ஒரு தெளிவான நீரோடையின் ஒரு பகுதியில் திரைப்படம் ஆரம்பிக்கிறது. ஒரு ஆரம்பப் பள்ளியின் வாசலில் தலை குனிந்த படி நிற்கும் சிறுவனை முழுதாய் இரண்டு நிமிடம் காட்டுகிறார்கள். அவன் மெல்ல தலை நிமிர அடுத்த காட்சிக்கு நகர்கிறது திரைப்படம். காட்சியின் இத்தனை சாவகாசமான நகர்த்தல்களை பல பாலு மகேந்திராவின் படங்களில் பார்த்திருந்தாலும் மிஷ்கினின் காட்சிபடுத்துதல் சற்று வித்தியாசமாகவே உள்ளது! பாலுமகேந்திராவின் படங்களில் மெல்ல நகரும் காட்சிகளில் கொஞ்சம் ஆசுவாசம் இருக்கும், அமைதி இருக்கும். ஆனால் மிஷ்கினின் அமைதிக்குப் பின்னால் எப்போதும் ஒரு எதிர்பாராத மிரட்டல் ஒன்று இருக்கிறது. ஒரு அற்புதமான படத்தை இயக்கி முடித்து விட்டு அதை வெளியிட முடியாத கையறு நிலையைப் பற்றி பத்திரிகைகளில் படித்தேன். ஏன் நாம் மிஷ்கினின் அலுவலகம் சென்று, உங்கள் படத்தை வாங்கி வெளியிடும் அளவுக்கு எனக்கு பண வசதி இல்லை, அனால் நான் நந்தலாலாவை பார்க்க ஆவலாக உள்ளேன். எனக்கு படத்தை போட்டுக் காட்ட முடியுமா? என்று கேட்கக் கூடாது என்ற ஒரு விபரீதமான எண்ணம் கூட எனக்குத் தோன்றியதுண்டு! நல்ல வேலையாக அத்தகைய ஒரு நிகழ்ச்சி நடப்பதற்கு முன் படம் வெளி வந்து விட்டது.
நாட்டில் என்ன என்ன கொடுமைகள் நடக்கின்றன, எத்தனை வித விதமான வன்முறைகள் நிகழ்கின்றன என்று விளக்கிக் கட்டி எச்சரிக்கும் பல படங்கள் வருகின்றன. அனால் மிஷ்கின் அதே இருண்ட வாழ்வையும், கதை மாந்தர்களையும் தன் கதைக் களத்திற்காக எடுத்துக் கொண்டாலும், இத்தனை அக்கிரமங்களுக்கு நடுவிலும் சில நேரங்களில், சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கின்றனர் என்று எடுத்துக் காட்டுகிறார். இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை நமக்குச் சொல்லி வாழ்வின் மீது நாம் இழந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை மீட்டு வருகிறார். சினிமாவினால் சமுதாயம் சீரழிகிறது என்று இன்று பலருடைய கருத்து. இத்தகைய சூழ்நிலையில், சினிமாவின் மூலம் இப்படி ஒரு நல்ல ஆற்றலை (பாசிடிவ் எனர்ஜி) சமுதாயத்துக்கு பாய்ச்சுவது என்னை பொறுத்தவரை ஒரு மிக நல்ல விஷயம், அதே சமயம் இன்றைய அவசிய தேவையும் கூட என்று தான் நினைக்கிறேன். அந்த ஒரு நல்ல விஷயம் தான் படத்தில் எனக்கு பிடித்தது. படங்களில் பல நெகிழ்வான தருணங்கள் வந்தபடியே இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம், நான் பல தமிழ் படங்களில் பார்த்திருக்கிறேன், கதை படி கதாநாயகன் யாரையாவது அடித்துப் போட்டு விட்டு அவன் துணிகளை எடுத்து மாட்டிக் கொண்டால் கனகச்சிதமாய் பொருந்திக் கொள்ளும். அதிலும் அந்த அடியாள் இரண்டு ஆள் உருவம் இருப்பான். கதாநாயகன் வத்தல் போல் இருப்பான். இருந்தாலும் அது சரியாய் பொருந்திப் போகும். அந்த ஒரு மகா அபத்தத்தை மிஷ்கின் இந்தப் படத்தில் சரி செய்திருக்கிறார். முக்கால்வாசி படம் அவர் பேண்டை இருக்கப் பிடித்தபடி வருகிறார். பிறகு, படமாக்கப்பட்ட இடங்கள் அத்தனை அருமை. தமிழ்நாடு இவ்வளவு அழகா என்று வியப்பாய் இருக்கிறது. ஒளிப்பதிவு அருமை. ஒரு பெரிய தார் சாலையில் ஒரு சிறிய கம்பிளி பூச்சி ஊர்ந்து செல்வதை பார்க்க அருமையாய் இருந்தது. இப்படி நிறைய்ய சின்ன சின்ன விஷயங்கள் படமெங்கும் வியாபித்திருக்கிறது.அதையெல்லாம் நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. படத்தை பற்றி முன்னமையே அதிகம் தெரியாமல் சென்று பார்த்தால் இந்தப் படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது என் அபிப்ராயம்.
மிஷ்கின் நடிக்கும் போது தான் தெரிகிறது ஏன் நரேன் சித்திரம் பேசுதடி, அஞ்சாதேயில் அப்படி கத்தினார் என்று! மிஷ்கினின் வசன உச்சரிப்பு அப்படியே அஞ்சாதே குருவி கதாப்பாத்திரத்தின் உச்சரிப்பை ஒத்திருந்தது. அஞ்சாதேயில் கீழிருந்து மேலாக சில ஷாட்டுகளை வைத்திருப்பார். இந்தப் படத்தில் மேலிருந்து கீழாக நிறைய்ய ஷாட்டுகளை வைத்திருக்கிறார். காலுக்கே காமெராவை வைப்பது இந்தப் படத்திலும் தொடர்கிறது. (தியேட்டரில் கமென்ட்: முகத்தை காட்டி படம் எடுங்கப்பா!) அப்படியே முகத்தை காட்டினாலும் அவர்கள் தங்கள் கால்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹோமோ சாப்பியன்ஸ் போல் ஒரு நடை. பாலச்சந்தரின் படங்களில் கதாப்பாத்திரங்களின் க்ளோசப், பாரதிராஜாவின் நாயகிகள் பூக்களுக்கு முன் நின்று சிரிக்கும் அபத்தச் சிரிப்பு போல் இவைகளை மிஷ்கினின் ட்ரேட் மார்க் என்று எடுத்துக் கொண்டேன். மிஷ்கின் இந்தப் படத்தை இளையராஜாவுக்காகவே எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. டைட்டிலில் முதலில் அவர் பெயர். படம் முழுவதும் ராஜ இசையை இழைத்திருக்கிறார். அனால் அது சில சமயங்களில் படத்தையும், காட்சியையும் மீறி இதோ நானிருக்கிறேன் பார் என்பது போல் ஆகி விடுகிறது. படத்தின் க்ளைமேக்சும் சரியாய் எனக்குப் புரியவில்லை. தன்னை மனநல காப்பகத்தில் சேர்த்து விட்டதற்காக தன் தாயின் மீது அத்தனை கோபப்பட்டவர் அப்படியா செய்வார்? புரியவில்லை. நீங்கள் பார்த்து விட்டு பதில் சொல்லுங்கள்!