தலையின் 50 வது படம். அதில் வெங்கட் பிரபு கேம் விளையாடி இருக்கிறார்.

மங்காத்தா!


ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தை ஒழிக்க (நல்ல) போலீஸ் அதிகாரி ப்ரித்வி (அர்ஜுன்) நியமிக்கப்படுகிறார். அந்த சூதாட்டத்தில் புழங்கும் ஐந்நூறு கூடி ரூபாய் பணத்தை நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். அதில் ஒருவராய் சேர்ந்து கொள்கிறார் சஷ்பென்ஷனில் இருக்கும் (கெட்ட) போலீஸ் அதிகாரி விநாயக் (அஜீத்). ஆட்டம் ஆரம்பிக்கிறது! கடைசியில் பணம் யாருக்குக் கிடைத்தது என்பதில் ஒரு ட்விஸ்ட்!!

அந்த போலீஸ் கட், சால்ட் பெப்பர் லுக், ரே பன் கிளாஸ்...அந்த வசீகரம் குறையாத சிரிப்பு! எம்.ஜி.ஆர், ரஜினிக்குப் பிறகு அஜீத்துக்கு தான் அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரிசென்ஸ்! பிக்கினி போட்டு நாலு வெள்ளைத் தோள் பெண்கள் உடம்பை வளைத்து நெளித்து ஆடினாலும் நம் பார்வை அஜீத்தை தாண்ட மறுக்கிறது. மே வந்தால் 40 வயதாகிறது என்று அவரே சொல்கிறார், அத்தனை அழகாய் வயதாகிறது அவருக்கு! ஆக் ஷன் கிங் என்று அர்ஜுனை நக்கல் விடுவதும், "நீ எங்கே சுட்டியோ அங்கே தாண்டா நானும் சுட்டேன்" என்பதும் கிளாஸ்! அத்தனை ஹை ஃபையாய் இருக்கும் ஒருவர் கெட்ட வார்த்தைகள் பேசுவதும் ஒரு கிக் :)  ஃபிரேம் பை ஃபிரேம் அஜீத் இருக்க வேண்டும் என்று பிரபு முடிவு கட்டி விட்டார் போல்!! தலை ரசிகர்களுக்கு அவரின் 50 வது படத்தில் இதை விட வேறென்ன வேண்டும்! படத்தை அஜீத் தான் தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். தன் 50 வது படத்தில் இப்படி ஒரு நெகடிவ் ஷேட் காரக்டர் எடுத்ததே பெரிய விஷயம் தான்! அவரே சொல்வது போல், இத்தனை நாள் நல்லவனாகவே நடித்துப் பார்த்தார், ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார் போலும்! அதுவும் நல்லதுக்கு தான் என்று சொல்ல வேண்டும்!

அழுது கொண்டே "நிஜமாத் தான் சொல்றியா?" என்று அஞ்சலி கேட்கும் போது பிரபுவின் ட்ரேட் மார்க் குறும்பு தெரிகிறது. அது சீரியஸ் சீனாய் இல்லாவிட்டால் "கற்றது தமிழ்" படத்திலிருந்து அஞ்சலியின் ஷாட்டை எடுத்து அப்படியே போட்டிருப்பார் என்று பட்டது! மற்றபடி சென்னை 28, சரோஜாவில் இருந்த திரைக்கதை நேர்த்தி ஒன்றும் இதில் இல்லை. படம் பார்த்த நாங்கள் தான் குண்டடி படாமல் தப்பித்தோம்; படம் முழுதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருந்தார்கள்! அதோடு பல இடங்களில் லாஜிக் சொதப்பல்கள்!  படம் எடுத்துக் கொண்டே கதை எழுதியிருக்கிறார் என்று தெளிவாய் தெரிகிறது! ஆனால், என்ன கதை எழுதினாலும் அதில் சாமர்த்தியமாய் அவரின் கூட்டாளிகளை புகுத்தி விடுகிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை. பிரேம்ஜி என்ன செய்தாலும் சிரிக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர் வழி மொழியும் டயலாக், வானம் படத்தில் சிம்பு சொல்லும் டயலாக் "என்ன வாழ்க்கை டா?" மற்றவர் சொன்ன டயலாக்கை அப்படியே இவர் திரும்பி சொல்வதற்கு இவருக்கு இத்தனை பெயரா? "என்ன வாழ்க்கை டா?!"

ஆக் ஷன் கிங் நெற்றியில் விழும் முடியை ஊதி விட்டுக் கொண்டு படம் முழுதும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். "மை டியர் தலை" என்று கடைசியில் மெய் சிலிர்க்கிறார். ரஜினி மீனாவின் மகளோடு டூயட் பாடும் காலத்திலும் இவர் துப்பாக்கியுடன் திருடர்களை சுட்டுக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்! [சார் அந்த துப்பாக்கியை கொஞ்சம் குடுங்க!!!] அஞ்சலிக்கு ஒரு பாட்டு, நாளு சீன். லட்சுமி ராய்க்கு 2 பாட்டு, நாலு சீன். ஆண்ட்ரியாக்கு எண்ணி மூணு சீன்! தயிர் சாதத்துக்கு ஊறுகாய் போல்! யாரு த்ரிஷாவா? அவங்க வேற இருக்காங்களா என்ன? என்னது அவங்க தான் ஹீரோயினா? [சத்தியமா இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சன் ம்யுசிக்கில் "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல் போகிறது. அதை பார்த்து தான் த்ரிஷா இந்தப் படத்தில் இருக்கிறாரே என்று ஞாபகம் வந்தது!] அந்த லட்சணம் தான் அவங்க ரோல்! யுவன் ஒவ்வொரு ட்யூன் போட்டு விட்டு ட்விட்டிக் கொண்டிருந்தார். அது தான் மிச்சம். பாடல்கள் ஒன்றும் அத்தனை பிரமாதமில்லை..

மங்காத்தாவில் தலை இருக்கிறது! தலை மட்டும் தான் இருக்கிறது!!