1. அதிக நெருக்கமில்லை
என்று நான் நினைத்த
நண்பனொருவன்

அவன் சென்ற சுற்றுலாவில்
என் நினைவில்
எனக்காக வாங்கி வந்த
ஏதோ ஒன்றை
எங்கோ தொலைத்து விட்டேன்!

2. நான் இதை
எழுதிக் கொண்டிருக்கும் போது

மாராப்பு விலகிய ஒரு பெண்ணின்
மாரை நீ வெறித்துக் கொண்டிருக்கலாம்

டீ கடையில் ஒரு சிறுவன் கொடுக்கும்
டீயை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருக்கலாம்

காற்றே இல்லாமல் சில நொடிகள்
தென்னங்கீற்று அசையாமல் இருந்திருக்கலாம்

உன் வாயிலிருந்து ஒரு பருக்கை
கீழே சிந்தியிருக்கலாம்

சுவற்றின் மேலேறிய எறும்பு
காலிடறி விழுந்திருக்கலாம்

இனம்புரியா ஒரு அச்சத்தில்
பறவையின் சிறகுகள் படபடத்திருக்கலாம்

கடல் சற்றே உள் வாங்கியிருக்கலாம்...

எதற்கும் இருக்கட்டும், என்
பேனாவை மூடியே வைக்கிறேன்!
31ம் ஆண்டின் புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன்! புத்தக கண்காட்சிக்குப் புறப்படும் உங்கள் எல்லாருடைய மனதிலும் எழுந்த கேள்வி என் மனதிலும் எழுந்தது! அது தான்..."போன புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துக் கிழித்து விட்டாயா?" இதற்கு நீங்கள் செய்ததைத் தான் நானும் செய்தேன்! இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். எந்த புத்தகத்தைத் தேடும் நோக்கத்துடனும், வாங்கும் ஆவலுடனும் நான் செல்லவில்லை! இருந்தும் ஒரே ஒரு காந்தி நோட்டு (500) கொடுத்து பல விதமான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் வாங்கி வந்திருக்கிறேன்...

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

1. மணலின் கதை (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
2. கடவுளுடன் பிரார்த்தித்தல் (கவிதை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
3. எப்போதும் வாழும் கோடை (கட்டுரை) - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
4. கடைசி டினோசர் (கவிதை) - தேவதச்சன் - உயிர்மை
5. பனிமுடி மீது கண்ணகி (சிறுகதை, குறுநாவல்) - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு
6. வேள்வித் தீ - எம். வீ. வெங்கட்ராம் - காலச்சுவடு

[இவரின் "காதுகள்" நாவல் கிடைக்கவில்லை]

உயிர்மை பதிப்பகத்தில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் குவித்திருந்தார்கள்! மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் எனக்கு ஒரு மயக்கம்! பல கவிதைகள் புரிவதில்லை என்றாலும், அவரே சொல்வது போல் புரியாத கவிதைகள் எனக்கான கவிதைகள் அல்ல என்று அடுத்த கவிதைக்குத் தாவி விடுவேன்! "என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்" என்ற அவர் தொகுப்பை வாங்கி விடுவது என்று நினைத்தேன்! என் துரதிருஷ்டம் அது கிடைக்கவில்லை. அது இருந்திருந்தால் அந்த ஒன்றை மட்டும் வாங்கியிருப்பேன். இல்லாததால் நான்கு புத்தகங்களை வாங்கி விட்டேன்.

அதிலும் என் அதிர்ஷ்டம், நான் உயிர்மையில் நுழைந்ததும் மனுஷ்யபுத்திரனும் அங்கு வந்தார். ஏற்கனவே தேசிகனுடன் அவரை அவர் இல்லத்தில் ஒரு முறை சந்தித்திருந்தாலும், அதை அவரிடம் சொல்லி அவர் நினைவுத் திறனை சோதித்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தான் நினைத்தேன்! மறுபடியும் என் அதிர்ஷ்டம், கடையில் இருப்பவர் ஒருவர், அவராய் சமீபத்தில் வெளியான சில புத்தகங்களைப் பற்றி எடுத்துக் கூறி நீங்கள் தேர்ந்தெடுங்கள், இந்த புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனின் ஆட்டோகிராஃப் வாங்கி வருகிறேன் என்று நான் எடுத்த ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். அட, இது நல்லா இருக்கே என்று அவரைப் பின் தொடர்ந்தேன்.

அவர் மனுஷ்யபுத்திரனிடம் என்னைக் காட்டி எனக்கு கையெழுத்திட்டுத் தருமாறு கூறியவுடன், சரி இத்தனை தூரம் வந்து விட்டோம், "என்னைத் தெரியுதா? அன்னைக்கு பஸ்ல கண்டெக்டர் என்னோட இருபத்தைஞ்சு பைசாவையும் சேர்த்து ஐம்பது பைசாவா உங்ககிட்ட கொடுத்து உங்ககிட்ட வாங்கிக்கச் சொல்லிட்டார், ஆக்சுவலி நீங்க எனக்கு கடன் பட்டவர்" என்று ஒரு மறத் தமிழனைப் போல் தேசிகனுடன் அவர் வீட்டுக்கு வந்ததை ஞாபகப்படுத்தி அசடு வழிந்தேன்! நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் நெளியாமல் முகம் மலர்ந்தார்! மேலும், எங்கே என் பெயர் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் என்றெல்லாம் சொல்லி இன்னும் அவரை கொடுமைப்படுத்தாமல் நான் என் பெயரைச் சொன்னதும் அதை எழுதி ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்தார்!

படுக்கையறையில் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடித்தாரோ இல்லையோ தெரியவில்லை...அவரின் கவிதைகளில் இரண்டு சாம்பிள்...

இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்

புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்.

[coutesy: andhimazhai]

STAND UP!


[courtesy: http://www.taarezameenpar.com/]

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் நான் எந்த அபத்தத்தையும் செய்யப் போவதில்லை. நீங்கள் "ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா" அளவுக்கு இந்தியில் புலமை பெற்றிருந்தாலும் நான் சொல்வது ஒன்றே ஒன்று! "பாருங்கள், தயவுசெய்து கண்டிப்பாய் பாருங்கள்!" உங்கள் பாராட்டுக்களை இங்கே சொல்லுங்கள். [நானும் 4 வருஷமா ப்ளாக் எழுதுறேன், பேசாம அமீர் கானா பொறந்துருக்கலாம், ஸ்வபா, எத்தனை பின்னூட்டங்கள்! ]

இல்லங்களில் பொங்கல் பொங்க
உள்ளங்களில் இன்பம் பொங்க
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை...ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது...
  • யானை
  • ரயில்


ரயிலினூடே


இரு கோடுகள் அதனுள் பல கோடுகள்...ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின் வரும் படங்களைப் பார்க்க...


மயிலையின் நிலையத்தின் கூரை


கஸ்தூரிபாய் நகர் நிலையத்தின் கூரை


அடையார் ஆறு! [என்று தான் நினைக்கிறேன்!] நான் தமிழகத்தின் முதல்வர் ஆனால்!!!!, சென்னையை இருக்கும் எல்லா கால்வாய்களிலும் லண்டனின் தேம்ஸ் நதியிலும், வெனீஸ் நகரத்திலும் இருப்பது போல் படகுகள் விடுவேன்! [ஆசையே அலை போலே...]


இதுவும் ஒரு புராதானச் சின்னம் தானோ?உயர் நீதி மன்றத்தின் தலைவேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்று நினைக்கிறேன்! ப்ரவீன் ராஜின் இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்ட குத்தியது யாரோ?


மறுபடியும் தலை...வழிகாட்டி [இதை அன்னாந்து பார்க்க யாராவது வழி காட்ட வேண்டும்!!]


என்ன செய்வது? வறுமைக்கு என்றுமே வயதாவதில்லை :-(

ஒரு மாதமாக அம்மா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! வாஷிங் மெஷின் லீக் ஆகிறதாம்! கிட்சனில் அதை வைத்திருப்பதால், சமையலறை எங்கும் தண்ணீராகி விடுகிறதாம்! ஒரு வழியாய் கஸ்டமர் கேருக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வருவதற்குள் சார் சரியா உங்க வீடு எங்க இருக்கு? என்று அங்கிருந்து ஒரு ஃபோன்! வலிக்காமல் கிள்ளி பார்த்துக் கொண்டு அவரை வீட்டுக்கு கூட்டி வந்து வாஷிங் மெஷினை சாய்த்து அடியில் டார்ச் அடித்து, எதோ கார்க்காம், பேரிங்காம் அதெல்லாம் போய் விட்டதாய் கண்டு பிடித்து அடுத்த வாரம் தகுந்த ஆட்களை கூட்டி வந்து சரி செய்வதாகவும், வாரண்டி எக்ஸ்டென்ஷன் என்ற பேரிலும் கிட்டத்தட்ட 3000 ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டுப் போய்விட்டார்!

கையாலயே தொவைச்சி போட்ருக்கலாம் போல இருக்கே....

இரண்டு மாத காலமாக அப்பா சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்! இனிமேல் கேஸ் வாங்க வேண்டுமென்றால் ரேஷன் கார்டு வேண்டுமாம்! இல்லையென்றால் கேஸ் சப்ளை அம்பேல்...அப்பாவின் பேரில் கேஸ் இருக்கிறது! அவருடைய ரேஷன் கார்டை மதுரையிலிருந்து மாற்றி இங்கே கொண்டு வர வேண்டும்? தமிழ்நாட்டில் ஒரு நகரத்திலிருந்து ரேஷன் கார்டை இன்னொரு நகரத்திற்கு மாற்றுவது என்ன அவ்வளவு சுலபமான காரியமா? சரி என் பேரில் புதிதாய் வாங்கலாம் என்றால் [அது மட்டும் என்ன சுலபமா?] திருமணம் ஆகாமல் ரேஷன் கார்டு கொடுக்க மாட்டார்களே என்கிறார்கள்! அப்படியா? என்னை மாதிரி எத்தனை பேர் ஊர் விட்டு ஊர் வந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அத்தனை பேருக்கும் திடீரென்று கேஸ் தீர்வதற்குள் ரேஷன் கார்டு வாங்கி விட முடியுமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?

படித்த பெண்களும் அடுப்பூதும் நிலை வெகு தூரமில்லை!

இரண்டு மாதங்கள் ஆகின்றன புது வீட்டுக்கு குடி வந்து...ஃப்ளாட்டில் எல்லோருடைய மீட்டரும் சமத்தாய் ஓடுகிறது! நீங்கள் இந்த வலைப்பதிவின் சீறிய வாசகர் என்றால் உங்களுக்கே புரிந்திருக்கும்! என் மீட்டர் ஓடவில்லை! [அது தானே லாஜிக்கு!] கழட்டிக் கொண்டு போன மின்சார வாரியம் அப்படி என்ன கழட்டுகிறார்களோ தெரியவில்லை...இன்னும் புது மீட்டர் வந்தபாடில்லை! சரி சனிக்கிழமை போய் தான் கேட்டுப் பார்ப்போமே என்று கிளம்பி போனால், A. E. இன்னைக்கு வர மாட்டார் சார்! நீங்க திங்க கிழமை காலையில பத்து மணிக்கு மேல வந்து பாருங்க! அதுக்கு நான் அசமஞ்சமாய், நான் ஆபிஸ் போகனுமே!, அதற்கு அவர், அதுக்கு நான் என்ன பண்ணட்டும்? திங்கள் கிழமை வந்து பாருங்க! அவ்வளவு தான்!!

மாதவன் சார், அந்த கிரிக்கெட் பேட்டை கொஞ்சம் கொடுங்க இப்படி...

என் கணினி எப்படி வேலை செய்யும் என்று உங்களுக்கே தெரியும்! தெரியாதவர்கள் இங்கே பார்க்க...இத்தனை நாட்கள் CD DRIVE வேலை செய்யவில்லை! சரி அது பழகிடும் என்று நான் விட்டு விட்டேன்! இப்போது மானிட்டரில் நாம் பொத்தான் அமுக்கினால் வரும் ப்ரைட், கான்ட்ராஸ்ட் மெனுக்கள் என்னை நினைத்ததோ, நிரந்தரமாய் மானிட்டரிலேயே தங்கி விட்டன! அதை ஒரு ஓரத்தில் நகட்டவா முடிகிறது? சர்வ லட்சணமாய் நட்ட நடு சென்டரில் ஜம்மென்று அதுவாக கான்ட்ராஸ்டையும், ப்ரைட்னஸையும் கூட்டியும் குறைத்துக் கொண்டும் இருக்கிறது!

நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?

ம்ம்ம்ம்ம்........எதையோ சொல்ல மறந்துட்டேன்....

அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ரொம்ப முக்கியம்! அட போங்கப்பா...