[ஒரு குறிப்பு: நீங்கள் இன்னும் படம் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிட்டு இதை படியுங்கள். இல்லையென்றால் ஒரு மகா அனுபவத்தை இழந்து விடுவீர்கள் :-)]
 

புகழின் போதை எத்தகையது என்று இன்று தான் உணர்ந்தேன். கிட்டத்தட்ட பத்து வருடமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். இத்தனை நாள் கிடைக்காத பாராட்டு என் முதல் குறும்படத்திற்காக ஒரே நாளில் எனக்கு கிடைத்திருக்கிறது. அது தான் சினிமாவின் வீச்சு. அதற்குத் தான் ஒவ்வொரு கலைஞனும் சினிமா என்றால் ஆளாய் பறக்கிறான் போலும்.

இந்தப் படத்தின் ஒன் லைன் எனக்குக் கிடைத்து ஒரு ஐந்து வருடங்களாவது இருக்கும். ஏதோ ஒரு ரஜினி படத்தை பார்க்கும்போது "ஒரு கண் தெரியாதவன் ரஜினியை எப்படி அணுகுவான்" என்ற கேள்வி என் மனதில் உதித்தது! "அவனுக்குப் பார்வை வந்ததும், ரஜினியை பார்த்ததும் அவனுடைய கற்பனை உருவத்துக்கும் உண்மை உருவத்துக்கும் எவ்வளவு சம்மந்தம் இருக்கும்?" என்று கற்பனை தொடர்ந்தது...அப்படி தொடங்கி, "சரி பல வருடமாய் பார்வை இல்லாமல் இருந்தவனுக்கு பார்வை கிடைத்தால் அவன் முதல் நாள் எப்படி இருக்கும், அவன் எதையெல்லாம் பார்க்க நினைப்பான்?" என்று யோசிக்கத் தொடங்கினேன். பிறகு வழக்கம்போல் அந்த யோசனை மேலும் வளராமல் அப்படியே தங்கி விட்டது. சென்ற வருடம், எப்படியும் இந்த வருடமாவது ஒரு குறும்படம் எடுத்து விட வேண்டும் என்று நானும் நண்பர்களும் பேசிக் கொண்டிருந்தோம். சரி என்று இந்தக் கதையை தூசு தட்டினேன். இந்தப் படத்தின் "திரைக்கதை" இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததை போல அந்த ஒரு இரவில், ஒரு மணி நேரத்தில், என்னை வைத்து தன்னை எழுதிக் கொண்ட பிறகு தான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது என்று நினைக்கிறேன்!

எனக்கு கதை மிகவும் பிடித்தது. என் நண்பர்களுக்கு சொன்னேன். வழக்கமான லவ், டாஸ்மாக் இல்லாத வித்தியாசமான கதைக்களம் என்பதால் அவர்களுக்கும் பிடித்திருந்தது. சோ, கதை எங்களை உந்தித் தள்ள ஷூட்டிங் கிளம்பிவிட்டோம்! என்ன ஒரு மகத்தான அனுபவம் அது.

THE FILM MAKER: Pain is temporary; Film is forever!

மிகச் சரியான வாசகம். இந்த தம்மாத்துண்டு படத்துக்கே எத்தனை சொதப்பல்கள், எத்தனை வாக்குவாதங்கள், எத்தனை குறிக்கிடல்கள், எத்தனை கேள்விகள், எத்தனை குழப்பங்கள்!! சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றையும் ஒரு வழியாய் கடந்து வந்தோம்.

சினிமா என்னை அழைத்துச் செல்லும் இடங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அனுபவமே அலாதி. படத்தில் வரும் டேப் ரிக்கார்டரை என் வீட்டின் எதிரில் உள்ள பாத்திர வியாபாரியிடம் இரவல் வாங்கினேன். அந்த கண் தெரியாதவர் உபயோகிக்கும் கம்புக்காக அடையார், நுங்கம்பாக்கம் என்று எல்லா கண் தெரியாத பள்ளிகளுக்கும் சென்றேன். கண் தெரியாதவருக்கு கண் வந்தால் அவர்கள் எதை முதலில் பார்க்க விரும்புவார்கள் என்று தெரிந்து கொள்ள பார்வையற்ற ஒருவரை பேட்டி எடுத்தேன். கண் வந்ததும் ஒருவரின் நடை, உடை, பாவனை எப்படி இருக்கும் என்று ஒரு மருத்துவரிடம் விசாரித்தேன். "நீங்கள் ஒன்றை உண்மையாக விரும்பினால் அதை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் இந்த உலகமே உதவி செய்யும்!" என்பது எத்தனை உண்மை என்று கற்றுக் கொண்டேன்.  உதாரணமாக, முதல் நாள் ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியிடங்களுக்கு சென்று சூட் செய்தோம். கதைப்படி ஒரு பார்வையற்ற பிச்சைக்காரர் வேண்டும். நாங்கள் ரயிலில் ஏறி ஒவ்வொரு ஸ்டேஷனும் தேடினோம். ஒருவரும் தென்படவில்லை. பிறகு தான், அன்று ஞாயிற்றுக் கிழமை அவர்கள் யாரும் அன்று தொழில் செய்ய மாட்டார்கள் என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டோம். சரி அடுத்த சனிக்கிழமை எடுத்துக் கொள்ளலாம் என்று வேறு ஷாட்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது தான் பார்வை இல்லாத குமார் அங்கு வந்து சேர்ந்தார். ரயில் புறப்படும் நேரம் ரயில் ஏறும் அவரை பார்த்து விட்டு, அவரை அவசர அவசரமாய் கீழே இறக்கி, அவரிடம் விஷயத்தை சொல்லி நாங்கள் அவரை உபயோகப்படுத்திக் கொண்டோம். கொஞ்சம் பணம் கொடுத்து அவரை நல்லபடியாய் அனுப்பி வைத்தோம்.

பிறகு டீ கடையில் இருக்கும் டீ வி! உங்களில் சிலர் அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அந்தக் கடையில் டீவியே இல்லை. டீவியுடன் உள்ள டீ கடையை நாங்கள் தேடாத இடமில்லை. எங்கள் கண்ணில் படவேயில்லை. சரி என்று டீவி இருப்பதாய் பாவனை செய்து நடித்து, வீட்டில் வந்து டீவி [அரசு டீவி என்பது முக்கியம்!] ஷாட்ஸ் எடுத்துக் கொண்டு, எடிட்டிங்கில் வெட்டி ஓட்டினோம்!

ஏன் அவன் அந்த துண்டை பார்த்து சிரிக்கிறான்; ஏன் அதை தூக்கி எறிகிறான் என்று சிலர் கேட்டிருந்தார்கள். இத்தனை காலம் பார்வை இல்லாமல் இருந்ததால் அவன் கணக்குப்படி அந்த இடத்தில் வந்து துணியை காயப்போடுவது வழக்கம். இன்று கண் வந்து விட்டதால், இனி தான் எதை வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் தூக்கிப் போடலாம்,  அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று இறுமாந்து போவது தான் அந்த காட்சி. நான் மிகவும் சொதப்பிய ஒரு காட்சி என்றால் இது தான்.

இந்தக் கதையை பொருத்தவரை, பார்வையாளர்கள் மனதில் கேள்விகளை எழுப்பி விட்டு இறுதிக்காட்சியில் அதை தெளிவு படுத்த விரும்பினேன். அதனால் படம் தொடங்கியதிலிருந்து பார்வையாளர்களுக்கு இது கண்/பார்வை சம்மந்தப்பட்ட படம் என்பதை ஆங்காங்கே ஜாடை காட்டிக் கொண்டே இருக்கும்படி காட்சிகள் அமைத்தேன். [ஒரு படம் எடுத்துட்டு என்னா ஆட்டம்!]

1. டைட்டிலில் "விடியல்" லில் உள்ள புள்ளியின் மேல் கண் இருக்கும்.
2. படம் தொடங்கியதும் ரேடியோவில் ஒலிக்கும் பாடல் "அந்தி மழை பொழிகிறது!"
3. கண் கண்ணாடியை போட நினைப்பவன், அதை இன்றாவது விட்டு விட்டுப் போவோம் என்று நினைத்து எடுத்த இடத்தில் வைப்பது.
4. கதவை திறந்து வெளியே போகும்போது, இத்தனை நாள் தனக்குத் துணையாய் இருந்த அந்த கம்பை ஒரு நொடி பார்ப்பது.
5. தன் நினைவிலிருந்து மறைந்தே போன அந்த சூரிய உதயத்தின் அழகை ரசிப்பது.
6. கண்களை மூடி அலைகளை தரிசிப்பது.
7. ரயிலை பார்ப்பது; இந்த உலகத்தையே புதிதாய் பார்ப்பது.
8. சினிமா பார்ப்பது.
9. ரஜினியை குரல் கொண்டு அடையாளம் சொல்வது!
10. பேருந்தில் பயணச்சீட்டை கூர்ந்து கவனிப்பது; காசை தடவிப் பார்ப்பது [இங்கு முக்கால்வாசி பேர் யூகித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!]
11. இறுதியில், இத்தனை காலம் பார்வை இல்லாமல் எளிதாய் வலம் வந்த சாலையில், பார்வை வந்த பிறகு தடுமாறும் அந்தத் தருணம்! ஒரு பார்வை இல்லாதவனின் உதவியுடன் அந்த சாலையை கடந்து கொள்ளும் அந்த நிமிடத்தில் அவன் மனநிலை..[இந்தக் காட்சியின் உன்னதத்தை நான் சரியாய் திரையில் கொண்டு வரவில்லை என்பதை நான் அறிவேன்!]

எப்படியோ முதல் படம் ஒன்று எடுத்தாகிவிட்டது. முதல் அடி ஒன்றை வைத்தாகி  விட்டது. முதல் படம் என்பதால் என் குறைகளை மன்னித்து நிறைகளை மட்டும் கொஞ்சம்  அதீதமாய் சொல்லி பாராட்டி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நானும் வழக்கமான தமிழ்  சினிமா இயக்குனர்களை போல்  அடுத்த படத்தில் சரக்கு தீர்ந்து ஒரு மொக்கை படம் எடுத்து உங்களிடம்  தர்ம அடி வாங்காமல் இருந்தால் சரி!!
"விடியல்" - என் முதல் குறும்படம். நேற்று தான் இதன் வேலைகள் அனைத்தும் முடிந்தது. இன்று உங்கள் பார்வைக்கு...2014 எனக்கு நன்றாய் விடிந்திருக்கிறது :-)

படத்தை பார்க்கும் "முன் குறிப்புக்கள்":

1. இது என் முதல் முயற்சி. ஒரு மிகச் சில நிறைகளும், பலப் பல குறைகளும் உங்களுக்குத் தெரியலாம். குறையோ நிறையோ, எதுவாயினும் எனக்குச் சொல்லுங்கள். அடுத்த படத்தில் அதை திருத்திக் கொள்கிறேன்! [அடுத்த படம் வேறயா?!]
2. உங்களுக்கு படம் புரியவில்லை என்றால் அது என் குறையே அன்றி உங்கள் குறை அல்ல! [இது எங்களுக்கே தெரியும்!] அதனால் மனம் தளராமல் இரண்டாம் முறை பார்த்து விடுங்கள்!
3. பத்து நிமிட படம் தான். நல்ல ஒரு ஹெட் ஃபோன் இருந்தால் காதில் மாட்டிக் கொண்டு படத்தை பாருங்கள். ["எத்தனை தடவை கூப்பிடறேன், காதுல எதாச்சும் வாங்குறீங்களா?" என்று உங்கள் மனைவி உங்களை திட்டினால் என்னை திட்டாதீர்கள்!]
4. இனி படம்.