[img courtesy: flickr]

என்ன? தீபாவளியா? ஒரே கொண்டாட்டமா? எனக்கு ஒன்னு சொல்லுங்க! ஒருத்தன் தீபாவளிய எங்க கொண்டாடலாம்? வீட்ல, பாட்டி வீட்ல, மாமனார் வீட்ல? ரைட்? நடு ரோட்ல? என் விதியை கேளுங்க! இந்த வருஷம் எனக்கு தீபாவளி ஃப்ளைட்ல.. கரெக்கிட்டா 20ஆம் தேதி பேரிக்காவுக்கு, சே அமேரிக்காவுக்கு கெளம்புறேன். எல்லாம் பெட்டியை தூக்கிட்டு எக்மோருக்கு பறந்துட்டு இருக்கானுவ, நான் மட்டும் ஏர்போர்ட்டுக்கு பறக்கனும், பறக்குறதுக்கு..எப்படி இருக்கு கதை? அட நிஜம் தாங்க!

நம்ம தான் எது செஞ்சாலும் காமெடி ஆச்சே, நம்ம மக்காவுக்கெல்லாம் ஒரே குஷி இன்னொரு கழைக்கூத்தாடியும் அமேரிக்காவுக்கு போவுதுன்னு..டேய் மாமு தீபாவளியே ப்ளைட்லயாடா? ஒரு ராக்கெட் கொண்டு போய் ஃப்ளைட்ல வச்சு வெடி மாமு, ங்கொக்க மக்கா நம்ம யாருன்னு காட்ட வேணாம்! இப்படி ஒருத்தன். ஏர்போர்ட்ல அம்புட்டு நேரம் என்ன எழவத் தான் பண்றதுன்னு தெரியாம ஒருத்தன்ட பொலம்பிட்டேன். இது என்ன பிஸ்கோத்து பிரச்சனை, அங்கன நெறைய ஏரோப்ளேன் நிக்கும் மாமு, ஒரு நல்ல ரெக்கையா பாத்து டப்புன்னு கீழே துண்ட விரிச்சி படுத்துறுன்னான். ஸ்ஷ்...அப்பா முடியவில்லை என்று புலிகேசி ரேஞ்சுக்கு ஒரு பெருமூச்சு விட்டேன். 2 வார்த்தை இங்கிலிபீசுல பேசிட்டா போதும், தொறை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுன்றானுவ..சரி கெளம்புரேன்னு ஆபிஸ்ல பசங்ககிட்ட சொல்லி ஜகா வாங்கும் போது ஒருத்தன் அப்போ நாளைக்கு வர மாட்டியா? உன்னை இனிமே பாக்கவே முடியாதான்னு ஒரே அழுவாச்சி! டேய் பாக்கவே முடியாதான்னு எல்லாம் சொல்லாதீங்கப்பா..அட்லாண்டிக் ஓஷன் எல்லாம் தாண்டி போறேன்! திரும்பி வருவேண்டான்னு தேத்திட்டு வந்துருக்கேன்! ஒவ்வொருத்தன் ரவுசும் தாங்க முடியலபா...

அமேரிக்காவுக்கு போவதை இவ்வளவு சலிப்பாய் யாராவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹிஹி..திடீரென்று கம்பெனியிலிருந்து ஒரு மூனு மாசம் போயிட்டு வாயேன் என்று அனுப்பி விட்டார்கள். நானே எதிர்பார்க்காத ஒன்று. சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி விட்டேன். நான் போகும் இடம் வடக்கு அமேரிக்கா(வாம்)! நான் போவது், மலையும் மலை சார்ந்த இடமும். நகரம் : ஹெலெனா மாநிலம் : மோண்டனா [யாரோ ஒருத்தன் "ஐ, ஆண்டெனா மாதிரி இருக்கு அங்கே சன் டி.வி. தெரியுமான்னு கேட்டான்!" இல்லை தெரியாம தான் கேக்குறேன் என்னை பாத்தவுடனே தான் இந்த மாதிரி கேள்வி எல்லாம் இவங்களுக்கு கேக்கத் தோனுதா?] இடத்தை பார்க்க விரும்பினால் கூகுள் மேப்பில் ஹெலெனா, மோண்டனா என்று டைப்புங்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்து கூகுள் எர்த்தில் பாருங்கள், நான் நடந்து போய் கொண்டு இருப்பது தெரிந்தாலும் தெரியும்!

இதன் மூலம் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் அங்கு போய் என்னால் காப்பி ஆத்துவதோடு இந்த தமிழ் சேவை எல்லாம் ஆத்த முடியுமா் என்று தெரியவில்லை. அதனால் என்னை நீங்கள் எல்லோரும் சற்று பொறுத்து அருள வேண்டும். திரும்பி வந்தவுடன் ஒரு பயணக் கட்டுரை எழுதுகிறேன். இது ப்ராமிஸ், கோல்கேட், வீக்கோ வஜ்ரதந்தி!!

சீ வாட் ஐ சே..[இன்னைக்கு உனக்கு வேட் ஐ சே! இருக்குற இருப்புக்கு இங்கிலீஷ் வேற!]

படக் குறிப்பு: அதாங்க..அட, புரியல இந்த ஏரோப்ளேன்லாம் ஆவுமேங்க..என்னங்க இது..தொண்டைலையே நிக்குது..ஆ! டேக் ஆஃப்!

[img courtesy: flickr]

அப்பா ஐந்தாவது முறையாக வண்டியை உள்ளே வைக்கும்படி சொன்னார். நல்ல ஒரு கதையில் கதாநாயகன் யாரையோ சந்திக்கச் சென்று கதவைத் தட்டும் போது அவருடைய குரல் எனக்கு மறுபடியும் கேட்டது. நான்காவது முறையாக அவர் சொன்ன போது "நான் வைக்கிறேன், நீங்க போய் படுங்க!" என்று சற்று எரிச்சலாய் சொன்னது ஞாபகம் வந்தது. அப்பாக்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது. அவர்கள் முதன் முறை சொன்னதும் நாம் எதையும் செய்வதே இல்லை! முன் சொன்னதற்கும், இப்போது சொன்னதற்கும் இடையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? உடனே சொன்னால் மறுபடியும் நான் எரிந்து விழுவேன் என்று நினைத்தாரோ என்னவோ! அவருக்கு இரவு சாப்பாடு முடிந்தவுடன் வீட்டை பூட்டி விட வேண்டும். அவரவர் கவலை அவரவர்க்கு..

அந்தப் பக்கத்தின் நம்பரை பார்த்துக் கொண்டு, வண்டி சாவியை எடுத்துக் கொண்டு செருப்பை தேடினேன். ஒரு செருப்பு மட்டும் தலைகீழாய் கிடந்தது. ஹாலில் இருந்து வரும் சொற்ப வெளிச்சத்தில் என் செருப்பை கண்டு பிடித்தேன். இப்போது இந்த கஷ்டம் வேறு. எரிச்சலாய் வருகிறது. அங்கு இருக்கும் ஒரு க்ரில் கேட்டைத் திறந்து, வெளி கேட்டை நன்றாக திறந்து வைத்துக் கொண்டேன். வெளியே குளிர்ந்த காற்று வீசுகிறது. வானத்தைப் பார்த்தென். பெளர்ணமி நிலவின் வெளிச்சம் வானத்தில் எங்கும் கோலமிட்டிருந்தது. பக்கத்து வீட்டில் தென்னை மரங்கள் இருக்கின்றன. தென்னங்கீற்றின் வழியே நிலவைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கடற்கரைக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. சரி என்று வண்டியை எடுத்து மேலே ஏற்றினேன். அப்போது தான் பார்த்தேன் அதை. மழைக்காலம் வந்து விட்டால் இந்தப் பிரச்சனை. என் உள்ளங்கை அளவுக்கு, சீ சீ அதை யார் உள்ளங்கையில் வைத்துக் கொள்வது? ஒரு பெரிய தவளை. சிறு வயதில் தவளை இலக்கியம் தெரிந்த என் நண்பன் ஒருவன் சொரித் தவளை நம்ம ஒடம்புல பட்டா நமக்கு பட்ட இடத்தில் சொறி புடிக்கும்என்று சொன்னான். அவன் எந்த நேரத்தில் சொன்னானோ, எந்த தவளையை பார்த்தாலும் இது சொறித் தவளையோ என்று தான் தோன்றும். இது என்னவோ இளம் பச்சை நிறத்தில், கொட்ட கொட்ட விழித்து கொண்டு நான் வண்டி வைக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய கண்!

வழக்கமாய் நான் வண்டியை ஜன்னலோரம் ஒட்டி வைப்பது வழக்கம். இன்று என்ன செய்வது? எனக்கோ அருவருப்பில் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. வண்டியை மெதுவாய் நடுவில் நிறுத்திவிட்டு, வெராண்டாவில் இருக்கும் ஒரு விளக்கமாற்றை எடுத்து கொண்டேன், கூட கொஞ்சம் தைரியத்தையும். எனக்கு தவளைகளிடம் பயத்தை விட அருவருப்பு ஜாஸ்தி. விளக்கமாற்றால் ஒரே தள்ளு தள்ளியதில் என் வண்டியின் பெட்ரோல் டாங்கில் போய் நின்றது. அது வழுவழுப்பாய் இருப்பதால் லேசாய் வழுக்கிக் கொண்டிருந்தது. இன்னொரு முறை தட்டியதில் அது வண்டி சாவி அருகில் சென்று நின்று கொண்டது. எனக்கோ அதை ஒவ்வொரு முறை தள்ளத் தள்ள அருவருப்பின் அளவு கூடிக் கொண்டே இருந்தது. தெரியாமல் மேலே பார்த்தால் தலைக்கு நேரே பல்லி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது. அட ஆண்டவா, உன் படைப்பில் தான் எத்தனை விந்தைகள் என்று வியந்தேன், இல்லை வியர்த்தேன். என்னால் இப்போது தவளையை பார்க்க முடியவில்லை. கிழே தவளை, மேலே பல்லி! அப்பாவை கூப்பிட்டு அந்த தவளையை விரட்டச் சொல்லலாமா என்று நினைத்தேன். ஒரு தவளைய விரட்ட தெரியல பேச்சு மட்டும் காது வரைக்கும் நீளுது என்பார். ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் எனக்கு அதனிடம் பயமில்லை; அருவருப்பு தான் என்று இவருக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை.

சரி என்று வண்டியை மட்டும் கொஞ்சமாய் ஓரமாய் நகர்த்தி விட்டு, நகர்த்தும் போது சக்கரத்தில் கீழ் மாட்டி அந்த தவளை நசுங்கியிருந்தால் என்று இந்த பாழாய் போன, விவஸ்தையே இல்லாத மனம் நினைத்து உடம்பை ஒரு தடவை உலுக்கிப் பார்க்கிறது. உள்ளே வந்து அமர்ந்து அந்த புத்தகத்தின் விட்டுப் போன பக்கத்திலிருந்து தொடங்கினேன். அவன் கதவு திறந்ததும் என் காலில் ஒரு தவளை விழுந்தது, அவன் சந்திக்கப் போன நபரிடம் பேசிக் கொண்டிருந்த போது சக்கரத்தின் கீழ் அடிபட்ட தவளை தெரிந்தது. அவன் பையிலிருந்து ஒரு தவளையை எடுத்து அந்த நபரிடம் நீட்டுகிறான். எனக்கு அம்மா கொடுத்த பாலில் தவளை ஒன்று மிதக்கிறது. எனக்குத் தெரியும், அந்தத் தவளை எப்படியோ எங்கோ மறைந்து போயிருக்கும். ஆனால், என் மனதில் வந்து உட்கார்ந்திருக்கும் இந்த மனத் தவளைகளை நான் எப்படி விரட்டுவது? ஒரு வேளை என் மனமும் சொறி பிடித்துருக்குமோ?