சென்னையில் பறக்கும் ரயில் பயணங்கள் அலாதியானது.நேற்று காலை ஒரு வேலையாய் பசுமை வழிச் சாலை வரை செல்ல வேண்டி இருந்தது. காலை ஒன்பதரை, பத்து மணிக்குள் வேளச்சேரி ரயில்வே நிலையம் சென்று வண்டியை நிறுத்தினேன். "பார்க்கிங் காண்ட்ராக்ட் முடிந்து விட்டதால் டோக்கன் போட யாரும் இல்லை. வண்டி தொலைந்து போனால் எங்கள் பொறுப்பு கிடையாது" என்று போர்டு மட்டும் இருந்தது. "டோக்கன் போட்டால் இவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்களா?" என்ற கேள்வியுடன் வண்டியை நிறுத்தி விட்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு டிக்கட் வாங்க கூட்டத்தை கேட்க வேண்டுமா? மூன்று வரிசையில் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது, அறுபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையில் இது தான் கம்மியான கூட்டம்! வேறு வழி என்று நொந்து கூட்டம் குறைவுள்ள வரிசையை தேர்ந்தெடுத்து நானும் நிற்க போனேன். அப்போது அசாமி மாதிரி தோற்றத்தில் இருந்த ஒரு பையன் ["சிங்கி" என்று சொல்ல மாட்டேன்!] கையில் ஒரு சீட்டுடன் "வேண்டுமா? எனக்கு சில்லறை இல்லை என்று இரண்டு கொடுத்து விட்டார்கள்" என்று என்னிடம் ஒரு சீட்டை கொடுத்தான். "என்னடா இது? நான் காண்பது கனவா அல்லது நினைவா? எனக்கு காலங்காத்தால இப்படி ஒரு அதிர்ஷ்டமா? நான் இன்று யார் முகத்தில் முழித்தேன்" என்று ஆச்சர்யம் தீர டிக்கட்டை கையில் வாங்கி நன்றி சொல்லி, டிக்கட் காசு ஐந்து ரூபாயை கொடுத்தேன், "பரவாயில்லை!" என்றார். "அட புடிங்க பாஸ்" என்று நான் எப்படியோ அவர் கையில் திணித்து விட்டேன். சொல்லப் போனால், வரிசையில் நின்று டிக்கட் வாங்கி கொடுத்ததற்கு ஐந்து ரூபாய் சேர்த்து தான் தர வேண்டும்!
"எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்றான். நான் "ஐ டி" என்றேன். "ஐ டி சி சோழா?" என்றான். "கம்ப்யுட்டர்" என்று பேச்சை நிறுத்தி திசை மாற்றிக் கொண்டேன். நான் சென்ற காரியமும் சுபமாகவே முடிந்தது. என் வாழ்வின் மிக அதிர்ஷ்டமான நாள் என்று நினைத்துக் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.
நிற்க
நீங்கள் தமிழ் சினிமா நிறைய பார்ப்பவராக இருந்தால் இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் வரப் போகிறது என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்! நான் நினைத்தது போல இந்த நாள் அவ்வளவு அதிர்ஷ்டமாய் இல்லை என்று நான் உணர்ந்த கதை தான் இது என்று நினைத்திருப்பீர்கள். அது மிச்ச கதையை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
வேலை முடிந்து மறுபடியும் வேளச்சேரிக்கு ரயிலை பிடித்தேன். மணி சுமார் ஒரு 11:15 இருக்கும். நான் என் முகநூலில் சொன்னது போல், ஆள் அரவமற்ற பறக்கும் ரயில் நிலையங்களை கடந்து ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. ரயிலிலும் அதிகம் கூட்டமில்லை. என்காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு ராஜாவை என் காதுக்குள் பாய்ச்சினேன். "வருது வருது இளங்காத்து...இந்த வசந்த மலரின் இடம் பார்த்து..."
அந்த பாட்டில், குஷ்பு அருகில் வரும் சத்யராஜை போல் ஒரு போலீஸ் என் அருகில் வந்தார். என்னையே பார்த்தார். "டிக்கட் எடுங்க!" என்றார்! "என்னடா, நம்ம இவ்வளவு டீசண்டா இருக்கோம், நம்மகிட்ட டிக்கட் எல்லாம் கேக்குறாரே?" என்று ஜெர்க்கானேன். ஹெட்ஃபோனை கழட்டாமலேயே பையில் கையை விட்டு டிக்கட் எடுத்தேன். அது போகும்போது வாங்கிய டிக்கட். மறுபடியும் தட்டு, தடுமாறி, பையை துலாவி வரும்போது வாங்கிய டிக்கட்டை எடுத்தேன். காதில் இருந்து ஹெட்ஃபோனையும்! வாங்கி சரி பார்த்தார். வண்டி பெருங்குடியில் நின்றது. இறங்கச் சொன்னார். அடுத்த பெட்டியில் ஏற்றினார். "உங்களை ஏன் புடிச்சுருக்கேன்னு தெரியுதா? [ஒ, புடிச்சிட்டாரா!] இதை படிங்க!" என்று ரயிலில் வாசலில் எழுதி இருந்ததை காட்டினார். "ரயிலின் கூரையில், வாசலில் பயணம் செய்யக் கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம்" என்பது போல் ஏதோ எழுதி இருந்தது. அவர் மேலும், "வண்டி காலியா இருக்கு, உக்காந்துட்டு வரலாம்ல? காதுல ஹெட்ஃபோன் வேற மாட்டி இருக்கீங்க, யாராவது கூப்பிட்டா கூட கேக்காது! தப்பு தானே?" என்றார். அவர் பாதிரியாராய் இருந்தால், அந்த இடத்திலேயே பாவ மன்னிப்பு கேட்டிருப்பேன். அவ்வளவு நல்லவன் நான்! என்னிடம் போய் தப்பு தானே என்று கேட்டால்? நான் "தப்பு தான் சார்!" என்றேன். "வேளச்சேரி தானே போறீங்க, அங்கே எஸ் ஐ இருப்பாரு, அவர் சொல்ற மாதிரி செய்யுங்க" என்று என் டிக்கட்டையும், லைசன்சையும் வாங்கிக் கொண்டார்.
மைண்ட் வாய்ஸ்: "பொழுது போயிருச்சே, ஒண்ணுமே நடக்கலையே நெனச்சேன்! நடந்துருச்சு; நடத்திட்டாய்ங்க!"
ரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்றதும்"ஃ புட் போர்ட் கேஸா?" என்று பெயர் முகவரி கேட்டு கேஸ் எழுதினார்கள். என்னை போல பிடிபட்ட மற்ற மூன்று பேர் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் பழ வியாபாரி, ஒருவர் கால் டாக்சி டிரைவர், மற்றொருவர் பதினேழு வயது பையன். நான் ரொம்ப கேஷுவலாக இருந்தேன். இன்று ஒரு புது அனுபவம், ஒரு பதிவு எழுத உதவும் என்று நினைத்துக் கொண்டேன். கான்ஸ்டபிள் ஒருவர், "எல்லாரும் சினிமா பாப்பீங்களா?" என்று கேட்டார். நான் உடனே, "நான் நல்லா பாப்பேன் சார்" என்றேன். அவர் மற்றவர்களிடம் , "இப்போ ஒரு படம் காட்றேன் பாருங்கடா, பயப்பட மாட்டீங்களே?" என்று ரயிலில் அடிபட்டு இரண்டு கால்களும் துண்டான ஒருவரின் வீடியோவை எங்களுக்கு காட்டினார். பார்க்க முடியவில்லை! ஒரு சிறு அஜாக்கிரதையினால் ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி ஆகி விடுகிறது. "பாருங்க, இதுக்கு தான் அடிச்சுக்குறோம், இதை படம்எடுக்கணும்னு எனக்கு தலை விதியா? உங்க நன்மைக்கு தானே சொல்றோம்!" என்றார். பிறகு இத்தகைய பல்வேறு விபத்துக்களின் பேப்பர் கட்டிங்குகளை காட்டினார்கள். நிறைய அறிவுரை கூறினார்கள்.
பிறகு கான்ஸ்டபிள்,
"கேஸ் எழுதுவோம், கோர்ட்ல போயி ஃபைன் கட்டுங்க" என்றார்.
சார், வார்ன் பண்ணி விடக்கூடாதா சார்?" என்றேன்.
"அப்படி எல்லாம் விட முடியாதுங்க. 156 செக்ஷன் படி 500 ரூபாய் அபராதம்!" என்றார்.
"சார், ஐநூறு ரொம்ப ஜாஸ்தி சார்" என்றேன்.
"உங்களால எவ்வளவு தர முடியும்?"
சரி தான், வழக்கம் போல மாட்டேருக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்தேன்.
என்கிட்டே அவ்வளவு இருக்காது சார், என்று என் பயில் கையை விட்டேன். [லஞ்சம் கொடுக்க அல்ல!]
நீங்க பணத்தை இங்கே எடுக்காதீங்க, கோர்ட்ல தான் பணம் கட்டணும்! டூ வீலர் நோ பார்க்கிங் கேஸ் போட்டுறலாமா? அதுக்கு இருநூறு ரூபா ஃபைன், அதுவும் உங்க நடத்தையை பாத்து தான்! எங்களுக்கு சல்லிக் காசு வேணாம். என்ன அரசாங்கத்துக்கு ஒரு முன்னூறு ரூபா நஷ்டம். அதனால பரவாயில்லை. நாங்க இதை அவார்னஸுக்கு தான் செய்றோம். உங்களுக்கு ஓகே வா? என்று கேட்டார்.
நான் கையெடுத்து கும்பிட்டு "ஓகே சார்" என்றேன்.
நீங்க போயிட்டு ஒரு ஒன்னரை மணிக்கு இங்கே வந்துருங்க, ஆபிஸ் எல்லாம் போக முடியாது, லீவு சொல்லிடுங்க, இங்கே இருந்து ரெண்டு மணிக்கு எக்மோருக்கு உங்களை இவர் கூட்டி போவார். இவர் எல்லாம் பாத்துப்பாரு என்று ஒரு கான்ஸ்டபிளை கை காட்டினார்கள்!
நான் வீட்டுக்கு போயி, சாப்பிட்டு விட்டு திரும்ப வந்தேன். கூட இருந்தவர்கள் லஞ்சம்கொடுத்து போயிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படியே அங்கேயே இருந்தார்கள். நான் போனதும், கான்ஸ்டபிள்
பைக்கில வந்தீங்களா, பைக்கை எங்கே விட்ருக்கீங்க?" என்று கேட்டார்.
டோ ஏரியாவில நிறுத்தலா சார், பாலத்துக்கு கீழே விட்டுருக்கேன்! என்றேன் பணிவாய். அவர் என் கூட வந்து அவர்கள் வண்டி வைக்கும் இடத்தை காட்டி, "பிரதீப் உங்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன், உங்க வண்டிய இங்கே விடுங்க. போகும்போது எடுத்துட்டு போலாம்" என்று கொஞ்ச தூரம் வந்து வழி காட்டி விட்டு போனார். எனக்கு போலீசிடம் சிக்கி இருக்கிறோம் என்ற ஒரு பதட்டமே இல்லாமல் போய் விட்டது. அங்கு இருந்த அத்தனை பேரும் எங்கள் எல்லோரையும் அவ்வளவு அன்பாய் மரியாதையாய் நடத்தினார்கள்.
என்னை ரயிலில் பிடித்தவருக்கு டியூட்டி முடிந்து விட்டது போலும்; அவர் நார்மல் உடையில் இருந்தார்.
என்ன சார், எரிச்சலா இருக்கா, என்ன சார் பண்றது? உங்களை பாத்தா பாவமா தான் இருக்கு. எத்தனை ப்ளான் வச்சுருந்திருப்பீங்க! எத்தனை பேரு தொங்கிட்டு போறான், நம்மளை மட்டும் புடிக்கிறாங்களே ன்னு நீங்க நெனைக்கலாம். அத்தனை போரையும் புடிக்க அத்தனை போலீஸ் இல்லையே! இந்த காரியத்தை பண்ணும்போது நாங்களும் பாவம் பாக்குறதெல்லாம் விட்டுட்டு தான் பண்றோம். எங்க பொழப்பு அப்படி. ரயில்ல இந்த பள்ளிகூட பசங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியாது! நம்மளை கோமாளி ஆக்கிடுவானுங்க! ஐநூறு ரூபா கூட இப்போ யாருக்கும் பெருசுல்ல, ஆனா இந்த ஒரு நாள் உங்களுக்கு வீணாகுது இல்ல? அது தான் இந்த காலத்துல பெருசு! மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க, இதுவும் ஒரு அனுபவம்னு நெனச்சுக்குங்க. நான் வர்றேன் என்று சொல்லி கை குலுக்கி விடை பெற்றார்! பாவம், போலீஸ் தானே!
சிறிது நேரத்தில் ஒரு கான்ஸ்டபிளுடன் நாங்கள் மூவரும் கோர்டுக்கு புறப்பட்டோம். வேளச்சேரியில் இருந்து சென்னை போர்ட், அங்கிருந்து ட்ராக் மாறி, எக்மோர். "டிக்கட் எடுக்கணுமா சார்?" என்றேன்! "நான் வர்றேன்ல, தேவை இல்லை, வாங்க" என்று தயாராய் நின்று கொண்டிருந்த ரயிலில் முதல் வகுப்பில் எங்களை ஏற்றினார். என்ன ஒரு ராஜ மரியாதை :)
வழி நெடுக எங்களுடன் பல காலம் பழகிய நண்பனை போல அவர் வேலைக்கு சேர்ந்தது, பார்த்த சங்கடங்கள், அவருடைய அனுபவங்கள் என்று பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு பேச்சையும் ஆரம்பிக்கும்போது, "இல்லை தல" என்று அவர் என்னை அட்ரஸ் செய்தது வேடிக்கையாய் இருந்தது. ரயிலில்அடிபட்டு ஒருவன் கிடந்தால், ரயில்வே போலீஸ் அவனை தூக்கக் கூடாதாம்! ஸ்டேட் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். அவர்கள் நூறடி தூரத்தில் ஆஸ்பத்திரி இருந்தாலும், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பார்களாம்! இப்படி ஒரு ஃபார்மாலிட்டி. அவர்களை பொறுத்த வரை, ஒருவன் ரயிலில் விழுந்து விட்டால் அவன் பிணம் தான்! அத்தனை கால தாமதத்துக்கும் மீறி அவன் பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருவனை தூக்க முயன்று இவர் தன் மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை சொன்னார். "என்ன கொடுமை சார், இத்தனை போலீஸ், பந்தோபஸ்து, ஒரு உயிர் போறதை பாத்துட்டு சும்மா தான் நிக்கணும். நாளைக்கு நானே விழுந்து கெடந்தாலும் இதே நிலை தான்!" அப்போ நான் ஏன் சார், ரயில்ல இருந்து குதிச்சி ஓடி ஒருத்தனை புடிக்கணும்? போனா போறான்னு நான் விட்ருவேன் சார், எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என் குடும்பத்தை யாரு பாப்பா? என்று புலம்பினார். எனக்கு இதை கேட்க கேட்க நெஞ்சை அடைத்தது! ஒரு உயிரை காப்பதை விட என்ன "டேஷ்" பார்மாலிட்டி வேண்டி கிடக்கிறது?! ச்சே!
அவர் பேச பேச மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் நரேன் போலீஸ் ஆனவுடன் பார்க்கும் சம்பவங்கள் தான் என் நினைவுக்கு வந்தபடி இருந்தது. போலீஸ் பொழப்பு என்ன ஒரு கொடுமையான பொழப்பு! இதோ இப்போது டாஸ்மாக்கில் பந்தோபஸ்த்துக்கு நிற்கிறார்கள். அரசாங்க சொத்தை காப்பதற்காக அரசாங்கம் கை காட்டிய இடத்தில் அப்படி நிற்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி இல்லை.ஆனால், நாம் குடிமகன்களுக்கே பாதுகாப்பாய் நிற்பதாய் சொல்லி அவர்களை கலாய்க்கிறோம். நிதானமாய் இருக்கும்போதே, மக்கள் போலீசை கோமாளியாய் தான் பார்க்கிறார்கள். குடித்துக் கொண்டிருப்பவன் எப்படி பார்ப்பான்? என்னவெல்லாம் கேலி பேசுவான்? இவர்களாலும் ஒன்றும் பண்ண முடியாது! நினைத்தாலே பரிதாபமாய் இருக்கிறது இவர்கள் பொழப்பு!
மூன்று மணி அளவில் எக்மோர் போய் சேர்ந்தோம். எங்களை மாதிரி வெவ்வேறு ஸ்டேஷன்களில் பிடிபட்டவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அங்கே கிட்டத்தட்ட ஒரு நூறு பேர் இருப்போம். எக்மோர் ஸ்டேஷன், மதியம் மூன்று மணி, என்ஜின்களின் ஓயாத இரைச்சல்களின் நடுவில், கூட்டம் அம்மும் அந்த பிளாட்பாரத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நின்ற அத்தனை பேரும், கையில் கத்தியை கொடுத்தால் அருகில் இருப்பவனை குத்தி கொலை செய்து விடுவார்கள் என்பது போல் கொலை வெறியுடன் இருந்தார்கள். நல்ல வேலையாய் எங்கள் தல, முதலாக சென்று எங்க பேப்பர்களைசமர்ப்பித்து வந்து விட்டார். "ஜட்ஜ் அம்மா வந்துட்டா, நம்ம தான் முதல்ல, அஞ்சு நிமிஷம் தான்!" என்றார். அந்த ஐந்து நிமிட வேலைக்காக, அந்த ஜட்ஜ் அம்மாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அந்த அம்மா பாரீசில் உள்ள இன்னொரு கோர்ட்டில் இருந்து இரண்டு மணிக்கு வர வேண்டியவர்கள் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார்கள். நான் அப்போது தான் வெறுத்து தலை வலி மிகுந்து ஒரு காப்பியை வாங்கி குடிக்க போவதற்கும், அவர்கள் வருவதற்கும் சரியாய் இருந்தது. தல எங்களிடம்,எங்கேயும் போயிடாதீங்க, பேர் கூப்பிடும்போது இல்லைனா, அப்புறம் எல்லாரையும் பாத்துட்டு ரசீது எல்லாம் போட்டதும் தான் நம்மளை பாப்பாங்க" என்று பீதியை கிளப்பினார். காப்பியை அங்கேயே கடாசி எறிந்தேன்! ஒரு வழியாய் பெயரை சொல்லி கூப்பிட்டதும், கூண்டில் போய் நின்று கொண்டோம். கையை கூண்டில் வைத்திருந்தேன். ஜட்ஜுக்கு கீழ் அமர்ந்து இருந்த ஒரு வக்கீல் [போலீசுக்கு பொழப்பு அப்படி என்றால் வக்கீல்களுக்கு அவர்களின் உடை! இந்த வெயில்ல உங்களுக்கு எதுக்கு இந்த உடை?] "கையை கீழே போடுங்க" என்று சைகை காட்டினார்! டேய் , நான் என்ன காலையாடா தூக்கி வச்சுருக்கேன்! என்ன ஆழிச்சாட்டியம். டூ வீலர் நோ பார்க்கிங் இருநூறு ரூபாய் ஃ பைன் என்று அந்த குமாஸ்தா அம்மா சொல்லியதும் என் தலையை ஆட்டி ஆமோதித்து இருநூறு ரூபாய் கொடுத்து வெளிய வந்தேன். அபராதம் கட்டியவர்கள் தவறாமல் ரசீது வாங்கி தான் செல்ல வேண்டும் என்று அங்கு எழுதி இருந்தது. எங்கள் தலயிடம் கேட்டதற்கு, "அது எல்லோருக்கும் முடிஞ்சதும் ஒட்டு மொத்தமா போட்டு கொடுப்பாங்க. வேணும்னா வெயிட் பண்ணி வாங்கிட்டு போங்க!" என்றார். ஆள விடுங்கடா சாமி என்று நகர்ந்தோம்.
ரயில் ஏற வந்தா ஸ்டேஷன் பக்கம் வாங்க! என்றார் ஒருபுன் முறுவலுடன்...
கூட வந்த அந்த டிரைவர் எரிச்சலுடன் என்னிடம், "ஏன் மறுபடியும் புடிச்சு கேஸ் போடறதுக்கா?" என்றார் :-)