எனக்கு 58 வயது ஆகிறது. நான் என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம், என் பால்யத்தில் இதே வயதில் இருந்த என் அப்பாவை பார்த்த நினைவு வருகிறது. என் அப்பாவின் வயதை ஒத்த நண்பர்கள், அண்டை வீட்டார்கள், "அப்படியே, உன் அப்பனை உரிச்சி வச்சுருக்கே!" என்று சொல்லாத நாளில்லை.  அது பெரிய பெருமை இல்லை தான். கரிய நிறம், குழி விழுந்த கண்கள், ஒடுங்கிப் போன கன்னமுமாய்த் தான் என் அப்பா இருந்தார். இப்போது நான் இருக்கிறேன்.

என்னோடு சேர்த்து அவரின் ஐந்து வாரிசுகளை பார்த்தால், அவரின் ஆண்மையை நினைத்து அவர் பூரிப்பு கொண்டிருக்க முடியுமே தவிற, வேறு ஒன்றும் பெரிதாய் அவரால் செய்ய முடியவில்லை. அவரும் என்ன செய்வார்? படிப்பு வாசனை கிடையாது. ஒரு பொரிகடலை கடையில் தான் வேலை பார்த்தார். அம்மா, வீட்டு வேலைக்குப் போவாள். அவர்களின் வருமானத்தில் ஏழு பேர் வாழ்வதே கஷ்டம். எங்கிருந்து படிப்பது. அவரால் படிக்க வைக்க முடியவில்லை என்றோ, எனக்கு படிப்பு வரவில்லை என்றோ ஏதோ ஒரு காரணத்துக்காக நானும் அதிகம் படிக்கவில்லை. பள்ளி என்றாலே பனிமூட்டமாய் தூரத்தில் ஒரு கனவு மாதிரி ஒரு நினைவு வருகிறது. எது வரை படித்தேன் என்று கூட நினைவில்லை.

படித்தவனுக்கு சில வேலை, படிக்காதவனுக்கு பல வேலை என்று சொல்வது போல், இங்கு தொட்டு, அங்கு தொட்டு, இதைச் செய்து, அதைச் செய்து, இதோ வாழ்க்கை, அதோ சந்தோஷம் என்று இல்லாத ஒன்றை தேடி எட்டி எட்டி ஓடி இன்று இந்த யுனிஃவார்ம் சட்டைக்குள் என் உடல் தேடும்படியான தோற்றத்துடன் ஒரு செக்யுரிட்டியாய் ஒரு அபார்ட்மென்ட்டில் உட்கார்ந்திருக்கிறேன்.

நான் அந்த அபார்ட்மென்டில் செக்யுரிட்டியாக வேலைக்குச் சேர்ந்து இன்றோடு ஆறு மாதமாகிறது. வேலை ஒன்றும் பெரிதாய் இல்லை. அபார்ட்மென்டின் இறுதியில் திருப்பத்தில் ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வண்டிகளை எதிர்நோக்கி உட்கார்ந்திருக்க வேண்டியது. டெலிவரி செய்ய வரும் பசங்களிடம் எந்த ப்ளாக் எங்கே இருக்கிறது என்று சொல்ல வேண்டியது. மெயின் செக்யுரிட்டியில் இருந்து மோட்டார் போடச் சொன்னால் போட வேண்டியது. குழந்தைகள் தாறுமாறாய் ஓடும் போது பணிவாய் "வண்டி வரும், வீட்டுக்கு ஒடுங்க" என்று விரட்ட வேண்டியது. வாரத்துக்கு ஏழு நாள் தான் வேலை. சம்பளம் பிடித்தம் போக ஏழாயிரத்து அறுநூறு. எங்களை பாதுகாப்பதாகச் சொல்லி, நீ உன்னை பாதுகாத்துக்கொள் என்று ஒரு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

வேலைக்குச் சேரும்போது மெயின் எண்ட்ரன்ஸில் தான் போடுவார்கள் என்று நினைத்தேன். அங்கு இருந்தால் வருவோர் போவோரிடம் விசாரிப்பது, கூட இருக்கும் செக்யூரிட்டியிடம் பேசுவது என்று நேரம் போவது தெரியாமல் இருந்திருக்கும். இப்படி அபார்ட்மென்டின் ஒரு ஓரத்தில் ஒரு திருப்பத்தில் உட்கார வைத்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. எப்போதோ வரப் போகும் வண்டிகளுக்காக, பெரிதும் விபத்து என்று ஒன்று நேர்ந்திட சாத்தியமில்லாத ஒரு இடத்தில், ஒரு மனிதனை நாள் முச்சூடும் ஒரே இடத்தில் சும்மாவே உட்கார வைக்க இந்த மனிதர்களை எது தூண்டுகிறது? பணமா? பதவியா? அதிகாரமா? புரியவில்லை. நான் இப்படி யோசிப்பது பாவம் தான், இவர்கள் இப்படி செய்தால் தான் என்னைப் போல ஒரு மனிதனுக்கு கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கிறது. இருந்தாலும், சும்மாவே எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்திருப்பது. அதுவும் அந்த மொட்டை வெயிலில். உச்சி பொழுதுக்கு கார் பார்க்கிங்கில் ஸ்டூலைப் போட்டுக் கொள்வேன். ஒருமுறை, அப்படி தள்ளி உட்கார்ந்து இருந்ததால், நான் ட்யுட்டியில் இல்லை என்று அந்த ப்ளாக்கை சேர்ந்த யாரோ கம்ப்ளைன்ட் செய்து விட்டார்கள். ஃபோனில் மெதுவாய் பாட்டு கேட்டேன், அதற்கும் கம்ப்ளைன்ட். எதற்கு வம்பு என்று அவர்கள் சொன்ன இடத்தில் பேசாமல், அமைதியாய் உட்கார்ந்து கொள்வேன்.

காலை, மாலை அந்த அபார்ட்மென்டை சுற்றி பலர் வாக்கிங், ஜாகிங் போவதுண்டு. அப்போது தான் எனக்கு கொஞ்சம் நிம்மதி. சில முகங்களைப் பார்க்கலாம், சில பேச்சுக்களைக் கேட்கலாம். சில பேரை பார்த்து புன்னகைக்கலாம். வாக்கிங் வரும் பெரிய மனிதர்களை பார்த்து நான் சல்யுட் வைக்க மறப்பதில்லை. யார் பெரிய மனிதர்கள் என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரை, அங்கு இருக்கும் எல்லோருமே பெரிய மனிதர்கள் தான். அப்படி நான் சல்யுட் செய்யும் போது, பெரும்பாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. வெகு சிலர் மட்டும் மெலிதாய் ஒரு புன்முருவல் பூப்பார்கள். சிலர் கொஞ்சமாய் தலையை ஆட்டி ஆமோதிப்பார்கள், சிலர் என் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

யாரும் இல்லாத பகல் பொழுதுகளில் அவர்களைப் பற்றி நான் அசைபோட்டபடி யோசித்துக் கொண்டிருப்பேன். வேடிக்கையாக இருக்கும், இந்தக் கடவுள், ஒருவனை நல்ல குடும்பத்தில் பிறக்கச் செய்து, நல்ல படிப்பு கிடைக்க வழி செய்து, நன்றாகச் சம்பாதிக்க அருள் தந்து, இப்படி ஒரு அபார்ட்மென்டில் ஒரு வீட்டை வாங்கச் செய்கிறார். அதே கடவுள், என்னைப் போன்றவனையும் படைத்து, பணமில்லாமல், படிப்பில்லாமல், அறிவில்லாமல், கிடைத்த வேலைகளை செய்து, கை பிடித்து, கால் பிடித்து, தலையைச் சொறிந்து, அதே அபார்ட்மென்டில் ஒரு செக்யுரிட்டி ஆக்கி அவர்களுக்கு சல்யுட் அடிக்கச் செய்கிறார். ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர், ஒருவன் கும்பிடும் இடத்தில் இருக்கிறான், இன்னொருவன் அதை உதறித் தள்ளும் இடத்தில் இருக்கிறான். மேலும் மேலும் இதைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு சிரிப்பு தான் வரும். இப்படியாக யாருமற்ற என் பகல் பொழுதுகளில் அந்த அபார்ட்மென்டின் அத்தனை மனிதர்களும் இருந்தார்கள்.

இத்தனை வகையான மனிதர்களில், ஒருவர், நான் அடிக்கும் சல்யுட்டுக்கு என்னையும் மதித்து, ஒரு புன்னகை புரிந்து பதில் சல்யுட் அடிப்பார். அவர் பெயர் தெரியாது. அவர் ஐந்தாவது ப்ளாக்கில் வசிக்கிறார். நரைத்த வழுக்கைத் தலை, நல்ல நிறம், நல்ல உயரம், எப்போதும் ஒரு டீஷர்ட், ஒரு வேஷ்டி. தினமும் மாலை வாக்கிங் வருவார். ஆழ்ந்த யோசனையுடன் நிதானமாய் நடப்பார். அவ்வப்போது என்னிடம் நின்று பொதுவாய் பேசிப் போவதும் உண்டு. என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, என் வேலையைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டறிவார். பேரனுக்கு கை வைத்தியம் செய்ய வேப்பங்கொழுந்து வேண்டும் என என்னை விட்டு பறிக்கச் சொல்வார். சில சமயங்களில் சாவியை மறந்து வந்து விட்டதாகவும், மூட்டு வலி இருப்பதால் திரும்பிச் செல்ல முடியாது என்றும் என்னை போய் சாவி எடுத்து வரச் சொல்வார். அவரைப் பற்றி எதுவும் அவர் என்னிடம் சொன்னதில்லை. நானாகக் கேட்டால் தப்பாக எண்ணி விடுவாரோ என்று நானும் கேட்டதில்லை.

அன்று வழக்கம் போல் மாலை வாக்கிங் வந்தவரை நான் பார்க்கவில்லை. வேறு ஏதோ சிந்தனையில் இருந்தேனா தெரியவில்லை. நான் தலையை நிமிர்த்தி பார்க்கும்போது அவர் என்னைத் தாண்டி சென்று கொண்டிருந்தார். "என்ன நினைத்துக் கொண்டாரோ, தெரியவில்லையே! என்னிடம் பேசுபவர் தானே, நான் பார்க்கவில்லை என்றால் என்ன, என்னை அழைத்திருக்கலாமே?" என்று எண்ணினேன். எப்போதையும் விட, வெகு நிதானமாய், கிட்டத்தட்ட நின்று நின்று நடந்து கொண்டிருந்தார். ஏதோ நினைத்தவர் போல் திரும்பி, என்னைப் பார்த்தார். நான் சல்யூட் வைப்பதற்கு முன் அவரே சல்யுட் வைத்தார். நான் பதறிப் போய் எழுந்து சல்யுட் வைத்தேன். திரும்பி என் அருகே வந்தவர், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "கந்தசாமி, உங்கிட்ட ஒரு அம்பது ரூபா இருக்குமா? பசிக்குது" என்றார்.

இன்று மாலை நடைபயிற்சியின் போது தான் அவளைப் பார்த்தேன். இதுவரை அவளை அங்கே பார்த்ததில்லை. எங்கள் அப்பார்ட்மென்டின் வெளியே உள்ள 30 அடி சாலைக்கு அந்தப் பக்கம் நின்றிருந்தாள். அந்த சாலை முட்டுச் சாலை என்பதால் அதிக வாகனங்கள் வருவதில்லை. அவ்வப்போது அருகில் இருக்கும் சந்திலிருந்து பைக்குகள் போகும் வரும். நான் அவளை எங்கள் அப்பார்ட்மென்ட் க்ரில் காம்பவுண்ட் வழியாய் பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் நான் கவனிக்காமல் நடந்து கொண்டு தான் இருந்தேன். திடீரென்று "போதை ஏறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு" என்று யாரோ பெண் பாட்டுப் பாடும் சத்தம் கேட்டது. ரோட்டில் நின்று கொண்டு எந்தப் பெண் இந்தப் பாடலைப் பாடுகிறாள் என்று தான் பார்த்தேன்.

அவள் கத்தரிப்புக் கலரில் நேர்த்தியாய் புடவை கட்டி இருந்தாள். கருப்பான, ஒல்லியான உருவம். முன் தலையில் நரையின் ஆரம்பம். ஒரு நாற்பது வயது இருக்கலாம். தலையில் கொஞ்சம் பூவை பிய்த்து வைத்திருந்தாள். இடது கையில் சமீபத்தில் வளைகாப்பு முடிந்ததைப் போல் நிறைய வளையல்கள். அது மட்டும் கொஞ்சம் உறுத்தலாய் இருந்தது. "இவளா அந்தப் பாட்டைப் பாடினாள்!?" என்று பார்த்துக் கொண்டிருந்தேன். "சே, சே, இருக்காது!" கார்ப்பரேஷனில் இருந்து கணக்கெடுக்க வரும் பெண்களைப் போல் டீசன்டாக இருந்தாள். ரோட்டில் நின்று கொண்டு அப்படி ஒரு பாட்டு ஏன் பாட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அவள் லேசாய் சிரித்து, ஒரு நிலையில்லா பார்வையுடன், "நான் ஒரு மானங்கெட்டவ!" என்றாள். இவள் தான் பாடி இருக்கிறாள்.

நான் நடையை விட்டுவிட்டு சுவரோரமாய் நின்று அவளை கவனிக்க ஆரம்பித்தேன். மனநிலை பிறழ்ந்தவர்களை கவனிப்பது யாரையும் கண்டுகொள்ளாமல் விளையாடும் குழந்தை ஒன்றை கவனிப்பதைப் போல. ஒரே வித்தியாசம், குழந்தையின் செய்கைகள் ஆனந்தத்தைத் தரும். இவர்களின் செய்கைகள் வருத்தத்தைத் தரும். அப்படி மேலோட்டமாய், அழகாய் சொன்னாலும், மனதின் ஆழத்தில் அது ஒரு வகை குரூரம் தான். அப்படி ஒரு மனிதனைப் பார்க்கும்போது, அவன் என்ன செய்வான், எப்படிச் சிரிப்பான், என்ன பேசுவான், யார் மீது மண்ணைத் தூற்றுவான், யார் மீது கல்லெறிவான் என்று காண மனம் ஆசைப்படுகிறது. பெண் என்றால் இன்னும் அசிங்கமாய்.

"ஹே செக்குரிட்டி, செக்குரிட்டி" என்று எங்கோ பார்த்துக் கொண்டு சில முறை சொன்னாள். அவள் எங்கள் அப்பார்ட்மென்ட் செக்யுரிட்டியைப் பார்த்து பேசவில்லை. அதே நிலை கொள்ளாத பார்வையுடன், ஆனால் ஒரு வித உரிமையுடன், வாஞ்சையுடன் செக்குரிட்டி செக்குரிட்டி என்று பேசினாள். அவள் இப்படி அலைவதால், அவர்கள் இவளிடமோ, இவள் அவர்களிடமோ அதிகம் பேசி இருக்கக் கூடும். இவளைப் பார்த்துப் பரிதாப்பட்டு அவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கக் கூடும். அவள் சற்று ஓய்ந்து விட்டு, திடீரென்று "கட்டிக் கொடுக்குறது அப்பன் கடமை தானே!" என்றாள். திடீரென்று சிரித்தாள். மனநிலை சரியில்லாதவளா இவ்வளவு சுத்தமாக இருக்கிறாள், இத்தனை நேர்த்தியாக புடவை கட்டி இருக்கிறாள்.

"மயிலாப்புரா?, மைசூரா?...அங்கே தான்!". எந்தக் கோர்வையும் இல்லாமல் பேசினாள். ரொம்ப கொஞ்சமாய் தான் பேசினாள். அடிக்கடி சிரித்தாள். அவளை ஒரு பைக் கடந்து போக அவர்களுக்கு கையசைத்து சிரித்த முகத்துடன் டாட்டா காட்டினாள். பிறகு ஏதோ வாய்க்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.  பிறகு குனிந்து அருகில் இருந்த இரண்டு கட்டைப் பைகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அந்தப் பைகளைப் பார்த்தேன். பைகள் இரண்டும் நிரம்பி இருந்தும் பொருட்கள் மிகச் சரியாய் அடுக்கப்பட்டிருந்தன. சற்று நேரம் துலாவிவிட்டு ஒரு சிறிய நோட்டு புத்தகத்தையும், ஒரு பேனாவையும் கையில் எடுத்துக் கொண்டாள். நான் கற்பனை செய்த மாதிரி, கார்ப்பரேஷன் பெண்கள் வீட்டுக்கு வீடு வந்து கணக்கெடுப்பு செய்வதைப் போல் கொஞ்ச நேரம் எழுதினாள். அவள் அப்படி என்ன எழுதி இருப்பாள் என்று பார்க்க எனக்கு ஆசை. அத்தனை பொருமையாய், பொறுப்பாய் அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது, இந்தப் பக்கம் சென்ற வண்டியில் இரண்டு பெண்கள் செல்ல, "அம்மா, துப்பட்டா கீழே போகுது பாரும்மா, பாத்து போங்க" என்று சிரித்து வழியனுப்பினாள். அந்தப் பெண்களும் அவளை என்னைப் போலத் தான் எண்ணி இருப்பார்கள். அவள் மனநிலை சரியில்லாதவள் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

யோசித்துப் பார்த்தால், ஒரு வளர்ந்த மனிதன், மனநிலை சரி இல்லாத போது தான் அடுத்தவர்க்கு நன்மை மட்டுமே செய்யும் எண்ணம் கொண்டிருப்பான் போலும். கல்லெறிவதும், தூற்றுவதும் இதில் சேராது. அந்தப் பெண்கள் எத்தனை முறை துப்பட்டாவை அப்படி விட்டுக் கொண்டு அவளை கடந்து போயிருந்தாலும் அவள் ஒவ்வொருமுறையும் அந்த சிரிப்பு குறையாமல் அவள் அதைச் சொல்லி இருப்பாள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. வஞ்சகமில்லா மனதை அடைய மனம் பிறழ வேண்டி இருக்கிறது என்பது எத்தனை பெரிய நகைமுரண்.

அவள் பார்த்த கணக்கை எல்லாம் எழுதி முடித்தது போல், அந்த நோட்டுப் புத்தகத்தை பையில் வைத்து விட்டு, பேனாவை ப்ளவுசில் சொருகிக் கொண்டாள். பிறகு அருகில் இருந்த கல் ஒன்றில் அமர்ந்து கொண்டு மறுபடியும் அந்தப் பையைத் துலாவி ஒரு வட்டமான வெள்ளை டப்பா ஒன்றை எடுத்தாள். ஹோட்டல்களில் பார்சலுக்கு கொடுக்கும் ப்ளாஸ்டிக் டப்பா அது. ஆனால் அதில் எந்த ஹோட்டல் பெயரும் பொறிக்கப்படவில்லை. அது கழுவித் துடைத்து சுத்தமாய் இருந்தது. சாலையின் ஓரத்தில் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டு அந்த டப்பாவைத் திறந்தாள்.

அவள் சாப்பிடப் போகிறாள் என்று நினைத்தேன். ஆனால், அந்த பெரிய வட்ட டப்பாவில் இருந்து சிறிதாய் இன்னொரு வட்டமான வெள்ளை டப்பாவை எடுத்து அதைத் திறந்து பொட்டு மாதிரி ஒன்றை வைத்துக் கொண்டாள். திரும்பத் திரும்ப அதைச் செய்தபடி இருந்தாள். பையிலிருந்து மறுபடியும் துலாவி ஒரு சுத்தமான மஞ்சள் சீப்பை எடுத்து அவள் இடுப்பில் சொருகிக் கொண்டாள். தலையில் பின்னியிருந்த band ஐ அவிழ்த்து ப்ளவுசில் போட்டுக் கொண்டாள். தலைவாரிப் பின்ன ஆயுத்தம் செய்து கொண்டிருந்தாள் போலும்.

எனக்கு அப்போது தான் ஒரு பெண்ணை அப்படி ஒரு இடத்தில் நின்று பார்ப்பது சரியல்ல என்று பிரக்ஞையே வந்தது. அதனால் சற்று நடந்தபடியே அவளை கவனித்தேன்.
அவளைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாய் இருந்தது. இத்தனை சுத்த பத்தமாய் ஒரு மனநிலை தவறிய ஆணையோ, பெண்ணையோ நான் பார்த்ததே இல்லை. உண்மையில் இவள் மனநிலை தவறியவள் தானா? அல்லது இப்படி ஒரு மாலைப் பொழுதில் யாருக்கும் தன்னைத் தெரியாத ஒரு இடத்தில் வந்து இப்படி நடந்து கொண்டு பார்க்கலாம் என்று முடிவெடுத்தாளா? எதனால் இவளுக்கு இந்த நிலை? வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நாம் அனைவரும் வாழும் வாழ்வில் இவள் வேறு ஒரு தனி வாழ்க்கையை வாழ்கிறாளே? இது எதனால்? வாழ்வின் புதிர்களை நாம் விடுவிக்க விடுவிக்க, வாழ்க்கை மேலும் மேலும் நம் முன் பல புதிர்களைப் போட்டபடியே இருக்கிறது.

நான் இப்படி பலவித யோசனைகளுடனும், அவ்வப்போது அவளைப் பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டிருந்தேன். ஒரு கணத்தில் அவளின் பார்வை என் பார்வையை சந்தித்து. இத்தனை நேரம் நான் "இவள் யாரைப் பார்த்து சிரிப்பாள், யாரைப் பார்த்து கல்லெறிவாள்?" என்று பார்த்துக் கொண்டிருந்தேனோ, அந்த "யாராய்" நான் மாறக் கூடிய தருணம் அது. அந்த ஒரு கணம், கூசும் பல்லில் ஊசியால் கீறியது போல் ஒரு வலி மிகுந்தது. நான் உடனே, அவளைத் திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு வேகமாய் நடந்தேன். ஒருவேளை, அவள் அதே சிரிப்புடன், "பாவம் பைத்தியம்" என்று என்னை  நினைத்திருக்கலாம்.

என் டூ வீலரை ப்ளு மெளன்டைன் முன் நிறுத்தினேன். பட்ஜெட் ஹோட்டல் மாதிரி தான் இருந்தது. ரிஸெப்ஷனில் ஒரு தடியான ஆள் வரவேற்றான்.

நவீன்னு ஒரு ரைட்டர், அவர் ரூம் எது?

103 மேடம், ஸ்டேர்ஸ் அங்கே என்று கை காண்பித்தான்.

என் முதுகில் அவன் பார்வை உறுத்தியது. ஹோட்டலில் தனியாய் இருக்கும் ஒருவனை சந்திக்க வரும் பெண், அவள் அக்கா தங்கையாகவே இருந்தாலும் சமூகத்தின் பார்வை அவளைத் துகிலுரியத்தான் செய்கிறது.

103, கதவைத் தட்டினேன்.

உள்ளே வாங்க என்று அவன் குரல்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அவன் ஜன்னல் பக்கமாய் திரும்பி அமர்ந்து கொண்டு மேஜையில் வைத்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். திரும்பி என்னைப்
பார்த்தவன் மெலிதாய் அதிர்ந்தான்.

கவி, சாரி கவிதா..வா, வாங்க.. உள்ளே வாங்க.

என்ன மரியாதை எல்லாம் பலமா இருக்கு? என்று சொல்லிக் கொண்டே அங்கு இருந்த
சோஃபாவில் அமர்ந்தேன். அவன் சிரித்துக் கொண்டே சேரை என் பக்கம் திருப்பி அமர்ந்து கொண்டான்.

என்ன சாப்பிட்றீங்க? காபி, டீ?

எதுவும் வேண்டாம் என்று தலையசைத்து விட்டு, அவனிடம்,

என்னை நீ, சாரி நீங்க இங்கே எதிர்பார்க்கலைல்ல?

எதிர்பார்த்திருக்கணுமோ?

கேள்விக்கு கேள்வி பதில் ஆகுமா?

பதிலைத் தெரிஞ்சுகிட்டே கேள்வி கேக்கலாமா?

எனக்குத் தெரிஞ்ச பதில் சரியா தப்பான்னு தான் கேக்குறேன்.

அவன் ஏதோ புரிந்தவன் போல், மெல்ல சிரித்துக் கொண்டே, இந்த, இந்த நிமிஷம், இந்த சூழல், "சரி", "தப்பு"க்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு இடமா தான் நான் பாக்குறேன்.

கதவு சாத்தாமல் தான் நான் உள்ளே வந்தேன். நம் மக்களுக்குத் தான் திறந்து கிடக்கும் அறைகளைப் பார்ப்பதில் என்ன ஒரு ஆர்வம், ஆனந்தம். நான் நினைப்பதை அவன் உணர்ந்து, If you don't mind, may i? என்று கதவைக் காட்டினான்.

Sure என்றேன்.

அவன் கதவை சாத்திவிட்டு, அவன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான். நான் அவனைப் பார்த்து,

சாரி, நீங்க எழுத்து வேலையில பிசியா இருப்பீங்க. I don't want to disturb. நேத்து பாத்ததுல இருந்து ஒரு கேள்வி மனசுல, அதைக் கேட்டுட்டுப் போலாம்னு தான் வந்தேன்.
கேளுங்க என்றான்.

இந்த "ங்க" அவசியம் தானா நவீன்?

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்தேன்.

ஒகே. என் மேல கோவமா?

எதுக்கு?

கமான் நவீன்! கொஞ்சம் வெளிப்படையா பேசுவோமா?

உங்களை உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு, வாழ்க்கைன்னு வரும்போது சேஃபா இன்னொருதரை கல்யாணம் பண்ணிட்டேன்னு என் மேல கோவமா?

சே, சே, கண்டிப்பா இல்லை கவி..

Thanks...for calling me KAVI, அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி நேத்து என்னைப் பார்த்தப்போ, உன் முகத்துல ஒரு சின்ன சந்தோஷம் கூட இல்ல?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.

உன் முகத்தை இப்பத்தான் எனக்கு நீ புதுசா அறிமுகம் செய்யப் போறியா நவீன்? உன்னை எனக்குத் தெரியாதா?

அவன் என்னையே பார்த்தான். நான் தீர்க்கமாய் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

கல்யாணத்துக்கு முன்னாடி நான் இருந்த மாதிரி இப்போ அழகா இல்லைன்னு நீ நினைச்சிருப்பே, அதான் நீ ரொம்ப இன்ட்ரஸ்ட் எடுத்துக்கலைன்னு என் ஹஸ்பண்ட் சொல்றார்.

மெல்ல அதிர்ந்து, நம்ம பார்த்ததை அவர்கிட்ட சொன்னியா?

அவருக்கு உன்னைப் பத்தி தெரியும், நம்மைப் பத்தி தெரியும்.

ஓ!

சொல்லு நவீன்! என் ஹஸ்பண்ட் சொன்ன மாதிரி இப்போ என் அழகு போயிடுச்சு, இனிமே என்கிட்ட பேசி என்ன யூஸ் னு நினைக்கிறியா?

சே சே, அப்படி எல்லாம் இல்ல.

வேற எப்படி?

தெரியல..

இது என்ன பதில்?

(அமைதி)

சொல்லு நவீன்...நேத்துல இருந்து தொண்டையில முள் சிக்கின மாதிரி இருக்கு எனக்கு. ஏன் பெண்ணை அழகை வச்சி மட்டும் பார்க்குறீங்க? அன்னைக்கி நான் உன்கூட வர்றேன்னு தானே சொன்னேன். நீ தானே பயந்த. சரி, உன்னைக் கட்டி இருந்தாலும் இன்னைக்கி நான் இப்படித் தானே இருந்திருப்பேன்? அப்போ என்ன பண்ணி இருப்பே? அப்போ உன் காதல் குறைஞ்சுருக்குமா?

அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நிராயுதபாணியாய் நிற்கும் ஒருவனிடம் போர் புரிவதைப் போல் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இல்லை எனக்குப் புரியல, அப்போ நமக்கு இருந்த சூழ்நிலையை வச்சித் தானே ரெண்டு பேரும் அப்படி ஒரு முடிவு எடுத்தோம். நம்ம சுமூகமா தானே பிரிஞ்சோம். அப்புறம் ஏன் இத்தனை வருஷம் கழிச்சி பார்த்தும் உன்னால நட்பா கூட சிரிக்க முடியல?

நட்பா சிரிக்கிறதா? ம்ம்....கவி, லைஃபே ஒரு progressive compromises இல்லையா? நம்ம பிரிஞ்ச அந்த நாள்ல இருந்து நீ ரொம்ப தூரம் போயிட்ட. காதல்ல இருந்து நீ நட்புக்கு வந்துட்ட, நான் இன்னும் அந்தக் காதல்லயே தான் நின்னுட்டு இருக்கேன்.
அவன் இப்படி ஒரு பதிலைச் சொல்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் மேலும் தொடர்ந்தான்.

ஆமா கவி, ஒருவிதத்துல நீ சொல்ற அந்த அழகான கவியா, இளமை மாறாம நீ இருந்திருந்தா, என் முன்னாடி அப்படி வந்து நீ நின்னுருந்தா நான் உன்கிட்ட நல்லா பேசி இருப்பேனோ என்னமோ. இல்லை என்னை சீப்பா நினைக்காதே. ஏன் அப்படி சொல்றேன் தெரியுமா? ஏன்னா, இன்னைக்கும் கற்பனைல நான் அந்தக் கவி கூடத் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு அந்தக் கவியைத் தான் தெரியும். இந்தக் கவியைத் தெரியாது. முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட நட்பா எப்படி சிரிக்கிறது?

உண்மையை சொல்லப் போனா நம்மோட சந்திப்பையே நான் விரும்பல. திடீர்னு நீ என் முன்னாடி வந்து நின்னதும், என் கற்பனைகள் எல்லாம் கனவு போல கலைய ஆரம்பிச்சிருச்சு. நீ ரொம்ப சாதரணமா என்னை ஒரு நட்பா கருதி உன் வீட்டுக்குக் கூப்பிட்ற? உன்னை மாதிரி காதலை நட்பா சட்டுன்னு எனக்கு மாத்தத் தெரியல. இத்தனை வருஷங்கள் ஆயிடுச்சு, நீ இப்போ வேறு ஒருத்தரோட வாழ்றன்ற இந்த உண்மையே எனக்குப் பிடிக்கல. உன் வீட்டுக்கு வந்து நான் உன் குடும்பத்தையும், உன் வாழ்க்கையையும் எப்படி எதிர் கொள்றது? அது எப்படி என்னால முடியும்?... இல்லை கவி, எனக்கு என்னோட எளிமையான, யாருக்கும் தீங்கிழைக்காத கற்பனை போதும். அது பொய்யா இருந்தாலும் அழகா இருக்கு. நீ இருக்கே, நான் இருக்கேன். நம்ம காதல் இருக்கு. அங்கே காலம் உறைஞ்சு இருக்கு. எனக்கு அது போதும்.

நீ கேட்ட கேள்விக்கு உனக்கு பதில் கிடைச்சுதா, உன் தொண்டையில சிக்கின முள் கீழே இறங்கிச்சான்னு எனக்குத் தெரியல...இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்னும் நான் நினைக்கல. ஒரு ரிக்வஸ்ட். எனக்காக என் மிச்சக் கற்பனைகளை அப்படியே விட்டுட்டு நீ உன் வாழ்க்கைக்குத் திரும்பிப் போ கவி..சாரி, திரும்பிப் போங்க கவிதா என்றான்.

நான் ஒன்றும் சொல்லாமல், சட்டென்று எழுந்து, Thanks Navin. That helps! என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

-

என்னுடன் தலையணைக்கு உறை போட்டிருந்த அவர் நான் சொன்னதை எல்லாம் உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

சொல்லி முடித்துவிட்டு தலையணையை ரெண்டு தட்டு தட்டி அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து,

சே, என்ன மனுஷன்பா, சூப்பர் ல என்றார்.

ஆமா, சரியான லூசு என்றேன்.

லூசா? என்ன நீ? உனக்காக இப்படி உருகுறான் அந்த மனுஷன்? நீ இப்படி சொல்ற? என்றார்.

லவ் பண்ணா தைரியம் இருக்கணும், வாழ்க்கையில எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு கதை, கற்பனை, கனவுன்னு இப்படி பேசிட்டு இருந்தா யாருக்கு என்ன லாபம்? இந்த எழுத்தாளனுங்க எல்லாம்  சரியான மென்டல் கேஸுங்க தான் போல! நல்லவேளை நான் தப்பிச்சேன், படுங்க என்று லைட் ஆஃப் செய்தேன்.
இன்னைக்கி நவீனைப் பார்த்தேன். என்றேன்.

யாரு என்பது போல் பார்த்தார்.

என்னோட x பாய் ஃப்ரென்ட்ங்க. சொல்லி இருக்கேன்ல...

ஓ! ம்ம், லக்கி மேன், என்ன பண்றானாம்.

உங்களுக்கு இருக்கே கொழுப்பு. என்ன பண்ணுவான், அவன் ரைட்டர் தானே.

ம்ம், ஊட்டில எப்படி?

ஏதோ புதுசா நாவல் எழுத வந்திருக்கானாம். ப்ளூ மெளன்டைன் ல இருக்கானாம்.

நீ வீட்டுக்கு இன்வைட் பண்ணலையா?

பண்ணேன், ஆனா அவன் ஒன்னும் பெருசா இன்ட்ரெஸ்ட் காட்டல.

ஏன்? உன்னைப் பார்த்து அவனுக்கு சந்தோஷமா இல்லையா?

தெரியலை. ரைட்டர்களுக்கு எழுத்துல தான் எல்லா உணர்ச்சியும் வரும். மூஞ்சில ஒன்னும் காணோம்.

ம்ம்ம்..உனக்கு?

எனக்கு ரொம்ப சந்தோஷம். எவ்வளவு நாள் ஆச்சு அவனைப் பார்த்து.

எதனால பிரிஞ்சீங்கன்னு சொன்ன?

வீட்ல எல்லாம் வந்து பேசினான். ஆனா, ரைட்டரா தான் ஆவேன்னு சொன்னான். எங்க அப்பா வேணாம்னுட்டாரு.

நீ ஒன்னும் சொல்லலையா?

அப்பாகிட்ட என்ன சொல்றது? ஒரு வேலை பார்த்துட்டே எழுதுன்னு அவன்கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அவன் முடியாதுன்னுட்டான். சரி, அப்பா ஒத்துக்க மாட்டார், நான் உன்கூட வந்துர்றேன்னு சொன்னேன். இல்லை, உங்க அப்பா சொல்றது சரி தானே, எனக்கே என் ப்யுச்சர் தெரியலை, உன்னைக் கூட்டிப் போய் என்ன பண்றதுன்னு தயங்கினான். நான் என்ன பண்ண முடியும்?

ம்ம்ம்..அவன்கூட வாழ்ந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்னு தோணுதா?

ஏங்க அப்படி கேக்குறீங்க? இப்போ எனக்கு என்ன குறை? என்னை ராணி மாதிரி தானே வச்சுருக்கீங்க.

சும்மா விடாத, உண்மையை சொல்லு, அவன் கூட இருந்தா நல்லா இருந்துருக்கும்னு மனசுல ஓரத்துல தோணல?

கல்யாணம் ஆன புதுசுல அவனைப் பிரிஞ்சது, முன்ன பின்ன தெரியாத உங்களைக் கட்டினது எல்லாம் கலக்கமா தான் இருந்துச்சு. அப்புறம் உங்க நல்ல மனசு என்னை அப்படி யோசிக்க விடல. என் காயத்துக்கெல்லாம் மருந்தா நீங்க இருந்தீங்க! அப்புறம் எனக்கு என்ன கவலை?

ம்ம்ம்ம்...

என்ன ம்ம்ம்...ஆமா, இத்தனை வருஷம் கழிச்சி என்னைப் பார்க்குறான், என்னைப் பார்த்த சந்தோஷமே அவன் முகத்துல இல்லைங்க. ஏன் அப்படி?

என்னைக் கேட்டா? நான் என்ன சொல்றது?

நான் வேற யார்கிட்ட கேக்குறது?

மேடம், எந்தப் புருஷனாவது தன்னோட வொய்ஃபோட x பாய் ஃப்ரெண்ட் பத்தி இவ்வளவு நேரம் பேசுவானா? இதுக்கே நீ எனக்கு கோவில் கட்டணும்!

சார், எந்த வொய்ஃபாவது தன்னோட x பாய் ஃப்ரெண்ட பார்த்துட்டு டைரக்டா ஹஸ்பண்ட்கிட்ட வந்து சொல்லுவாளா? இதுக்கு நீங்க எனக்கு என்ன கட்டணும்?
ஹஹஹ..அப்போ ரெண்டு கோவிலாக் கட்டி உண்டியல் பக்கத்துல ரெண்டு பேரும் உக்காந்துருலாம்.

ஐய்யே...பதில் சொல்லுங்க..

எனக்கு என்ன தெரியும்! ஒருவேளை, அப்போ நீ ரொம்ப அழகா இருந்த, இப்போ கல்யாணம் ஆகி, புள்ளை பெத்து அழகெல்லாம் வடிஞ்சிருச்சுன்னு நினைச்சானோ என்னமோ?

அப்போ நான் இப்போ அழகா இல்லையா?

எனக்கு நீ என்னைக்கும் அழகு தானே ராஜாத்தி என்று சொல்லி, என்னை அள்ளி அணைத்தார். நான் அவரின் கழுத்தைக் கடித்தேன்.

-

மறுநாள் விடிந்ததும், நான் என் பழக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தேன். எழுந்ததிலிருந்து சுழன்று சுழன்று பிள்ளைகளையும், அவரையும் அவரவர் இடத்துக்கு அனுப்பி விட்டு ஒரு காபியுடன் உட்கார்ந்த்து டீவியில் "அழகிய அசுரா" பாட்டைப் பார்க்கும்போது சட்டென்று எனக்கு பத்து வயது குறைந்தது. பாடல்கள் மாயக்கம்பளங்கள், எத்தனை சுலபமாய் நம்மை நம் இளமைக் காலங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அவனுடைய பிறந்த நாள் பரிசாய் ஒரு கேசட் முழுவதும் இந்தப் பாட்டை நான் பதிந்து கொடுத்திருந்தேன். எங்கள் வழக்கமான இடத்தில் அமர்ந்து வாக்மேனில் இந்தப் பாட்டை எத்தனை முறை கேட்டிருப்போம். நான் கண்களை மூடி அந்த நிமிடம் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து காபி டம்ளரை வைத்து விட்டு, கண்ணாடி முன் நின்றேன். என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் எப்படி இருக்கிறேன்? இவர் சொன்ன மாதிரி கல்யாணம் செய்து, புள்ளை குட்டி பெற்று நிஜமாகவே என் அழகு வற்றி விட்டதா? அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. மூக்கில் கொஞ்சம் சதை பிடிக்க ஆரம்பித்திருந்தது. வயதாவதற்கான ஒரு அறிகுறி. கண்கள் துடிப்பாகவே இருந்தது. பிள்ளை பெற்றும், வயிறு தொங்கவில்லை, அதோடு நான் பெரிதாய் வெயிட் போடவும் இல்லை. சில சமயங்களில் எனக்கே அப்படித் தோன்றி இவரிடம் சொன்னாலும் இவர் ஒத்துக் கொள்ள மாட்டார். மார்பு கொஞ்சம் சரிந்திருந்தது. அது இயற்கை தான்.

பிறகு ஏன்? இத்தனை ஆண்டுகள் கழித்து எனக்கு அவனைப் பார்த்து ஏற்பட்ட இன்பம், சந்தோஷம், அவனுக்கு ஏற்படவில்லை? நான் அவனை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறானா? அவனை நம்பி நான் அவனுடன் சென்றிருக்க வேண்டுமா? அவன் தானே வேண்டாம் என்றான். இவர் சொன்ன மாதிரி, என் அழகு குறைந்தது தான் காரணமா? என் அழகு மட்டும் தான் நானா? அவன் வாழ்க்கையில் எனக்கு அவ்வளவு தான் இடமா?
யோசிக்க யோசிக்க எனக்குத் தலை சுற்றியது. இந்த விஷயத்தை மறந்து வீட்டு வேலைகளில் மூழ்கினேன். ஆனாலும் திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில் எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்.

(தொடரலாமா?!)

சோஃபாவில் சாய்ந்தபடி, இன்ஸ்டாவில் "யோகாபவானி" (தேடாதீர்கள்) யின் ஆசனங்களை வழக்கம் போல் பார்க்க மட்டும் செய்தேன்.

அப்பா, குழந்தை எல்லாம் எப்படிப்பா பொறக்குது? என்றான் encyclopedia புத்தக சகிதம் கீழே உட்கார்ந்திருந்த ஐந்து வயது ரிஷி.

தூக்கி வாரிப் போட்டது.

சூரியன் பீச்சுக்குள்ல மறைஞ்சி போச்சே, அது நனஞ்சிடாது?

நீங்க, அம்மா எல்லாம் ஏன்பா சீக்கிரமே ஸ்கூல் படிச்சி முடிச்சிட்டீங்க? நான் மட்டும் ஏன் இப்போ படிக்கிறேன்?

என் க்ளாஸ் இஷான் செவப்பா இருக்கான்பா, ஆனா, அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கருப்பா இருக்காங்க! அது எப்படிப்பா?

கீழே நிக்கிறத விட, மலை மேல போனா சூரியன் நம்ம கிட்ட தானேப்பா இருக்கும்? அப்புறம் எப்படி அங்கெ சில்லுன்னு இருக்கு?

இப்படி தினம் தினம், பல விதங்களில், பல கோணங்களில், கேள்விகள் கேட்டு ரிஷி என்னையும், அவன் அம்மாவையும் டார்ச்சர் செய்வது வழக்கம். என்ன சார், டார்ச்சர் னு சொல்றீங்க? புள்ள எவ்வளவு அறிவா இருக்கான்? இந்த வயசுல நல்லா ட்ரையின் பண்ணிடுங்க என்று சொல்பவர்களிடம், இந்தாங்க, புடிங்க, நீங்களே ட்ரயின் பண்ணுங்க, நான் ஒரு இருபது வருஷம் கழிச்சி வந்து வாங்கிக்கிறேன் என்று சொல்லத் தோன்றும்.
அங்கே தொட்டு, இங்கே தொட்டு இன்று அடிமடியில் கை வைப்பது மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டான்.

சொல்லுப்பா, என்றான்.

என்னடா?

பேபி எல்லாம் எப்படி பொறக்குது?

சாமி குடுக்குது என்று மீண்டும் பவானியைப் பார்த்தேன்.

என்னையும் சாமி தான் குடுத்துச்சா?

ஆமா..(பவானி)

அது எப்படி? சாமி மேலே...க்ளவுட்ஸ் மேல இருக்காரு, அங்கே இருந்து எப்படி கரெக்டா இந்த வீடுன்னு அவருக்குத் தெரியும்.

அவர் சாமில்ல, எல்லாம் தெரியும்.

சாமிகிட்ட யார் கேட்டாலும்  baby தருவாரா?

(ஃபோனை லாக் செய்தேன்) பக்தியோட, நம்பிக்கையோட கேட்டா கண்டிப்பாத் தருவாரு.

நீ பொய் சொல்றப்பா..

ஏன்டா, இப்படி சொல்ற?

நான் பல தடவை pray பண்ணி இருக்கேன். எனக்கு சாமி பேபி தரலியே!

உனக்கு கல்யாணம் ஆனாத் தருவாருடா, இப்போ நீயே பேபி ஆச்சே. பேபி வேணும்னா அப்பாகிட்ட, அம்மாகிட்ட கேளு.

நீங்க எப்படி தருவீங்க?

நானும் அம்மாவும் சேர்ந்து உனக்கு ஒரு பேபி தருவோம்.

அப்போ சாமி?

நாங்க சேர்ந்தா சாமி தருவாருடா.

குழப்புறீங்கப்பா! யாரு பேபி குடுப்பா? நீங்களா? சாமியா?

கொதித்து விட்டான். உண்மையை சொல்ல வேண்டியது தான்.

நாங்க தான்டா..நானும் அம்மாவும் சேரணும், god ஒட blessing யும் வேணும். அதுக்காக சொன்னேன். நீ போ, போயி home work பண்ணு.

எனக்கு ஒரு டவுட்டு. சாமிக்கு தான் எல்லாம் தெரியுமே. அவர் blessing இருந்தா போதாதா? நீங்க ஏன் சேரணும்?

ரிஷி, நீ அடி வாங்கப் போற. போயி படி.

சொல்லுப்பா..

எனக்குத் தெரியலடா, சாமி தான் கனவுல வந்து அப்பாவையும்,அம்மாவையும் சேர்ந்து இருங்க, நான் உங்களுக்கு பேபி தர்றேன்னு சொன்னாரு.

அப்போ நானும் ரஷ்மியும் சேர்ந்து இருந்தா சாமி எங்களுக்கும் பேபி தருவாரா?

அடேய்..நீ பெரிய பையன் ஆனதும் தான் பேபி எல்லாம் பொறக்கும் உனக்கு. இப்போ இல்லை. ரஷ்மிகூட எல்லாம் சேரக் கூடாது.

அது ஏன்? இப்போ பொறந்தா என்ன?

பேபிய எப்படிடா வளர்ப்ப? உன்கிட்ட பணம் இல்லையே...

அதான் உன்கிட்ட இருக்கே.

கடவுளே..படுத்துற ரிஷி.

போப்பா, உனக்கு ஒன்னுமே தெரியல..! எனக்கு இந்த birthday க்கு என் பேபி வேணும்.

அடம் பிடித்தான்.

சரி சரி, நானும் அம்மாவும் ட்ரை பண்றோம்டா..அடம் பிடிக்கக் கூடாது.

எனக்கு உங்க பேபி வேணாம், என் பேபி தான் வேணும்.

முருகா, படுத்துறானே..

ஏங்க கொஞ்ச நேரம் விட்டுட்டுக் கடைக்குப் போனா, என்னங்க இது? ஏன் அவனை அழ விட்றீங்க? கையில் பையுடன் என் மனைவி உள்ளே நுழைந்தாள்.

யாருடி அவனை அழ விட்றா? அவன் தான்டி என்னை அழ விட்றான். நீயே கேளு.

என்ன ரிஷி, என் பேபி சமத்துல்ல, ஏன் அழற?

பாரும்மா, அப்பாகிட்ட இந்த பெர்த்டேக்கு ஒரு பேபி கேட்டேன்மா..முடியாதுன்னு சொல்றாரு...

எல்லாம் என் வேலை தான் என்பது போல் என்னைப் பார்த்தாள்.

பேபின்னா? பேபி டாயா மா?

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, நான் அவளின் ரியாக்‌ஷனை கவனித்துக் கொண்டே இருந்தேன்.

இல்லம்மா, நிஜ பேபி. நிவி வீட்ல இருக்கே, அந்த மாதிரி...

என் மனைவி பொய்யாய் என்னை முறைத்தாள்.

இல்லம்மா, உனக்கு பெர்த்டேக்கு ரெண்டு மாசம் தானே இருக்கு? அதுக்குள்ள எப்படி பேபி பொறக்கும். பேபி பொறக்க பத்து மாசம் வேணுமே..அம்மா வேற வீக்கா இருக்கேன்ல.
இப்போ பேபி பொறந்தா அம்மா இன்னும் வீக் ஆயிடுவேன்ல.

ஐய்யோ...உன் பேபி இல்ல, ரஷ்மியும் நானும் சேர்ந்து, சாமி blessing ல பேபி பொறக்கப் போறோம்.

இப்போது என் மனைவி என்னை நிஜமாய் முறைத்தாள்.

என்னை ஏன்டி முறைக்கிற? ரஷ்மிகூட சேர்ந்து அவனுக்கு உடனே பேபி வேணுமாம்.

அதான் ஒரே அடம்.

நீங்க ஏதாவது உளறி இருப்பீங்க!

ஆமா, என்னையே சொல்லு. எங்கே நீ சமாளி பார்ப்போம்.

ரஷ்மி கூடயா? அவ தான் உன்கூட சண்டை போட்டுட்டே இருப்பாளேடா?

நீயும் அப்பாவும் தான் சண்டை போட்டுக்குறீங்க.

இருவரும் Mission Failed என்கிற range ல் பார்த்துக் கொண்டோம். தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்தன் போல, என் மனைவி...

சரி, ரிஷி கண்ணாக்கு என்ன பேபி வேணும்? பாயா? கேர்ளா?

பாய்.

அச்சோ, ரஷ்மி கூட நீ சேர்ந்தா கேர்ள் பேபி தான் பொறக்கும். ரிஷிக்கு கேர்ள் பேபி பிடிக்காதுல்ல?

ம்ம்ம் என்று ஏமாற்றமாய் தலையசைத்தான்.

அப்போ நீ கொஞ்சம் வெயிட் பண்ணனும், இப்போ உனக்கு பேபி வேணுமா? சாக்லேட் வேணுமா? என்று பையிலிருந்து டைரி மில்க் எடுத்துக் காட்டினாள்.

அவன் குதூகலத்துடன் சாக்லேட் என்று சொல்லிப் பறித்துக் கொண்டு ஓடினான்.

என் மனைவி பெருமையாய் என்னைப் பார்த்தாள்.

அம்மான்னா அம்மா தான் என்று கன்னத்தைக் கிள்ளி, சரி, பையன்கிட்ட வெயிட் பண்ண சொல்லிட்ட, இன்னொரு பையனுக்கு ரெடி பண்ணுவோமா? என்றதும், என்னை அவள் பொய்யாய்த் தள்ளி விட,

ரிஷி திரும்பி வந்து..

அம்மா, நான் ரஷ்மி கூட சேர்ந்தா தானே கேர்ள் பேபி பொறக்கும். நான் வேணா ரியான் கூட சேர்ந்துடவா? என்றான்.

தற்கொலை எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. எப்படிச் சாகலாம் என்று தான் அடிக்கடி யோசிக்கிறேன். அந்த யோசனையினால் நான் வாழும் அலுப்பான வாழ்விலிருந்து எனக்கு ஒரு சில நிமிடங்கள் விடுதலை கிடைக்கிறது. மனதுக்கு சுகமாய் இருக்கிறது. பெண்களின் அங்கங்களைக் கற்பனை செய்து சுயஇன்பம் காணும் சுகம். யாருக்கும் தீங்கில்லாத சுகம். சமீபகாலமாய், வாழ்வையும், சாவையும் பற்றி யோசிக்கும்போது, வாழ்க்கை தான் மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.

நான் இங்கு பிறந்திருந்தாலும், என் சக மனிதர்களிடத்திலிருந்து மிகவும் அந்நியப்பட்டிருக்கிறேன். ஒருபுறம், இந்தப் பேரண்டத்தில் மனிதனின் இடம் மிக மிக மிக மிக சொற்பம், அதில் ஏன் இத்தனை ஓட்டம் என்கிறார்கள். மறுபுறம், செய் அல்லது செத்து மடி என்று உந்தித் தள்ளுகிறார்கள். யானைக்கு வெடிப் பழத்தையும் இவர்களே தருகிறார்கள்; அதன் வேதனையையும் இவர்களே படம் வரைகிறார்கள். போரையும் இவர்களே நிகழ்த்துகிறார்கள்; சமாதானத்தின் பிரசங்கத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

என் தந்தை தான் ஆண்மையுள்ளவன் என்று நிரூபிக்கவும், என் தாய் தான் மலடி இல்லையென்று நிரூபிக்கவும் என்னைப் பெற்றெடுத்தார்கள். அல்லது அவர்களும் அப்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். நான் பிறந்ததும் உயிருடன் இருக்கிறேன் என்று அழுது நிரூபித்தேன். நான் சரியாய் வளர்கிறேன் என்று அவர்களைப் பார்த்தும், சிரித்தும், தவழ்ந்தும், நடந்தும், பேசியும், ஓடியும் நிரூபித்தேன். பள்ளியில் படித்தும், பரிட்சை எழுதியும் நிரூபித்தேன். வேலையில் உழைத்து நிரூபித்தேன். திருமணம் செய்தால், குழந்தை பெற்று ஆண்மையுள்ளவன் என்று...ஒரு நாள் தானாய் செத்தும் நிரூபிப்பேன், மனிதன் சாஸ்வதம் இல்லை என்று.

நான் யார், எப்படி இருப்பேன், என்ன படித்தேன், எதில் ஜெயித்தேன், எதில் தோற்றேன், என்ன என் பிரச்சனை..இதையெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. நான் உங்களுடனேயே இருக்கும் ஒரு வேற்றுகிரகவாசி. இப்படிச் சொல்லலாம், எனக்குத் தற்கொலை எண்ணங்கள் தோல்வியினால் வரவில்லை. இப்படி அலுப்பாய் வாழ்வதினால் வருகிறது. வாழ்வின் ஒவ்வொரு படியிலும் Hence Proved என்று சொல்லிக் கொண்டே ஏற எனக்கு அலுப்பாய் இருக்கிறது.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய் விட்டுச் சிரிக்கும்

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

அறுபது வருடங்களுக்கு முன் இந்த வரிகளை எழுதிய கா. மு. ஷெரீப்பின் கைகளுக்கு முத்தம் கொடுப்பேன். அறிவுள்ளவர்களாய் இருந்தால், இந்த வரிகளைக் கேட்ட பிறகாவது வாழ்வின் துயர் காரணமாக ஒரு சக மனிதனை சாக விட்டிருக்க மாட்டீர்கள். மளிகைக் கடை அண்ணாச்சி போல் எப்போதும் எதையாவது எடை போட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள். உங்கள் மகனையோ, மகளையோ பக்கத்து வீட்டு பிள்ளையுடன் ஒப்பிட்டுப் பேசி இருக்க மாட்டீர்கள். வெற்றி வெற்றி என்று வெறி கொண்டு திரிந்து அறத்தை விற்றிருக்க மாட்டீர்கள். இன்று என்னை இந்தக் கடிதம் எழுத உந்தி இருக்க மாட்டீர்கள்.

"இந்த வழியில் நாங்கள் சென்றோம்" என்று சொல்லுங்கள். "இதில் தான் செல்ல வேண்டும்" என்று சொல்லாதீர்கள். எனக்கு மற்றொரு வழி பிடித்திருந்தால், நான் தோற்றுத் திரும்ப வேண்டும் என்று விரும்பி அங்கேயே எனக்காகக் காத்திருக்காதீர்கள். ஒரு வேளை, நான் தப்பித் தவறி, தோற்காமல் திரும்பினால் என்னைப் பெருமிதம் கொள்ளவும் வைக்காதீர்கள். ஒவ்வொரு படியாய் நானே தட்டுத் தடுமாறி ஏறிக் கொள்கிறேன் Hence proved இல்லாத படிக்கட்டுகள். நீங்கள் எல்லோரும் ஏறிக் கொண்டிருக்கும் படியில் நான் இறங்கி வந்து கொண்டிருக்கலாம். நொண்டி அடித்துக் கொண்டிருக்கலாம். ஒருவேளை, எனக்குப் படிக்கட்டுகள் கூட தேவையில்லாமல் இருக்கலாம். சமதளத்தில் நான் ஆனந்தமாய் என் அறுபது வயது வரை வாழ்ந்து விட்டுப் போகிறேனே. உங்களுக்கு என்ன வருத்தம்? நிரூபணம் இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் எனக்கு.

விசித்திரமாய் இருக்கிறது, "தற்கொலை" என்று ஒரு விளையாட்டில் தான், ஜெயித்தால் அவுட்!

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், இந்தக் கடிதத்தை நான் படிக்கிறேனா, அல்லது ஒரு போலீஸ் அதிகாரி படிக்கிறாரா என்ற இடைவெளியில் தான் என் உயிர் இருக்கிறது.

எனக்குத் தெரியும், என் சாவிலும் நீங்கள் என்னை எடை போடுவீர்கள். எதை நிரூபிக்க இவன் இப்படிச் செய்தான் என்று கேட்பீர்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் வெற்றியை நோக்கி மட்டுமே ஓட வேண்டும் என்ற உங்களின் நிர்பந்தம் உவப்பாய் இல்லை எனக்கு. தோல்வியை நோக்கித் தலை தெறிக்க ஓட வேண்டும் எனக்கு. அதனால் என்ன? ஒருவேளை, உங்களுக்கு இனி நான் எதையும் நிரூபிக்கப் போவதில்லை என்பதற்கான முடிவாய் இது இருக்கலாம்.

19/08/1998
சென்னை
------------------

24/2/2040

படிக்கப் படிக்கச் சிரிப்பாய் வந்தது. "தாத்தா" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

அன்று வேலையை முடித்து விட்டு வர சற்று நேரமாகிவிட்டது. பதட்டத்துடன் கதவைத் திறந்ததும் மூத்திர நெடி முகத்தில் அறைந்தது. ரமா அக்கா வரவில்லை என்று புரிந்தது. அம்மா கட்டிலில் படுத்தபடி அரற்றிக் கொண்டிருந்தாள். விளக்கைப் போட்டேன். அவள் கண்கள் கூச இமைகளை நெறுக்கிக் கொண்டாள். அவள் உடையெங்கும் ஈரம். வெகுநேரமாய் ஈரத்தில் கிடந்ததால் கால்கள் சில்லிட்டிருந்தன.

அடுக்களைக்குச் சென்று அடுப்பு மூட்டி ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்தேன். திரும்பி வந்து அவள் உடலில் போர்த்திய துணியை விலக்கினேன். தொப்பலாய் நனைந்திருந்தது. அதை எடுத்து கீழே போட்டேன். அவள் தெம்பில்லாமல் அரற்றிக் கொண்டே இருந்தாள். கவனமாகக் கேட்டால் என்னை வைது கொண்டிருந்தாள். பாவி, பாவி...என்னைக் கொன்னுடு, கொன்னுடு என்றும், ரமா முண்ட என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பழைய தகரக் கட்டில் கொஞ்சம் தொட்டாலே க்ரீச்சிட்டது.

காலையில் துடைத்துக் காயப்போட்டிருந்த அந்த நைந்து போன லுங்கியை கொண்டு வந்தேன். அவளின் கால்களைத் தூக்கி லுங்கியால் துடைத்தேன். லுங்கி நன்றாக காய்ந்திருந்தால், அது ஈரத்தை உறிஞ்சிக் கொண்டது. அவள் கால்களை சூட பறக்கத் தேய்த்து விட்டேன். வலிக்குதுடா...சண்டாளப் பாவி...என்று சற்று பலமாகவே சொன்னாள். எனக்கு இது பழகிவிட்டது. ஒன்றா, இரண்டா, ஏழு வருடங்களாய் தினமும் அவளின் வசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அம்மா ஒரு வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தவள். நான்கு பிள்ளைகளைப் பெற்று, கணவனை இழந்து தனியாக அத்தனை பேரையும் ஆளாக்கியவள். என் பதினைந்து வயதில் அண்ணன்கள், அக்கா அத்தனை பேருக்கும் கல்யாணம் செய்து முடித்தவள். அவர்களின் பிள்ளைகள் வளரும் வரை, இங்கே அங்கே என்று போட்டி போட்டுக் கொண்டு உறவு கொண்டாடப்பட்டவள். மரம் தழைத்தோங்கி நிற்கும்போது தானே பறவைகளின் கூடு. அது பட்டுப் போன பிறகு பறவைகளுக்கு அங்கு என்ன வேலை? நடமாடும் வரை அவர்கள் அத்தனை பேரின் பொதி சுமந்தவள் கை கால் விழுந்த போது அவளே பொதியாய் மாறிப் போனாள். அன்று வாழ்வில் ஏதோ புரிந்து கொண்டவள், எல்லோரிடமும் துவேஷத்தை மட்டும் பாராட்டத் தொடங்கினாள். பரிதாபப்பட்டு பார்க்க வருபவர்களையும் வசை மாப் பொழிந்தாள். அவளின் கையறுநிலையின் மீது உள்ள கோபத்தை எல்லோரிடமும் ப்ரயோகித்தாள்.

விசித்திரமாய் இருக்கிறது. நாம் ஒருவரிடம் ஒரு சாதாரண உதவி கேட்க வேண்டும் என்றாலும், அவர்கள் நம்மை என்ன எரிச்சல் படுத்தினாலும், அதை நாம் பொருத்துக் கொண்டு அந்த உதவியைக் கேட்டுப் பெறுவோம். ஆனால் என் அம்மா, அவளின் எல்லாத் தேவைகளுக்கும் முழுவதுமாய் சார்ந்திருக்கும் என்னிடம் தான் அதிக எரிச்சல் அடைகிறார். அதிக வசை பொழிகிறார். நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது.

நான் செய்வதை பெரிய தியாகமாக நான் நினைப்பதில்லை. ஒருவேளை, இப்படி இருக்கலாம். அவள் எனக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை. அதனால் எனக்குக் குழந்தைகள் இல்லை, அதனால் அவளை உறவு கொண்டாடவில்லை, அதனால் அவளை உதறத் தேவையில்லாமல் போயிருக்கலாம். அதோடு, சதா துவேஷித்துக்கொண்டே இருக்கும் ஒருவருக்கு பணிவிடை செய்வதில் ஏதோ ஒரு ஞானம் இருக்கிறது.  ஓங்கி அறையும் ஒருவரிடம் மறு கன்னத்தைக் காட்டும் அன்பு அது. அதை அன்பு என்று சொல்லும்போதே, உண்மையில் அது அன்பு தானா என்ற கேள்வியும் எழுகிறது.

கட்டிலைத் துடைத்து விட்டு, மின்விசிறியை நிறுத்தினேன். அவள் உடைகளைக் கலைந்தேன். ஒரு வயதான, பட்ட மரம் போல இருந்தாள். உடலெங்கும் எண்பது வயதின் வேர்கள் பரவிக் கிடந்தன. அடுக்களை சென்று வெந்நீரை எடுத்து, கொஞ்சம் மஞ்சள் சேர்த்தேன், கையோடு ஒரு நல்ல துணியை எடுத்து கொண்டேன். துணியை வெந்நீரில் முக்கிப் பிழிந்து மெதுவாய் உடலெங்கும் துடைத்து விட்டேன். அவள் உதடுகள் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளும், கால்களும் எந்த வித அசைவும் இல்லாமல் கிடந்தன. முழுவதும் துடைத்து விட்டு, துவைத்துக் காய வைத்திருந்த வேறு புடவையை உடலில் சுற்றினேன். இன்னொரு நைந்து போன புடவையை அவளின் முதுகின் கீழ் வைத்துக் கீழ் வரைப் பரப்பினேன். இடையில் கட்டில் ஓயாமல் ஓசை இட்டுக் கொண்டே இருந்தது. மின்விசிறியைப் போட்டு விட்டு, அடுக்களைக்குச் சென்று இருவருக்கும் கொஞ்சம் கருப்பட்டிக் காபி போட்டேன்.

கண்ணை மூடிக் கொண்டிருந்தவளை மெல்ல என் மடியில் கிடத்தி, பதமான சூட்டில் காபியை ஊட்டினேன். ஓவ்வொரு முறை வாயில் ஊற்றி விட்டு நெஞ்சைத் தடவி விட்டேன். இதன் இடையில், சனியனே, மெல்ல என்று ஏதோ சொன்னாள். அவளுக்கு கொடுத்து விட்டு, படுக்க வைத்து, நான் ஒரே மடக்கில் என் பங்கு காபியை வாயில் ஊற்றினேன்.

களைத்து போட்ட உடைகள், துணிகள் அனைத்தையும் அள்ளி எடுத்து சோப்பு பவுடரில் ஊற வைத்தேன். உள்ளே வந்து சாமி படம் அருகில் வைத்திருந்த ஊது பத்தியை ஏற்றினேன். நல்ல மணம் பரவத் தொடங்கியது. மனதுக்குக் கொஞ்சம் உற்சாகமாய் இருந்தது. அடுக்களைக்கு சென்று அரிசி களைந்து சாதம் வைத்தேன். இருந்த இரண்டு தக்காளியை வைத்து, புளியைக் கிள்ளிப்போட்டு ரசம் வைத்தேன். அம்மாவுக்கு சாதம் குழைவாய் இருக்கணும். இல்லைன்னா இறங்காது.

சாதம் நன்றாகக் குழைந்திருந்தது. கொஞ்சம் ஆற வைத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் தட்டில் எடுத்து வைத்து அம்மாவுக்கு ஊட்டினேன். இருமலும், வசையும் தொடர்ந்தது. ஒரு வழியாய் போராடி ஊட்டி முடித்து, நான் நாலு வில்லல் வாயில் போட்டுக் கொண்டேன். அம்மாவுக்கு மாத்திரைகளை பொடி செய்து கொஞ்சம் கொஞ்சமாய் வாயில் ஊற்றினேன். கசப்பு நாக்கில் ஒட்ட ஒமட்டினாள். அதிக இருமல் வந்துவிட்டால், நெஞ்சு எரிச்சல் அதிகமாகிவிடும். மெது மெதுவாய்க் கொடுத்தேன். மருந்துக் கசப்புக்கு டாக்டரைத் திட்டினாள். விளக்கை அணைத்தேன்.

அவளை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஊறப் போட்டத் துணிகளைத் துவைத்தேன். மணி பதினொன்னரை ஆகி இருந்தது. கட்டிலுக்கு அருகில் பாய் விரித்து, சுவரில் சாய்ந்தபடி அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவை எங்காவது சேர்த்து விடும்படி அண்ணன்களும், அக்காவும் சொன்னது ஏனோ ஞாபத்துக்கு வந்தது. அதனால் என்ன ஆகி விடப் போகிறது. அவளுக்கு நான் துணை, எனக்கு அவள் துணை. மனித மனம் எல்லா அலுப்பான வேலைகளிலும் ஒரு கட்டத்தில் ஒருவித களிப்பைக் கண்டடைந்து விடும் என்றே தோன்றுகிறது.

எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. பயங்கரமான இருமல் சத்தம் கேட்டு எழுந்தேன். விளக்கைப் போட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து தண்ணீரை எடுத்து அம்மாவை படுக்க வைத்து நெஞ்சைத் தடவிக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றினேன். தண்ணீரை வழக்கத்தை விட அதிகமாக துப்பினாள். அவள் முகம், சொல்லமுடியாத வலியை, துயரைக் கொண்டிருந்தது. தண்ணீரைக் கீழே வைத்து, நான் அவள் நெஞ்சைத் தடவத் தடவ, அவள் கண்களை அகலமாய் விரித்து வேண்டாம் என்பது போல் ஏதோ செய்தாள். அவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் துவேஷம் இன்று பூரணம் பெற்றது போல் அவள் கண்களை அகல விரித்திருந்தாள். நோய்ப்பட்ட உடம்பில் இத்தனை துவேஷத்துடன் கண்கள் வெளியே வருவது போல் அவளை அப்படிப் பார்க்க பயங்கரமாக இருந்தது. இது வரை அவள் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை.  நான் நெஞ்சிலிருந்து கையை எடுத்ததும், கண்களை மூடிக் கொண்டு, மூச்சை இழுத்து இழுத்து விட்டாள். மூச்சு விடச் சிரமப் படுவதைப் பார்த்து, உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று எழ முயன்றால் அதே துவேஷப் பார்வை. தலையை வெட்டி வெட்டி மறுத்தாள்.

அவளை மடியில் கிடத்தியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். தலையை வெட்டியபடியே, கண்களை மூடியும், திறந்தும் போராடிக் கொண்டிருந்தாள். ஒரு கணத்தில், மூச்சை இழுத்து ஒரு விதமான விநோத ஒலியுடன் அவள் அடங்கிப் போனாள். அதன்பிறகு உடலில் எந்த அசைவும் இல்லை. அவள் நெஞ்சில் கை வைத்தேன், கண்கள் மூடியபடியே இருந்தது.

அவளின் அந்த அகன்ற பார்வைக்கும், வெட்டிய தலைக்கும் எனக்கு விடை கிடைத்தது போலத் தோன்றியது. அவளின் அத்தனை துவேஷத்துடன் நான் செய்த அன்புக்குக் கைமாறாக அதே துவேஷத்துடன் அவள் எனக்குக் காட்டிய அன்பாக அவளின் முடிவு எனக்குப் பட்டது. போதும் போடா என்று தாய் ஒரு மகனிடம் சொல்வதை போல்.

அவளின் தலையை கட்டிலில் கிடத்தி, அவளையே பார்த்து கொண்டு நின்றேன். இன்னும் முகத்தில் துவேஷம் தீர்ந்தபாடில்லை. அவளின் கால்களுக்கு அருகில் அமர்ந்து, அவளின் கால்களைப் பற்றி "நன்றிம்மா" என்றதும் ஏனோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

வால்மார்ட் ஃப்ரோசன் செக்‌ஷனில் நின்று கொண்டு அந்த உறைந்து போன சிக்கனுடன் ஆழ்ந்த யோசனையில் இருந்த சசியை "யோகர்ட்" எடுக்க வந்த ராம் பார்த்தான். அவளா அது? என்று ஒரு நொடி யோசித்தவன், அவள் திரும்பி நின்றால் கூட தன்னால் கண்டுபிடித்திருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டான். அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குப் பரவசமாய் இருந்தது. அவனால் இன்னும் நம்பமுடியவில்லை. அவளை சந்தித்து, பேசி, கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, அழுது, ஓய்ந்து, பிரிந்து இன்றோடு ஒன்பது வருடங்கள், நான்கு மாதங்கள் மற்றும் சில தினங்கள் ஆகி விட்டது.

அப்பொழுது இருபதுகளின் அழகும், வனப்பும் கொண்டவள் இன்று முப்பதுகளின் கலையும், அம்சமும் கொண்டிருந்தாள். அவளின் பின்னால் சென்று மெதுவாக நின்றவனை, தேவ் என்று நினைத்து, "இந்த சிக்கன்" என்று சொல்லித் திரும்பியவள் ராமை எதிர்பார்க்கவில்லை.

"ராம்" என்றவளின் கண்கள் இரண்டும் ஆச்சர்யக்குறிகளாய் மாறின.

"என்ன சசி, சிக்கனுக்கு உயிர் குடுக்குறியா?" என்றான் சகஜமாக.

Ram, OMG, this is not happening. Really you? How? When?

அதோட நிறுத்திக்கோ! Why னு கேட்றாத..

அவள் சிரித்து, "எப்போடா US வந்தே?" என்றாள்.

Just one month before. H1.

தேவ் இருவரின் அருகில் வந்து அவனின் அறிமுகத்துக்காக சசியையும், ராமையும் பார்த்தான்.

Oh, Sorry. Dev, this is Ram மைக்ரோ விநாடிகள் யோசித்து, My friend, collegemate, And Ram, this is Dev, my Husband என்றாள்.

இருவரும் Hello க்களால் கை குலுக்கிக் கொண்டார்கள்.

ராம், உன் wife எங்க? என்றாள் சசி ஆவலுடன்.

ராம் அவளின் நினைவு வந்தவனாய், சுற்றி முற்றி பார்த்து, ப்ரியா என்று கூப்பிட்டான். இரண்டு பேர் திரும்பிப் பார்த்தார்கள். ராம், இன்னொரு ப்ரியாவைப் பார்த்து sorry என்று அவன் ப்ரியாவை சைகையில் அழைத்தான்.

அவள் சிரித்துக் கொண்டே ஒரு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தாள்.

ப்ரியா, இவங்க தான் சசி. இது தேவ் அவங்க husband. இது ப்ரியா, my wife என்றான்.

அவள் இருவரையும் பொதுவாய் பார்த்து Hello என்றாள்.

சசி தன்னிடத்தில் இருப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவங்களைத் தெரியுமே, உங்க பழைய காலேஜ் ஆல்பம்ல பார்த்துருக்கேன். நீங்க அதுல ரொம்ப அழகா இருப்பீங்க என்றாள்.

உடனே தேவ், அப்போ இப்போ இல்லையா? என்று சிரித்தான்.

இப்பவும் தான் என்று ப்ரியா சிரித்தாள். எல்லோரும் சிரித்தார்கள்.

சசியும், ராமும் சினிமாவில் வருவது போல் தங்களின் புதைந்த கதையை தங்களின் பார்வைகளால் பரிமாறிக் கொள்ளவில்லை. சகஜமாகவே இருந்தார்கள்.

Ram and Priya, Good to see you guys. Why don't you join us for the lunch tomorrow? என்ன சசி, உன் ஃப்ரெண்டை invite பண்ணலையா?

தேவ், you stole my words. என்றாள் சசி. Asusual என்று தேவ் சிரித்தான்.

So, tomorrow 12 we will meet. location அனுப்புறேன். உங்க நம்பர் சொல்லுங்க என்று தேவ் ஃபோனை எடுத்தான்.

ராம் முழிப்பதைப் பார்த்து சிரித்த ப்ரியா, அவர்களிடம், இவருக்கும் ஃபோனுக்கும் ஏழாம் பொருத்தம். எங்கயாவது போட்டுடு தேடிட்டே இருப்பாரு. வந்து ஒரு மாசம் ஆச்சு, இன்னும் இவர் நம்பர் இவருக்கு தெரியாது. நீங்க நோட் பண்ணிக்குங்க என்று அவள் நம்பரைச் சொன்னாள்.

மிச்ச சொக்க ஷாப்பிங்கை முடித்து விட்டு நால்வரும் நாளை சந்திப்பதாகப் பிரிந்தார்கள்.
ராமைப் பற்றி சசி தேவாவிடமோ, சசியைப் பற்றி ராம் ப்ரியாவிடமோ தேவைக்கதிகமாக எதையும் சொன்னதில்லை. அவர்களின் உறவு ஒரு அழகான கனவு போல் அவர்கள் மனதில் எங்கோ இருந்தது. அதை அவ்வப்போது அசைபோடுவது இருவருக்கும் பிடித்திருந்தது. அன்று சூழ்நிலை காரணமாக பிரியும்போதும் அவர்கள் இருவரும் ஒத்திசைத்துத் தான் அந்த முடிவை எடுத்தார்கள். உலகமே கைக்குள் அடங்கி விட்ட பிறகும், அவளை அவனோ, அவளை அவனோ தேடவில்லை.

மறுநாள் சசிக்கு காலையில் இருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டது. தலைக்குளித்து, ஒரு ப்ளைன் மெரூன் காட்டன் சாரி கட்டி இருந்தாள். அழகாக இருந்தாள். சந்தோஷமாக இருந்தாள். ராமுக்குப் பிடித்த மட்டன் ப்ரியாணி, மட்டன் சுக்காவை சமைத்தாள். தேவ் தன் மகளிடம், அம்மாவின் நண்பர்கள் வீட்டுக்கு வருவதே அம்மாவின் எக்ஸ்ட்ரா சந்தோஷத்திற்குக் காரணம் என்று சசியை ஓட்டிக் கொண்டிருந்தான். ராமும், ப்ரியாவும் பனிரென்டு மணிக்கு ஒரு சின்ன கிஃப்டுடன் வந்தார்கள். தேவ்,

ராம், meet my daughter vaishali, she is an ABCD என்றான்.

ராம் முழிக்க சசி, American Born Confused Desi என்று சொல்லிவிட்டு, "தேவ் அவங்களே இப்போத் தான் US வந்துருக்காங்க. வந்ததும் வராததுமா உங்க jargons எல்லாம் கொட்டி ஏன் பயமுறுத்துறீங்க?" என்றாள்.

பதிலுக்கு ராம், பரவாயில்லை சசி, ஒரு ABCD பத்தி ஒரு ACID கிட்ட தானே சொல்லனும் என்று நிறுத்தி எல்லோரையும் பார்த்து...America Came Intelligent Desi என்றதும் எல்லோரும் சிரித்தார்கள்.

ப்ரியா, வைசாலியை அருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டாள். ராம், நீங்க நேத்தே வைசாலி பத்தி கேட்ருந்தா ஏதாவது கிஃப்ட் கொண்டு வந்துருக்கலாம் அவளுக்கு. பாவம். Sorry வைசாலி என்றாள்.

அவள் American ascent ல் No problem என்றாள்.

தேவ், No ப்ரியா, No formalities என்றதும், சசி சாப்பாடு எடுத்து வைத்து எல்லோரையும் அழைத்தாள்.

ராமின் கண்கள் சசியை சந்தித்தபோது, ராம், அவளின் அழகை ஆமோதித்தான். சசி தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு காதில் விழுந்த முடியைக் கோதி விட்டு பரிமாறினாள்.

சாப்பிட்டுவிட்டு, ப்ரியாவும் சசியும் கிட்சனில் நின்று சாமான்களை டிஷ் வாஷரில் போட்டபடி பேசிக் கொண்டிருந்தனர். ராமும் தேவும் இந்திய அரசியலையும், corporate policies ஐயும், lay offs ஐயும், தமிழ் சினிமாவையும் அலசிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வப்போது நால்வரும் நால்வரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு தங்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். எல்லோருமாய் ஒரு வாக் போனார்கள். தேவ் புதிதாய் வந்த ராமுக்கு அமெரிக்க வாழ்க்கையை விளக்கிக் கொண்டிருந்தான். பிறகு எல்லோரும் கார்ட்ஸ் விளையாடினார்கள். ராமும் ப்ரியாவும் அவர்கள் இருவரையும் அடுத்த வாரம் வீட்டுக்கு அழைத்து விட்டு கிளம்பினார்கள். அந்த நாள் இனிதாய் கழிந்தது.

அன்று இரவு ராமைப் பற்றி சசியும், சசியைப் பற்றி ராமும் தேவிடமும், ப்ரியாவிடமும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருந்தது. இந்த நட்பு தொடர வேண்டும் என்று தேவும், ப்ரியாவும் ப்ரியப்பட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்தில் இருந்த போது ராமுக்கு அவன் வாட்ஸாப்பில் ஒரு மெசேஜ் வந்தது.

Ram, yesterday was wonderful. Great to have you and priya with us. nee maarave illai.

ராம் முதல் காரியமாக அவள் நம்பரை சேவ் செய்தான். பிறகு பதில் சொன்னான்.

Same here sasi. thanks for inviting us. it was like a dream to meet u again. nee maaritta, innum azhaga :)

சசி கார்டன் மறந்து, யோகா மறந்து, சமைக்க மறந்து, துணி துவைக்க மறந்து...ராம் meeting மறந்து, estimation மறந்து, escalation மறந்து, excel sheet மறந்து....இந்த தங்க்லீஷ் சாட் மாலை வரை நீண்டது. முடியும்போது சசி...

ok, we will go..tmw 11 am i will pick you from the office. delete the chat என்றாள்.

அடுத்த நாள் lunch ல் ஆரம்பித்த அந்த சந்திப்பு அந்த வாரம் முழுவதும் தொடர்ந்தது. சில சமயம் நேரில், எப்போதும் சாட்டில். இத்தனை வருடங்களாய் பேசாமல் இருந்த அத்தனை விஷயங்களையும் பேசித் தீர்த்தாலும் அவர்களுக்கு அது போதவில்லை. சில சமயங்களில் ராமின் கைகளைப் பற்றி சசி அழுது ஓய்ந்தாள். பல நாள் பிரிந்த தோளில் சாய்ந்து தேம்பினாள். நட்பு ஒன்று தான் இனி நமக்குள் என்று இருவரும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டார்கள்.

அன்று சசி அவனை வீட்டுக்கு அழைத்திருந்தாள்.

கதவைத் திறந்ததும், ராமை உள்ளே அழைத்து என்னடா, ட்ரெஸ் இது? இன்னும் நீ லேட்டஸ்ட் ட்ரென்டுக்கே வர்லியா? அங்கிள் மாதிரி ட்ரெஸ் பண்ற?

நீ என்னைக்கி தான் என் ட்ரெஸ்ஸிங் சென்ஸை பாராட்டி இருக்கே?

ஆமா, அப்படி ஒரு சென்ஸ் இருந்தாத் தானே பாராட்றதுக்கு. உக்காரு. ஆமா, என்கூடவே சுத்திட்டு இருக்கே, ஆபிஸ்ல இன்னுமா உன்னை நம்புறாங்க? என்று கலாய்த்தாள்.

உன்கூட ஊர் சுத்திட்டு ராத்திரி பூரா கண்ணு முழிச்சி வேலை பாக்குறது எனக்குத் தானே தெரியும்.

டேய் உண்மையை சொல்லு, ராத்திரி பூரா கண்ணு முழிச்சி நீ இந்த வேலைய தான் பாக்குறியா? என்று சீண்டினாள். ராம் சிரித்தான்.

இரு காஃபி கொண்டு வர்றேன் என்று கிட்சனுக்குள் நுழைந்தாள்.

ப்ரியா எப்படி இருக்கா?

அவளுக்கு என்ன? நாள்பூரா Netflix ல சீரிஸ் பாத்துட்டு கிட்டத்தட்ட ஒரு சைக்கோ மாதிரி சுத்திட்டு இருக்கா.

Y don't you send her here?

ம்ம்..இப்போதான் driving போறா! அப்புறம் நீ விட்டாலும், அவ விட மாட்டா..

ச்சீ..such a sweet girl.

தேவ் எப்போ வர்றாரு?

Conference friday முடிஞ்சிறும், இந்த weekend வருவேன்னு சொன்னாரு.

அவள் காஃபி கொண்டு வந்து கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்.

அவன் காஃபி ஆறட்டும் என்று டேபிளில் வைத்தான்.

இன்னுமாடா ஆறிப் போன காஃபியை குடிக்கிறே? நீ மாறவேயில்லைடா..

ஒரு மனுஷன் மாறாம இருந்தா பாராட்டனும்மா..என்று சொல்லி சகஜமாய் பேசுவதாய் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அல்லது அப்படி இருவரும் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில், அவர்கள், (நீங்கள், நான், எல்லோரும்) எதிர்பார்த்த அந்த Awkward silence வந்தது.

ராம் சசியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கொஞ்சம் அமைதி ஆனாள்.
கல்லூரியில் படிக்கும்போது "என்ன?" என்று கேட்பதற்கு சைகையில் புருவத்தை தூக்கிக் காட்டுவாள், அவளை அறியாமல் அதே போல் செய்தாள்.

ராம் சசியின் கையைப் பிடித்துக் கொண்டான்.

நம்ம ஏன் அப்படி லவ் பண்ணோம்? நம்ம ஏன் பிரிஞ்சோம்? நம்ம ஏன் மீட் பண்ணோம்?

அவள் பதில் ஏதும் சொல்லாமல், ராமையே பார்த்தாள்.

ராம் அவள் கரங்களை முத்தமிட்டான். அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

ராமுக்கும் சரி, சசிக்கும் சரி, இருவரின் மனமும், உடலும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு இருவேறு திசைகளில் போய்க் கொண்டிருந்தன. மனம் மொத்த சமூகத்தையும் சாட்சியாய் வைத்துக் கொண்டு நிற்க உடல் "தேவை" என்ற ஒரே ஒரு சாட்சியுடன் தைரியமாக நின்று கொண்டிருந்தது. இருவரின் காமத்தில் சமூகம் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

ராம் அவளிடம் நெருங்கி உட்கார்ந்தான். அவனின் முகத்தை அவளின் முகத்துக்கு நேரே கொண்டு சென்றான். அவள் கண்கள் மூடி, உதடுகள் துடிப்பதை சில நொடிகள் பார்த்த படி இருந்தான். அவள் பாவமா, தான் பாவமா என்று அவனுக்குப் புரியவில்லை. "தேவை" என்ற பதத்திற்கு ஆண் உடல், பெண் உடல் என்ற பேதம் உண்டா தெரியவில்லை. அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்ட அடுத்த கணம், சசி கையை உதறி எழுந்து நின்றாள்.
அவள் முகம் முழுவதும் பதட்ட ரேகைகள்.

Sorry Ram, I can't do this. This is not right என்றாள்.

ராம் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

I am sorry Sasi என்றான்.

இல்லை ராம், தப்பு என் மேல தான். நான் உன்கூட முந்தி மாதிரி க்ளோஸா மூவ் பண்ணி இருக்கக் கூடாது. நம்ம கதை அன்னையோட முடிஞ்சு போச்சு ராம். நீ என்னோட ராம் இல்லை, நான் உன்னோட சசி இல்லை. I love Dev. Dev loves me a lot. Infact, He is very posessive about me. என்னால அவருக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ண முடியாது. அப்படியே பண்ணாலும், அவர்கிட்ட இருந்து நான் தப்ப முடியாது ராம். என்னை மன்னிச்சிடு ராம்.

ராம் கொஞ்சம் சகஜமானான். Please sasi, don't be sorry. எப்படியோ தடுமாறத் தெரிஞ்சோம். நீ காப்பாத்திட்ட. Thanks. நம்ம ரெண்டு பேர் பாதையும் பிரிஞ்சி ரொம்ப நாளாச்சு. இப்போ அந்தப் பாதைகளை இணைக்கிறதால லாபம் இல்லை. பிரிஞ்சு போன வெவ்வேறு பாதையில பயணம் செய்றது தான் எல்லாருக்கும் நல்லது. நம்ம வழக்கமா சாட் டெலிட் பண்ற மாதிரி இந்த நாளையும் டெலிட் பண்ணிடு. I agree, Dev is a nice man.

ராம் ஆறிப்போன காஃபியைக் குடித்தான். எழுந்தான்.

Thanks for the coffee and everything Sasi. Sorry...

என்று நடந்தான். சசி உடைந்து அழுதாள்.

அன்று இரவு வெகு நேரம் கழித்து, வாட்ஸாப்பில் ஒரு "குட்நைட்" மெசேஜ் வந்தது.

அது தேவ், ப்ரியாவுக்கு அனுப்பியது.முருகன் வீட்டுக்கு வரும்போது ஹரீஷ் தூங்கி இருந்தான். அன்று கடை மூட நேரமாகிவிட்டது. காலையில் ஒரு பல்சரை டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது. திடீரென்று இடையில் வழக்கமான ஓட்டை ஸ்கூட்டியுடன் வந்த முதலாளி நண்பரால் பல்சர் ரெடி செய்வதில் லேட் ஆகிவிட்டது. நாளை காலை கஸ்டமர் வந்து திட்டினால், அவர் எதிரில், ஒன்றுமே தெரியாத மாதிரி ஓனர் என்னைத் தான் கத்துவார். "உங்க ஃப்ரெண்டு வண்டி சரி பண்ணதால தானே இது சரி பண்ண முடியல" என்று சொல்லவா முடியும்?

உடம்பெல்லாம் நச நசவென்று இருந்தது. க்ரீஸை என்ன தேய்த்துக் கழுவினாலும், ரேகையோடு ஒட்டிக் கொண்ட மாதிரி கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அந்த பதினோரு மணி இரவிலும் தண்ணீர் வெந்நீர் போல் சுட்டது. உடம்பெல்லாம் நன்றாய்த் தேய்த்துக் குளித்தான். "தனம்" என்றதும், துண்டை நீட்டினாள். நன்றாகத் துவட்டிக் கொண்டு கைலிக்கு மாறினான். வாழ்க்கையில் என்ன கஷ்டம் இருந்தாலும், குளித்து விட்டு, வெறும் கைலியில் சாப்பாட்டுக்கு அமரும் போது அந்த சொற்ப நேரம் மனதுக்கு இதமாய்த் தான் இருக்கிறது. ஒரு நாள் முடிந்த ஆசுவாசம். வயித்துப்பாட்டுக்கு ஒரு பதில்.

இம்புட்டு நேரம் அப்பா எப்போம்மா வருவாரு? எப்போம்மா வருவாரு னு கேட்டுக் கேட்டு களைச்சி போயித் தூங்கிட்டான்.

ம்ம்...சாப்டானா?

எங்க? நாலு வாய் வாங்குறான். எல்லாம் விளையாட்டு புத்தி...நீங்க ஏன் இவ்வளவு நேரம்?

ஒரு வண்டி நாளைக்குக் காலையில குடுக்கனும். நடுவுல ஓனர் ஃப்ரெண்டு குடைச்சல்.

ஓனர் பணம் கொடுத்தாரா?

அவர் தானே, புள்ளைக்குப் பொறந்தாள்னதும் குடுத்துட்டுத் தான் மறுவேலை பார்ப்பாரு. நீ வேற!

ஐய்யோ, அப்புறம் என்ன பண்ணப் போறீங்க? அவன் பெர்த்டே, கேக் னு 24 மணி நேரமும் அதே பேச்சாத் தானே இருக்கான்?

ம்ம்..நீ சாரதா அம்மாகிட்ட கேக்கலையா?

நான் தான் சொன்னேன்ல? ஏற்கனவே அவங்களுக்கு ரெண்டாயிரம் ரூவா பாக்கி. ஐநூறு ஐநூறா கழிச்சிட்டுத் தான் சம்பளமே வாங்குறேன். இதுல புதுக் கடன எங்க கேக்க? அப்படியே போயிடும்மான்றுவாங்க.

ம்ம்ம்ம்..

காலையில அவனுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? பாவம் அவன்.

முருகன் சாதம் தொண்டைக்குழியில் இறங்க மகனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்று இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். கனவில் ஒரு ஓட்டை ஸ்கூட்டி ஒரு கேக்கின் மேல் ஏறிச் சென்றது.

காலையில் ஹரீஷ் பாயை விட்டு எழுந்திருக்கும்போதே, அப்பாவைப் பார்த்து, "அப்பா, கேக் சொல்லிட்டியாப்பா?" என்றான். முருகன் அவனைப் பார்த்து சிரித்தான். அவனை
ஆசையாய் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான்.

அப்பா சொல்லுப்பா, லயன் கிங் போட்டோ கேக் தானே சொல்லி இருக்கே?

லயன் எல்லாம் வேணாம்டா, அப்புறம் வீட்டுக்கு கொண்டு வந்து பாத்தா, எல்லா கேக்கையும் லயனே சாப்ட்டுருக்கும்.

அப்பா போப்பா...லயன் எல்லாம் மானைத் தான் சாப்பிடும். கேக் எல்லாம் சாப்பிடாது?

அம்மா, பாரும்மா அப்பாவை...

சரி சரி, லயன் கிங் கேக் சொல்லிடுவோம். அப்புறம்?

அப்புறம் அதுல HAPPY BIRTHDAY HARISH M, I J ன்னு எழுதி இருக்கணும்.

ஸ்கூல் பேர் எல்லாம் வேணாமா?

நீ சின்ன கேக் தானே வாங்குவ? எடம் பத்தாதே!!

அவன் பேசுவதை ரசித்து முத்தம் கொடுத்தான்.

அப்புறம் கேக் கடையில 6 நம்பர் கேண்டில் ஒன்னு வாங்கு. அது கேக் மேல பொருத்தி வச்சு, நீங்க happy birthday பாடனும், நான் அதை ஹு..ன்னு ஊதி அனைச்சதும், நீங்க ரெண்டு பேரும் க்ளாப் பண்ணனும்.

இதெல்லாம் உனக்கு யாருடா சொல்றது?

பாலு சொன்னான். அவங்க வீட்ல அவனுக்குப் பண்ணாங்க. அப்புறம் படத்துல பாத்துருக்கேன்.

அவங்க அப்பா எங்க வேலை பாக்குறாரு?

அம்மா பாரும்மா...அப்பாவ...

சரி போயி ஸ்கூலுக்கு ரெடி ஆவு. சாய்ந்திரம் கேக் வெட்டலாம்.

இன்னைக்கி சாய்ந்திரம் கரெக்டா கேக் கொண்டு வந்துரனும்? என்ன என்று எழுந்தான்.

முருகன், முகத்தில் மட்டுமே சிரிப்பு இருந்தது.

மெக்கானிக் ஷாப் வரும் வழியில் ஒரு கேக் கடையில் லயன் கிங் போட்டோ கேக் எவ்வளவு என்று கேட்டான். 1 KG 900 ரூபாய் ஆகும் என்று அந்தக் கடைக்காரன் சொன்னான். அவனுக்குத் திக்கென்றது.

அன்று முருகனுக்கு வேலையே ஓடவில்லை. ஓனரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாயாவது கொடுக்கச் சொன்னான். இது வரை வாங்கிய கடனுக்கு நியாயமாய் அவனுக்கு சம்பளமே தரக்கூடாது என்று அவர் வாதாடினார்.

அன்று சாய்ந்திரம் 5 மணிக்கே கிளம்பிவிட்டான். ஹரீஷ் எப்போதும் இது வேண்டும், அது வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை. இந்த முறை ஏனோ அவனுக்கு தன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அரசுப் பள்ளியில் படித்தாலும் குழந்தைகள் பள்ளியில் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சனை ஆகி விடுகிறது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாமல், அவர்கள் கேட்பதைச் செய்யவும் முடியாமல் நெருப்பில் நிற்கும் வேதனை. அவன் எதையும் இவ்வளவு தூரம் வம்பு செய்து அவன் பார்த்ததில்லை. முருகன் தன் பையை தொட்டுப் பார்த்தான். வெறும் ஐம்பது ரூபாய் தான் இருந்தது. அவன் டீக் கடையில் உட்கார்ந்து அவனுக்குத் தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் ஃபோன் போட்டான். பேலன்ஸ் தீர்ந்தது தான் மிச்சம். அவனுக்கு ஹரீஷின் ஏமாந்த முகம் நினைவுக்கு வந்து மேலும் கஷ்டப்படுத்தியது.

சுற்றிலும் வெவ்வேறு மனிதர்கள். பேசிச் சிரித்துக் கொண்டும், செல்லச் சண்டை போட்டுக் கொண்டும், தீர்க்கமாய் வாதாடிக் கொண்டும், வித விதமாய், யாருக்குமே அவன் ஒரு பொருட்டில்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சனையைப் பற்றி யாருக்கும் அறிதல் இல்லை, கவலை இல்லை. அவன் அவர்கள் உலகத்தில் தான் இருந்தான். ஆனால் இல்லை. உலகம் அவன் ஒருவனை மட்டும் தனியாய் நிறுத்தி விட்டு, சுற்றிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை. அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது.

மணி ஆறு. முருகன் தன் கால் போன போக்கில் நடந்தான். வழியில் ஒரு பெரிய கேக் கடை. உள்ளே நுழைந்தான். ஏசியின் குளுமை எரிச்சலை அதிகரித்தது. வரிசையாய் கேக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பையன் கேட்ட அந்த லயன் கிங் போட்டோ கேக் இருந்தது. அவன் அதை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் இருந்த ஒரு வடநாட்டு இளைஞன் என்னா வேனும் சார் என்றான்.
இந்த கேக் எவ்வளவு?

450 சார்.

காலையில ஒரு கடையில 900 சொன்னாங்க?!

அது ஒரு கிலோ சார். இது அரை கிலோ.

ஓ..

பேக் பண்ணவா சார்?

அவன் கேக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சார்...

சில விநாடிகளில், அவன் கண்களில் நீர் திரண்டது. கண்ணீர் மெல்ல கேக்கை மறைத்தது.

அதைப் பார்த்த அவன்...

சார்..என்றான்.

முருகன் அவன் கண்ணாடிக்கு அந்தப் பக்கம் இருப்பதைக் கூட நினைக்காமல், அவன் காலில் விழுந்தான்.

தம்பி, என் புள்ளைக்கு இன்னைக்கிப் பொறந்தநாளு. இந்தக் கேக் வாங்க என்கிட்ட காசு இல்லை. என்று அழுதான்.

அவன் பதறிப் போய், வெளியே வந்தான். முருகன் இன்னும் கீழேயே கிடந்தான்.

சார், சார், எழுந்திருங்க சார், ப்ளீஸ் சார். சார். என்று எழுப்ப முயன்றான்.

"என்கிட்ட வெறும் அம்பது ரூபா தான் தம்பி இருக்கு. கொஞ்சம் உதவி பண்ணுங்க!" என்று அவனிடம் கை கூப்பினான்.

இந்தியாவின் ஏதோ ஒரு முனையில் இருந்து இங்கு வந்து அடிமை வாழ்க்கை வாழும் அவன் காலில் ஒருவன் விழுந்து கிடப்பதை அவனால் தாங்க முடியவில்லை.

அவன் நா தழுதழுக்க, "சார், நான் இங்கே வேல பாக்குறேன். ஓனர் வந்தா என்னைத் திட்டுவாரு, ப்ளீஸ், நீங்க போங்க சார்" என்றான்.

அப்போது கதவு கிரீச்சிட ஃபோன் பேசிக் கொண்டே ஓனர் உள்ளே வந்தார். அங்கு ஒரு வேண்டாத நாடகம் நடப்பதை உணர்ந்தார். சைகையில் பையனிடம் "என்ன?" என்றார்.

இல்ல கேக், காசு இல்ல..என்று திக்கித் திணறிப் பேசினான்.

ஓனர் முருகனை பார்க்காமல், "கெளப்பு, கெளப்பு" என்று சைகையில் சொல்லிவிட்டு உள்ளே போனார். அவன் முடியாமல் முருகனை எழுப்பினான். "சாரி சார்" என்றவனைப் பார்க்காமல், அவன் கேக்கையே பார்த்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெயில் தாழ்ந்த போதும், அதன் உஷ்ணம் ஏசியில் இருந்து வந்ததும் மேலும் உறைத்தது. தன் நிலை நொந்தபடி காலாற நடந்தான். எப்படி வீட்டுக்குப் போவது என்று அவனுக்குப் புரியவில்லை. அப்படியே எங்காவது தொலைந்து விட மாட்டோமா என்று தோன்றியது. எல்லாவற்றையும் மிக வேகமாய் கற்கும் இந்தக் காலக் குழந்தைகள் வறுமையை ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்? ஆசை பணக்காரர்களுக்கு மட்டும் பிறக்கக் கூடாதா? பிறகு ஏன்?.... அண்ணா, அண்ணா என்ற ஒரு குரல் அவன் சிந்தனையை தடை போட்டது.

அண்ணா...

திரும்பிப் பார்த்தால், அந்த வடநாட்டு இளைஞன் கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் கேக் டப்பாவுடன் நின்று கொண்டிருந்தான்.

முருகன் அவனைப் புரியாமல் பார்த்தான்.

"அண்ணா..இந்தாங்க நீங்க கேட்ட கேக். எங்க ஓனர் கஞ்சூஸ் சாலா..என் வைஃப்க்கு ஒரு சாடி வாங்க காசு வச்சுருந்தேன். பரவாயில்ல, அவளுக்கு பாத் மே. நீங்க இத வச்சிக்குங்க!"..என்று கேக் டப்பாவை அவன் கையில் திணித்தான்.

முருகன் நடப்பதையெல்லாம் நம்ப முடியாமல் அவனை ஒரு தேவதூதனைப் போல் உருவகித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கேக்கை கையில் வாங்கிக் கொண்டு அவனிடம்,

"நான் ஒன்னு செஞ்சா தப்பா நினைக்க மாட்டியே?"

என்று கேட்டுவிட்டு அவனை இறுக்கி அணைத்து ஒரு முத்தமிட்டான். சாலையில் போவோர், வருவோர் ஒரு கணம் நின்று பார்த்து, சிரித்து விட்டுப் போனார்கள். முருகன் கொஞ்ச நேரம் அவனைக் கட்டிக்கொண்டபடியே இருக்க, அந்த வடநாட்டு இளைஞன் அவன் சின்னக் கண்கள் இன்னும் சிறியதாக சிரித்துக் கொண்டிருந்தான்.


வழக்கமான Coffee shop.

அஜய் Kapi Nirvana வுடன், ஸ்ருதி Crunche Frappe யுடன்.

ஸ்ருதி: என்ன ஆச்சு உனக்கு?

அஜய்: ஒன்னுமில்லையே...

பின்ன ஏன் reception ல தீப்திகிட்ட அப்படி சொன்னே?

நம்ம கல்யாணம் பண்ணப் போறதில்லைன்னு சொன்னேனே, அதுவா?

ம்ம்ம்..

கொஞ்ச நாளா அப்படித் தான் தோணுது.

(sarcastically) அப்போ என் வயித்தில வளர்ற குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போற?

ம்ம்..Initial ல உன் பேர் மட்டும் போட்டுக்கோன்னு சொல்லப் போறேன்.

அடப்பாவி, இவ்வளவு easya முடிச்சிட்டியேடா...ஆமா, என்ன அய்யாக்கு திடீர்னு
இப்படி ஒரு ஞானம்?

எல்லாம் அனுபவம் தான்.

யாருக்கு?

யாருக்கோ..

டேய்...ஏன்னு சொல்லுடா!

லவ் பண்ணா கண்டிப்பா கல்யாணம் பண்ணனுமா என்ன?

இல்லையே, லவ் பண்ணலைன்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். நிறைய பேர் அப்படித் தான்பா பண்ணிக்கிறாங்க!

எனக்கு marriage மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சுன்னு சொல்றேன்.

ஓ, அப்போ Living together ஆ?

அதுக்கு கல்யாணமே பண்ணிடலாம்.

ஐய்யோ, அஜய், என்னை ஒரேடியா குழப்புற நீ?

simple டி, எனக்கு காலம் பூரா உன்னை லவ் பண்ணனும். Also, i don't want to miss our space.

what do you mean?

Marriage is a compromise. ஒத்துக்குறியா?

ஆமா, அதுக்கு?

I have one life, why to compromise?

நானும் தானேடா compromise பண்றேன்.

உனக்கும் சேர்த்துத் தான்டி பேசுறேன். Why you have to?

Because we love each other da...

இப்போ உனக்கு ஒரு நாய்குட்டியை ரொம்ப புடிக்குதுன்னு வச்சுக்கோ, அதை ஆசையா தடவிக் கொடுக்கலாம், கொஞ்சலாம். அதை விட்டுட்டு அதோட மென்னியை புடிச்சி அமுக்கிட்டு, லவ் பண்றேன்னு சொன்னா என்ன நியாயம்?

ம்ம்...point! So marriage மென்னியை புடிக்குதுன்ற?

மென்னியை மட்டுமா?

டேய்...(சிரிக்கிறாள்)

Let me explain...Its gonna be long...

நம்ம நாலு வருஷமா லவ் பண்றோம். இல்லையா?

தலையசைக்கிறாள்.

எங்க வீட்ல நானும் என் அண்ணனும், அவன் குடும்பத்தோட US போயி செட்டில் ஆயிட்டான். திரும்பி வர மாட்டான். நான் இங்கே தான் இருப்பேன். நான் இங்கே இருக்குறதால, எங்க அம்மா அப்பாவை நான் தான் கடைசி வரை பாத்துக்கனும். அதே மாதிரி, உங்க அம்மா அப்பாக்கு நீ ஒரே பொண்ணு. உங்க அப்பாக்கு Heart problem வேற. They are totally dependent on you. social setup படி, நீ என்னை கல்யாணம் பண்ணிட்டா, எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மா அப்பாவைத் தான் கவனிச்சுக்கனும். பொண்ணை கட்டிக் கொடுத்தாச்சு, கஷ்டமோ, நஷ்டமோ இனி நம்ம தான் நமக்குத் துணைன்னு அவங்க ஒதுங்கிடுவாங்க. How its fair?

சரி அவங்களை நம்ம கூடவே வச்சுக்கலாம்னா, அவங்க வீட்டை விட்டு வர மாட்டாங்க. Thats ok. அது அவங்க விருப்பம். காலம் பூரா கஷ்டப்பட்டு பாத்துப் பாத்து கட்டின வீட்டை விட்டுட்டு அவங்க வரணும்னு அவசியமும் இல்லை. So, அப்பா அம்மா எப்படி இருக்காங்களோ, என்ன பண்றாங்களோன்னு நீ தினம் தினம் கவலைப்பட்டுட்டே இருக்கணும்.

இது ஒரு பக்கம். நம்ம கதைக்கு வா. We both have huge career plans. Actually, You are more career oriented than me. ஆனா, கல்யாணம் ஆனா என்ன நடக்கும், கல்யாணம் ஆன அடுத்த மாசமே, எப்போ விசேஷம்னு ப்ரெஷர் போடுவாங்க. தொலையுதுன்னு பெத்துட்டா, முடிஞ்சதா? அப்போ தான் ஆரம்பம். எதுக்கு ரெண்டு பேர் சம்பாதிக்கனும்? நீ வீட்ல இருந்து குழந்தையை பாத்துக்கோன்னு ப்ரெஷர் போடுவாங்க. அப்புறம் நீ உன் career plans ஐ மூட்டை கட்டி பரண் ல போட்டுட்டு youtube ல வித விதமா டிஷ் பாத்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் செஞ்சு போடலாம்.

டேய், நீ சொல்றதெல்லாம் கேக்க பயமா தான் இருக்கு, ஆனா எனக்காக நீ இவ்வளவு யோசிக்கிறேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்குடா..

நான் அவ்வளவு நல்லவன்லாம் கிடையாது. இப்போ தான் நான் எனக்காகப் பேசப் போறேன். கல்யாணம் எதுக்கு? ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை எதுக்குத் தேவைப்படுது, Sex அப்புறம் நமக்கு ஒரு வாரிசு. வாரிசு விஷயத்துல எனக்கு இப்போதைக்கு எந்த interest யும் இல்லை. உனக்கும் அப்படித் தான். வாரிசுகளாப் பெத்து போட்டு already we have created enough damage. போதும். அப்புறம் Sex. அது கண்டிப்பா வேணும்.
90s la சினிமா பாட்டுல "கல்யாணத்தாலி கட்டிப்புட்டு கட்டிலில் ஆடு ஜல்லிக்கட்டு"ன்னு கலாச்சார காவலர்களா இருந்த பெண்கள், இப்போ, "உன்னால ஏய் மூடாச்சு, வா உரசிக்கலாம், ஜிகு ஜிகுன்னு ரவுடி பேபி"க்களா மாறிட்டீங்க. So, "அதுக்கு" கல்யாணம் கண்டிப்பா அவசியமே இல்லை.

வெக்கப்பட்டு சிரிக்கிறாள்.

So, கேவலம், தப்பு தப்பு, அது கேவலம் இல்லை, அப்படிப்பட்ட மகத்தான Sex க்காக எதுக்கு என்னோட சுதந்திரத்தை இழக்கனும். அப்புறம், எனக்கு எப்போ வேணா sports channel பாக்க முடியனும். friends கூட trip போக முடியனும். நான் இப்போ வாழ்ற மாதிரி என் life எப்பவும் இருக்கணும்.

சாக்ரடீஸ் கிட்ட ஒருத்தன் கேட்டானாம், "குருவே, கல்யாணம் பண்ணலாமா வேணாமா?"ன்னு, அவர் அதுக்கு, "பண்ணாலும் கவலைப்படுவே, பண்ணலைன்னாலும் கவலைப்படுவே, உன் இஷ்டம்னாராம்!". எதுக்கு அவ்வளவு effort எடுத்து கஷ்டப்படனும்?

அப்புறம், கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் ன்னு ஆண், பெண்ணோட personality யே change ஆகுது கவனிச்சியா? காதலியா இருக்கும் போது, தேவதை, baby, அம்மு, செல்லம், sweet heart ன்னு சொன்னவன் எல்லாம், கல்யாணத்துக்கு அப்புறம், ராட்சசி, டார்ச்சர் னு பொண்டாட்டிக்கு வேற பேர் வச்சுட்றான். பசங்க பேர் வைக்கிறதோட சரி, நீங்க முதுகுல நாலு வைக்கிறீங்க. நம்ம ஆளு வீட்டுக்குப் போகவே பயப்பட்றான். காதல் எல்லாம் எங்கேயோ தொலைஞ்சி போயி வாழ்க்கை Non bailable offense mathiri ஆயிடுது. என் cousin விமல் தெரியும்ல? கல்யாணதுக்கு முன்னாடி "அவ ஒரு பார்வையால என்னைக் கொல்றாடா!" ன்னு feel பண்ணிட்டு இருந்தான். இப்போ literal ஆ "கொல்றாடா!!" ன்னு நிஜம்மா feel பண்றான். Jokes apart.
அந்தக் காதல் எங்க போச்சு? கல்யாணம் அப்படி என்ன பண்ணுது? லவ் மேரேஜ் இப்படின்னா அரேஞ்ச்ட் மேரேஜ் பத்தி சொல்லத் தேவையில்லை. எத்தனையோ cases பாத்துட்டேன். எல்லாரும் விதியேன்னு தான் வாழ்றாங்க. Diversion க்கு குழந்தைகள் இருக்குறதால, நிறைய Divorces நடக்கலைன்னு சொல்லலாம். அது கூட இப்போ கூடிப் போச்சு. இதைப் பத்தி எல்லாம் நிறைய யோசிச்சேன். நம்ம விஷயத்துல அப்படி நடக்கக்கூடாதுன்னு தோணுச்சு. நம்ம கடைசி வரை காதலர்களா இருக்கனும்னு தோனுச்சு.
நீ சொல்றதுல point இருக்கு. ஆனா கல்யாணமும் வேணாம், Living together யும் இல்லைன்ற? Then what's your idea?

அங்கே தானே வர்றேன். Its like "Living together, but being apart" i mean my idea is "Committed Apart!"

Committed Apart. Wow, interesting.

இல்லை? அதுக்கு என்ன பண்ணனும், படம் முடிஞ்சதும் நீ உன் வீட்டுக்கு போகனும், நான் என் வீட்டுக்குப் போகனும். நீ உன் வாழ்க்கையை வாழனும், நான் என் வாழ்க்கையை வாழனும். நான் எங்க அம்மா அப்பாவோட இருக்கலாம், நீ உங்க அம்மா அப்பாவோட இருக்கலம். உனக்கு மாமியார் தொல்லை இல்லை, எனக்கு பொண்டாட்டி தொல்லை இல்லை. நம்ம இப்போ மீட் பண்ற மாதிரி டெய்லி மீட் பண்ணி டைம் spend பண்ணலாம்.
அப்போ sex?

(கொஞ்சலுடன்) என் Rowdy baby, ஒன்னுமே தெரியாது?! இப்போ நம்ம பண்ணாமலா இருக்கோம்? இதே மாதிரி hook up பண்ண வேண்டியது தான். திருட்டு மாங்கா ருசியே தனி தானே..

அப்போ நீ propose பண்ற system, problem யே இல்லை, fool proof னு சொல்றியா?

Problem is everywhere.

Every problem has got a solution.

And every solution will have its own problem.

ம்ம்...எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா இதெல்லாம் நடக்குமா? parents எப்படிடா accept பண்ணுவாங்க?

Parents love marriage accept பண்ணுவாங்களா? அதுக்கே ஆயிரம் பஞ்சாயத்து பண்ணி தானே ஆகனும். இது புது idea, பத்தாயிரம் பஞ்சாயத்து பண்ணனும். அவ்வளவு தான். நீ convience ஆயிட்டெல்லே? உங்க அப்பாகிட்ட நான் பேசுறேன், correct புரியவச்சுட்டோம்னு வை, "இந்த மாதிரி idea எல்லாம் எங்க காலத்துல இல்லாம போச்சேன்னு!" புலம்புவார் பாரு...Actually not only your father...
இருவரும் சிரிக்கிறார்கள்.

Parents ok, நம்மளைப் பெத்த குத்தத்துக்கு இதெல்லாம் சகிச்சிகிட்டாலும், what about society டா?

Committed Apart ஓட Tagline என்ன தெரியுமா? Fuck the society!

மறுபடியும் சிரிக்கிறார்கள்.


அதே நினைவாக இருந்தது. அது அவள் தானா? சந்தேகமேயில்லை. அவளே தான். எத்தனை வருடம் கழித்து, ஏன், எப்படி, எதற்கு? 

தூக்கம் வராமல் வெகு நேரம் மூடி இருந்த கண்ணைத் திறந்தேன். நைட்லேம்ப் வெளிச்சத்தில் மணி பார்த்தேன். 2:20. விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபேன் சுற்றியும் பனியன் நனைந்திருந்தது. என் மேல் கை வைத்து தூங்கும் என் மகள்  லெட்சுமியின் கையை எடுத்தேன். மேலேறி இருந்த அவளின் கவுனை சரி செய்தேன். அவள் நெற்றியைத் தடவினேன். நேற்று குழந்தையாய் இருந்தவள் இன்று அவள் அம்மா அளவுக்கு வளர்ந்து விட்டாள். மெல்லத் தலையைத் தூக்கி தேவியைப் பார்த்தேன். அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கை நிதியின் மேல் இருந்தது. தூங்கும் போது தான் ஒரு குடும்பத்தின் அழகு மிளிர்கிறது. மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்.

அருகில் இருந்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். மெல்ல எழுந்து, சட்டைப் பையில் உள்ள சிகரெட்டையும், வத்திப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கதவு திறந்து வெளியே வந்தேன். சிகரெட்டை வத்திப்பெட்டியில் தட்டிக் கொண்டே தெருவை அளந்தேன். தூரத்தில் ஒரு நாய் விழித்துப் பார்த்து மறுபடியும் உறங்கச் சென்றது.

வாசலில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தேன். புகையை நன்றாக உள்ளிழுத்து விட்டேன். இந்த நேரத்தில் நிகோடினை எதிர்பார்காத மூளை சற்று மிரண்டு உள் வாங்கியது. நெஞ்செங்கும் புகை பரவியது.

மனம் இருப்பு கொள்ளாமல் தவித்தது. அம்மா? உண்மையில் நீயா அது? அம்மா எவ்வளவு மாறி விட்டாள். நிகோடினின் மெல்லிய போதை அம்மாவின் முகத்தை மங்கச் செய்தது. இத்தனை வருடங்கள் கழித்து அத்தனை கூட்டத்தில் நான் அவளை எப்படிப் பார்த்தேன். அவள் எப்படி என்னைப் பார்த்தாள்? இருவரும் எப்படி அடையாளம் கண்டு கொண்டோம்? தன் செயலுக்கு சிறிதும் அஞ்சாத அந்தப் பார்வை என்ன பார்வை? அவள் என்ன சொல்ல நினைத்தாள்?

இருபது வருடங்களுக்கு முன் அந்தக் காலை அப்படி விடிந்திருக்க வேண்டாம். அம்மாவைக் காணோம் என்ற என் அத்தையின் ஒப்பாரியில் தொடங்கியது அந்த நாள். அது அத்தனை நீளமான நாளாகப் போகுமென்று நான் நினைத்திருக்கவில்லை. 16 வயதில் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளைக் கொடுத்து விட்டு ஓடிப் போன அப்பாவை சபித்தபடி எங்களோடு மாமாவின் வீட்டில் நிரந்தரமாய் ஒண்டிக் கொண்டாள் அம்மா. ஒரே தங்கையை கை விட மனமில்லாமலும், தன் வியாபாரம் நல்லபடியாய் போய்க் கொண்டிருந்ததாலும், அடிக்கடி நோய்வாய்ப்படும் மனைவிக்கு ஒத்தாசையாய் இருக்கும் என்றும் மாமா எங்களை வைத்துக் கொண்டார். அம்மாவுக்கு வாழ வக்கில்லையென்றாலும், வைராக்கியமாகத் தான் இருந்தாள். அவள் எப்போதும் தன் விதியை நினைத்து மூக்கு சிந்திக் கொண்டு இல்லாமல், தான் மாவு விற்ற காசில் எங்களைப் படிக்க வைத்தாள். மாமாவுக்கும் தங்கையை நினைத்து பெருமை தான்.

அம்மா அளவாக, அழகாக இருந்தாள். உயரம் கம்மி. அவள் முகத்துக்குப் பவுடர் பூசுவதில்லை. தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்து முகம் மஞ்சள் பூத்திருந்தது. அவளின் குறுகிய நெற்றியில் கருப்பு நீட்டுப் பொட்டு கச்சிதமாக இருந்தது. அவளின் மூக்கில் ஒரு பொட்டு தங்க மூக்குத்தி ஒரு அற்புதம். நான் சிறுவனாய் இருந்த போது, அவளின் இடையை கட்டிக் கொண்டு நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவள் குனிந்து என் முகம் பார்த்துச் சிரிக்கையில் அந்த அளவான பல்வரிசை என்னை பரவசமூட்டும். அந்தச் சிரிப்புக்குப் பிறகு சினுங்கிக் கொண்டே என் கைகளை விடுத்து ஓடுவாள். பதினாறு வயதில் பெண்களின் அழகு கன்னி அழகு. முப்பது வயதில் தான் அது பூரணம் பெறுகிறது. அந்த முப்பதுகளில் அவள் அப்படி ஒரு பூரணத்தில் இருந்தாள்.

அழகில்லாத, துணையுள்ள பெண்களையே துரத்திக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு என் அம்மா மேல் பார்வை விழாமல் இருக்க வாய்ப்பில்லை. இது தான் அவள் விதி என்று தெரிந்து அவள் எல்லாரையும் சமாளிக்கக் கற்றிருந்தாள். பக்தியையும், பூஜைகளையும், புனஸ்காரங்களையும் அதற்கு வேலியாய் பயன்படுத்திக் கொண்டாள். அதையும் மீறி எந்த ஒரு ஆணும், சைகையில், ரகசியக் குரலில் பேச ஆரம்பித்ததும், எல்லோருக்கும் கேட்கும் படி அவன் சொன்னதையே, செய்ததையே அம்மா சத்தம் போட்டுப் பேசுவாள். வந்தவர்கள் அத்தனை பேரும், தன் மனைவிமார்களுக்குக் கட்டுப்பட்டு, சமூகத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதால், வேறு இடம் தேடி ஓடி விடுவார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால், அம்மாவுக்கு எந்த ஆணையும் பிடிக்கவில்லை. ஆண்களின் அன்பு உடல் வரை தான் என்பதை அவள் எப்படியோ உணர்ந்திருந்தாள். உடல் தாண்டி ஒருவன் ஒரு பெண்ணை உணர்வானா என்று அவள் நினைத்தாள். உண்மையைச் சொன்னால் எல்லாப் பெண்களின் ஆசையும் அது தானே? ஆண்கள் பெண்ணின் உடலில் முடிந்து போகிறோம், ஆனால், அவர்கள் அங்கு தான் தொடங்குகிறார்கள். அவள் நினைத்தது போல், யாருக்கும் அப்போது நடிக்கக் கூடத் தெரியவில்லை.

அப்படி ஒரு சமயத்தில் எங்கிருந்தோ வந்தான் அவன். இளைஞன். மிஞ்சிப் போனால் இருபத்திமூன்று வயது இருக்கும். ஏதோ ஒரு ஃபாக்டரியில் வேலை செய்தான். வயதான அம்மாவுடன் வாழ்ந்தான். துடிப்பாய் இருந்தான். எல்லோரையும் அண்ணே, அண்ணி, அக்கா என்று அந்தத் தெருவே அவனின் குடும்பம் போல் பாவித்தான். அம்மாவையும் "மாவக்கா" என்று தான் கூப்பிடுவான்.

காலையில் மாவு வாங்க வந்தால், அங்கேயே உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். வருவோர் போவரை எல்லாம் வம்பிக்கிழுப்பான். அம்மாவை நிறைய சிரிக்க வைத்தான். அக்கம்பக்கத்தில் அவன் இருந்தால் அம்மாவின் முகத்தில் மெருகு கூடும். அம்மாவின் அந்த மெருகு அவன் மற்ற ஆண்களைப் போல் இல்லை என்று சொல்லிக்காட்டியது. வந்த கொஞ்ச நாட்களிலேயே அம்மாவுடன் அவன் உரிமையாய் பழகினான். அம்மாவுக்காக அத்தையிடமும், மாமாவிடமும் வாதாடவும் தயங்கவில்லை. ஒரு முறை யாரோ ஏதோ சொன்னதால், அழும் அம்மாவை என் முன்னால் வைத்து சமாதானப்படுத்தினான். பிறகு என்னைத் தனியே கூட்டிப் போய், "உங்க அம்மா ரொம்ப நல்லவங்க நீ பெரிய பையன் ஆயிட்ட, இனிமே நீ தான் அவங்களை நல்லா பாத்துக்கனும்னு" சொன்னான். எனக்கு அவனை புரிந்தும் புரியாமலும் இருந்தது.

ஒரு நாள் இரவு பாதி தூக்கத்தில் சத்தம் கேட்டு விழித்தேன். அம்மா அழுது கொண்டிருந்தாள். மாமாவும் அத்தையும் அம்மாவையும் அவனையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மா என்னை தூங்கச் சொன்னாள்.

அதன் பிறகு அவன் வீட்டுக்கு வருவதில்லை. எப்போதாவது என்னை வழியில் பார்த்து அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிப்பான். "அம்மாவின் சிரிப்பு குறைந்து விட்டது, நீ வீட்டுக்கு வா!" என்று நான் அழைத்ததுண்டு. அவன் மெலிதாய் சிரித்துக் கொண்டு சென்றான்.

தீர்ந்த சிகரெட் கையை சுட்டது. அதை கீழே போட்டு மிதித்தேன். தெருவில் இருந்த சோடியம் விளக்கின் வெளிச்சப் பரவலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அன்று அம்மாவைக் காணவில்லை என்றதும், மாமா முதலில் அவன் வீட்டுக்குத் தான் போனார். அவர் எதிர்பார்த்தது போல், அவனும் இல்லை. அவள் போன கோபத்தில், மாமாவும், அத்தையும் என்னையும் என் தம்பியையும் அடித்தார்கள். அக்கம்பக்கத்தவர்கள் சமாதானம் செய்தார்கள். மாமா, அம்மாவை கடும் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பிறகு ஒருவாராக அவள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று சமாதானம் ஆனார். எங்களைக் கட்டிக் கொண்டு அழுதார். எங்களை அவர் வளர்த்து ஆளாக்குவதாக சபதம் செய்தார்.

எனக்கு அம்மா விட்டுப் போனது தொண்டையை அடைத்தது. திரும்பி வந்துவிடுவாள் என்று தோன்றியது. என்னையும் தம்பியையும் பிரிந்து அவள் எங்கு செல்ல முடியும் என்று தோன்றியது. அவள் போனது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது. அதை நினைத்து அழுகை வந்தது.

அம்மாவைப் பற்றி என் காது படப் பேசும் பேச்சுக்களைக் கேட்டு அழுது அழுது, பள்ளியில் இருந்த போது அம்மா அப்படிச் செய்தது சரியா தவறா என்று புரியாத நான் கல்லூரிக்கு வந்ததும், அவள் செய்தது மிகப் பெரிய துரோகம் என்ற முடிவுக்கு வந்தேன். அது வெறியாக மாறியது. அவளின் மேல் இருந்த கோபத்தில் அவளைப் பற்றி பேசுபவர்களை முரட்டுத்தனமாக அடித்தேன். அதனால் பல பிரச்சனைகள் உண்டானது. மாமாவால் என்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தினமும் ஒரு அடிதடி சண்டை. அது போதாமல், சில சமயங்களில் அவளை வெறி கொண்டு தேடினேன். அந்த சமயத்தில் தான் தேவி வந்தாள். எல்லோரும் என் அம்மாவை வைத்து என்னை கணிக்கும் போது, அவள் என்னை மட்டும் பார்த்தாள். என்னைக் குழந்தையாக்கி என் கோபத்தை அழுகை ஆக்கினாள். என் கையறுநிலையை ஆற்றுப்படுத்தினாள். ஒரு பெண்ணால் ஆன காயத்துக்கு ஒரு பெண்ணே மருந்தானாள். ஒரு பெண்ணாய் என் அம்மாவின் நியாயங்களை எனக்குப் புரிய வைத்தாள். சரி தவறு என்றதற்கு அப்பார்ப்பட்ட இடத்தை எனக்குக் காட்டினாள்.

இத்தனை வருடம் கழிந்து, என் வாழ்க்கை, என் குடும்பம், என் உலகம் என்று சுழலும் இந்த வாழ்க்கையில், இன்று வேலை விஷயமாய் ஒரு இடத்துக்கு போய்த் திரும்பும்போது ஒரு பேருந்திலிருந்து கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அவள் அந்தப் பக்கம் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தாள். ஒரு காலத்தில் வெறி கொண்டு தேடிய பெண்மனி. இதோ, என் எதிரில் இருக்கிறாள். ஒரு கணம் எல்லாமே ஸ்தம்பித்து விட்டதாகத் தோன்றியது. அம்மாவா அது? அவளே தான். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. முன் பக்க நரை. ஆனால், முகத்தில் அதே பழைய களை. அந்த அரக்கு புடவையில் கொஞ்சம் பூசியது போல் இருந்தாள். அவள் கூட அவளின் சாயலில் இரண்டு இளம் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனோ, நான் பேருந்திலிருந்து இறங்க முற்படவில்லை. அவளும். தாயும் மகனும் ஒரு வழிப்போக்கர்களாக, எதேச்சையாய் இருவர் பார்வைகள் கலந்தது போல் பார்த்துக் கொண்டோம். அவளின் பார்வையில் குற்ற உணர்ச்சி இல்லை. மன்னிப்பு இல்லை. அது தைரியமாய் என் கண்ணைப் பார்த்தது. ஒருவேளை, அவள் எடுத்த முடிவு சரியானதாக இருந்திருக்கலாம். அவளின் உடல் மீறி அவன் அவளைத் தொட்டிருக்கலாம். அவள் சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது, அவள் நினைத்தபடி எதுவும் நடக்காமல், இந்த முறை ஒண்ட ஒரு மாமா வீடு கூட இல்லாமல், தனியே அவள் மகள்களை வளர்த்துக் கொண்டிருக்கலாம். பேருந்துகள் புறப்பட்டது. அவ்வளவு தான் நான் அவளைப் பார்க்கப் போவது. இனிமேல் இப்படி ஒரு சந்தர்பம் கிடைக்குமா தெரியாது. அவளை நான் மறுபடியும் பார்க்க விரும்புகிறேனா என்று கூடத் தெரியவில்லை. இதே சிந்தனையில், இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்தியபடி எங்கள் பேருந்துகளும் எங்களைக் கடந்து போனது.

மறுநாள், லெட்சுமி என்னிடம், அப்பா, பாட்டியை பாத்தீங்களாப்பா? எனக்கு அவங்க பேரு தான்னு சொன்னீங்களா? என்று கேட்டாள்.
பதினோரு வயதான மகளிடம் ஓடிப் போன லெட்சுமி பாட்டியைப் பற்றி என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, என்னைப் போல் நாற்பது வயதாகும்போது அவளுக்குக் கொஞ்சம் புரியலாம் இல்லை என்றால் அவள் அம்மா இருக்கிறாள் புரிய வைக்க.
வீட்டில் யாரும் இல்லை. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. திரு இன்று வெளியே சாப்பிடப் போகலாம் என்று சொல்லி இருந்தான். இப்போது என்ன செய்வது?

ப்ரிட்ஜில் சில்லென்று தண்ணீர் எடுத்துக் குடிக்கும்போது காலிங் பெல் அழைத்தது. திரு தான். திறந்தேன்.

Hi Baby என்று அணைத்தான். அவனை விலக்கி விட்டு,

காபி சாப்பிட்றியா?

Best! என்று அமர்ந்தான்.

நான் காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தேன். அவன் ஃபோனை நோண்டிக் கொண்டே

காபியை குடித்தான். நான் பாத்ரூம் சென்று அதை எடுத்து வந்தேன்.

அவன் ஃபோனில் மூழ்கி இருந்தான்.

திரு...

(ஃபோனைப் பார்த்துக் கொண்டே) ம்...

I am pregnant.

(ஃபோனைப் பார்த்துக் கொண்டே) ம்...

திரு...என்னைப் பாரு...

மெல்ல தலையை நிமிர்ந்தான்.

I said i am pregnant.

What?

You heard me right.

சும்மா விளையாடாதே பேபி. என்று ஃபோனுக்கு போனான்.

ஆண்களுக்கு பெண்ணின் ஆடையை களையும் வேகம் ஏன் வேறு எதிலும் இருப்பதில்லை. எரிச்சலாய் வந்தது எனக்கு.

யாருடா விளையாட்றா? இங்கே பாரு! என்று testing kit ஐ காட்டினேன்.

அவன் புலியைப் பார்ப்பதைப் போல் அதைப் பார்த்தான்.

என்ன ரெண்டு கோடு இருக்கு? Twins ஆ?

(மிகுந்த எரிச்சலுடன்) என்ன.. நீ ஆம்பளை சிங்கம் னு prove பண்றியா? Fuck you.

இல்லைடி...I am confused. நம்ம சரியாத் தானே பண்ணோம்? அப்புறம் எப்படி?

Yeah, you are right. May be we should have taken a video?! திரு please, செம கடுப்புல இருக்கேன். வேணாம்.

Hey Relax. ஏன் tension ஆகுற?

நான் tension ஆகுறேனா? ஏன் உனக்கு இல்லை? இது என்ன ஜோக்கா? Its big man. Its so embarassing. என் அம்மா முகத்துல நான் எப்படிடா முழிப்பேன்! உனக்குப் புரியுதா?

இங்கே மட்டும். எங்க அப்பா என்னை பார்வையிலையே எரிச்சுருவார்.

How we can be so stupid da? What about your startup dreams? what about my career? எல்லாம் மண்ணோடு மண்ணா...(அழுதாள்)

அழாதே பேபி, யோசிப்போம்.

என்ன யோசிக்கப் போற? You know i am against abortion. எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. இது என்ன அந்தக் காலமா? இதெல்லாம் சகஜமா எடுத்துக்க?

விடு பேபி, stress பண்ணிக்காத.

நான் அப்போவே சொன்னேன்ல, இந்த விஷப் பரிட்சை எல்லாம் வேண்டாம்னு...Break வேணும், Life is to enjoy, அது இதுன்னு சொல்லி...

பேபி..

போடா..

Look at me. பாரு..நான் இருக்கேன்ல? இங்கே பாரு, நான் இருக்கேன்ல? பாத்துக்கலாம்.

We are together in this. OK. Trust me. என்னோட dream விட எனக்கு நீ தான் முக்கியம். I love you. OK?

அவன் ஆறுதலாக அணைத்திருக்க, என் கண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.

Dinner போலாமா?

You still wanna go?

Ofcourse, Congratulations and Celebrations...(என்று பாடினான்)

நான் சிரித்தேன்.

எப்பிட்றா எவ்வளவு அடிச்சாலும் தாங்குற? நீ ரொம்ப நல்லவன்டா..

என் ஃபோன் அடித்தது. எடுத்து அவனிடம் சைகையில் வாயசைத்து "அம்மா" என்றேன்.

சொல்லும்மா...

ம்ம்ம்..

ஏன் என்ன ஆச்சு?

2 நாள் தானேம்மா? வீடு இன்னும் செட் பண்ணிட்டுத் தான் இருக்கேன். கொஞ்ச நஞ்ச குப்பையா இருக்கு?

நீ தானே மொதோ நாள்ல இருந்து நச்சரிச்ச? இப்போ அனுபவி...

எப்போ? நாளைக்கேவா?

அம்மா, ப்ளீஸ் மா..

சரி சரி, ஒவரா அழாதே. நாளைக்கு evening வா..சொல்றேன்ல, க்ளீன் பண்ணிட்றேன்.

OK, Bye.

ஃபோனை வைத்தேன்.

என்னவாம்?

அம்மாவால முடியலையாம். அப்பா பண்ண sketches எல்லாம் தூக்கிப் போடுதுங்களாம். அப்பா tension அகுறாராம். மூனு பேரு முன்னூரு சேட்டை பண்ணதுங்களாம். Twins அதுல உச்சமாம். உங்க Holiday போதும்டி அம்மா, என்னை ஆள விடு, நாளைக்கே கொண்டு வந்து விட்டுர்றேன்னு அழாத குறை...

அவன் மெலிதாய் சிரித்தான்.

பேரமைதியாய் இருந்த வீட்டை ஒரு கணம் பார்த்து, இப்போ நாலாவதா டா? என்றேன்.
MEGA SYSTEMS என்ற பெரிய மஞ்சள் போர்டில் வெகு சமீபத்தில் குழைத்துப் பூசிய சந்தனமும், குங்குமமும் அப்பி இருந்தது. அந்த போர்டின் கீழ் நேர்த்தியாக புடவை அணிந்த ஒரு பெண் ஃபோனில் வரும் அழைப்புகளுக்கு விடை சொல்லிக் கொண்டிருந்தாள். நான் நிற்பதைப் பார்த்து சைகையில் காத்திருக்கச் சொன்னாள். நான் தலையாட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்த்து முடிந்ததும், 

Yes sir, என்றாள்.

I am Nirajan, I want to meet Mega madam. என்றேன்.

Do you have any appointment sir? என்றாள். 

Yes, She asked me to come at 11 today என்றேன்.

That's fine sir. She is in a business meeting right now, please sit. Once she is out i will let her know என்றாள்.

How much time it will take என்று கேட்க நினைத்து, Sure மட்டும் சொல்லி விட்டு குஷன் சோஃபாவில் உட்கார்ந்தேன்.

அவள் ஃபோனில் busy ஆனாள். அதிக நேரம் mobile ஐ நோண்டாத வேலை இதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.

வேலைக்குப் போய் ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. அல்லது வேலையை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கும், அன்று காலை Whatsapp ல் ஒன்றிரண்டு Good Morning Message அதிகமாகவே இருந்தது. இருந்தும் எனக்கு அப்படி விடிந்தது.

எந்தவித தவறும் செய்யாமல், எந்தவித அறிகுறியும் தெரியாமல், எந்த வித காரணங்களும் சொல்லாமல், காலையில் கூப்பிட்டு மாலையில் ஒட்டு மொத்தமாகப் போகச் சொல்லிவிட்டார்கள். 28 வயதில் வீடு வாங்கத் தகுதியளித்ததும் இந்த I T தான், 38 வயதில் ஒட்டு மொத்தமாய் வீட்டுக்கு அனுப்பியதும் இதே I T தான்.

என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் ஒரு அழகான அக்மார்க் அம்மாஞ்சி. வழியில் யாராவது என்னை அடித்தால், பதிலுக்கு "ஏங்க அடிச்சீங்க?" என்று மரியாதையுடன் கேட்கும் இயல்புடையவன். பதினைந்து வருடம் I T யில் வேலை பார்த்தும், வயிறும் முதுகும் என் கட்டுக்குள் வைத்திருப்பது தான் என் ஒரே சாதனை. எனக்கு இந்த நாட்டின் politics யும் தெரியாது. office politics யும் தெரியாது. நான் உண்டு என் excel sheet உண்டு என்று இருந்தேன். Delivery Manager என்ற என் Designationக்கு எந்த பங்கமும் வராமல் தான் உழைத்தேன். நிறைய வேலை செய்தேன். காட்டிக்கொள்ளவில்லை. தெரியவில்லை. office ஐ பொறுத்தவரை, வேலை செய்வதோடு நிற்கக்கூடாது, அதைக் காட்டிக் கொள்ளத் தெரிய வேண்டும். ஒரு வேலையை முடித்தால், boss யிடம் சொல்ல வேண்டும், பிறகு ஒரு பத்து பேரை சிசி யில் வைத்து As discussed போட்டு மெயில் போட வேண்டும். அது எனக்கு cheap ஆகத் தோன்றியது. "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே!" என்ற காலம் போய், "கடமையைச் செய், வேலையை எதிர்பார்க்காதே!" காலம் வந்து விட்டது தெரியாமல் போய் விட்டது. பரவாயில்லை. என் ஒழுக்கம், என் நேர்மை, என் அர்ப்பணிப்பு, எனக்குப் பிடித்திருக்கிறது. I am proud of myself, still.

Sir, you can go now என்றாள். 

எழுந்தேன்.

அவள் எழுந்து அவள் கழுத்தில் இருந்த பட்டையை காட்டியதும் கதவு திறந்தது.

Straight, last right cabin is mam's cabin என்றாள். 

Thanks.

கம்ப்யுட்டரை வெறித்துப் பார்க்கும், காப்பி குடிக்கும், டெஸ்கில் அமர்ந்து அரட்டை அடிக்கும், போர்டில் ப்ளான் போடும் சிலரைக் கடந்து right side cabin ல் கதவைத் தட்டிக் கொண்டு நுழைந்தேன். 

"ஹேய், நிரு!" என்று எழுந்து வந்தாள் மேகா.

மேகாவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இருவரும் நான்கு வருடங்கள் ஒன்றாய் படித்தோம். அவள் தனுஷ் மாதிரி, பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் அழகு. படிக்கும்போதே அவளுக்கு ஏனோ என்னைப் பிடித்திருந்தது. எங்களிடையில் ஒரு நல்ல நட்பு இருந்தது. அவள் என்னை விரும்பியதாக பின்னாளில் நண்பர்கள் சொன்னதுண்டு. அவள் என்னிடம் சொன்னதில்லை. மேற்படிப்புக்கு அமேரிக்கா போனவள், திரும்பி வந்து ஒரு கம்பெனி தொடங்கி இன்று கொஞ்சம் வளர்ந்து இருக்கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து linked in எங்களை connecti இருக்கிறது.

நான் கைகளை நீட்ட அவள் ஒரு quick hug செய்தாள்.

நான் எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கூச்சமாக இருந்தது. அவள் "டேய், இன்னுமா?" என்று பெரிதாய் சிரித்து "வா, உக்காரு" என்றாள்.

Sorry da, was in a business meeting which was prolonging. sorry for making you wait. என்றாள்.

Thats ok. I understand என்றேன்.

Wow, எத்தனை வருஷம் ஆச்சு. எப்பிட்றா இருக்க? 

நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?

அதான் பாக்குறியே, Top of the world. I always dreamed about my own company. So here i am. அப்புறம், உனக்கு எப்படி போகுது? வீட்ல எல்லாரும் செளக்கியமா? wife பேரு என்ன? எத்தனை பசங்க?

Interview start ஆயிடுச்சா?

ஹஹஹ...ஆமா, உன் wife birthday, anniversary date இதெல்லாம் கேப்பேன். correct ஆ சொன்னா தான் உனக்கு இங்கே வேலை என்று சிரித்தாள்.

நானும் சிரித்தேன்.

உன் husband என்ன பண்றாரு?

ஹேய், தெரியாதா? i am a divorcee macha..

O, தெரியாது. I am sorry.

Don't be. I am happily single, இப்போ நீ வேற வந்துட்ட என்று கண்ணடித்தாள்.

நான் புரியாமல் அவளைப் பார்க்க மறுபடியும் அதே இடிச் சிரிப்பு.

Love teasing you. I missed you so much. ஆமா, உன்னை எப்படிடா வேலையை விட்டு தூக்கினாங்க? உன்னை மாதிரி பீஸ் எல்லாம் muesum ல தான் இருக்கு. 

உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலையே என்றேன்.

எப்படியோ,  its good, I got a DM. So, You might be knowing about the company, about your job, nothing new, same delivery management crap. You will take care of several SBUs here. See, we are growing fast. Touch wood. You might have to join me on some frequent short term travels. என்று படபடவென்று பேசியவள், ஒரு கணம் நிறுத்தி என் கண்ணைப் பார்த்து,  ஓகே தானே? என்றாள்.

அந்த இடைப்பட்ட அமைதி என்னை கொஞ்சம் தொந்தரவு செய்தது. நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவள் HR க்கு போன் அடித்தாள்.

Hey, Deepa, i am sending Mr. Niranjan, our new DM. Please take care of his joining formalities என்றாள். 

Sorry da, i have to rush for a meeting now. Will see you around. என்று அவள் எழுந்ததும், நான் Thanks என்றேன்.

ச்சீ, லூசு என்று அவள் hug செய்வது போல் வந்து கையைக் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே போனாள். 

அன்று இரவு, நெடு நேரம் உறக்கம் பிடிக்கவில்லை. whatsapp பார்த்தேன். அவள் சில மணி நேரம் முன்பாக செய்த messages.

Hey great to see you today, sorry couldn't talk much. I felt very happy seeing you after this many years da. Vayasaanalum un azhagu innum kuraiyala. You looked very cute today. When you gonna join?

என்ன சொல்வது?  ஏழு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த வேலை. இத்தனை நாளாய் ஒரு interview call கூட வரவில்லை. 15 வருடம் அனுபவம் உள்ள ஒரு மேனெஜர் resume ஐ யாரும் பார்ப்பதற்க்குக் கூட தயாராயில்லை. சம்பளத்தை குறைத்துச் சொல்லியும் பலனில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பீதி வயிற்றைக் கவ்விக் கொண்டிருந்த போது, மேகாவின் அழைப்பு. எனக்குத் தெரிந்த வேலை. நல்ல சம்பளம். comfort zone. comfort zone? really? are you comfortable?

மனம் தராசு போல் உருமாறிக் கொண்டது. ஒரு பக்கம் குடும்பம், குழந்தைகளின் படிப்பு, EMI, எதிர்காலம். இன்னொரு பக்கம் மனசாட்சி, நேர்மை, ஒழுக்கம்.

முடிவு?

எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் எழுந்ததும் ஒரு வித தெளிவுடன் அவளுக்கு பதில் அனுப்பினேன்.

Next Monday.