மறுநாள் ஸ்ரீ நகரை சுற்றிப் பார்க்கத் திட்டம். ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரம். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் குளிர் கால தலைநகரம். இப்படியாக இந்த மாநிலத்துக்கு மட்டும் இரண்டு தலை நகரங்கள். ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஒரு குன்று தெரிந்தது. அதன் மேல் ஒரு கோவில். அதை தான் முதலில் பார்க்கப் போகிறோம் என்று சன்னி முன் தினமே சொல்லி வைத்திருந்தான். அது சங்கராச்சாரியார் கோவில். ஆதி சங்கரர் ஒரு காலத்தில் அங்கு தவம் செய்த போது உருவான கோவில். கோவில் செல்லும் வழி குறுகலாய் இருந்ததால் சன்னி எங்களை முக்கால் தூரத்தில் இறக்கி விட்டு தரிசித்து வரச் சொன்னான். கையில் காமெரா, உணவு பொருட்கள் என்று எதுவும் கொண்டு செல்ல முடியாது. குழந்தைகளுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மலையேறினோம். குன்றின் மேல் இருக்கிறோம் என்று தான் பெயர், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருந்தது. இன்னும் கோவில் எவ்வளவு தூரம் என்று வருவோரிடம் கேட்டதும், "இதற்கே இப்படி என்றால் கோவிலுக்கு முன்னூறு படி ஏறனும் என்ன செய்வீர்கள்?" என்று குண்டை தூக்கிப் போட்டார்கள். ஆதி சங்கரர் மேல் எனக்கு கொலை வெறி உண்டானது! கீழே அவ்வளவு இடம் இருக்கு?! இந்த மலை மேல வந்து தான் தவம் பண்ணனுமா? என்று நற நறத்துக் கொண்டே படியேறினேன்.[விக்கி]
மலையின் உச்சியில் உள்ள அந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீநகர் மிக அழகாய் தெரிந்தது. எந்த ஒரு இன்பமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும் போலும்?! அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிவிட்டு எங்கள் வண்டி உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காஷ்மீர் அரண்மனை ஒன்று பார்ப்பதாக இருந்தது. அந்த வழியில் டிராப்பிக் ஆகி விட்டதால் சன்னி எஸ்கேப் ஆகி எங்களை கீழே கடத்தி வந்து விட்டான். வண்டி அடுத்ததாய் முகல் கார்டனுக்கு சென்றது. நான் முன்னமேயே சொன்னது போல் இந்த மாதிரி கார்டன்களை பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தும் குடும்பத்துடன் சென்று விட்டு அதிரடி முடிவகள் எதையும் எடுக்க முடியாது. சன்னி கடிவாளம் கட்டிய குதிரை போல் எங்கு எல்லோரும் வழக்கமாய் போவார்களோ அங்கே தான் போனான். கேட்டதற்கு, "நீங்கள் பல கார்டன்களை பார்த்திருக்கலாம், எங்கள் காஷ்மீரில் கார்டன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!!" என்று மார் தட்டினான். அவனை சொல்லி குற்றமில்லை.

சரி என்று முகல் கார்டனுக்குள் நுழைந்தேன். விடுமுறை மற்றும் கோடை காலம் ஆதலால் செம கூட்டம். பல வித இயற்கை வனப்பை ரசித்த பிறகு, இந்த கார்டனில் சரியாய் இலைகள் வெட்டப்பட்ட செடிகள், சமன்படுத்தப்பட்ட புல்தரைகள், நீருற்றுக்கள் என்று எல்லாம் செயற்கை அழகு! இருந்தும் அழகு தானே...அங்கு ஒரு ஊற்று இருந்தது. எல்லோரும் அங்கு வரும் தண்ணீரை பிடித்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்தத் தண்ணீரை தான் ஜவஹர்லால் நேரு குடி தண்ணீராக பயன்படுத்தினாராம். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு, நிஷாத் கார்டன் என்று இன்னொரு இடத்திற்கு சென்றோம். அதற்குள் மதியம் ஆகிவிட, எல்லோருக்கும் பசித்தது. காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான மட்டன் ஷோர்பா சாப்பிட்டு பார்க்க வேண்டும், பிறகு நம்கீன் சாய் [அதாவது உப்பு போட்ட டீ!] குடிக்க வேண்டும்  என்று ஆசை. ஆனால் சன்னி, அது கிடைக்கும் ஹோட்டல்  வேறு வழியில் இருப்பதாலும், அவன் கட்டிய கடிவாளத்தில் அந்தப் பாதை தெரியாது என்பதாலும் நாளை கூட்டி செல்கிறேன் என்று கவிழ்த்து விட்டான். எதோ ஒரு தாபாவில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.பிறகு பொட்டானிக்கல் கார்டன். என் மாமா மகன்  நிறைய பூங்காக்களுக்கு செல்ல இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று கிரிக்கெட் பேட் கொண்டு வந்திருந்தான். நல்ல புல் தரையில் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை போட்டோம். ரிசார்ட்டில் கிடைத்த அதே அனுபவம், இரண்டு பேர் பால், பேட் வைத்துக் கொண்டு நின்றால் போதும், எங்கிருந்து தான் வருவார்களோ, ஒரு குட்டி கூட்டமே சேர்ந்து விட்டது.  அதில் ஒரு சுள்ளான் பயங்கரமாய் விளையாடினான். இழுத்து இழுத்து அடித்து எங்களை நாக்கு தள்ளி ஓட விட்டான். நாங்கள் போதும் என்று புறப்பட்டதும் அவன் முகம் வாடி விட்டது.


அதை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வழியில் ஒரு பெரிய பலூன் உயர பறந்து கொண்டிருந்தது. தருவை அதில் ஏற்றினால் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து உள்ளே போனோம். தரையில் இருந்து கிளம்பி ஒரு இருபது அடி மேலே போய், அங்கே ஒரு நிமிஷம் நின்று விட்டு மறுபடியும் கீழே இறங்கி விடும்.இதற்கு ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய்! இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தான் செல்ல முடியும். சரி வந்தது வந்து விட்டோம், நாமாவது செல்வோம் என்றால் அதற்கும் பெரிய வரிசை. அட போங்கப்பா என்று கிளம்பிவிட்டோம். அந்த பலூன் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்ல ஆளுக்கு இருபது ரூபாய் டிக்கட் வேறு! இருநூறு ரூபாய் தண்டம்...வெளியே வந்ததும் ஒரு பலூன்காரனிடம் தருவுக்கு ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்! பத்து ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது...ம்ம்ம்ம்!

அங்கிருந்து கிளம்பி ஷாப்பிங் சென்றோம். காஷ்மீர் புகழ் கம்பளங்கள், குர்தாக்கள், புடவைகள், ஸ்வட்டர்கள், பாஷ்மினா ஷால்கள் என்று நிரப்பி வைத்திருந்தான். விளையும் கம்மியாய் தான் தெரிந்தது. நாங்கள் பாஷியான ஷால், புடவை, ஸ்வட்டர், மரத்தால் ஆனா படகு வீடுகள், கீ செயின்கள் என்று முடிந்த வரை அள்ளிக் கொண்டோம். [இந்த வரியை எழுத ஒரு நிமிடம் ஆகவில்லை, ஆனால் அந்த வேலை முடிய...ஷபா!] பாங்க் பாலன்ஸ் இளைத்தது; நெஞ்சு வலித்தது! பட், பேமிலி ஹாப்பி அண்ணாச்சி! அன்றைய நாளை மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டோம், தங்கி இருந்த இடத்துக்கு திரும்பினோம். மறுநாள் இடத்தை காலி செய்து விட்டு குல்மார்க் புறப்பட வேண்டும்.

சுற்றுவோம்...
சோன்மார்க்! எங்கும் பசுமை போர்த்திய புல்வெளி; சுற்றிலும் பனி மலை. இதற்கு "தங்கத்தினால் ஆன பசுமை வெளி" என்ற பெயரும் உண்டு. காலை எழுந்து குளித்து முழுகி, காலை உணவை கடித்து முழுங்கி, குழந்தைகளை தயார் செய்து கிளம்ப பத்து மணி ஆகி விட்டது. வழி நெடுக இனிமையான சீதோஷணம். அருமையான இயற்கை வனப்பு. ஓடையின் அருகே சுற்றுலா வந்தவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்தார்கள். அவர்களை பார்க்கவே பொறாமையாய் இருந்தது. சோன்மார்கை, பஹல்காம், குல்மார்க் போல எல்லா காலங்களிலும் பார்க்க முடியாது. குளிர் காலங்களில் இதன் பாதையே அடைபட்டு போய் விடும் என்கிறார்கள்.


நாங்கள் அங்கு போய் சேர மதியம் பனிரண்டு, பனிரெண்டரை ஆகிவிட்டது. அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க குதிரையிலும் செல்லலாம்; காரிலும் செல்லலாம். பயங்கர குழப்பத்துக்குப் பின் சரி முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று ஒரு மனதாய் முடிவெடுத்து சாப்பிட்டு முடித்தோம். பிறகு எல்லோரும் குதிரையில் வர முடியாது என்பதாலும், பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதாலும் ஒரு வண்டி பிடித்தோம். சுமோ என்று ஞாபகம். அடக்கி ஒடுக்கி உட்கார்ந்து கொண்டோம். வண்டி வாடகை ஆறாயிரம். அங்கு பனி மலையில் சறுக்கலாம் என்று கூறி பெரிய சப்பாத்துக்களையும் [முத்துலிங்கத்தை அதிகம் படித்தது தப்பாகிவிட்டது!] கால்களில் அணிந்து கொண்டோம். இரண்டு மணி ஆகி விட்டது. இப்போது கிளம்பி எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று வருத்தப்பட்டோம். வண்டியை கிளப்பிய டிரைவர் கொஞ்ச தூரத்தில் ஏதோ பேச ஆரம்பித்தார். வழியில் உள்ள சில புல் தரைகளை காட்டி இங்கு தான் அமிதாப் நடித்த "சத்தே பே சத்தா" எடுத்தார்கள் என்றார். அமிதாப் இப்போது தெரிவாரா என்பது போல் அந்த இடத்தை பார்ப்பதற்குள் இந்தப் பக்கம் ஒரு புல் தரையை காட்டி வேறு ஏதோ ஹிந்தி படத்தை சொன்னார். இப்படி நான்கு படத்தை சொல்லி முடிப்பதற்கும் நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது. வழி நெடுக வண்டிகளின் அணிவரிசை. ஜே ஜே என்று இருந்தது. "வண்டி உள்ளே போக முடியாது என்று அங்கேயே இறக்கி விட்டு விட்டார். நீங்கள் பார்த்து விட்டு இங்கேயே வந்து நில்லுங்கள், நான் இங்கு தான் காத்திருப்பேன். ஒன்றும் அவசரமில்லை, போய் மெதுவாய் வாருங்கள்" என்றார். சரி என்று செங்குத்தான சாலையில் ஏற ஆரம்பித்தோம்.

பெற்றோர்களையும், குழந்தைகளையும் அங்கு உள்ள பல டீ கடைகளில் ஒன்றில் உட்கார வைத்து விட்டு, நான் என் மாமா மகனுடன் மலையை ஏற ஆரம்பித்தேன். சிறுவர்களுடன் எப்போதும் இந்த மாதிரி விஷயத்தில் மோதக் கூடாது. அவன் ஏதோ சமதரையில் நடப்பது போல் அந்த மலையில் அநாயசமாய் ஏறிக் கொண்டிருந்தான். நான் கண்ணு, காத்து, மூக்கு, நாக்கு என்று அனைத்தும் தள்ளி கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவனுக்கு சரி சமமாய் ஏற முயற்சித்து கொண்டிருந்தேன். எந்த வெயிட்டும் இல்லாமல் இருந்தால் தான் மலை ஏற வசதி என்று என் பர்ஸ், கைபேசியையும் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒரு வழியாய் முக்கால்வாசி ஏறி விட்டேன். அவன் எனக்கு மேலே நின்று கொண்டிருந்தான். சரி அவன் அருகில் வந்து விட்டோம், சேர்ந்து கீழே போய் விடலாம் என்றால் பயபுள்ள மேலே இருந்து சறுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் மேலே இருந்த சறுக்க விருப்பமிருந்தாலும் ஆடை ஈரமாகிவிட்டால் வண்டியில் தருவை மடியில் வைத்துக் கொள்ள வசதியாய் இருக்காது என்று நினைத்தேன். அதனால் சரி அவன் போகிறான் என்று அதே இடத்தில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். ஆஹா, என்ன ஒரு அருமையான இடம் அது. அந்த குளிர்ந்த சீதோஷணமும், குளிர் காற்றும், ஏறி வந்த களைப்பும், கண்ணுக்கு இதமான இயற்கையும் ஆஹா...சொன்னால் புரியாது! அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது அருகில் ஒரு குடும்பம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏதோ பிக்னிக் மாதிரி அந்த மலையில் ஏறி வந்திருந்தார்கள். கையில் ஒரு பெரிய பேக். அதில் நிறைய சிப்ஸ், பிஸ்கட் என்று பலவகை ஸ்நாக்ஸ். மொக்கு மொக்கு என்று மொக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், "ஆஹா, செல்போன் கணம்னு" நாம வச்சுட்டு வந்தோமே என்று என்னை நொந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மலை ஏறுவதற்கு அங்கு கைட் இருக்கிறார்கள். ஒரு சிறிய பலகை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு மலை ஏற முடியாதவர்களை அதில் அமர வைத்து மேலே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். என்ன ஒரு கடினமான வேலை பாருங்கள். சரி என்று நான் எழுந்தேன். எங்கு கால் வைத்தாலும் வழுக்கியது. பலகையில் அமர்ந்து சறுக்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். பேரம் பேசத் தொடங்கினேன். அவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் சொன்னார்கள். நான் ஐம்பது ரூபாய் கேட்டேன். [என்ன  வேலையை நினைத்து பரிதாபப்பட்டாலும் பேரத்தில் நம்மல மிஞ்ச முடியுமா?] ஒருவன் ஒத்துக் கொண்டான். பலகையில் ஏறி ஜல்லென்று கீழே வந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, பல தடைகளை கடந்து, ஆட்களை கடந்து, முட்டி மோதி பாதி தூரம் கீழே சேர்த்தான். அதற்கு மேல் கீழே வர முடியாது என்றான். என்னிடம் பணம் வேறு இல்லை, நல்ல வேளையாய் என் மாமா, என் தம்பி அங்கே இருந்தார்கள்.  இல்லை என்றால் அடுத்த க்ரூப்பை மேலே இழுத்துச் செல்ல என்னை உபயோகப்படுத்தியிருப்பான். அவர்களிடம் பணத்தை வாங்கி கொடுத்து விட்டு கீழே இறங்கினோம்.

சூடாய் டீ குடித்தோம். லேசாய் சூறக்காத்து அடிக்கத் தொடங்கியதும், மேகம் இருண்டது, கொஞ்சம் தூறல் போட்டது. குழந்தைகள் பயந்து அழ ஆரம்பித்தன. எங்கள் வண்டியை தேடினால் கிடைக்கவே இல்லை. நல்ல வேளையாய் வண்டியில் இருந்து இறங்கும்போது என் மாமாவிடம் அந்த டிரைவரின் கை பேசி எண்ணை வாங்கச் சொன்னேன். வாங்கியும் பயன் இல்லை. எத்தனை முறை அடித்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எடுத்தாலும் இடக்கு மடக்காய் பேசிக் கொண்டிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று வேறொருவர் வந்து அவர் தான் என்னை அனுப்பினார்,  இந்த வண்டியில் ஏறுங்கள் என்றார். கடைசியில் தான் தெரிந்தது, அவர் எங்களை இறக்கி விட்டு விட்டு வண்டியுடன் அடுத்த டிரிப்புக்கு போய் விட்டார். வந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று இன்னொருவரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வண்டியில் எங்களின் பை வேறு ஒன்று இருந்தது. அதெல்லாம் கீழே போய் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அந்த டிரைவர். சரி, அடுத்து எங்கே என்றதற்கு, இது தான் கடைசி இடம் என்று குண்டை தூக்கி போட்டார். கேட்டால், வழியில் அவர் காண்பித்த நான்கு புல்தரைகளும் நான்கு இடங்களாம்! முதலில் வண்டியை மலையின் அருகில் வரை கொண்டு செல்லவில்லை. திரும்பி வந்தால் வண்டி இல்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் கஷ்டப்படுகிறோம், போன் அடித்தால் எடுப்பதில்லை. சரி இன்னும் இடங்கள் இருக்கிறது என்று நினைத்தால், இது தான் கடைசி என்கிறார்கள். இதற்கு ஆறாயிரம். அவர்கள் வண்டியில் நாங்கள் பயணம் செய்தது ஒரு அரைமணி நேரம் கூட இருக்காது! "அட நாதாரிகளா!" என்று எரிச்சலாய் இருந்தது.எங்கே புறப்பட்டோமோ அங்கே வந்து சேர்ந்ததும், யாரும் அவர்களை எதுவும் கேட்க முடியவில்லை. பணத்தை அழுது விட்டு, சப்பாத்துக்களை கழட்டிக் கொடுத்து விட்டு, அதற்கும் பணத்தை கட்டி விட்டு, சன்னியிடம்  சரண் அடைந்தோம். ஒவ்வொரு தரமும் சன்னி நொந்து போய் திரும்பும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்! "இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த டயத்தில் இவர்கள் சம்பாதித்தால் தான் உண்டு. வருடம் முழவதுக்கும் சேர்த்து இப்போதே சம்பாதித்து விடுகிறார்கள்!" என்று சன்னி அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான். ஸ்ரீநகர் நோக்கி வண்டி புறப்பட்டது.

காஷ்மீர் பூமியின் சொர்க்கம் தான், ஆனால் மனிதன் எங்கு இருந்தாலும்...????

சுற்றுவோம்...
மறுநாள் பஹல்காமில் இருந்து ஸ்ரீ நகர் கிளம்ப வேண்டும். சன்னி முன் இரவே, "நாளை மெதுவாய் கிளம்பினால் போதும், நன்றாய் ரெஸ்ட் எடுங்கள்!" என்று சொல்லி விட்டான். ஆற அமர எழுந்து, குளிரை அனுபவித்துக் கொண்டே, குளித்து முடித்து, காலை உணவை முடித்துக் கொண்டு சூடாய் தேநீர் ஒன்றை கையில் எடுத்து சுவைக்கும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவிகள் "பிரேயர் சாங்" பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சிறிய அரசு பள்ளி. தேநீரி நாவுக்கும், குளிர் உடலுக்கும், அவர்களின் குரல் செவிக்கும் இன்பம் சேர்த்தது. தூரத்தில் தெரியும் பனி மலையை பார்த்துக் கொண்டே அவர்களின் பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சூரியனின் தங்க நிறம் அந்த வெண்பனியில் பட்டுத் தெறிக்கும் காட்சி மனதை ஏதோ செய்தது.


அறைக்கு வந்ததும் ஒரு பிரளயம் காத்திருந்தது. ஒரே நாளில் பெட்டியில் உள்ள அத்தனையும் வெளியில் தான் கிடந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு வழியாய் ஒடுக்கி, அடுக்கி வெளியே வந்தோம். வண்டி ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது. வழியெங்கும் வனப்பு. ஊருடன் ஓடும் லிட்டர் (liddar) ஆறு. ஆங்காங்கே பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், வானுயர்ந்த மரங்கள், பனி மலைகள் என்று நாள் வெகு உற்சாகமாய் இருந்தது. நான் சன்னியிடம் கேட்டுக் கொண்டதுபடி ஒரு நல்ல இடம் வந்ததும் "இறங்கி பார்த்து விட்டு வாருங்கள்!" என்று அனுப்பி வைத்தான். அந்த இடத்தில் சாலையை ஒட்டி சலசலக்கும் ஆறு, சுற்றி மலைகள், குளிர்ந்த காற்று, தூரத்தில் தெரியும் பனி மலை என்று ரம்மியமாய் இருந்தது. நான் இப்படி ஒரு ஆற்றில் குளித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தண்ணீரில் கால் வைத்தாலே கால் மறத்துப் போகும் அளவுக்கு அது குளிர்ந்திருந்தது. கை காலை நனைத்துக் கொண்டு, சிறிது குழந்தைகளுடன் விளையாடி விட்டு வண்டி ஏறினோம்.பஹல்காமில் இருந்து ஸ்ரீநகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம் தான். அன்று வேறு எதுவும் ப்ளான் இல்லாததால், சன்னி மெதுவாய் ஆற அமர கதை சொல்லியபடி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம்! அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், "அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு!" இல்லைன்னா நம்ம மக்கள் "ஸ்னோ வியூ", "ரிவர் வியூ", "வேலி வியூ" அபார்ட்மென்ட்ஸ் என்று பலவகையில் கட்டி இடத்தை நாறடித்திருப்பார்களே என்று எண்ணிக் கொண்டேன்.

வழியில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இறங்கினோம். ஆப்பிள் உண்மையில் அந்த மரத்தில் இருந்து தான் வருகிறது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு கிளம்பினோம்.பிறகு காஷ்மீரின் பிரபலமான "ட்ரை ஃப்ரூட்ஸ்" ["உளர் பழங்கள்/கொட்டைகள்" என்று சொல்லலாமா?] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி "இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்" என்றார். "அவர் எங்க இங்கே வந்தார்? ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ?" என்று எண்ணிக் கொண்டே, "ஆமாம், அதே முக ஜாடை!" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உங்களுக்குத் தெரிகிறதா?பிறகு ஸ்ரீநகரை நெருங்கும்போது வழியல் ஒரு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மாதிரி ஒன்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் கோலிகளும், தோணிகளும் வரவேற்கிறார்கள். ஆமாம், அது தான் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம். அந்த ஊரின் பெயர் சங்காம். ஒரு கடையில் இங்கே "பேட் பாருங்கள்!" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம்! தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல் சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான்! சண்டாள சர்தார்! 

ஒரு வழியாய் வண்டி ஸ்ரீநகரை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தி அதோ அங்கு தெரியும் அந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டு வாருங்கள் என்று சன்னி எங்களை அனுப்பி வைத்தான். வாசலில் மசாலா தோசா என்று எழுதி இருந்தது. எச்சிலை துடைத்துக் கொண்டு உள்ளே போய் கொட்டிக் கொண்டோம். வடநாட்டில் மசாலா தோசை எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. என் அப்பாவை அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி "டீ குடிக்கிறீங்களா?" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா? அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றான். நான் "சென்னை" என்றேன். "ஒ, கொலவெறி, கொலவெறி!" என்றான்.  அடுத்த நொடியே தென்னிந்தியர்கள் அருமையான மனிதர்கள் என்றான். என்ன ஒரு நகைமுரண்!

வண்டி இந்து இடுக்கில் புகுந்து நாங்கள் தங்க வேண்டிய "ராயல் ஜன்னத்" [ஜன்னத் என்றால் சொர்க்கம்] ரிசார்ட்டுக்கு வந்தது. அதை ரிசார்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாடி கொண்ட ஒரு பெரிய வீடு. முன்னால் சிறிய தோட்டம். அவ்வளவு தான். அந்த ரிசார்ட்டின் எதிரே நம் கூவம் மாதிரி அழுக்காய் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.


மணி அப்போதே நாலு, ஐந்து ஆகிவிட்டது. நல்ல ஒரு தேநீரை பருகினோம். சன்னி என் மாமாவிடம், பாதுகாப்பு கருதி, "பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் வேண்டுமென்றால் அருகில் நடந்து போய் வாருங்கள்!" என்று சொல்லி இருந்தான். நாங்களும் "தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்!" என்று சால்ஜாப்பு சொல்லி விட்டு நான், என் தம்பி, மாமா மூவர் மட்டும் வெளியே கிளம்பினோம். அரவிந்தசாமியை கடத்தியவர்கள் எங்கள் யாரையும் சீண்டக் கூட இல்லை . ஆற்றை கடந்து அந்தப் பக்கம் செல்ல ஒரு பாலம் இருந்தது. அதைக் கடந்ததும் கடைத்தெரு வந்து விட்டது. சிறிது தூரம் நடந்ததும் நாங்கள் சாப்பிட்ட இடம் வந்து விட்டது. அப்படியே நடந்து கொண்டிருந்தோம். "தால் லேக்கை" பார்த்து வரலாம் என்று போய் கொண்டிருந்தோம். ஒரு அறை மணி நேர நடையில் தால் லேக் கண்ணில் பட்டது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.

திரும்பி வந்தவுடன் என் மாமா பையன் தான் வாங்கிய புதிய பெட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்தான். நானும் கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆகி விட்டது. "சரி வாடா!" என்று அந்த ரிசார்ட்டின் கார் பார்கிங்கில் விளையாடினோம். பேசாமல் கிரிக்கெட்டையே தேசிய விளையாட்டாக மாற்றி விடலாம். நாங்கள் விளையாடத் தொடங்கிய பத்து நொடிகளில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த நாலு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படி ஒரு உற்சாகமான ஆட்டம் பல நாட்களுக்குப் பிறகு. நான் நினைத்ததை விட நன்றாகவே ஆடினேன். இருட்டத் தொடங்கியதும் வேர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்தோம். மறுநாள் சோன்மார்க்!

சுற்றுவோம்...