காலம் மறுபடியும் தன் கடமையை சரியாய் செய்திருக்கிறது! நம்பியாரிடம் என்றுமே தோற்காத எம்.ஜி.ஆரே மரணத்திடம் தோற்ற போது, மரணத்திற்கு நம்பியார் எம்மாத்திரம்? சினிமாவில் ஒழுக்கமான மனிதர்கள் குறைவு! பணம் இருந்தாலே மனம் கொஞ்சம் ஆட்டம் போடத் தான் செய்யும், அதோடு புகழும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்! அத்தகைய கூட்டத்தில் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் தேக ஆரோக்கியத்தோடு 89 வயதில் மதியம் உணவருந்தி விட்டு, தூக்கத்திலேயே நிரந்தர துயிலடைவது எல்லோருக்கும் சாத்தியம் அன்று! மிஸ்டர். நம்பியார் டிசேர்வ்ஸ் இட்!
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களைப் பற்றி நாம் நினைக்கும் அளவிற்கு வி.எஸ். ராகவனைப் பற்றியோ, சுந்தரிபாயைப் பற்றியோ, பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றியோ நாம் அதிகம் நினைப்பதில்லை! அப்படிச் சிறிது நேரம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இறந்து போக வேண்டியிருக்கிறது! இப்படி ஒரு தருணத்தில் நம்பியாரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் அவரின் நடிப்பைப் பற்றியும் நான் எண்ணிப் பார்க்கும் போது எந்த ஒரு நடிகருக்கும் அவர் சளைத்தவிரில்லை என்பது விளங்குகிறது! எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் போது நம்பியார் தன் தோல்வியையும், தன் கையாலாகத தனத்தையும், அதனால் உண்டாகும் ஆத்திரத்தையும், அப்படி எத்தனையோ வித உணர்ச்சிகளை அவர் முக பாவத்தில் கொண்டு வரும் நேர்த்தியை எம்.ஜி.ஆர் ஓடிச் சென்று கட்டிப் போட்டிருக்கும் தன் தாயை விடுவித்து அம்மா என்று ஆரத் தழுவி கொஞ்சும் போது நாம் அதை கவனிக்கத் தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது!
அவர் முகம் வில்லனுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று யாரும் எளிதாய் சொல்லி விட முடியாது! அவர் அமைதியாய் நல்லவன் போல நடிக்கும் போது அவரின் முகத்தில் தவழும் சாந்தம் கதாநாயகனின் முகத்தில் கூட இருந்ததில்லை! மிஸ்ஸியம்மாவில் அவர் சாவித்ரியை மணக்கத் துடிக்கும் துடிப்பையும், அதற்கு அவர் படும் பாடுகளையும் பார்த்து நான் வாய் விட்டுச் சிரித்து ரசித்திருக்கிறேன்! அத்தனை சாந்தமான முகத்தில் வாயை கோணிக் கொண்டு, கையைப் பிசைந்து கொண்டு தாடைக்கு கீழே ஒரு 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சம் பட்டதும் எங்கிருந்து தான் அத்தனை குரூரம் வருமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது... "மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று அத்தனை கம்பீரமாக முழங்கும் நம்பியாரிடம், எம்.ஜி.ஆர் அமைதியாக, மிருதுவான குரலில் சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்பார்! எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாய் வணங்குவதற்கு நம்பியாரின் பெரும் பங்கு இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!
நம்பியாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மூளையில் ஒரு ஓரத்தில் ஒலிக்கிறது "டேய் மாயாண்டி" என்ற ஒரு குரூரக் குரல்! நம்பியாரின் நினைவு இருக்கும் வரை அந்த மாயாண்டிகளும், காட்டு பங்களாக்களும் வாழ்வாங்கு வாழும்!