பாண்டி அந்த போலீஸ் ஸ்டேஷனையே வைத்த கண் வாங்காமல் ஒரு பீலிங்கோடு பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கேஸை கூட உருப்படியா பிடிக்காததால் வேலைய விட்டே தூக்கிட்டாங்க! அதே ஸ்டேஷனில் அவர் ராஜ நடை போட்டது அவர் கண் முன் விரிகிறது...

டக் டக் என்று கம்பீரமான ஒரு பூட்ஸ் சத்தம் கேட்கிறது...ஒரு கருப்பு கூளிங் கிளாஸில் ஸ்டேஷனுக்குள் நுழைகிறார். வாசல் படி
தடுக்கி கீழே விழுகிறார்.

பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] யு, ஸ்டுப்பிட் அண்ட் நான்சன்ஸ் ஆல்சோ...ஸ்டேஷனை சுத்தமா மெயிண்டைன் பண்ண வேணாம்?
இருளடைஞ்சி போயிருக்கு! கண்ணே தெரியலையே...
கான்: சார் நீங்க கூளிங் க்ளாஸை கழட்டினா...
பாண்டி: ஓ, மை சீ...[கழட்டிக்கொண்டே] ஆல் ரைட் ஆல் ரைட்...[வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது!]
கான்: சார், இவர் தான் நம்ம ஸ்டேஷன்ல புதுசா சேந்துருக்குற கான்ஸ்டபிள்..பேரு சுப்பையா சார்!பாண்டி: சுப்பையாவோ, குப்பைய்யாவோ, நான் கடமை கண்ணியம் காக்கிச்சட்டைன்னு வாழ்றவன்...எனக்கு கடமை தான் முக்கியம்!
சுப்: சார் உங்களைப் பத்தி எனக்கு நெறைய டவுட் இருக்கு சார்..கொஞ்சம் க்ளியர் பண்றீங்களா...
பாண்டி: கோ கோ...[சுப்பையா போகிறார், அவரை அழைத்து...]கேளுன்னு இங்கிலீஷ்ல சொன்னேன்..இங்கிலீஷ் தெரியுமா?
[சுப் முறைக்கிறார். பாண்டி முழிக்கிறார்!]
சுப்: அது கோ அஹெட்டு...
பாண்டி: [மனதுக்குள்] ஆஹா, நம்மகிட்ட வர்றவங்க மட்டும் டான்பாஸ்கோ ஸ்கூல்ல படிச்ச மாதிரி டான் டான்னு இங்கிலீஷ் பேசுறாங்களே...ஒரு வேளை என்கிட்ட அனுப்புறதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல ட்ரயின் பண்ணி அனுப்புறாங்களோ?
சுப்: சார்....உங்க நடை உடை தோரணை எல்லாம் பாக்கும்போது ஒரே மிரட்டலா இருக்கு..ஆனா நீங்க ஏன் சார் இந்த சிரிப்பு போலீஸ் மாதிரி சின்னதா மீசை வச்சுருக்கீங்க...
பாண்டி: [சிரிப்பு போலீஸா, இங்கேயும் ஆரம்பிச்சிட்டாங்களா...]குட் கொஸ்டீன்! நானும் ஒரு காலத்துல வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி தான் மீசை வச்சிருந்தேன்! ஆனா ஒரு சங்கிலித் திருடனை துரத்திப் புடிக்கும் போது நான் ஒரு எடத்துல எம்பிக் குதிச்சதுல ஒரு பக்கத்து மீசை என் கண்ணையே குத்திருச்சு! அதனால அன்னைக்கு என்னால அந்தத் திருடனை புடிக்க முடியலை...என் மீசையாலயே என்னோட காக்கிச்சட்டைக்கு களங்கம் வரனுமான்னு யோசிச்சேன்! பாக்க சிரிப்புப் போலீஸா இருந்தாலும், உள்ளே
நெருப்பு போலிஸா இருப்போம்னு முடிவு பண்ணேன்! வெளியே நான் சாப்ளீனா இருந்தாலும் எனக்கு உள்ள ஒரு ஹிட்லர் மல்லாக்கப் படுத்து தூங்கிகிட்டு இருக்கான்றதை நீ மறந்துராதே...
சுப்: சூப்பர் சார்...வெளியே சிரிப்பு போலீஸ்; உள்ளே நெருப்பு போலீஸ்! அள்ளிட்டீங்க சார்...
பாண்டி: யோவ், இது என்ன பெருமாள் கோயிலா அள்றதுக்கு, நெக்ஸ்ட் கொஸ்டீனை ஐ சே!
சுப்: சார் இதுவரைக்கும் நான் வேலை பாத்த ஸ்டேஷன்ல எல்லாம் ரவுடிங்களுக்கு தான் ரவுடி ரங்கன், செயின் ஜெயபால், சைக்கிள் சூசை, ஜேப்படி ஜெகதீஸ்னு பேரு இருக்கும். உங்களுக்கு ஏன் சார் டூமில் பாண்டின்னு பேர் வந்தது...
பாண்டி: கம் டு த பாயிண்ட்! [மனதுக்குள்: எதுக்கு வம்பு தமிழ்லையே பேசுவோம்!] நான் நெனச்ச கேள்விக்கு வந்துட்டே...சொல்றேன்
கேளு...அது 1999ம் வருஷம். அப்போ நான் ஏட்டா இருந்தேன்...
சுப்: அப்பவுமா?
பாண்டி: [முறைத்து விட்டு] காமன் சென்ஸ்! கதைய கேளு மேன். எங்களுக்கு ஒரு பயங்கர கொள்ளைக் கூட்டத்தைப் பத்தின துப்பு கெடச்சது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் பேர் போன என்னை நம்பி ஒரே ஒரு கான்ஸ்டபிளோட அந்தப் பெரிய கூட்டத்தை பிடிக்க அனுப்சாங்க! அவங்க எல்லாரும் அந்த பாழடஞ்ச கட்டடத்துல இருந்தாங்க...நாங்க ரெண்டு பேரும் அந்த இடத்தை சுத்தி வளைச்சுட்டோம்!
சுப்: ரெண்டு பேர்.....! சுத்தி...அப்புறம்...

[காட்சி விரிகிறது]

பாண்டி: [மைக்கை எடுத்து] ஹாய் ப்ரண்ட்ஸ்! [ஹா ஹா...சற்று கர்ஜித்து விட்டு] நீங்க யாரும் எங்க இரண்டு பேர் கிட்ட இருந்து தப்ப முடியாது. உங்களை சுத்தி வளைச்சுட்டோம்! ஏட்டுப் பாண்டியா கொக்கா! [ஹா ஹா] தப்பிக்க நெனைச்சா என் துப்பாக்கி இரையாயிடுவீங்க...[துப்பாக்கியை எடுத்து வானில் சுடுகிறார். அதில் தோட்டாவே இல்லையென்று அப்போது தான் தெரிகிறது!]

[இண்டெர் கட்]

சுப்: ஐய்யயோ, அப்புறம் என்ன பண்ணீங்க...பாண்டி: இதுக்கு முன்னாடி என் வீரத்தை பாத்தே, இங்கே என் விவேகத்தை பார்...

[மறுபடியும் காட்சி]

கான்1: என்ன சார், தோட்டா இல்லையா...
பாண்டி: அதான் எனக்கு குழப்பமா இருக்கு!
கான்1: இப்போ எப்படி சார் அத்தன பேரையும் புடிக்கிறது?
பாண்டி: நீ ஒன்னும் கவலைப்படாதே..இப்போ பார்!
[உள்ளேயிருந்து ஒருவன், என்னங்க ஏட்டு துப்பாக்கி சத்தமே வர்ல...]
பாண்டி: இப்போ கேளுங்கடா...ஹா ஹா... டுமீல் டுமீல்...டுமீல் டுமீல்...[வாயால் "டுமீல்" "டுமீல்" என்று பாண்டி கத்துகிறார்]
[ஒரே நிசப்தம்!]
பாண்டி: என்னங்கடா சத்தத்தையே காணோம்! எல்லாம் பயத்துல ஒன்னு, ரெண்டுன்னு போயிட்டீங்களா...
[உள்ளேயிருந்த கொள்ளைக் கூட்டம் வெளியே வருகிறது]
பாண்டி: [கான்ஸ்டபிளைப் பார்த்து] பாத்தியா அத்தனை பேரும் சரண்டர்...ஹா ஹா..
தலைவன்: ஆமா, எங்கே இன்னொரு தடவை சுடுங்க..
பாண்டி: [பழக்க தோஷத்தில் டுமீல் டுமீல் என்று சத்தம் போட]
தலைவன்: இவ்வளவு நாள் காக்கிச்சட்டையோட வீரத்தை தான் பாத்துருக்கேன், இன்னைக்கு தான் அதோட அறிவுக் கொழுந்தை
பாக்குறேன்!
[பாண்டி கர்வமாய் கான்ஸ்டபிளை பார்க்கிறார்]
தூத் தேரி...திருடன் போலிஸ் வெளையாட்றவனை எல்லாம் போலிஸ்
ஆக்கிட்டானுங்க! உன் கைல பிடிபட்றதுக்கு நாண்டுட்டு சாவலாம்டா....தூ! துப்பாக்கியில தோட்டா இல்லையாம், அதனால இவர் டுமீல் டுமீல்னு சவுண்ட் விடுவாராம், அதை கேட்டு நாங்க ஒன்னுக்கும், ரெண்டுக்கும் போயிடுவோமாம்! எங்களை இவ்வளவு கேவலப்படுத்திட்டியேடா...உன்னை....[பாண்டிக்கு தரும அடி விழுகிறது]
பாண்டி: [முடிந்ததும்...மனதுக்குள்] ஆரம்பிக்கும்போது நல்லா தான் ஆரம்பிக்கிறாங்க...முடிக்கும் போது தான்...நாம கொஞ்சம் ஓவரா
தான் போயிட்டோமோ?

[காட்சி முடிகிறது]

சுப்: தூ...
பாண்டி: என்ன நீயும் துப்புற?
சுப்: இதெல்லாம் ஒரு கதை...இதுக்கு ஒரு ப்ளாஸ் பேக் வேற...
பாண்டி: [மனதுக்குள்] மொதல்ல பேர் காரணத்துக்கு நல்ல ஒரு கதையா டெவலப் பண்ணனும்! ஆளாளுக்கு துப்புறாங்களே...
வலைபதியாததற்கு அலுவலகத்தில் வேலை என்று இப்போது சாக்கும் சொல்ல முடியாது! ப்ராஜக்ட் முடிந்து விட்டதால், போய் எங்காவது ஒழி என்று இரண்டு வாரம் லீவு கொடுத்து அனுப்பி விட்டார்கள்! சும்மா இருப்பதே சுகம் என்று வீட்டில் தான் இருக்கிறேன்! ஆனாலும் ஒரு வாரம் எப்படி போனதென்றே தெரியவில்லை!!

முதல் நாள் முழுவதும் வீட்டில் இருந்தேன் என்று நினைக்கிறேன்! கொஞ்சம் பயம் வந்து விட்டது. என்னடா அலுவலகத்தில், நாங்கள்ளாம் எப்படியெல்லாம் கோட் அடிச்சோம் தெரியுமா என்று தாம் தூம் என்று குதித்து லீவு வாங்கினோமே, இந்த ஒரு நாளுக்கே பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறதே என்று பகீரென்றது! சரி வீட்டில் இருக்கக் கூடாது, எங்காவது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஞானம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிட்டது!

அந்த ஞானத்தின் விளைவாக என் நண்பன் ஒருவன் செங்குன்றத்தை தாண்டி ஒரு கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தால் சீக்கிரம் திருமண பாக்கியம் கிட்டுவதோடு வீடு, மனை வாங்கும் சுப காரியங்களும் நடைபெறும் என்று சொன்னான்!! அடேய் நான் ஆல்ரெடி வீடு வாங்கியாச்சே அது கைய விட்டு போகாதுல்ல என்று அப்பாவியாய் கேட்ட என்னை பொருட்படுத்தாது அந்தக் கோயிலுக்கு கூட்டிப் போனான்! போகும் வழியெல்லாம் என் சிந்தனைகள் இங்கு சில பத்திகளாக...

அவன் சொன்ன கோயில் செங்குன்றத்தை தாண்டி கொல்கத்தா ஹைவேயிலிருந்து சிறுவாபுரி என்ற இடத்தில் ஒரு டீ கடை சந்தில் திரும்பி வயல் வரப்புகளை கடந்து போனால் வருகிறது. அங்கு சீண்டுவாரேயில்லாமல் அப்பாவியாய் ஒரு முருகன் காட்சியளிக்கிறார்! சரி சிறுவாபுரியின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த டீ கடையில் வேலை பார்க்கும் சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து அந்தக் கோயிலைப் பற்றி இப்படி ஒரு கதை கட்டி விட்டிருப்பார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்! நான் போய் இறங்கியதும் என் நண்பர்களை முறைத்து சொன்னது, "நான் ஐ பாட் வச்சிருந்ததாலே நீங்க தப்பிச்சீங்க!!" உடனே என் நண்பன் நீ தான் சாமி கும்பிட மாட்டியே ஹெல்மெட்டை வச்சுக்க என்றான்! எனக்கு அப்போ தான் வெளங்கிச்சு இதுக்கு தான் நம்மள கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு...ஹைய்யோ...ஹைய்யோ!!

அது ஒரு சின்ன கோயில் தான், சுற்றுலா துறையினரின் [டீ கடை பசங்க] புத்திசாலிதனத்தால் கோயிலை புதுப்பிக்கும் அளவிற்கு பொருள் சேர்ந்திருக்கிறது! பாவம் முருகன் வழக்கம் போல் குபு குபுவென்று கொதிக்க கொதிக்க உஷ்ணத்தில் நிற்கிறார். அய்யர் சற்றே வெளியில் வந்து பக்தர்களுக்கு விபூதி கொடுக்கும் இடத்திற்கு டைல்ஸ் ஒட்டி ஸ்ப்ளிட் ஏசி எல்லாம் பொருத்தியிருப்பது கொஞ்சம் ஓவர்! என் நண்பன் முருகனிடம் உருகி வேண்டிக் கொண்டிருந்தான்! போதும் வாடா, ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் ஆயிட போகுது என்றேன்...அதற்கு அவன், இருடா, ஒன்னுக்கு ரெண்டு வீடா கெடச்சுட்டா என்றான்! அடக் கடவுளே....

அப்போது மணி மாலை ஒரு ஆறு இருக்கும். அந்த நேரத்தில் கூட கோயிலில் எங்கள் மூவருடன், அந்தக் கோயில் அய்யர், இன்னும் சிலர், அப்புறம் ரொம்ப கொசு...அவ்வளவு தான்! என் நண்பன் ஒருவனுக்காகவே அய்யர் ஓடி ஓடி எல்லா கடவுளுக்கும் லைட் போட்டு தீபாராதனை காட்டி...என்ன ஒரு ஸ்பெஷல் கவனிப்பு!! அங்கு சுற்றுலா துறையின் ஒரு அதிகாரி நான்கு கற்களை பொறுக்கி வைத்துக் கொண்டு சார், வீடு கட்டுங்க சார் நெனச்சது நடக்கும் என்றார்! எனக்கு தூக்கி வாரிப் போட்டது...ஓஹோ சிச்சுவேஷனை மெயின்டெய்ன் பண்றீங்களா..ஆமா சார் இங்கே கன்ஷ்ட்ரக்ஷன் காஸ்ட் என்ன போகுதுன்னு ஒன்னும் எஸ்கலேஷன் ஆகலையா என்று கேட்டிருக்கலாம்! சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்! விட்டுட்டேன்!!

இதையெல்லாம் விட ஒரு கொடுமையை எல்லா கோயில்களிலும் நான் பார்ப்பது; இருபது ரூபாய் பல்பை வாங்கி மாட்டி விட்டு அதற்கு அவன் முழு முகவரியோட உபயம் எழுதுவது!! இந்தக் கோயிலும் அதற்கு விதி விலக்கல்ல! முருகன் முகத்தைத் தவிர அனைத்திலும் உபயம் இருந்தது! ஒரு வேளை ப்ரஹாரம் இருட்டாக இருப்பதால் அங்கு இருக்கும் உபயம் தெரியவில்லையோ என்னமோ! ஒரு அழகான முருகன் படத்தை அய்யர் கொடுத்தார், நன்றாக இருக்கிறதே என்று நம்பி வாங்கிப் பார்த்தால் முக்கால் படம் முருகனுக்கு, மீதி கால் படம் விளம்பரத்திற்கு!!

துக்கம் வரும் சமயத்தில் ஆறுதலாய் இருப்பதற்காக கடவுள் என்ற பாத்திரத்தை மனிதன் படைத்தான்! கஷ்டம் வரும்போதெல்லாம் அதோ கடவுள் வருவார், அவர் நமக்கு எல்லா செல்வங்களும் அள்ளித் தருவார், நம் கஷ்டங்களை எல்லாம் போக்குவார்...இந்த ஜென்மம் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்வு செழிக்கும் என்று நம்பி காலம் தள்ளினான்! இன்று அந்த நம்பிக்கையும் நீர்த்துப் போய் எத்தனை போலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! கடவுள் கடவுள் என்று இல்லாத கடவுளின் பெயரை சொல்லி இருக்கும் சக மனிதனை ஏமாற்றிப் பிழைப்பது என்ன பிழைப்பு? திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி..இப்படியே போனால் அந்தக் கோயிலுக்கு போ, வீட்டு குழாயில் தண்ணீ வரும், அந்தக் கோயிலுக்குப் போ வீட்ல கரண்டே போகாது என்று கூட சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!!

என் நண்பர்களை போல் பலர் இருக்கிறார்கள்! இத்தகைய விஷயங்களில் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை!! ஆனாலும் அவர்கள் அந்த மூட நம்பிக்கைச் சேற்றுக்குள் சுகமாகவே மூழ்கிக் கிடக்கிறார்கள்! என்னுடன் தானே படித்தார்கள் என்று அவர்களின் கல்வியையும், பகுத்தறிவையும் அதே சேற்றில் என் கையால் துழாவுகிறேன்! துழாவிக் கொண்டேயிருக்கிறேன்!!