[img courtesy: flickr]

I N S T E A D . . . D O N A T E!

என் நண்பர் ஒருவர் விளம்பரத் துறையில் இருக்கிறார். எனக்கு அதில் நிறைய ஆர்வம் இருப்பதால், அவரிடம் பேசும்போதெல்லாம் ஏதாவது விஷயத்தை சொல்லுங்கள், நானும் ஸ்கிரிப்ட் எழுத முயற்சிக்கிறேன் என்று நச்சரிப்பதுண்டு. இந்த முறை அப்படி கேட்டவுடன், ரத்த தானத்தைப் பற்றி ஒரு விளம்பரம் செய்ய வேண்டும். அதைப் பற்றி யோசி என்றார். அதன் விளைவு தான் நீங்கள் மேலே காண்பது.

இனி பின்னூட்டமிடுவதும், ரத்த தானம் தருவதும் உங்கள் கையில்!
பல நாட்கள் கழித்து தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாமியாடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குள் இறங்கியிருப்பது ஏ. ஆர். ரகுமான் சாமி. எனக்கென்னமோ இளையராஜா சாமி என்னை பிடித்து ஆட்டும் அளவுக்கு ரகுமான் சாமி ஆட்டுவதில்லை. ஆனால் இசை என்னும் சாமி எப்போதும் என்னை பிடித்து ஆட்டுவதால் எல்லாவற்றையும் ரசிப்பதுண்டு. [எத்தனை சாமிப்பா நாட்ல!] அப்படித் தான் இரண்டு நாட்களாய் சில்லென்ற காதலை [படத்தின் பாடல்களை சார்!] ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தப் பதிவு இந்தப் படத்தின் இசையின் விமர்சனம் அல்ல. இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றித் தான்."நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது" என்ற பாடல். இந்தப் பாடலின் சிச்சுவேஷன் [இதற்கு தமிழில் என்ன சொல்வது?] காதலியைப் பிரிந்த காதலன் தனிமை உணர்ந்து பாடுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால் [நான் கேள்விப்பட்டது வரை] மெட்டுக்கு பாட்டெழுதாமல், பாட்டுக்கு மெட்டு போடப்பட்டிருக்கிறது. வாலி பாட்டெழுத ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் பாட்டை எல்லோரும் ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. இந்தப் பாட்டைப் பற்றி ஒரே வரியில் சொல்வதானால் [வைரமுத்துவின் கம்பீரமான குரலையும், கவிதை நயமான தமிழையும் கடன் வாங்கிக் கொள்கிறேன்!]
"வார்த்தைகள் ரகுமான் தம்பியின் இசையில் சம்மணமிட்டு அமரவில்லை! நொண்டியடிக்கிறது" என்று தான் சொல்ல வேண்டும்!

ஓரிரு வரிகளைத் தவிர அனைத்தும் புளித்துப் போன பழைய வரிகள். நிமிஷங்கள் வருஷமாவதையும், குளிர்காலம் கோடை ஆவதையும், செந்தணல் பனிக்கட்டி ஆவதையும் எத்தனை முறை தான் எழுதுவார்களோ நம் கவிஞர்கள்..கேட்டதையே கேட்பதை விட தனிமையே தேவலை என்று தோன்றுகிறது. பாட்டுக்கு மெட்டு என்றால் கவிஞர்களுக்கு அல்வாவுடன் கொஞ்சம் காராசேவ் சாப்பிடுவது போல்[ஸ்வீட் காரம்பா!]. வாலி போன்ற பெருங்கவிஞர் இப்படி சொதப்பியிருக்கக் கூடாது.

"காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" என்ற பாட்டையும் வாலி எழுதி விஸ்வநாதன் மெட்டு போட்டார் என்று படித்திருக்கிறேன். அந்தப் பாட்டின் பல்லவி ஒன்றே போதும், கவிதை! வாலி சார், பேசாமல் நீங்கள் அவதார புருஷனே தொடருங்கள்!!

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்றும் என்னை தாங்கள் யாரும் சொல்லி விடக்கூடாதெ, அதனால் சரி பாட்டுக்குத் தானே மெட்டு..நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன்.. என்றதன் விளைவு கீழே [ஐய்யோ, சேருக்கு அடியில இல்லைங்க!!]

[முன் குறிப்பு: இதிலும் ஏற்கனவே சொன்ன விஷயங்கள் வந்திருக்கலாம், ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் எனக்கு அலுக்கவில்லை!]

[பல்லவி 1]
சுவாசம் முழுதும் உன் காதல்
தேசம் முழுதும் உனை தேடும்
வாசம் மாறா உன் தேகம்
பேசாப் பொழுதும் என் உயிர் பாடும்

[பல்லவி 2]
கண்கள் ரெண்டும் உனை தேடும்
கவிதை என்றும் பொய் பேசும்
இதயம் இன்று இளைப்பாறும்
இயக்கம் கொஞ்சம் தடுமாறும்

[சரணம் 1]
காதலி என்ன கடவுளா?
தூணிலும் துரும்பிலும் தெரிகிறாள்

காதலைச் சொல்லி பிரிகிறாள்
கனவினில் எங்கும் விரிகிறாள்

காதல் வளர்வது பிரிவிலா
கண்கள் கலங்கியதென்ன பரிவிலா

காதலில் இரக்கம் பஞ்சமா
தோற்றவன் உலகில் கொஞ்சமா

[பல்லவி]

[சரணம் 2]
மழை தனியாய் எனை நனைக்க
மனம் உனையே நினைத்திருக்க

என் இளமைப் பறவை பறந்தது
உன் நினைவு சிறகுகளால்

என் இதயம் ஒன்றே சிறந்தது
உன் இதயம் வென்றதால்

இமை மேல் கொஞ்சம் ஈரம்
இளமையில் தனிமை சாபம

[பல்லவி]

யாரங்கே..யாரடா அங்கே!! லகுட பாண்டிகளே! மெட்டு போட கூட்டி வாருங்கள் ரகுமானை...