மாத ஆரம்பத்தில் ஒரு பதிவு, மாதக் கடைசியில் ஒரு பதிவு! எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.  விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம்.  நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை! கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம்! [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு! ஒரு பதிவுக்காச்சு!

1  படத்திற்கு கீழே என் பெயர் இருப்பதால், SELF PORTRAIT ஆ என்று கேட்டு விடாதீர்கள்.  படத்தை வரைந்தது தான் நான்!

2 கீழுள்ள கண்கள் என் மனைவியின் கை வண்ணம்! பொன்னியின் செல்வன் எஃபெக்ட் !




எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது வழங்கப்பட்டதற்காக உயிர்மை ஒரு பாராட்டு விழா...மன்னிக்கவும், மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தியது! அந்த பாராட்டு விழா "பெரிய" என்பதிலிருந்து "மிகப்பெரிய" என்று ஆனதற்கு சூப்பர் ஸ்டார் அங்கு வந்து சிறப்புரை ஆற்றுவதன் காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இதை பற்றி அன்றிரவே எழுதி இருக்க வேண்டும். மறுநாள் எழுத ஆரம்பித்து இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் வாசித்தால் பதிவேறிவிட்டது என்று தானே அர்த்தம்! முதலில் இந்த நிகழ்வை பற்றி எஸ். ராவின் வலைதளத்தில் பார்த்த போதே, ரஜினிக்கும் இந்த விழாவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேள்வி எழுந்தது! அந்தக் கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது என்று விழாவில் தெரிந்தது. அதற்கு ரஜினியும் தகுந்த விளக்கமளித்தார்.
 
அந்த விழாவில் ராமகிருஷ்ணனின் இலக்கிய ஆசான் எஸ். ஏ. பெருமாள், இறையன்பு [ஏன் இவர் பெயர் சொல்லும்போது கூட எல்லோரும் "ஐ.ஏ.எஸ்" சேர்த்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை], வைரமுத்து, கு. ஞானசம்மந்தம், விஜயசங்கர் என்று பலர் வந்திருக்க, அந்த விழாவின் கதாநாயகன் உட்பட எல்லோரையும் தூக்கி எரிந்தது சூப்பர் ஸ்டார் என்னும் ரஜினி அலை! ஒரு மனிதனால் இத்தனை புகழை எப்படி தாங்க முடிகிறது என்று தெரியவில்லை. புகழ் என்பது ஒரு மனிதனுக்கு வரம் என்றால், அது ரஜினிக்கு சாபம் என்று தான் சொல்ல வேண்டும்!
 
நான் சென்னை வந்ததிலிருந்து இது வரை மூன்று முறை ரஜினியை பார்த்தேன். எழுத்தாளர் சுஜாதாவின் அஞ்சலியின் போது, வாலியின் ஆயிரம் பாடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில், நேற்று இந்த விழாவில். அது என்ன நிகழ்ச்சியாக இருக்கட்டும், எந்த வித சூழ்நிலையாக இருக்கட்டும். அவர் அந்த இடத்தில் வந்தவுடன் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. காலம் ஒரு நிமிஷம் அப்படியே உறைந்து விடுகிறது. அதை நான் கண் கூடாக  காண்கிறேன். சுஜாதாவின் உடலை அவர் அஞ்சலி செய்ய அங்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடத்திற்கும் குறைவு! ஆனால் அந்த நேரத்தில் அங்கு நிலவிய மௌனம் ஆயிரம் வருடங்கள் கடந்தது!
 
ரஜினி இருக்கும் மேடையில் வேறு ஒருவர் கதாநாயகனாய் இருக்க முடியாது! அது தான் உண்மை. நேற்று நடந்த விழாவில், இயல் விருது என்றால் என்ன? யார் கொடுக்கிறார்கள்? எப்போதிருந்து கொடுக்கிறார்கள்? இது வரை யாருக்கெல்லாம் அது வழங்கப்பட்டிருக்கிறது என்று எந்த விபரமும் சொல்லப்படவில்லை. அது அங்கே தேவைப்படவுமில்லை. காரணம் சூப்பர் ஸ்டார்! ரஜினி படத்தில் யார் நடித்தாலும் ரஜினியையே நாம் பார்ப்பது போல், ரஜினியே நேரில் அமர்ந்திருக்கும் போது யாரை யார் பாராட்டினால் என்ன? பேச வந்தவர்களில் யார் "சூப்பர் ஸ்டார்" என்று பேச்சை தொடங்கினாலும் அப்படி ஒரு உற்சாகம், துள்ளல், கை தட்டல், ஆரவாரம்! ஒரு முறையல்ல, ஒவ்வொரு முறையும்! 
 
இன்றைய ரஜினியை பார்த்தால் ஒரு சாயலுக்கு சி. ஜே. பாஸ்கர் போல் இருக்கிறார். சற்று மெலிந்திருக்கிறார். இன்றும் தமிழை தத்தக்க புத்தக்க என்று தான் பேசுகிறார். எல்லா மொழிகளும் அரைகுறையாய் தெரிவதால் எதில் பேசுகிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது என்று அவரே காரணமும் சொல்கிறார். தான் புத்திசாலி இல்லை, தான் அதிகம் படித்தவனில்லை, இங்கிலீஷ் ஃப்ளுயன்சி கிடையாது என்று, அவருக்கு இது தெரியும் என்பதை விட தெரியாது என்று தான் அதிகமாய் பேசுகிறார். அது தான் உண்மையும் கூட! ஆனால் அவர் என்ன பேசினாலும் கூட்டம் தன்னை மறந்து கை தட்டி ரசித்து ஆரவாரிக்கிறது! உண்மையில் ஒன்றுமே தெரியாதவனுக்கு இத்தனை புகழ் வந்தால், ஆரம்பத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று தான் சொல்வான். அதுவே, நாள் ஆக ஆக மேலும் மேலும் எல்லோரும் அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தால், ஒரு வேளை, எல்லோரும் சொல்வது நிஜம் தான் போலிருக்கிறது, நான் பெரிய ஆள் தான் போலிருக்கிறது என்று சிறிதாவது தலையில் ஏறி விடும்! ஆனால், ரஜினி எப்படி இன்னமும், இந்தப் புகழ் தன்னுடையது இல்லை, நான் ஒன்றும் செய்யவில்லை என்று தன்னைத் தானே தன் தலையில் தட்டி சமாளிக்கிறார் என்று தெரியவில்லை! அது தான் ஆச்சர்யம்! ஒரு வேளை அந்த வேலையை அவர் நாடும் ஆன்மிகம் செய்கிறதோ என்னமோ? [அதே ஆன்மீகத்தை நாடும் இளையராஜா அப்படி இல்லையே?!] 

விழாவில் எஸ். ரா வின் இலக்கிய ஆசான் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தும், அவரைப் பற்றி அவர் ஒன்றுமே சொல்லாமல், ரஜினி தான் தன்னை வளர்த்தது போல் எஸ். ராவே பேசினார்! ம்ம்..எஸ். ராவை சொல்லிக் குற்றமில்லை. ரஜினியை வைத்துக் கொண்டு யாரும் வேறொருவரை புகழ முடியுமா? அது படத்தில் எம்.ஜி.ஆர் செத்துப் போவது போல் ஆகி விடும்! மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே!

விழா முடிந்து வெளியே வந்தேன். வெள்ளை சட்டை வெள்ளை பான்ட்டுடன் ஒருவர் என்னை கடந்து சென்றார். அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. ரஜினியை வைத்து இருபத்தைந்து படங்கள் இயக்கி இன்றும் அவர் இப்படி ஒரு மாஸ் ஹீரோவாய் இருக்கக் காரணமானவர்! 

அவர் தான் எஸ். பி. முத்துராமன்! அது தான் சினிமா!

வீட்டிற்கு வந்து டீ.வி. போட்டால், ரஜினி பேசியது ஃப்ளாஷ் நியுஸில் வருகிறது!

அது தான் ரஜினி!

பின் குறிப்பு : விழாவுக்கு சூப்பர் ஸ்டார் மட்டுமில்லை, பவர் ஸ்டாரும் வந்திருந்தார்! ரசிகர்கள் அவரை மொய்த்துக் கொண்டு ஆர்ப்பரித்தது பார்த்து என் உடல் சிலிர்த்தது!