P K
என் விருப்பத்துக்குரிய நடிகர் ஆமீர் கானின் சமீபத்திய ஹிந்தி படத்தின் பெயர் பீகே! ஹிந்தியில் "பீகே" என்றால் "குடித்திருக்கிறாயா" என்று அர்த்தம் கொள்ளலாம். படத்திற்கும் இந்த பெயருக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. இந்தப் படத்தில் ஆமீர் கானின் கதாப்பாத்திரம்  குழந்தைத்தனமான பல்வேறு கேள்விகளை எழுப்புவதால் பதிலுக்கு எல்லோரும் "குடித்து விட்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்கிறார்கள். அதற்காக படத்தின் பெயரையே அப்படி வைத்து விட்டார்கள்.

ஏன் அவர் அப்படி குழந்தைத்தனமான கேள்விகளை கேட்கிறார்? ஏன் என்றால் அவர் வேற்று கிரக ஆசாமி! நம்மை போல் பிற ஜீவராசிகளை தேடி பூமியை அடைகிறார். அதனால் பூமியில் பார்க்கும் எல்லாவற்றையும் கேள்வி எழுப்புகிறார்! வேற்று கிரக ஆசாமி பூமியில் வந்து இறங்கினால் என்னவாகும்? அவன் திரும்பிச் செல்ல உதவும் அவனுடைய கழுத்துப் பட்டை திருடப்பட்டால் என்னவாகும்? இது தான் பீகே!

ராஜ்குமார் ஹிரானி என்னுடைய விருப்பத்துக்குரிய திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர். அவருடைய முன்னாபாய் சீரிஸ் என்னை மிகவும் கவர்ந்தது. யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளாத ஆமிர் இரண்டாம் முறையாக ராஜ்குமார் ஹிரானியுடன் கை கோர்க்கிறார் என்றால் அவரிடம் விஷயம் இல்லாமல் இருக்காது. முன்னாபாய் சீரிஸ், 3 இடியட்ஸ் என்று கடந்த பத்து வருடத்தில் அவர் பாலிவுட்டில் காட்டிய பாய்ச்சல் அசாதாரணமானது. அதே பாய்ச்சல் பீகேவிலும் தொடர்கிறது. அபிஜித் ஜோஷியுடன் ஜோடி சேர்ந்து இவர் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் பட்டாசு கிளப்புகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி திரை உலகை ஆண்ட சலீம் ஜாவேத் மாதிரி இவர்களும் தொடர வாழ்த்துக்கள்.

ராஜ்குமாரின் திரைக்கதையின் முக்கிய அம்சம் ஒரு சமூகப் பார்வை கொண்ட கதைக் களன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனை நெகிழச் செய்து அவனை/அவளை ஆனந்தக் கண்ணீர் விட வைப்பது! ஒவ்வொரு படத்திலும் என்னை அழ வைப்பதால் அவரை நான் வெறுக்கிறேன்; அதே சமயம் சினிமா என்ற மாய பிம்பத்தின் ஊடே அவர் என் நெஞ்சை தொட்டு என்னை அழ வைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அது தானே சினிமாவின் பலம். அதை செய்யத் தெரிந்தவன் தான் சினிமா மொழி தெரிந்தவன். நான் இவருடைய படங்களில் மிகவும் ரசித்தது "லகே ரஹோ முன்னாபாய்". ஒரு லோக்கல் தாத்தா லேசாய் மனம் பிரழ்ந்து காந்தியுடன் சிநேகம் கொண்டால் என்னவாகும்? என்னை ஒரு முரணான கதைக்களன். அதகளப்படுத்தி இருப்பார்!

பீகேவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே இணையத்தில் நல்லமுறையில் பல விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. சிலர் வெகுவாக நெகிழ்ந்து இது ஒரு வாழ்நாளுக்கான திரைப்படம் என்று போற்றுகிறார்கள்! சந்தேகமே இல்லாமல் நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு. ஆனால் என்னை பொருத்தவரை படம் பல இடங்களில் திசை மாறிச் சென்று விட்டதை போல தோன்றியது. அனுஷ்காவின் காதல் கதை அரைவேக்காடாய் தோன்றியது. அனுஷ்காவின் வாயை [லிப்ஜாப்] ஏன் இப்படி செய்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. வழக்கமான ராஜ்குமாரின் ஆஸ்தான நடிகர்கள் பொமன் இராணி, சௌரப் சுக்லா சலிப்பூட்டுகிறது.  மேலும் சொல்லத் தெரியவில்லை!

நாட்டில் ஒன்றிரண்டு நல்ல இயக்குனர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களையும் குறை சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது. முதல் படத்தில் அன்பு கொள் என்றார்; அடுத்த படத்தில் அகிம்சை வழி நட என்றார்; மூன்றாவது படத்தில் பிடித்ததை செய்யுங்கள் என்றார். இந்தப் படத்தில் மதத்தின் பெயரால் அறிவிழக்காதீர்கள் என்கிறார்!  நல்லதையே சொல்கிறார்; அதையும் சிறப்பாய் சொல்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கட்டுமே!

பீகே அவசியம் பார்க்கலாம்.