Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
சென்ற வாரம் முதல் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு முதல் முறை சென்ற போது ஏனோ ஒன்றுமே வாங்கத் தோன்றவில்லை. பாரதி புத்தகாலயத்தில் சிறுவர்கள் எழுதிய [பச்சை யானை - பின்நவீனத்துவம்?] சிறுகதை புத்தகங்கள் மட்டும் 50 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். இப்போது தான் தேசிகனின் வலைப்பதிவு மூலம் தெரிந்தது நான் புத்தகம் வாங்காததால், புத்தக வியாபாரமே டல் அடித்து விட்டது என்று! அடித்து பிடித்துப் போய் வாங்கி வந்தேன். இந்த முறை சிறுகதைகள் அதிகமாய் வாங்குவதில்லை என்று முடிவு கட்டியிருந்தேன். என் மனைவி, என் மகளுக்கு ஒரு புத்தகம் வாங்கி வரச் சொன்னாள். என் மகளுக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம். உனக்கு என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டால் கூட சிரிக்கிறாள்! விசேஷம் என்னவென்றால் அவளின் அம்பதாவது நாள் இன்று!

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்:

1. மதில்கள் - வைக்கம் முகம்மது பஷீர்
2. அறியப்படாத தமிழகம் - தொ. பரமசிவம் - அறிவோம் என்று வாங்கி இருக்கிறேன்.
3. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன் - கடைசியில், என்னிடம் வந்தே விட்டாள்!
4. தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி  - டிவைன்!
5. நிழல் வீரர்கள் - பி. ராமன் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள்.
6. காடு - ஜெயமோகன் - வெகு நாட்களாய் படிக்க நினைக்கும் புத்தகம். ரப்பரும் வாங்க வேண்டும். [காட்டை அழிக்கவா என்று கேட்காதீர்கள்!]
7. தாயம் - ரா - வாழ்க்கை பாடம். 
8. தாய் - கார்க்கி - என்ன வெலை கொடுத்தாலும் உன்னால ஒரு "தாயை" வாங்க முடியுமாடா? [கடைக்காரரிடம்] ஒரு தாய் கொடுப்பா! படம்: கன்னி ராசி!
9. பேயோன் 1000 - பேயோனின் ட்வீட்டுகள். இவருடைய சமத்காரமான நகைச்சுவை எனக்குப் பிடிக்கிறது. உதாரணம்: புத்தகத்தில் இருக்கிறது! [இப்படி.] [எப்படி? :-)]



வழக்கமான க்ளிஷேவுக்கு உட்பட்டு நானும் உங்களுக்கு "ஹேப்பி மாட்டு பொங்கல்" தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் விடுமுறையின் பெயரால் சென்னை, ஜனத்தொகையில் ஒரு ஐம்பது வருடத்திற்கு முன் சென்று விட்டதாக படுகிறது! விசாலமான சாலைகள், குறைவான வாகனங்கள். கொட்டும் பனி என்று இன்று வழக்கத்திற்கு மாறாக ஒரு மிக இனிமையான ஒரு அனுபவம். இரவு எட்டு மணிக்கு ஜெமினி பாலத்தின் அடியில் சிக்னல் இல்லை என்றால் நம்புவீர்களா? இரு பக்கமும் பார்த்து மெதுவாய் செல்லுங்கள் என்று மஞ்சள் விளக்கு மட்டும் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருந்தது. அண்ணா சாலை ஹோவென இருந்தது. ஆனால், நம் மக்களுக்குத் தான் இதை அனுபவிக்கத் தெரியவில்லை. சாலை காலியாய் இருந்தால் ஏன் அப்படி பறக்கிறார்கள் என்று புரியவில்லை. என்னை போல், இந்த தருணத்தை அனுபவிக்க நினைப்பவர்களையும் பயமுறுத்தி விடுகிறார்கள். சில டாட்டா சுமோக்களும், டொயோட்டா இன்னோவாக்களும் ஏன் ஆம்புலன்ஸ் ரேஞ்சுக்கு போகிறது என்று புரியவில்லை. தண்ணி லாரிக்கு பிறகு எமன் இதில் தான் அதிகம் சவாரி செய்வதாய் படுகிறது. சென்னையில் என்னை போல் விதிமுறைக்கு உட்பட்டு இரு சக்கர வாகனம் ஓட்டுபவன் மகா பரிதாபி! [பரிதாபத்துக்குரியவன்] அதிலும் சிக்னல், பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறும்போது கடந்தால் அதோ கதி தான். சிவப்பு வந்து விடுமே என்று வேகத்தை குறைத்தால், பின்னால் வேகமாய் வருபவன் இடிப்பான், சரி வேகமாய் கடந்து விடலாம் என்று நினைத்தால் இந்தப் புறம் வருபவர்கள் இடித்து விட்டு, "ஏன்டா, சிக்னல் கண்ணுக்குத் தெரியலையா?" என்று ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி பேசுவார்கள். எனக்கு முன்னதில் அனுபவம் உண்டு! இப்போது சொல்லுங்கள், நான் பரிதாபி தானே?

இன்று மாட்டுப் பொங்கல். நீங்கள் எத்தனை பேர் அலங்காரம் செய்யப்பட ஒரு மாட்டை இன்று பார்த்தீர்கள்? எனக்கு அந்த பாக்கியம் கை கூடியது. மடிப்பாக்கத்தில் அல்ல; சைதாப்பட்டையில்! மடிப்பாக்கத்தில் வழக்கமாய் வழி மறிக்கும் மாடுகள் இன்று கண்களுக்கே படவில்லை. அந்த சைதாபேட்டை பசு மாட்டுக்கு நல்ல அலங்காரம் செய்திருந்தார்கள். கொம்பில் வர்ணம் எல்லாம் பூசவில்லை. பொட்டிட்டு, கண்ணில் மையிட்டு, அந்த பசுவை சுற்றி கலர் ஜிகினா பேப்பரை சுற்றி இருந்தார்கள். அடடா..நாகரிக வளர்ச்சி! அது சிக்னல் விழுந்து கடக்கும் போது, அந்த டாட்டா சுமோ கிரீச்சிட்டு நின்றது!


இன்றும் புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இன்று திங்கள் கிழமை, மூன்று மணிக்கு திறப்பார்கள் என்று நினைத்து போனேன். இன்று விடுமுறை நாள் என்பதை மறந்து விட்டேன். நாலு மணிக்கு நுழைவு வாயில் கதவை சாத்திக் கொண்டு, ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு டிக்கட் வாங்க உள்ளே விடாதது போல் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு புத்தகங்கள் மீது ஒரேடியாய் தான் நம்பிக்கை வந்து விட்டது போலும். உள்ளே சென்றால் கூட்டம் ஜே ஜே [ஜே ஜே க்கு பதில் வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைத்தேன், எதற்கு வம்பு அதிமுக ஆட்சி வேறு நடக்கிறது!] என்று இருந்தது. அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் வந்திருதார். புத்தக கண்காட்சி நடக்கும்போது யார் என்னை சந்திக்க விரும்பினாலும் நான் அவர்களை அங்கு வர சொல்லி விடுகிறேன்! இது எப்படி? அவரின் தலையில் ஒரு மூவாயிரத்துக்கு புத்தகங்களை கட்டி விட்டேன். கண்காட்சி முடிந்ததும்,  அந்த சில பதிப்பகங்களில் இதை சொல்லி கொஞ்சம் கமிஷன் வாங்க வேண்டும்! இத்தகைய ஒரு கண்காட்சியில் மக்கள் கூட்டத்தை பார்த்தால் நன்றாய் இருக்கிறது, ஆனால் ஆண்கள் கழிப்பறை என்று போர்டை பார்த்துக் கொண்டே அங்கு இருக்கும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது!? என்னால் அடக்க முடியாமல் [சிறுநீரை அல்ல!] அந்த திறந்த வெளிக்கு முன் நின்று கொண்டேன். ஒருவர் வந்தார்!

சார், பிஸ் அடிக்கனுமா?

[நான் ஏதோ அவரிடம் வழி கேட்கிறேன் என்று நினைத்துக் கொண்டு] அடிங்க, அதோ அங்கே இருக்கே டாய்லெட், இல்லேன்னா இங்கே கூட அடிங்க...

எனக்கு இல்லை சார், உங்களுக்கு அடிக்கனும்னா அதான் அங்கே இருக்கே, அங்கே போங்களேன். 2 அடியில தான் இருக்கு. ஏன் இங்கே அடிக்கிறீங்க?

எனக்கு சொல்லாதீங்க சார். இது தான் நல்லா இருக்கு. அங்கே சுத்தமா இல்லை!

அடப்பாவிகளா...நான் சொல்லச் சொல்ல இன்னும் இரண்டு பேர் என்னை தாண்டி போய் சுகமாய் வெட்டவெளியில் நின்று கொண்டு பிஸ் அடித்தார்கள்.   என்னை ஏதோ சட்டையை கிழித்துக் கொண்டு நிற்கும் பைத்தியம் போல் பார்த்தார்கள். இத்தனைக்கும் முக்கால்வாசி பேர் பதிப்பகங்களை சேர்ந்தவர்கள்! இவர்களிடம் அந்த புத்தகங்கள் என்ன செய்யும்?

நேற்று ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் நிகழ்ந்த ஒரு சம்பாஷனை:

அது பறவை இல்லப்பா, வவ்வால் டா..அது!
ஏன் அது தலை கீழ தொங்குது?
அது அப்படி தான் தொங்கும்.  அதோட அமைப்பு அப்படி!
அப்படி தொங்கினா அதோட கொடல் வெளிய வந்திராதா?

சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள் 

"புத்தகங்களே, குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!"

அலுவலகத்தில் ப்ராஜக்டிலிருந்து விடுவித்து விட்டார்கள். புதிதாய் ஒரு ப்ராஜக்ட் தேட வேண்டும். அது வரை பெஞ்சு தேய்க்கலாம். ஐ. டியில் இருப்பது போல் மற்ற நிறுவனங்களில் இந்த பெஞ்சு தேய்க்கும் பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐ டியில் பெஞ்சு தேய்ப்பது பிரசித்தி பெற்ற செயல்! பெஞ்சு தேய்ப்பது ஆரம்பத்தில் சுவாரஸ்யமாய் இருந்தாலும், போகப் போக போரடித்து விடும். எல்லோரும் ஏதோ ஒரு வேளையில் மும்முரமாய் இருக்க, நீங்கள் மட்டும் தனியாய் விடப்பட்ட தீவில் அலைவதை போல் அலைய வேண்டியது தான். சிறிது நாட்களுக்குப் பிறகு நமக்கே ஒரு பயம் வந்து விடும். அடித்துப் பிடித்து ஏதோ ஒரு மொக்கை ப்ராஜக்ட்டில் சேர்ந்து விடுவோம். படாத பாடு படுத்துவார்கள், என்னை விடுவித்து விடுங்கள் என்று சண்டை போட வேண்டியது [நான் அப்படி சண்டையிட்டு விடுவித்துக் கொள்ளவில்லை!], மறுபடியும் பெஞ்சு, மறுபடியும் இன்னொரு மொக்கை ப்ராஜக்ட்!

இதுவரை பெஞ்சு தேய்த்ததில் எனக்குப் புரிந்தது என்னவென்றால், மிக நல்ல ப்ராஜக்ட் என்று ஒன்று இல்லை. நீங்கள் செய்வதை உங்களுக்குப் பிடித்து செய்தால், அது நல்ல ப்ராஜக்ட்; இல்லையென்றால் எல்லாமே கெட்ட ப்ராஜக்ட் தான்!!

தீபாவளி என்றால் எப்படி தீபாவளி மலர் வருகிறதோ [நன்றி சுஜாதா], அதை போல் ஜனவரி வந்தால் புத்தகக் கண்காட்சி வரும்! இந்த முறை, 0.0000000000000000001% மட்டுமே படிக்கும் நான் 0.00000000000000000001% மட்டுமே படிக்கும் சில பேர்வழிகளை கூட்டி போய் இப்படி எல்லாம் சென்னையில் ஒரு கண்காட்சி நடக்கிறது என்று காட்ட சந்தர்ப்பம் கிடைத்தது மகிழ்ச்சி. சும்மா போய் பார்க்கலாம், ஒன்றும் வாங்க வேண்டாம் என்று வழக்கம் போலவே நினைத்துக் கொண்டு போய், கண்காட்சியில் நான் வாங்கிய, இல்லை... என்னை வாங்கிய புத்தகங்கள்.

கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை 
தமிழ்செல்வன் சிறுகதைகள் - தமிழ் செல்வன் - பாரதி புத்தகாலயம்
ஆயிஷா - இரா. நடராஜன் - பாரதி புத்தகாலயம்
அறிவியல் களஞ்சியம் - ஆத்மா. கே. ரவி - பாரதி புத்தகாலயம்
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - புகழேந்தி - அருவி
இவன் தான் பாலா - ரா. கண்ணன் - விகடன்
ஜென் கதைகள் - தமிழில்: சேஷையா ரவி - அகல்
கார்டூன் வரையலாம் - யு. மா. வாசுகி - யுரேகா புக்ஸ்
காவல் கோட்டம் - சு. வெங்கடேசன் - தமிழினி
அன்டன் செகோவ் சிறுகதைகள் - எம். எஸ். - பாதரசம்

கணையாழியின் கடைசி பக்கங்களில் வாத்தியார் மிளிர்கிறார். இரண்டு வரிகளில் இருநூறு விஷயங்களை போகிற போக்கில் தெளித்து விட்டுச் செல்கிறார். இதை வைத்து தான் மழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் என்று ஒரு வகைப்படுத்தலை நான் என் வலைப்பதிவில் ஆரம்பித்தேன்! ஆரம்பித்ததோடு சரி!..


சரி, சித்திரம் வரையத் தெரியாதவர்களுக்காக...ஒரு கருப்பு கட்டம் போட்டு அதை ஒரு ஹாஸ்ய படமாக எப்படி மாற்றுவது என்று கடைசி பக்கங்களில் வாத்தியார் சொல்கிறார். அவர் சொன்னதை போலவே நான் முயற்சித்த போது...









"ஏன்டா, இதுக்குல்லையா அல்வா விக்கிறாங்க?"

"இது தான் நீ சொன்ன ஈ பி ஆபிசா?"

"என்ன தேடுறீங்க?
சுவிட்சை தான்!
ச்சி..."

திருடன்
விட்டுச் சென்று விட்டான் 
ஜன்னலில் நிலவை

எஸ். ராமகிருஷ்ணன் ரஷ்ய கலாச்சார மையத்தில் மேற் சொன்ன கவிதையை மிகவும் சிலாகித்து கேட்டேன். அதே கவிதையை பற்றி 1966 ல் எழுதியிருக்கிறார் சுஜாதா. தமிழ் சினிமாவை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்கிறார், இன்னும் அறுபதுகளில் தான் இருக்கிறேன், 98 வரியின் தொகுப்பு இது! Long way to go...

அன்டன் செகோவ் என்று அடிக்கடி படித்திருக்கிறேன். பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். முதல் கதையே [பந்தயம்] பிரமாதம். 

"இவன் தான் பாலா" படித்தேன் மறுபடியும்! அவருடைய படங்களின் தன்மையின் காரணங்கள் புரிகிறது. பாலாவும் ரஜினியும் சினிமாவில் வராமல் இருந்திருந்தால், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இன்று ஜெயிலில் தான் இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

காதலே நமக்கு வராது என்று நம்பிக்கையாய் இருந்த என் நண்பர் ஒருவருக்கு காதல் வந்து விட்டது! அவர் சொன்னதும் நான் சிந்திய பொன்மொழி கீழே!

காதலை நாம் தேர்ந்தெடுப்பதில்லை...
அது நம்மை தேர்ந்தெடுக்கிறது!

என்ன சரி தானே?
32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன்! சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்! அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது! முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன்! எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி! எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம்! மிகச் சுலபம்!! விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை? அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது!

இந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க!!] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது! அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும்.! அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார்! அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது! ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!
31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத் தேடும் நோக்கத்துடனும், வாங்கும் ஆவலுடனும் நான் செல்லவில்லை! இருந்தும் ஒரே ஒரு காந்தி நோட்டு (500) கொடுத்து பல விதமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் வாங்கி வந்திருக்கிறேன்...

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. மணலின் கதை (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
2. கடவுளுடன் பிரார்த்தித்தல் (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
3. எப்போதும் வாழும் கோடை (கட்டுரை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
4. கடைசி டினோசர் (கவிதை) - தேவதச்சன் - உயிர்மை
5. பனிமுடி மீது கண்ணகி (சிறுகதை, குறுநாவல்) - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு
6. வேள்வித் தீ - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு

[இவரின் "காதுகள்" நாவல் கிடைக்கவில்லை]

உயிர்மை பதிப்பகத்தில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் குவித்திருந்தார்கள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் எனக்கு ஒரு மயக்கம்! பல கவிதைகள் புரிவதில்லை என்றாலும், அவரே சொல்வது போல் புரியாத கவிதைகள் எனக்கான கவிதைகள் அல்ல என்று அடுத்த கவிதைக்குத் தாவி விடுவேன்! "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற அவர் தொகுப்பை வாங்கி விடுவது என்று நினைத்தேன்! என் துரதிருஷ்டம் அது கிடைக்கவில்லை. அது இருந்திருந்தால் அந்த ஒன்றை மட்டும் வாங்கியிருப்பேன். இல்லாததால் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன்.

அதிலும் என் அதிர்ஷ்டம், நான் உயிர்மையில் நுழைந்ததும் மனுஷ்யபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே தேசிகனுடன் அவரை அவர் இல்லத்தில் ஒரு முறை சந்தித்திருந்தாலும், அதை அவரிடம் சொல்லி அவர் நினைவுத் திறனை சோதித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்! மறுபடியும் என் அதிர்ஷ்டம், கடையில் இருப்பவர் ஒருவர், அவராய் சமீபத்தில் வெளியான சில புத்தகங்களைப் பற்றி எடுத்துக் கூறி நீங்கள் தேர்ந்தெடுங்கள், இந்த புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனின் ஆட்டோகிராஃப் வாங்கி வருகிறேன் என்று நான் எடுத்த ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். அட, இது நல்லா இருக்கே என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் மனுஷ்யபுத்திரனிடம் என்னைக் காட்டி எனக்கு கையெழுத்திட்டுத் தருமாறு கூறியவுடன், சரி இத்தனை தூரம் வந்து விட்டோம், "என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல கண்டெக்டர் என்னோட இருபத்தைஞ்சு பைசாவையும் சேர்த்து ஐம்பது பைசாவா உங்ககிட்ட கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிட்டார், ஆக்சுவலி நீங்க எனக்கு கடன் பட்டவர்" என்று ஒரு மறத் தமிழனைப் போல் தேசிகனுடன் அவர் வீட்டுக்கு வந்ததை ஞாபகப்படுத்தி அசடு வழிந்தேன்! நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நெளியாமல் முகம் மலர்ந்தார்! மேலும், எங்கே என் பெயர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்றெல்லாம் சொல்லி இன்னும் அவரை கொடுமைப்படுத்தாமல் நான் என் பெயரைச் சொன்னதும் அதை எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்!

படுக்கையறையில் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தாரோ இல்லையோ தெரியவில்லை...அவரின் கவிதைகளில் இரண்டு சாம்பிள்...

இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.

[coutesy: andhimazhai]

STAND UP!


[courtesy: http://www.taarezameenpar.com/]

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் நான் எந்த அபத்தத்தையும் செய்யப் போவதில்லை. நீங்கள் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" அளவுக்கு இந்தியில் புலமை பெற்றிருந்தாலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று! "பாருங்கள், தயவுசெய்து கண்டிப்பாய் பாருங்கள்!" உங்கள் பாராட்டுக்களை இங்கே சொல்லுங்கள். [நானும் 4 வருஷமா ப்ளாக் எழுதுறேன், பேசாம அமீர் கானா பொறந்துருக்கலாம், ஸ்வபா, எத்தனை பின்னூட்டங்கள்! ]

இல்லங்களில் பொங்கல் பொங்க
உள்ளங்களில் இன்பம் பொங்க
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!