மற்றொரு பிறந்தநாள். வருடம் தவறாமல் என்னை வாழ்த்த வந்து விடுகிறது. இப்போதெல்லாம் பிறந்த நாள் வந்தாலே, எனக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது. அந்த நாள் முடிவதற்குள் உலகம் அழியாமல் இருக்க வேண்டும்,பூகம்பம் வராமல் இருக்க வேண்டும், சுனாமி சுழற்றி அடிக்காமல் இருக்க வேண்டும், தீவிரவாதிகள் எந்த கோபுரத்தையும் தகர்க்காமல் இருக்க வேண்டும், எந்த ரயிலும் கவிழாமல் இருக்க வேண்டும், சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் வெடிக்காமல் இருக்க வேண்டும், எந்தக் குழந்தையும் பேருந்தின் ஓட்டையில் விழுந்து சாகாமல் இருக்க வேண்டும்...இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்! இப்படி ஒரு பயம் எனக்கு.அப்படி ஏதேனும் நடந்தால் காலத்துக்கும் அந்த வடுவை யார் சுமப்பது? பிறகு பிறந்த நாளை கொண்டாட மனம் வருமா? செப்டம்பர் 11 அல்லது டிசம்பர் 6 ல் எனக்கு பிறந்தநாள் என்று யாராவது உங்களிடம் சொன்னால் உங்களுக்கு அவரை வாழ்த்தத் தோன்றுமா? அந்த நாளில் மரித்த ஆயிரம் ஆயிரம் பேர் தானே நினைவுக்கு வருவார்கள்? ரொம்ப நெகட்டிவாய் யோசிக்கிறேன் என்று தெரிகிறது, உங்களுக்கு இப்படி எல்லாம் யோசனை வருமா? இது வரை வரவில்லை என்றாலும் இனிமேல் வரும் என்று நம்புகிறேன், ஏதோ என்னால் முடிந்தது!
எனக்கு பெர்த்டே பார்ட்டி என்றால் அலர்ஜி. அலுவலகத்தில் மாதத்திற்கு ஒரு முறை அந்த மாதத்தில் பிறந்த அத்தனை பேரையும் வரிசை கட்டி நிறுத்தி வைத்து கேக் வெட்டச் சொல்வார்கள். அதை பார்த்து எல்லோரும் கை கொட்டி சிரிப்பார்கள். தேவையே இல்லாமல் பேசுவார்கள், மொக்கை போடுவார்கள். செல்போனில் சுற்றி சுற்றி படம் எடுப்பார்கள், பிறகு அந்த படத்தை நீங்கள் பார்க்கவே முடியாது! கொஞ்சம் நெருங்கிய நண்பர்களாய் இருந்தால் கன்னத்தில் கேக்கை தடவி விடுவார்கள். அப்புறம் ட்ரீட் என்று அன்று பிறந்தவனை படுத்தி எடுப்பார்கள். என்னிடம் கேட்டால் எதுக்கு ட்ரீட் என்பேன்? நீ பொறந்ததுக்கு நாங்க என்ஜாய் பண்றோம்ல என்பார்கள். நான் பொறந்ததுக்கு நானும் என்ஜாய் பண்ணணும்ல, இத்தனை பேருக்கு ட்ரீட் கொடுத்தா நான் எப்படி என்ஜாய் பண்றது என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.
என் மனைவிக்கு பிறந்த நாள் என்றால் கொள்ளை பிரியம். அது என்னவோ, ஆண்களை விட பெண்களுக்கு இதிலெல்லாம் கொஞ்சம் இஷ்டம் அதிகம் போலும். நேற்றே எனக்குத் தெரியாமல் கேக் எல்லாம் ஆர்டர் செய்து திடீரென்று இரவு என்னை வெட்டச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினாள். வீட்டில் உள்ளவர்கள் அபஸ்வரமாய் பாட வேறு செய்தார்கள்! எனக்கு கூச்சமாய் இருந்தது!! வெளியில் தெரிந்தால் சங்கட்டமா இருக்காது?
இன்று பொழுது வழக்கம் போலவே புலர்ந்தது. மனைவியுடன் நங்கநல்லூர் வரை போக வேண்டிய வேலை இருந்தது. காரில் செல்லும்போது வேகத்தடைக்கு வேகம் குறைத்தால் பின்னால் காரில் வருபவன் ஹார்ன் அடிக்கிறான். கண்ணாடி வழியாய் பார்த்து என் நிலையை சொன்னேன்.அவர் கையை ஆட்டி ஆட்டி தான் வீட்டில் போட முடியாத சண்டை எல்லாம் அந்த இரண்டு நொடியில் போட்டார். எனக்கு இன்று பிறந்தநாள் என்று சைகை எல்லாம் செய்தேன், அவருக்கு புரிந்தது என்று தான் நினைக்கிறேன். அவரின் சைகையை பார்த்தால் அவ்வளவு அசிங்கமாய் திட்டவில்லை என்று தான் எனக்குப் பட்டது. ஒரு வழியாய் போகும் இடம் சென்று சேர்ந்தோம். ஆளில்லாத செருப்பு ரேக்கில் செருப்பை பார்க் செய்து விட்டு நேராய் ஆஞ்சிநேயர் கோவிலுக்கு போனோம். இந்தப் பாழும் மனம், ஆஞ்சிநேய தரிசனத்தை விட, அந்தக் கோயிலின் வடையின் தரிசனத்தையே எதிர் நோக்கி இருந்தது. ஆஞ்சிநேயர் நல்ல ஜிம்பாடியுடன் விஸ்வரூபக் காட்சி அளித்தார். திவ்ய தரிசனம். கோயிலின் அந்தப் பக்கம் பிரசாத வரிசை ஆரம்பித்து விட்டது. அடித்து பிடித்து போய் நின்றால் இன்று வடையை காணவில்லை, ஒரு தொன்னையில் வெண்பொங்கல் கொடுத்தார்கள்! இந்த இடத்தில் கட்டாயமாய் இதை சொல்லி ஆக வேண்டும்..."வடை போச்சே!" பொங்கல் சுவையாய் தான் இருந்தது. என்னமோ,என் பிறந்த நாளின் காரணமாக என்றும் வடை சுட்டு எண்ணையில் காய்ந்தவனுக்கு இன்று ஒய்வு போலும், வாழ்க என்று நினைத்து பொங்கலை சுவைத்தேன். கை கழுவி விட்டு செருப்பை தேடினேன். புதிதாய் வித விதமாய் செருப்புக்கள் இருந்ததே தவிர என் செருப்பை மட்டும் காணோம்! என் மனைவி செருப்பு பக்கத்தில் போட்டது போட்டபடி இருக்கிறது, என் செருப்பை காணோம்! எனக்கு சிரிப்பாய் வந்தது. பிறந்த நாள் அதுவுமா இப்படியா ஒரு மனுஷனுக்கு சோதனை? ரோட்டில் போற வர்றவன் எல்லாம் நோட்டம் விட்டேன். யாரிடமும் என் செருப்பு இல்லை. எனக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிந்து தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது. அந்த இடத்தில் மூன்று பேருக்குத் தான் எனக்கு இன்று பிறந்தநாள் என்று தெரியும். ஒன்று எனக்கு, நானே என் செருப்பை திருட வாய்ப்பில்லை. இன்னொன்று என் மனைவிக்கு, அவள் திருடி என்ன செய்யப் போகிறாள் பாவம்...மூன்றாவது ஆஞ்சினேயருக்கு, எனக்கு என்னமோ அவர் மேல தான் மைல்டா ஒரு டவுட்டு...சரி ஒருத்தனுக்கு இன்று செருப்பு தானம் கொடுத்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.
எது எப்படியோ, பூகம்பம் வரவில்லை, சுனாமி வரவில்லை, உலகம் அழியவில்லை! இந்த மாதத்தின் பதிவு வேறு போட்டு விட்டேன். இதை விட வேறு என்ன விசேஷம் வேண்டி இருக்கிறது? பிறந்த நாள் இனிதே நிறைவுற்றது!!