கண்ணதாசன் காலம் தொட்டு நா. முத்துக்குமார் வரை கால வரையறை இல்லாமல் சில பாடல்களை தரவிறக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் கண்ணதாசன் பேஸ்தடிக்கிறார். கண்ணதாசன், இளையாராஜா போன்றோர்களின் மூளைகளை எல்லாம் ஆராய வேண்டும். எங்கிருந்து இப்படி எல்லாம் இவர்களுக்கு கொட்டுகிறது என்று புரியவில்லை.
உதாரணத்திற்கு
எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அனுபவிக்க நினைக்கும் ஒரு காமாந்தக்காரன். மது, மாது, சூது என்று அவனுக்கு ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை. அவன் பாடுவது போல் ஒரு பாடல்.
இப்படி ஒரு சூழ்நிலையை கண்ணதாசனிடம் சொன்னதும் அவர் கொடுத்த பல்லவி...
"ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி"
முடிந்தது. இரண்டு வரியில் அந்தக் கதாப்பாத்திரத்தை விவரித்து விட்டார். ஒரு இயக்குனருக்கு இவரிடம் சூழ்நிலையை சொல்லி பாடல் வாங்குவது எத்தனை இலகுவான, இன்பமான நிகழ்வாய் இருந்திருக்கும்! இந்த இரண்டு வரிக்கு இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு தடவையில் முடியக் கூடியதா? வரம் வரம்!!
கமல் அடிக்கடி சொல்வார். "அவர்கூடவே வளரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் பாடல் எழுதும்போது அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. கவிதை/பாட்டு எழுதுவது எல்லாம் மிக எளிய விஷயம் மாதிரி என்னை ஏமாற்றி விட்டார்." என்று! அவர் சொல்வது சரி தான், கண்ணதாசன் பாடலை சொல்லும்போது [அவர் பாடல்களை எழுதுவதில்லை; அவர் சொல்லச் சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொள்வது வழக்கம்! அந்த உதவியாளர்களில் பிரதானமானவர் பஞ்சு அருணாச்சலம்] அருகில் இருப்பவருக்கு அப்படித் தான் தோன்றும். சரளமாய் பேசுவதை போலத் தான் அவர் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார்.
ஆனால் அப்படி சொன்ன பாடல் ஒவ்வொன்றும், மெட்டுக்கு சரியாகவும், அந்தப் படத்தின் கதையை/சூழலை சரியாய் விவரித்தும், காலம் கடந்த ஒரு அழகும்/கருத்தும் அதில் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் இருந்தது, இருக்கிறது.
உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் என்ற படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடல்:
மனைவி இறந்தும் கொள்ளி போட வராத மகனை நினைத்து, மருமகளிடம் பாடும் பாடல், எத்தனை எளிதான வார்த்தைகளால் அந்த சூழ்நிலையை பாடலில் சொல்கிறார், பாருங்கள்.
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல
இதன் அடுத்த சரணத்தையும் கேட்டுப் பாருங்கள், !!க்ளாஸ்!!
---
இருவர் உள்ளம் படத்தில் வரும் இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். காதல், வாழ்வின் ஒரு யதார்த்தமான நிகழ்வு என்பதை எத்தனை அருமையாக விளக்குகிறார்.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று
--
பழனி படத்தில் வரும் இந்தப் பாடல், வஞ்சிக்கப்பட்ட ஒருவன் தத்துவார்த்தமாய் பாடும் இந்தப் பாடலில் வாழ்வின் பல செய்திகள் அடங்கி இருக்கிறது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
பெட்டை கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா
(3)அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
(6)கை வரண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா
மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீது தான் பக்தி என்ற பின்
பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா
--
எங்க மாமா படத்தில் வரும் இந்த தாலாட்டுப் பாடல். அனாதையான நாயகனின் ஆதரவில் வளரும் அனாதைக் குழந்தைகள்.
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?
இந்தப் பாட்டில் அனைத்து வரிகளும் அற்புதமானவை. அதில் குறிப்பாக,
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன்
என்ற வரிகளை கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது :)
இப்படி எத்தனையோ பாடல்கள்...எல்லாத்தையும் கேட்டுட்டு அடிக்கடி வந்து சென்ட்டிமெண்ட்டை புழியிறேன்...