அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம்
உடலெங்கும் வெயிலேறி
இரவிலும் பிசுபிசுக்கிறது

அதிக சத்தத்தையும்
கொஞ்சம் காற்றையும்
கக்குகிறது மின்விசிறி

கொசுவர்த்தி எரிகிறது
"இனிமேல்" கொசு கடிக்காது
என்று ஆறுதல் அடைகிறது மனம்

அப்போது...

என்றும் போல் இன்றும்...
தடை படாத
மின் தடை

அக்னி நட்சத்திரத்தில் - இந்த
அர்த்த ராத்திரியில் தினமும்
மின் தடை செய்வதில்
இவர்களுக்கு என்ன லாபம்?

கதவைத் திறக்கிறேன்,
கொஞ்சம் காற்று வரும் என்று நம்பி...
நம்பிக்கை தானே வாழ்க்கை!

வழக்கம் போல் அதுவும்
வெற்றியின் முதல் படியிலேயே முடிகிறது

தெருக்களில் நாய்களுடன்
சில மனிதர்கள், என்னைப் போலவே!

இரவுகளில் ஒரு உருவம் தெரிந்தால்
குரைப்பது என்று முடிவெடுத்திருந்த
நாய்கள் இத்தனை பேரை பார்த்து
குழம்பித் தான் போயிருக்கின்றன

எத்தனை அரசியல்வாதிகள்
புழுக்கம் தாங்காமல் இந்த நேரத்தில்
வெளியே வந்திருப்பார்கள் என்று
நையாண்டி செய்கிறது மனம்

தூங்காமல் விழித்து
மாடாய் உழைத்து
நேர்மையாய் கட்டிய வரிப்பணம்
கண்ணில் வந்து போகிறது

மறுபடியும் உடல் பிசுபிசுக்கிறது!
எனக்குத் தெரியும்...
இது புழுக்கத்தினால் அல்ல