கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழையுடன் உலக இலக்கியத்திலும் நனைந்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரும், ஜெயகாந்தன்/புஷ்கின் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய இலக்கிய கொண்டாட்டத்தை பற்றி சொல்கிறேன். கடந்த 21 ம் தேதி தொடங்கி நேற்று வரை வெகு விமர்சையாக, அரங்கு நிறைந்த நிகழ்வாகவும் மிக நெகிழ்வாகவும் நடந்தது. 7 நாட்களில் 7 சிறந்த உலக இலக்கியங்களை நாளொன்ராக அறிமுகம் செய்து வைத்து அதைப் பற்றி மிக விரிவாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்கள்.
1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரனீனா
2. தாச்தாவேய்ச்கியின் குற்றமும் தண்டனையும்
3. பாஷோவின் ஜென் கவிதைகள்
4. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்
5. ஹோமரின் இலியட்
6. 1001 அரேபிய இரவுகள்
7. ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்
முதலில் இப்படி ஒரு நிகழ்வை பற்றி அவரின் வலைதளத்தில் படித்ததும் என்னைப் போன்ற இலக்கிய உபாசகனுக்கு [அல்லது அப்படி சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கு] ஒரு நல்ல அறிமுக நிகழ்ச்சியே இருக்கும் என்று பட்டது. மேலும் இது ஒரு புது வித அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சி சரியாய் திங்கள் [கவனிக்க MONDAY] மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிறு வரை நீள்கிறது. ஏன் இந்த மாதிரி நிகழ்வை வார இறுதிகளில் வைக்காமல் வார நாட்களில், சென்னையின் மையத்தில், அதுவும் 6 மணிக்குத் தொடங்குகிறார்கள்? எத்தனை பேர் அலுவலகத்தை முடித்து இதில் கலந்து கொள்ள முடியும் என்று ஒரு வித எரிச்சல் வந்தது. அதிலும், என்னை போல் ஐ. டி யில் வேலை செய்பவனுக்கு வார நாட்களில் மாலை 6 மணி அலுவலகத்தை விட்டு வெளியே வருவது என்பது கனவில் தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் நான் வேலை பார்க்கும் இடமான தாம்பரம் சாநிடோரியதிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்வதற்கு நான் திங்கள் கிளம்பினால் ஞாயிறு வந்து விடும். சரி, ஏதோ முடிந்தவரை முயற்ச்சிப்போம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அதிர்ஷ்டம் என் பக்கம் தான். ஏழு நாட்களில் ஒரு நாள் தவிர்த்து அத்தனை நாட்களிலும் அடாத மழையிலும் விடாது சென்று விட்டேன். யாருமே இருக்க மாட்டார்கள் என்று நான், ஏன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் நினைத்ததை உடைத்து எல்லா நாளும் அரங்கு நிறைந்த நிகழ்வாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் இங்கு அப்படியே சொல்ல போவதில்லை, அது முடியாது. நாளுக்கு இரண்டு மணி நேரம் என்று இந்த ஏழு நாட்களுக்கு பதினான்கு மணி நேரம் குறையாமல் பேசி இருக்கிறார் எஸ். ரா. இப்போது தான் அவர் எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மனிதரிடம் பொங்கி வழிகிறது. அவரின் சொற்பொழிவை புத்தக வடிவமாகவும், சீடி, டீவிடீ வடிவமாகவும் கொண்டு வர போவதாக சொன்னார்கள்.
தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் பதிவிட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அனைத்தையும் சேர்த்து நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்.
நிகழ்ச்சியில் கிடைத்த சில அறிய தகவல்கள்/முத்துக்கள்: [என் நினைவுப் பெட்டகத்திலிருந்து]
1. இந்தியாவில் ஆங்கில மோகம் இருப்பது போல் அப்போது ரஷ்யாவில் ஃபிரெஞ்ச் மோகம் இருந்தது. ஃபிரெஞ்ச் கலாச்சாரம் நாகரீகம் பிரதானப்படுத்தப்பட்டது.
2. ஆண் வீட்டை கட்டுகிறான். பெண் அதற்கு உயிர் தருகிறாள் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
3. உங்கள் அறை எப்போதும் ஒரு வீடாகாது. அறையிலிருந்து வீட்டுக்கு எப்போது போகலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும், நமக்கான அறையை தேடி ஒடுங்கி கொள்கிறோம்.
4. அன்னா கடைசியில் ஒரு நீச்சல் குளத்தில் குதிப்பதை போல் ரயிலின் முன் விழுகிறாள்.
5. நான் உங்களை இங்கு பார்த்துக் கொண்டிருப்பதை போல் நீங்கள் இல்லாதிருப்பதை உங்கள் வீட்டில் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பை போல் இல்லாதிருப்பதையும் உணர முடிகிறது.
6. ஜென் கவிதைகளின் மரபு அதில் ஒரு அக விழிப்பு/தரிசனம் இருக்க வேண்டும்.
7. ஒரு மரமானது ஒரு மெல்லிய பூவினை கொண்டுள்ள அதே சமயத்தில் அதன் வேர்கள் பாறையையும் உடைக்கும் தன்மை கொண்டுள்ளது.
நிகழ்வில் படிக்கப்பட்ட சில ஜென் கவிதைகள்:
திருடன்
விட்டுச் சென்றிருக்கிறான் -
ஜன்னலிலுள்ள
நிலவை
இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே, மலர்கிறது
ஒரு தாமரை
திமிங்கலம்!
ஆழ ஆழ அது
செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
கோவில் மனிமேல்
ஓய்வெடுக்கும்
வண்ணத்துப் பூச்சிக்கு
நல்ல உறக்கம் -
மணி ஒலிக்கும் வரை.
உதிர்ந்த மலர்
திரும்புகிறதோ கிளைக்கு?
அது, வண்ணத்துப் பூச்சி
மட்சுஷிமா -
ஆ, மட்சுஷிமா!
மட்சுஷிமா!
மட்சுஷிமா என்பது ஜப்பானில் சமுத்திரக் கரையோரமுள்ள, மலைகளும், நதிகளும், மரங்களும், மலர்களும் உள்ள ஓர் இடம். அங்கு நின்று கொண்டு பாஷோ இந்த ஜென் கவிதையை பாடுகிறார். முதலில் அந்த இடத்தை பார்த்து பிரமித்து அதன் பெயர் சொல்கிறார். இப்போது அந்த இடம் அவர் கண்களில் நிறைந்து விட்டது. அதன் ஆச்சர்யத்தை பாடுகிறார். இப்போது அவருக்குள்ளும் இன்னொரு மாட்சுஷிமா!
சும்மா உட்கார்ந்
திருக்கிறது அமைதியாய்.
புல்
தானே வளர்கிறது
வசந்தம் வருகிறது
ஒரு வெட்டுக் கிளி இறகசைக்கிறது
ஒரு மலையின் மௌனம் கலைகிறது
ஒரு ஜென் கதை:
குருவே, இந்த வானம், பூமி, கடல், அருவி இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
"உன் வாயிலிருந்து வந்தன! வானம், பூமி எல்லாம் சொற்கள், அது அவைகள் அல்ல"
1. ஜப்பானில் இன்றும் ஒருவிதமான யானை பொம்மை பிரசித்தம். ஏனென்றால் ஜப்பானில் அப்போது யானைகள் இல்லை. யானையை பார்க்காதவன் ஒருவன் வடித்த பொம்மை அது.
2. எழுதும்போது ஏதேனும் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் தவித்தால் உங்கள் பால்ய காலத்திற்குச் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு அது நிச்சயமாய் கிடைக்கும்.
3. சொற்கூட்டங்கள் மேகத்தை போல என்னை கடந்து செல்கின்றன, அதிலிருந்து எனக்குத் தேவையான சொல்லை நான் எடுத்துக் கொள்கிறேன் - தேவதச்சன்
4. ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்திற்காக இரண்டாயிரம் சொச்ச வார்த்தைகளை கொடுத்திருக்கிறார். Advertisement, Accomodation போன்றவை அவைகளுள் அடக்கம்.
5. ஒரு எழுத்தாளரிடம் உலகத்தில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் "ஷேக்ஸ்பியர்", ஏனென்றால் அவர் ஒருவர் இருந்தால் அவரே மற்ற அனைவரையும் கதாப்பாத்திரங்களாக உருவாக்கி விடுவார்! என்று சொன்னார்.
6. ஷேக்ஸ்பியர் வரலாறு கூறாமல் ஒரு விஷயத்தையும் சொல்வதில்லை.
7. ஷேக்ஸ்பியரின் மேக்பெத், அதை தழுவி ரோமன் போலன்ஸ்கி, விஷால் பரத்வாஜ் [மக்பூல்] போன்றோர்களால் திரைப்படமாய் எடுக்கப் பட்டது.
8. ஹோமரின் இலியட் நம் மகாபாரதம்/இராமாயணத்தை ஒத்திருக்கிறது, அதன் சம்பவங்கள் உட்பட...
9. மகாபாரத்ததிலிருந்து எந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியும், எதை எடுக்க முடியாது? என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வியாகும். அதற்கு நான் சொன்ன பதில், மகாபாரதத்திலிருந்து பீஷ்மரை எடுக்க முடியாது. பாஞ்சாலியை எடுத்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது! பாஞ்சாலி இல்லையென்றாலும் பாரதம் இருக்கும். பாஞ்சாலி வெறும் பகடைக் காய் தான்.
10. "சப்தமே இல்லாத நடை என்றால் அது சகுனி தான்" என்பார் திருதிராஷ்ட்ரர்!
11. உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டால் எதிரியின் கூடாரத்தில் கூட நீங்கள் நிம்மதியாய் உறங்குவீர்கள், ப்ரியம் அகிலஸின் கூடாரத்தில் உறங்குவதை போல...
12. இலியட் அகிலஸின் புகழ் பாடுகிறது. ஒடிஸ்ஸி யுலிசிஸின் புகழ் பாடுகிறது.
13. அலிபாபாவும், அலாவுதீனும் எல்லோரும் கேட்டும், படித்தும் இருக்கிறோம், அனால் அவைகள் 1001 இரவுகள் கதைகளில் வருகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.
14. ஷெஹெரஷா, ராஜா சாரியாருக்கு 1001 இரவுகளை கதை சொல்லியே நகர்த்துகிறாள். அதன் மூலம் சாவை தள்ளிப் போடுகிறாள். கதை சொல்லி நாமும் சாவைத் தள்ளிப் போடுவோம்.
15. கடவுள் மனிதனை படைத்தான், பின்பு மனிதன் கடவுளை படைத்தான்! - புதுமைப்பித்தன்
16. Army is Men without Women - Hemingway
17. ஹெமிங்க்வே ஒரு மிகச் சிறந்த வேட்டைக்காரர் [சிங்கம் ஒன்றை தனி ஆளாய் வேட்டையாடியவர்], உல்லாசி, சல்லாபி, பெரிய குடிகாரர், ஊர் சுற்றி, வாழ்வை கொண்டாடியவர். 127 முறை விபத்தில் அகப்பட்டு பிழைத்தவர்.
18. காளைச் சண்டை பார்க்கச் சென்ற ஹெமிங்க்வே அங்கு ஒருவன் நாள் முழுதும் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரின் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அந்தக் காளையின் மூர்க்கம்/வலிமை அத்தனையும் உன் கோடுகளில் இருக்கிறது! நீ யார் என்று கேட்டார், அதற்கு அவர் நான் தான் பாப்லோ பிகாசோ என்றார்.
19. கிழவனும் கடலும் நாவல் வெறும் நூறு பக்கங்களே கொண்ட நோபல் பரிசு பெற்ற நாவல். அதில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. பெண்களே இல்லாத நாவல் இது.
20. வெற்றி தோல்வி என்பதை வெற்றி, சிறிய வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். விளையாட்டில் கலந்து கொள்ளாதவர்களே தோற்றவர்கள்!