துருப்பிடித்த சாவி ஒன்று கண்டெடுத்தேன்.
இது கடைசியாய் என்று உபயோகப்பட்டிருக்கும்?
இது ஒருவேளை தவறி விழுந்திருக்குமா? - இல்லை
தூக்கி எறியப்பட்டிருக்குமா?
தொலைந்து போயிருக்குமா? - இல்லை
உதவாது போயிருக்குமா?
இந்த நிமிஷம் வரை ஒரு கதவு அடைப்பட்டுக் கிடைக்குமா? - இல்லை
என்றைக்குமாக திறந்தே கிடைக்குமா?
எப்படியோ,
சில சமயங்களில், சாவிகள் பூட்டை மட்டும் திறப்பதில்லை.
கண்ணதாசன் காலம் தொட்டு நா. முத்துக்குமார் வரை கால வரையறை இல்லாமல் சில பாடல்களை தரவிறக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் கண்ணதாசன் பேஸ்தடிக்கிறார். கண்ணதாசன், இளையாராஜா போன்றோர்களின் மூளைகளை எல்லாம் ஆராய வேண்டும். எங்கிருந்து இப்படி எல்லாம் இவர்களுக்கு கொட்டுகிறது என்று புரியவில்லை.
உதாரணத்திற்கு
எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அனுபவிக்க நினைக்கும் ஒரு காமாந்தக்காரன். மது, மாது, சூது என்று அவனுக்கு ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை. அவன் பாடுவது போல் ஒரு பாடல்.
இப்படி ஒரு சூழ்நிலையை கண்ணதாசனிடம் சொன்னதும் அவர் கொடுத்த பல்லவி...
"ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி"
முடிந்தது. இரண்டு வரியில் அந்தக் கதாப்பாத்திரத்தை விவரித்து விட்டார். ஒரு இயக்குனருக்கு இவரிடம் சூழ்நிலையை சொல்லி பாடல் வாங்குவது எத்தனை இலகுவான, இன்பமான நிகழ்வாய் இருந்திருக்கும்! இந்த இரண்டு வரிக்கு இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு தடவையில் முடியக் கூடியதா? வரம் வரம்!!
கமல் அடிக்கடி சொல்வார். "அவர்கூடவே வளரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் பாடல் எழுதும்போது அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. கவிதை/பாட்டு எழுதுவது எல்லாம் மிக எளிய விஷயம் மாதிரி என்னை ஏமாற்றி விட்டார்." என்று! அவர் சொல்வது சரி தான், கண்ணதாசன் பாடலை சொல்லும்போது [அவர் பாடல்களை எழுதுவதில்லை; அவர் சொல்லச் சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொள்வது வழக்கம்! அந்த உதவியாளர்களில் பிரதானமானவர் பஞ்சு அருணாச்சலம்] அருகில் இருப்பவருக்கு அப்படித் தான் தோன்றும். சரளமாய் பேசுவதை போலத் தான் அவர் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார்.
ஆனால் அப்படி சொன்ன பாடல் ஒவ்வொன்றும், மெட்டுக்கு சரியாகவும், அந்தப் படத்தின் கதையை/சூழலை சரியாய் விவரித்தும், காலம் கடந்த ஒரு அழகும்/கருத்தும் அதில் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் இருந்தது, இருக்கிறது.
உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் என்ற படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடல்:
மனைவி இறந்தும் கொள்ளி போட வராத மகனை நினைத்து, மருமகளிடம் பாடும் பாடல், எத்தனை எளிதான வார்த்தைகளால் அந்த சூழ்நிலையை பாடலில் சொல்கிறார், பாருங்கள்.
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல
இதன் அடுத்த சரணத்தையும் கேட்டுப் பாருங்கள், !!க்ளாஸ்!!
---
இருவர் உள்ளம் படத்தில் வரும் இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். காதல், வாழ்வின் ஒரு யதார்த்தமான நிகழ்வு என்பதை எத்தனை அருமையாக விளக்குகிறார்.
நதி எங்கே போகிறது கடலைத் தேடி
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று
--
பழனி படத்தில் வரும் இந்தப் பாடல், வஞ்சிக்கப்பட்ட ஒருவன் தத்துவார்த்தமாய் பாடும் இந்தப் பாடலில் வாழ்வின் பல செய்திகள் அடங்கி இருக்கிறது.
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே
பெட்டை கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா
(3)அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
(6)கை வரண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா
மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீது தான் பக்தி என்ற பின்
பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா
--
எங்க மாமா படத்தில் வரும் இந்த தாலாட்டுப் பாடல். அனாதையான நாயகனின் ஆதரவில் வளரும் அனாதைக் குழந்தைகள்.
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?
இந்தப் பாட்டில் அனைத்து வரிகளும் அற்புதமானவை. அதில் குறிப்பாக,
பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன்
என்ற வரிகளை கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது :)
இப்படி எத்தனையோ பாடல்கள்...எல்லாத்தையும் கேட்டுட்டு அடிக்கடி வந்து சென்ட்டிமெண்ட்டை புழியிறேன்...
"திரும்பி வந்துட்டான்னு சொல்லு...ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனானோ, அதே மாதிரி பிளாக் எழுத திரும்பி வந்துட்டான்னு சொல்லு!"
ரஜினியின் அடுத்த படம் ரஞ்சீத்துடன் என்றதும் மெய் சிலிர்த்தேன். ஆஹா, தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் வந்துருச்சு போல இருக்கே என்று! டைட்டிலுக்கு, போஸ்ட்டருக்கு என்று கபாலியை பற்றி ஒவ்வொரு செய்திக்கும் தமிழ்நாடே ஆர்ப்பரித்தது..."தளபதி"க்கு பிறகு நான் ரஜினியை அணு அணுவாக ரசித்தது இந்தப் படத்தில் தான். அந்த வெள்ளை தாடி, கோர்ட் சூட்டுடன் மனிதர் அள்ளுகிறார். சிவாஜியை விட, இந்தப் படத்தில் ரஜினியின் உடைகள் ஏ ஒன்! ஏன் சொல்கிறேன் என்றால், படங்களில் பொறுத்தவரை, ரஜினி ஆரம்ப காலங்களில் இருந்தே நம்மை போல் ஒழுங்காய் ஒரு சட்டையை போட மாட்டார். ஒன்று சட்டை பொத்தான்களை போடமாட்டார், அல்லது காலர் தூக்கி வீட்டுக் கொள்வார், சட்டையை டக் இந்த செய்யாமல் அதன் மேல் பெல்ட் போட்டுக் கொள்வார். கோர்ட் போட்டால் குறித்த கையை போல் மேலே தூக்கி வீட்டுக் கொள்வார். ஏதோ ஒரு கோக்கு மாக்கு இருக்கும். ஒரு பழைய படத்தில் இரண்டு பெல்ட் போட்டிருந்ததை பார்த்தேன்! இந்தப் படத்தில் கூட தலைவர் கோர்ட் சூட் அணிந்து கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொண்டு அவர் வந்ததையும் ரஞ்சித் அந்த காலரை மடிக்க பட்ட பாட்டையும் அவரே சொல்லிய விதத்தை மிகவும் ரசித்தேன்.
இது உண்மையில் ஒரு புது அனுபவம் தான். ரஜினி தன் கெரியரை ஆரம்பிக்கும்போது ரஞ்சித் பிறந்திருப்பாரா என்பதே சந்தேகம். அப்படி ஒருவருக்கு ரஜினி தன் அடுத்த படத்தை கொடுக்கிறார் என்றால் ரஜினிக்கும், ரஞ்சித்துக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும். கபாலி படக் குழுவினரின் பேட்டியை பார்த்தால் உங்களுக்குத் புரிந்திருக்கும். ஏதோ கடவுளையே நேரில் கண்டவர்களை போல் ஒவ்வொருவரும் அவரிடம் பணியாற்றியதை பற்றி சொன்னார்கள். படம் தான் எத்தனை பரபரப்பு, எதிர்பார்ப்பு. இதற்கெல்லாம் கபாலி ஈடு கொடுத்ததா என்றால் "இல்லை" என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
ரஜினி படத்தின் வழக்கமான பார்முலா கதை தான் இதிலும். நல்லவன், கெட்டவன், அவன் ஒரு முறை, இவன் ஒரு முறை என்று மாறி மாறி ஜெயித்து கடைசியில் நல்லவன் வெற்றி கொடி நாட்ட படம் முடியும். ஆனால் ரஞ்சித் மாஸோடு மட்டும் போகாமல் கொஞ்சம் எமோஷனையும் கையில் எடுத்திருக்கிறார். ரஜினியை நடிக்க வைத்தே தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா என்றால் மறுபடியும் "இல்லை" என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
ரஜினியை "நடிக்க" வைப்பதில் அவர் காட்டிய விருப்பம், தான் எழுதிய கதையில் ரஜினி என்ற மாஸ் ஹீரோவை புகுத்திய லாவகம், பலவித கதாப்பாத்திரங்கள் என்று மெனக்கெடல் எல்லாவற்றையும் பாராட்டினாலும், கதையிலும், கபாலி உட்பட, மற்ற எல்லா கதாப்பாத்திரங்களிலும், வசனங்களிலும் எந்த ஆழமும் இல்லாமல் இருப்பதால் படம் அம்போ என்று ஆகிவிடுகிறது.
உதாரணத்துக்கு இந்த வசனம்...இது ஒன்னு தான் கொஞ்சம் தேறுச்சு !
கபாலி:நல்லா பறக்க வேண்டியதை கொண்டு வந்து இப்படி கூண்டுல அடைச்சு வச்சுருக்கானே...கூண்டுல அடைபட்டு கெடக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
வெளிய விட்டா செத்து போயிடும்ணே, மத்த பறவைங்க இதை கொத்திபோட்டுரும்!
கபாலி:பறக்கிறது பறவையோட இயல்பு. அதை பறக்க விடு; வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும். உன்னோட கருணை அதோட சாவைவிட கொடூரமானது!
ஒரு சில தோற்றுப் போன காதல்களை வைத்தும், ஒரே ஒரு சுவற்றை மட்டும் வைத்தும் கதை சொன்ன ரஞ்சித்தா இப்படி என்று தான் தோன்றுகிறது. ட்ரைலரில் மட்டும் மாஸை காட்டிவிட்டு படம் பொறி பறக்க போகுது என்று எதிர்பார்த்து சென்ற ரசிகனை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பொடனியில் அடித்து உட்கார வைத்து விடுகிறார் ரஞ்சித். சரி ரஜினி ரசிகனுக்குத் தான் ஒன்றுமில்லை, ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றமே. இந்தப் படத்தில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது, மூன்று அருமையான பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள் என்று கலர் கலராய் ரீல் விட்டார்கள். எதுவுமே மனதை ஈர்க்கவில்லை.
ஜான் விஜய் கபாலியின் ஆஸ்தான தொண்டன் என்றால், அவரின் காதல் வாழ்க்கையை அருகில் இருந்து கண்டவர் என்றால், அவர் சிறையில் இருக்கும்போது ஏன் அவர் ஒரு முறை கூட கபாலியின் மனைவியையோ, மகளையோ தேடவேயில்லை?
ஜீவா [தினேஷ்] "43" கேங்கில் என்ன செய்து கொண்டிருந்தான்? திடீரென்று ரஜினியின் அடிமையாக மாறுவது எதனால்?
ஆயிரம் பிரச்சனை இருக்கும், நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, டோனி லீ, வீரசேகரன் வளரவிடக்கூடாது என்று பயங்கர வசனம் எல்லாம் பேசிவிட்டு பொண்டாட்டி புள்ளையை தேடத் தொடங்கிவிடுகிறாரே மனிதர்?!
அவர் நடத்தும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவரின் கதையை கேட்டு "நானும் வர்றேன், ஒருத்தனையும் விடக் கூடாது, போட்டுத் தள்ளுவோம்" என்று ஆவேசம் கொள்பவர்களை இவர் ஏன் தடுக்கவே இல்லை? கடைசியில் அவர்களையும் ஏன் ஆயுதம் ஏந்த வைத்தார்?
கடைசியில், தங்கள் பிரச்சனை எல்லாம் சொல்லும் மாணவர்களிடம், "என்னிடம் ஏன் இதெல்லாம் சொல்றீங்க?" என்று சொல்பவன் என்ன மாதிரியான தலைவன்?
ரஜினியை தாண்டி கதையை யோசித்தால் கேள்விகளே மிஞ்சுகிறது.
முதல் பத்து நிமிடத்தில் கபாலி கதாப்பாத்திரத்தை அவர் நிலை நிறுத்திய விதம் பார்த்ததும் பாட்ஷா படத்தின் குழாயை பிய்த்து அடிக்கும் காட்சிக்கான தருணத்தை இந்தப் படத்தில் எல்லோரும் எதிர்நோக்கி இருக்க, கடைசி வரை அவர் குழாயை பிய்த்து எறியவே இல்லை என்பதே சோகம். சரி ரஞ்சித் சொன்னது போல் முள்ளும் மலரும் காளியாவது காணக்கிடைக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ரஞ்ஜீத் இப்படி ஏமாத்திட்டீங்களே!
இப்போது எனக்கு இருக்கும் ஒரே பயம், இந்தப் படத்தில் நிறை குறைகள் இருந்தாலும், இதை நாம் ஆதரிக்கவில்லை என்றால் ரஜினி மறுபடியும் "பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கணும்" என்று பன்ச் வசங்கள் பேசிவிட்டு, நாற்பது பேரை பறந்து பறந்து அடித்து விட்டு, தன் மகள்களை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் மரத்தை சுற்றி டூயட் பாட ஆரம்பித்து விடுவாரே என்று தான்!
அதை மட்டும் மனசுல வச்சுக்குங்க...
ஆ! கடைசியா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.
மகிழ்ச்சி !
இதையே தான் இங்கேயும் சொல்லி இருக்கோம். ஒரு புது முயற்சி. உங்கள் மேலான கருத்தை எதிர்நோக்கி..