நீண்ட நாட்களாய் அகோரப் பசியோடு இருந்த விக்ரமிற்கு ஒரு ஃபுல் மீல்ஸ் படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்! விக்ரம் உயிர்த்தெளிந்து வந்திருக்கிறார். ஆறு வயது மனம் படைத்த வளர்ந்த மனிதனிடமிருந்து அவனது குழந்தையை உரியவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்.அவளை திரும்பி பெற அவன் நடத்தும் போராட்டமே கதை! கடைசியில் அதில் ஒரு சின்ன ட்விஸ்ட் என்று மிக அழகாய் திரைக்கதை பின்னியிருக்கிறார் விஜய்!
"கிருஷ்ணா, பேர் வைக்காதே! பின்னாடி பிரச்சனை ஆயிடும். எல்லாரும் பேர் சொல்லியே கூப்பிடுவாங்க!" என்ற வசனம் ஜெயகாந்தனின் "குரு பீடம்" கதையில் வரும் "பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா - ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!" வசனம் நினைவுக்கு வந்தது! இப்படி பல "நச்ச்" கள்!
மரம் ஏன்பா உயரமா இருக்கு?
அதோட அப்பா உயரமா இருக்குல்ல அதான்!
காக்கா ஏன்பா கருப்பா இருக்கு?
அது வெயில்ல சுத்துது இல்லை, அதான்!
யானை ஏன்பா குண்டா இருக்கு?
அது நெறைய சாப்பிடுதுல்ல, அதான்!
இதையும் தாண்டி படத்தில் பல இடங்களில் நெகிழ்ச்சியான சம்பவங்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான மலையாள சினிமா பார்த்த உணர்வு! குழந்தை சாரா ஒரு நல்ல அறிமுகம்! கோர்ட் சீனில் விக்ரமுக்கு இணையாக அசத்துகிறது! அனுஷ்காவையும் அமலா பாலையும் வைத்துக் கொண்டு இந்த மாதிரி ஒரு படத்தை கொடுத்ததற்கே இவரை பாராட்ட வேண்டும். அனுஷ்கா இடுப்பு தெரியாமல் நடித்த ஒரே படம் இதுவே தான் இருக்கும்! சி ஜே பாஸ்கர், சந்தானம் காமெடி களை கட்டுகிறது! தமிழர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்று யாரும் சொல்ல முடியாது! சமயத்தில் மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்! அவிலாஞ்சியின் அழகு நல்ல ஒரு ஒளிப்பதிவினால் கண்ணை பறிக்கிறது! பப்பப்பா பா பாடல் காதுக்கு இனிமை.
அடேயப்பா தில், தூள், சாமியில் பார்த்த விக்ரமா இது? என்ன ஒரு மாற்றம்! தலை முடியை சுற்றிக் கொண்டே, கையை தூக்கிக் கொண்டே, விரலை தேய்த்துக் கொண்டே, வாயை திறந்து கொண்டே, அசட்டுத்தனமாய் அட்டகாசமாய் சிரித்துக் கொண்டே என்று மனிதர் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் நல்ல ஒரு கதைக்காக, அந்த கதாப்பாத்திரமாய் வார்த்துக் கொண்டு, தன்னையே புதுப்பித்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு உன்னதமான கலைங்கனுக்கு ஹேட்ஸ் ஆஃப்!
படத்தில் சில கேள்விகள், சில விமர்சனங்கள்!
படத்தில் வொய். ஜி. மகேந்திரன் கதாப்பாத்திரம் எதற்காக?
அந்த டாக்டர் அத்தனை ஸ்ட்ரிக்டான ஆசாமி என்றால் விக்ரம் எப்படி ஐ. க்யு டெஸ்டில் தேறினார்?
மூர்த்தி (சீ ஜே பாஸ்கர்) பாஷ்யத்தின் (நாசர்) ஆளாய் இருந்தார், திடீரென்று எப்படி அவர் மனம் மாறினார்?
படம் நன்றாய் இருந்தாலும், சற்று நீளமாய் போய் விட்டது. சில தேவையில்லாத சீன்களை வேட்டி ஒட்டியிருந்தால் க்றிஸ்பாய் இருந்திருக்கும்! அதிலும் கோர்ட்டில் இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு அடடடா...அப்பப்பா, தாங்க முடியவில்லை!! திடீரென்று அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் ஒரு கனவுப் பாடல்! குபீலென்று ஆகிவிட்டது! கொடுத்த காசுக்கு மேல் பிரகாஷ் இசை அமைத்ததால் வந்த உபரி பாட்டு போல! நல்ல வேலை பாட்டோடு அந்தக் காதல் நின்று விட்டது!! படம் தப்பித்தது!!
இயக்குனர் விஜய் ஒரு பேட்டியில் சொன்னது போல், எந்த சூது வாதும் தெரியாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல், அன்பு ஒன்றே வேதமாய், எத்தனை அவசரத்திலும் விதிமுறைகளை தவறாத ஒருவனை மன நலம் இல்லாதவன் என்று சொல்வது எத்தனை விசித்திரம்!
இந்தப் படம் தெய்வத்திருமகள் அல்ல, தெய்வத்திருமகன் தான்!