கடந்த ஞாயிறு அன்று கிருஷ்ணகிரியில் "தமிழ் கலை இலக்கிய பட்டறை" நடத்திய குறும்பட த் திருவிழாவில் அஜயன் பாலா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் கவிஞர் சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாய் பங்கு பெற்றனர். நான் நடித்த "வலி" குறும்படத்தை சமர்த்திருந்தோம். அங்கு திரையிடப்பட்ட பதினாறு படங்களில் சில படங்களை தேர்ந்தெடுத்து விருதளித்தார்கள். அதில் வலியும் ""சிறந்த குறும்படம்" விருதை வென்றது. சென்ற வாரம் தமிழ் ஸ்டூடியோவின் மூலம் Article 39 படத்துக்கு விருது. இந்த வாரம் இவர்களின் மூலம் "வலி" படத்துக்கு விருது என்று எங்கள் காட்டில் ஒரே விருது மழையாய் இருக்கிறது. மகிழ்ச்சி!
தமிழ் ஸ்டூடியோ சார்பாக சென்னையில் அருண் இம்மாதிரி விஷயங்களை முன்னெடுப்பதே பெரிய விஷயம் என்று என் முந்தய பதிவில் எழுதியிருந்தேன். அவரை பின்பற்றி கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட "சதீஷ்" மற்றும் மற்ற "தமிழ் இலக்கிய பட்டறை" குழுவுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இப்படி ஒரு நிகழ்வை எளிதாய் நடத்தி விட முடியாது. கடந்த ஒரு மாதமாய் இதற்காக இராப்பகலாய் உழைத்து, போட்டியில் கலந்து கொண்டவர்களை அழைத்து, எல்லோரையும் ஒரு ஏ சி ஹாலில் அமர வைத்து, எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட்டு, நம் படத்தை திரையிட்டு, கை தட்டி, நெஞ்சார பாராட்டி, மற்ற சக படைப்பாளிகளுக்கு நம் அறிமுகங்களை கிடைக்கச் செய்து, போதாதென்று மேலும் ஒரு விருதளித்து...என்ன கிடைக்கும் இவர்களுக்கு? போட்டியில் ஒரு பங்காளனாக இந்த நிகழ்வின் வெற்றியாக நான் நினைப்பது, பங்கு கொண்ட படங்களில் ஒரு படம் பத்து வயது சிறுவனாலும் [ஒரே நாளில் எடுத்து முடித்தது!], இன்னொரு படம் ஐம்பது வயது கடந்த முதியவராலும் இயக்கப்பட்டிருந்தது. இரண்டுமே முதல் முயற்சிகள்!
வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சொன்னது போல், சினிமா என்றால் சென்னை என்று இல்லாமல், தமிழ் படம் என்றால் சென்னையை மட்டுமே மையமாக கொள்ளாமல் அந்த அந்த வட்டாரப்பகுதிகளின் கதைகளை முன்னெடுத்து இப்படி குறும்படங்கள் வருமானால் அதை விட ஒரு சிறப்பு இருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்கான முதல் அடி தான் இது! வாழ்த்துக்கள் விருதளித்த உங்களுக்கும், உங்களின் விருதுக்குத் தகுதியான எங்களுக்கும் :)