"நீங்க எவ்வளவு எவ்வளவு எவ்வளவு எதிர்பார்க்கிறீங்களோ, அவ்வளவு மேல, மேல, மேல இருக்கும்!" என்று சொல்வதற்கு நிச்சயம் தன் ஸ்க்ரிப்டில் அசகாய நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகளுடன் களம் இறங்கி இருக்கிறது ஏழாம் அறிவு!
கதை:
ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் யோகி போதிதர்மன். அவர் தற்காப்புக் கலையிலும், மருத்துவத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பல்லவ மன்னனின் கட்டளைப்படி கால் நடையாக சீனாவுக்கு சென்று அங்கு தன் திறமைகளை சீனர்களை கற்றுக் கொடுத்து அங்கே உயிர் துறக்கிறார். அன்று ஒரு தமிழனிடம் கற்ற வித்தையை இன்று இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த திட்டம் தீட்டுகிறது சீனா. அந்த திட்டத்தை அழிக்க, போதிதர்மனின் திறமைகளை அவரின் வம்சாவழியில் வந்த அரவிந்தனிடம் [சூர்யா] உயிர்ப்பிக்கிறார் சுபா! [ஸ்ருதி].
கார சாரமான அக்மார்க் மசாலா கதை. வழக்கம் போல் முருகதாஸ் மிக புத்திசாலித்தனமாய் திரைக்கதை அமைத்திருக்கிறார். இரண்டு வருடம் ஸ்க்ரிப்டில் உழைத்ததாக கேள்விபட்டேன். போதிதர்மன் என்ற ஒருவரை மட்டும் தெரிந்து கொண்டு அவரை சுற்றி இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை பின்ன நிச்சயம் திறமை வேண்டும். அது முருகதாஸிடம் நிறைய இருக்கிறது. என்ன அருமையான கதையாக இருந்தாலும், திரைக்கதை சுவாரஸ்யமாய் இல்லாவிட்டால் படம் சலித்து விடும். அதை மிக அருமையாய் புரிந்து கொண்டிருப்பவர் முருகதாஸ். ரமணாவாகட்டும், கஜினியாகட்டும், ஏழாம் அறிவு ஆகட்டும், எல்லாவற்றிலும் சீனுக்கு சீன் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை. அதே போல், முருகதாஸின் கதாநாயகிகள் டூயட் பாட மட்டுமில்லாமல், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாய் இருப்பது ஒரு ஆறுதல்! இந்தப் படத்தில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கத் தான் செய்கிறது. போதிதர்மன் சம்மந்தப்பட்ட காட்சிகள், வாய்ஸ் ஓவரில் கதை சொல்வது ஏதோ ஒரு டாக்குமெண்டரி ரேஞ்சுக்கு ஆகிவிடுகிறது. அதை தவிர்த்து காட்சிகளின் வழியே கன்வே செய்திருக்கலாம் என்று தோன்றியது. அதே போல், இந்த மாதிரி படங்களில் காதல் பகுதிகளை இரக்கமில்லாமல் தவிர்க்கலாம்! கதாநாயகன், கதாநாயகி என்றால் அவர்கள் காதலித்தே ஆக வேண்டும், அதற்காக ஃபாரின் லொகேஷன் டூயட்டுகள் பாடியே ஆகவேண்டும் என்பதை தமிழ் சினிமா இயக்குனர்கள் நிறுத்தியே ஆக வேண்டும்! இந்தப் படத்தில் அறிமுக பாடலும், காதல் காட்சிகளும், டூயட் பாடல்களும் மிகப் பெரிய தொய்வை உண்டாக்குகின்றன. "எம்மா எம்மா காதல் பொன்னம்மா, நீ என்ன விட்டு போனதென்னம்மா?" வரிகளே சரியில்லை. கதைப்படி, சுபா அரவிந்தனை காதலிக்கவே இல்லை, அதற்குள் எப்படி "நீ என்ன விட்டு போனதென்னம்மா?" என்று பாட முடியும்? அப்புறம் டையலாக் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். மற்ற இயக்குனர்களை போல், இவரும் யாராவது எழுத்தாளரை துணைக்கு அழைத்திருக்கலாம்! போதிதர்மன் கதையில் தமிழ், வீரம், ஈழம் என்று லேசாய் தொட்டுச் சென்றிருக்கிறார். இப்படி ஒரு கமர்சியல் படத்தில் ஈழத்தை பற்றி போகிற போக்கில் பேசுவதை விட, அதைப் பற்றி ஆழமான பார்வையுடன் ஒரு படைப்பை முன் வைப்பது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சூர்யா, ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால் தன்னால் இயன்ற அளவு உழைப்பை கொடுப்பதில் அமீர் கானை நினைவுபடுத்துகிறார். சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ்! ராம் கோபால் வர்மா சொல்வதை போல், Mr. Eyes தான்! ஒரு யோகி என்று அவரை கட்டும்போது அவர் கண்கள் அதை நம்ப வைக்கிறது! ஆனால் இந்த படத்தில் இவருடைய உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது! சர்க்கஸ் கலைஞரை வருவதால் சர்க்கஸ் சாகசங்களை கற்கிறார், வியட்நாம் சென்று மார்சியல் ஆர்ட்ஸ் கற்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். படத்தில் சர்க்கஸ் வருவது ஏதோ உப்புக்கு சப்பாணி போல் தான். எதற்கு இந்தப் படத்தில் நாயகன் சர்க்கஸ் கலைஞனாய் வரவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை!
ஸ்ருதி, அழகாய் இருக்கிறார். உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது. பொட்டு வைத்துக் கொண்டு, பல காட்சிகளில் சுடிதாரில் வருவது ஆறுதல் அளிக்கிறது. கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். அவருடைய தமிழ் எனக்குப் பிடித்தது.
படத்தின் வில்லன், ப்ரூஸ் லீ சாயலில் இருக்கிறார். அவர் கழுத்தை ஒடித்துப் பார்ப்பது போலவே பார்க்கிறார். அனன்யாவை என்னை சொல்லி படத்தில் போட்டார்களோ! இத்தனை சீன் என்று சொல்லி, இப்படி கட் பண்ணிட்டீங்களே என்பது போல் ஒரு ரியாக்ஷன்! மற்றபடி படத்தில் யாரை பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு போதிதர்மனின் சீன பயணத்திலும், பாடல்களிலும் ஒளிர்கிறது. பிறகு அதற்கு பெரிய வேலை இல்லை. ஹாரிஸின் பாடல்கள் கஜினி அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். "முன்னந்திச் சாலையில்" பரவாயில்லை. பின்னணி இசை பல இடத்தில் நன்றாய் இருந்ததாய் எனது அபிப்ராயம்.
காதல், பாடல்கள் என்று ஒரு ஒரு மணி நேரத்தை இரக்கமில்லாமல் "கட்" டிருந்தால் படம் செம விறு விருப்பாய் இருந்திருக்கும்.