எனக்கு நிச்சயமாய் தெரியும்
நீ சிரித்திருப்பாய்
மேகம் தான் தூறுகிறதே!
-------------------------------------------------------------------------------------------------
நீ வீட்டில் இல்லாத
ஒரு பொழுதில்
நானிருந்தேன்!
சொன்னால் நம்ப மாட்டாய்...
வீடெங்கும் நீ
நிறைந்து கிடக்கிறாய்!
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத சமயத்தில்
நீ வளர்க்கும் பூனை
உன் கதகதப்பு வேண்டி
மடித்து வைத்திருக்கும்
உன் புடவையில் துயில்கிறது
பாவம்...பூனைக்கு எப்படித் தெரியும்?
புருஷனுக்குத் தான் முதல் உரிமை என்று?
-------------------------------------------------------------------------------------------------
நீ இல்லாத தருணத்தின் மெளனம்
உன்னை விட அதிகம்
தொனதொனக்கிறது!
-------------------------------------------------------------------------------------------------
எதிர்பாராமல் நம் கண்ணைக் குத்தும்
குழந்தை போல் திடீரென்று
வந்து விடுகிறது மழை

நீ இருந்தால்
மழையை விட சடசடத்துக் கொண்டே
கொள்ளையில் காயும் துணிகளை
அள்ளிக் கொண்டு வருவாய்!

மழை வாசனையோடு
மிகக் கொஞ்சமாய் நனைந்து
என் அருகே வந்து அமர்வாய்

ஜன்னலின் வழியே பார்க்கிறேன்!
கொல்லையில் துணிகள் நனைகின்றன...
நான் உள்ளே நுழையவும் "சரி பவி மீ அவுஸ்" [சரி அண்ணி, நான் கெளம்புறேன்] என்று அவள் கிளம்பவும் சரியாய் இருந்தது...

சாந்திக்கு வயது ஒரு 35 இருக்கலாம். அவள் வறுமைக்கும் வயிருக்கும் சம்மந்தமில்லை...நல்ல புஷ்டி! இருட்டில் பிடித்த கொலக்கட்டை போல் கொச கொசவென்று நான்கைந்து, வீடுகள் என்ற பெயரில் இருக்கும் கூடுகள் எங்கள் காம்பவுண்ட்! அந்த கொச கொச கூடுகளில் எங்கள் பக்கத்துக் கூட்டில் வசிப்பவள் இந்த சாந்தி. எல்லோரும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். உங்களை பொறுத்த வரை காய்ரா பூய்ரா ஜாதி!

அவள் புருஷன் மகா யோக்கியன். குடிக்காமல் பெண்டாட்டியை கை நீட்டி அடிக்கவே மாட்டான்! அதே சமயம் குடிக்காமல் இருக்கவே மாட்டான்! இந்த இரண்டு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருபவன், எப்படியோ இன்னொரு வேலையும் பொறுப்பாய் செய்துள்ளான். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். குடிகாரனின் குழந்தைகளாய் இருந்தாலென்ன, அத்தனை அழகு!

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள், விதவிதமான ரேட்டுகள்! எங்கள் கொச கொச காம்பவுண்டில் எங்கள் வீடு ஒரு மாதா கோயில்! மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்! எல்லாவற்றையும் சொல்லி அழுவதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்! இன்றும் சாந்தி கண்னைத் துடைத்துக் கொண்டே தான் சென்றாள்!

ககம்பா தூ காய்தி மெல்லே சேத்தே! தெனு சா ரொல்லே ஜாராஸ்! [ஏம்மா நீ ஏதாவது சொல்லிட்டு இருக்கே? பாரு அவங்க அழுதுட்டே போறாங்க] என்று அம்மாவை கலாய்த்தேன்!

ஹாய் மீ தெகோ சசு சா காய்தி மெனத்த..ஜீ பாத் தைலி காரா [ஆமாம், நான் தான் அவ மாமியாரு, ஏதாவது சொல்றதுக்கு! போய் சாப்பிட்றா...]

நான் சாப்பிட ஆரம்பித்ததும், அம்மா ஆரம்பித்து விட்டாள்! சாந்தி சொல்லி அழுததெல்லாம் என்னிடம் சொல்லி அவள் மீது பரிதாபப்பட்டாள்! மாதா கோயிலின் அடுத்த பாதிரியாராக என்னை பாவித்துக் கொண்டேன்! குழந்தைகளுக்கு பள்ளியில் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அவன் குடித்து விட்டானாம்! கேட்டதற்கு சிகெரட் நெருப்பை வைத்து கையை சுட்டு விட்டானாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி மனம் போன போக்கில் நடந்து கொள்கிறானாம். மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்து பார்த்து எரிந்து விழுகிறானாம். என் அம்மாவுக்கும் கண் கலங்கித் தான் இருந்தது...மனிதர்கள் ஏன் இத்தனை கேவலமான பிறவிகளாய் இருக்கிறார்கள்? இவர்களுக்கு ஏன் குடும்பம், குழந்தை குட்டி? எப்படி இவ்வளவு நீச்சமாக நடந்து கொள்ள முடிகிறது? எப்படி இருந்தாலும் அந்தப் பெண் பாவம் அவனுடன் தான் காலம் தள்ள வேண்டும் என்பது எத்தனை கொடுமை...எப்படி அவளால் அவனுடன் சிரித்துப் பேச முடியும்? நாள் முழுதும் சண்டை போட்டு விட்டு எப்படி அவன் முகம் பார்த்து வாழப் பிடிக்கும்? என்று ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தன...நானும் சாப்பிட்டு விட்டு எழுந்தேன்!

மறுநாள் நான் கல்லூரியிலிருந்து வர நேரமாகிவிட்டது...பாதிரியார் தனியாகத் தான் இருந்தார். எந்தப் பாவியும் மன்னிப்பு கேட்க வரவில்லை போலும். பயங்கர பசி...

காய் அம்பா கெர்ரித்தே ஹிந்தோ? [என்னம்மா செஞ்சிருக்கே இன்னைக்கு?] என்ற என் பார்வையில் அந்த குளோப் ஜாமுன் விழுந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து வழிவதைப் போல் நாக்கு ஜொள்ளு வடித்தது! காய் விஷேஸ் ஹிந்தோ? கோனே எல்லே? [என்ன விஷெசம் இன்னைக்கு? ஏது இது?] என்று வாயில் போட்டேன்!

சாந்தி கெவ்ரார் மெனா! தெனோ அந்திர்தே! [சாந்தி முழுகாம இருக்காளாம், அவ கொடுத்தா!] என்றாள் அம்மா! குளோப் ஜாமூன் நெஞ்சை அடைத்தது!