எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். இணையத்தில் இந்தப் படத்தை சிலாகித்தது சிலர் எழுதுவதை பார்த்ததும் பொறுக்க முடியவில்லை. பாலுமகேந்திரா ஒரு அருமையான கலைஞன் தான்! அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் இந்த வயதில் இத்தனை சிரமப்பட்டு [நம்மையும் சிரமப்படுத்தி!] ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்று தான் எனக்குப் புரியவில்லை! படத்தில் மிக சொற்பமான காட்சிகளை விடுத்து, சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு ஏன் படம் பிடிக்கவில்லை என்றால்...

1. படம் முழவதும் துண்டு துண்டான [அவர் துண்டி கட்டிக் கொண்டு!] காட்சிகள். ஒரு கதையே இல்லை!
2. மிகச் செயற்கையான நடிப்பு. எல்லோரும். அதிலும் பாலு மேடையில் எப்போதும் பேசுவது போல் தன் ஆட்காட்டி விரலால் நம் கண்ணை குத்துவதை போல குத்தி குத்தி விடாமல் வசனம் ஒப்பிப்பது.
3. படத்தின் லாஜிக் :-( இந்தக் காலத்தில் புருஷன் கூட இருக்கும்போதே மாமனார் மாமியாருடன் யாரும் சேர்ந்து வாழ விரும்புவதில்லை. [எந்தக் காலத்திலும் என்பது தான் சரியாய் இருக்கும்!] அப்படி இருக்கும்போது இந்த படத்தில் மருமகள் தன் சென்னை வாழ்க்கையை துறந்து, டாக்டர் தொழிலை மறந்து, தன் பையன் இங்கேயே தங்கி தாத்தாவிடம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்! சரி, அந்தப் பெண் ஆயிரத்தில் ஒருத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால், அதற்கான பக்கபலமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை.
4. சரி அம்மாவை விடுங்கள். சென்னையில் வளரும் ஒரு சமத்தான பையன் [சாலையில் இரைச்சல்களையும், புதிதான ஓசைகளையும் சவுண்ட் ரெக்கார்டிங் எல்லாம் செய்கிறான்], அந்த அத்துவானக் காட்டில் எத்தனை நாள் தங்குவான்? அங்கு பேஸ்புக் இல்லை, வீடியோ கேம்ஸ் இல்லை. அங்க எப்படிங்க இருப்பான்?
5. இத்தனை காலம் சாதி/மத பித்து பிடித்து, அலையும் ஒரு பெரியவர் ஒரு பாதிரியார் சொன்னதும், எல்லாவற்றையும் துறந்து விடுவதெல்லாம் காதில் அல்ல உடம்பு பூரா பூ!
6. படம் முடிந்து வெளியே வரும்போது என் நண்பர் "இது ஆணாதிக்க சினிமா!" என்றார். எப்படி என்று கேட்டதற்கு, "மகளுக்கு தான் மூன்று மகன்கள் இருக்கிறார்களே? தாத்தா ஏன் அவர்களிடம் விளையாடவில்லை? ஏன் அவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கச் சொல்லவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் மட்டும் அத்தனை கரிசனை?" என்றார். பையன் வழி பேரன் தான் அப்போ முக்கியமா?

இன்னும் இப்படி எத்தனையோ...

இது "மாற்று சினிமா" என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது. என்னை பொருத்தவரை பாலுமகேந்திரா அவருடைய ஸ்டைலில் சிறிதும் மாறாமல் அதே சமயம் பெரிதும் சொதப்பி எடுத்த ஒரு "மாறாத சினிமா" தான் தலைமுறைகள்!!


நண்பனுடன் திருவான்மியூர் பீச்சுக்கு சென்றிருந்தேன். மாலை ஒரு ஐந்து மணி இருக்கும். நல்ல இதமான வெயில். நல்ல கடல் காற்று. உலகத்தையே புரட்டிப் போடுவது போல் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ஒரு பெரிய ஆமை கடற்கரையில் கிடப்பதை பார்த்தேன். மண்ணில் செய்ததோ என்ற சந்தேகம் நீங்கி உண்மையான ஆமை தான் என்று தெளிவு பெற்று உலகம் பாதி புரண்ட நிலையில் விட்டு விட்டு அருகில் சென்றோம். ஆம்! உண்மையான ஆமை தான். இறந்து கரை ஒதுங்கி இருந்தது. வயது ஒரு நூறாண்டு இருக்கலாம்; எடை ஒரு இருநூறு முன்னூறு கிலோ இருக்கலாம்! கண்களில் உப்பு சேர்ந்து, பொத்துப் போய், வாய் திறந்து கிடந்தது.  சமூகக் கடமையாய் என் ஃபோனில் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன். பிறகு தள்ளி அமர்ந்து உலகத்தை புரட்டிப் போட ஆரம்பித்தோம்.

அதோடு அந்த ஆமையை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தோம். என்ன ஒரு வாழ்வாங்கு வாழ்க்கை வாழ்ந்திருக்கும். இத்தனை பெரிய கடலில் ஒரு குட்டியாய் பிறந்து, எல்லா ஆபத்திலும் தப்பித்து, இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்து....உலகெங்கும் சுற்றியதோ, அல்லது வங்காள விரிகுடாவிலேயே தங்கி இருந்ததோ...எங்கு பிறந்தததோ, கடைசியில் திருவான்மியூர் பீச்சில் வந்து கரை ஒதுங்கி இருக்கிறது!

போகிற வருகிற எல்லோரும் நின்று கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தார்கள். என்னை போலவே எல்லோரும் தங்கள் மொபைல் ஃபோனில் ஃபோட்டோ எடுத்தார்கள். என் நண்பன் சொன்னான்: "அதற்கு இன்று முகப்புத்தகத்தில் சரியான அஞ்சலி கிடைத்து விடும்!" அப்போது ஒரு கணவன் தன் குழந்தையுடன் ஆமை அருகில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுக்க மனைவி அதை மொபைல் ஃபோனில் க்ளிக்கினாள்! அடுத்து வந்த ஒருவன் அந்த ஆமையின் ஓட்டின் மேல் கால் வைத்து போஸ் கொடுத்தான். இன்னொருவன், காலால் அதன் ஓட்டை தட்டி விட்டுக் கொண்டே சென்றான். இதற்கு மேலும் அந்தக் காட்சிகளை காணச் சகிக்காமல் எழுந்து கொண்டோம்!

- கட் -

நேற்று தருவை அழைத்துக் கொண்டு கிண்டி குழந்தைகள் பூங்கா சென்றிருந்தேன். நம் மக்கள் கூண்டுக்கு அருகில் நின்று கொண்டு, புள்ளி மானுக்கு பாப்கார்ன் வழங்கிக் கொண்டிருந்தார்கள். விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகம் ஆங்காங்கே போர்டும் வைத்திருக்கிறது. அதையும் மீறி!  கொஞ்சம் கூட civic sense இல்லாத மக்கள் நம் மக்கள்! கட்டுப்பாடு என்று ஒன்று இருந்தால், அதை மீறி விட்டுத் தான் மறு வேலை பார்க்கிறார்கள். அங்கு வேலை பார்க்கும் ஊழியரிடம் நான் புகார் செய்தேன். அதற்கு அவர், "என்னங்க பண்றது, அதுங்களுக்கு சாப்பாடு பத்தலை, அதுங்களும் கொடுக்குறதை எல்லாம் சாப்புடுது. ரெக்கார்ட் படி, பதினெட்டு மான் தான். ஆனா, இங்கே முப்பது இருக்கு. சாப்பாடு பதினெட்டுக்கு தான் கொடுக்குறாங்க. எண்ணிக்கையை சரி பண்ணிக்குங்கன்னு நாங்களும் பல தடவை சொல்லிட்டோம். இதெல்லாம் யாரு கேக்குறா?" என்றார். எனக்கு துக்கம் பீறிட்டது.

மெயிண்டனன்ஸ் படு மோசம். எல்லா கூண்டுகளும் நாற்றம் எடுக்கிறது. விலங்குகளின் கண்களில் ஜீவனே இல்லை. பசி மயக்கத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? உயர உயர பறக்க வேண்டிய பறவைகளை கூட்டி வந்து ஒரு தண்ணீர் தொட்டி கட்டி அடைத்து வைத்திருக்கிறார்கள். பார்க்க பாவமாய் இருக்கிறது. எதற்கு இந்த மாதிரி பூங்காக்கள் என்ற கேள்வி எழுகிறது. வெளிநாடுகளில் இப்படி தோன்றியதில்லை. நம் நாட்டில் நடத்தும் லட்சணம் அப்படி! ஒரு பெரிய கூண்டில் ஒரே ஒரு குரங்கு மட்டும் பாவமாய் இருக்கிறது. இன்னொரு கூண்டில் வேறு வகையான குரங்கு கூட்டம் இருக்கிறது. அதன் பின்னால் எல்லாம் சிவப்பாய் ஏதோ நோய் வந்தது போல் இருக்கிறது. அதன் அருகில் நின்று நம் மக்கள் போஸ் கொடுக்கிறார்கள். மனைவி மக்களின் முன்னால் தங்கள் வீரத்தை பறை சாற்றுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் ஒருவரின் முடியை பிடித்து ஒரு குரங்கு இழுத்து விட்டது. அதன் கண்களில் பயங்கர வெறி! "கூண்டுலே அடைபட்டு கெடக்குதுல்ல, அப்படித் தான் இருக்கும்!" என்று அவர்களே சமாதானம் வேறு செய்து கொள்கிறார்கள். வாத்துகளின் மூக்கைச் சுற்றி கொப்பளம் மாதிரி இருக்கிறது. அது வயதானால் வருவதா அல்லது ஏதேனும் நோயா தெரியவில்லை. அதன் கூண்டில் தண்ணீர் கூட இல்லை. அவைகள் கிடந்து கத்துகின்றன. நம் மக்கள் அதோடு சேர்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே உற்சாக குரல் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். எனக்கு அழுகை வரும் போல் இருந்தது. தரு பறவைகளையும், விலங்குகளையும் பார்த்து ரசித்தாளோ என்னமோ, நம் நாட்டில் இந்த மாதிரி இடங்களுக்கு சென்றால் எனக்கு ஒரு வித மன அழுத்தமே மிஞ்சுகிறது!
விகடன் இதழில் "காரெக்டர்ஸ்" என்று ஒரு சிறு பத்தி வரும். வித விதமான காரெக்டர்களை பற்றி ஒரு காரிகேச்சர் கொடுத்திருப்பார்கள். அதே போன்று, என் கல்லூரித் தோழர்களின் காரிகேச்சர் இது! எல்லோரிடமும் நெருங்கிப் பழகியவன் என்ற உரிமையிலும், அதில் முக்கால்வாசி பேர் என் வலைப்பதிவை படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலும் எழுதி இருக்கிறேன். உங்களுக்கு அத்தனை சுவாரஸ்யமா இருக்குமா தெரியவில்லை!

ராம்சரண்


மதுரையில் பெயர் பெற்ற கண் டாக்டரின் பேரன். "நடராஜ்" பென்சிலில் நீளமாய் ஒரு கோடு ஒன்று போட்டது போல் இருப்பான். “கடைசி பெஞ்ச்” கேஸ் என்று சொல்வதை போல் “முதல் பெஞ்ச்” கேஸ் என்று சொல்வது இவனை குறைத்து மதிப்பிடுவதாகும். எல்லா முதல் பெஞ்சுக்கும் “முதல் பெஞ்ச்” கேஸ் என்று தான் சொல்ல வேண்டும்! புரியலை? சொல்றேன். செளராஷ்டிரா காலேஜில் அப்போது கிளாஸ் ஆரம்பிக்கும் நேரம் காலை பத்து மணி. முதலாம் ஆண்டில் ஒருநாள் என்னிடம் [அப்போது பெரும்பாலும் என்னிடம் மட்டும் தான் அவன் பேசுவான்!], "டே, நான் தான் இன்னைக்கி காலேஜுக்கு ஃபர்ஸ்ட் வந்தேன்." என்றான். "அப்படியா, ஒம்பது மணிக்கே வந்துட்டியா?" என்றேன். கூலா "இல்லைடா, ஏழரை மணிக்கு வந்தேன்" என்றான்! [என்னோட ரியாக்ஷன்!] "செக்யிரிட்டி, கேட் தொறக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. அப்புறம் அவர் கிட்ட ஐ டி கார்ட் எல்லாம் காட்டினேன், கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா என்று சொல்லி கொஞ்ச நேரம் கழிச்சி கேட்டை தொறந்தார்"என்றான்.! இப்போ புரியுதா முதல் பெஞ்சுக்கும் முதல் பெஞ்ச் என்று இவனை ஏன் சொன்னேன் என்று! அத்தனை பொறுப்பு படிப்பின் மேல். ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து விட்டு, அன்றன்று நடத்திய பாடத்தை அன்றே படித்த ஒரே ஆள் இவன் தான்! மூன்றாம் வருடத்தில் இவனும் கிளாஸ் கட்டடித்தான் என்றால் நம்ப முடிகிறதா? அது தான் ஆர்ட்ஸ் காலேஜ்!

கிரிக்கெட் இவன் உடல் என்றால், சச்சின் அதன் உயிர்! அப்படி ஒரு கிரிக்கெட் பைத்தியம். நான் என்ன சொன்னாலும் சிரிப்பான். என் வீட்டின் நிதி நிலைமை கருதி எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளான். தமிழ், இங்கிலீஷ் கைட் எல்லாம் நான் வாங்கவே மாட்டேன். இவன் தான் எனக்கு தந்து உதவுவான். இரண்டு பேரும் பங்கு போட்டு படித்துக் கொள்வோம். யாருக்கும் தீங்கு நினைக்காத மனசு இவனுக்கு. விழுந்து விழுந்து சிரிப்பது என்னவென்று நான் இவனிடம் தான் பார்த்தேன். என்ன அறுவை [அப்போ எல்லாம் "மொக்கை" வார்த்தை பிரயோகத்தில் இல்லை] ஜோக் சொன்னாலும் சிரிப்பான். அதில் மட்டும் என்னை கை விடவே மாட்டான்.

கோபி

சீனியர்களின் செல்லப் பிள்ளை. நான் வகுப்பில் சேர்ந்த புதிதில் ரேக்கிங் நடந்து கொண்டிருக்கும். லஞ்ச் முடிந்ததும் எந்த சீனியரின் கண்ணிலும் படாமல் அமைதியாய் வகுப்பில் வந்து அமர்ந்து கொள்வோம். நம்ம கோபி, தேர்ட் இயர் கிளாசில் தான் இருப்பான். இவனை வைத்துக் கொண்டு தான் சீனியர்கள் எங்களை ரேக்கிங் செய்வார்கள். "ஹே, வா, சீனியர் கூப்பிடறாங்க என்று கூட்டிப் போவான்". இப்படி மாட்டி விடறானே என்று எரிச்சலாய் வரும். அனாயாசமான டைமிங், நச்சுன்னு வித்தியாசமான கமெண்ட்ஸ் என்று கலக்கியெடுப்பான். "அண்ணன் ஒரு கோயில்" என்ற வாசகத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தான். எதை கேட்டாலும் எங்க அண்ணன், எங்க அண்ணன் என்று பெருமை பேசுவான். பெண்களிடம் கடலை போடுவதில் கில்லாடி. ஜூனியர், சீனியர் என்று யாரையும் விட்டு வைக்க மாட்டான். இவனுக்கு ஏனோ என்னை பிடித்து போய் விட்டது. அதனால் கடலை போடும்போதெல்லாம் என்னையும் அருகில் வைத்துக் கொள்வான். நெல்லுக்கு பாயறது கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்சது. இப்படி எல்லாம் கூட பேசலாமா என்று நான் இவனை பார்த்து ஆச்சர்ய்பட்டிருக்கிறேன்.

உதாரணமாக சில: குருதி புனல் வந்த போது, கமலின் பிரபலமான வசனம்: "எல்லாருக்கும் ஒரு ப்ரேகிங் பாயிண்ட் இருக்கு!" என்பதை மாற்றி, "எல்லார்கிட்டயும் ஒரு ப்ளு பான்ட் இருக்கு" என்று சீரியசாய் சொல்வான்! காதல் கோட்டை படம் வந்த புதிது. அஜீத் ஓரமாய் நிற்க, ஹீராவின் கவர்ச்சியான போஸ் போட்டு ஊர் பூரா போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அந்த போஸ்டர் பார்த்து விட்டு, "இந்த சீன் படத்திலேயே வராது" என்றான்! ஆசை படத்தில் "மீனம்மா" பாட்டின் முதல் வரியில் சுவலட்சுமியின் கால்களை க்ளோசப்பில் காட்டுவார்கள். எல்லோரும் கிறங்கி போய் பார்த்து கொண்டிருந்தோம். இவன் அமைதியாய், "இது டைரக்டர் வசந்தோட காலுடா" என்றான்! இன்று வரை அந்த பாட்டை பார்க்கும்போது எனக்கு அது தான் ஞாபகம் வருகிறது! முதலாம் ஆண்டில் பம்மியிருந்த நான், இரண்டாம் ஆண்டில் கொஞ்சம் கெத்தாகிவிட்டேன். "எப்படிடா கிளாஸ்ல இப்படி எல்லாம் கலக்குறே?" என்று இவனே என்னிடம் ஒருநாள் கேட்டபோது, "எல்லாம் உன்கிட்ட கத்துக்கிட்டது தான்!" என்று நான் சொன்னதை அவன் ஏற்கவில்லை என்றாலும், அதில் உண்மை இருந்தது. நல்ல எண்ணை வைத்து உச்சி எடுத்து படிய வாரி கொண்டு வருவான். கலையாத தலை முடியை சீவிக் கொண்டே இருப்பான். தினமும் வித விதமான சட்டை போட்டு வருவான். எல்லாம் சுமாராய் தான் இருக்கும். "என்னடா சட்டை செமையா இருக்கு!" என்று நாம் கலாய்த்தால், எங்க வீட்ல இந்த மாதிரி நூத்தி இருபத்தஞ்சு சட்டை இருக்கு என்பான்! சஃபாரி போட்டு காலேஜுக்கு வந்தே ஒரே மாணவன் இவனாய் தான் இருப்பான். ஒரு பையன் [வேறு கல்லூரி நண்பன்] என் கண் முன்னே அவனை ஏகத்துக்கு கலாய்த்தான். பிறகு தான் சஃபாரி போடுவதை விட்டான். இதையெல்லாம் விட, அவன் வீடு அருகில் என்பதால் காலையில் கட்டிய லுங்கியுடன் வந்து என்னை எழுப்பி விடுவான்! கல்லூரி முடிந்ததும் எல்லோரும், எம்.எஸ்.சி, எம் சி ஏ, என்ற கனவுடன் இருக்க இவன் மட்டும் எனக்கு மதுரையில் இருக்கும் அமைதியான வாழ்க்கையே போதும் என்று முடிவெடுத்து அங்கேயே தங்கி விட்டான்!

ஏ எஸ் பாலாஜி குமார்

அதுவரை பாலாஜி என்ற பெயருக்கு பின்னால் குமார் சேர்த்து நான் கேள்விப்பட்டதே இல்லை. முதல் முறை கேட்டபோது வித்தியாசமாய் இருந்தது. மாப்பிள்ளை மாதிரி நல்ல ஜம்முன்னு இருப்பான். இவன் அழகில் மயங்கி ஒரு சீனியர் "உனக்கு தான் என் பொண்ணு!" என்று டீலிங் போட்டு வைத்திருந்தார். வகுப்பில் முக்கால்வாசி பேர் ஒரே ஸ்கூலில் இருந்து அப்படியே இங்கு வந்து சேர்ந்ததால் இவனுக்கென்று ஒரு சிறு கூட்டம் இருந்தது. இங்கிலீஷ் படத்தை பார்த்து பயங்கரமாய் பீலா விடுவான். சொடக்கு போட்டு இவன் அந்த படத்தை பற்றி பேசும் விதம் பார்த்து "நானும் இங்கிலீஷ் மீடியம் தானே படிச்சேன், கொக்க மக்க,  எனக்கு ஒரு மண்ணும் வெளங்க மாட்டேங்குதே என்று இருக்கும்!"

எனக்குத் தெரிந்து எங்கள் வகுப்பில் வாரத்துக்கு ஒரு தடவை ஷேவ் செய்யத் தகுதி படைத்திருந்தது இவன் ஒருவனுக்குத் தான். எனக்கு அப்போது மீசை கூட இல்லை! எங்கள் வகுப்பில் முக்கால்வாசி பேர் பொடியன்கள் தான். சராசரி உயரம் 5.5 தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் வேடிக்கையான பேச்சைக் கேட்டு என்னையும் அவன் க்ரூப்பில் சேர்த்துக் கொண்டான். "உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பார்ட்ஸ் ["பார்ட்டி"யின் சுருக்கம்!]" என்பான்! அவன் க்ரூப்பில் ஏற்கனவே இருந்தது சதீஷும், ஏ ஆர் மணியும். மூவரும் சேர்ந்து நேராய் டவுனால் ரோட்டுக்கு போவார்கள். ஒரு எலக்ட்ரானிக் கடையில் நுழைவார்கள். அந்த கடைக்காரன் இவர்களை பார்த்து சிரிப்பான். ஏதோ ஐ சி, கபாசிட்டார் என்று கேட்பார்கள், பேசுவார்கள். எனக்கு ஒன்றும் புரியாது. அப்படியே திரும்பி வந்து விடுவார்கள். இத்தகைய பெருமைமிகு க்ரூப்பில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். இவன் வீட்டில் தான் மூவரும் சேர்ந்து லென்ஸ் எல்லாம் வைத்து டெலஸ்கோப் எல்லாம் செய்வார்கள். என்னிடம் கொடுத்தால் நான் பக்கத்து வீட்டு ஆண்டியை பார்ப்பேன்.

ஒவ்வொரு வகுப்பிலும், பெண்களிடம் மட்டுமே பேசும் ஒருவன் இருப்பானே? எங்கள் வகுப்பில் இவன் இருந்தான்! யார் அதை பற்றி என்ன கலாய்த்தாலும் இவன் கடலை சாகுபடி நின்றதே இல்லை. ஒரு விசேஷம் தவறாமல் வகுப்பில் படிக்கும் பெண் நண்பர்களுக்கு கிரீட்டிங் கார்டுகள் அனுப்புவான். என் எழுத்து அழகாய் இருக்குமென்று என்னை தான் அதில் எழுத சொல்லுவான். இவன் காசு போட்டு வாங்கி, நான் கொடுத்தது போல் ஒரு ரெண்டு கார்டுகளில் என் பெயரை எழுதச் சொல்லுவான். அப்போது இவனின் தியாக உள்ளத்தை நினைத்து என் கண்ணில் நீர் வரும். "நம் கிளாஸ் கேள்ஸ் எல்லார் வீட்டுக்கும் போகணும்" என்று இவனே வழிநடத்தி எங்களை கூட்டிப் போவான். இவனை விட இவன் அம்மா எனக்கு செம தோஸ்த்!

ஏ ஆர் மணிகண்டன்

மிஸ்டர் கருத்து கந்தசாமி. வில்லேஜ் விஞ்ஞானி. ஒரு கையில பிரட் போர்ட், இன்னொரு கையில் சால்டரிங் ராட் இதோட தான் திரிவான். எலெக்ட்ரானிக்ஸ் என்றால் பிரித்து மேய்வான். மூன்றாம் ஆண்டில் எங்கள் எல்லாருடைய ப்ராஜக்டையும் இவன் தான் செய்தான். எல்லாவற்றிற்கும் ஒரு கருத்து இருந்தது இவனிடம். மீசையை மழிக்காமல் குட்டியாய் வெட்டிக் கொள்வான், கேட்டால் அப்போது தான் நன்றாய் வளரும் என்பான். அவன் சொன்னது போல், மூன்றாம் ஆண்டில் காதலுக்கு மரியாதை விஜய் மாதிரி மீசை வைத்துக் கொண்டான். இந்த மாதிரி பல டிப்ஸ்களை அள்ளி தெளிப்பான். நல்ல கவிதைகள் எழுதுவான். நன்றாய் வரைவான். கொஞ்சம் படிப்பான் [பாட புத்தகத்தை அல்ல]. அப்போதே இவனுக்கு கொஞ்சம் இலக்கிய பரிச்சயம் உண்டு. ஆங்கில படங்களாய் பார்த்து தள்ளுவான். சப் டைட்டில் இல்லாத காரணத்தால், ஸ்டார் மூவிஸில் படம் பார்த்தால் நான் எல்லாம் எப்போது லிப் டு லிப் கிஸ் வரும் என்று தான் பார்த்துக் கொண்டிருப்பேன். இவன் ஒருவன் தான் எங்களுக்கு அதன் கதையை சொல்லுவான்! பூவே உனக்காக சங்கீதாவிடம் தீராக் காதல் கொண்டிருந்தான்.  தான் உண்டு, தன் சதீஷ் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பான். காலேஜ் முடிந்து அவரவர் வீட்டுக்கு போகிறார்களோ இல்லையோ, நேராய் எல்லோரும் என் வீட்டில் தான் பட்டறையை போடுவார்கள். அப்படி வரும்போது, "வேலைக்கு போயி சம்பாதிச்சி, பிரதீப் வீட்டை இடிச்சி நல்லா கட்டணும்!" என்று எங்கள் குடும்பத்தை புல்லரிக்கச் செய்தவன்.

சதீஷ் குமார்

ஏ ஆர் மணிகண்டன் வருகிறான் என்றால் அவனின் இடது அல்லது வலது பக்கத்தில் இவன் கண்டிப்பாய் இருப்பான். மணி வீட்டில் இவனை அவனின் பொண்டாட்டி என்று தான் கூப்பிடுவார்கள். இவன் அதைப் பற்றி எல்லாம் கவலையே பட மாட்டான். மணியிடம் அவ்வளவு பிரியம். இணை பிரியாத நண்பர்கள் என்றால் இவர்கள் தான். சதீஷ் ஒரு சாமியார். கொஞ்சம் ஈகோ உண்டு. தான் என்ன நினைக்கிறானோ, அதை தான் செய்வான். "ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா" என்ற விஜய் டயலாக்கை சொல்லாமல் கடை பிடித்தவன் இவன். திடீர் என்று எல்லோரிடமும் பயங்கரமாய் பேசுவான், திடீர் என்று எல்லோர் பேசுவதையும் ஒரு புன்முறுவலுடன் கேட்க மட்டும் செய்வான். அப்படி ஒரு விளம்பரம். "நான் சொன்னதை தான் என் மனமும் உடம்பும் கேட்கும் பாக்குறியா?" என்பது போல் இருக்கும் அவன் செய்கைகள்!! இவனின் மனப்பாடத் திறமை நம்மை அதிர வைக்கும். மனப்பாடம் செய்வதில் கணக்கை கூட விட்டு வைத்ததில்லை. மணியும் இவனும் செய்ய வேண்டிய முக்கியமான செயல்களுக்கு ப்ளான் போடுவது இவன் தான்! முக்கியமான செயல் என்றால், என் வீட்டுக்கு வருவது, டவுனால் ரோட்டுக்கு போவது, இது தான்!!! இதற்கு ஏதோ சர்வதேச திட்டம் மாதிரி ப்ளான் போடுவான்!! ஒரு முறை என்னிடம், "டே பிரதீப், இன்னைக்கி சயிந்திரம் நானும் மணியும் ரீஃபில் வாங்க உங்க வீட்டுக்கு வர்றோம் என்றான்! இப்படி பல முக்கியமான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதில் கில்லாடி! மொத்தத்தில் இவன் ஒரு வித்தியாசமான ஆள்!

ரெப்பு மணி அலைஸ் கே ஆர் மணி

எங்கள் கிளாஸ் ரெப். முதலாம் வருடம் சாந்து பொட்டு வைத்துக் கொண்டு காலேஜுக்கு வருவான். ஹைஸ்கூல் பழக்கம். பிறகு ஏனோ மறைந்து விட்டது. கணீர் குரல். ஆனால் மிகப் பணிவானவன். வாத்தியார்களின் செல்லப் பிள்ளை. எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வான். நண்பர்கள் அழைத்ததற்காக ஃபேர்வல் பார்ட்டிக்காக சென்றால், அங்கு பொங்கல் வந்துச்சா, சாம்பார்ல உப்பு இருக்கா என்று பார்த்துக் கொண்டிருப்பான். நமக்கு இந்த உதவி கிடைத்தால் நன்றாய் இருக்குமே என்று நினைத்து முடிப்பதற்குள் அதை நடத்தி முடித்திருப்பான். அதீத கடவுள் பக்தி. கருணைக் கடல். அதே சமயம் பயங்கர கோவக்காரன். இவன் கோபம் இவனைத் தவிர யாரையும் வருத்தி நான் பார்த்ததில்லை. அரிவாளை எடுப்பது போல் அடிக்கடி சட்டைக்குப் பின்னால் கையை விடுவான், கடைசி வரை அந்த அரிவாளை இவன் எடுக்கவே இல்லை. என்னிடம் அலாதி பிரியம் இவனுக்கு! தீபாவளிக்கு புது சட்டை போட்டு வந்து என்னிடம் காட்டுவான்! ராம்சரண் மாதிரி, நான் என்ன சொன்னாலும் சிரிப்பான். "உங்களை மாதிரி ஆளுங்களால தான் இவன் ஓவரா ஆட்றான்" என்று என் தம்பி சொன்னதால், அவன் இருந்தால் கொஞ்சம் பயந்து பயந்து தான் சிரிப்பான். பெங்களூரில் வேலை பார்க்கும்போது இவன் கூட தான் தங்கி இருந்தேன். அம்மாவுடன் இருந்தது போல் தான் இருந்தது!

தியானேஷ்

அஞ்சு அடி மூணு அங்குலம். ஒடிசலான உருவம். ஒரு பச்சை சட்டை, ஒரு கட்டம் போட்ட சட்டை, ரெண்டு பாண்ட் [இவங்க அப்பா நல்ல பஜாரில் ஒரு சின்ன ஜவுளிக் கடை வச்சிருக்கார்!] , கலையாத தலையை வார ஒரு சீப்பு, போனா போகுதுன்னு கைல ஒரு நோட்டு. இது தான் தியானேஷ். பெண்ணின் மனதையும், தியானேஷின் மனதையும் யாராலும் அளக்க முடியாது. அத்தனை ரகசியங்கள் பொதிந்து கிடக்கும். காரெக்டர் என்றால் இவன் தான்! தனக்கென்று ஒரு நடைமுறை, தனக்கென்று ஒரு வழி. முதலாம் ஆண்டில் ஒரு கண் தெரியாத இங்கிலீஷ் புரப்ஃபசர் வருவார். அவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது இவன் நைசாய் நழுவி வெளியே போய் விடுவான். "எங்கடா போறேன்னு?" கேட்டா லைப்ரரி என்பான். எங்கள் வகுப்பிலேயே, ஏன் கல்லூரியிலேயே அதிகமாய் லைப்ரரி போனது இவன் தான். என்ன படித்தான் என்பது தான் தெரியவில்லை. காலேஜே கொண்டாடும் ஒரு அழகி "அவ ரெடின்னா நானும் ரெடி" என்று கூசாமல் சொல்வான். அப்படி ஒரு தன்னம்பிக்கை. இவன் ஒரு தனிப்பிறவி!

சசிகுமார்

1950 ல் பிறக்க வேண்டியவன். ஓட்டப்பந்தயத்தில் கூட நடந்து தான் வருவான்! வாழ்க்கையை நின்று நிதானமாய் வாழ்பவன். எதற்கும் அவசரம் இல்லை. நாளை உலகம் அழியப் போகிறது என்று நடு இரவில் எழுப்பி இவனிடம் சொன்னால், "அப்படியா, சரி நான் கொஞ்சம் தூங்கிட்டு வர்றேன்" என்பான். இவனுக்கு யாரும் செய்வினை எல்லாம் வைக்க வேண்டியதில்லை. "வா, டீ குடிப்போம்" என்றால் போதும் பின்னாடியே போயிடுவான்! அமைதியின் சொரூபம். நல்ல ரசிகன். விஜய்யின் ஆரம்பகால பாடல்களை ரசித்து எங்களுக்கும் பரிந்துரை செய்தவன்! கல்லூரியின் அழகான பெண்ணை எங்களுக்கு அடையாளம் காட்டியவன். இவன் லுங்கி கட்டும் அழகே தனி. அத்தனை நேர்த்தி. இவன் பார்த்து பார்த்து ஷூ வாங்குவதும், ஜீன்ஸ் வாங்குவதும் எங்களுக்கு ஒரு எண்டர்டைன்மெண்ட். தேர்வுக்கு படிக்கும்போது எனக்கு "கேப்சரிங் மைண்ட்" என்று பட்டம் கொடுத்தவன். எல்லோரும் செய்வதை, சிலாகிப்பதை எப்போதும் இவன் கண்டு கொண்டதே இல்லை. இவனுக்கென்று ஒரு உலகம். அதில் இவன் தான் ராஜா.

டைட்டானிக் வந்து ஒரு இரண்டு வருடம் கழித்து ஒரு நைட் ஸ்டடியில் அதை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருந்தேன். "ஓவரா பேசாதடா, நான் இன்னிவரை அந்தப் படமே பாக்கலை!" என்று கூலாய் சொல்லிவிட்டு கவுந்தடித்து தூங்கி விட்டான்!  [அப்போது என் அம்மா கூட டைட்டானிக் பார்த்திருந்தார்!] யார் என்ன கலாய்த்தாலும் ஒரு புன்முறுவல் பூத்து கடந்து விடுவான். ஆனால் அவ்வப்போது இவன் அடிக்கும் நச்ச் கமெண்ட்டுகள் செம. கம்ப்யுட்டரில் டைப்பிக் கொண்டிருந்த ஒருவனை பார்த்து "உங்க ஹாண்ட்ரைட்டிங் நல்லா இருக்குங்க!" என்று சொல்லி கிலி ஏற்படுத்தினான்! இப்படி பல...எங்கள் இருவருக்கும் ப்ரோக்ராமிங் என்பதே சுத்தமாய் வராத காலம் அது. அப்போது இருவரும் சேர்ந்து ஒரு strategy உருவாக்கினோம். எல்லோரும் constructive programming ல் ஈடுபடட்டும். நாம் மட்டும் destructive programming ல் ஈடுபடுவது, அதாவது, நாம் எந்தக் கம்பெனியில் சேர்ந்து கோட் அடிக்கிறோமோ, நம் கோடின் லட்சணத்தில் எதிர் கம்பெனி அமோகமாய் வளரும். ஒரு குரூப் கொள்ளையர்களிடம் இருந்து கொண்டே அடுத்த குரூப் கொள்ளையர்களுக்கு வேலை செய்வதை போல்!! எப்படி? மொத்தத்தில் இவன் யாருக்கும் தீங்கு நினைக்காதவன்.


வெங்கடேஷ்

சசிக்குமாரின் திக் ஃப்ரெண்ட். இருவரும் கெமிஸ்ட்ரியில் இருந்து ஃபிசிக்ஸ் க்ரூப்புக்கு வந்தவர்கள். ஆரம்ப காலங்களில் இவர்கள் இருவரும் இரட்டையர்கள் போல சேர்ந்தே இருப்பார்கள். வெங்கடேஷ் சசியின் கொள்கை பரப்புச் செயலாளர் மாதிரி. சசியை பற்றி மேலே நான் சொன்னதை விட பல மடங்கு இவன் சொல்வான். படிப்பாளி. நல்ல அறிவாளி. விஷய ஞானம் உள்ளவன். அதற்கே உரிய வித்யா கர்வமும் கொஞ்சம் உண்டு. அரசியல், சினிமா, கிரிக்கெட், படிப்பு என்று எதையும் அலசுவான். தூர்தர்ஷன் பார்த்தே ஹிந்தி கற்றுக் கொண்டவன். எங்கள் எல்லோரை பற்றியும் நல்ல அவதானிப்பு இருக்கும் இவனிடம். ஒவ்வொருவரின் பேச்சு, நடவடிக்கை, பழக்க வழக்கம் என்று நன்றாய் புரிந்து வைத்து இருப்பான். அதை நன்றாய் கிண்டலும் செய்வான். கல்லூரி காலங்களில் எங்கள் குணநலன்களை வைத்து இவன் பின்னிய கதைகள் ஏராளம். என்னிடம் உள்ள அதீத அன்பில் சில சமயங்களில் அளவுக்கு மீறிய உரிமை எடுத்துக் கொள்வான். "இவன் எப்படி இவ்வளவு பேசுறான்?" என்று இவன் வீட்டுக்குப் போனதும் தெரிந்தது, இவன் வீட்டில் இவனின் அப்பாவுக்கு அடுத்து மிகவும் கம்மியாய் பேசும் ஒருவன் இவன் தான் என்று! இவனிடம் நான் அடித்த அரட்டையை விட இவன் அம்மாவிடமும், தங்கையிடமும் அடித்த அரட்டை ஜாஸ்தி!

முரளி தாஸ்

அதிகம் பேச மாட்டான். ஆனால் ஊரெல்லாம் இவனுக்கு "நண்பேண்டா" தான்! கொடை வள்ளல்.  நண்பர்களுக்கு உதவி என்றால் போதும், அவன் திருப்பிக் கொடுப்பானா, மாட்டானா என்று எதையும் யோசிக்காமல் கையில் உள்ளதை எல்லாம் கொடுப்பான். யாராவது பசி என்று சொல்லிவிட்டால் அவர்களின் பசி ஆற்றும் வரை இவனால் பொருக்க முடியாது. நல்ல படிப்பாளி. நல்ல கிரிக்கெட்டர். நிறைய தமிழ் நண்பர்கள் இவனுக்கு இருந்த காரணத்தால் தமிழில் தான் அதிகம் பேசுவான். [எங்கள் வகுப்பில் ஒரே ஒரு பையன் தான் தமிழ். மற்ற எல்லோரும் செளராஷ்டிரா பபுன்!] சீனியர் ஃபேர்வல் எல்லாம் இவன் பொறுப்பில் தான் சீரும் சிறப்புமாய் நடக்கும். நான் இவனைப் பற்றி மிக ஆச்சர்யமாய் நினைக்கும் ஒரு விஷயம், இவன் பாடியோ, அல்லது பாடல்களை முனுமுனுத்தோ கூட நான் பார்த்ததே இல்லை!

விஷ்ணு பிரேம்

எங்கள் வகுப்பின் அமைதியான ரவுடி இவன் தான். லாஸ்ட் பெஞ்ச் எல்லாம் இவனுக்கு கட்டுப்படி ஆகாது. ஏதோ, இவனுக்கும் எங்கள் வகுப்புக்கும் சம்மந்தமே இல்லாத மாதிரி இருப்பான். இவன் வந்தானா, போனானா என்பது கூட யாருக்கும் தெரியாது. இவன் பாட்டுக்கு வருவான், போவான். தினமும் லேட்டாய் தான் வருவான். அதிகம் பேச மாட்டான். ஏதாவது கேட்டால், ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பான். மாடல் எக்ஸாமில் நான் அம்பதுக்கு எட்டு மார்க் வாங்கி பெண்களிடம் பீத்திக் கொண்டிருப்பேன். [நாங்க எல்லாம் மாஸ், எப்படி?!] இவன் நாலு மார்க் வாங்கி விட்டு ஓரமாய் அமைதியாய் உட்கார்ந்திருப்பான். இவனை என்ன செய்வது என்று வாத்தியார்களுக்கே தெரியவில்லை. நாலு வார்த்தை பேசுவான், நாற்பது தடவை சிரிப்பான். என்ன நினைக்கிறான், என்ன பேசுகிறான், ஏன் சிரிக்கிறான் ஒன்றும் புரியாது. காலேஜில் நாங்கள் "பேசிக்", "போர்ட்ரான்" படிக்கும்போது இவன் கம்ப்யுட்டர் கிளாசில் சி + + ஐ கடந்திருந்தான்! காலேஜ் படிப்பே வராத சமயத்தில் ஏன் அத்தனை வெறியுடன் கம்ப்யுட்டர் கற்றுக் கொண்டான் என்று தெரியவில்லை. வேலை கிடைத்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றான். இப்போது தொடர்பில் இல்லை :(

கே ஆர் எஸ் பாலாஜி

பிசிக்ஸ் ஃபஸ்ட் இயர் கிளாஸ் இது தானே? என்று அவனிடம் கேட்டு விட்டுத் தான் முதல் நாள் வகுப்பில் நுழைந்தேன். அன்றிலிருந்து இன்று வரை என் நண்பன். நான் ஒருநாள் கண்டிப்பாய் பெரிய ஆளாய் வருவேன் என்று ஆணித்தரமாய் நம்பும் இன்னொருவன் [ஒருவன், நான்!]. வகுப்பில் பெண்களிடம் யாராவது மொக்கை போட்டுக் கொண்டிருந்தால், "நீ போய் பேசுடா, அவன் அறுவை தாங்க முடியலை" என்பான். என் குறும்பு பேச்சின் ரசிகன் என்று சொல்லலாம். அதே சமயம் அடிக்கடி என்னை தலையில் தட்டும் நல்ல ஒரு விமர்சகன். நான் எதையெல்லாம் நம்புகிறேனோ, அந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி என் நம்பிக்கையை தவிடு பொடியாக்கி என் அறிவை வளர்ப்பதில் வல்லவன்!

பாலாஜி மிக நன்றாக பாடுவான். வகுப்பில் சேர்ந்த புதிதில் வெக்கமே இல்லாமல் சத்தமாய் குரலெடுத்து இவன் பாடுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். நான் பாடாத நாளே இல்லையென்றாலும், நான் இப்படி பிறர் கேட்க பாடியதில்லை. வயதுக்கு மீறிய சிந்தனை இருந்தது அவனிடம். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஷாருக்கின் தீவிர விசிறி. "குச் குச் ஹோத்தா [ஒரு வார்த்தை தப்பா போட்டா, ரொம்ப தப்பாயிடும்!] ஹெய்" படம் பார்த்து விட்டு அவன் என்னிடம், "காலேஜ்ல இருக்குறப்போ பொண்ணுங்களோட கடலை போட்டுட்டு ஷாருக் சுத்திட்டு இருக்கான். காலேஜ் முடிஞ்சதும் கோட் சூட் எல்லாம் போட்டு பெரிய ஆள் ஆயிடறான்? அது எப்பிட்றா" என்று கேட்டது இன்னும் எனக்கு மறக்கவில்லை. நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவனான நான், கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து ஒரு மியுசிக் சிஸ்டம் வாங்கும்போது, சற்று வசதியான குடும்பத்தில் பிறந்த அவன், "இது வீண் செலவு, எம்.சி.ஏ ஃ பாரம் வாங்க பணத்தை செலவு செய்" என்று எனக்கு அறிவுரை கூறியவன். [நான் அதை கேக்கலைன்றது வேற விஷயம்] சினிமா விஷயத்தில் நான் கரை கண்டவன் மாதிரி பேசிக் கொண்டிருக்கும்போது, நம் நாட்டின் துணை ஜனாதிபதி யார் என்று கேட்டு என்னை திணரடித்தவன். அவன் அப்போது சொல்வதெல்லாம் எனக்கு சற்று எரிச்சலாய் இருந்தாலும், கல்லூரிக் காலங்களில் மற்றவர்களால் நாம் எரிச்சல் அடைந்த விஷயங்களை பிற்காலத்தில் ஆராய்ந்தால், முக்கால்வாசி விஷயங்கள் அது நம்முடைய நன்மைக்காக அவர்கள் சொன்னது என்பது புரியும். அந்த மற்றவர்கள் பல சமயங்களில், பெற்றோர்கள், உற்றார், உறவினர்களாய் தான் இருப்பார்கள். எனக்கு ஒரு நண்பனே அப்படி அமைந்தது ஆச்சர்யம் :)

அவன் வலைப்பூ எழுதிய காலத்தில் என்னை வைத்து விரிவான ஒரு பதிவை எழுதினான். அதிலும் என்னை பயங்கரமாய் விமர்சித்து எழுதி இருந்தான். என்னுடைய ஒரு நல்ல இயல்பு என்று நான் நினைப்பது, யார் என்னை பற்றி என்ன குறை சொன்னாலும், அவர்களின் மேல் கோபப்படாமல், அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று தான் ஆராய்வேன். அது சரியென்றால் திருத்திக் கொள்ள முயற்சிப்பேன். அந்த வகையில் அது எனக்கு பெரும் உதவியாய் இருந்தது.

கண்ணன்

பாவப்பட்டவன். எங்கள் வகுப்பில் ஒரே தமிழன். நாங்கள் எல்லோரும் காய்ரா, பூய்ரா என்று பேசிச் சிரிக்கும்போது இவனும் சேர்ந்து சிரிப்பான். "நீ ஏன்டா சிரிக்கிறே?" என்று கேட்டால், "உங்களோட இவ்வளவு நாள் சேர்ந்து இருந்தா புரியாதா? எல்லாம் எனக்கும் புரியுது" என்று ஆச்சர்யபடுத்துவான். மூலக்கரையில் இருந்து கல்லூரிக்கு சைக்கிளில் வருவான். அப்போது எங்கள் வகுப்பில் யாரிடமும் பைக் இல்லை என்பது வேறு விஷயம். எல்லோரும் சைக்கிள் கேஸ் தான்.

சாந்தமான பேர்வழி. படிப்பில் நான் சுமார் மூஞ்சி குமாரு. இவன் என்னைவிட சுமார் மூஞ்சி குமாரு! இருந்தாலும், எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்து விட்டு, எம்.சி. ஏ வேறு படித்தான். என்னடைய நெருங்கிய நண்பன். பொழுது போகவில்லை என்றால் திருநகரில் இருந்து என் வீட்டுக்கு வந்து விடுவான். "ஏன்டா, காட்ல பொழுது போகலையா?" என்று தான் நான் இவனை கலாய்ப்பேன்! வீட்டில் என்ன விசேஷமோ, யார் இருக்கிறார்களோ அதை எல்லாம் பார்க்க மாட்டான். "வாடா, வெளியே போவோம்" என்று கூட்டிப் போய் ஒரு படத்தில் உட்கார வைத்து விடுவான். வீட்டுக்கு வந்தால் ராடு விழும். அப்போதெல்லாம் யாருக்கு எங்கு போக ஒரு துணை வேண்டுமென்றாலும் நேராய் என் வீடு தான். காசெட் வாங்க, எலெக்ட்ரானிக் சாமான் வாங்க, கிரீட்டிங் கார்ட் வாங்க...அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் வகுப்பில் படித்த அத்தனை பேருக்கும் தீபாவளி ட்ரெஸ் வாங்க கூட நான் தான் போவேன். நான் தான் முக்கால்வாசி பேருக்கு செலக்ட் செய்வேன்.  சசி ஒருமுறை "இவன் என்னோட கசின், இவனுக்கு ட்ரஸ் வாங்கணும் வா" என்று கூட்டிப் போய் அவனுக்கும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். அவனும் இன்று வரை என் நண்பன் :-) கண்ணன் கதைக்கு வருவோம். கண்ணன் வீட்டில் இவனைத் தவிர, இவன் அம்மா, தங்கை [இப்படி ஒரு *அடக்கமான பொண்ணை நான் பாத்ததேயில்லை!] என்று எல்லோரும் என் நண்பர்கள்.

முதல் இரண்டு ஆண்டு அடக்கமான இருந்தவன், என்னிடம் சேர்ந்து கெட்டு விட்டான் [இது வழக்கமாய் எனக்கு கிடைக்கும் பட்டம் தான்!] மூன்றாம் ஆண்டில் ஒரே அடாவடி தான். நான் சொன்ன கல்லூரியின் அழகான பெண்ணிடம் சென்று "உங்க அப்பா கெளப்பிட்டாரு" என்று சொன்னான். கெளப்பிட்டாரு என்றால் மதுரை பாஷையில் "கலக்கிட்டாரு" என்று அர்த்தம். அவள் கர்ச்சீப் கீழே விழுந்தால், இவனும் இவனுடைய கர்சீப்பை கீழே போட்டு விடுவான்! அவ்வளவு லவ்வு...து! என்று துப்பி விட்டு, நானும் என் கர்ச்சீப்பையும் கீழி போடுவேன்!!

சில வருஷங்களுக்கு முன்னால் திடீரென்று தொடர்பில் வந்தவன், மறுபடியும் தொலைந்து விட்டான். எங்கிருந்தாலும் வாழ்க!

யதீந்திரன் பாலாஜி

இவனோடு சேர்த்து "பதினைந்து பசங்களே" படிக்கும் ஒரு வகுப்பில் மூன்று பாலாஜிகள்! [தேவுடா] பாலாஜி குமாரை போலவே யதீந்திரனும் எனக்கு ஆச்சர்யம் கொடுத்த பெயர். இப்படி ஒரு பெயரை அப்போதும், இப்போதும் கேள்விப்பட்டதில்லை, இப்படி ஒரு ஆளை அப்போதும், இப்போதும் நான் பார்த்ததில்லை! முதலாம் ஆண்டில் நான் அடிப் பொடியனாக இருப்பேன். நான் தான் அப்படி என்று நினைத்தால், எங்கள் வகுப்பே முக்கால்வாசி அப்படி தான் இருந்தது. யத்தீந்திரன் ஒருவன் தான் "கல்லூரியில் முதலாம் ஆண்டில் படிக்கிறேன்" என்று சொன்னால் நம்பும்படி இருந்தான்.

பெண்கள் மயங்கும் அழகன். ஆனால் அதைப் பற்றிய பெரிய அலட்டல் இருக்காது அவனிடம். நானும் கோபியும் கூட்டு சேர்ந்து சீனியர் பெண்களிடம் கடலை போட துடித்துக் கொண்டிருப்போம். இவன் அந்த பக்கமே வர மாட்டான். ஆனால், திடீரென்று பார்த்தால் நாங்கள் பேசத் துடிக்கும் பெண் இவனிடம் பேசிக் கொண்டிருப்பாள். இவன் ஏதோ வெகு நாள் பழகியவன் போல பேசிக் கொண்டிருப்பான். பெண்களிடம் இவனுக்கு பேசவே தெரியாது என்பது தான் எனக்கும், கே ஆர் எஸ் பாலாஜிக்கும் அபிப்பிராயம்.  எங்கள் அபிப்ராயம் எப்படி இருந்து என்ன, அழகான பெண்கள் எல்லாம் இவனிடம் தானே விழுந்தார்கள்!! பொது அறிவு ஜாஸ்தி. இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிகிறது என்றூ நான் ஆச்சர்யப்படும்படி திடீரென்று பேசி அசத்துவான். கொஞ்சம் கவிதை, கொஞ்சம் பாட்டு, நிறைய சினிமா என்று சுற்றிக் கொண்டிருப்பான். இளையராஜா என்றால் உயிர். இவனுக்கென்று ஒரு தனி உலகம். சுற்றி யார் இருந்தாலும், அவனுக்குத் தெரியாது.

ஒரு நைட் ஸ்டடியில் வழக்கம் போல் நான், முரளி, கே ஆர், எஸ், இவன் எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தேன். நான் இவனை வம்பிக்குழுத்தேன்.

"யத்தி, நீ வீட்ல என்னடா பண்ணுவ?" நான் என் ரூம்ல தனியா உக்காந்து பாட்டு கேப்பேன்.

தனியாவா? அப்போ உன் கசின்?

அவன் பக்கத்துல இருப்பான் [??!!!]

இப்போ புரியுதா அவன் தனி உலகம்? நாங்க ஒரு அரை மணி நேரம் சிரிச்சிருப்போம்.

இன்னொரு நாள், சசியின் வீட்டில் நைட் ஸ்டடி. இரவு பனிரெண்டு மணிக்கு மேல் டீ எல்லாம் குடித்து விட்டு மொட்டை மாடிக்கு வந்தோம். நான் வழக்கம் போல், "என்னடா சசி இன்னைக்கி உன் பாட்டி வரலையா?" என்றேன். அவனும் "தெரியலை வரலை போல" என்றான். யத்தி "ஏன்டா, வரச் சொல்ல வேண்டியது தானே?" என்றான். பதிலுக்கு சசி கூலாய், "நம்ம கூப்பிட்டா வர மாட்டாங்க, அவங்களா தாண்டா வருவாங்க, அவங்க செத்து பல வருஷம் ஆச்சு" என்றான்! யத்தியின் முகத்தை பார்க்க வேண்டுமே...

சில சமயங்களில் இவன் லூசா, ஞானியா, அறிவாளியா, யோகியா ஒன்றும் புரியாது. ஒரு பெரிய அஜால் குஜால் மேட்டரை பற்றி நாங்கள் பயங்கர ஆச்சர்யமாய் பேசிக் கொண்டிருந்தால், "இதுல என்ன இருக்கு?" என்பான்! இவன் ஒரு விஷயத்தை கேட்டு ஆச்சர்யபட்டு நான் பார்த்ததே இல்லை. எல்லாவற்றையும் கடந்து விடுவான். நான் கல்லூரி காலங்களில், வந்த ஒரு படத்தையும் விடாமல் பார்த்ததற்கு முக்கியமான காரணம் இவன் தான். எல்லாவற்றிற்கும் இவன் தான் ஸ்பான்சர். என் கையில் மிஞ்சி போனால் பத்து ரூபாய் இருக்கும். "பணம் இல்லைடா" என்று சொன்னால் "நான் உன்கிட்ட கேட்டேனா?" என்று எரிச்சலாகி விடுவான். படத்திற்கு போய் டிக்கட் வாங்கி விட்டு "வா, சாப்டு வருவோம்" என்பான். எனக்கு எரிச்சலாய் வரும்.  எனக்கு டிக்கட் வாங்கிட்டா உள்ளே போயிடனும். நான் இவனிடம் எதையும் கேட்டதில்லை, இவன் வாங்கிக் கொடுக்காமல் இருந்ததில்லை. இவன் எனக்காக செலவு செய்யாமல் தடுப்பதே எனக்கு பெரிய காரியமாய் இருந்தது. இவன் ஒரு தனிப்பிறவி!

சிவா என்ற சிவக்குமார்

இவன் என் வகுப்பே இல்லை. என் சீனியர். நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது இவன் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். மற்ற சீனியர் மாதிரி வந்து ராக்கிங் என்ற பெயரில் படுத்தாமல் ஒரு மதிய நேரம் வகுப்புக்கு வந்து பெயர்களை மட்டும் கேட்டான். இவனுக்கும் படங்கள், பாடல்கள் என்றால் உயிர். நன்றாய் பாடவும் செய்வான். "ஹம் ஆப்கே ஹெய் கொவுன்" படம் ஹிட்டடித்த நேரம். அந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் எனக்கு அத்துப்படி. ஒரு மதிய இடைவேளையில் வகுப்பில் உட்கார்ந்து அத்தனை பாடல்களையும் தாளம் தட்டி பாடினோம். அவனுக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது.

"என்னை போல் ஒருவன்" என்று அவன் நினைத்திருக்க கூடும். பச்சக் என்று ஒட்டிக் கொண்டோம். கல்லூரி ஆண்டுவிழாவில் இருவரும் சேர்ந்து நடிப்பது என்று முடிவெடுத்து, அதற்கான உழைப்பில் நல்ல பாண்ட் ஆகிவிட்டோம். நடிப்பில் பயங்கர ஆர்வம் இருந்தாலும், படிப்பு இல்லாததால் என்னை பள்ளியில் யாரும் சீண்டியதில்லை. அப்படி பார்க்கும் போது, என்னை முதன் முதலாய் மேடை ஏற்றிய பெருமை இவனையே சாரும். என் வீடு இல்லை அவன் வீடு, கச்சேரி கலை கட்டும். அவன் நன்றாய் பாடுவான். நான் மிக அருமையாய் பாடுவதாய் நினைத்துக் கொண்டிருந்தேன். இருவரும் சேர்ந்து தாளம் தட்டி பாடுவோம். சின்ன சின்ன ஸ்க்ரிப்ட்ஸ் எழுதுவோம். பல வித கனவுகள். இவனுக்கு பயங்கர எனர்ஜி. ஐடியாக்களை கொட்டுவான். எல்லாமே எளிதாய் செய்து விடலாம் என்று தான் பேசுவான். எல்லோரும் சேர்ந்து ஒரு ஆல்பம் போடலாம் என்று பேசுவான், அப்புறம் அதை பற்றி பேச்சே இருக்காது! இப்படி நிறைய ப்ளான் மட்டும் போட்டோம். இன்றும் போட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்!!

சிவா விழுந்து விழுந்து படிக்க மாட்டான். ஆனால், நல்ல மதிப்பெண்களை வாங்குவான். நல்ல கணக்கு போடுவான். ஆய்ந்து அறிந்து ஒரு செயலை செய்வான். அது சில சமயங்களில் தோல்வியில் முடியும்போது அதிலிருந்து நல்ல பாடம் கற்பான். நல்ல பாசிட்டிவ் அட்டிட்யுட் இருந்தது இவனிடம். தமிழ் மீடியத்தில் படித்ததால் இங்கிலீஷ் பேப்பர் ஒன்றில் கப் வைத்திருந்தான். இருவரும் சேர்ந்து அந்த பரீட்சை எழுதும்போது, ஒரு நைட் ஸ்டடியில், "Leopard" என்றால் என்ன என்று கேட்டான்! எனக்கு தூக்கி வாரி போட்டது. "இது கூட தெரியாமல் எப்படி இவன் இங்கலீஷில் எல்லா பேப்பரும் எழுதி பாசாகிறான்" என்று தோன்றியது! சொல்லிக் கொடுத்தேன். அந்த பரிட்சையில் என்னை விட அதிக மார்க் வாங்கினான் :( [இவன் பரவாயில்லை, எம்.எஸ்.சி. படிக்கும்போது ஒரு நண்பனுக்கு நைட் ஸ்டடி ஒன்றில் இங்கிலீஷ் மீடியம் படித்த ஒரே காரணத்துக்காக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவன் "becomes" ன்னா என்ன மாப்ள என்றான்!]

என் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சிவாவை தெரியும். அவர்கள் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் என்னை தெரியும். சிவா என் நண்பன் என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவனாய் இன்று வரை நிலைத்து விட்டான்.