காலம் மறுபடியும் தன் கடமையை சரியாய் செய்திருக்கிறது! நம்பியாரிடம் என்றுமே தோற்காத எம்.ஜி.ஆரே மரணத்திடம் தோற்ற போது, மரணத்திற்கு நம்பியார் எம்மாத்திரம்? சினிமாவில் ஒழுக்கமான மனிதர்கள் குறைவு! பணம் இருந்தாலே மனம் கொஞ்சம் ஆட்டம் போடத் தான் செய்யும், அதோடு புகழும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்! அத்தகைய கூட்டத்தில் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் தேக ஆரோக்கியத்தோடு 89 வயதில் மதியம் உணவருந்தி விட்டு, தூக்கத்திலேயே நிரந்தர துயிலடைவது எல்லோருக்கும் சாத்தியம் அன்று! மிஸ்டர். நம்பியார் டிசேர்வ்ஸ் இட்!

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களைப் பற்றி நாம் நினைக்கும் அளவிற்கு வி.எஸ். ராகவனைப் பற்றியோ, சுந்தரிபாயைப் பற்றியோ, பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றியோ நாம் அதிகம் நினைப்பதில்லை! அப்படிச் சிறிது நேரம் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் இறந்து போக வேண்டியிருக்கிறது! இப்படி ஒரு தருணத்தில் நம்பியாரைப் பற்றியும் அவர் படங்களைப் பற்றியும் அவரின் நடிப்பைப் பற்றியும் நான் எண்ணிப் பார்க்கும் போது எந்த ஒரு நடிகருக்கும் அவர் சளைத்தவிரில்லை என்பது விளங்குகிறது! எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதும் போது நம்பியார் தன் தோல்வியையும், தன் கையாலாகத தனத்தையும், அதனால் உண்டாகும் ஆத்திரத்தையும், அப்படி எத்தனையோ வித உணர்ச்சிகளை அவர் முக பாவத்தில் கொண்டு வரும் நேர்த்தியை எம்.ஜி.ஆர் ஓடிச் சென்று கட்டிப் போட்டிருக்கும் தன் தாயை விடுவித்து அம்மா என்று ஆரத் தழுவி கொஞ்சும் போது நாம் அதை கவனிக்கத் தவறி விட்டோம் என்றே தோன்றுகிறது!

அவர் முகம் வில்லனுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது என்று யாரும் எளிதாய் சொல்லி விட முடியாது! அவர் அமைதியாய் நல்லவன் போல நடிக்கும் போது அவரின் முகத்தில் தவழும் சாந்தம் கதாநாயகனின் முகத்தில் கூட இருந்ததில்லை! மிஸ்ஸியம்மாவில் அவர் சாவித்ரியை மணக்கத் துடிக்கும் துடிப்பையும், அதற்கு அவர் படும் பாடுகளையும் பார்த்து நான் வாய் விட்டுச் சிரித்து ரசித்திருக்கிறேன்! அத்தனை சாந்தமான முகத்தில் வாயை கோணிக் கொண்டு, கையைப் பிசைந்து கொண்டு தாடைக்கு கீழே ஒரு 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சம் பட்டதும் எங்கிருந்து தான் அத்தனை குரூரம் வருமோ என்று ஆச்சரியமாக இருக்கிறது... "மணிமாறா, மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று அத்தனை கம்பீரமாக முழங்கும் நம்பியாரிடம், எம்.ஜி.ஆர் அமைதியாக, மிருதுவான குரலில் சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்பார்! எம்.ஜி.ஆரை மக்கள் தெய்வமாய் வணங்குவதற்கு நம்பியாரின் பெரும் பங்கு இருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை!

நம்பியாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மூளையில் ஒரு ஓரத்தில் ஒலிக்கிறது "டேய் மாயாண்டி" என்ற ஒரு குரூரக் குரல்! நம்பியாரின் நினைவு இருக்கும் வரை அந்த மாயாண்டிகளும், காட்டு பங்களாக்களும் வாழ்வாங்கு வாழும்!

சட்டம் ஒரு இருட்டறை...
சட்டக் கல்லூரி ஒரு முரட்டறை!

இளகிய மனம் படைத்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் மீறி நேற்று அந்த நியுஸ் சேனலில் அந்தக் காட்சியை பார்த்து விட்டேன்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் இரு பிரிவினருக்கு நேற்று நடந்த அடிதடி காட்சி அது! ஒரு கூட்டம் கையில் பெரிய தடியுடனும், கத்தியுடனும் ஒரு மாணவனை சகட்டு மேனிக்கு புரட்டி எடுக்கிறது, அதை தடுக்க கையில் கத்தியோ, உருட்டுக் கட்டையோ சரியாய் நினைவில்லை கொண்டு அவனை காப்பாற்ற முற்படும் இன்னொரு மாணவனின் மேல் வெகு ஆக்ரோஷமாய் பாய்கிறது அந்தக் கூட்டம்! அவனை சராமாரியாய் தாக்கியதில் அவன் மயங்கி வீழ்ந்தும் செத்த பாம்பை அடிப்பதைப் போல் கூட்டத்திலிருந்து ஒவ்வொருவனாய் வந்து சகட்டு மேனிக்கு உடலெங்கும் அத்தனை பெரிய தடியால் தாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்! அவன் கதை முடிந்து விட்டதை போல் இதை விட பரபரப்பாய் என்ன இருக்கிறது என்று ஏங்கும் காமெரா மெல்ல இடது பக்கம் திரும்புகிறது...அங்கு கூட்டமாய் நிற்கும் காவல் துறையினர் கஞ்சி போட்ட சட்டைக்குள் விரைப்பாய் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! பிறகு அந்தக் கல்லூரியின் முதல்வர் சற்று விளக்கம் கொடுக்கிறார். பின்னால் பயந்தபடி நிற்கும் காவல் துறை அதிகாரி ஒருவர் நாங்கள் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்கிறார்!

மனிதன் உணர்ச்சிப் பெருக்கால் செய்யும் தவறுகளை தண்டிக்கவும், அவனை திருத்தி நல்வழி செலுத்தவும் தான் நாட்டில் இத்தனை சட்டங்கள், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள். நாளை சட்டத்தைக் காக்கப் போகும் இவர்களாலேயே தங்கள் உணர்ச்சிகளை அடக்க முடியாத போது இவர்கள் வாதாடி எந்த நிரபராதியை காப்பாற்ற முடியும்? எந்த குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்? மாணவர்களை கூட கட்டுப்படுத்த முடியாத காவல் துறையால் நாட்டில் நடக்கும் குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இத்தனை கேள்விகள் மனதில் ஓட, அந்தப் பையன் பிழைக்கனுமே என்று நினைத்துக் கொண்டே, என் கையாலாகத தனத்தை நினைத்து வருத்தத்துடனும், எரிச்சலுடனும் என்ன செய்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? வேறு என்ன, என்னால் முடிந்தது...சேனலை மாற்றினேன்! வடிவேலும் விவேக்கும் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார்கள்!

பின்குறிப்பு: ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பிரகடனப் பிரதிநிதி என்று ஆகி விட்ட நிலையில் இந்தக் காட்சியை பதிவு செய்த அந்த தொலைக்காட்சியைக் கூட எந்த அளவுக்கு நம்புவது என்று எனக்குப் புரியவில்லை! ஆமா, அந்த பையன் பொழச்சுப்பான்ல?