காரில் இரவில் எஃபெம் ரேடியோ கேட்டுக் கொண்டே பயணிப்பது எத்தனை சுகமான அனுபவம் என்று உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கும், நானோ பாட்டு பைத்தியம், அன்றும் வழக்கம் போல் காரில் ரேடியோ இருக்கிறதா என்று பார்த்து திருப்தி பட்டுக் கொண்டேன். பின்னால் மூன்று பெண்கள், நான் டிரைவர் பக்கத்தில்..மூன்றில் ஒரு பெண் மட்டும் செல்லில் பேசிக் கொண்டிருந்தாள். டிரைவர் கொஞ்சம் புதுசு என்று நினைக்கிறேன், அவராய் ரேடியோவை போடுவார் என்று நினைத்தேன், என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...பாட்டு போடுங்க என்றேன், போடலாம் சார், ஆனா மேடம் ஃபோன் பேசுறாங்களே பரவாயில்லையா என்றார்? ஓ,சரி சரி, அவங்க ஃபோன் பேசி முடியட்டும் என்றேன்..
வண்டி திருவான்மியூர், அடையார் என்று சுற்றி குறைந்த பட்சம் ஒரு பத்து கிலோமீட்டர் போயிருக்கும், அந்த பாதகத்தி என் வீடு வரும் வரை பேசிக் கொண்டே இருந்தாள். வெறுத்துப் போய் இறங்கிக் கொண்டேன். யாரோ ஒரு பையனிடம் பேசினாள். அவனும் அவளுடைய டீம் தானோ என்னமோ, அவர்களுடைய ப்ராஜக்ட் பற்றி டீப் டிஸ்கஷன்..அதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா?
எனக்கு இப்படி பல அனுபவங்கள்! பஸ்ஸில் பயணம் செய்யும்போதும் அந்த இரைச்சலிலும் முதல் ஸ்டாப்பில் ஏறி கடைசி ஸ்டாப் வரும்வரை பேசிக் கொண்டே வருகிறார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ, தெரியவில்லை. எனக்கு யாராவது ஃபோன் செய்தால் "நல்ல இருக்கியா?" க்கப்புறம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அன்று மழை பெய்து ரோடெல்லாம் ஒரே தண்ணி; ஒரு பக்கம் மெயின் ரோடு, ஒரு பக்கம் பெரிய குட்டை..ஓரமாய் கொஞ்சம் மணல் இருந்தது. நான் இந்தப் பக்கம், ஒரு பெண் அந்தப் பக்கம், கையில் செல்லுடன். ரோட்டைப் பார்க்காமல் அதில் விளையாடிக் கொண்டே வருகிறாள்,அவள் இந்தப் பக்கம் போவாளா, அந்தப் பக்கம் போவாளா புரியவில்லை. அவளைக் கடக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். ஒரு பெண் செல்லில் பேசிக் கொண்டே ரயில்வே பாலத்தை கடந்ததில் ரயிலில் அடிபட்டு இறந்தாள் என்று பேப்பரில் படித்தேன். பெண்களுக்கு செல்ஃபோன் என்பது கைக்கு அடக்கமான டெட்டி பியர் மாதிரி ஆகி விட்டது.
4 பெண்கள் நின்றால், அதில் மூன்று பேர் செல்லில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இப்படி நேரில் நின்று பேசுவது போல் ஃபோனில் பேச முடிகிறது என்று எனக்குப் புரியவில்லை; எனக்கு புரியாத இன்னொரு விஷயம் அவர்களால் எப்படி இவ்வளவு மெல்ல பேச முடிகிறது என்பது! நான் பேசும்போது என் தம்பி, நீ பேசுறதுக்கு ஃபோனே தேவையில்லை, அவனுக்கு அப்படியே கேட்ருக்கும், மெதுவா பேசுடா என்று திட்டுவான்.
பெண் நண்பிகளே, எத்தனையோ பேர் எத்தனையோ விதமான அவசர தகவலகளைச் சொல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். ஒரு மிஸ்ட் கால் கொடுத்து அப்புறம், அப்புறம் என்று அந்தப் பையன் வழிவதை ரசிக்காதீர்கள். தொலைபேசி என்பது..வெயிட் வெயிட், வெயிட் எ நிமிட் ஃபார் ஃபைவ் மினிட்!
யாரு இது மிஸ்ட் கால் விட்றது..புதுசா இருக்கு...நம்பரை பாத்தா பொண்ணு நம்பர் மாதிரி ஃபேன்ஸியா இருக்குதே, எக்ஸ்க்கியுஸ் மீ..நான் ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்றேன்.. ஹிஹி..