பெரும்பாலும் பேய் படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை. [டிவிடியில் பார்த்து தான் பழக்கம்.] என்னமோ அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை. இன்று அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். குரோம்பேட்டை ராகேஷ் 3D ல் அது சாத்தியமாயிற்று.
வழக்கமான ஆள் அரவம் அற்ற பெரிய பங்களாவில் குடியேறும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் குழந்தையுடன் விளையாடும் ஒரு குழந்தை பேய். பேயை பார்த்து குரைக்கும் நாய். இருட்டான பேஸ்மென்ட். மெல்ல திரும்பினால் தெரியும் கோர முகம். ரத்தம் வழியும் கடைவாய். எதுவும் புதிதில்லை. ஆனாலும் கடைசி பதினைந்து நிமிடம் மிரட்டல். காமெரா, இசை அற்புதம். எண்ட் டைட்டில் ஓடும்போதும் பின்னணி இசை பயமுறுத்துகிறது. படத்தை இன்னும் நன்றாய் ரசித்திருக்கலாம் தான், அல்லாததற்கு காரணம் கீழே.
படத்தை பற்றிய பதிவு இல்லை இது. படம் பார்த்த அனுபவத்தை பற்றியது. இரண்டரை மணிக்கு ஷோ. நான் போகும்போது மணி இரண்டரை. கவுண்டரில் ஏகத்துக்கு கூட்டம். ஆன்லைனுக்காக ஒரு தனி கவுண்டர் இருக்கும். அது மூடி இருந்தது. எனக்கு எப்போதும் படம் பார்க்கச் சென்றால் [முன்பு ஃ பிலிம் டிவிஷன், இப்போதெல்லாம்] முகேஷின் விளம்பரத்திலிருந்து பார்க்க வேண்டும். வண்டியை ஒருவழியாய் இண்டு இடுக்கில் நிறுத்தி விட்டு [இந்த தியேட்டரின் பார்க்கிங் வசதியை திட்டி தனி பதிவே எழுதலாம்!] ஓடோடி வந்து கவுண்டரில் வரிசையில் நின்றேன். மர்ஃபீஸ் விதியின் படி வரிசை மிக மெதுவாய் நகர்ந்தது. ஒருவழியாய் கவுண்டரை நெருங்கி "ஆன்லைன் புக்கிங்" என்றதும், "அடுத்த கவுண்டர்" என்று டிக்கட் கொடுப்பவர் சர்வ சாதாரணமாய் சொன்னார். எனக்கு எரிச்சலாய் வந்தது. திட்டிக் கொண்டே அடுத்த கவுண்டரில் வரிசையில் நிற்குமுன் "இது ஆன்லைன் கவுண்டரா" என்று கேட்டுக் கொண்டேன். டிக்கட் கொடுப்பவர் கண்டுகொள்ளவேயில்லை. வரிசையில் நின்றவர்கள், "க்யுவுல வந்து நில்லுங்க, இந்த கவுண்டர் தான்" என்று ஒரு சிலர் தங்கள் கையில் உள்ள கை பேசியை காட்டினார்கள். வரிசையில் கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது ஆகும். வரிசையில் எரிச்சலாய் நின்ற நான், கடுப்பாகி நேரே உள்ளே சென்றேன். "ரெண்டு முப்பது படத்துக்கு ஆன்லைன் டிக்கட் வச்சுருக்கேன். இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள், ஏன் ஒரு தனி கவுண்டர் இல்லை?" என்று ஒருத்தரை கேள்வி கேட்டேன். அவர் இன்னொருத்தரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார். "எஸ்.எம்.எஸ். இருக்கா?" என்று கேட்டார் அவர்! காட்டினேன். "சரி மேலே போய், மோகன் அனுப்பினாருன்னு சொல்லிட்டு உள்ளே போங்க, படம் போட்டாச்சு" என்றார். நான் ரொம்ப நன்றி என்று சொல்லி, "அப்போ அவங்க எல்லாம்" என்று வரிசையில் உள்ளவர்களை காட்டினேன். அவர், "சார், ஒருத்தருக்கு பண்ணலாம் எல்லாருக்கும் பண்ண முடியுமா?" என்றார். "இல்லை சார், தனியா ஒரு கவுண்டர் போடுங்க" என்று சொன்னேன். "செய்றோம், நீங்க மொதல்ல போங்க சார் படம் போட்டாச்சு" என்று என்னை அனுப்பி விட்டார். நான் கேட்டேன், கிடைத்தது; பாவம் மற்றவர்கள்!
அரங்குக்குள் நுழைந்தேன். படம் போட்டிருந்தார்கள். ஒரு காட்டில் ஒரு பெரிய தனி வீடு என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். யாவரும் நலம் படத்தில் வருவதை போல் "அபார்ட்மெண்ட்டில் பேய்" என்று இவர்கள் எப்போது படம் எடுப்பார்களோ தெரியவில்லை. இடம் பிடித்து உட்கார்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பேய் படங்களில் வரும் வழக்கமான பின்னணி இசை இல்லாத, அமைதியான மெதுவான காமெரா நகர்வு. அடடா..ஆரம்பிச்சுட்டாங்களே என்று பயப்பட தயாரானால், அவ்வளவு தான், அரங்கில் தான் நம் வீர சூரப் புலிகள் இருக்கிறார்களே. "அம்மா, பூச்சாண்டி, பே, போச்சு, ஐயோ போகாதே" என்று ஆளாளுக்கு பின்னணி கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மாதிரி பேய் படங்களில் அந்த மாதிரி திகில் தருணங்களை ரசிக்க வரும் என் போன்ற ரசிகர்களுக்கு அது எத்தகைய எரிச்சலாய் இருக்கும் என்று அவர்கள் ஏன் கவலைப்படப்போகிறார்கள்! இந்த அழகில் டிக்கட் சரிபார்த்து உட்கார வைப்பவர் "சத்தம் போடாம படம் பாருங்க" என்று இரு முறை சொல்லி விட்டு போய் விட்டார் [ஒரு முறை அவரே, இரண்டாவது முறை நான் முறையிட்டு!]. இதை விட என்ன செய்ய முடியும்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வார்கள். மாட்டுக்கே ஒரு சூடு தாண்டா! நீங்க எல்லாம் மனுஷங்க இல்ல?
வீட்டில் குடும்பத்துடன் டிவிடியில் பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் தியேட்டரில் வந்து மற்றவர்களின் சுவாரஸ்யங்களையும் கெடுக்கிறார்கள். ஒருவன் கமெண்ட் அடித்தால் போதும், தேவையில்லாமல் சிரிப்பது, குசுகுசுப்பது, கத்துவது என்று தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் கத்துவது மட்டுமல்லாமல் கைபேசி தொல்லைகள் வேறு. வித விதமான ரிங் டோன்கள் ஹை டெசிபல் சத்தத்தில் தாங்க முடியவில்லை. நான் பார்த்த வரை பேய் படம் பார்க்கும்போது நம்மவர்களின் நடத்தையே மாறி விடுகிறது. முன் எப்போதுமில்லாத வீரம் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது. நான் எல்லாம் யாரு, வீரன், தீரன், சூரன், இதெல்லாம் ஒரு சப்பை படம், நான் எல்லாம் இதுக்கு பயப்படுவேனா என்பது போன்ற ஒரு நடத்தை/பீத்தல்! அதிலும் ஒரு பெண் பக்கத்தில் இருந்தால் போதும், அந்த பீத்தல் டபுள் மடங்காகிவிடும். எனக்கு என்னமோ, அந்த மாதிரி அழுச்சாட்டியம் செய்து கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த ஒவ்வொருத்தனையும் இப்படி ஒரு ஹான்டிங் ஹவுசில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று தோன்றியது. இயக்குனர் பாலா ஒரு பேட்டியில், "நான் தியேட்டர் போய் படம் பாக்குறதே இல்லை, படம் பார்க்கும்போது செல்ஃபோன்ல பேசுறவனை பார்த்தால் அங்கேயே அரையனும் போல இருக்கு, அதுக்கு பயந்தே நான் போறதில்லை" என்பது போல் சொல்லி இருந்தார். சரியாய் தான் சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை இந்தியர்களை ஒரே வரியில் விமர்சிக்க வேண்டும் என்றால் கவுண்டமணி சொன்ன "சாகும்போதும் அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்காம சாக மாட்டானுங்கடா" அந்த ஒரு டயலாக் போதும். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வாசகம்!
எல்லா எரிச்சலையும் தாண்டி ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தில் அதிகாலை சரியாய் 3:07 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து கடிகாரங்களும் நின்று விடும். காரணம், அந்த நேரத்தில் தான் அந்த வீட்டில் இருந்த பெண்மணி தூக்கு மாட்டி இறந்திருப்பார். படத்தின் இடைவேளையில் என் மனைவி தன் கைபேசியை எடுத்து பார்த்தார். அதில் மணி சரியாய் 2:33 ல் நின்றிருந்தது!