சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் படங்களாய் பார்த்தேன். தபாங் 2 [ஹிந்தி], கடல், ஸ்பெஷல் சப்பீஸ் [ஹிந்தி].

தபாங் ஒன்றாம் பாகம் நாற்பது ரூபாய் கொடுத்து தண்டத்துக்கு ஒரு சீடி வாங்கி பார்த்தேன். கேவலமான பிரிண்ட். படம் சரியாய் புரியவேயில்லை. இந்த முறை அந்த தப்பை செய்யக் கூடாது என்று, ஆன்லைனில் டிவிடி பிரிண்ட் வந்ததும் தரவிறக்கினேன்!

பரவாயில்லை. நன்றாகவே இருந்தது. எனக்கு, ஒன்று, இரண்டு என்று பாயின்ட் பாயின்ட்டாய் பேசுபவர்களை பார்த்தால் பொறாமையாய் இருக்கும்! ஏன் என்றால் எனக்கு அப்படி பேச வராது. இந்த படத்தை பற்றி பேசும்போது அப்படி பேசலாம் என்று நினைக்கிறேன்!  கூடக் குறைய இருக்கும், அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். படத்தில் மூன்றே மூன்று விஷயங்கள் தான் சிறப்பு! ஒன்று, சல்மான் கான்! இரண்டு, சல்மான் கான்!! மூன்று, சல்மான் கான்!!![நான் தான் சொன்னேனே...]

எல்லாமே சல்மான் கான் தான் என்றால் அது என்ன மூன்று கணக்கு என்று கேட்டீர்கள் என்றால், மூன்றோடு முடித்தால்  தான் எனக்கும் எழுத எளிது, படிக்கும் உங்களுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும்!!

சல்மான் கான்! மனிதர் என்னமாய் கலக்குகிறார். எதை நினைத்து, இப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினார்களோ தெரியவில்லை, சல்மான் தவிர வேறு யாராவது இதை செய்ய முடியுமா என்று சந்தேகமாகத் தான் இருக்கிறது. இந்தக் கதாப்பாத்திரம் அவரின் உண்மையான குணநலன்களுடன் சற்று பொருந்திப் போவது காரணமாய் இருக்கலாம். மனதில் பட்டதை பேசுவது, எல்லாவற்றையும் கிண்டலடிப்பது மற்றும் அவரின் carefree attitude எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது தான் சுல்புல் பாண்டே கதாப்பாத்திரம்!

ரணகளமான போலீஸ். அடி ஒவ்வொன்றும் காட்டு அடி. அதே சமயம் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாத அதிரடி! "குலாப்ஜாமூன் சே யாத் ஆயா...", "கமால் கர்தே ஹோ யார்" போன்று ஆங்காங்கே நச் பஞ்ச்! அட்டகாசம். கவனிக்க நான் படத்தை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வழக்கமான திருடன் போலீஸ் கதை தான். ஒரு பெரிய தாதா [தட்டச்சு பிழையில் முதலில் தாத்தா என்று இருந்தது...ஹிஹி!] இருப்பான், அவனை இவன் சீண்டுவான், இவனை அவன் சீண்டுவான்! கடைசியில் கதாநாயகன் வெற்றி வாகை சூடுவான். இதுவும் அப்படியே. கதையில் ஒரு மண்ணும் இல்லை. வழக்கமான இந்த போலீஸ் திருடன் கதையை கூட சுவாரஸ்யமாய் எடுக்கலாம். எடுத்துக் காட்டாக சாமி மாதிரி அபிமன்யு மாதிரி...இந்தப் படத்தில் அந்த சுவாரஸ்யம் கூட இல்லை.  தேவையில்லை. சல்மான் இருக்கிறாரே என்று நினைத்து விட்டார்கள். அதை அவர் காப்பற்றியும் இருப்பது தனிச் சிறப்பு!

பயங்கரமான சண்டையின் நடுவே, அடியாட்களின் செல்போனில் குத்து பாட்டு ஒலிக்க, உடனே தன்னை மறந்து ஆடுவது, அம்மாவின் போனா என்று கேட்டு, ப்ரணாம் மாஜி  என்று அடியாட்களின் அம்மாவுடன் பேசுவது, சொனாக்ஷியிடம் கொஞ்சுவது, அப்பாவிடமே அவரின் காதல் கதையை கேட்பது, அப்பாவுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு  பெண் குரலில் பேசி அவரை குழப்புவது, வில்லனை [பிரகாஷ்ராஜ்!] பார்த்து கொஞ்சம் கூட அசராமல் கலாய்ப்பது  என்று படம் நெடுக ஒரே கூத்து தான்.

"Madness of Salman Khan", nothing else.

 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடல்

மணிரத்னம் படம் என்றால், அவர், படத்துக்கு பெயர் வைப்பதில் தொடங்கி, அந்தப் பெயரின் எழுத்து எந்த வடிவத்தில் எழுதப் பட்டிருக்கும் [தளபதி என்ற எழுத்தை நான் அதே வடிவத்தில் நூறு முறை எழுதிப் பார்த்திருப்பேன்!], அது எந்த வண்ணத்தில் இருக்கும் [தளபதி - சிவப்பு, நாயகன் - சி த்ரு வெள்ளை, அலைபாயுதே - மஞ்சள்]  படத்தில் அந்த டைட்டில் எப்படி வரும், அதன் பின்னணி இசை எப்படி இருக்கும், படத்தின் ஒவ்வொரு ஸ்டில்லும், ஃ ப்ரேமும், பாடல்களும், பாடல் வரிகளும் என்று ஒன்று விடாமல் நான் ரசித்ததுண்டு. "கடல்" படம் தான் முதன் முதலாய் அத்தகைய எந்த சுவாரஸ்யமும் எனக்கு அளிக்காமல் இருந்த முதல் மணிரத்னம் படம். அதன் எழுத்து வடிவம், வண்ணம், படத்தில் ஸ்டில்ஸ் என்று ஒன்று கூட மனதில் ஒட்டவில்லை. படமும் அப்படித் தான்! பாதி படம் பார்த்து விட்டு படுத்தேன், மீதி கதை என்னவாகும் என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை!

இந்தப் படத்தைப் பற்றி சென்ற வாரமே நிறைய அலசி விட்டதால் என்று சன் டீவியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொல்வது போல், எல்லா பதிவர்களும் அலசி, பிழிந்து காயப்போட்டு விட்டதால் நான் அந்தத் தப்பை செய்யப் போவதில்லை.

படத்தில் அரவிந்த்சாமியின் உடல் மொழி சில இடங்களில் எனக்கு கமலின் உடல் மொழியுடன் ஒத்திருந்தது போலத் தோன்றியது. இந்தப் பாத்திரத்தை கமலும், சாத்தான் பாத்திரத்தை ரஜினியும் செய்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது! யாருக்காவது அப்படி தோன்றியதா?

அர்ஜுன் மீசை எடுத்தால் சின்ன பையன், மீசை வைத்தால்  பெரிய ஆள். ஜென்டில் மேன் காலத்திலிருந்து இதை செய்து கொண்டு இருக்கிறார். அலுக்கவில்லை தான்! மனிதர் உடம்பை அப்படி வைத்திருக்கிறார், கன்னம் தான் கிழடு தட்டி போயிருக்கிறது. [அப்படி பார்த்தால் அமீர்கான், அக்ஷய் குமார், சல்மானுக்கெல்லாம் வயதே ஆகவில்லை, சப்பாத்தி?!] இதில் அரவிந்த்சாமி பரவாயில்லை. முடி வைத்ததும் ஆள் பழைய பம்பாய் ஆள் போல் ஆகிவிட்டார்! அர்ஜுன் நன்றாய் இருந்த காலத்தை எல்லாம் விட்டு விட்டு, மணிக்கு இப்போது தான் அவரை கூப்பிட தோன்றி இருக்கிறது. நல்ல வேளை ரஜினி நன்றாய் இருக்கும்போதே ஒரு படம் எடுத்து விட்டார். [தளபதியில் தலைவர் என்னா அழகு!]

கெளதமின் உயரம், உடம்பு நன்றாய் இருக்கிறது. கொஞ்சம் சிரிக்கும் போது கார்த்திக் மாதிரி இருக்கிறது. நான் எல்லா பாவமும் பண்ணி இருக்கேன் என்று கையை சுழற்றும் போது சடுதியில் கார்த்திக் தோன்றி மறைந்தார்!  இருந்தும் கார்த்திக்கின் அழகு இல்லை. அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் என்ன அழகாகவா இருந்தார். போக போக சரியாயிரும். ஆக்கிருவாய்ங்க! நன்றாய் நடித்திருந்தாரா?

துளசி, கார்த்திகாவின் "zipped version" மாதிரி இருக்கிறார். கார்த்திகாவையே செய்து, கொஞ்சம் தலையில் தட்டி தட்டி செய்த மாதிரி...டிங், டிங் என்று தலையாட்டி பார்க்கும்போது கொஞ்சம் டெரராய் இருந்தார். தமிழ் சினிமாவை பொருத்தவரை கொஞ்சம் மறை கழண்ட மாதிரி இருந்தால், அது க்யூட்! கஷ்டம்...

பொன்வண்ணன் அருமையான நடிகர். ஏன் யாரும் உபயோகப்படுத்திக் கொள்வதில்லை என்று புரியவில்லை?

கலாராணியை வைத்து எனக்கு முழு நேர காமடி படம் எடுக்க ஆசை. அந்த அம்மா இனி அழதா இந்த பூமி தாங்காது சொல்லிட்டேன்!

ரஹ்மானுக்கு உலகத்தரத்தில் இசையமைக்க ஆசை இருந்தால், அதை ஆங்கில படங்களிலே அவர் செய்யலாம். அதற்கு அவருக்கு வழியும் இருக்கிறது, வாய்ப்பும் இருக்கிறது. மணப்பாடு கிராமத்தில் தருதலையாய் வளரும் ஒரு பிள்ளைக்கு பின்னணி இசையாய் "மூடி மூடி", "மூடி மூடி" என்று போடுவது எல்லாம் ஒட்டவே ஒட்டாத ஓவர்! பின்னணி இசை என்பது பாடல்களின் மெட்டை வாசிப்பது அல்ல என்று இவருக்கு யாராவது புரியவையுங்கள்!

ராஜீவ் மேனன் காமெரா படத்துல சூப்பர்னு சொன்னாங்க. நானும் தேடி தேடி பாத்தேன் எனக்கு கண்லயே பாடலையே...[குறும்பு!]

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ்பெஷல் சப்பீஸ்

"ஏக் காவ் மேன், ஏக் கிஸான் ரகுதாத்தா" என்ற அளவில் தான் உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றாலும் சரி, கமல் அடுத்து இந்த படத்தை தமிழாக்குவதற்கு முன் பார்த்து விடுங்கள். இந்த படத்தை பார்க்க இரண்டு காரணங்கள்...[மறுபடியும் நம்பரா!]

ஒன்று....

இதை பற்றி விரிவாய் கதையுடன் இன்னொரு பதிவு இடுகிறேன்.

 
பெருங்குளத்தூர் இறங்கியதும் ஒரு விழுப்புரம் பேருந்து கண்ணில் பட்டது. மதுராந்தகம் பைபாஸ்? என்ற கேள்விக்கு நடத்துனர் தலை ஆட்டியதும் வண்டியில் ஏறி வழக்கம் போல் ஜன்னல் இருக்கையை தேடினேன். ஓட்டுனர் இருக்கையின் பின் உள்ள இருக்கையில் ஒரே ஒரு பையன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அவன் பின்னால் உள்ள இருக்கை காலியாய் இருந்தது. ஒரு மணி நேரம் நிம்மதியாய் காற்று வங்கிக் கொண்டே போகலாம் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்தேன். முப்பத்தி இரண்டு ரூபாய் கொடுத்து சீட்டு வாங்கிக் கொண்டேன். பேருந்தும் நன்றாகவே இருந்தது.  பேருந்தில் கியர் பாக்ஸில் ஒரு சின்ன ப்ளேயர் ஒன்று இருந்தது. "ஹர ஓம் நமச்சிவாயம், ஹர ஓம் நமச்சிவாயம்" என்று எஸ்.பி.பி பக்தி பரவசமூட்டிக் கொண்டிருந்தார்! வண்டி கிளம்ப ஆயுத்தம் ஆனதும் ஒரு அப்பா தன் இரண்டு மகள்களுடன் பேருந்தில் ஏறினார். சுற்றி முற்றி பார்த்தவர் அந்த இரண்டு பெண்களையும் அந்த பையன் பக்கத்தில் உட்காரச் செய்தார்! [எப்படித் தான் கண்டு புடிக்கிறாங்களோ!] அவர் எதிர் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அந்தப் பையனிடம் இந்தப் பக்கம் உட்காந்துக்குறியா என்று கேட்டார். அவன் அசைந்து கொடுக்கவில்லை. சரி போகட்டும் என்று விட்டு விட்டார். நடத்துனர் வந்து சீட்டு கொடுத்துக் கொண்டே அவர்களை பார்த்தார், என்னை பார்த்தார். நீங்க கொஞ்சம் முன்னாடி வாங்க. சொல்லி முடிப்பதற்குள் நான் எழுந்து விட்டிருந்தேன்! நீங்க பின்னாடி போங்கம்மா என்று அவர்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்தார். [எப்படித் தான் கண்டு புடிக்கிறாங்களோ!] அந்தப் பையன் அருகில் நான் உட்கார்ந்து கொண்டேன். எஸ்.பி.பியின் குரல் ஒரு படி மேலே கேட்டது. சரி ஓட்டுனர் கண்ணாடி வழியாய் சாலையை பார்க்கலாம் என்று நானே என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். நடத்துனர் அந்த அப்பாவிடம், அப்புறம் அவன் சீண்டுவான், தொல்லை செய்வான்...யாரு கண்டா...என்ன சார் சொல்றீங்க? என்று மெல்ல வினவிக் கொண்டிருந்தார். அவரும் பெண்ணை பெற்றிருப்பார் போல் இருக்கிறது.

வண்டி புறப்பட்டது. கூட்டம் அதிகம் இல்லை. சீட்டு கொடுத்து விட்டு முன்னாள் உள்ள இருக்கையில் நடத்துனர் உட்கார்ந்து கொண்டார். வந்தவுடன் முதல் காரியமாக அந்த ப்ளேயரின் ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றினார். பஜனை நின்றது. சற்று நேரம் ஒன்றுமே கேட்கவில்லை. லேசாய் ஒரு சினுங்கல் கேட்டது. நம்ம ஜானகி தான். சினுங்கல் வலுத்தது. இது என்னடா பாட்டு என்று நாங்கள் யோசிக்கும் முன், டகுடகுடுன், பொன்மேனி...டகுடகுடுன், உருகுதே...டகுடகுடுன், என்னாசை..டகுடகுடுன், பெருகுதே என்று ஒரே ஆர்ப்பாட்டம்! சிலுக்கு அந்த கியர் பாக்ஸில் ஏறி ஆடுவது போல் எனக்கு கற்பனை ஓட ஆரம்பித்து விட்டது. எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரு பஜனையை நிறுத்தி விட்டு இன்னொன்றை ஆரம்பித்து விட்டாரே என்று! நடத்துனர், ஓட்டுனரை ஒரு பார்வை பார்த்தார்! இருவரும் சிரித்தார்கள். நல்ல வேலை பெண்கள் பின்னால் உட்கார்ந்தார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நடத்துனர் என்னையா, இருக்கட்டுமா என்று கேட்டார். ஓட்டுனர், விடு விடு..என்று சிரித்துக் கொண்டே வண்டி ஓட்டினார். இவ்வளவு நேரம் சாமி பாட்டு போட்டுட்டு இருந்தாங்க, இப்படி ஒரு பாட்டு போட்டாங்கன்னு நெனைக்க போறாங்க என்று நடத்துனர் சிரித்துக் கொண்டே அமர்ந்து கொண்டார். டகுடகுடுன் தொடர்ந்தது!!

அது ஜானகி ஹிட்ஸ் போலும்! எனக்கு சுசீலா, சித்ரா பிடித்த அளவுக்கு ஜானகியை பிடிப்பதில்லை [சில பாடல்களை தவிர]. வடநாட்டில் தள்ளாத வயது வந்தும் லதாவையே கட்டி அழுதது போல இங்கு ராஜா ஜானகியே கட்டி அழுதார் என்று தான் தோன்றுகிறது. சித்ராவை அறிமுகப்படுத்தி விட்டு ஏன் இந்த ஆள் ஜானகிக்கே எல்லாம் பாட்டும் கொடுத்தார் என்று தெரியவில்லை. கண்ணை மூடி கேட்டால், கிழவி பாடுவது போலவே இருக்கும்! கீச்சு கீச்சு என்று! அந்த பேருந்தோ ப்ரேக் போட்டாலே "கீ" என்று சத்தம் போட்டது. இதில் வெளியே வாகனங்களின் இரைச்சல். உள்ளே ஜானகியின் குரலுடன் சேர்ந்து ராஜா வேறு நூறு வயலின்களை கொண்டு என் இதயத்தை அறுத்துக் கொண்டிருந்தார். எனக்கு காது வலித்தது. பின் பக்கம் போய் விடலாம் என்றால், நடத்துனர் பார்த்து என்னை அங்கு உட்காரச் சொன்னார். அவர் என்ன நினைப்பாரோ என்று ஒரு தயக்கம். [இப்படி எல்லாம் உங்களுக்குத் தோன்றுமா?] சத்தத்தை கம்மி பண்ண சொன்னால் என்ன சொல்வாரோ என்று தயக்கம் வேறு. கடைசியில் பொறுமை இழந்து கேட்டு விட்டேன். அவருக்கும் அது தோன்றியது போலும். உடனே சத்தத்தை குறைத்து விட்டார்! அட கேட்டால் கிடைக்கத் தான் செய்கிறது! அப்பாடா...இனி வேடிக்கை பார்க்கலாம்.

ஜி.எஸ்.டி. ரோடு பயணம் அருமை. ஆறு மணி நேரத்தில் மதுரை சென்று விடலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நம் ஊர் அரசியல்வாதிகள் செய்த உருப்படியான ஒரு காரியம். அரசியல்வாதிகளை மனதுக்குள் பாராட்டி நிமிர்வதற்குள் அவர்களை திட்ட வேண்டியதாய் ஆகி விட்டது. நேற்று "அந்தக்" கட்சியின் தேர்தல் நிதி திரட்டும் கூட்டம் ஒன்று மதுராந்தகத்தில் நடந்தது. எங்கு நடந்தது? மதுராந்தகத்தில். மதுராந்தகம் எங்கு இருக்கிறது? செங்கல்பட்டு தாண்டி! சென்னையில் இருந்து எண்பது கி.மீ. நான் எங்கே இருக்கிறேன். வண்டலூர்! அங்கு தொடங்கிய அவர்களின் கட்டவுட், பேனர்கள் மதுராந்தகம் வரை தொடர்ந்தது. ஒவ்வொரு பத்து அடிக்கு ஒரு பேனர். சும்மா ஏப்ப சாப்ப பேனர் கிடையாது. என்ன போட்டோக்ராபி, என்ன போஸு...சினிமா நட்சத்திரங்கள் தோற்றார்கள் போங்கள்! ரஜினி, கமல், அஜித், விஜய் கூட இத்தனை போஸ் தந்திருக்க மாட்டார்கள். ஒரு நிமிஷம் ஒன்னுக்கு போயிட்டு வந்துர்றேன் என்பது போல் விரலை நீட்டுவதை எல்லாம் போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்கள்!  ஒரு பேனர் அதன் அளவு, நேர்த்தி தரம் வைத்து பார்த்தால் குறைந்தது ஐநூறு ரூபாய் தேறும்! பத்து அடிக்கு ஒரு பேனர். இதை மீறி ஆங்காங்கே கட்சிக் கொடிகள், விளக்குக் கம்பங்கள்....இன்ன பிற! என்பது கி.மீக்கு! கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..ஒரு நாள் கூத்துக்கு எத்தனை செலவு? எத்தனை நேர விரயம்? வீண் உழைப்பு? இதெல்லாம் யார் பணம்? 

வழி நெடுக! அசோகர் சாலையில் மரங்கள் நட்டார். இவர்கள் மாநாட்டுக்கு கொடிகள், கட்டவுட்டுகளை நடுகிறார்கள். இதற்கும் அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யச் செல்லவில்லை. அப்படிச் செல்லும்போது வைத்தாலே தப்பு, இவர்கள் கட்சியின் தேர்தல் நிதி திரட்ட சாலை வழியெங்கும் எங்கள் விடிவெள்ளியே, உதயமே, தமிழே, உடன்பிறப்பே...முடியலை...! இதிலும் இவர்கள் இப்போது ஆட்சியில் இல்லை. இப்போதே இந்த ஆட்டம்! இன்னும் இருந்தால்....அதனால் ஆட்சியில் இருக்கும்  கட்சிக்கு நான் வக்காளத்து வாங்கவில்லை. சென்ற மாதம் விமான நிலையம் திறக்க வந்த ஏவியேஷன் மினிஸ்டரை பற்றி ஒரு வார்த்தை இல்லை, அம்மாவுக்குத் தானே கட்டவுட்டுகள் கொடி பறந்தன. காவிரித்தாயே...கருணைக் கடலே, உயிரே....இப்படி விதம் விதமா யோசிச்சு எழுதவே சம்பளம் போட்டு ஆள் வச்சிருப்பாங்களோ?...கேட்டால், தலைவர்களா கேட்கிறார்கள்? தொண்டர்களின் அன்பில் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? அம்மா என்றால் எல்லோருக்கும் டெரர் தானே? இனிமேல் எனக்கு இப்படி எல்லாம் கட்டவுட்டுகள் வைக்கக் கூடாது என்று அவர்கள் கண்டிஷனாய் சொன்னால் அதை மீறி வைக்க யாருக்காவது திராணி இருக்கிறதா? வேடிக்கையான விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன். சில மாதங்களுக்கு முன், கவுன்சிலர்கள் மேல் வரும் புகாரை விசாரிக்க அம்மா ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அம்மாவின் வருகையை ஒட்டி அவருக்கு கட்டவுட் வைத்து வரவேற்றார்களாம் அவர்களின் தொண்டர்கள்!! தங்களை திட்ட வருவது கூட தெரியாமல், அதற்கும் கட்டவுட் வைத்து வரவேற்கிறார்களே என்று அம்மா பயங்கர கடுப்பாகி விட்டார்களாம் :-) இது எப்படி இருக்கு?   

வீரப்பா சொன்னது தான் ஞாபகம் வருகிறது. "நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!"


"விக்கி டோனார்" - விந்து தானம் செய்து சம்பாதிக்கும் ஒருவன். [தானத்துடன் சம்பாத்தியம் என்பது முரணாக இருக்கிறது :-)]திருமணத்திற்கு பின் அவன் மனைவிக்கு அந்த உண்மை தெரிந்ததால் அவன் திருமண வாழ்வில் ஏற்படும் விரிசல் தான் படம்.

இந்த படத்தை பற்றி சில காலமாய் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தேன். விந்து தானத்தின் நலனை சொல்லும் parallel cinema வாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படம் எல்லா பொழுது போக்கு அம்சங்களும் நிரம்பிய ஒரு feel good movie யாய் இருந்தது இன்ப அதிர்ச்சி. விக்கி [அன்ஷுமன்] ஒரு டெல்லி பஞ்சாபி. வீட்டில் அவன், அவன் அம்மா, அவன் பாட்டி இருக்கிறார்கள். பாட்டிக்கு விக்கி பயங்கர செல்லம். அவன் அம்மா ஒரு ப்யூட்டி பார்லர் நடத்துகிறாள். வழக்கமான சினிமா பாணியில் வேலை எதுவும் செய்யாமல் விக்கி வெட்டியாய் பொழுதை கழிக்கிறான். அவன் அம்மா அவனை திட்டிக் கொண்டே இருக்கிறாள், அவன் பாட்டி அவனை கொஞ்சிக் கொண்டே இருக்கிறாள்.

இதற்கிடையில் டாக்டர் சட்டா [அனு கப்பூர்] ஒரு infertility clinic ஒன்றை நடத்துகிறார். அதோடு sperm bankக்கும் வைத்திருக்கிறார். நல்ல விந்துவை சேமித்து அவருடைய பேஷண்டுகளுக்கு மகப்பேறு அளிக்கிறார். விந்து தானம் பற்றிய போதிய அறிவு இல்லாததால், நல்ல விந்து [quanity, quality & mobility] கிடைப்பது மிக அரிதாய் இருக்கிறது. இந்த காரணமாக அவருடைய கிளினிக் நொடித்துப் போகிறது. ஊரெல்லாம் சல்லடை போட்டு நல்ல விந்து கொண்டவனை தேடுகிறார். அவருடைய அனுபவத்தில், ஒருவனின் முகத்தை பார்த்ததும் அவனுடைய விந்து எப்படிப்பட்டது என்று தனக்குத் தெரிந்து விடும் என்று கூறுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விக்கியை சந்திக்கிறார். அவனுடைய சாதுர்யம் அவருக்கு பிடித்துப் போகவே, அவனை பற்றிய தகவலை சேகரிக்கிறார். அது திருப்தியாக இருக்கவே, அவனை பின் தொடர்கிறார். இதை அறிந்த விக்கி அவரிடம் எகிறவும், அவர் தன்  நிலைமையை சொல்கிறார். அவன் கொடுத்தால் அவனுக்கு பணம் தருவதாகவும் சொல்கிறார். விந்து தானம் என்பதை கேள்விப்பட்டதும், விக்கி விழுந்து விழுந்து சிரிக்கிறான். இதை போய் யாராவது விற்பார்களா என்று அவரை கேவலப்படுத்துகிறான். அவனுக்கு அதைப் பற்றி நினைக்கவே அசூசையாய் இருக்கிறது. தன்னை மறுமுறை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறான். தொடர்ந்த முயற்சியால் ஒரு வழியாய் விக்கி டாக்டரின் வழிக்கு வருகிறான். தனக்கு பணம் தேவைப்படுகிறது, உங்களை பார்த்தாலும் பாவமாய் இருக்கிறது, அதனால் தான் ஒரு முறை செய்கிறேன், இனிமேல் செய்ய மாட்டேன் என்று ஆரம்பிக்கிறான். அவனுடைய விந்துவை வாங்கி சோதித்ததில் நல்ல விந்துவின் எல்லா லட்சணங்களும் அதில் பொருந்தி இருப்பது தெரிகிறது. உடனே அவருடைய பேஷண்டுகளுக்கு அதை உபயோகித்து கருத்தரிக்க வைக்கிறார். வெகு நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கிறார்கள். விக்கி கடைசியில் டாக்டரின் வலையில் விழுகிறான். அவனுக்கும் இதனால் நல்ல வரும்படி வர ஆரம்பிக்கிறது. இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைக்கும் அதே நேரத்தில் நல்ல பணம் வருவதால் அந்த வேலையை தொடர்ந்து செய்கிறான். என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு கைவினை ஏற்றுமதி இறக்குமதி என்று பொய் சொல்கிறான்.

அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருக்கும்போது, தன் அம்மா அக்கவுண்ட் வைத்திருக்கும் பேங்கில் ஒரு பெண்ணை பார்க்கிறான். ஆஷிமா [யாமி கெளதம் - செமயாய் இருக்கிறார்!] , அவள் ஒரு பெங்காலி. அவள் மேல் கண்டதும் காதல் கொள்கிறான். அவளை பின் தொடர்கிறான். அவள் பிடி கொடுக்காமல் இருப்பதால், மனம் வருந்துகிறான். மன வருத்தத்தாலும், மன அழுத்தத்தாலும், விந்துவின் நல்ல பண்புகள் குறைந்து விடும் என்று டாக்டர் அஞ்சுகிறார். அவனை இந்த காதல் கருமத்தில் எல்லாம் விழாதே என்று எச்சரிக்கிறார். எப்போதும் இந்த மனிதர் விந்துவை பற்றியே பேசுவது அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது.

தொடர் முயற்சியின் பெயரால் ஒரு வழியாய் ஆஷிமாவை தன் வசியப்படுத்துகிறான். அந்த பெண் ஒரு நாள் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லி தான் ஒரு விவாகரத்தானவள் என்ற உண்மையை சொல்கிறாள். தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவளை ஏற்கிறான். இருவரின் பெற்றோருக்கும் இது பிடிக்கவே இல்லை. வழக்கம் போல், பேரனிடம் உள்ள அன்பினால் விக்கியின் பாட்டி மட்டுமே ஆதரிக்கிறாள். விக்கியின் அம்மா, தன் மருமகள் ஒரு பெங்காலியா, அவர்கள் எத்தனை அதிகாரம் வாய்த்தவர்கள், எப்போதும் மீனையே சாப்பிடுவார்கள் என்று பல வித கலாச்சார மாற்றங்கள் குறித்து கவலைப்படுகிறாள். அதே சமயத்தில் பெண்ணின் தகப்பனார், பஞ்சாபியினர் எப்போதும் பணம் செய்வதிலேயே கண்ணாய் இருப்பார்கள், எப்போதும் குடித்துக் கொண்டும், கல்யாணத்தில் குரங்கு போல பல்லே பல்லே என்று குதித்துக் கொண்டும் இருப்பார்களே என்று பயப்படுகிறார். ஒரு வழியாய் எல்லோரையும் சமாளித்து இருவரும் திருமணம் செய்கிறார்கள்.

டாக்டர் தொடர்ந்து விந்துவிற்காக விக்கியிடம் வந்தபடி இருக்கிறார். தன் மனைவிக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று விக்கி பயப்படுகிறான். டாக்டரை அதற்காக ஏசுகிறான். திருமணம் ஆன சில மாதங்களில், விக்கியின் மனைவி கர்ப்பம்  தரிக்க முடியாது என்று அவரை சோதித்த டாக்டர் கூறி விடுகிறார். இதனால் அவள் வெகுவாக மனம் உடைந்து விடுகிறாள். விக்கி எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை அவனால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. குடும்பத்தினர் அவர்களை தத்தெடுக்க யோசனை கூறுகிறார்கள். பாட்டி மட்டும், தத்து எடுப்பதில் தவறில்லை, ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது ஆஷிமாவும், விக்கியும் என்கிறாள். அப்போது விக்கி சொல்கிறான், "பாட்டி, டெல்லியில் இரண்டு விஷயங்கள் புதுமையானது. ஒன்று மெட்ரோ, இன்னொன்று நீ!"

இதற்கிடையில் அவள் ஒருநாள் அவளுடைய ரிப்போர்டை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது விக்கியின் ரிப்போர்ட் எங்கே என்று விக்கியிடம் கேட்கிறாள். அவன் தான் எந்த டெஸ்டும் செய்யவில்லை என்று கூறுகிறான். அதைக் கேட்ட அவள், ஏன் எனக்கு தான் குறை இருக்க வேண்டுமா, உனக்கு குறை இருக்காதா, எப்படி நீ டெஸ்ட் செய்யாமல் இருக்க முடியுமா? உனக்கு எப்படி தெரியும் உனக்கு குறையே இல்லை என்று வாதாடுகிறாள். வேறு வழி இல்லாமல் தான் செய்யும் விந்து தானத்தை பற்றி அவளிடம் சொல்லி விடுகிறான். அவளுக்கு அது பெரும் அதிர்ச்சியாய் இருக்கிறது. விந்துவை விற்றா நீ இவ்வளவு பணம் சேர்த்தாய், இதை நீ என்னிடம் சொல்லவும் இல்லை என்று கோபப்பட்டு அவனை பிரிந்து கொல்கத்தா சென்று விடுகிறாள். அங்கே அவளின் தந்தை, இதில் என்ன தவறு இருக்கிறது என்று விக்கியை சார்ந்து பேசுகிறார். அது அவளை மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இதற்கிடையில் விக்கி விந்துவின் மூலம் சம்பாதித்த பணம், பொருட்கள் மேல் சந்தேகம் கொண்டு போலீசார் அவனை உள்ளே தள்ளி விடுகிறார்கள். டாக்டர் வந்து அவனை ஜாமீனில் எடுக்கிறார். பிறகு விக்கி அவரிடம் உண்மையை சொல்கிறான். ஊரெல்லாம் என் விந்துவின் மூலம் குழந்தை பெற்றுக் கொடுத்தீர்கள், இப்போது நான் என் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது. நான் ரொம்பவே நொந்து போயிருக்கிறேன், தயவு செய்து என்னை தேடி வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டு போய் விடுகிறான். தான் செய்த காரியத்தால் விக்கியின் வாழ்கை இப்படி ஆனதே என்று கவலை கொண்ட டாக்டர் இதற்கு தானே ஒரு ப்ராயிச்சித்தம் செய்ய முடிவெடுக்கிறார். தன்னுடைய கிளினிக்கின் 25வது ஆண்டு விழா என்று தன் கிளினிக்கின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட அத்தனை பேஷண்டுகளுக்கும் அழைப்பு விடுக்கிறார். விக்கியையும் அவன் மனைவியுடன் கலந்து கொள்ளுமாறு பணிக்கிறார். அவளை அழைத்து வர விக்கி கொல்கத்தா செல்கிறான். அங்கு அவள் இன்னும் நான் யோசிக்க வேண்டும், நான் வர முடியாது என்று சொல்கிறாள். விக்கி, இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வா, பிறகு உனக்கு பிரிவு வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன் என்கிறான். இதை கேட்ட பெண்ணின் தகப்பனார் மறுபடியும் ஒரு விவாகரத்தா என்று அஞ்சி, "நீ இவனையும் வெறுப்பதற்கு காரணம் என்ன? இவன் விந்து தானம் செய்ததாலா, அதை உன்னிடம் சொல்லாதாலா, அல்லது உன்னால் முடியாத ஒன்றை அவன் ஏற்கனவே செய்து விட்டான் என்பதாலா? என்று நீயே உன்னை கேட்டுக் கொள். அவன் உன்னை மிகவும் விரும்புகிறான். அவனை நிராகரிக்காதே என்று அவளுக்கு அறிவுறுத்துகிறார். அவளும் அப்போது அந்த நிகழ்ச்சிக்காக மட்டும் சம்மதித்து விக்கியுடன் டெல்லி வருகிறாள்.

நிகழ்ச்சியில் வரவேற்ற டாக்டர் அவர்கள் இருவரையும் மேல் மாடிக்கு அழைத்துச் செல்கிறார். கீழ் உள்ள மைதானத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ஆஷிமாவிடம், நான் விக்கியை விந்து தானம் செய்யத் தூண்டினேன், அது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. இங்கிருந்து இந்தக் குழந்தைகளையும், பெற்றோர்களையும் பார்க்கும்போது உனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். ஆஷிமா, "இது என்ன கேள்வி, குழந்தைகளுடன் எல்லோர் வாழ்வும் முழுமை பெற்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். என்னைத் தவிர!" என்று சொல்கிறாள். அதற்கு டாக்டர், உன்னுடைய இதே நிலையில் தான் சில காலத்திற்கு முன் அவர்களும் இருந்தார்கள். இன்று அவர்கள் சந்தோஷமாய், பூரணமாய் வாழக் காரணம் விக்கி. அவன் கொடுத்த விந்தணுக்கள்! என்கிறார். அந்த குழந்தைகள் விக்கியின் விந்தணுக்கள் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ந்த விக்கி, இதில் எது என் குழந்தை என்று கேட்கிறான். அதற்கு டாக்டர் புன்னகைத்துக் கொண்டே, "அத்தனையும்" என்கிறார். மொத்தம் 53! விக்கி விக்கித்துப் போகிறான்! ஆஷிமா ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போகிறாள். நான் போய் அவர்களை பார்க்கலாமா என்று கேட்கிறாள். டாக்டர் தாராளமாய், ஆனால் யார் என்னவென்று விசாரிக்க வேண்டாம். பார்த்து விட்டு வா என்று அனுப்புகிறார். ஆஷிமா ஒவ்வொரு குழந்தையை கண்டு ரசிக்கிறாள். இதை பார்த்து விக்கி பூரிப்படைகிறான். அதை பார்த்து விக்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

மாடிக்கு வந்த ஆஷிமா, அவனை கட்டிப் பிடித்து அதோ அங்கு நிற்கும் கருப்பு சட்டை பையனுக்கு அப்படியே உன் முடி. அந்த பிங்க் பெண்ணுக்கு உன் கண்கள் என்று ஒவ்வொன்றாய் சொல்லி பூரிக்கிறாள். தன் தந்தை சொன்னது சரி தான், என்னால் செய்ய முடியாததை நீ செய்தாய் என்ற வெறுப்பு தான் எனக்கு இருந்திருக்கிறது என்னை மன்னித்து விடு என்று அவனை அணைத்துக் கொள்கிறாள். டாக்டர் அங்கு வந்து, உங்களிடம் இன்னொரு குழந்தையை காட்ட வேண்டும் என்று கூறி அவர்களை ஒரு ஆசிரமத்துக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. விக்கியின் விந்தணுவில் பிறந்த குழந்தை அது. அவளின் பெற்றோர்கள் விபத்தில் இறந்து விட்டதால், அவள் இப்போது ஆசிரமத்தில் இருக்கிறாள். நீங்கள் இவளை எடுத்து வளர்க்கலாம் என்று யோசனை கூறுகிறார். இருவரும் அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கின்றனர். அதோடு அவர்களின் குடும்பமும் பூரணம் அடைகிறது, படமும் :-)

சந்தோஷமாய் பிக்னிக்கில் இருக்கும் விக்கிக்கு டாக்டரிடம் இருந்து ஃ போன்  வருகிறது. ஒரே ஒரு முறை கொடுத்து விடு என்று அவன் ஆஷிமாவை பார்க்கிறான், அவள் புன்னகைத்து தலையசைக்கிறாள்! டாக்டர் சந்தோஷத்தில் குதிக்கிறார்.

விக்கியாய் நடித்திருப்பது அன்ஷுமன். இது தான் இவர் முதல் படம் என்று நினைக்கிறேன். பாத்திரத்தை உணர்ந்து சரியாய் செய்திருக்கிறார்.

யாமி கெளதமை நான் எப்படி தவற விட்டேன்! பேங்கில் வேலை பார்க்கும்போது கச்சிதமாய் புடவை ஒன்றை அணிந்து கொண்டு, லூஸ் ஹேர் விட்டுக் கொண்டு, ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு...கொள்ளை கொள்கிறார். உங்கள் வீட்டில் உன் கூட இருக்கும் "பிஷி" நாயா பூனையா என்று விக்கி கேட்டதற்கு, ஒரு ரசனையான சிரிப்புடன், "பிஷி" என்றால் பெங்காலியில் அத்தை என்று பொருள் என்பார். அருமை. அதோடு விக்கி தன் தந்தையிடம் பேசும்போது வங்காளத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவன்  பீற்றும் விதம் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார். வழிப்பறி! அவ்வப்போது, யாமியின் வாய் மேல் வாய் வைத்து அன்ஷுமன் என் வயிற்றில், நெஞ்சில் தீ வைத்தார். இப்போது கெளரவம் படத்தில் யாமி நடிப்பதாய் கேள்விப்பட்டேன். பார்க்க வேண்டும். [இந்த பத்தியை படித்து விட்டு காஜலை நான் தூக்கி எரிந்து விட்டேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்!!]

அன்னு கப்பூர் இன்னுமா நடித்துக் கொண்டிருக்கிறார்? அருமையான நடிகர். ஹிந்தி சினிமா உபயோகித்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இதில் அவர் எப்போதும் விந்துவை பற்றியே பேசுவதும், விந்து செல்வது போலவே விரலை காட்டி ஒவ்வொருவருக்கும் அவரவர் குணநலனுக்கு ஏற்ப ஒவ்வொரு பெயர் சொல்வது நன்று. [confused sperm, complicated sperm]

விக்கியின் அம்மா, பாட்டி, ஆசிமாவின் அப்பா, அத்தை என்று அனைவரும் மிகையில்லாமல் வெகு இயல்பாய் நடித்திருந்தார்கள். படத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். நல்லவர்களையும், நல்லதையும் பார்த்தால் நன்றாய் தான் இருக்கிறது :-) நானும் விந்துவை தானம் செய்யலாம் என்று பார்க்கிறேன். ஐ. டி. வேலையை விட நல்ல வேலை தான்! திடீரென்று ரோட்டில் நம்மை போலவே ஒரு குழந்தையை பார்த்தால் த்ரில்லிங்காய் இருக்காது?