உன்னை போல் ஒருவன் பார்த்தேன். கமல் இந்தப் படத்தை எடுக்கிறார் என்று கேள்விப்பட்ட போதே எனக்கு அது சிலாக்கியமாய் படவில்லை. ஜனநாயக நாடு இது. யார் என்ன செய்ய முடியும்? இதோ எடுத்து விட்டார். நானும் பார்த்து விட்டேன். யார் என்ன செய்ய முடியும்?

படத்தின் நிறை

ஸ்ருதியின் இசை. தமிழ் சினிமாவில் பாடல்களை முதலில் தூக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தப் படத்திற்கு இத்தனை பாட்டு வைத்திருக்கிறாரே என்று கமலின் மீது எரிச்சலாய் வந்தது. நல்ல வேலை படத்தில் பாடல்கள் இல்லை. "வானம் எல்லை" என்ற பாடல் அற்புதமாய் இருக்கிறது. ஸ்ருதியின் குரலில் ஏதோ ஒரு அற்புதம். கேட்டு முடிந்த பிறகும் காதுகளில் ரீங்கரித்து கொண்டே இருக்கிறது.



படத்தின் குறைகள்

இந்தப் படம் முதலில் ஹிந்தியில் வந்தது!

காமன் மேன் வேடத்தில் கமல் நடித்தது! அதிலும் அப்படி ஒரு ஸ்டைலிஷான தாடி வேறு. சத்யா தாடியாவது வைத்திருக்கலாம். ஒரே சேரில் உட்கார்ந்து கொண்டு என்ன அற்புதமான நடிப்பு என்று சொல்பவர்கள் ஹிந்தியில் இதை பார்க்க வேண்டும். ஊர்ல இத்தனை இடத்தில பாம் வச்சிருக்கேன் என்று கமல் சொல்வதில் "எப்புடி, நான் யார் தெரியுமா, கண்ல வெரலை விட்டு ஆட்ரோம் ல" என்ற ஒரு ஆணவத் தொனி தெரிகிறது. அது ஹிந்தியில் தெரியவில்லை. அவர் ஒரு காமன் மேன் ஆகவே வாழ்ந்திருந்தார். கமலுக்கு எப்போதும் நஸ்ருதின் ஷா மீது ஒரு பொறாமை. மனுஷன் என்னமா நடிக்கிறார் என்று அவரே சிலாகிக்கும் பேட்டியை பார்த்திருக்கிறேன். அதற்கான சரியான நேரம் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொண்டார், அதாவது சிவாஜி ஒன்பது வேஷம் போட்டார், நம்ம பத்து போட்ருவோம் என்பது போல் தான் இதுவும். புதிய பாதை படத்தில் பார்த்தீபன் கமலைத் தான் நடிக்க சொன்னாராம். நான் இதை செய்தால் கமல் என்ன அருமையாய் நடிச்சிருக்கார் என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். நீங்கள் செய்தால் தான் இயல்பாய் இருக்கும் என்று சொல்லி கமல் ஒதுங்கினாராம். அதே போல் இந்தப் படத்திலும் இவர் ஒதுங்கி இருக்கலாம்.

காமன் மேன் பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் தமிழில் யார் என்று யோசிக்கும் போது எனக்குத் தோன்றுவது டெல்லி கணேஷ் தான்! படம் ஓடாது அது வேறு விஷயம்.அனால் அவர் இதற்கு அற்புதமாய் பொருந்துவார், நன்றாகவே நடிப்பார் இதில் சந்தேகமே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கோவை தமிழ் பேச சரளாவை ஜோடி சேர்த்துக் கொண்டது போல் இதையும் கமல் செய்திருக்கலாம். சரி வியாபாரத்திற்காக வேண்டுமென்றால் கமலே கமிஷினராக செய்திருக்கலாம். கமிஷினர் வேடத்திற்கு மோகன்லாலை விட மம்முட்டியோ, பிரகாஷ் ராஜோ தான் ஏன் சாய்ஸ். மோகன்லாலை பின்னாலிருந்து பார்த்தால் அவரின் கன்னம் தெரிகிறது. நடிப்பு அவ்வளவாய் தெரியவில்லை. அனுபம் கேரிடம் தெரிந்த ஒரு பதற்றம், மிடுக்கு, சீரியஸ்னஸ் மிஸ்ஸிங் மாதிரி தான் எனக்குத் தோன்றியது. ஹிந்தியில் அந்த வேடத்தை பார்க்கும் போது, அந்தப் பதவியில் இருப்பவர் எவ்வளவு வேகமாக சரியான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது என்று ஆச்சர்யமாய் இருந்தது. அந்த அனுபவம் எல்லாம் இதில் கிடைக்கவில்லை. ஒரு வேலை ஹிந்தியில் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த அனுபவம் கிடைத்திருக்கலாமோ என்னமோ!

படத்தில் இயக்கம் (அதான் கமலை திட்டியாச்சே!), ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு பற்றியெல்லாம் நல்ல தியேட்டரில் பார்த்தவர்கள் போட்டிருப்பார்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். எனக்கு அவ்வளவு விஷயம் தெரியாது.

மொத்தத்தில் உன்னை போல் ஒருவன் ஒரிஜினல் போல் இல்லை!



குயிக் கன் பார்த்தேன். கொஞ்சம் ஸ்லோ கன் தான். கவ்வைக் காப்பாற்றுவது கவ்பாயின் கடமை லைன் நன்றாய் இருந்தாலும் நான் வெஜ் தோசை எல்லாம் போரடித்தது. வேறு ஏதாவது யோசித்திருக்கலாம். அத்தனை கலர் உடையிலும் மனிதர் எத்தனை சீரியசாய் இருக்கிறார். தென்னை மரத்திலிருந்து எல்லோரும் முருகனைத் தாக்க இவரும் சரமாரியாய் சுடுகிறார். குண்டு தீர்ந்தும் ஆட்கள் மேலே வந்து பாய்ந்து கொண்டே இருக்க, வெறுத்துப் போனவர், "கீழே இறங்குங்கடா கொரங்குகளா!" என்பது சூப்பர்! பம்பாயில் அவர் ராஜு சுந்தரத்திடம் ஒத்தைக்கு ஒத்தை இறங்கும் போது, ஏன்டா உனக்கு வேற இடமே கிடைக்கலையா என்று அவர் சொன்னவுடன் காமெரா மெல்ல ஜூம் அவுட் ஆக பம்பாயின் பரபரப்பான சாலை ஒன்றில் ட்ராஃபிக்கில், இருவரும் ஒரு காரின் மீது ஏறி நிற்கும் இடம் க்ளாஸ்! விருமாண்டி பேய்க் காமனுக்கு இந்தப் படத்தில் தான் யுனிஃபார்மிலிருந்து விடை கிடைத்திருக்கிறது. அதற்காகவே அவர் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. குயிக் கன் முருகன், ரைஸ் ப்ளேட் ரெட்டி, மேங்கோ டாலி பெயர்கள் அத்தனையும் க்ளாஸ்! ரம்பாவா இது? சுந்தர புருஷன் 2 எடுக்கலாம் போல இருக்கிறதே. அந்தக் கூர்மையான அறிவு இருக்கே...



ஈரம் பார்த்தேன். ஈரமே இல்லாதவர்களை ஈரமே கொல்கிறது என்ற லைன் நன்றாகவே உள்ளது. அது என்னமோ ஷங்கர் தயாரிப்பு என்றால் நம் மக்கள் ஒன்றுக்கு பத்தாக்கி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. பல கேடு கேட்ட படங்களுக்கு பரவாயில்லை தான். அட இது நல்லா இருக்கே என்று ஆச்சர்யப்படும்படி ஒன்றுமில்லை என்று தான் தோன்றியது.

சரி படங்களை விடுங்கள். என் விஷயத்திற்கு வருகிறேன். கடந்த ஒரு மாதத்தில் ஒன்று கண்டு பிடித்திருக்கிறேன்! ரைட்டர் பிளாக் ரைட்டருக்கு மட்டும் வருவதில்லை. யாருக்கு வேண்டுமென்றாலும் வரலாம்! கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இப்படி ஒரு மொக்கையை போட்டிருக்கிறேனே (நான் அப்படித் தான் சொல்வேன், நீங்க இதுவா மொக்கை உங்களுக்கு தன்னடக்கம் என்றெல்லாம் பின்னூட்டம் போடணும், சரியா?) அப்போ என் கண்டுபிடிப்பு சரி தானே? என்ன நான் சொல்றது?

அப்புறம்அவிய்ங்க ராசா நம்ம தோஸ்த் தான்! வலைச்சரத்துல ஒரு வாரத்துக்கு வாத்தியாரா இருந்துட்டு வாலண்டரி சஷ்பன்ஷன் வாங்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த ஒரு வாரத்தில் பல நல்ல மாணவர்களை அவர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் அடியேனும் ஒன்று! என்னை பாத்து வலைப்பூவை ஆரம்பிச்சதா சொல்லியிருந்தார்! இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க என்று தான் தோன்றியது. ஏதோ நல்லா இருந்தா சரி!