1948ம் ஆண்டு, பிப்ரவரி 1. மெட்ராஸ் ப்ராவின்ஸி.
மழை பெய்யும் ஒரு அடர்த்தியான இரவில் படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கும் வேங்கடத்தை (பிரகாஷ்ராஜை) இரண்டு நாட்களுக்காக ஒரு விசேஷ அனுமதியுடன் வெளியே அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏற்றி காஞ்சிவரம் கொண்டு வரப் படுகிறார். அவர் பயணத்தினூடே அவரின் கடந்த காலத்தை திரைப்படம் விளக்கிச் செல்கிறது. அந்த ஊரிலேயே தேர்ந்த நெசவாளியான வேங்கடம் அன்னத்தை திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வருகிறார். தான் தன் மனைவியை பட்டுச் சேலை கட்டி கூட்டி வருவேன் என்ற அவனது வாக்கு பொய்த்து போனதை பக்கத்து வீட்டுக் கிழவி சுட்டிக் காடி கிண்டல் செய்கிறாள். அதுவே அவரின் வைராக்கியமாய் மாறி தனக்குப் பிறந்த பெண் குழந்தையை பட்டுப் புடவையுடன் தான் திருமணம் செய்து அனுப்பி வைப்பேன் என்று ஊராரின் முன்னிலையில் வாக்குறுதி அளிக்கிறார. அதைக் காப்பாற்ற அவர் படும் பாடுகளும், அதன் முடிவும் நீங்களே வெண் திரையில் காண்க [அதுவரை படம் ஓடினால்!]
அந்தக் காலத்திலேயே 800 ரூபாய் விலை போன பட்டுப் புடவைக்கு 7 ரூபாய் கூலி கொடுக்கிறார் வேங்கடத்தின் முதலாளி. "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்ற உழவர்களின் நிலையைப் போல எத்தனை விதமான புடவைகளை நெய்தாலும் ஒரு பட்டுப் புடவை என்பது ஒவ்வொரு நெசவாளியின் கனவாகவே இருந்திருக்கிறது. ஒரு நெசவாளியின் வாழ்வை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன். முன்பொரு காலத்தில் நல்ல கலை நேர்த்தியான படங்களை இவர் இயக்கியிருந்தாலும் தற்போது ஹிந்தியில் காமெடி படங்களையே இயக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு திடீரென எப்படி இப்படி ஒரு கலை தாகம் எடுத்தது என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. மிக நல்லதொரு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.
பிரகாஷ் ராஜ் வேங்கடமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் வழக்கமான க்ளிஷேயாகிவிடும். மனிதருக்கு கஷ்டப்பட ஒன்றுமில்லை. அநாயசமாய் செய்திருக்கிறார்.
ஷ்ரேயா அமைதியாய் அழகாய் அளவோடு வந்து போகிறார். நல்ல இயக்குநர்கள் கையில் இவர் கிடைத்தால் தமிழில் ஒரு ஸ்மிதா பாட்டில் மாதிரி ஆகி விட மாட்டார்? பார்க்கலாம்.
வழக்கமாய் தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு தங்கை என்று ஒன்று இருந்தால் அது ஒரு தருதலையை தான் கல்யாணம் செய்திருக்கும். அவன் அவளை பாடாய் படுத்துவான். கதாநாயகன் பொங்கி எழுவான். நல்ல வேளையாய் அந்தக் கஷ்டம் இங்கு இல்லை. வேங்கடத்தின் மச்சானின் கதாபாத்திரம் எந்த வித பாசாங்குமில்லாமல் மிக எதார்த்தமாய் கையாளப்பட்டிருக்கிறது. தொல்லை கொடுக்க வேண்டிய இடத்தில் தொல்லை கொடுக்கிறார். உதவ வேண்டிய நேரத்தில் சரியாய் உதவுகிறார். கழண்டு கொள்ள வேண்டிய இடத்தில் சரியாய் கழண்டு கொள்கிறார். அவரின் நடிப்பையும் பாராட்டலாம்.
படத்தில் மிகவும் பாராட்டுக்குறிய அம்சம் ஒளிப்பதிவு. திரு ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். நான் கவனித்த வரை பெரும்பாலான ஷாட்கள் வான் நோக்கியே வைக்கப்பட்டிருந்தன. விஜய்யும் மதனும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். சில சாம்பிள்ஸ்.
மோட்டார் கார் ஒன்று முதன் முதலில் ஊருக்குள் வருகிறது.
- அது மோட்டார் கார். குதிரை இல்லாம ஓடும்.
- மோட்டார்னா?
- கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும். ஒருவேளை கவுண்டர், செட்டியார் மாதிரி மோட்டாரோ என்னமோ...குதிரை வண்டியை ஓட்றவன் குதிரைக்காரன் மாதிரி இதை ஓட்றவனுக்கு பேரு ட்ரைவர்காரனாம்! பட்டணத்துல இருந்து கூட்டிட்டு வர்றாங்க. மாசம் 35 ரூபாய் சம்பளம்!
கம்யுனிஸ சித்தாந்த்தினால் கவரப்பட்டு போராட்டம் நடத்தும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் டீ கடை ஆசாமி ஒருவர்...
புரட்சி புரட்சின்னு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். இனிமே இவங்களுக்கு ஒரு குவளை காப்பி கூட தர மாட்டேன். காப்பி வேணும்னா கம்யுனிசத்தை கலந்து குடிக்கட்டும்!
படத்தின் இசை படத்தினோடு கலந்து செல்கிறது. அதுவே ஒரு மிகப் பெரிய விஷயம் தான். அதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை.
மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவையே எடுத்துக் கொள்வோம். இந்தப் பதிவு என்னுடைய வழக்கமான பாணியில் ஒரு விமர்சனம். ஒருவேளை நீங்கள் என் பாணியை ரசித்திருந்தாலும், இந்தப் பதிவு உங்களை அவ்வளவாகக் கவரவில்லை என்றால் அதே நிலை தான் காஞ்சிவரம் திரைப்படமும். இந்தப் படத்தில் எல்லாம் இருக்கிறது. நல்ல கதை, நல்ல நடிகர்கள், அழுத்தமான படப்பிடிப்பு, அளவான இசை...ஆனாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! என்னுடன் வந்த நண்பரும், உதிரிப்பூக்கள் மெல்ல தான் போகும், ஆனால் அதனோட பாதிப்பு அதிகம் இல்லையா என்றார். அவர் சொல்வது நியாயமாய் தோன்றினாலும், இதில் இல்லாத ஒன்று அப்படி என்ன அதில் இருந்தது என்ற கேள்விக்கு என்னக்கு விடை தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் சமூகத்தைப் பற்றி தெரியாத உலக திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் வரவேற்கப்படலாம்!
பின்குறிப்பு: என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் (அதாவது தன் 6வது படிக்கும் மகனுடன்) இந்தப் படத்திற்கு வந்திருந்தார். அந்தப் பையனால் தாங்க முடியவில்லை. இடைவேளை போடுவதற்கு முன் விளக்குகளை போட்டதும் துள்ளிக் குதித்தான்! "என் வாழ்நாள்ல நான் பாத்த 2 மொக்கை படத்துல இதுவும் ஒன்னு" என்றான். அந்த இன்னொன்னு என்னன்னு கேட்டேன். அவன் சொன்ன பதில், திருப்பாச்சி!
இது என்ன மாதிரியான ஜெனரேஷன்!???