1948ம் ஆண்டு, பிப்ரவரி 1. மெட்ராஸ் ப்ராவின்ஸி.

மழை பெய்யும் ஒரு அடர்த்தியான இரவில் படம் தொடங்குகிறது. சிறையிலிருக்கும் வேங்கடத்தை (பிரகாஷ்ராஜை) இரண்டு நாட்களுக்காக ஒரு விசேஷ அனுமதியுடன் வெளியே அழைத்து வரப்படுகிறார். அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏற்றி காஞ்சிவரம் கொண்டு வரப் படுகிறார். அவர் பயணத்தினூடே அவரின் கடந்த காலத்தை திரைப்படம் விளக்கிச் செல்கிறது. அந்த ஊரிலேயே தேர்ந்த நெசவாளியான வேங்கடம் அன்னத்தை திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் வருகிறார். தான் தன் மனைவியை பட்டுச் சேலை கட்டி கூட்டி வருவேன் என்ற அவனது வாக்கு பொய்த்து போனதை பக்கத்து வீட்டுக் கிழவி சுட்டிக் காடி கிண்டல் செய்கிறாள். அதுவே அவரின் வைராக்கியமாய் மாறி தனக்குப் பிறந்த பெண் குழந்தையை பட்டுப் புடவையுடன் தான் திருமணம் செய்து அனுப்பி வைப்பேன் என்று ஊராரின் முன்னிலையில் வாக்குறுதி அளிக்கிறார. அதைக் காப்பாற்ற அவர் படும் பாடுகளும், அதன் முடிவும் நீங்களே வெண் திரையில் காண்க [அதுவரை படம் ஓடினால்!]

அந்தக் காலத்திலேயே 800 ரூபாய் விலை போன பட்டுப் புடவைக்கு 7 ரூபாய் கூலி கொடுக்கிறார் வேங்கடத்தின் முதலாளி. "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்" என்ற உழவர்களின் நிலையைப் போல எத்தனை விதமான புடவைகளை நெய்தாலும் ஒரு பட்டுப் புடவை என்பது ஒவ்வொரு நெசவாளியின் கனவாகவே இருந்திருக்கிறது. ஒரு நெசவாளியின் வாழ்வை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன். முன்பொரு காலத்தில் நல்ல கலை நேர்த்தியான படங்களை இவர் இயக்கியிருந்தாலும் தற்போது ஹிந்தியில் காமெடி படங்களையே இயக்கிக் கொண்டிருக்கும் இவருக்கு திடீரென எப்படி இப்படி ஒரு கலை தாகம் எடுத்தது என்று ஆச்சர்யமாகவே இருக்கிறது. மிக நல்லதொரு முயற்சி என்றே சொல்ல வேண்டும்.

பிரகாஷ் ராஜ் வேங்கடமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் வழக்கமான க்ளிஷேயாகிவிடும். மனிதருக்கு கஷ்டப்பட ஒன்றுமில்லை. அநாயசமாய் செய்திருக்கிறார்.

ஷ்ரேயா அமைதியாய் அழகாய் அளவோடு வந்து போகிறார். நல்ல இயக்குநர்கள் கையில் இவர் கிடைத்தால் தமிழில் ஒரு ஸ்மிதா பாட்டில் மாதிரி ஆகி விட மாட்டார்? பார்க்கலாம்.

வழக்கமாய் தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு தங்கை என்று ஒன்று இருந்தால் அது ஒரு தருதலையை தான் கல்யாணம் செய்திருக்கும். அவன் அவளை பாடாய் படுத்துவான். கதாநாயகன் பொங்கி எழுவான். நல்ல வேளையாய் அந்தக் கஷ்டம் இங்கு இல்லை. வேங்கடத்தின் மச்சானின் கதாபாத்திரம் எந்த வித பாசாங்குமில்லாமல் மிக எதார்த்தமாய் கையாளப்பட்டிருக்கிறது. தொல்லை கொடுக்க வேண்டிய இடத்தில் தொல்லை கொடுக்கிறார். உதவ வேண்டிய நேரத்தில் சரியாய் உதவுகிறார். கழண்டு கொள்ள வேண்டிய இடத்தில் சரியாய் கழண்டு கொள்கிறார். அவரின் நடிப்பையும் பாராட்டலாம்.

படத்தில் மிகவும் பாராட்டுக்குறிய அம்சம் ஒளிப்பதிவு. திரு ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். நான் கவனித்த வரை பெரும்பாலான ஷாட்கள் வான் நோக்கியே வைக்கப்பட்டிருந்தன. விஜய்யும் மதனும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். சில சாம்பிள்ஸ்.

மோட்டார் கார் ஒன்று முதன் முதலில் ஊருக்குள் வருகிறது.

- அது மோட்டார் கார். குதிரை இல்லாம ஓடும்.
- மோட்டார்னா?
- கண்டுபிடிச்சவன் பேரா இருக்கும். ஒருவேளை கவுண்டர், செட்டியார் மாதிரி மோட்டாரோ என்னமோ...குதிரை வண்டியை ஓட்றவன் குதிரைக்காரன் மாதிரி இதை ஓட்றவனுக்கு பேரு ட்ரைவர்காரனாம்! பட்டணத்துல இருந்து கூட்டிட்டு வர்றாங்க. மாசம் 35 ரூபாய் சம்பளம்!

கம்யுனிஸ சித்தாந்த்தினால் கவரப்பட்டு போராட்டம் நடத்தும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் டீ கடை ஆசாமி ஒருவர்...

புரட்சி புரட்சின்னு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். இனிமே இவங்களுக்கு ஒரு குவளை காப்பி கூட தர மாட்டேன். காப்பி வேணும்னா கம்யுனிசத்தை கலந்து குடிக்கட்டும்!

படத்தின் இசை படத்தினோடு கலந்து செல்கிறது. அதுவே ஒரு மிகப் பெரிய விஷயம் தான். அதற்கு மேல் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவையே எடுத்துக் கொள்வோம். இந்தப் பதிவு என்னுடைய வழக்கமான பாணியில் ஒரு விமர்சனம். ஒருவேளை நீங்கள் என் பாணியை ரசித்திருந்தாலும், இந்தப் பதிவு உங்களை அவ்வளவாகக் கவரவில்லை என்றால் அதே நிலை தான் காஞ்சிவரம் திரைப்படமும். இந்தப் படத்தில் எல்லாம் இருக்கிறது. நல்ல கதை, நல்ல நடிகர்கள், அழுத்தமான படப்பிடிப்பு, அளவான இசை...ஆனாலும் அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை! என்னுடன் வந்த நண்பரும், உதிரிப்பூக்கள் மெல்ல தான் போகும், ஆனால் அதனோட பாதிப்பு அதிகம் இல்லையா என்றார். அவர் சொல்வது நியாயமாய் தோன்றினாலும், இதில் இல்லாத ஒன்று அப்படி என்ன அதில் இருந்தது என்ற கேள்விக்கு என்னக்கு விடை தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் சமூகத்தைப் பற்றி தெரியாத உலக திரைப்பட விழாக்களில் இந்தத் திரைப்படம் வரவேற்கப்படலாம்!

பின்குறிப்பு: என் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் (அதாவது தன் 6வது படிக்கும் மகனுடன்) இந்தப் படத்திற்கு வந்திருந்தார். அந்தப் பையனால் தாங்க முடியவில்லை. இடைவேளை போடுவதற்கு முன் விளக்குகளை போட்டதும் துள்ளிக் குதித்தான்! "என் வாழ்நாள்ல நான் பாத்த 2 மொக்கை படத்துல இதுவும் ஒன்னு" என்றான். அந்த இன்னொன்னு என்னன்னு கேட்டேன். அவன் சொன்ன பதில், திருப்பாச்சி!

இது என்ன மாதிரியான ஜெனரேஷன்!???

குழந்தையும் தெய்வமும் ஒன்று!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது!!
நம் பக்கத்து வீட்டுக் குழந்தை என்னை மாமாவென்றும்
உன்னை அக்காவென்றும் அழைக்கிறது!


உன் இரு ஆட்காட்டி விரல்களால்
கொம்பு செய்து கொண்டாய்
பின்னர் இடக்கையை பின்னுக்கிழுத்து
வடக்கையில் அபிநயம் பிடித்து - அதை
உன் இதழுருகில் கொண்டு வந்து
உன் மருண்ட விழிகளை உருட்டி
இங்கும் அங்கும் துள்ளிக் குதித்து
ஒரு மான் எப்படி இருக்கும் என்று
அந்தக் குழந்தைக்கு செய்து காட்டுகிறாய்
குழந்தை தவறாய் புரிந்து கொள்கிறது
என்று எனக்குப் படுகிறது!
தாம்பரம் போற வழியில, மீனம்பாக்கத்திற்கு முன் இருக்கிற ஒரு அஞ்சலகம் போக வேண்டியிருந்தது. 2 நாளா ஒரு என்.எஸ்.சி வாங்க அலைஞ்சுட்டு இருந்தேன். நூறு ரூபாய் என்.எஸ்.சி தான் வேண்டியிருந்தது. இவ்வளவு கம்மியாவா சேவிங்க்ஸ் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்க வேணாம். இது அதுக்காக அல்ல, ஒரு ப்ராப்பர்டியின் செக்யுரிட்டி டிபாஸிட்டுக்காக! மடிப்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் (பஸ் ஸ்டாண்ட் மாதிரி) ஒட்டி ஒரு தம்மாதுண்டு போஸ்ட் ஆபிஸ் இருக்கிறது. போன சனிக்கிழமை காலை வழக்கம் போல் எல்லா சோம்பேறித்தனங்களையும் சுறுசுறுப்பாக முடித்து விட்டு ஒரு வழியாய் கிளம்பி ஒரு 11:30 மணியளவில் போய் சேர்ந்தேன். நூறு ரூபாய்க்கு ஒரு என்.எஸ்.சி வேணும் என்றேன். நூறு ரூபாய் என்.எஸ்.சியா? இங்கே இல்லையே சார். நீங்க வேணா கூட் ரோட்ல குமரன் தியேட்டர் பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபிஸ் போய் கேட்டுப் பாருங்க, அங்கே தான் கிடைக்கும் என்று சாவதனமாய் ரீடைரக்ட் செய்து விட்டார். வழியெல்லாம் விசாரித்து ஒரு வழியாய் போய் சேர்ந்து பார்த்தால் நான் எதிர்பார்த்த படியே ஒரு நீ...............ளமான க்யு! வழக்கம் போல் எனக்கு செம டோஸ் விழுந்தது என்னிடமிருந்து! "கொஞ்சம் சீக்கிரம் வந்து தொலைச்சா என்ன? எல்லாத்துலையும் லேட்டு".

கம்ப்யுட்டரில் ப்ரிண்ட் போட்டு கொஞ்சம் பழசாயிருந்தாலும் என்.எஸ்.சி தெளிவாய் தெரிந்தது. பொறுப்பாய் நின்றேன். நான் ஏற்கனவே சொன்னது போல் நான் எந்த இடத்தில் வரிசையில் நின்றாலும் அந்த இடத்தில் கனகச்சிதமாய் வந்து கொஞ்சம் தள்ளிக்குங்க என்று இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் செல்பவர்கள் இந்த முறை வரவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேளை வேறு பக்கம் செல்வதற்கு அங்கு இடம் இல்லாததும் காரணமாய் இருக்கலாம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். திடீரென்று கவுண்டரில் இருந்தவர் எல்லோரிடமும் ஏதோ ஒரு பேப்பரை வாங்கிக் கொண்டார். நான் கூப்பிட்றேன் வெயிட் பண்ணுங்கோ என்றார். அட ராமா, இவங்க இல்லை எனக்கு பேப்பர் கொடுக்கனும் என்று குழம்பி கற்றது கல்லளவு கல்லாதது கவர்மெண்ட் அளவு என்பது சரியாய் தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் நீங்க என்.எஸ்.சி தானே, போய் கேளுங்க என்று உந்தித் தள்ள கடைசியில் துணிந்து உள்ளே போய், கண்ணாடியை கீழ் மூக்கில் இறக்கி விட்டு பாதி கண்ணின் வழியே பார்த்தவரிடம் என்.எஸ்.சி வாங்கனும் என்றேன். அவர் சாவகாசமாய் அதுக்கு டைம் முடிஞ்சதே என்றார். ஓ, இதுக்கு டைம் எல்லாம் இருக்கா என்று யோசிக்கும் போது, 12 மணியோட முடிஞ்சுரும், நீங்க மண்டே வாங்க என்றார். மணி பார்த்தேன். 12:05! அதற்கு மேல் சார், கொஞ்சம் பாத்து போட்டுக் கொடுங்க என்றெல்லாம் நான் குழையவில்லை. என் தப்பு தான்! போயிட்டு மண்டே வந்தா தான் சரி என்று நான் என்னை திட்டிக் கொண்டே வந்து விட்டேன். அதற்கு முன், சார் ஃபார்ம் ஏதாவது ஃபில் பண்ணனுமா என்றதும் அவரும் கொஞ்சமாய் உழைத்து அரதப் பழசான, இன்னைக்கோ நாளைக்கோ என்று இருந்த ஒரு மஞ்சள் தாளை எடுத்துத் தந்தார். அதில் சில சந்தேகங்களுக்கும் தெளிவாய் பதில் சொன்னார். முதலில் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் ஃபார்மின் தரத்தை உயர்த்த வேண்டும்! சாதரணமாகவே கரையான் அரித்தது போலவே இருக்கிறது.

மண்டே மார்னிங், காலை 10 மணி சமீபம்.

இந்த முறை தைரியமாய் உள்ளே போனேன். என்.எஸ்.சி அந்தப் பக்கம் என்று இதுவரை பார்க்காத இன்னொரு ஜன்னலைக் காட்டினார்கள். நல்ல வேளை அங்கு கூட்டமே இல்லை, அதோடு ஜன்னலில் ஆளும் இல்லை. வெயிட் பண்ணுங்க வந்துருவார் என்றார் ஒரு பெண்மணி. வெயிட் பண்ணிக் கொண்டே இருந்த போது கொஞ்சமாய் வெயிட் போட்ட ஒருவர் தலையில் கொஞ்சம் முடியுடனும், நிறைய பொறுமையுடனும் நூறு ரூபாய் என்.எஸ்.சி இங்கே இல்லை சார். அதெல்லாம் இப்போ சரியா போறதில்லை, யாரும் இவ்வளவு சின்ன அமவுண்ட்டுக்கு வாங்குறதில்லை, அதனால நாங்களும் வச்சிக்கிறதில்லை, நீங்க ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, ஜி.எஸ்.டி ரோட்ல ஆர்மி கேம்ப் பக்கத்துல இருக்கு என்று ஏதோ பலசரக்கு கடையில் வியாபாரம் ஆகாத பொருளை வைத்துக் கொள்வதில்லை போல் பேசினார்! மிக்க நன்றி என்று மணியை பார்த்து விட்டு, இன்னைக்கும் அவ்வளவு தானா என்று அலுவலகத்திற்கு நடையை கட்டினேன்.

ரெட் லிப்ஸ் மார்னிங், அதாவது செவ்வாய் காலை, 9:15 மணியளவில். [ஐய்யோ, மொக்கை தாங்க முடியலைடா...]

வண்டியை நிறுத்தி அந்த இடத்தை ஒரு நோட்டம் விட்டேன். பழங்கால கட்டிடம், சுற்றிலும் மண் தரை தான். ஜிலு ஜிலுவென அங்கிருந்த சில மரங்களின் காற்று. ஆஹா! உள்ளே கூட்டமே இல்லை, அங்கு வேலை பார்த்த ஒரு இளம் ஆன்டியிடம் நான் சென்று நின்றதும் 9;30 தான் சார் ஆரம்பிக்கும், வெயிட் பண்ணுங்க. இல்லை, நூறு ரூபாய் என்.எஸ்.சி வேண்டும் என்றேன். நூறு ரூபாயா, அது இருக்காதே சார், நீங்க வேணா மெளண்ட் ஹெட் போஸ்ட் ஆபிஸ் போய் பாருங்க, அங்கே கிடைக்கும் என்றார். இவர்களே செக்யுரிட்டி டிபாஸிட் என்று கேட்பது, கேட்டால் அங்கே போ இங்கே போ என்று அலைய விடுவது. நம்பியார் போல் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒரு புன்னகையுடன் இல்லை மேடம், மடிப்பாக்கம் போஸ்ட் ஆபிஸ்ல இருந்து இது வரை மூணு போஸ்ட் ஆபிஸ் பாத்துட்டேன். எங்கேயும் இல்லை, அவங்க தான் இங்கே கிடைக்கும்னாங்க என்று குழைந்தேன். சரி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஒன்னே ஒன்னு பாத்த மாதிரி ஞாபகம் என்று என் வயிற்றில் ஆவின் [ப்ளு பாக்கெட், கொளுப்புச் சத்து இல்லாதது] பாலை ஊற்றினார். வழக்கம் போல் ஒரு ஓரமாய் அமர்ந்து வெயிட் பண்ண ஆரம்பித்தேன். அதை விட நோட்டம் விட ஆரம்பித்தேன் என்பது சரியாய் இருக்கும். ஒரு பெரிய ஹால். அங்கங்கே மரத் தடுப்புகள். பிறக்கும்போதே, இவர்கள் அரசு அலுவலகங்களில் அமர்த்தப் படுவார்கள் என்று நிர்ணயித்த முகங்கள். ஒட்டடை படிந்த மேல்கூரை, நீள நீளமான ஃபேன்கள். பெரிய ஜன்னல்கள். மிதமான சூரிய ஒளி. வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்கும் பிள்ளைத்தாச்சி பெண்களைப் போல் பழங்காலத்து ஃபைல்கள். எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் பேப்பர்கள் வெளியே வராத ஃபைல்கள் பார்த்ததாய் ஞாபகம் இல்லை. அந்த இடத்தில் சம்மந்தமே இல்லாமல் அமைதியாய் ஏதோ ஒரு நாட்டின் இயற்கை வளத்தை ஞாபகப்படுத்தும் ஸ்கிரீன் சேவர்களுடன் தூசி படிந்த கம்ப்யுட்டர்கள். என்னம்மா இது ப்ரிண்ட் ஆக மாட்டேங்குது என்று கொஞ்சம் வயதான ஆன்டி அந்த இளவயது ஆன்டியிடம்
கேட்டாள். ஸ்விட்ச் போடுங்க என்றதும் கொஞ்சம் அசடு வழிந்தார். அங்கு வேலை செய்யும் வயதான பெண்ணை கூவி அழைத்து இனிமே காலையில கூட்டி பெருக்கும் போதே ஸ்விட்ச் போட்றுங்க என்று அதட்டினார்.

9:30 மணிக்குள் இன்னும் சிலர் அங்கு வந்தார்கள். சிலர் சேமிப்பு கணக்கை நேர் செய்ய, சிலர் ஸ்டாம்பு வாங்க, சிலர் என்வலப் வாங்க. ஆஹா என்ன ஒரு அருமையான வேலை. ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லை, டெட்லைன் இல்லை. இப்படியே வர்றவனுக்கெல்லாம் கேட்டதை கொடுத்து விட்டு, 5 மணிக்கு டான் என்று கடை சாத்தி நடையைக் கட்டி விடலாம். அதிலும் ஈமெயில் காலத்தில் போஸ்ட் ஆபிஸில் அதுவும் இந்த மாதிரி ஒரு இடத்தில் வேலை அமைந்து விட்டால் சொல்லவே வேண்டாம். என்ன சம்பளம் ஒரு குறை, பரவாயில்லை, இதை வைத்துக் கொண்டே இவர்கள் பிள்ளைகள் ஒவ்வொன்றும் இன்ஜினியரிங் படிக்கவில்லையா? ஒரே ஏக்கமாய் இருந்தது. இக்கரைக்கு அக்கரை பச்சை, அதிலும் இந்த மாதிரி நினைப்பெல்லாம் டார்க் பச்சை என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஒரு வழியாய் என்.எஸ்.சி வாங்கிக் கொண்டு அங்கேயே ஒரு என்வலப் [5 ரூபாய்] வாங்கி, ஸ்பீட் போஸ்ட் [20 ரூபாய்] அனுப்பினேன். அட்ரஸ் எழுதி அந்த ஆண்டியின் கையில் தந்ததும், கருப்பு மையால் அச்செடுத்து சிரித்துக் கொண்டிருந்த காந்தி தாத்தாவின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து! என்ன ஆனாலும் சரி, என் படத்தை ஸ்டாம்ப் போடும் அளவுக்கு பெரிய மனிதன் ஆவதில்லை என்று உறுதி செய்து கொண்டு கிளம்பினேன்! வெளியில் மரங்கள் ஆசிர்வதித்தன!