தேன் கூடு போட்டிக்காக

தலை நிறைய மல்லிகை பூ. நெத்தியில் ரத்தச் சிவப்பில் வட்டமான பெரிய பொட்டு. மிகையாக மஞ்சள் பூசியும் பொலிவு குறையா முகம். பல வருடங்களாய் முகத்தில் இல்லாத சாந்தி! அவள் தலைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தொங்கிக் கொண்டிருக்கும் நூறு வாட்ஸ் பல்பும் இல்லையென்றால் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. அந்த ஊதுபத்தியின் நறுமணம் மணியின் நாசியின் வழியே மூளைக்குச் சென்று உன் மனைவி இறந்து விட்டாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய துக்கத்தை இரட்டிப்பாக்கியது. அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

அந்தத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் வழியே சூரிய ஒளி ஆங்காங்கே கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியை தங்கள் ஆடைகளில் ஏந்தி இரண்டு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழவு வீட்டின் துக்கம் பழக்கப்பட்டு போன சில ஆடவர்கள் அன்றைய செய்தித் தாளில் முழ்கிப் போயிருந்தார்கள். துயரை ஆற்ற முடியாத சில தாய்மார்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பெருமை கொண்டும் அவளுடைய இத்தகைய நிலையை நினைத்தும் அவளுடைய தலையெழுத்தை நொந்து கொண்டார்கள்.

ஒரு பெரிய கருப்பு நிற கண்ணாடி அணிந்து அன்றைய நாளிதழில் மூழ்கி இருப்பவரிடம் சாந்தா வீடு இது தானே என்று அவன் கேட்டு விட்டு அவர் பதில் சொல்வதற்குள் மெல்ல வாசலில் தன் செருப்பை கழற்றி விட்டு படியேறி வீட்டுக்குள் புகுந்தான். அவன் குரலில் இருந்த நடுக்கத்தை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை, பழைய படி பிரதமர் என்ன தான் சொல்கிறார் என்பதில் அவர் கவனம் செலுத்தினார்.

வந்தவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சிறிய கட்டம் போட்ட சட்டையும் பழுப்பேறிப் போன வேட்டியையும் அணிந்திருந்தான். மெலிந்த தேகம். நல்ல நிறம். கரிய வானத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களைப் போல கரிய கேசத்தில் ஆங்காங்கே மின்னும் நரைத்த தலை முடி. அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் சந்தனம் பூசி அவளுடைய வயிற்றில் அவளுடைய கைகளை வைத்திருந்தார்கள். அவளுடைய கைகள் பெரிய ரோஜாப் பூ மாலைக்கு நடுவில் கொஞ்சம் தான் தெரிந்தது. பச்சை நிற பட்டுப் புடவை உடுத்தியிருந்தார்கள். கண்களில் பொங்கி வரும் கண்ணீர் அவனை சரியாக பார்க்க விடாமல் செய்தது. மெல்ல அவள் அருகில் சென்றான்.

அவளை பார்த்தவாறே அவளை கிடத்தியிருக்கும் கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். அங்கு இருந்தவர்கள் அழுவதை நிறுத்தி அவனையே திகைத்து பார்த்த வண்ணம் இருந்தனர். மணி தலை கவிழ்ந்து மயக்க நிலையில் அழுது கொண்டே இருந்தான். அவன் அவளையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து மெல்ல ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மணி மெல்ல தலை தூக்கி பார்த்தான். அவன் அவளுடைய கைகளில் கை வைத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மணியை பார்த்து ஏன் இப்படி என்பது போல் கை காட்டினான். அவளுடைய தாடையில் கை வைத்து ஏதோ முனங்கினான். அவனுடைய அழுகையில் அது அமுங்கிப் போயிற்று! மெல்ல அங்கு இருந்த ஒரு பெரியவர் எழுந்து அவனிடம் வர எத்தனித்தார். சட்டென்று கையை எடுத்து தடதடவென தலையில் அடித்து ஓங்கி அழுதான். மணி பிரமை பிடித்ததைப் போல பார்த்து கொண்டிருந்தான். ஏன் இப்படி பண்ணிட்டே என்று அவன் கேட்டது இப்போது தெளிவாகக் கேட்டது. தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதான். அந்தப் பெரியவர் பக்கத்தில் வந்து அவனை எழுப்பினார். அவன் அவர் கைகளில் சிக்காமல் முரண்டு பிடித்தான். சரி வாங்க, எழுந்திருங்க..இங்கே உக்காருங்க என்று அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அந்தப் பெரியவர் அழைத்து போனார். அவன் திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டும் வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டும் நடந்து சென்றான். அந்த ஓலம் அடங்க சிறிது நேரம் ஆனது.

சற்று நேரம் அழுகையை மறந்து எல்லோரும் அவன் போன வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த யாரும் அவனை இதுவரை பார்த்ததில்லை! பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது! அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்!

1973

எதற்கோ இலவசமாய் கிடைத்த அந்தச் சிறுகதை தொகுப்பில் இருந்த இந்தக் கதையை படித்து விட்டு புத்தகத்தை மூடும் போது ஈரம் படிந்த கண்களை துடைத்துக் கொண்டு தூங்கச் சென்றான் சீனிவாசன்!
ஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார்! [என்ன? என்ன நக்கல்? எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]

ஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம்! [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா?] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது!

தூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை! [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்!] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்! கதம் கதம்!

அமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட்! 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம்! 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள்! எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள்! [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ?]

கிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள்! அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்! விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம்? வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம்! ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது!

- பயணப்படும்
செளக்கியமா இருக்கீங்களா? என்ன சென்னையில் நல்ல மழையாமே? என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி! நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.

சரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.

நான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்!] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று! உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள்! ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது?

அமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா! அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான்! அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான்! பர்கரில் இருந்து பால் நிலவு வரை! பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு! எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது! இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்!

காலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று? அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள்! என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார்! சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ!

இது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை! டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது! இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும்! அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்!

அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது!
  • ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்! காலை வணக்கம் சொல்கிறார்கள்!
  • எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்
  • எல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு! நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்! பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்!
  • கார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா?]
  • ஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்!
    அதற்கு

ஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம்! போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது!

- பயணப்படும்!