வலைப்பதிவாளர்கள் யாரும் ஏன் நாடக விழாவுக்கு வருவதில்லை என்ற என் முந்தைய பதிவில் கேட்ட கேள்விக்கு, குவிந்த பின்னூட்டத்தில் வலைப்பதிவாளர்களுக்கு நாடகத்தில் இருக்கும் பற்று எனக்கு புரிந்து விட்டது. சரி எல்லோருக்கும் வேலைப் பளுவின் காரணமாக வர முடியவில்லை என்று நான் நினைத்துக் கொண்டு தொடர்கிறேன்.

நாடகம் - ஹலோ ராஜி
கதை, வசனம், இயக்கம் - அகஸ்டோ
சிறப்பு விருந்தினர்கள் - டி.கே.எஸ். அண்ணாச்சியின் வாரிசுகள், நாடக நடிகை ஷீலா

ஜாதி மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒரு முற்போக்கும் எண்ணம் கொண்ட பெண்ணை பெண் பார்க்க நல்ல இதயங்கள் கொண்ட இருவர் வருகிறார்கள். அதில் யாரை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நிகழும் குழப்பங்களே கதை. இந்தக் கால இளஞர்கள் செய்யக்கூடிய நற்காரியம் ஏராளமாக இருக்கிறது, அதை விடுத்து ஜாதி மதம் என்ற பிரிவினையில் சிக்கி தவிக்ககூடாது என்று ஒரு சின்ன மெஸேஜ்!

தமிழ் திரையிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் வரும் செளந்தர்யா வித விதமான சேலைகளில் கதாநாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகர்களின் பெயர் எனக்கு மறந்து விட்டது. பொண்ணு பேர் மட்டும் எப்படி ஞாபகம் இருக்கு என்று கேட்காதீர்கள்! ஹார்மோன் திருவிளையாடல்!! அதையன்றி யாமொன்றும் அரியோம் பராபரமே!! எல்லா நடிகர்களும் நன்றாகவே நடித்தனர். பிரகாஷாக வந்தவர் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு நடிக்கிறாரோ என்று தோன்றியது. மற்றபடி நாடகம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை மிக அருமை!

"நீ இந்த வெள்ளை சஃவாரி போட்டாலே கல்யாணத்துக்கு போறேன்னு ஊருக்கே தெரியுமேடா!" என்று இன்றும் சஃவாரி அணிபவர்களை கிண்டல் செய்கிறார்கள். கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை பாம்பே டையிங், ஒன்லி விமல் மாடல்கள் போல் ஒரு சஃவாரி எடுத்துக் கொள்வது ஒரு காலம்.

"இவர்தான் கிருஷ்ணனா என்று கேட்டதற்கு, ஏன் புல்லாங்குழலோட வந்தாதான் ஒத்துக்குவீங்களா என்பது நச் பதில்."

"இதுக்கு தான் நான் என் கல்யாணத்தப்போ பொண்ணே பாக்கலை, போட்டோ மட்டும் அனுப்ச்சேன்! ஃபோட்டோல நான் கொஞ்சம் சுமாராவெ இருப்பேன். தாலி கட்டும் போது அவ என்னை உத்துப் பாத்து ஓன்னு கதறுனா, என்னன்னு கேட்டா, ஃபோட்டோல சிங்கம் மாதிரி இருந்தியேய்யா, நேர்ல அசிங்கமா இருக்கியேன்னா.."

இப்படிப் பல இடங்களில் பல நச் நச் கள்! அந்த நடிகர் மிக இயல்பாய் நடித்தார். பாராட்டுக்கள்.

இந்த நாடகத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், 3 விநாடிகளில் க்ளைமாக்ஸ்! இதை நாடகத்திற்கு முன்பே சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார்கள்! எதிர்பார்ப்பு என்று வந்துவிட்டால் ஏமாற்றத்தை தவிர்ப்பது கஷ்டம் தான். கொஞ்சம் சப்பென்று தான் இருந்தது. நாயகி கடைசியில் தன் கணவனை தேர்ந்தெடுத்ததில் எனக்கு கொஞ்சம் உறுத்தவே செய்தது. ஆனாலும் பாராட்டத்தக்க முயற்சி!

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய மனிதனாய் ஆகக் கூடாது, அப்படியே ஆனாலும் இந்த மாதிரி மேடையேறக்கூடாது, அப்படியே ஏறினாலும் பொன்னாடை போர்த்துவதை தவிர்க்க வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் பொன்னாடை போர்த்துகிறார்கள். இத்தனையும் கொண்டு போய் என்ன தான் செய்வார்களோ தெரியவில்லை..

நாடகம் : வேகம்
கதை
வசனம் : நாணு
அரங்கம் : வாணி மஹால், மஹாசுவாமிகள் அரங்கம்

ஒரு நடுத்தரக் குடும்பம். குடும்பத்தலைவன், தலைவி, பிள்ளை, தலைவனின் அப்பா. அப்பாவின் பழைய தார்மீகக் கருத்துக்களுடனும், பிடிவாதத்துடனும், பிள்ளையின் புதிய சிந்தனைகளுடனும், பிடிவாதத்துடனும் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் கதை. வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது, பெற்றோர் ஒரு வேகத்திலும், பிள்ளைகள் ஒரு வேகத்திலும் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்காக வாழ்வதே நம் வாழ்க்கை என்று தம்பதிகள் உணர்வதாய் நாடகம் முடிகிறது. இவ்வளவு நுணுக்கமான பிரச்சனையை இவ்வளவு எளிமையாக அழகாக கையாள முடியுமா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தேவை இல்லாமல் இளைய சமுதாயத்தினருடன் உங்களுடைய பழமையான கருத்தை திணிக்காதீர்கள் என்று வீட்டின் முதியவருக்கும், அதிகமாக பெரியவர்களை உங்கள் இழுப்புக்கு இழுக்காதீர்கள், அவர்கள் உடைந்து விடுவார்கள் என்று இளைய சமுதாயத்தினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அது நேரடியான அறிவுரையாய் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போலிருந்தது பாரட்டுக்குரியது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனையை மிக அழகாக கையாண்டிருக்கிறார் நாணு. தேர்ந்த பாத்திரப் படைப்பு. மிக அற்புதமான நடிப்பு. நாடகத்தின் தாக்கம் என்ன என்பதை நேற்று தான் உணர்ந்தேன்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நாடகக் கலைஞர் ராமானுஜம், பழைய நடிகை லீலா, அவர் மகள், நடிகர் ராதாரவி அனைவரும் வந்திருந்தார்கள். அவருடைய பரம்பரைக் குரலில் மிக அழகாகப் பேசினார். கடைசியில் கொஞ்சம் அம்மா புகழ் பாடினார்!

நாடகம் தான் அவருக்கு தாய்வீடு என்றும் சினிமா வெறியர்களை உருவாக்கும்; நாடகம் தான் ரசிகர்களை உருவாக்கும்! என்றும் இது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இடம் என்றும் சிலாகித்துப் பேசினார். நாடகத்தில் கர்ணன் வேஷம் போடுவான், அந்தக் காட்சி முடிந்ததும் மேடைக்குப் பின்னால் சென்று யாரிடமாவது டீ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பான் என்று நாடகக்காரனின் பரிதாப நிலையை நகைச்சுவையாகச் சொன்னார். நாடகம் தான் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய சிறந்த ஊடகம் என்றார்.

இத்தைகைய ஒரு நாடக விழாவைக் கொண்டாடும் டிவி. வரதராஜனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு வரதராஜன், இந்த இடத்தில் நாடகம் தான் கதாநாயகன், ஆதலால் பாராட்டு விழா நடத்துவதென்றால் ஒரு நாடகம் போடுங்கள் என்றார். 15ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. விழா நிறைவு பெறுகிறது என்று சொல்வதை விட, மனம் நிறைவு பெறுகிறது என்று சொல்வது தான் சரி என்று முடித்தார். எத்தனை அழகான பேச்சு!

மன நிறைவோடு நானும் வீடு வந்து சேர்ந்தேன்!

ஒரு விஷயம். இந்த விழாவில் எந்த வலைப்பதிவாளரையும் நான் பார்க்கவில்லை. வருவதில்லையா? அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா? "மீசையானாலும் மனைவி"க்குத் தான் எல்லோரும் வருதாய் உத்தேசமா?

சிங்காரச் சென்னையில் நாடக விழா அமோகமாய் நடக்கிறது. என் பையனை பத்தி ஏன் கேக்குறீங்க, சினிமா, ட்ராமான்னு சுத்துறான் என்று பெற்றோர்கள் அங்கலாய்க்க நான் நேற்று முதன் முறையாய் நாடகம் காணச் சென்றேன். மதுரையில் இப்படி எல்லாம நாடகம் நடந்ததா என்றே எனக்குத் தெரியாது. அது சரி, சண்டேன்னா ரெண்டு, அர்ஜுன் அம்மா யாரு? புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?, திரைப்பட விழா, நாடக விழா எல்லா வித பரபரப்பும் இங்கு தானே இருக்கிறது. பத்திரிக்கைகாரர்கள், சினிமாகாரர்கள், நாடக நடிகர்கள் மக்களை அப்பாடா என்று ஒரு நாளும் இருக்க விட மாட்டார்கள். அதனாலோ என்னமோ சென்னை எனக்கு மிகவும் பிடிக்கிறது.

25ம் தேதி தொடங்கிய விழாவுக்கு நேற்று தான் போக நேர்ந்தது. சும்மா தான் இருந்தேன், தொடங்கிய அன்றிலிருந்தே போயிருந்தால் கொஞ்சம் நாடக அறிவாவது வளர்ந்திருக்கும். நேற்று நாடகம் முன்பு நடந்த பேச்சில் இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். நான் அரங்கில் கடைசியில் நின்றிருந்தாலோ, என் தலை கொஞ்சம் வழுக்கை ஆனதாலோ அவர்களுக்கு நான் இளைஞன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நேற்று டி.நகரில் உள்ள வாணி மகாலில், ஓபுல் ரெட்டி அரங்கில் மாலி எழுதிய "நம்மவர்கள்" என்ற நாடகத்தை டிவி. வரதராஜனின் யுனைட்டெட் விஷுவல்ஸ் நிறுவனத்தினர் நடத்தினார்கள். விழாவுக்கு பழைய நடிகர் ஸ்ரிகாந்த், ரமணன், மாலி, எஸ்.வி. சேகர் அனைவரும் வந்திருந்தனர். ஸ்ரிகாந்த் அவர் காலத்தில் நாடகங்கள் நடத்த பட்ட கஷ்டங்களை சுவைபடக் கூறினார். எஸ்.வி.சேகர் யாரும் அழைக்காமலே உரிமையோடு மைக்கில் வந்து நகைச்சுவையாய் பேசினார். மனிதருக்கு நல்ல டைமிங் சென்ஸ்.

நான் அந்த அரங்கில் போய் சேர்ந்ததே ஒரு குறு நாடகம் போல் தான் இருந்தது. தரமணியிலிருந்து 5T பேருந்தில் ஏறி [டிக்கட் 3 ரூபாய்] டி.நகர் சென்று அங்கிருந்து 47ஐ பிடித்து [டிக்கட் 2 ரூபாய்] வாணி மகாலில் இறங்கும் போது மணி 7. நம் ஆட்கள் எங்கே அதற்குள் தொடங்கி இருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வெளியே கதவை பூட்டிக் கொண்டு ஒருவர், ஹால் ஃபுல் சார் என்றார். எனக்கு பகீரென்றது. கல்கி அவர்கள் "கர்நாடகம்" என்ற பெயரில் நாடகத்தையும் சினிமாவயும் விமர்சனம் செய்ததை போல் நானும் "ஹிந்துஸ்தானி" என்ற பெயரில் விமர்சனம் செய்து கலை உலகிற்கு சேவை செய்வதாய் இருந்தேனே, இப்படி குண்டை தூக்கி போடுகிறாரே இந்த மனிதர் என்று கலங்கினேன். என்னைப் போலவே நாடகம் பார்க்க வந்திருந்த சிலர் என்ன சார் ரொம்ப தூரத்துல இருந்து வர்றோம், நின்னு பாத்துக்குறோம்..விடுங்க என்றார். நான் தலையை ஆட்டினேன். [நம்ம என்னைக்கு பேசினோம் சொல்லுங்க?] அந்த மனிதர் அதெல்லாம் முடியாது சார். ஏற்கனவே அங்கே பல பேரு நின்னுட்டு தான் இருக்காங்க என்றார் கறாராய்! அவர் அந்தப் பக்கம் கொஞ்சம் நகன்றதும் கதவைத் திறந்து விட்டார் ஒரு தாத்தா..ஒரு ஓரமா நின்னு பாருங்க என்றார். வாழ்க!

இன்னும் நான் விஷயத்துக்கே வரவில்லை. நாடகம்! இந்தியா, பாகிஸ்தான் உறவைச் சொல்லும் வழக்கமான, உருக்கமான கதை. முஸ்லீம்களை நாம் வெறுப்பதில்லை, அவர்களும் நம்மவர்களே என்ற கருத்து. எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த நாடகத்தை பார்க்க எத்தனை முஸ்லீம் தோழர்கள் வந்திருப்பார்கள்? பாகிஸ்தானில் சென்று இந்த நாடகத்தை போட்டால் அங்கிருப்பவர்கள் நம்மைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்று சொல்லலாம். இங்கு வந்திருப்பவர்களோ பெரும்பாலும் 50, 60 வயதைக் கடந்த பிராமணக் கூட்டம். இந்த நாடகத்தை இங்கே போடுவதால் யாருக்கு என்ன பயன்? சரி நல்ல விஷயத்தை யாரு வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

ஒரு நாடகம் என்பது பார்வை இழந்தவருக்கும், காது கேளாதவருக்கும், பேச முடியாதவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை காரணமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் இல்லை அதிகமாகவே மிகைப்படுத்தி நடிக்கிறார்கள். 78ல் பிறந்த என்னால் இந்த வகையான நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் தான் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜியின் படங்கள் பிடிப்பதில்லை. ஆனால் நான் சிவாஜியின் படங்களைப் பார்க்கும்போது அந்த காலத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு பார்ப்பதால் என்னால் அதை ரசிக்க முடிந்தது. ஆனால் இந்த நாடகத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை.

என்னதான் நாம் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை நாம் பலவிதங்களில் மார்தட்டிக் கொண்டாலும், ஹிந்து முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளும், முஸ்லீம் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளும் எல்லோர் மனதிலும் ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. மன்னிக்க நாம் என்ன தெய்வப்பிறவியா என்று ஹிந்துவும் கேட்கிறான், முஸ்லீமும் கேட்கிறான்.

கடவுள் இருக்கிறார் என்னும் இவர்கள் மசூதியையும் கோயிலையும் உடைக்கிறார்கள். கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதி எதையும் உடைப்பதில்லை என்று எப்போதோ யாரோ சொன்னது என் ஞாபகம் வந்தது.

மற்றபடி நாடகத்தில் லைட்டிங் நன்றாக இருந்தது. ரஹீமாக வந்தவர் நன்றாக நடித்தார். பிஸ்மில்லா கானாக வந்தவர் சத்ரியன் படத்தில் வந்த அருமைநாயகத்தை ஞாபகப்படுத்தினார். அவரது நடிப்பும் அருமை. சில இடங்களில் வசனங்கள் பளிச்! அந்த போலிஸாய் வந்தவரை நினைத்தால் எனக்கு சிரிப்பாய் இருக்கிறது. நாடகத்தை முழுமையாக நான் பார்க்கவில்லை. எப்போது முடியும் என்று ஆகிவிட்டது. அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களும் நெளிந்து கொண்டு தான் இருந்தார்கள். உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்ததால் கால் வலித்து 9 மணிக்கு கழன்று கொண்டேன்.

வெளியே வந்து டி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு குல்லா அணிந்த முஸ்லீம் போய் கொண்டிருந்தார். அவரையே வெறித்துப் பார்த்தேன். அவரும் என்னையே சந்தேகமாய் பார்த்தார். "நம்மவர்கள்" என்று நினைத்துக் கொண்டு நடந்தேன்.

நம் வாழ்வில் பல அழகான தருணங்கள் வருவதுண்டு. அதை எப்போது நினைத்தாலும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் அரும்பும். நான் பெங்களூரில் இருந்த போது அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு இது உங்களை சந்தோஷப்படுத்துமா என்று தெரியவில்லை..ஆனால் அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் எனக்கு நகைச்சுவையாக இருக்கும்.

அன்பே சிவம் படத்தில் "பூ வாசம் புறப்படும் தென்றல்" என்ற பாடலை நண்பர்கள் நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பாடலில் ஒரு காட்சியில் ஒரு கூட்டத்தில் கமலும் கிரணும் பேசிக் கொண்டே வரும்போது எதிர்ப்படும் ஒருவருடன் கமல் நின்று பேசுவார், அதை கவனிக்காமல் கிரண் கொஞ்ச தூரம் சென்று பேசிக் கொண்டே திரும்பினால் யாரோ ஒருவர் இருப்பார். திகைத்துப் போய், கமலைத் தேடித் திரும்பும்போது அங்கிருந்து தன் இரு கைகளையும் தூக்கி கமல் சிரிப்பார். அந்தப் பாடல் முடிந்தவுடன் நண்பர்கள் இருவருடன் நான் எங்கேயோ வெளியே கிளம்பினேன். அன்று வழியெங்கும் ஏகத்துக்கு கூட்டம், என் நண்பர்கள் நான் இருப்பதாய் நினைத்து பேசிக் கொண்டே சென்று விட்டார்கள், நான் சாலையைக் கடக்க முடியாமல் நின்று அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதில் வரவில்லை என்று திரும்பிப் பார்த்த நண்பர்களைப் பார்த்து சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து என் இரு கைகளையும் தூக்கி கமல் மாதிரி சிரித்தேன். அவர்கள் இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. பக்கத்தில் சென்றவுடன் தர்ம அடி விழுந்தது என்னவோ வேறு விஷயம்! [மனசுல உனக்கு என்ன பெரிய கமலஹாசன்னு நினைப்பா?]

உலகில் அனைத்து மக்களையும் எடுத்துக் கொண்டால், சினிமாவின் தாக்கம் அதிகம் இருப்பது தமிழனுக்குத் தானோ என்று தோன்றுகிறது! மற்ற நாடு நகர மக்கள் சினிமாவை வெறும் பொழுது போக்காக பார்த்து விட்டு, தங்கள் வேலையில் மூழ்கி விடுகிறார்கள். ஆனால் தமிழன் தான் சினிமாவை தன் வீட்டுக்கும் கொண்டு வருகிறான். அவன் எங்கு சென்றாலும் சினிமா, அவனுடைய சுண்டு விரல் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் நடந்து வருகிறது. கலைஞனை தெய்வமாய் பார்ப்பது இங்கு தான் இருக்கிறது. நிலாவைக் காட்டி சோறூட்டும் காலம் மலையேறி, விஜய் அங்கிள் [அங்கிள்!?] பாட்டு வந்தாத் தான் சாப்பிடுவேன் என்று குழந்தைகள் அடம் பிடிக்கின்றன..

குழந்தைகளை விடுங்கள். ஆ·பிஸில், என்ன இது, உங்க ப்ரோக்ராம்ல தப்பு இருக்கேன்னு என் சக ஊழியரிடம் சொன்னால், "வேணாம்! அழுதுருவேன்" என்று வடிவேலுவை துணைக்கழைத்து காமெடி செய்கிறார். இந்த பக் ·பிக்ஸ் பண்ணியாச்சே என்றால், "அது நேத்து, இது இன்னைக்கு" என்று மறுபடியும் வடிவேலு. நான் உங்க ப்ராஜக்ட் மானேஜர்ப்பா என்று பிஎம் சொன்னால், "நீங்க நல்லவரா கெட்டவரா" ....டொண்டடொண்டடொண்டடாய்ன் டொண்டடாய்ன் என்று பிஜிஎம் போடுகிறார்கள்! ஏன் இப்படி எல்லாம் பண்றீங்கன்னு கேட்டா, "நான் ப்ரோக்ராமர் இல்லை; பொறுக்கி"ன்றான். இப்படியே நாம் வேலை பார்க்கும் இடத்தில் எத்தனை வடிவேலுக்கள், எத்தனை விவேக்குகள்! எத்தனை கமல், எத்தனை ரஜினி..சினிமாவைப் பிரிந்து நம்மால் வாழ முடிவதில்லை.

தன் வாழ்வோடு சினிமாவை இணைத்துக் கொண்டதால் தானே 4 முதல்வர்களை கலை உலகிலிருந்து நம்மால் பெற முடிந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், படத்தில் ஒரு கிழவியை கட்டி அணைத்து, "உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு" என்று சொன்னால் புல்லரிக்கத்தான் செய்கிறது.. ஏதோ ஒரு படம், ராஜஸ்ரியுடன் டூயட் பாடுகிறார். பாடல்: "பாடும்போது நான் தென்றல் காற்று"..சரணத்தில் திடீரென்று "நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்" என்கிறார். ராஜ்ஸ்ரிக்கு ஒன்றும் புரியாமல், டூயட் பாட்ல கூட இவர் தத்துவம் சொல்லாம இருக்க மாட்றாரே என்று வெறுத்துப் போகிறார். இன்னொரு பாட்டில் கைகளின் பெருமையைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார், திடீரென்று "ஒன்று எங்கள் ஜாதி என்று ஓலமிட்டே பாடுவோம்" என்று ஜாதியை சாடுவார். இதை பார்க்கும் போது கொஞ்சம் படித்த எனக்கே இவர் தான் இந்த நாட்டை திருத்த முடியும் என்று தோன்றுகிறது..படிக்காத, பாமர மக்களுக்கு ஏன் தோன்றாது சொல்லுங்க?