ஜிகர்தண்டா புகழ் இயக்குனர் "கார்த்திக் சுப்பாராஜ்" தொடங்கி இருக்கும் "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனத்தின் மூலம் ஆறு குறும்படங்களை தேர்ந்தெடுத்து ஒரு திரைப்படமாக நேற்று சில திரை அரங்கில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதன் வரவேற்பை பொறுத்து அடுத்து அடுத்து 2வது பெஞ்சு, 3வது பெஞ்சு என்று வெவ்வேறு குறும்படங்களை திரையிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு புதுமை. 2003 லேயே நான் இத்தகையை முயற்சிகளை ஹிந்தி சினிமாவில் பார்த்திருக்கிறேன். தமிழுக்கு புதுசு! இந்தக் காலத்தில் யாருக்கும் நேரமில்லை. எல்லோரும் அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறோம். டெஸ்ட் மேட்ச் பார்த்து, ஒன்டே பார்த்து இன்று "டீ ட்வென்டி" பார்த்துக் கொண்டிருக்கிறோம். சினிமா மட்டும் ஏன் மூன்று மணி நேரம்? அதுவும் அந்தப் படம் மொக்கை என்றால்? அதற்கு பதிலாக சின்ன சின்ன படங்களாய்  ஒரு ஐந்து, ஆறு படங்களை பார்த்தால் வித்தியாசமான அனுபவமாய் இருக்காது?

இது ஒரு நல்ல முயற்சி. சினிமாவில் பிரபல இயக்குனர் ஆகவிட்ட போதிலும், தன் தாய் வீடான குறும்படத்தை மறக்காமல், மேலும் முன்னேற விரும்பும் அமச்சூர் குறும்பட இயக்குனர்களுக்கு இத்தகைய ஒரு மேடையை அமைத்துக் கொடுப்பதற்கும், கார்த்திக்கை தாராளமாய்  பாராட்டலாம்.

இன்று பார்த்த படத்தில் ஆறு படங்கள். ஆறு இயக்குனர்கள். ஆறு கதைகள்.

The Lost Paradise - சிறையில் இருந்து திரும்பி வரும் ஒருவன் தன் குடும்பத்தை தேடி வரும் கதை. ஆரண்ய காண்டம் சோமு வின் நடிப்பில் மிளிர்கிறது!
அக விழி - வாழ்வோடு கலந்து விட்ட ஆழ் மனக் கனவுகளின் ஒரு கண்ணாமூச்சி. நல்ல மேக்கிங்! ஆமாம், தமிழ் டைட்டில் நல்ல தானே இருக்கு? அப்புறம் எதுக்கு "An inner eye" என்று ஒரு சப்டைட்டில் :)
புழு - இரண்டு பாவிகள் தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்வது. ஒரு கதையை இடையில் தொடங்கலாம் தான், இறுதியில் ஏதாவது இருக்க வேண்டுமே? ம்ம்ம்...கதைக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தம் புரியவில்லை.!

இடைவேளை.
நண்பன்டா டிரைலர்.

நல்லதோர் வீணை - பாலியல் வன்கொடுமையை பற்றிய ஒரு மெசேஜ் படம். நல்ல நடிப்பு. தேர்ந்த இசை. நல்ல டைட்டில்!
மது - மாது; மது; மசாலா; மாஸ்! ஒரு சாம்பிள்: 1: என்னடா பண்ற? 2 ஃபேன்ல தூக்கு போட்டுக்க போறேன். 1: ஏன் உங்க வீட்ல ஃபேன் இல்லையா? [இங்கேயே சிரிக்காதீங்க, அடுத்து தான் சூப்பர்!] 2: எங்க வீட்ல டேபிள் ஃபேன் தான் இருக்கு! [ஹிஹிஹி..]
நீர் - தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்லும் அவலத்தின் ஒரு குறுகிய பதிவு. விஜய் சேதுபதியின் கடைசி குறும்படம் என்று நினைக்கிறேன் :)

ஆறு படங்களை பார்த்து முடித்த பிறகு, இந்த முதல் முயற்சிக்காக இன்னும் கொஞ்சம் மாஸ் படங்களை போட்டிருக்கலாமோ என்று தோன்றியது. இருந்தாலும் பாராட்டத்தக்க முயற்சி.

என்னுடைய இரண்டு படங்கள் "விடியல்" மற்றும் "தமிழ் கிஸ்" கார்த்திக்கின் "பெஞ்ச் பிளிக்ஸ்" ஆன்லைன் ஒளிபரப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று கார்த்திக்கை பார்த்தேன். என்குறும்படம் இப்படி திரையில் வர என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

எப்படியாவது ஒரு 5வது  பெஞ்சிலாவது நான் ஒரு சீட் போட வேண்டும்!பார்ப்போம்.