இது என் நூற்றி ஐம்பதாவது பதிவு! ஆமா, ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒருதடவை இவர் வலைபதிவாரு, இதுக்கு நாங்க ரெகுலரா வந்து பாத்துட்டு வேற போகனும் என்று நீங்கள் நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும்! [பார்ரா...] நான் என்ன செய்வது வலைபதியும் அளவிற்கு மண்டையில் ஒன்றும் ஓட மாட்டேன் என்கிறது...இன்று என்ன கேடு என்று நீங்கள் சொல்வதற்குள் விஷயத்திற்கு வந்து விடுகிறேன்...

இன்று காதலர் தினம்! இன்று நான் அலுவலகம் சென்றவுடன் உள்ளம் பூரித்துப் போகும் அளவிற்கு ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். ரொம்ப சரியாய் தப்பாய் புரிந்து கொண்டீர்கள்! வழக்கம் போல் எந்தப் பெண்ணும் இன்று தங்கள் காதலை என்னிடம் சொல்லவில்லை! "முப்பது வயசுக்கு முன்னாடி கல்யாணம் ஆகவேண்டியவ இன்னும் கோலம் போட்டுட்டு இருக்கா" ரேஞ்சுக்கு நான் இருக்கும் போது, என்னிடமாவது எந்தப் பெண்ணாவது காதலை சொல்வதாவது...இதனால் மனம் வாடித் துன்பமிக உழன்று நானிருப்பதாக யாரும் நினைத்து விட வேண்டாம்.

சரி அதை விடுங்கள், நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் எங்கள் டீமுக்கு மட்டும் காலை 9லிருந்து மாலை 6 மணி வரை (மட்டுமே) வேலை நேரமாய் கடைபிடிக்கப் பட்டது. நேற்றே மெயில் போட்டு எல்லோருக்கும் சொல்லிவிட்ட போதிலும், நேற்று ஒரு அவசர வேலையாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி விட்டதால் எனக்கு இந்த விஷயம் இன்று காலை தான் தெரிந்தது. நான் டான் என்று காலை 10 மணிக்கு போய் நுழைந்ததும் தான் இந்த விஷயத்தை கேள்விப் பட்டேன், அடடா ஒரு மணி நேரம் தாமதமாக வந்து விட்டோமே என்றெல்லாம் மனது உறுத்தாமல் பார்த்துக் கொண்டேன்.

உங்களுக்கே தெரியும், கணினித் துறையில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் காலையில் 9 மணிக்கு அலுவலகம் போவது தான் நிச்சயம், மாலையில் எத்தனை மணிக்குத் திரும்புவார்கள் என்பது நிச்சயமில்லை. பெண்டெடுத்து விடுவார்கள்! [இதிலும் எப்போது ஓபி அடிக்கும் ஜென்மங்களும் உண்டு!] ஒரு மனிதனால் அதிகம் போனால் 6 மணி நேரம் தான் உருப்படியாய் வேலை செய்ய முடியும் என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். இருந்தும் இன்னும் கணினித் துறையில் இந்த மாதிரி சட்டங்கள், கெடுபிடிகள் எல்லாம் இல்லாததால் சகட்டு மேனிக்கு வேலை பார்த்து, நிறைய சம்பாதித்து, கண்ட நேரங்களில் கண்டதை தின்று விட்டு, வயிறு போச்சு, கண்ணு போச்சு, கை போச்சு, முதுகு போச்சு என்று டாக்டருக்கு சம்பாதித்த பணத்தை எல்லாம் அழுது கொண்டு, எல்லா ஏரியாக்களிலும் வீட்டு வாடகையை ஏற்றி விட்டதற்காக எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

என் மேலாளர் நான் சேர்ந்த புதிதில் ஒரு மீட்டிங்கில் 9லிருந்து 6 மணி வரை வேலை நேரமாக கடைபிடிக்க வேண்டும் என்றார். இது என்ன நடக்கக் கூடிய காரியமா என்று எல்லோரும் வியந்ததை பார்த்து, சரி ஆரம்பத்தில் இதை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பிறகு மெல்ல பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு வாரத்திற்கு ஒரு முறையும் என்று கடைபிடித்து முன்னேறலாம் என்றார். அப்படியே முன்னேறி அதை தினக்கடமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது அவர் கனவு! நல்ல கனவு தான்...[மீட்டிங் வேறு பகலில் நடந்ததால் நானும் சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை..] அவர் சொன்னதை இத்தனை சீக்கிரம் செய்வார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி தான்...

இன்று என் டீமில் உள்ள சில பெண்கள் சேலையில் வந்திருந்தனர். காதலர் தினத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தரத் துவங்கி விட்டதா தமிழகம் என்று குழம்பிவிட்டேன். பிறகு தான் தெரிந்தது இன்று சீக்கிரம் வீட்டுக்கு போகப் போவதால் அதை கொண்டாடவே அவர்கள் சேலையில் வந்திருந்தார்கள். அட! மாலை ஆறு மணி ஆனதும், பெல் அடிக்காத குறையாய் எல்லோரையும் அவரவர் கணினியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு போகுமாறு அறிவுறுத்தினார்கள். அதிலும் ஒரு மேனேஜர் [கையில் பிரம்பு ஒன்று தான் இல்லை] ம்ம்..கிளம்புங்க, இடத்தை காலி பண்ணுங்க..இங்கே பாம் செட் பண்ணியிருக்கோம் என்று கலாய்த்தல் வேறு...

எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியில் வருவது ஒரு புது அனுபவமாகவே இருந்தது. சில பிரம்மச்சாரிகளும், வீட்டுத் தொல்லை தாங்காமல் அலுவலகத்திலே தஞ்சம் கொண்ட சிலரும் தலையை குனிந்து கொண்டு வேண்டா வெறுப்பாக வெளியே வந்தனர்! நான் வெளியே வந்து அந்தி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். பறவைகள் கூடு தேடிப் பறந்து சென்று கொண்டிருந்தன...நானும் பறவையாய் மாறிவிட்ட உணர்வு! அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், ஜனத்திரளை பார்த்து திடுக்கிட்டேன்! இது என்ன இன்று எல்லோருக்கும் 6 மணி வரை தான் வேலையா என்று ஒரு சந்தேகமே வந்து விட்டது. பிறகு தான் புரிந்தது, ஆள் அறவமே இல்லாத எத்தனையோ இரவுகளில் அலுவலகம் விட்டு வந்து பழக்கப்பட்டதால் வந்த உணர்வு அது என்று...

லிப்டில் கீழே இறங்கும் போது அதில் பதிவு செய்யப்பட்ட குரல் ஒலித்தது...
"HAVE A NICE EVENING!"

YES IT IS! என்று நினைத்துக் கொண்டேன் :-)