங்கல்" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் "தங்கி"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை தெளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை  "தங்கத்தின்" த கொண்டு உச்சரிக்காமல் "தவத்தின்" த கொண்டு உச்சரிக்க வேண்டும். "தங்கல்" [தவத்தின் "த"!!!] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா!!] தமிழில் படத்தை டப் செய்யும்போது அதற்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்.



அமீர் கான் எனக்கு ஆதர்சம். எனக்குத் தெரிந்து கடைசியில் அவரின் தோல்வி படம் "மங்கள் பாண்டே" (2005) என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கத் தான் செய்தது. மனிதர் நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கில்லியாக இருக்கிறார்.

தங்கல் ஒரு உண்மைக் கதை. ஹரியானாவில் வசிக்கும் மகாவீர் சிங் போகத் என்பவர் தன் இரு மகள்களை எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக்கி இந்தியாவுக்கு தங்கத்தை தருவித்தார் என்பது தான் கதை. அவரின் சொந்த வாழ்வில் இருந்த கஷ்டங்களோடு, சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சேர்த்து மிக அழகான திரை வடிவமாய் அளித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பலம் நடிகர்கள் தேர்வு. அமீர் கான், சாக்ஷி தன்வர், முதல் பாதியில் வரும் சிறுமிகள், வளர்ந்த பிறகு வரும் பெண்கள், அமீரின் மருமகனாக வருபவர்கள், கோச்சாக வருபவர். அத்தனை பேரும் அசத்தல் தேர்வு.

ஆமீர் மிகவும் தன்மையான தந்தையாய் மிக அற்புதமாய் செய்துள்ளார். வயதுக்கேற்ப தன உடல் எடையை கூட்டியது சரியான முடிவு. ஏன் என்றால் அதுவே அவரின் உடலைசைவை, உடல்மொழியை முற்றிலும் மாற்றி விடுகிறது. அதனால் அவர் செய்வதெல்லாம் இன்னும் யதார்த்தமாய், உண்மையாய் திரையில் வெளிப்படுகிறது. சிறிதே சிறிது நேரம் வரும் இள வயது அமீருக்காக உடலை இந்த அளவுக்கு மாற்ற வேண்டுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது.

சாக்ஷி தன்வரை இது வரை இந்தி சீரியலில் பார்த்திருப்போம். அவர் மிகச் சரியாய் அந்த கதாப்பாத்திரத்துக்கு பொருந்தி உள்ளார்.

இரு குழந்தைகளையும், இரு பெண்களையும் கிட்டத்தட்ட உண்மையான மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றியது போல் இருக்கிறது அவர்களின் நடிப்பு. பெண்ட் எடுத்துள்ளனர். படத்தில் குழந்தைகளிடம் இனி குஸ்தி போட வேண்டும் என்று அமீர் சொன்னவுடன், ஒரு பாடல் வருகிறது. அதன் முதல் வரி...

அப்பா, எங்கள் ஆரோக்கியத்துக்கு நீ ஊறு விளைவிப்பவன்.

இந்த வரி அமீரின் கதாப்பாத்திரத்துக்கு மட்டுமல்ல அமீர் கானுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :) இசையும், பாடல் வரிகளும் படத்தில் பிரமாதம்.

படம் முழுவதும் அந்த மருமகனின் வாய்ஸ் ஓவரில் வருவதாக அமைத்தது நல்ல விஷயம். படத்தில் வரும் வசனங்கள் நச். காமெடியாய் இருக்கட்டும், உணர்ச்சிகரமானதாய் இருக்கட்டும்.

முதல் முறையாய் கலந்து கொள்ளும் ஒரு குஸ்தியில் அந்தக் குழந்தை நோஞ்சான் சிறுவனை தேர்ந்தெடுக்காமல் பலமானவனை தேர்ந்தெடுக்கிறாள். அப்போது போட்டியின் நடுவர், தந்தையிடம், "உன் மகள் தவறு செய்து விட்டால், கை கால் உடைந்து தான் ஊர் திரும்பப் போகிறாள்" என்று சொல்கிறார். அதற்கு தந்தை, "சண்டையில் வெல்வதற்கு முன், பயத்தை வெல்ல வேண்டும். என் மகள் அதில் வெற்றி பெற்று விட்டாள்" என்கிறார்.

தன் மகள்களை, மல்யுத்த வீராங்கனைகள் ஆக்குவது என்று முடிவெடுத்த உடன், அவர் சொல்கிறார். "மகன் வாங்கி வந்தால் என்ன, மகள் வாங்கி வந்தால் என்ன, தங்கம் தங்கம் தானே, இதை எப்படி நான் இத்தனை காலம் உணராமல் இருந்தேன்!"

எங்களை எப்படியாவது இந்த ஹிம்சாயிலிருந்து காப்பாற்றும்படி சிறுமிகள் தாயிடம் மன்றாடுகிறார்கள். அதற்கு அவள், "ஒரு வருட காலம், உங்களுக்கு அம்மா இருப்பதை மறந்து விடுங்கள்" என்கிறாள். சிறுமிகள் சட்டென்று எழுந்து செல்கிறார்கள். அதற்கு தாய், "ஹே, அதற்குள் மறந்து விட்டீர்களே" என்கிறாள் :)

கோச்சாக வருபவர் மராத்தி நடிகராம். நல்ல தேர்வு. படத்தில் அவர் வில்லனாய் சித்திகரிக்கப் பட்டிருந்தாலும் அந்த கோச்சின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் புரியும். அவரவர்க்கு அவரவர் நியாயம்.

இப்படி படம் நெடுக சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே படத்தை சிறப்பாக்குகிறது.

இந்தப் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது, நம் நாட்டில் ஆண்கள் உலக லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கி வருவதே கஷ்டம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி ஒரு வீராங்கனை ஆக்க என்ன என்ன பாடு பட வேண்டும். எத்தனை ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்க வேண்டும். அதிலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து  இந்த அளவுக்கு வருபவர்கள் எப்படி பட்ட போராட்டங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை, இந்தியாவில் பெண்கள் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பதக்கம் வென்றால் அதை இரண்டாக கொடுக்க வேண்டும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி...அத்தனை போராட்டங்களை சகித்துக் கொண்டு அவர்கள் அந்த மேடைக்கு வருகிறார்கள்.

மேல் உள்ள பத்தி தான் இந்தப் படம் எனக்குள் விளைவித்த எண்ணங்கள். ஒரு நல்ல படைப்பு தீர்வுகளை கொடுக்கத்  தேவையில்லை. கேள்விகளை எழுப்பினால் போதும். அதை தங்கல் சிறப்பாகவே செய்கிறது!!

எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...