நடப்பவை எல்லாம் நல்லவைக்கே என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. ஒரு பதிவைப் போட்டதும் அதை தமிழ்மணத்திற்கு அளித்தால் தான் நட்சத்திரப் பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட பதிவு வரும் என்பதை மறந்து விட்டேன். இரண்டு பதிவை போட்டும், ஒன்றுமே இல்லாமல் நட்சத்திரமே வெறிச்சோடி இருந்தது. அதற்குள் இருவர் எங்கேப்பா இந்த வார நட்சத்திரத்தை காணோம் என்று குழம்பி அதையே ஒரு பதிவாய் போட்டு விட்டனர்! ஒரு வழியாய் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மடல் வந்த பிறகு தான் நாக்கை கடித்துக் கொண்டு, விஷயத்தை உணர்ந்து பதிவுகளின் இணைப்பை தமிழ்மணத்திற்கு அளித்தேன்! அதற்குள் நான் நட்சத்திரத்திற்கு முன் எழுதிய சில பல பதிவுகள் நட்சத்திரப் பக்கத்தில் தெரிந்தது! அடேடே..என்னது நம்ம இப்போ எழுதின பதிவெல்லாம் கடைசியா போய், முன்னே எழுதின பதிவெல்லாம் முன்னாடி வந்துருச்சே என்று ஒன்றும் புரியாமல் குழம்பி, ஏதோ என் எல்லா பதிவுகளை படித்தால் சரி என்று நினைத்துக் கொண்டேன்!

தமிழ்மணத்திற்கு ஒரு சின்ன வேண்டுகோள்! ஒரு பதிவரை நட்சத்திர வாரத்திற்கு அழைப்பு விடும் போது அவர் என்னன்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் சற்று விளக்கமாக சொன்னால் இன்னும் செளகரியமாய் இருக்கும்! என்னை மாதிரி மறதிக்காரர்களுக்கும் அது உதவியாய் இருக்கும்.
யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று வெகு சுலபமாய் சவால் விடலாம்! அவர்களிடம் சரி எப்போது செய்வாய்? தேதியும், நேரத்தையும் சொல்லு என்று சொல்லிப் பாருங்கள்! அடுத்த நிமிடம் அவன் அந்த இடத்திலிருந்து அப்பீட் ஆயிருப்பான்! அது தான் டெட்லைன் என்பது! இப்போது தான் அதன் மகத்துவம் புரிகிறது! இந்த மாதிரி எந்த கூட்டுக்குள் அடைபடாமல் தான் நானும் இருந்தேன்! எழுதியே ஆகனும் என்று ஒரு கட்டாயம் இருந்தால் அது என்னவோ புரியல, என்ன மாயமோ தெரியல ஒரு மண்ணும் வராது! இதனால் தான் வலையுலக நண்பர்கள் அழைக்கும் சன்கிலிப் பதிவிலும் நான் கலந்து கொள்வதில்லை! :)சென்னையில் தேசிகன் தயவில் எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த போது "டெட்லைன் இல்லையென்றால் எழுத முடியாது!" என்று அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று எனக்கு இன்று புரிகிறது. நான் மட்டும் இந்த வாரத்தின் நட்சத்திரமாக இல்லையென்றால் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவை போட்டிருந்தால் அதிகம்! கிட்டத்தட்ட ஒரு பத்து பதிவுகளை போட்டது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது! டெட்லைன் வேலை செய்யத் தான் செய்கிறது!

நான் இந்த வார நட்சத்திரத்தில் போட்ட அத்தனைப் பதிவுகளும் மிக நல்ல தேர்ந்த பதிவுகள் என்று சொல்ல முடியாது! டெட்லைன் இல்லையென்றால் இன்னும் சிறப்பாய் எழுதியிருப்பேனோ என்று தோன்றினாலும் அதே சமயம், டெட்லைன் இல்லையென்றால் எழுதியிருப்பேனா என்ற சந்தேகம் தான் அதிகம் உள்ளது! ஆனால் வெகு நாட்களாய் சமுதாயத்தில் திருமணத்தையும் அதில் சூழ்ந்துள்ள குழப்பங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! நட்சத்திர வாரத்தின் மூலம் அது வெகு ஆர்ப்பாட்டமாய் நிறைவேறியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி!

இந்த நட்சத்திர வாரத்தில் நான் பங்கெடுத்துக் கொண்டதே ஒரு அற்புதமான அனுபவம்! ஒரு சிறுவனை மேடையில் ஏற்றி விட்டு அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்களே என்று பயந்தாலும், ராஜாதி ராஜன் வந்தேனே என்ற பதிவின் மூலம் ஒரு சிருங்கார அறிமுகம் செய்து கொண்டு குறையொன்றுமில்லை என்ற பதிவின் மூலம் வலையுலகில் நான் இருந்து வரும் நிலையை விளக்கி என்னுடைய சாந்தத்தை பதிவு செய்தேன்! சமுதாயத்தில் நடக்கும் சிறுமைகளைக் கண்டு இப்படியும் மனிதர்களா என்ற என் அருவருப்பை திருமணமாம் திருமணமாம் பதிவில் ஆரம்பித்து மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்ற பதிவு வரை சிறுமை கண்டு பொங்கும் என் ரெளத்திரத்தை பதிவு செய்தேன்! என்னுடைய இத்தகைய வீரத்தை பாராட்டி நீங்கள் அளித்த பின்னூட்டத்தில் என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. கடைசியாக, என்னையும் ஒரு நல்ல எழுத்தாளன் [அப்படி தானே நினச்சுருக்கீங்க?] என்று நம்பிய உங்கள் அன்புக்கும்/கருணைக்கு என் நன்றிகள் பல உரித்தாகுக!! [நவராத்திரி திரைப்படத்திற்கு நன்றி]

என்ன ஒரு மண்ணும் புரியலையா? அதாவது, அற்புதம், சிருங்காரம், சாந்தம், பயம், கருணை, அருவருப்பு, கோபம், வீரம் மற்றும் ஆனந்தம் என்ற நவரசங்களையும் அப்படியே கரைச்சி இந்த நட்சத்திர வாரத்தில கலங்கடிச்சுருக்காராமா...நவராத்திரி படத்திலே ஆரம்பிச்சி நவராத்திரி படத்துலையே முடிச்சி வாழ்க்க ஒரு வட்டம்டான்னு புரிய வைக்கிறாராமா.. இந்தப் பக்கியயெல்லாம் ஏத்தி விடாதீங்கன்னா கேக்குறாய்ங்களா? அந்த ஏ.பி. நாகராசனை சொல்லனும்!

மங்களம் சுப மங்களம்!!

இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2, இங்கே 3

ச‌மீப‌த்தில் கேள்விப்பட்ட செய்தி ஒன்று. காத‌லித்த‌ இருவ‌ர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திரும‌ண‌ம் செய்து கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ‍ஹிமாச்ச‌ல‌ப் பிர‌தேச‌த்திற்கு ஓடி விட்ட‌ன‌ர்! கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு வ‌ருட‌ கால‌த்திற்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோர் அலைந்து திரிந்து அவர்களை கண்டு பிடித்து ஏன் இப்படி அவசரப்பட்டீர்கள், நாங்களே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர்! அந்தப் பெண்ணோ வாயும் வயிறுமாக இருந்திருக்கிறார். மாப்பிள்ளையை ஹாலில் உட்கார வைத்து விட்டு அவளின் தகப்பனும் அண்ணனும் அந்தப் பெண்ணை வீட்டின் அடுத்த அறைக்கு கூட்டிச் சென்று கடப்பாரையால் குத்தி கொன்று விட்டனர்! சத்தம் கேட்டு ஓடி வந்த மாப்பிள்ளையை பார்த்து "ஒழுங்கா ஓடிப் போயிடு, இல்லை உன்னையும் கொன்றுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளையின்ட் கொடுத்து விட்டார். போலீஸ் அவரை பிடித்ததும் பத்திரிக்கைக்காரர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு அந்தத் தகப்பன் [இவரை தகப்பன் என்று சொல்லலாமா?] "அவளால் நான் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? இப்போது தான் என் சாதி மக்கள் என்னைப் பார்த்து பெருமைபடுகிறார்கள்! இனிமேல் என் சாதியை சேர்ந்த ஒரு பெண்ணும் இத்தகைய காரியத்தை செய்யத் துணிய மாட்டாள்!" என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்! இவர்களை ஒரே வரியில் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிடலாம்! ஆனால் அது காட்டிமிராண்டிகளை கேவலப்படுத்துவதாகும்! ஒரு காட்டுமிராண்டி கூட வாயும் வயிறுமாய் இருக்கும் தன் சொந்த மகளை இவ்வளவு கொடூரமாக கொல்ல மாட்டான் என்றே தோன்றுகிறது...

காதல் திருமணங்கள்/கலப்புத் திருமணங்களைப் பொறுத்தவரையில் பெற்றோர்களின் புரிதலும் அதைத் எதிர்த்து அவர்கள் புரியும் வாதங்களும் வலுவற்றதாகவே இருக்கின்றன! [பெண்ணைப் பெற்றவர்கள் பையன் நல்லவனாய் இருக்க வேண்டுமே என்று அஞ்சி அழுவதைத் தவிர!]
ஒரு பையன் தன் காதலை பெற்றோரிடம் சொன்னவுடன் அவர்கள் எடுத்தாளும் முதல் விஷயம் பாசம்! அவர்களின் பாசம் அந்தப் பையனுக்குப் புரிகிறது என்றாலும் அவனுக்கு இப்போது கிடைத்திருப்பது காதல் என்னும் ஒரு புதிய அனுபவம். என்ன தான் ஒரு பெற்றோர் பாசத்தைக் கொட்டி தன் பிள்ளையை/பெண்ணை வளர்த்தாலும், காதல் என்ற உணர்ச்சியை அவர்களால் கொடுக்க முடியாது! அதனால் பாசத்தை காதலுடன் ஒப்பிடுவது செல்லாது!

பெற்றோர்: நம் சாதி சனம் நம்மை ஒதுக்கி வைத்து விடும், நாம் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது, யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்று ஒரு வாதம்.

காதலிப்போர்: இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நாம் யாருக்காக வாழ்கிறோம்? என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமையில்லையா? நான் ஏன் எப்போதும் அந்த நான்கு பேர் என்ன சொல்வார்கள் என்று அஞ்சி அஞ்சி வாழ வேண்டும்? அந்த நான்கு பேருக்கு வேறு வேலையே இல்லையா? நான் வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று எப்போதும் பேசிக் கொண்டிருப்பது தான் வேலையா? அப்படியே கேட்டாலும் பெற்றவர்கள் என் பிள்ளையின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்றால் அதற்கு மேல் அவர்கள் என்ன செய்ய முடியும்? பிழைப்பின் காரணமாக ஏற்கனவே ஊர் மாறி, பேர் மாறி ஒதுங்கிப் போய்த் தான் திரிகிறோம், இதில் இவர்கள் சாதியை விட்டு ஒதுக்கி வைப்பதில் என்ன பெரிய வித்தியாசம்?

பெற்றோர்: நீ இப்படியெல்லாம் செய்தால் உன் பின்னால் இருப்பவர்களுக்கு எப்படித் திருமணம் நடக்கும்? உன் தங்கைக்கும் தம்பிக்கும் வேற்று சாதியிலேயே பார்க்க முடியுமா?

காதலிப்போர்: ஓ! பேஷா!! ஏற்கனவே வேற்று சாதியில் காதலிக்கும் பையனிடமும், பெண்ணிடமும் இப்படி ஒரு கேள்வி கேட்பதே தவறு! அவர்கள் அப்படித் தான் பதில் சொல்வார்கள்!

பெற்றோர்: உனக்கு வயசு பத்தாது. நீ இப்போ ஆசைப்பட்டு கட்டிக்கிறே, இதெல்லாம் நிலைக்காது. இதெல்லாம் சரிப்படாது. உனக்கு ஒரு நல்ல பெண்ணா/பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!

காதலிப்போர்: நீங்கள் எனக்கு பார்த்து கட்டி வைக்கும் பெண்ணுடன் நான் சந்தோஷமாய் வாழ்வேன் என்று என்ன நிச்சயம்? அவள் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் குடும்பத்திற்கு அடங்கி ஒடுங்கி இருப்பாள் என்று உங்களால் உத்தரவாதம் தர முடியுமா? நீங்கள் சொல்வது போல் நாளை இவளாலும் எனக்குப் பிரச்சனை வரலாம், ஆனால் அது நான் எடுத்த முடிவு என்ற திருப்தியாவது எனக்கு மிஞ்சும்! யார் மேலும் பழியை சுமத்தாமல் நானாக என் தலை விதியை நொந்து கொள்வேன்! [இதில் என்ன பிரச்சனை? அவன் இஷ்டம்; அவன் பாடு!]

பெற்றோர்கள் : சரி நாளைக்கு உன் பிள்ளைகளை எந்த சாதிப்படி வளர்ப்பாய்? யாருக்குக் கட்டிக் கொடுப்பாய்?

காதலிப்போர்: என் பிள்ளை யாரை விரும்புகிறதோ அவருக்கு!

சாதி தோன்றி மதம் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த நெறி காதல்!


ஒரு பையனோ பெண்ணோ, காதலில் விழும் வரை தான் [ஏன் விழும் வரை...எழும் வரை என்று வைத்துக் கொள்ளலாமே] அவர்கள் அவர்களுக்கு பூரணமாய் சொந்தம்! பிறகு ஃபிப்டி ஃபிப்டி தான்! அந்தக் காதலுக்கு அத்தனை சக்தி இருக்கிறது! என்ன செய்வது? ஊர்ல என்ன வேணா நடக்கலாம் என் மகன்/மகள் அப்படியில்லை, நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான்/ள் என்று நினைப்பதை பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும்!

என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழன் என்று வெறும் வாய்ச்சொல்லுடன் நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். முக்கியமாக பெண்ணை பெற்றவர்கள்! வீட்டில் எத்தனை பெற்றோர் வயதுக்கு வந்த பெண்ணிடம் காதலைப் பற்றி ஆரோக்கியமான விவாதங்களை நடத்துகிறார்கள்? முதலில் உங்கள் மகள் உங்களிடம் எதையும் மறைக்காத வண்ணம் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஏமாற்றுப் பேர்வழிகளைப் பற்றி டீ.வியிலோ, செய்தியிலோ பார்த்தால் அதைக் காட்டி அவளை எச்சரிக்க வேண்டும். தகுந்த நேரத்தில் ஒரு நல்ல வரனை அவள் அழைத்து வந்தால் சாதி மதம் என்ற பேதங்களை தகர்த்தெறிந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும்!

ஒரு காலத்தில் பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர முடியாத நிலையில், அப்படி வந்த ஒரு பெண்ணை தூற்றியவர்கள் எண்ணற்ற பேராய் இருந்திருப்பார்கள்! பெண்கள் படிக்கக் கூடாது என்ற காலத்தில் புத்தகத்தைத் தூக்கிய பெண்கள் பல அவமானங்களை சந்திருத்திருப்பார்கள்! பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்ற காலத்தில் முதலில் வேலைக்குப் போன பெண்கள் கூனிக் குறுகித் தான் போயிருப்பார்கள்! முதன் முதலாய் தன் துணையை தானே தேடிக் கொண்ட பெண்ணை எல்லோரும் வேசி என்று தான் சொல்லியிருப்பார்கள்! இன்றும் அப்படிச் செய்யும் பெண்களை சில பெற்றோர் அப்படித் தான் சொல்கிறார்கள்! எத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும் உடைக்கப் பட வேண்டிய நேரத்தில் உடைபட்டே தீரும்!

"புதிய வார்ப்புகள்" என்ற கதையில் ஜெயகாந்தன் கதையின் முடிவில் இதை அருமையாகச் சொல்லி முடிக்கிறார்!

மனிதனே ரொம்பப் பழமையான உலோகம் தான். காலம் தான் அவனப் புதிது புதிதாக வார்க்கிறது. வாழ்க்கையின் அந்த நிர்பந்தத்துக்கு முடிந்தவர்கள் வளைகிறார்கள். வளைய முடியாதவர்கள் உடைந்து நொறுங்குகிறார்கள்.

வளைந்தாலும் சரி, உடைந்தாலும் சரி, காலம் புதிது புதிதாய் மனிதனை வார்த்துச் செல்கிறது. அந்தக் குடும்பம் வாழ்க்கையின் வார்ப்புக்கேற்ப வளைந்திருக்கிறதா, உடைந்திருக்கிறதா அல்லது இரண்டுமே நிகழ்ந்திருக்கிறதா?

டாக்டர் வந்தபின் தெரியும்!

(போறும்!)
இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2

பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது எல்லா சமூகங்களிலும் காலம் காலமாய் இருந்து வருகிறது. எல்லோர் வீட்டுப் பரணிலும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் திருமணம் தூசு படிந்து கிடக்கத் தான் செய்கிறது! மதுரையில் எங்கள் சமூகத்திலும் அது அதிகரித்திருக்கிறது! அதிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எங்கள் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களை விடுத்து, வேற்று சாதியினருடனும், வேற்று மதத்தினருடனும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக மதுரையில் இருக்கும் என் நண்பர்கள் நான் அங்கு செல்லும்பொழுதெல்லாம் கண்கள் சிவக்க குற்றம் சாட்டுவார்கள்! அவர்களுக்கு, பதிலாக நான் சிந்துவது ஒரே ஒரு புன்னகை தான்!

கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நடந்து கொண்டு தானிருக்கின்றன! பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் போன்ற வருண பேத கால கட்டத்தில், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு பிறந்த குழந்தையை சண்டாளர் என்று அழைத்தனர்! வேத காலம், இந்து தர்மத்தை ஒவ்வொருவரும் மனதார கடைபிடித்த காலம், பெண்கள் வீட்டை விட்டே வெளியே வராத காலத்திலேயே அப்படி நடந்திருக்கும் போது இந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதும், இல்லாததும் பொல்லாததும் செய்தது போல் புலம்புவதும் சிரிப்பைத் தான் வரவழைக்கின்றன!

ஒன்றை கவனித்தீர்களா? ஒரு பெண் தனக்குப் பிடித்தவனை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவள் என்கிறார்கள்! ஆனால் கூட ஓடும் அந்தப் பையனை ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லாமல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்று சொல்கிறார்கள்! ஆணுக்கு ஒரு நியாயம்; பெண்ணுக்கு ஒரு [அ]நியாயம்! அது சரி, ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள்?

எந்த வீட்டில் பெற்றோர் மகனின்/மகளின் காதலை காது கொடுத்து கேட்கிறார்கள் சொல்லுங்கள்? அப்படியே ஒரு பெண்ணோ பையனோ சொன்ன அடுத்த நிமிடம் அம்மா தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதும், அப்பா பூமிக்கும் வானத்திற்கும் குதிப்பதுமாக இருந்தால் எந்த பையனும்/பெண்ணும் இவர்களிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள்?

பையனின் குடும்பத்தை விடுங்கள், அவனையாவது தலையில் தண்ணீர் தெளித்து விட்டு விடுவார்கள்! பெண்கள் தான் பாவமான பாவம்.! அந்தப் பெண் ஒரு செளராஷ்ட்ரிய பையனை காதலித்தாலும், அது எப்படி நீயாக ஒரு மாப்பிள்ளை தேடிக் கொள்வது? எப்படி நீ ஒரு ஆடவனை தலை நிமிர்ந்து பார்க்கலாம்? நான்கு பேர் நம் குடும்பத்தைப் பற்றி என்ன பேசுவார்கள்? நம் மானம் மரியாதை என்ன ஆவது? என்றெல்லாம் சொல்லி ஏதோ அவளின் கற்பே போய் விட்ட மாதிரி [பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதென்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை] பெற்றோர்கள் நினைக்கிறார்கள்! அம்பிகாபதி, அமராவதி, தேவதாஸ் காலத்திலிருந்து குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டு காதல் படங்களாய் பார்க்க வேண்டியது, பக்கத்து வீட்டில் ஒரு பெண் ஓடி விட்டால் அதைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிசு கிசு பேசிக் கொள்வது அதே தங்கள் வீட்டில் நடந்து விட்டால் குய்யோ முறையோ என்று அழுது புலம்புவது!

சரி, இத்தனை வீராப்பு பேசியவர்கள், ஓடிப் போனவர்களை அப்படியே தண்ணீர் தெளித்து விட வேண்டியது தானே? அதையும் செய்ய மாட்டார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் எல்லா வைராக்கியத்தையும் விட்டு விட்டு மறுபடியும் கொஞ்சிக் குலாவிக் கொள்வது? [இப்போது எங்கே போனார்கள் அந்த நான்கு பேர்?] இதையெல்லாம் அடுத்த செட் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை! எப்படியும் கொஞ்ச நாள் போக்கு காட்டுவார்கள், ஒரு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து அடுத்த ஓட்டம் தயாராகி விடுகிறது! பிறகு அதே ஐய்யோ, அம்மா...மானம் போச்சு, கெளரவம் போச்சு!! ஏன் தேவையில்லாமல் முதலில் அழுது அரற்ற வேண்டும், பிறகு சேர்த்துக் கொள்ள வேண்டும்? ஏன் இந்த கால தாமதம்? உண்மையில் உங்கள் மகன்/மகள் தனக்குத் தகுந்த வரனை அழைத்து வந்தால் பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்ளுங்களேன்! அப்படியே அது தவறானதாக இருந்தாலும் அதை தகுந்த ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!

இது என்ன அவ்வளவு சுலபமா? பெற்றோர்களின் பிரச்சனை தான் என்ன? சரி இதற்கு என்ன தான் செய்வது?

(சீறும்)
தொடரின் முதல் பகுதி இங்கே

பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை பதித்த அனைவருக்கும் நன்றி! நான் சொல்லியது போல் வீட்டில் சொன்னால் நிச்சயமாக அம்மா அப்பா திட்டத் தான் செய்வார்கள்! நூற்றில் பத்து பேர் கூட இப்படி பெற்றவர்களிடம் பேசுவது அறிதாக இருக்கும் பட்சத்தில் [இதற்கும் அத்தனையும் படித்து கிழித்ததுகள்!] அந்தப் பத்து பேருக்கும் பெற்றோர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

1. நீ இப்படி எல்லாம் பெண் வீட்டுக்காரங்களுக்கு பரிஞ்சி பேசினா நாளைக்கு எல்லாத்துக்கும் உன் தலையில மெளகா அரைச்சிருவாங்க...

2. உன் பேச்சை கேட்டுட்டு நாங்களும் எதுவுமே வேணாம்னு சொன்னா நம்ம சாதி சனம் நம்ம பையனுக்கு என்ன குறைச்ச நீங்க ஏன் இவ்வளவு இறங்கி போறீங்க என்று நம்மை கேட்பார்கள்!

3. சரி எப்படி இருந்தாலும் நீ சொல்வது நியாயம் என்றே வைத்துக் கொண்டு, அப்படியே செய்தாலும் "என்ன பையன் எதுவுமே வேணாங்குறான் ஏதாவது குறை இருக்குமோ என்று பெண் வீட்டுக்காரர்கள் நினைத்து விடுவார்கள்.

எப்படி இருக்கு கதை? பெருந்தன்மையாய் ஒருவன் நடந்து கொண்டால் அவன் தலையில் மிளகாய் அரைப்பதா? எதுவுமே வேண்டாம் என்று சொல்பவனுக்கு ஏதாவது இருக்குமோ என்று தப்பு கணக்கு போடுவதா? அத்தனை சந்தேகம் இருந்தால் பையனுக்கும் பெண்ணுக்கும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட்டு இருவரின் உடலையும் பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் கொண்டு முடிவு செய்யலாமே...

இந்த திருமண வைபவத்தில் நடக்கும் இன்னொரு பெரிய கூத்து ஜாதகம் பார்ப்பது! இத்தனை காலமாக ஜாதகம் பார்த்து செய்து வைத்த கல்யாணங்கள் யாவும் நிலைத்து நிற்கிறதா? எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? யாரிடமும் பதில் இல்லை. இதில் ஜாதகம் கணிப்பதை ஒரு அறிவியல் என்று சொல்லிக் கொள்வது கொடுமையிலும் கொடுமை! சரி பெற்றோர்களின் திருப்திக்காக அது ஒரு அறிவியல் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியலில் ஒரே விஷயத்தை எத்தனை பேர் பரிசோதனை செய்தாலும் ஒத்த பதிலே வரும்! அப்போது தான் அதை அறிவியல் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இங்கோ, ஒரு பையனின் ஜாதகத்தையும், ஒரு பெண்ணின் ஜாதகத்தையும் இரண்டு வெவ்வேறு ஜாதகம் கணிப்பவர்களிடம் காட்டினால், ஒருவர் அற்புதமாய் பொருந்துகிறது என்றும் மற்றவர் முற்றிலும் பொருந்த வில்லை என்றும் கூறி ஒரேடியாய் குட்டையை குழப்பி விடுகிறார்கள்!! இதனால் இன்னொரு ஜாதகம் கணிப்பவரிடம் சென்று மூனுக்கு முக்காவாசியாக மெஜாரட்டி தீர்ப்பை எடுத்து முடிவெடுக்கிறார்கள்! !

சில சமயங்களில் மிக அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சொல்லி திருமணம் நடந்து மணமகனோ மணமகளோ வாழக் கொடுத்து வைக்காமல் அல்பாய்சில் போய் சேர்ந்து விட்டால், ஏன் இப்படி நடந்தது என்று ஜாதகப் பொருத்தம் பார்த்தவரை உலுக்கினால், அது தான் விதி, தெய்வ சங்கல்பங்கள் அற்ப மனிதனின் கண்ணுக்குத் தென்படாது...சில சமயங்களில் ஜாதகத்தில் அத்தகைய விஷயங்கள் இருந்தாலும் எங்கள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்து கொள்ளும் என்கிறார்கள்! அதாவது இதற்கு மேல் நீ கேள்வி கேட்கக்கூடாது என்று அர்த்தம்!

இதில் செளராஷ்ட்ரியர்களுக்கு கோத்திரம் என்ற ஒரு விஷயம் வேறு இருக்கிறது. அதாவது பையனுடைய குடும்பப் பெயரும் [ராமியா, தொப்பே, கொண்டா] பெண்ணுடைய குடும்பப் பெயரும் ஒரே கோத்திரத்தில் இருக்கக் கூடாது, அப்படி என்றால் அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று ஒரு கணக்கு! அடடா...ஒரு நல்ல காரியம் நடப்பதற்கு எப்படி எப்படியெல்லாம் தடைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்! பள்ளியில் உறுதிமொழி எடுக்கும் போது "ஆல் இன்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டு அடுத்த வரியான "அன்ட் சிஸ்டர்ஸ்" என்ற வாசகத்தை பள்ளியிலேயே சொல்லாதவன் நான்! எனக்கு ரத்தம் கொதிக்குமா கொதிக்காதா? சரி, அப்படியே ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனும் பெண்ணும் இதெல்லாம் தெரியாமல் காதலித்து விட்டனர்? கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டியிருக்கிறது! அப்போது என்ன செய்வார்கள்? இருக்கவே இருக்கிறது பரிகாரங்கள்! பையனையோ பெண்ணையோ தாய் வழி உறவில் தத்து கொடுத்தது போல் ஒரு சடங்கு நடத்தி இருவருக்கும் ஹோமமும் வயிரும் எறிய திருமணம் நடத்துகிறார்கள்! என்னுடைய கேள்வியெல்லாம் இவை தான்...

1. சின்ன வயதிலிருந்தே பார்த்து பழக்கப்பட்ட ஒரு நல்ல குடும்பத்து பெண்ணை ஜாதகம் சேரவில்லை என்ற ஒரே காரணத்தால் அவளை விட்டு முன் பின் தெரியாத பெண்ணை திருமணம் செய்து வைத்து, அவர்கள் சந்தோஷமாய் இருந்தால் நல்ல விஷயம்! அந்தப் பெண்ணே மாமனாருக்கும், மாமியாருக்கும் எமனாகி விடும் நிலையில் என்ன செய்வது? இப்போது உங்கள் ஜாதகம் என்ன செய்தது?

2. எதற்காக நமக்கு நாமே தேவையில்லாத நம்பிக்கைகளை வைத்துக் கொண்டும், அது மீறும் போது தேவையில்லாத பரிகாரங்களையும் செய்ய வேண்டும்?

3. நீங்கள் ஓடி ஓடி பொருத்தம் பார்த்து சேர்த்து வைத்த அனைவரும் சந்தோஷமாக உள்ளார்களா?

(சீறும்)
செளராஷ்ட்ரியர் குலத்தில் நடக்கும் திருமணங்களைப் பற்றிய பதிவு இது. எல்லா சாதி, மதங்களில் உள்ள சாஸ்திரிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் எங்களிடமும் கொட்டிக் கிடக்கின்றன. பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி என்றே நம்பிக் கொண்டு வந்தவர்கள். பெருமாளா? அவரென்ன சொன்னார்? எப்போ சொன்னார் என்று கேள்வி கேட்காதவர்கள். ஊரைக் கூட்டி அருசுவை விருந்திட்டு தம் புத்திரன்/புத்திரியின் திருமண வைபவத்தை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் சுற்றமும் நட்பும் சூழ பெற்றோர்கள் நடத்துகிறார்கள்! ஆனால் அது இறுதியில் எத்தனை பேருக்கு உண்மையில் சந்தோஷம் அளிக்கிறது என்பது மாபெரும் கேள்வி!

பொதுவாக எங்கள் சமூகத்தில் பையனுக்கு 26, 27லும் பெண்ணுக்கு 21, 22லும் வரன் தேடத் தொடங்குகிறார்கள்! [அதுவரை ஓடிப் போகாமல் இருந்தால் :-) ]சமீப காலமாக பெண்களும் கனினித் துறையில் நுழைந்து கொஞ்சம் அல்ல நிறையவே சம்பாதிக்க தொடங்கிவிட்டதைத் தொடர்ந்து அவர்களின் வரன் தேடும் படலம் 24, 25க்குத் தள்ளப்பட்டிருக்கிறது! வரன் தேடத் தொடங்கியதும் பையனின் ஜாதகத்தை உற்றார் உறவினரிடமும், கல்யாண புரோக்கர்களிடமும் கொடுத்து வைத்து பையனைப் பெற்றோர் தம் தேவைகள் அனைத்தையும் ஒப்பித்து விடுகின்றனர்! அதாவது,

1. பெண் நல்ல குடும்பத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும்.
2. என் மகனுக்கு இணையாக படித்திருக்க வேண்டும். அவளும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் மகனின் விருப்பம்.
3. வைரத்தோடு சேர்த்தோ (அல்லது) சேர்க்காமலோ [it depends on the demand]ஒரு நாற்பது பவுன் பெண்ணுக்குப் போட வேண்டும்! அதை தவிர்த்து, மாப்பிள்ளைக்கும் ஐந்தோ பத்தோ போட வேண்டும்! [மற்ற சமூகங்களை ஒப்பிட்டால் இது கால் தூசுக்குச் சமம் என்று நினைக்கிறேன்]

எனக்கு ஒன்று புரியவில்லை! ஒரு அம்மா, அப்பா பாசமோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரே பையன்! அதே போல் ஒரு அம்மா, அப்பா அதை விட பாசத்தோடு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பெண்! திருமணம் என்று சொல்லி அவள் கழுத்தில் ஒரு தாலி விழுந்ததும் அவள் அப்பா, அம்மா, உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, நாய்க்குட்டி வரை அனைத்தையும் அம்போவென்று விட்டு விட்டு அவன் நல்லவனா, கெட்டவனா, குடிகாரனா, பெண்லோலனா இப்படி ஒன்றும் தெரியாமல் அவன் பின்னால் செல்ல வேண்டும்! அப்படி முன் பின் தெரியாத ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒருவள் அன்றிலிருந்து அந்தக் குடும்பத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து அந்தக் குடும்பத்தில் சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரியாய் வாழ்வதற்கு தன் வீட்டிலிருந்து பணத்தையும், நகையையும் சீர் செனத்தி என்ற பெயரில் அள்ளிக் கொண்டு வர வேண்டும். இது என்ன பழக்கம்? பெரியவர்கள் செய்தால் ஏதாவது நியாயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என்றால் இது என்ன நியாயம்? தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்!

சரி, தன் செல்ல மகளுக்கு பெருமையோடு பல சவுரன்களைப் பூட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் அழகு பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள்..அவர்களால் முடிகிறது அவர்கள் செய்கிறார்கள் அதைத் தடுக்க உனக்கு என்ன உரிமை என்று கேட்பீர்கள்! அவர்களால் முடிந்து செய்கிறார்கள் என்றால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை, ஆனால், எங்கே இதனால் தன் மகளின் திருமணம் தள்ளிப்போய் விடுமோ என்று கேட்டதற்கெல்லாம் தலையாட்டி கடன் பட்டு, மரியாதை செய்து, கடைசியில் அவமானப்பட்டு, வாழும் வழியற்று திக்கற்றுத் திரியும் அந்தப் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களை என்ன செய்வது?

பாசத்தைக் கொட்டி எங்கள் பிள்ளையை வளர்க்கிறோம், என் மகன் கை நிறைய சம்பாதிக்கிறான் கொடுப்பதிற்கு என்ன கசக்குதா என்று மார் தட்டும் பிள்ளையைப் பெற்ற பெற்றோரை பார்த்து எனக்கு ஆச்சரியம்! பையனைப் பெற்றால் ஒரு மாதிரியும், பெண்ணைப் பெற்றால் ஒரு மாதிரியும் பெற்றோர்களால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது? அப்படியென்றால் பாசத்தைக் காட்டிலும் பணம் தானே முன்னிற்கிறது? அதே இவர்களும் ஒரு பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது தவறு! நாங்கள் எங்கள் பெண்ணுக்கு இத்தனை செய்தோம், எங்களுக்கு வருகிற மருமகள் அதே அளவுக்கு கொண்டு வரத்தானே செய்யனும் என்று பேரம் பேசுவார்கள்! ஏன் இவர்களுக்கு பெண்ணைப் பெற்றவர் படும் அவஸ்தை கண்ணுக்குத் தெரிவதில்லை? அதிலும் பெண்ணைப் பெற்றவர் ஒரு பெண்ணை பெற்றிருந்தால் பரவாயில்லை, அடுத்ததும் பெண்ணாய் இருந்தால் இந்தப் பெண்ணுக்கு என்ன செய்தாரோ அதே மாதிரி தானே அவளுக்கும் செய்ய வேண்டும்? அதை யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? [சும்மாவா கள்ளிப்பால் உபயோகப்படுத்தப்படுகிறது!]

என்னைப் பொறுத்தவரை பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களை குறை சொல்லிப் பயனில்லை! அவர்கள் இன்றைய உலகம் அறியாதவர்கள்! இன்னும் பழைய மூட பழக்க வழக்கங்களையும், முகம் தெரியாத அந்த நாலு பேர் என்ன சொல்வார்கள் என்றும் வாழ்ந்து பழகிவிட்டவர்கள்! அவர்கள் ஐந்தில் வளைந்து பழகாதவர்கள்! ஐம்பதில் வளைந்தால் ஒடிந்து விடுவார்கள்! நான் சாடுவது பிள்ளைகளைத் தான்! வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும், தம் பெற்றோர் செய்யும் தவறை ஏன் சுட்டிக் காட்ட மறுக்கிறார்கள்! "என் கல்யாணத்திற்கு நீ பெண் வீட்டில் இத்தனை பவுன் போட்டால் தான் ஆச்சு என்றெல்லாம் கேட்கக்கூடாது, எனக்குப் பெண்ணை பிடிப்பது தான் முக்கியம்! அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடட்டும். என் மனைவியைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்" என்று எத்தனை பிள்ளைகள் தன் தாய் தந்தையிடம் சொல்கிறார்கள்? அப்படிச் சொல்லாத பிள்ளைகள் என்ன படித்து என்ன சம்பாதித்து என்ன பயன்?

இந்தக் கேள்விகள் செளராஷ்ட்ரிய மாப்பிள்ளைகளுக்கு மட்டுமல்ல...

(சீறும்)
சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!

அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும் டெக்னாலஜி தெரிந்த மாதிரியே எவ்வளவு தான் நடிக்க முயன்றாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுதுகள். இப்படித் தான் ஒரு நா, "தல, இது வொர்க் பண்ண மாட்டேங்குது, கொஞ்சம் பாருங்க" என்றது ஒரு வால்! [மவனே தலன்னு கூப்டா கவுக்க பாக்குற, இருடி உனக்கு இருக்கு...!] கொஞ்ச நேரம் இல்லாத மூளையை கசக்கி பிழிகிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு "உன் பக்கத்துல இருக்கே அந்த சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணு!" என்றேன். [தலன்னு கூப்டா, தல அமர்க்களம் படத்துல கண்ணாடிய திருப்புன மாதிரி தானே வழி சொல்ல முடியும்!] என் கெட்ட நேரம் அந்த வாலும் அந்த படத்தை பார்த்து தொலைத்திருந்தது! நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வாலும், "என்ன தல, அன்னைக்கு பிரச்சனைன்னு சொன்னேன், என் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ண சொன்னீங்க அதுல ஒரு லாஜிக் இருந்தது! இன்னைக்கு பக்கத்துல இருக்குற சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணா என் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகும்?" என்றது! "அப்போ ஒன்னு பண்ணு IE ஓபன் பண்ணி கூகுளார் கால்ல விழுன்னுட்டு, ஓ ஹாய் கமிங் யா என்று குரு சிஷ்யனில் ரஜினி கவுதமியிடம் எஸ்கேப் ஆவுற மாதிரி நான் அப்பீட் ஆகுறதுக்குள்ள...ஸ்வபா...அப்பவே கண்ண கட்டிருச்சே! சே! சே!!

சரி, மொத பாராவுல சொன்ன மேட்டரே இன்னும் வர்லியேன்னு நீங்க நெனைக்கிறது புரியுது! கம்ப ராமாயணமே படமா எடுத்தாலும் மாளவிகாவோட ஐட்டம் சாங் இல்லைன்னா யாரு படம் பாக்க வருவா? அதோட, இந்த வாரம் நான் யாரு? ஸ்டாரு! சூப்பர் ஸ்டாரு! நம்ம சூப்பர் ஸ்டார் ஃபார்முலா என்ன? காமெடி கலந்த ஆக்ஷன்! அதானே....அந்த மாதிரி என்ன தான் இந்தப் பதிவுல மேட்டர் இருந்தாலும், காமெடி இல்லைன்னா பதிவு எடுபடுமா! அதான் இரண்டாவது பாரா பூரா காமெடி ட்ராகை ஓட விட்டோம்!..இனி ஃபுல்லா மேட்டர் தான்! என்ன தான் காமெடி பண்ணாலும் நாங்கள்லாம் சப்டில்லா மெசேஜ் வப்போம்ல...அந்த காமெடி ட்ராக்ல மெசேஜ் என்னன்னா...... உங்க பேனாவோ, உங்க புள்ளகுட்டியோ, உங்க வாழ்க்கையோ எது தொலஞ்சாலும் கூகுள்ல தேடுங்கோ கோ கோ![ஹய்யோ ஹய்யோ!]

அலுவலகத்தில் ஒரு நண்பரின் மூலம் கூகுளாரின் அனலிடிக்ஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது! இதில் சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுத்து அவர்கள் கொடுக்கும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பதிவில் இட்டுக் கொண்டால் போதும்! அதற்குப் பிறகு அது கூகுளாரின் பாடு! அடடா...பிரித்து மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதை அங்கு தான் பார்த்தேன்! உங்கள் வலைப்பதிவை இஞ்ச் இஞ்சாக அளந்து, ஆய்ந்து, உங்கள் பதிவிற்கு தினமும் எத்தனை பேர் வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து வந்தார்கள், எந்த வழியாய் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள், உட்கார்ந்து படித்தார்களா, நின்று படித்தார்களா...அட போங்கப்பா...இனிமே நீங்களே படிச்சித் தெரிஞ்சுக்குங்க!

நீங்கள் செய்ய வேண்டியது

1. What is Google analytics? மொதல்ல படிக்க வேண்டியது!
2. Login @ Google Analytics3. உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுக்க வேண்டியது.
4. அவர்கள் கொடுக்கும் இரண்டு வரியை உங்கள் வலைப்பக்கத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
5. பிறகு நேரம் கிடைக்கும்போது லாகின் செய்து உங்களின் வலைப்பதிவின் நிலை என்ன? யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தான் டீ ஆத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது நாலு பேரு வந்து போற இடமா என்று துல்லியமாக கூகுளார் சொல்வதை கேட்டுக்க வேண்டியது!என்ன தான் நமிதா நடிச்ச படத்தொட கதை கேட்டாலும், நமிதாவை படத்துல பாக்குற மாதிரி ஆகுமா? அதனால.... என் வலைப்பக்கத்தின் சில பிரித்து மேயப்பட்ட பகுதிகள் உங்களின் பார்வைக்கு!

நவம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி வரை என் வலைப்பதிவின் நிலவரம்:

தமிழ்மணத்தின் நட்சத்திர அந்தஸ்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது! நன்றி தமிழ்மணம்!அப்படியே மேலாப்ல! [அதாங்க ஓவர்வீய்]திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நம் தமிழர்கள்!புது வரவும்/வழக்கமான வரவும்வெவ்வேறு மொழிகள்எத்தனை விதமான ப்ரளசர்களின் மூலம் என் வலைப்பூ படிக்கப் படுகிறதுஎந்தெந்த கனெக்ஷனின் மூலம் என் வலைப்பூ பார்வையிடப்பட்டதுஎந்தெந்த இணையத்தளங்களில் என் வலைப்பூவின் இணைப்புஎன் வலைப்பூவை அடையும் குறிச்சொற்கள்என் வலைப்பூவில் எந்தப் பக்கங்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டது?இது என்ன பெரிய விஷயமா? இன்டெர்னெட்ல இப்படி எத்தனையோ கெடைக்குது என்று சொல்பவர்களுக்கு...இது வெறும் ட்ரைலர் தாம்மா, மெயின் பிக்சர் நீ இன்னும் பாக்கலை ரேஞ்சுக்கு அதில் ஏராளமாய் இருக்கிறது! ஆங்கில பதிவுகளாய் இருந்தால் ஆட்சென்ஸையும் கோர்த்து விட்டிருக்கலாம்! தமிழுக்கு இன்னும் அது ஆரம்பிக்கப் படவில்லை! என்னாது? ஆட்சென்ஸ்னா என்னவா? ஆத்தி! ஆள விடுங்கப்பூ....

ஸ்டார் பதிவராய் இருந்து கொண்டும், பச்சை [யாரும் என்னை பச்சை நிறத்தில் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!] ரஜினி ரசிகனாய் இருந்து கொண்டும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவு போடவில்லை என்றால் எப்படி என்று யோசித்தேன். சரி எழுதலாம் என்று ஆரம்பித்த்வுடன் தான் தெரிந்தது, எப்பவோ அதைப் பற்றி எழுதி ஆகிவிட்டது என்று! அட ரஜினி....

சரி இப்போது என்ன செய்வது என்று வண்டி ஒட்டிக் கொண்டே யோசித்த போது நேராய் ஒரு மடிசார் மாமியின் பேக்கில் இடித்து, கட்டையில போறவனே என்று என்னை அவர் திட்ட, அதைக் கேட்ட நான் ஐய்யோ, இது பைக் மாமி என்று எஸ்கேப் ஆன போது எனக்கு உதித்தது இந்த யோசனை! என்ன யோசனை?

இது ரீமிக்ஸ் காலம்! ஏன் திரைப்படங்களைத் தான் ரீமிக்ஸ் பண்ண வேண்டுமா? பதிவுகளை ரீமிக்ஸ் பண்ணக்கூடாதா? திடீரென்று அப்படி ஒரு 40 வாட்ஸ் பல்ப் என் மூளையில் பளிச்சிட்டதன் விளைவு இந்த ரீமிக்ஸ் பதிவு! அதாவது வலையுலகின் இலக்கணப்படி ஒரு மீள்பதிவு! எப்படி யோசனை? ஒரிஜினல் பதிவு இங்கே!சூப்பர் ஸ்டாருக்கும் எனக்கும் பால்ய சிநேகிதம்! ஆனால் அந்த சிநேகிதத்தைப் பற்றி அவருக்கோ வேறு யாருக்குமோ தெரியாது! [தூ..இதுக்கு பிச்சை எடுக்கலாம்!] நேத்து பொறந்த வாண்டெல்லாம் மொட்டை ரஜினி மாதிரி மண்டையை தட்டிக் கொண்டிருக்கும் போது, ரஜினியோடவே வளந்தவங்க நாங்க..எங்க அலம்பலை எல்லாம் கேக்கனுமா?

வயித்தைக் கட்டி வாயைக் கட்டி எங்களை படிக்க வைத்த பெற்றோர் எங்கள் [நானும் என் தம்பியும்] கண்ணை மட்டும் கட்டாமல் எப்போது ரஜினி படம் வந்தாலும் மறுக்காமல் கூட்டிச் சென்றனர்! அது ஒரு காலம்!
"கண்ணா அறுலையும் சாவு, நூறுலையும் சாவு அநியாயத்தை கண்டா சும்மா அடிச்சி தூள் பண்ணு" என்று ஒரு வசனம் பேசி விட்டு சும்மா பறந்து பறந்து அடிப்பேன்!20 வருடத்திற்கு முன் பரட்டைத் தலையுடன், அடிக்கடி தலையைக் கோதிக் கொண்டு, சட்டை பட்டன் போடாமல், பாதி டக் இன் செய்து கொண்டு, சாக்ஸுக்குள் பேண்ட் விட்டுக்கொண்டு தெருவில் விளையாடும் ஒரு பையனைப் பார்த்திருந்தால் அது சாட்சாத் நானே தான்! என்ன ஒரு சின்ன கஷ்டம், நான் எம்.ஜி.ஆர் கலர்! [அட்றா..அட்றா..]

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ரைம்ஸ் சொல்வது போல் மூன்று முகம் வசனம் அத்தனையும் பேசிக் கொன்டிருப்பேன்! சாம்பிள் பாக்குறீங்களா?

சங்கிலி முருகன்: அலெக்ஸ்!
அலெக்ஸ்: யேய், பேரை சொல்லிக் கூப்ட நாக்க இழுத்து வச்சு அறுத்திடுவேன்!
சமு: போலீஸ் படையே உன் பக்கம் இருக்குன்ற தைரியத்துல தானே எங்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட?
: போலீஸ் படையா? உங்களைப் புடிக்க போலீஸ் படை எதுக்குடா இந்த அலெக்ஸ் பாண்டியனோட நாய் போதும்!
சமு: எங்க பாஸ் பத்தி உனக்கு தெரியாது?
: என்னடா பூச்சாண்டி காட்றியா? யாருடா உங்க பாஸ்? அவன் என்ன பெரிய கொம்பனா?
செந்தாமரை: இல்லீங்க! அவன் அப்படிச் சொல்லலீங்க!
: [கதவருகில் வந்து நின்று] யார் நீங்க?
செ: என்னை பாத்து யார் நீன்னு கேட்ட மொத ஆள் நீங்க தான்!
: பாத்தவுடனே புரிஞ்சிக்கிறதுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய புள்ளியா?செ: நீங்க இந்த டிவிஷனுக்குப் புதுசு, இந்த ஏகாம்பரத்தோட பேரைக் கேட்ட அழுகுற கொழந்தை கூட வாய மூடும்!
: ம்...[பூமை சுற்றிக் கொண்டே] அதே கொழந்த கிட்ட போய் இந்த அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொல்லி பாருங்க..இன்னொரு கையால தன் அம்மா வாயையும் மூடும்! [முறைப்பு!]

சரி விடுங்க...பூரா படத்தையுமா எழுத முடியும்! சாவகாசமா வீட்டுக்கு வாங்க...நடிச்சே காட்டிருவோம்! :) [அங்கே யார்ரா அது நியுட்டன் மூன்றாவது விதி என்னன்னு கேக்குறது? என்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு ரேஸ்கல்ஸ்!]பழநி சென்ற போது ராகவேந்திரா காப்பு தான் வேண்டும் என்று அடம் பிடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது! என்று தலைவர் நடு உச்சி எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நானும் நடு உச்சி எடுத்து தான் சீவுவேன்! அம்மாவுக்கு எரிச்சலாய் வரும்...என்டா இப்படி உச்சி எடுக்குற என்று கேட்பார்...தெரிந்தால் திட்டு விழும் என்று நான் என்னம்மா பண்றது..அதுவா வருது என்று ஓடி விடுவேன்! தலைவரின் படப் பாடல்கள் எப்படி எனக்கு மனப்பாடம் ஆகிறது அது எப்படி இன்று வரை நினைவிலிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! ஒவ்வொரு படத்திலும் எல்லா பாடல்களும் அத்துப்படியாய் இருக்கும்! தளபதி சரியாக நவம்பர் 5ம் தேதி 1991ல் தீபாவளிக்கு வந்தது [கஷ்டம்!] . அன்று எண்ணெய் வைத்து தலை குளித்து வந்ததும் டீவியில் ஒளியும் ஒலியுமில் ராக்கம்மா கையத் தட்டு பாடல் ஒளிபரப்பினார்கள். தலைவர் லாங்க் ஷாட்டில் ஒரு மதில் சுவர் மேல் நின்று கொண்டு கையைத் தூக்கி "வக்கிர வானம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு ஜோராக" என்றது தாம் தீபாவளி பிறந்த மாதிரி இருந்தது. அதை நான் நவம்பர் 14ம் தேதி 8 மணி ஷோ பார்த்தேன் [ரொம்பக் கஷ்டம்] ! என்ன இவ்வளவு டிலே என்கிறீர்களா, 9ம் தேதியே பார்க்கப் போனேன், டிக்கட் கிடைக்காமல் பக்கத்து தியேட்டரில் ஓடும் ஒரு பாடாவதி படம் [குணா!!!!] பார்க்க நேர்ந்தது! [நிற்க: அப்போது எனக்கு அது பாடாவதி படம் தான்!!]என்னிடம் யாராவது ரஜினி மென்டல் என்று சொன்னால் போதும், அந்த இடத்தில் உடனடியாய் நான் மென்டல் ஆகி விடுவேன்! அப்புறம் என்ன...இப்புடு சூடு என்று பறந்து பறந்து அடிக்க வேண்டியது தான்! நான் குழந்தையாய் ரசித்த ரஜினி, இன்றைய குழந்தைகளும் ரசிக்கும் போது இப்படியும் ஒரு வாழ்க்கை யாருக்காவது கிடைக்குமா என்று தோன்றும்? சிவாஜி வந்த புதிதில் என் மேனஜர் ஒருவர், ரஜினிக்கு 57 வயசு! எங்க அம்மாவை விட வயசானவர்! என்றார்...அந்த ஒரு கணம் நான் பிரமித்துத் தான் போய் விட்டேன்!

ரஜினியின் சில நச் வசனங்கள்! [இதை யார் சொல்லியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமாயிருக்குமா என்பது சந்தேகம் தான்!]

டீக் ஹை [மூன்று முடுச்சு]
குருவம்மாக்கு பாவாடை போட்டா கூட நல்லா தான்டா இருக்கும்! இது எப்படி இருக்கு? [16 வயதினிலே]
வச்சுக்க நீ! [போக்கிரி ராஜா]
ஓ! இப்டி ஒன்னு இருக்கோ? [தம்பிக்கு எந்த ஊரு]
கெட்ட பய சார் இவன்! [முள்ளும் மலரும்]

இந்த உலகத்திலே யாரும் உன்னை விட பெரியவன் இல்லை, அதனால நீ யாருக்கும் பயப்படாதே, இந்த உலகத்திலே உன்னை விட யாரும் சின்னவன் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே! [தில்லு முல்லு]
தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப் புடிக்கும்!ஜெகஜ் ஜாலக் கில்லாடிட மச்சான்![மூன்று முகம்]
மிஸ்டர். கோபிநாத்! இந்த உலகத்துல தான் தான் பெரியவன்னு யாரும் நெனச்சிடக்கூடாது! அவனுக்கு அப்பனும் பொறந்து இருப்பான்! [மிஸ்டர். பாரத்]
பாஸ், நான் படிச்சா உருப்படமாட்டேன்னு எங்க அப்பா படிக்க வைக்கல, எஸ் கிஸ் மீ! [குரு சிஷ்யன்]

ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலு ஸ்கூல் பசங்க! இதுக்கு ஒரு தலைவன்!டேய் கந்தசாமி இங்கே வாடா...[ராஜாதி ராஜா]
டேய் தூ! [ராஜா சின்ன ரோஜா, ரஜினி மாதிரி யாரலயும் துப்ப முடியாது!]
இந்த பீடி முடியிறதுக்குள்ள உங்க தலைவன் கதய முடிச்சிட்றேன்! [பணக்காரன்]
ஏன்னா நீ என் நண்பன்! [தளபதி]
உங்களை மாதிரி அகங்காரமும், அகம்பாவமும் புடிச்ச பொண்ணுங்களைக் கண்டா என்ன விட்டுடுங்க, என் தல முடி கூட ஆடாது![மன்னன்]
மலைடா அண்ணாமலை![அண்ணாமலை]
நம்ம ஆளுங்க கிட்ட நம்ம மொழியில பேசுங்க! அதான் நமக்கும் மரியாதை நம்ம மொழிக்கும் மரியாதை [எஜமான்]
ஹவ் இஸ் இட்?[வீரா]
இனிமே உன்னை இந்த இடத்துல பாத்தேன், பாத்த இடத்துலயே குழி தோண்டி பொதச்சுடுவேன்! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி! [பாட்ஷா]
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது! கிடைக்காம இருக்கிறது கிடைக்காது! [முத்து]
பாத்து வேலை செய்! பாத்தவுடனே வேலை செய்யாதே![அருணாச்சலம்]
என் வழி தனி வழி! [படையப்பா]
இல்ல முருகேஷா...[சந்திரமுகி!]
பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல![சிவாஜி]நான் ரஜினி ரசிகன் என்று மார் தட்டியதில் மேல் சொன்னதில் ஏதேனும் பிழை இருந்தால்...எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்![ஐய்யயோ இந்த டயலாக் சிவாஜி பிறந்தநாளுக்கு வேணுமே!]

last but not least....
தலைவா, என் பேரக் குழந்தையும் உங்களை ரசிக்கனும்! அதுவரைக்கும் நீங்க நடிக்கனும்! அம்புட்டுதேன்! லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலை நிறைய எண்ணெய் வைத்து, அழுத்தி தலை வாரி கழுத்திலும், கையிலும் கருப்பு கயிருடன் வலம் வரும் ஹீரோ! கடுகளவு கூட இடுப்போ, தொப்புளோ தெரியாத ஹீரோயின், பூ விழுந்த கண்ணோடு கூட படிக்கும் ஒரு பெண், எங்க தாத்தாக்கு மேலுக்கு முடியல, அதான் எனக்கு கண்ணாலம் என்று வெகுளியாய் ஒரு பையன், வாழ்வின் கஷ்ட நஷ்டங்களினால் வயதுக்கு மீறிய அனுபவ அறிவுடன் மற்றொரு பெண், கல்லுடைக்கும் வயதான அப்பா, அண்ணன் படிக்கட்டும் என்று தன் படிப்பை தியாகம் செய்து கல்லுடைக்கும் அருமை தங்கை, க்ளாஸில் கைட் விற்கும் புரஃபசர்....இப்படி சினிமாவின் எந்த சாயலும் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது பாலாஜி சக்திவேலின் கல்லூரி!

கல்லூரி என்றாலே ஜீன்ஸ், டீ சர்ட், மினி, மைக்ரோ ஸ்கர்ட் என்று படம் காட்டிக் கொண்டிருந்த கோலிவுட் சற்று மிரண்டு தான் போயிருக்க வேண்டும்! ஆணும் பெண்ணும் கடைசி வரை நட்பாய் பழகவே முடியாதா என்ற கேள்விக்கு கல்லூரியை களமாக்கி அரிதாரம் பூசாத நிஜ மனிதர்களாய் உலவ விட்டிருக்கிறார் பாலாஜி சக்திவேல்!

உள்ளே காலியாக இருந்தாலும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவது...வீட்டுக்கு போனா அப்பன் தொல்லை, பஸ்ஸுக்கு வந்தா கண்டக்டர் தொல்லை என்று கானா எடுத்து விடுவது, நம்ம க்ளாஸ்லயும் இப்படி ஒரு ஜாரியா என்று பல்லிளிப்பது, வட்டமாக உட்கார்ந்து அனைவரும் உணவை பரிமாறிக் கொள்வது, உள்ளூர் கலவரத்தில் உடைபட்ட பாதையை சாக்கடையில் இறங்கி சரி செய்வது, தம் கூடப் படிக்கும் பெண்டு பிள்ளைகளை ஜாக்கிரதையாக வீட்டில் விட்டுச் செல்வது, நண்பர்கள் புடை சூழ சினிமாவிற்குச் செல்வது, நண்பனின் கல்யாணத்திற்குச் சென்று க்ரூப் ஃபோட்டொ எடுத்துக் கொள்வது, ஒட்டப் பந்தயம் தொடங்கும்போது நண்பன் வெற்றி பெற வேண்டுமே என்று ஓடிச் சென்று திருநீறு பூசி விடுவது, அடுத்த கல்லூரியின் கல்ச்சுரல்ஸ் சென்று பிரச்சனை ஆவது, கல்லூரிச் சுற்றுலாவில் சங்கில் எல்லாருடைய பேரும் எழுதிக் கொள்வது என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் ஒவ்வொருவரின் கல்லூரி நாட்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்!

ஜோஷ்வாவின் இசையில் நா முத்துக்குமாரின் வரிகள் கொஞ்சம் காதிலும் விழுகின்றன! படத்தில் பாடல்கள் உறுத்தாத அளவுக்கு அளவாகவும், அழகாகவும் செழியனின் விழியினூடே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். வெண்ணீராடை மூர்த்தி மற்றும் வழக்கமாய் கல்லூரி படங்களில் வரும் ப்ரொபசர்கள் இல்லாதது மிகப் பெரிய ஆறுதல். உணர்ச்சிகரமான கட்டங்களை இன்னும் கொஞ்சம் லைட்டாக சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது, ஏனென்றால் அத்தகைய கட்டங்கள் தியேட்டரில் காமெடி ஆகிவிடுகிறது...

காதல் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகி எங்கே இது தோல்வியைத் தழுவி விடுமோ என்பதற்காக அதை தவிர்க்கும் வண்ணம் வரும் பத்திரிக்கை விளம்பரங்கள் தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம்! இந்தப் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை! நீங்கள், "என்ன இப்படி நெஞ்சை நக்குறாய்ங்க" ரகத்தினரானால் கொஞ்சம் கஷ்டம் தான்! ஆனால் அது பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இல்லை! நட்பையும், காதலையும் சொல்லும்போது அதுவும் கல்லூரி காலங்களில் நடப்பவை என்பதால் அத்தகைய உணர்ச்சி மிகுந்த காட்சிகள் தவிர்க்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்!

சங்கர் ஒரு நல்ல இயக்குநர் என்பதை விட நல்ல தயாரிப்பாளர் என்ற என் எண்ணம் மேலும் வலுவுற்றிருக்கிறது!
நான் வலையுலகில் என் வலது கையை எடுத்து எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் அகி விட்டன! எதுவுமே வெகு சீக்கிரத்தில் சலித்து விடும் எனக்கு இது ஒரு ஆனந்தம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது! ஏனென்றால் எத்தனையோ உருப்படியான காரியங்களை [அவரவர் மனதிற்கு எது சந்தோஷத்தையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறதோ!] எனக்குள் நானே சலித்துக் கொண்டு பல முறை கை விட்டிருக்கிறேன்! அத்தகைய ஒரு உருப்படியான காரியத்தை இவ்வளவு நாட்கள் என்னால் தொடர்ந்து செய்ய முடிந்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சி!

வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]

நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!

இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]

யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜ மகா ராஜ வீர பிரதாப
ராஜாதி ராஜன் வந்தேனே...வந்தேனய்யா....

வந்தனம் தந்தேனைய்யா!
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
சாமி...
வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனைய்யா!!
தத்தோம் தரிகிட..தித்தோம் திரிகிட தா!!

பெரியோர்களே! சபையோர்களே...

இன்று தொடங்கும் என் நட்சத்திர வாரத்திலே சொற்குற்றம் பொருட்குற்றம் எக்குற்றம் இருப்பினும் குற்றத்தை மறந்து குணத்தை மட்டும் கொள்ளும்படியாக தாழ்மையுடன் தண்டியிட்டும் மண்டியிட்டும் கேட்டுக் கொள்கிறேன்!!

டேய் மூடா சோடா!!

க்ளுக் க்ளக்....

ஆ! வர சொல்லு வர சொல்லு....
சமீபத்தில் விகடனில் வந்த சாப்ளீனின் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் உந்துதலால் சாப்ளீனின் படங்களாய் பார்க்க ஆரம்பித்தேன். நான் வாங்கும் டிவிடி கடையில் ஆரம்ப காலங்களில் அவர் இயக்கி நடித்த குறும்படங்களே கிடைத்தன. வெகு காலமாய் சாப்ளீன் ஹிட்லரை கேலி செய்து நடித்த படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அது சமீபத்தில் நிறைவேறியது...

"க்ரேட் டிக்டேட்டர்" - இது சாப்ளீன் பேசிய முதல் படம்.

இந்தப் படத்தில் ஒரு யூத சவரத் தொழிலாளியாகவும், ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியாகவும் இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் என்னமாய் நடித்திருக்கிறார். இந்தப் படம் அவர் வழக்கமாய் நடிக்கும் கேலிச் சித்திரம் அல்ல...சர்வாதிகாரிகளையும், போலியான மனித வாழ்வையும் அத்தனை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதற்கு மேல் நான் படத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னால் சொல்லவும் முடியாது...இந்தப் படத்தின் இறுதியில் சாப்ளீன் தன்னுடைய கதாபாத்திரதிலிருந்து விலகி அசல் சாப்ளீனாகவே மாறி மனிதம் மறந்து போன மனிதர்களை தன் பேச்சு வன்மையால் விளாசித் தள்ளுகிறார்.அந்த உரையை தான் கீழே திரையிட்டுருக்கிறேன்!பிற்காலத்தில் அந்த சொற்பொழிவின் உன்னதத்தை உணர்ந்து அமேரிக்க அரசாங்கமே அதை வானொலியில் வாசிக்குமாறு அவரை பணித்தது. நியுயார்க் டைம்ஸில் அந்த ஆண்டின் சிறந்த பத்து படங்களில் ஒன்றாக "க்ரேட் டிக்டேட்டர்" தேர்வு பெற்றது.

எனக்கு இரண்டு வருத்தங்கள்!

1. மார்டின் லூதர் கிங் ஆற்றிய பிரபலமான சொற்பொழிவு "ஐ ஹேவ் அ ட்ரீமை" போல் ஏன் இது அத்தனை பிரபலம் அடையவில்லை!
2. பேசும் படங்கள் இன்னும் சற்று முன்னதாகவே வந்திருக்கலாம்!
யாரும் பார்க்காத
வேளையில் - அதைப் பற்றி
எந்தக் கவலையுமில்லாமல்
மொட்டு ஒன்று
மெல்ல பூக்கிறது!

நின்ற நிலை கடந்து
அமர்ந்த நிலை அற்று
தவழ்ந்து வரவும் தெம்பின்றி
தனியே - பசியில்
சாகிறது ஒரு ஜீவன்

ஜாதியின் பெயராலோ
மதத்தின் பெயராலோ
ஒரு அழகிய காதலை
தீயிட்டுக் கொளுத்துகிறது
ஒரு கூட்டம்

எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒரு பெண்ணை வன்புணர
துரத்திக் கொண்டு
ஓடுகிறது ஒரு கூட்டம்!
அவளின் மரண ஓலம்
செவிட்டில் அறைகிறது!!

முந்தானையை பிடித்துக் கதறும்
குழந்தையின் கையை விலக்கிவிட்டு
சத்தமில்லாமல் அழுது கொண்டே
போகிறாள் ஒரு தாய்

கிழக்கே இரவை நோக்கியும்
மேற்கே பகலை நோக்கியும்
நாட்கள் உருண்டோடுகின்றன

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும்
குழந்தை ஒன்று - சிறிதாக
ஒரு புன்னகை பூக்கிறது...
பாண்டி அந்த போலீஸ் ஸ்டேஷனையே வைத்த கண் வாங்காமல் ஒரு பீலிங்கோடு பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கேஸை கூட உருப்படியா பிடிக்காததால் வேலைய விட்டே தூக்கிட்டாங்க! அதே ஸ்டேஷனில் அவர் ராஜ நடை போட்டது அவர் கண் முன் விரிகிறது...

டக் டக் என்று கம்பீரமான ஒரு பூட்ஸ் சத்தம் கேட்கிறது...ஒரு கருப்பு கூளிங் கிளாஸில் ஸ்டேஷனுக்குள் நுழைகிறார். வாசல் படி
தடுக்கி கீழே விழுகிறார்.

பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] யு, ஸ்டுப்பிட் அண்ட் நான்சன்ஸ் ஆல்சோ...ஸ்டேஷனை சுத்தமா மெயிண்டைன் பண்ண வேணாம்?
இருளடைஞ்சி போயிருக்கு! கண்ணே தெரியலையே...
கான்: சார் நீங்க கூளிங் க்ளாஸை கழட்டினா...
பாண்டி: ஓ, மை சீ...[கழட்டிக்கொண்டே] ஆல் ரைட் ஆல் ரைட்...[வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது!]
கான்: சார், இவர் தான் நம்ம ஸ்டேஷன்ல புதுசா சேந்துருக்குற கான்ஸ்டபிள்..பேரு சுப்பையா சார்!பாண்டி: சுப்பையாவோ, குப்பைய்யாவோ, நான் கடமை கண்ணியம் காக்கிச்சட்டைன்னு வாழ்றவன்...எனக்கு கடமை தான் முக்கியம்!
சுப்: சார் உங்களைப் பத்தி எனக்கு நெறைய டவுட் இருக்கு சார்..கொஞ்சம் க்ளியர் பண்றீங்களா...
பாண்டி: கோ கோ...[சுப்பையா போகிறார், அவரை அழைத்து...]கேளுன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்..இங்கிலீஷ் தெரியுமா?
[சுப் முறைக்கிறார். பாண்டி முழிக்கிறார்!]
சுப்: அது கோ அஹெட்டு...
பாண்டி: [மனதுக்குள்] ஆஹா, நம்மகிட்ட வர்றவங்க மட்டும் டான்பாஸ்கோ ஸ்கூல்ல படிச்ச மாதிரி டான் டான்னு இங்கிலீஷ் பேசுறாங்களே...ஒரு வேளை என்கிட்ட அனுப்புறதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல ட்ரயின் பண்ணி அனுப்புறாங்களோ?
சுப்: சார்....உங்க நடை உடை தோரணை எல்லாம் பாக்கும்போது ஒரே மிரட்டலா இருக்கு..ஆனா நீங்க ஏன் சார் இந்த சிரிப்பு போலீஸ் மாதிரி சின்னதா மீசை வச்சுருக்கீங்க...
பாண்டி: [சிரிப்பு போலீஸா, இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா...]குட் கொஸ்டீன்! நானும் ஒரு காலத்துல வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி தான் மீசை வச்சிருந்தேன்! ஆனா ஒரு சங்கிலித் திருடனை துரத்திப் புடிக்கும் போது நான் ஒரு எடத்துல எம்பிக் குதிச்சதுல ஒரு பக்கத்து மீசை என் கண்ணையே குத்திருச்சு! அதனால அன்னைக்கு என்னால அந்தத் திருடனை புடிக்க முடியலை...என் மீசையாலயே என்னோட காக்கிச்சட்டைக்கு களங்கம் வரனுமான்னு யோசிச்சேன்! பாக்க சிரிப்புப் போலீஸா இருந்தாலும், உள்ளே
நெருப்பு போலிஸா இருப்போம்னு முடிவு பண்ணேன்! வெளியே நான் சாப்ளீனா இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு ஹிட்லர் மல்லாக்கப் படுத்து தூங்கிகிட்டு இருக்கான்றதை நீ மறந்துராதே...
சுப்: சூப்பர் சார்...வெளியே சிரிப்பு போலீஸ்; உள்ளே நெருப்பு போலீஸ்! அள்ளிட்டீங்க சார்...
பாண்டி: யோவ், இது என்ன பெருமாள் கோயிலா அள்றதுக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீனை ஐ சே!
சுப்: சார் இதுவரைக்கும் நான் வேலை பாத்த ஸ்டேஷன்ல எல்லாம் ரவுடிங்களுக்கு தான் ரவுடி ரங்கன், செயின் ஜெயபால், சைக்கிள் சூசை, ஜேப்படி ஜெகதீஸ்னு பேரு இருக்கும். உங்களுக்கு ஏன் சார் டூமில் பாண்டின்னு பேர் வந்தது...
பாண்டி: கம் டு த பாயிண்ட்! [மனதுக்குள்: எதுக்கு வம்பு தமிழ்லையே பேசுவோம்!] நான் நெனச்ச கேள்விக்கு வந்துட்டே...சொல்றேன்
கேளு...அது 1999ம் வருஷம். அப்போ நான் ஏட்டா இருந்தேன்...
சுப்: அப்பவுமா?
பாண்டி: [முறைத்து விட்டு] காமன் சென்ஸ்! கதைய கேளு மேன். எங்களுக்கு ஒரு பயங்கர கொள்ளைக் கூட்டத்தைப் பத்தின துப்பு கெடச்சது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் பேர் போன என்னை நம்பி ஒரே ஒரு கான்ஸ்டபிளோட அந்தப் பெரிய கூட்டத்தை பிடிக்க அனுப்சாங்க! அவங்க எல்லாரும் அந்த பாழடஞ்ச கட்டடத்துல இருந்தாங்க...நாங்க ரெண்டு பேரும் அந்த இடத்தை சுத்தி வளைச்சுட்டோம்!
சுப்: ரெண்டு பேர்.....! சுத்தி...அப்புறம்...

[காட்சி விரிகிறது]

பாண்டி: [மைக்கை எடுத்து] ஹாய் ப்ரண்ட்ஸ்! [ஹா ஹா...சற்று கர்ஜித்து விட்டு] நீங்க யாரும் எங்க இரண்டு பேர் கிட்ட இருந்து தப்ப முடியாது. உங்களை சுத்தி வளைச்சுட்டோம்! ஏட்டுப் பாண்டியா கொக்கா! [ஹா ஹா] தப்பிக்க நெனைச்சா என் துப்பாக்கி இரையாயிடுவீங்க...[துப்பாக்கியை எடுத்து வானில் சுடுகிறார். அதில் தோட்டாவே இல்லையென்று அப்போது தான் தெரிகிறது!]

[இண்டெர் கட்]

சுப்: ஐய்யயோ, அப்புறம் என்ன பண்ணீங்க...பாண்டி: இதுக்கு முன்னாடி என் வீரத்தை பாத்தே, இங்கே என் விவேகத்தை பார்...

[மறுபடியும் காட்சி]

கான்1: என்ன சார், தோட்டா இல்லையா...
பாண்டி: அதான் எனக்கு குழப்பமா இருக்கு!
கான்1: இப்போ எப்படி சார் அத்தன பேரையும் புடிக்கிறது?
பாண்டி: நீ ஒன்னும் கவலைப்படாதே..இப்போ பார்!
[உள்ளேயிருந்து ஒருவன், என்னங்க ஏட்டு துப்பாக்கி சத்தமே வர்ல...]
பாண்டி: இப்போ கேளுங்கடா...ஹா ஹா... டுமீல் டுமீல்...டுமீல் டுமீல்...[வாயால் "டுமீல்" "டுமீல்" என்று பாண்டி கத்துகிறார்]
[ஒரே நிசப்தம்!]
பாண்டி: என்னங்கடா சத்தத்தையே காணோம்! எல்லாம் பயத்துல ஒன்னு, ரெண்டுன்னு போயிட்டீங்களா...
[உள்ளேயிருந்த கொள்ளைக் கூட்டம் வெளியே வருகிறது]
பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] பாத்தியா அத்தனை பேரும் சரண்டர்...ஹா ஹா..
தலைவன்: ஆமா, எங்கே இன்னொரு தடவை சுடுங்க..
பாண்டி: [பழக்க தோஷத்தில் டுமீல் டுமீல் என்று சத்தம் போட]
தலைவன்: இவ்வளவு நாள் காக்கிச்சட்டையோட வீரத்தை தான் பாத்துருக்கேன், இன்னைக்கு தான் அதோட அறிவுக் கொழுந்தை
பாக்குறேன்!
[பாண்டி கர்வமாய் கான்ஸ்டபிளை பார்க்கிறார்]
தூத் தேரி...திருடன் போலிஸ் வெளையாட்றவனை எல்லாம் போலிஸ்
ஆக்கிட்டானுங்க! உன் கைல பிடிபட்றதுக்கு நாண்டுட்டு சாவலாம்டா....தூ! துப்பாக்கியில தோட்டா இல்லையாம், அதனால இவர் டுமீல் டுமீல்னு சவுண்ட் விடுவாராம், அதை கேட்டு நாங்க ஒன்னுக்கும், ரெண்டுக்கும் போயிடுவோமாம்! எங்களை இவ்வளவு கேவலப்படுத்திட்டியேடா...உன்னை....[பாண்டிக்கு தரும அடி விழுகிறது]
பாண்டி: [முடிந்ததும்...மனதுக்குள்] ஆரம்பிக்கும்போது நல்லா தான் ஆரம்பிக்கிறாங்க...முடிக்கும் போது தான்...நாம கொஞ்சம் ஓவரா
தான் போயிட்டோமோ?

[காட்சி முடிகிறது]

சுப்: தூ...
பாண்டி: என்ன நீயும் துப்புற?
சுப்: இதெல்லாம் ஒரு கதை...இதுக்கு ஒரு ப்ளாஸ் பேக் வேற...
பாண்டி: [மனதுக்குள்] மொதல்ல பேர் காரணத்துக்கு நல்ல ஒரு கதையா டெவலப் பண்ணனும்! ஆளாளுக்கு துப்புறாங்களே...
வலைபதியாததற்கு அலுவலகத்தில் வேலை என்று இப்போது சாக்கும் சொல்ல முடியாது! ப்ராஜக்ட் முடிந்து விட்டதால், போய் எங்காவது ஒழி என்று இரண்டு வாரம் லீவு கொடுத்து அனுப்பி விட்டார்கள்! சும்மா இருப்பதே சுகம் என்று வீட்டில் தான் இருக்கிறேன்! ஆனாலும் ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!!

முதல் நாள் முழுவதும் வீட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன்! கொஞ்சம் பயம் வந்து விட்டது. என்னடா அலுவலகத்தில், நாங்கள்ளாம் எப்படியெல்லாம் கோட் அடிச்சோம் தெரியுமா என்று தாம் தூம் என்று குதித்து லீவு வாங்கினோமே, இந்த ஒரு நாளுக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே என்று பகீரென்றது! சரி வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஞானம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது!

அந்த ஞானத்தின் விளைவாக என் நண்பன் ஒருவன் செங்குன்றத்தை தாண்டி ஒரு கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால் சீக்கிரம் திருமண பாக்கியம் கிட்டுவதோடு வீடு, மனை வாங்கும் சுப காரியங்களும் நடைபெறும் என்று சொன்னான்!! அடேய் நான் ஆல்ரெடி வீடு வாங்கியாச்சே அது கைய விட்டு போகாதுல்ல என்று அப்பாவியாய் கேட்ட என்னை பொருட்படுத்தாது அந்தக் கோயிலுக்கு கூட்டிப் போனான்! போகும் வழியெல்லாம் என் சிந்தனைகள் இங்கு சில பத்திகளாக...

அவன் சொன்ன கோயில் செங்குன்றத்தை தாண்டி கொல்கத்தா ஹைவேயிலிருந்து சிறுவாபுரி என்ற இடத்தில் ஒரு டீ கடை சந்தில் திரும்பி வயல் வரப்புகளை கடந்து போனால் வருகிறது. அங்கு சீண்டுவாரேயில்லாமல் அப்பாவியாய் ஒரு முருகன் காட்சியளிக்கிறார்! சரி சிறுவாபுரியின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்தக் கோயிலைப் பற்றி இப்படி ஒரு கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்! நான் போய் இறங்கியதும் என் நண்பர்களை முறைத்து சொன்னது, "நான் ஐ பாட் வச்சிருந்ததாலே நீங்க தப்பிச்சீங்க!!" உடனே என் நண்பன் நீ தான் சாமி கும்பிட மாட்டியே ஹெல்மெட்டை வச்சுக்க என்றான்! எனக்கு அப்போ தான் வெளங்கிச்சு இதுக்கு தான் நம்மள கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு...ஹைய்யோ...ஹைய்யோ!!

அது ஒரு சின்ன கோயில் தான், சுற்றுலா துறையினரின் [டீ கடை பசங்க] புத்திசாலிதனத்தால் கோயிலை புதுப்பிக்கும் அளவிற்கு பொருள் சேர்ந்திருக்கிறது! பாவம் முருகன் வழக்கம் போல் குபு குபுவென்று கொதிக்க கொதிக்க உஷ்ணத்தில் நிற்கிறார். அய்யர் சற்றே வெளியில் வந்து பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் இடத்திற்கு டைல்ஸ் ஒட்டி ஸ்ப்ளிட் ஏசி எல்லாம் பொருத்தியிருப்பது கொஞ்சம் ஓவர்! என் நண்பன் முருகனிடம் உருகி வேண்டிக் கொண்டிருந்தான்! போதும் வாடா, ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் ஆயிட போகுது என்றேன்...அதற்கு அவன், இருடா, ஒன்னுக்கு ரெண்டு வீடா கெடச்சுட்டா என்றான்! அடக் கடவுளே....

அப்போது மணி மாலை ஒரு ஆறு இருக்கும். அந்த நேரத்தில் கூட கோயிலில் எங்கள் மூவருடன், அந்தக் கோயில் அய்யர், இன்னும் சிலர், அப்புறம் ரொம்ப கொசு...அவ்வளவு தான்! என் நண்பன் ஒருவனுக்காகவே அய்யர் ஓடி ஓடி எல்லா கடவுளுக்கும் லைட் போட்டு தீபாராதனை காட்டி...என்ன ஒரு ஸ்பெஷல் கவனிப்பு!! அங்கு சுற்றுலா துறையின் ஒரு அதிகாரி நான்கு கற்களை பொறுக்கி வைத்துக் கொண்டு சார், வீடு கட்டுங்க சார் நெனச்சது நடக்கும் என்றார்! எனக்கு தூக்கி வாரிப் போட்டது...ஓஹோ சிச்சுவேஷனை மெயின்டெய்ன் பண்றீங்களா..ஆமா சார் இங்கே கன்ஷ்ட்ரக்ஷன் காஸ்ட் என்ன போகுதுன்னு ஒன்னும் எஸ்கலேஷன் ஆகலையா என்று கேட்டிருக்கலாம்! சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்! விட்டுட்டேன்!!

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!! இந்தக் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல! முருகன் முகத்தைத் தவிர அனைத்திலும் உபயம் இருந்தது! ஒரு வேளை ப்ரஹாரம் இருட்டாக இருப்பதால் அங்கு இருக்கும் உபயம் தெரியவில்லையோ என்னமோ! ஒரு அழகான முருகன் படத்தை அய்யர் கொடுத்தார், நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கிப் பார்த்தால் முக்கால் படம் முருகனுக்கு, மீதி கால் படம் விளம்பரத்திற்கு!!

துக்கம் வரும் சமயத்தில் ஆறுதலாய் இருப்பதற்காக கடவுள் என்ற பாத்திரத்தை மனிதன் படைத்தான்! கஷ்டம் வரும்போதெல்லாம் அதோ கடவுள் வருவார், அவர் நமக்கு எல்லா செல்வங்களும் அள்ளித் தருவார், நம் கஷ்டங்களை எல்லாம் போக்குவார்...இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பி காலம் தள்ளினான்! இன்று அந்த நம்பிக்கையும் நீர்த்துப் போய் எத்தனை போலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கடவுள் கடவுள் என்று இல்லாத கடவுளின் பெயரை சொல்லி இருக்கும் சக மனிதனை ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு? திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி..இப்படியே போனால் அந்தக் கோயிலுக்கு போ, வீட்டு குழாயில் தண்ணீ வரும், அந்தக் கோயிலுக்குப் போ வீட்ல கரண்டே போகாது என்று கூட சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!!

என் நண்பர்களை போல் பலர் இருக்கிறார்கள்! இத்தகைய விஷயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை!! ஆனாலும் அவர்கள் அந்த மூட நம்பிக்கைச் சேற்றுக்குள் சுகமாகவே மூழ்கிக் கிடக்கிறார்கள்! என்னுடன் தானே படித்தார்கள் என்று அவர்களின் கல்வியையும், பகுத்தறிவையும் அதே சேற்றில் என் கையால் துழாவுகிறேன்! துழாவிக் கொண்டேயிருக்கிறேன்!!
வேளச்சேரியிலிருந்து என் ஜாகையை மாற்றிக் கொண்டு மடிப்பாக்கத்திற்கு வந்து விளையாட்டாய் மூன்று மாத காலம் ஆகிவிட்டது! கடந்த ஒரு மாத காலமாய் புது இடத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சரி எழுத ஒன்றும் கிடைக்காத போது இதைப் பற்றி ஜல்லி அடித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்!

"பெயர் மறந்து போன" ப்ரோட்டீன்ஸ் [ப்ராய்லருக்கு கடைக்கு புது விதமான பெயர்], படையப்பா சலூன், சுனாமி ஸ்நாக்ஸ் எல்லாம் தாண்டி நடு ரோட்டில் படுத்திருக்கும், மாட்டு மந்தையின் மேல் ஏறாமல் நேராய் வந்தால் பஸ்சே இல்லாத மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டி ஒரு சிதிலமடைந்த சிமிண்ட் சாலையில் நடந்தால் 5 நிமிடத்தில் என் ஜாகை!

வாழ்க்கை ஒவ்வொருவரையும் எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது! மதுரை திருமலை நாயக்கர் மஹால் 7 வது தெருவில் வசித்து வந்த என்னை ஒரு சுனாமி பேரலை போல் தாக்கி தூக்கி எறிந்ததில் நான் விழுந்தது நியு தில்லி கரோல் பாக். அங்கிருந்து சண்டிகரில் சில பல செக்டார்களை கடந்து பெங்களூர் திப்பசந்திராவில் குடி புகுந்து சென்னை வேளச்சேரியிலிருந்து தற்போதைக்கு மடிப்பாக்கத்தில் என்னை கொண்டு சேர்த்திருக்கிறது வாழ்க்கை! எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு சராசரி இந்தியனைப் போல் ஒரு பெரிய அபார்ட்மென்டில் ஒரு சிறிய வீட்டை வாங்கியாகிவிட்டது!! இனி மடிப்பாக்கம் தான் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்! பார்க்கலாம்...

மடிப்பாக்கத்தில் இருப்பது ஏதோ மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை ஒட்டிய ஒரு அக்ரஹாரத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுகிறது!! எங்கும் மடிசார் மாமிகளும், ஆங்கிலம் பேசும் மாமாக்களும் வியாபித்திருக்கிறார்கள்! எல்லா பிள்ளைகளும் அமேரிக்காவில் செட்டில் ஆகி விட, ஒரு பெரிய வீடு கட்டிக் கொண்டு கிருஷ்ணா ராமா என்று காலம் கழிக்கிறார்கள் பெரும்பாலோர்! ஏன்டா அம்பி, ஆத்துக்கு வரப்படாதா என்று என்னிடம் மாமிகள் யாராவது கேட்டால் ரொம்ப பவ்யமாய் "இல்லை மாமி, நேக்கு நீச்சல் தெரியாது, நான் பாத்ரூம்லையே ஸ்நானம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்! என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் போடா அசடு என்பார்களா? என்ன ஒன்று இன்னும் இள வயது மாமிகள் யாரும் என் கண்ணுக்கு சிக்கவில்லை...

மடிப்பாக்கம் பஞ்சாயத்தாரின் வசம் இருக்கிறது. அந்த ஆலமரத்தை நான் இன்னும் பார்க்கவில்லை! பார்த்தால் சொல்கிறேன். மடிப்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தது என்றும் கேள்விபட்டேன்! மடிப்பாக்கத்தில் நல்ல சாலைகளே இல்லை. கைவேலி சாலை கொஞ்சம் பரவாயில்லை. நான் இருக்கும் தெருவில் சில நாட்களுக்கு முன் நல்ல மழை நாளில் சாலை போட்டார்கள்! எப்படா என்று காத்திருந்தவர்கள் போல் ஃபோன் லைனுக்காக குழி தோண்டி போட்டார்கள்! சாலை போட்டதற்குப் பிறகும் குழி தோண்டுவதற்கு முன்னும் அது குண்டும் குழியுமாய் தான் இருந்தது என்பது வேறு விஷயம்! மடிப்பாக்கம் மிகவும் தாழ்ந்த இடம் என்றும் மழை நீர் தேங்கும் என்றும் பயமுறுத்துகிறார்கள்! எப்படியோ என் வீட்டில் கார் பார்க்கிங் வசதி இருக்கிறது, அதை தக்க சமயத்தில் போட் பார்க்கிங்காக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்....நல்ல கட்டுமரம் ஒன்று சீப்பாக எங்கு கிடைக்கும்?

சென்னையில் எங்கே இருக்கே? என்று கேட்பவரிடம் மடிப்பாக்கம் என்றால் அது ரொம்ப தூரம் ஆச்சே என்கிறார்கள்! அவர்களுக்கு நான் அளிக்கும் ஒரே பதில் சென்னையில் எல்லாமே தூரம் தான்! ஒவ்வொரு ஏரியாவும் ஒவ்வொரு ஊர்! மயிலாப்பூரில் இருப்பவருக்கு வேளச்சேரி பிடிக்காது, புரசைவாக்கத்தில் இருப்பவருக்கு தி.நகர் பிடிக்காது! அவரவர் இடம்; அவரவர் வாழ்க்கை!! என்ன சொல்கிறீர்கள்?
அலுவலகத்தில் என் நண்பன் ஒருவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்திக் கொண்ட மெயிலிங் க்ரூப்பில் (நூன் ஷோ) சில நாட்களாய் எந்த மெயிலும் வராமல் இருந்ததால் ஏன் யாரும் மெயில் செய்யவில்லை என்பதை தன் தாய் மொழியான மலையாளத்தில் ஒரு கவிதை வடிவில் எழுதிக் கொண்டிருந்தான்! அதைப் பார்த்த இன்னொருவன் தன் தாய் மொழியான வங்காளத்தில் அதை மொழி பெயர்த்தான்! தமிழில் எழுத என்னை பணித்தார்கள்! வேடிக்கையாய் எழுதத் தொடங்கி தமிழிலும், ஹிந்தியிலும், என் தாய் மொழியான செளராஷ்ட்ராவிலும் கற்பனைக்கேற்ப மொழி பெயர்த்தோம்.

அநியாயமான வேலைப் பளுவில் இந்த விஷயம் நிஜமாகவே ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருந்தது...நம் இந்திய மண்ணின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கண்கூடாகக் காண முடிந்தது...

தமிழ் அல்லாதவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தருகிறேன்!

The Context
When a group of people (NoonShow) did not mail me for a long time, I thought of asking them, in a poetic manner, why there are no mails. Wrote a poem (hopefully J) in Malayalam and rest is this-story below!

Below,we have Poem in different langauges. The concept (thread) is same, but different imagination is used in each languages to express the concept.

The langauges include:
Malayalam, Bengali, English, Tamil, Hindi,Sourastra and Telugu. (in the oder of writing)

This is a good example of Team Effort and collective imagination..
Spreading Our Thoughts…

Malayalam
Ividey maranam nadanam aadiyilla,
Ividey wherpadin kadhakal churul azhiyunilla,
Pinnae endhay,Nishchalam aya kootamayi munottu pokunu NoonShow.

Arangukal thakartha ezhuthukarudey thulika chalanam illa,
Ezhuthiya shabdha bedhiyilla, vaaku tharkangal illa...
Enthey, ellarum karma niradharai maariyadhinaaloo,
Atho ezhudhan vakukal illathathinalloo.

Bengali
mrityur chhaya aajo ei matir opor nai
bichhinnatar kalchhayao aajo dekha jai na
tobe keno ei sorge sobai ekhono nishabdatar modhhe beche

tobe keno moshir sobdo aaj aar sona jai na!
tobe keno loker mukher shobdo aaj beronor agei hariye jai!
sobai ki kaajer gotir modhhe hariye geche,
othoba sobai ki shobdohintar modhhe beche ache?

English
No one has departed from us
None of them has deserted us
For whom are these condolenses and why this silence for??

If ur theoritical silence is surprising many..
Ur physical calmness is befriending many..
IS this due to physical tiredness??
or an intended quietness??

Tamil
ingu maranam ethum sambavikkavillai
ingu pirivugal ethum nearavillai
irunthum ean intha mounam

vaalin munaigalaai iruntha pena munaigal indru mazhungiyathenna
naakin neelangal indru kurugiyathenna
uzhaipinaal vantha kaLaippo
pizaippathu arithaamo, pesi theerthaal!

Hindi
yehaa koi maraa tho nahi
yehaa koi bichadke gaya tho nahi
tho phir sannaatta [baal theek karo!] kyon hain bhai?

company pen nahi de raha hain kya?
ya sub gunge hogaye kya?
haan pata hain, gandha hain phir bhi dhandha hain!
magar aapki baatein tho itni gandi nahi hain...

Hindi 2
yehaan koi guzar ke tho nahi gayaa?
yehaan koi hume akele mein chodke tho nahi gayaa
tho phir sannaate ki baadal kyon chaaya huva hain?

chun chun ke likh likh ke
ek ek ko maar raha thaa
un ungliyaan kamzoor kyon huva?
jahaan ek shabdh chayiye tha,
wahaan ek bhaashan hi derahaatha..
un palkon ko kya huva?
raam kare..aapki code kaam kare!
chalo...ab tho baath karo!!

Telugu
evaru poyaarani ee Mounam..
evaru vidichi vellaarani ee shokam..
ee mounam...eee shokam pi enduku neekintha moham???

nee kalam kadalatamledaa??
leka nee manasu moogatam leda??
idi pani vani valla vacchina alasatvama??
leka maa pi tamakocchina kopama!!!

Sourashtra
et konni morraani
et konni soddi jeeraani
aski kago iso jhaili bisiriyo!!

mail likatho peino abbaraniyaa?
awra jaath vatho howdan jedriyoyaa?
kaamum jeev jaariyoyaa?
bhedavaanre! vatho keruvoraa...

இதை படிக்கும் உங்களுக்கும் வேறு மொழி தெரிந்தால் எழுதிப் பாருங்களேன்!
வாரம் ஒரு வலை பதித்த காலம் போய், மாதம் ஒன்று என்றாகி, இப்போது அதுவும் முடியாமல் போகிறது! கஷ்டமாக இருக்கிறது! வலைபதிவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது! ஒரு நல்ல படைப்பை அளித்து அது அனைவராலும் பாராட்டப்படும் போது ஒரு படைப்பாளியாய் மனம் இறக்கை கட்டிப் பறக்கிறது!பணம் கிடைக்கிறது என்பதற்காக யாரோ ஒருவரின் வாழ்வை, யாரோ ஒருவரின் கனவை, யாரோ ஒருவரின் லட்சியத்தை அடைய அடி மாடுகள் போல் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!! அப்படி உழைக்கும்போதும், மனம் ஒவ்வாத எத்தனை காரியங்களை செய்ய வேண்டியிருக்கிறது! இதற்குப் பெயர் தான் வாழ்வதென்றால் சாவதற்கு என்ன பெயர்? நமக்கான வாழ்வை வாழ்வது எத்தனை கஷ்டமான காரியமாக இருக்கிறது! ஏன் இப்படி? சென்னை பாஷையில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்!

இன்றாவது இவன்(ர்) வலைபதிந்திருக்க மாட்டானா(ரா?) [மரியாதை எல்லாம் நாங்களா பாத்து குடுக்கனும்!] என்று தினமும் என் வலைதளத்திற்கு வந்து போகும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள் பல!!
ரஜினியின்/ஏவி.எம்.மின்/ஷங்கரின் சிவாஜி வந்து 15 நாட்கள் கடந்து விட்ட இந்த நிலையில் நாங்களும் தான் அந்த படத்தை இரண்டாவது நாளே பார்த்துட்டோம் என்று சொல்லி விட்டு, இத்தனை நாட்கள் கழித்து விமர்சனம் போடுவது ஏதோ பழைய சிவாஜி கணேசன் படத்திற்கு விமர்சனம் போடுவது போலிருக்கிறது! இருந்தாலும் சற்றும் தளராத விக்ரமன்...மணிவண்ணன், வடிவுக்கரசி, சன் டி.வி. உமா இவர்கள் எல்லோருக்கும் நல்ல ஸ்கொப் படத்தில்! வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்!

அங்கவை சங்கவை, படப்பிடிப்பு முடியும் வரை வெயிலிலேயே நின்று தங்கள் உடல் வருத்தி படத்தில் காட்சிகள் இயல்பாக இருக்க கருத்து விட்டார்களாம்! என்ன ஒரு உழைப்பு! அதிலும் தீபாவளி தீபாவளி பாட்டுக்கு இடுப்பை அசைத்து அசைத்து அவர்கள் ஆடுவது மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது!

யார்? 9தாராவா அது? உடல் மெலிந்து போய் ஏதோ 2தாரா, 3தாரா போலிருக்கிறார்! ஆடும்போது அவர் தொப்பை குலுங்காதது என் மனதை உலுக்கி விட்டது!

ஷ்ரேயா பின்னழகை இழுத்து இழுத்து வளைத்து வளைத்து அது அப்படியே ஒரு நாள் நின்று விட போகிறதோ என்று எனக்குக் கொஞ்சம் பயமாகவும் சற்றே கிளுகிளுப்பாகவும் இருக்கிறது! இவருக்கு நைட்டியே கொடுத்தாலும் தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே தான் கட்டுவாரோ என்னமோ..

படத்தில் ஆரம்ப காட்சியில் அலை கடந்து அழும் கூட்டம் தமிழ் சினிமாவின் நல்ல கண்டுபிடிப்பு! தொடர்ந்து இவர்களுக்கு நல்ல படங்கள் கிடைத்தால் திரை வானத்தில் ஜொலிக்க வாய்ப்புண்டு!படம் வந்து இவ்வளவு நாள் கழிச்சி விமர்சனம் பண்ணனும்னா இப்படி தான் பண்ண முடியும்!

நிற்க

படம் பார்த்ததன் பாதிப்பில் ரஜினி படம் என்றாலே இப்படித் தான் இருக்க வேண்டுமா என்று என் மூளையை கசக்கி பிழிந்ததில் [ஹேய் பொய் தானே சொல்ற!!]கீழ் வரும் கதை பிறந்தது! ரஜினி ரசிகர்கள் இதைப் படித்து விட்டு, என் விலாசம் கேட்டால் என்னைத் தெரிந்த நண்பர்கள் என்னை காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! இனி கதை...

சுத்தி பொட்டல் காடா இருக்கு! வானம் பாத்த பூமி! வானத்தையே பாக்குற ரஜினி! பூமியும் அவர் தலைய மாதிரியே தரிசா கெடக்கு! [படத்தில ரஜினி பொது விழாக்களுக்கு வர்ற அதே கெட்டப்புல வர்றாரு!] நம்ம நாட்ல தான் விவசாயிங்க கதை உங்களுக்கு தெரியுமே, அதே தான்! இவரும் நொந்து போய் லோன போட்டு ஸ்டைலா வெதைய வேற போட்றாரு, எழவு வெளைய தான் மாட்டேங்குது! பாங்குல இருந்து மாட்டை ஓட்டிட்டு போயிட்றாங்க! குடிக்க கஞ்சி இல்லை! அப்போ தான் அவர் பொங்கி எழுறாரு! அதுவோ இத்து போன டவுசரா சும்மா ஸ்டைலா கிழியுது பாருங்க!! [இதுக்கே அவார்ட் நிச்சயம்!]....அங்க தான் இன்டர்வல்!

பாப்கார்ன் எல்லாம் சாப்டு நீங்க உள்ள வந்ததும், ரஜினி பாங்க்ல இருக்காரு! சும்மா வெரலை சுண்டி ஒரு பஞ்ச் பேசும்போது விரல் சுலுக்கி ஆள் காட்டி விரல் மட்டும் அப்படியே மடங்காம நின்னுடுது! அப்படியே சோகமா வீட்டுக்கு கையை தூக்கிட்டே நடந்து வர்றாரு! மனோரமா தான் ரஜினி அம்மா! போகும்போது உன் தலை நிமிந்து இருந்துச்சு, இப்போ உன் தலை தொங்கி விரல் நிமுந்துருச்சேப்பான்னு.. பஞ்ச் டயலாக் வேற, ரஜினிக்கு கோவம்னா கோவம்! பொங்கி எழலாம்னா டவுசர் வேற கிழியும்!! சரி அம்மா தானேன்னு மன்னிச்சி விட்டுர்றாரு!

அந்த வெரலுக்கு விளக்கெண்ணை தடவி சுளுக்கு எடுக்குறாங்க மனோரமா..அப்போ அம்மா சென்டிமென்டோட ஒரு பாட்டு! பாட்டு முடிஞ்சதும் சரியாயிடனும்ல, அதானே லாஜிக்! சரியாயிடுது! இந்த சமயம் கொஞ்சம் ஜாக்கிரதையா டவுசர் கிழியாம பொங்கி எழுறார் ரஜினி! ஜன்னல்ல வச்சிருக்குற பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து மனோரம்மாக்கு கதற கதற ஊத்திக் கொடுத்துட்டு தானும் குடிச்சிட்டு ஸ்டைலா விழுந்து சாவுறாரு! காமெராவை பான் பண்ணி டாப் அங்கிள்ல காட்றோம், பஞ்ச் டயலாக் சொல்ற அதே தோரணையில ஒரு வெரல் மட்டும் தூக்கிட்டு செத்து போயிருக்காரு!

"ஒரு பஞ்ச் இன்று பஞ்சத்துக்கு அடிபட்டது"ன்னு ஸ்கிரீன்ல மெஸஜை போட்டு படத்தை முடிக்கிறோம்! நீங்க பூச்சி கொல்லி மருந்தோட என்னைத் தேடி வர்றதுக்குள்ள நான் அப்பீட் ஆயிக்கிறேன்!!
பதிவு போட்டு வெகு நாட்கள் ஆன விரக்தியில் இதே எழுதியே தீர்வது என்று எழுதிய பதிவு இது! உங்களுக்கு இதை படித்தே தீர்வது என்று நிர்பந்தம் ஏதும் இல்லையென்றால் படிக்கத் தேவையில்லை! இந்தப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்று எனக்கே சந்தேகம் தான்!

சமீப காலமாக என் வலைபதிவின் தோலுரித்து புது தோல் போர்த்த வேண்டும் என்ற ஆசை என்னை பிடுங்கித் தின்கிறது..இணையத்தில் புது தோல்களை தேடி தேடி, என் தோலுரிவது தான் மிச்சம்! யாருக்காவது விதவிதமான தோல் கொண்ட அதையும் ப்ரீயா குடுக்குற மகராசன்கள் தெரிஞ்சா சொல்லுங்க. என் தோலை உங்களுக்கு செருப்பா தச்சி போட்றேன்! [தோலை வச்சி எப்படியெல்லாம் டயலாக் சொல்டேன் பாத்தீங்களா?]

நிற்க

எனக்கு இந்த உப்புமா பதிவுகளில் நம்பிக்கையில்லை! [நீ போட்டது பூராவுமே உப்புமா பதிவுகள் தான் என்பவர்கள் எனக்கு தனி மடல் வரைய வேண்டுகிறேன்!] பல வருடங்கள் கழித்து என் வலைப்பதிவை புரட்டிப் பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

நிற்க

இந்த சிவாஜி படம் வந்தாலும் வருகிறது வலையுலகில் அதை வைத்து எத்தனை பதிவுகள்! சிவாஜி என்ற தலைப்பை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது! எரிச்சல் குறைவதற்குள் அதையெல்லாம் படித்து விடுவேன்! ஒரு ஏழைத் தமிழனால் வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?

நிற்க

சமீபத்தில் பெரியார் படம் பார்த்தேன், உன்னாலே உன்னாலே என்ற அற்புதமான யூத்ஃபுல் படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதும் நான் இதற்கு எழுத முடியவில்லை! பெரியாரை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற நினைப்போ என்னமோ..படம் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ ஒரு கடமையாய் நினைத்து பார்த்து விடலாம்!

நிற்க

ஒரு ஜோக்!

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அர்த்த ராத்திர்யில் பஸ் வழக்கம் போல் ஒரு டீ கடையில் நின்றது. குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அந்த டீ கடையை மொய்த்தோம்! ஒன்று புரியவில்லை, ட்ரைவர் தூக்கம் வராமல் இருக்க டீ குடிக்கிறார், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நாங்கள் எழுந்து ஏன் டீ குடிக்க முன்டியடிக்கிறோம்? தமிழனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று ஒரு லைட் டீ போடச் சொன்னேன்! அவர் வெள்ளையாய் ஒரு க்ளாஸ் நீட்டினார், என்னங்க ரொம்ப லைட்டா இருக்கே என்றேன். அதற்கு அவர், இது உங்களுக்கு இல்லை, அவருக்கு[இன்னொருவரை சுட்டி]..இது டீ இல்லை பால் என்றார்! எல்லோரும் பல்பு வாங்குவார்கள்! எனக்கு அன்று பல்பு மாலை!

இப்போ அல்லாரும் ஒக்காருங்கோ!! [இன்ஸ்ப்யர்ட் பை டுபுக்கார்!]
அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம்
உடலெங்கும் வெயிலேறி
இரவிலும் பிசுபிசுக்கிறது

அதிக சத்தத்தையும்
கொஞ்சம் காற்றையும்
கக்குகிறது மின்விசிறி

கொசுவர்த்தி எரிகிறது
"இனிமேல்" கொசு கடிக்காது
என்று ஆறுதல் அடைகிறது மனம்

அப்போது...

என்றும் போல் இன்றும்...
தடை படாத
மின் தடை

அக்னி நட்சத்திரத்தில் - இந்த
அர்த்த ராத்திரியில் தினமும்
மின் தடை செய்வதில்
இவர்களுக்கு என்ன லாபம்?

கதவைத் திறக்கிறேன்,
கொஞ்சம் காற்று வரும் என்று நம்பி...
நம்பிக்கை தானே வாழ்க்கை!

வழக்கம் போல் அதுவும்
வெற்றியின் முதல் படியிலேயே முடிகிறது

தெருக்களில் நாய்களுடன்
சில மனிதர்கள், என்னைப் போலவே!

இரவுகளில் ஒரு உருவம் தெரிந்தால்
குரைப்பது என்று முடிவெடுத்திருந்த
நாய்கள் இத்தனை பேரை பார்த்து
குழம்பித் தான் போயிருக்கின்றன

எத்தனை அரசியல்வாதிகள்
புழுக்கம் தாங்காமல் இந்த நேரத்தில்
வெளியே வந்திருப்பார்கள் என்று
நையாண்டி செய்கிறது மனம்

தூங்காமல் விழித்து
மாடாய் உழைத்து
நேர்மையாய் கட்டிய வரிப்பணம்
கண்ணில் வந்து போகிறது

மறுபடியும் உடல் பிசுபிசுக்கிறது!
எனக்குத் தெரியும்...
இது புழுக்கத்தினால் அல்லஉன்னை விட சின்ன வயசு பசங்ககிட்ட சேராதன்னு அம்மா தலை தலையா அடிச்சிகிட்டாங்க! நான் கேட்டேனா..கேக்கலையே! இப்போ அவஸ்தை பட்றேன்!!

ஒன்னுமில்லீங்க, இந்த உன்னாலே உன்னாலே பாட்டு, மியுசிக்கை எல்லாம் ரிங் டோனா வச்சுகிட்டு, பேன்ட்ரில எப்போ பாத்தாலும் அந்த படத்தோட ட்ரைலர் பத்தி பேசிகிட்டு, அந்த படத்துல ஒன்னுமே இருக்காதுன்னு நான் சொன்னா உடனே, உங்களுக்கு வயசாயிடுச்சு மேனஜர் கூட போய் உக்காந்துக்குங்கன்னு ஓரம் கட்டிற வேண்டியது...நீங்களே சொல்லுங்க, என்னை மாதிரி ஒரு யுத்துக்கு ரத்தம் கொதிக்குமா இல்லையா? என்ன இருந்தாலும் எனக்கு வாலிப வயசில்ல?

ஜீவா தான் யுத்ஃபுல்லா படம் எடுப்பாராமே, சரிடா, நானும் யுத்டான்னு கெளம்பிட்டேன்! என்னை மாதிரி 2 யுத்களையும் கூட்டிட்டு..சும்மா சொல்லக்கூடாது, உங்க வீட்டு எங்க வீட்டு கொத்தில்ல, உலக மகா கொத்து! நீங்க எனக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னாலும் பரவாயில்லை! கொத்து கொத்து தான்!

நான் மிகவும் விரும்பி பதிய ஆரம்பித்து பாதியிலேயே சுவாரஸ்யம் குறைந்து பதியாமலேயே விட்ட பதிவு என்னிடம் ஏராளம். ஒரு நாலு வரி எழுதுவதற்குள் எனக்கு சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது..ஒரு திரைப்படத்தை எழுதி எடுப்பது என்பது சாதரண விஷயமா? இந்தப் படத்தை எப்படி தியேட்டர் வரை கொண்டு வந்தார்கள் என்று எனக்கு விளங்கவில்லை..இதற்கு ஒரு புது ஹீரோ, ஒரு புது ஹீரோயின் வேற..

வினய் [ஆள் நல்லா தான் இருக்காரு, அதுக்காக?]

தனிஷா [ஒரு முறை தான் குனிந்தார், சரியாக கவனிப்பதற்குள் நிமிர்ந்து விட்டார்]

சதா [சதா இவங்களையே ஹீரோயினா போட்டு ஏம்பா டார்சர் பண்றீங்க]

ஹாரீஸ் [ஆமா சார், ஜீவா சார் என்ன சிச்சுவேஷன் சொல்லி பாட்டு வாங்கினாரு? ஒரு பாட்டு கூட சிச்சுவேஷன்லா இல்லையே..ஆனா ஒன்னு சார், உங்க பிஜிஎம்லையே தெரியுது உங்க கோவம்!]

எஸ். ராம்கிருஷணன் [நமக்கு தான் விகடன் இருக்கே சார், உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?]

தோட்ட தரணியும், காஸ்ட்யும் டிசைனரும் [எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, படத்துல உருப்படியான விஷயம் இது தான்!]

ஜீவா [வேற யாராவது நல்ல படம் எடுப்பாங்க, அதுல உங்க போட்டோக்ராப்பி தெறமைய காட்டிகிட்டு பேசாம இருங்க..நமக்கு எது வருதோ அது தான் செய்யனும்..ஓகே..இனிமே யுத்ஃபுல்லா படம் எடுக்குறேன்னு சொல்லி பாருங்க.....இல்ல சொல்லிப் பாருங்களேன்!]

படத்தின் கடைசியில் சதா ஒரு டயலாக் பேசினார்..

"போதுமா?" - இது தான் டயலாக்

அப்பாடா இப்போவாவது இந்த பொண்ணுக்கு மனசு வந்துச்சேன்னு எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு..போதும்டி அம்மா..இங்க எல்லாருக்கும் போதும் போதும்னே ஆயிடுச்சு!

நீங்க ஒரு படம் நல்லா இல்லைன்னு சொன்னா
அது ஜஸ்ட் லைக் தெட்
அதுவே நாங்க சொன்னா வயசாயிடுச்சா?
தரதரரப்பப் தரதரரப்பப் ....


ஒரு மத்தியானப் பொழுதின்
மயான அமைதி - தூக்கத்திலிருக்கும்

ஒரு குழந்தையை
திடுக்கிட்டு எழச் செய்கிறது

சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
நிழலில் ஒரு கருகிய
வாசம் வருகிறது

தெருவோரத்தின் துரு பிடித்த
ஒரு குழாயிலிருந்து
கிரீச்சிடும் சத்தம் கசிகிறது

மேகங்களைக் கொண்டு
விதவிதமான பொம்மைகளை
செய்து செய்து
அழிக்கிறது வானம்

ஒரு பெரிய மரத்தின் வேர்
நீரை உறுஞ்சவும், அந்த மரத்தின்
இலைகள் காற்றில் சிலிர்க்கவும்
சரியாய் இருக்கிறது

எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது


படம் ஆரம்பிக்கும்போதே ஒரே கூத்தும் கொண்டாட்டமுமா தானேய்யா ஆரம்பிக்கிறாய்ங்க! திருவிழாவென்ன, கொட்டென்ன, மேளமென்ன, கூத்தென்ன..அடடா.......பருத்தி வீரன் கத்தியோட குஸ்தி வாத்தியார் குண்டியில குத்த, வேகத்தோட பொறப்படும்போது தான் வான வேடிக்கையோட டைரடக்கரு பேரைப் போட்றாய்ங்க! அங்கன ஆரம்பிக்குது அலப்பரை! கெட்ட அலப்பரையில்ல!

பருத்தி வீரனும், சித்தப்பு செவ்வாழையும் சேந்து செய்ற அட்டகாசம் இருக்கே, போய் பாத்தாவில்ல தெரியும்..அவனுக ரவுசென்ன பவுசென்ன? ஒன்னுமில்ல, ஒரு வேலை வெட்டிக்கு போறதில்லப்பா, தண்ணிய போட்டுட்டு, அடுத்தவனை கண்ட இடத்துல சொறுவிட்டு, வாரா வாரம் ஜெயிலுக்கு போயிட்டு அதுல மெட்ராஸ் ஜெயிலை ஒரு தடவை பாத்துரனும்ன்றது ஒரு மனுஷனுக்கு லட்சியமாம்! சும்மா சொல்லக் கூடாது நல்ல தான் கெட்டு போயிருக்காய்ங்க!!

இந்தச் சண்டியரை சண்டைக்கிழுத்து உண்டு இல்லைன்னு ஆக்குற ஓரே ஆளு அவ மாமம் பொண்ணு முத்தழகு! அடடா..அந்தப் புள்ள பேர்ல மட்டுமா அழகு, ஆளும் தான்! பகுடர் போடாமையே பளபளப்பா இருக்குறவளப் போயி இந்தப் பயலுக கருவாச்சி கருவாச்சின்னுல்ல கூப்பிட்றாய்ங்க! அவய்ங்க கெடக்காய்ங்க மானங் கெட்ட பசங்க!

வீரனுக்கு மொத தடவையா அவன் சித்தப்பு புத்தி சொல்லி, அவன் மனசுலயும் வருதுய்யா அந்த காதல் கருமாந்திரம். பொறவென்ன நம்ம சண்டியரு அவ பேர் இருக்குற தன் மார்ல தாம் பேரையும் பச்ச குத்திகிட்டு ஒரு அம்பு வுட்றாரு பாருங்க! டாப் க்ளாஸ்! அதை அப்படியே முத்தழகுக்கு காட்டிட்டு "சாஞ்சுக்கலாம்ல"னு சொல்றானே, அங்கன சாஞ்சது முத்தழகு மட்டுமில்ல, படம் பாக்குற அத்தன சாதி சனமுந்தான்! அதோட நின்னானா, சொல்லிட்டு அந்தக் கையை தூக்கி தலைக்கு மேல குடுத்துட்டு காலை ஒரு சைஸா வச்சுட்டு ஒரு ஆட்டு ஆட்றான் பாருங்க! ஏ ஒன்னேன்! அந்தப் புள்ள வேற 'ஐய்யய்யோ' பாட்டு பாடிகிட்டே வானத்துல இருந்து அந்தக் கைய நீட்டி அள்ளுது பாருங்க! எப்பா, அள்ளிட்டு போகுது போ!!

முத்தழகோட அப்பனாத்தா என்ன, பருத்தியோட சேக்காளிக என்ன, இவனுக கிட்ட மாட்டி பொழப்பு கெட்டு போற டக்லஸ் அண்ணெ என்ன..இப்படி எம்புட்டு பேரை சொல்றது...பின்னிபுட்டானுவல்ல பின்னி!! என்னா ஒன்னு கழுத, அருவாளையும், ரத்தச் சத்தத்தையும் கொஞ்சம் கொறைச்சுருக்கலாம்! சண்டிப் பசங்க கதைய எடுத்துட்டு ராமயணமா சொல்ல முடியும்?

ம்யுஜிக் தானே, அத ஏன் கேக்குறீங்க, அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்துருக்கு! டேய் அது என்ன இந்த பின்னாடி ம்யுஜிக் வருமே, எழவு என்ன க்ரவுண்டுடா அது? ஆ...அதேன்னே பேக்ரவுண்ட்டு ம்யுஜிக்கு ..யப்பா யப்பா..கோவமா போறப்ப ரோஷமா வருது, காதலா வாரப்ப காத்தா வருது..அடக்கி வாசிக்க வேண்டிய எடத்துல அடக்கியும் வாசிக்குதுல்ல...

இங்கன கதயா சொல்லிட்டு இருக்கோம், வாய பொளந்து பாக்குறவ...மிச்ச கதயும் சொல்லிட்டா படத்த தியேட்டர்ல போயி யாரு பாக்குறதாம்? என்ன நாஞ்சொல்றது?

----------------------------------------------------------------------------

பருத்தி வீரன்

ஒவ்வொரு வார்த்தையும் வசனமல்ல.......வாழ்க்கை!
இது ஒரு படமல்ல....ஒரு வாழ்வின் பதிவு!!இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?
புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!

சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!

தமிழ் மையமும் தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்திய சென்னை சங்கமம் இன்று இனிதே நிறைவுற்றது! மிகவும் அற்புதமான விஷயம்! நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல வகை கிராமியக் கலைகளை சென்னையின் தெருக்களுக்கே கொண்டு வந்து ஒரு திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்! அவர்கள் சொல்வது போல் இது நம்ம திருவிழா தான்!

தமிழ் மையத்தின் எம்.டி. திரு. கேஸ்பர் ராஜ், இந்த யோசனை ஆகஸ்ட் மாதத்தில் உதித்ததாகவும், ஆனால் வேலை செய்யத் தொடங்கியது ஜனவரியில் தான் என்று சொன்னார்! உண்மையாகவே வரவேற்கத் தக்க ஒரு விஷயம். இதைப் பற்றி ஹிந்து பேப்பரில் படிக்கும் போது தான் நம் கிராமங்களில் எத்தனை வகையான ஆட்டம் இருக்கிறது என்றே தெரிகிறது!

நான் முதலில் சென்றது நந்தனத்தில் ஒய் எம் சி ஏ பக்ஸ் தியேட்டரில் நடந்த மொஸார்ட் மீட்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு! இது சிஃம்பொனியுடன் நம் கர்நாடக சங்கீதத்தை கலந்து கொடுக்கும் முயற்சி! ஃப்யுஷன் என்கிறார்களே, அது தான்..[எனக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான், இதில் பெருசா தப்பு இருக்க வாய்ப்பில்லை, கொஞ்சமாவது சரியா இருந்தா தானே தப்பு கண்டுபுடிக்க முடியும்...] அற்புதமாய் செய்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் வரிசையாக உட்கார்ந்து வயலின் வாசிப்பதையும், கோரஸாய் ஆண்களும் பெண்களும் பாடுவதையும் இது வரை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்! சென்னை சங்கமத்தின் உதவியால் ஒரு தர்ம தரிசனம்! சங்கராபரணம், சிந்துபைரவி, பந்துராஹளி ராகங்களை வாசித்துக் காட்டினார்கள்! காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் நம்பவா போகிறீர்கள்! அந்த ஓபன் தியேட்டரில் தொடை தட்டிக் கொண்டே கேட்டதில் ஒரு கொசுவும் சாகவில்லை! இது சங்கீதக் கூட்டம் என்று அறிந்து தொடையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் கொசுவாரின் கச்சேரி!மறுநாள் ஃபின்லேண்டில் இருந்து வந்த ஒரு குழு நடனமாடி பாட்டு பாடி மகிழ்வித்தார்கள்!

நேற்றும் இன்றும் பெசன்ட் நகர் பீச்சில் கண்டு களித்தேன்! குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்! கடற்கரையே ஆடியது என்றால் மிகையாகாது! அந்த இடத்திலேயே சினிமா இசையமைக்க குடும்பாட்டக் குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாக மேடையில் அறிவித்தார்கள்!

அடடா தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வருடா வருடம் இதை நடத்தப் போவதாகத் திட்டம்! இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்! சென்னை சங்கமத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், [முதலில் கடற்கரையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள் சார்!] அழிந்து வரும் பல கிராமியக் கலைகள் தழைத்தோங்கவும், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
காதலர் தினத்தை முன்னிட்டு!

ஓவியம் கொஞ்சம் சோகத்தை கக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது! இதற்கும் மேல் சொன்ன கவிதைக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை!இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!

வாழ்க காதல்!
வளர்க கலப்புத் திருமணங்கள்!!
ஒழிக ஜாதி வெறி!!!

[அது வேற ஒன்னுமில்லீங்க...ஹிஹி!! ஊரார் புள்ளய ஊட்டியில வளர்த்த நம்ம புள்ள கொடைக்கானல்ல வளரும்னு ஒரு நப்பாசை தான்!!]

உன் விழிகளின் வீரயத்தில்
விழித்துக் கொண்டது
என் வாலிபம்

உன் புன்னகையின் பூரிப்பில்
புத்தொளி பெற்றது
என் தேகம்

உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை

உன் ஈரமான உதடுகளில்
கதகதப்படைந்தது
என் உதடு

உன் கூந்தலின் கருமையில்
இரவாகவே மாறியது
என் உலகம்

உன் பெண்மையின் பேரின்பத்தில்
நல்ல போஷாக்கு பெற்றது
நம் காதல்

என்ன தலைப்பு பாத்து வந்தீங்களா? ஹிஹி, தெரியுமே...சரி சரி, படிங்க!

நேற்று எனக்கு நிஜமாகவே சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்! பிரபுதேவா ஏதாவது செய்திருப்பார் என்ற நப்பாசையில் போக்கிரி பார்க்க வேண்டியதாகிவிட்டது. படத்தை விட்டு வரும்போது என் சட்டை முழுதும் ரத்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அத்தனை வன்முறை! கமலின் சண்டியருக்கு போர்க்கொடி தூக்கிய கனவான்கள் இப்போது எங்கப்பா ஒளிந்து கொண்டீர்கள்? போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி மூன்றும் சாரமாறியாய் போட்டுத் தள்ளும் படங்கள் தான்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி, இன்னைக்கு பெரிய அருவாளை கைல வச்சுட்டு நிக்கிறார் விஷால்!

டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நம்ம லிங்குவிடம் [அதாங்க நம்ம பீமா லிங்குசாமி] பேசிக் கொண்டிருந்தேன்! [என்ன கற்றதும் பெற்றதும் சாயல் அடிக்குதா?] என்ன சார் இந்த படம் எல்லாம் பாக்க வந்துருக்கீங்க? இது நான்! ஏன்பா, இந்த படம் நல்லா இருக்காதா? இது அவர்..இல்லை இது மாஸ் படமாச்சே, நீங்க எப்படி? இந்த மாதிரியும் ஒரு படம் எடுக்கனும்ல..அதான்! ஏன் சார், விக்ரம் வைச்சி இப்படி படம் தான் எடுக்குறீங்களா? இல்லை இல்லை..அதற்குள் தியேட்டரின் இருட்டில் கலந்து விட்டோம்!

படத்திற்கு போக்கிரிலு என்று பெயர் வைத்திருக்கலாம்! அப்பட்டமானலு தெலுங்குலு படம்லு!! முடியலலு!!

எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?

நிற்க

இன்று அது ஏன் தமிழில் இப்படி ஓடுகிறது? தமிழ் மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? விஜய் என்ன படம் நடித்தாலும் பார்ப்பார்களா? மாஸ் ஹீரொ, மாஸ் ஹீரோ என்று இப்படிப்பட்ட படங்களாய் எடுத்து இன்னும் தமிழ் சினிமாவை பாழ் படுத்தப் போகிறோமா? கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? எம்.ஜி.ஆர் என்றொரு மாஸ் ஹீரோ தன் எல்லா படங்களிலும் உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டினார்! ரஜினி என்றொரு மாஸ் ஹீரோ தன் ஸ்டைலாலும், மேனரிஸங்களாலும் மக்களை குஷிபடுத்தினார்! விஜய் என்ற மாஸ் ஹீரோ எல்லா படங்களிலும் அரிவாளுடனும், துப்பாக்கியுடனும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்! அதிலும் இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]

படம் முடியும் தருவாயில் விஜய் துப்பாக்கியால் ஒருவரை துளைத்து கொண்டிருந்தார். தியேட்டரில் மயான அமைதி. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை திடீரென்று சத்தம் போட்டுக் கை கொட்டி தன் விஜய் மாமாவை பார்த்து சிரித்தது! படம் முடிந்தவுடன் அந்தக் குழந்தையின் தந்தையிடம், நான், குழந்தைகளை இந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க என்றேன்! அவர் ஆமோதித்து தலையில் அடித்துக் கொண்டார்!

வெளியே வரும்போது லிங்குசாமி கண்ணில் படவில்லை. அவர் வேறு இப்படி ஒரு படத்தை எடுத்து தொலைத்து விடப் போகிறார் என்று அடி வயிற்றைக் கலக்குகிறது! உங்கள் யாருக்காவது அவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்!

அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம். மேலோட்டமாக, இங்கு மோட்டல் வைத்திருந்த ஒரு இந்தியரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவருடைய மோட்டலில் ஒரு நாள் தங்க வந்தவர், கால் தடுக்கி விழுந்து விட்டார். மோட்டல் ஓனரின் அறியாமையாலும், அஜாக்கிரதையாலும் தான் நான் தடுக்கி விழுந்தேன். இவர் எனக்கு இத்தனை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வாதாடி கடைசியில் அந்த இந்தியர் தன்னுடைய மோட்டல் சாவியை அவர் கையில் கொடுத்து விட்டு வெறும் கையுடன் நடையைக் கட்டினாராம். பார்த்தீர்களா கொடுமையை..

ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..அதே போல் காபி கப்பில் ஏதாவது பொன் மொழி இருப்பதுண்டு. பொன்மொழி 1 வரி இருந்தால், அது எங்கள் கருத்தல்ல, எழுதியவரின் கருத்து..இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற எஸ்கேப்பிஸம் 10 வரியில் இருக்கும். [சரிடா, இப்போ உங்களை என்ன சொல்லிட்டோம்] நானும் சரி இப்படி ஏதாவது நொள்ள சொல்லி ஒரு மில்லியன் டாலர் வாங்கிட்டு இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்றால் ஒரு குறையும் கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்கிறது..[குறை சொல்லியே பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் அடியேனை பார்த்தீர்களா?]ஒரே வழி, நான் இங்கு ஒரு குறையும் பார்க்க முடியவில்லை என்று வழக்கு தொடர்வது தான்!

நம் ஊர் போல் இங்கு ரயிலை அதிகமாக உபயோகிப்பதில்லை. எல்லாம் சாலை வழி தான்! ஒவ்வொரு ஃப்ரீ வேயிலும் [நம் ஊரில் இது ஹைவே!] ஒவ்வொரு காரும் 80, 90, 100 மைலில் பறக்கிறது. அந்த ரோட்டில் அழகை என்னவென்று சொல்வேன். நீங்கள் செல்ல வேண்டிய லேனில் இருந்து சற்று விலகி எதிர் லேனில் சென்று விட்டால் டயரில் கிரீச் சத்தமிட்டு நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று எச்சரிக்கிறது! அட அட அடா...அனுமதிக்கப்பட்டிருக்கும் வேகத்தை மீறி செல்லும் வண்டிகளை கண்காணிக்க அங்கங்கு ரேடார் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் உள்ள ரோட்டில் கூட ஒரு குப்பை இல்லை. அமேரிக்க மக்களின் சுய ஒழுக்கம் அந்தச் சாலைகளில் பிரதிபலிக்கிறது! நான் பார்த்த வரை நம் ஊர்களில் இருப்பதைப் போல் சாலை ஓரங்களில் அதிக மரங்கள் இல்லை. எல்லாம் பரந்து விரிந்த வெறும் நிலமாகத் தான் இருக்கிறது. ஒரு வேளை சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் நம் மக்களைப் போல் சிறு நீர் கழிக்க முடியாததாலோ என்னவோ! [புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி] போர் காலங்களில் ஆகாய விமானங்கள் இறங்க ஓடு தளங்களாகவும் இந்த சாலைகளை உபயோகிப்பார்களாம்! அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எத்தனை விசாலமான, தூய்மையான சாலைகள் என்று!

நிற்க

மோன்டனா [ஹெலினா, வேலைக்கு வந்த இடம்]
நெவேடா [லாஸ் வேகஸ்]
அரிசோனா [கிராண்ட் கேன்யன்]
செளத் டகோடா [மெளன்ட் ரஷ் மோர்]
வையோமிங் [யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்]
நியு யார்க் [நியுயார்க் நகரம்]
மேரி லேன்ட் [பால்டிமோர்]
கலிஃபோர்னியா [லாஸ் ஏஞ்சல்ஸ்]

வந்து மூன்று மாதங்களில் அமேரிக்காவின் 8 மாநிலங்களை பார்த்து விட்டேன்! இது நானே எதிர்பார்க்காத ஒன்று! என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்! அதை என் விஷயத்தில் அச்சரம் பிசகாமல் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு பரம திருப்தி! ஏக சந்தோஷம்! எத்தனை விதவிதமான ஊர்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்! அடேயப்பா..வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?

அடுத்த வார இறுதியில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறேன்! அமேரிக்காவில் முக்கியமான அனைத்து பெரு நகரங்களையும் பார்த்தாயிற்று! ஒரே குறை நயாகாராவை பார்க்க முடியவில்லை..குளிர் காலத்தில் அது உறைந்து விடுவதால் அனுமதி கிடையாதாம். உறைந்து போன அருவி, கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...ம்ம்ம்ம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அடுத்த டார்கெட் ஐரோப்பா தான்!

உலகம்..அழகு கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!!

முன்னாலேயே போட்டிருக்க வேண்டிய பின்குறிப்பு: அமேரிக்காவைப் பற்றிய என் பதிவுகள் அத்தனையும், நான் பார்த்தவைகளையும், கேள்விப்பட்டவைகளையும் கொண்டு முழுக்க முழுக்க என் பார்வையில் எழுதப்பட்டது..இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!

- பயணங்கள் முடிவதில்லை!